|
|
07
மார்ச் 2020 |
|
|
தவக்காலம் 1 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய்
நீ இருப்பாய்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26:
16-19
மோசே மக்களை நோக்கிக் கூறியது: இந்த முறைமைகளையும் நியமங்களையும்
நீ நிறைவேற்றுமாறு உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டுள்ளார்.
உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவற்றை நிறைவேற்றுவதில்
கருத்தாயிரு.
ஆண்டவரை உன் கடவுளாய் ஏற்பதாகவும், உனக்குக் கடவுளாக இருப்பார்
என்றும், அவருடைய வழிகளில் நடப்பதாகவும், அவருடைய நியமங்களையும்
கட்டளைகளையும் முறைமைகளையும் கடைப்பிடிப்பதாகவும், அவர் குரலுக்குச்
செவிகொடுப்பதாகவும் இன்று நீ அவருக்கு வாக்களித்துள்ளாய்.
நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால்,
அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய்
என்றும், அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும்,
பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால்
உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும்
ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 119: 1-2. 4-5. 7-8 (பல்லவி: திபா 119:1b) Mp3
=================================================================================
பதிலுரைப் பாடல்
திபா 119: 1-2. 4-5. 7-8 (பல்லவி: திபா 119:1b)
பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
1மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி
நடப்போர் பேறுபெற்றோர்.
2அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறு பெற்றோர்;
முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். - பல்லவி
4ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள்
முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.
5உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறதியுள்ளதாய்
இருந்தால் எவ்வளவோ நலம்! - பல்லவி
7உம் நீதி நெறிகளை நான் கற்றுக்கொண்டு நேரிய உள்ளத்தோடு உம்மைப்
புகழ்வேன்.
8உம் விதிமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்; என்னை ஒருபோதும்
கைவிட்டுவிடாதேயும். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வசனம் (2 கொரி 6: 2b)
இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நற்செய்தி வாசகம்
உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய்
இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 5: 43-48
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "உனக்கு அடுத்திருப்பவரிடம்
அன்பு கூர்வாயாக', "பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக" எனக்
கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச்
சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத்
துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால்
நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில்
அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச்
செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை
பெய்யச் செய்கிறார்.
உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு
செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும்
இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு
மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும்
மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?
ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல
நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
இணைச்சட்டம் 26: 16-19
எப்பொழுது நாம் கடவுளுக்குச் சொந்த மக்களாக
இருப்போம்?
நிகழ்வு
இலண்டன் மாநகரில் ஒரு பிச்சைக்காரர் இருந்தார். இவர் ஒவ்வொரு
நாளும் அதிகாலையில் எழுந்து, இருப்பூர்தி நிலையத்திற்கு
முன்பாக வந்து அமர்ந்துகொண்டு பிச்சையெடுத்து வந்தார்.
துணைக்குத் தன்னுடைய மகனையும் கூடவே வைத்துக்கொண்ட இவர்,
பிச்சை எடுக்கின்றபொழுது எப்படி எடுக்கவேண்டும்... எப்படி நடந்துகொள்ளவேண்டும்...
போன்ற நேக்குப் போக்குகுகளை மகனுக்குச் சொல்லிக்கொடுத்து, இவற்றின்படி
நடந்தால் உன்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றார். மகனும்
தந்தை சொன்ன நேக்குப் போக்குகளை அப்படியே கற்றுக்கொண்டு, அவரோடு
சேர்ந்து பிச்சை எடுத்து வந்தான்.
எல்லாம் சீராகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில், பிச்சைக்காரர்
ஒரு சாலை விபத்தில் இறந்துபோனார். சில நாள்களுக்கு தன்னுடைய தந்தையை
இழந்த துக்கத்திலேயே இருந்த பிச்சைக்காரரின் மகன், தன் தந்தை
தனக்குச் சொல்லிக்கொடுத்த நேக்குப் போக்குகளைப் பயன்படுத்தி,
அவர் அமர்ந்திருந்த அதே இடத்தில் அமர்ந்துகொண்டு பிச்சை எடுக்கத்
தொடங்கினான். ஏறக்குறைய இருபது ஆண்டுகள் இதேமாதிரிச்
சென்றுகொண்டிருந்தன.
இதற்கிடையில் பிச்சைக்காரனுடைய வீட்டிலிருந்து "நாற்றமடிக்கின்றது...
பக்கத்தில் இருக்க முடியவில்லை" என்று அவனுடைய வீட்டுக்கு அக்கம்
பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறையில் புகார் அளித்தார்கள்.
இதைத் தொடந்து காவல்துறையினர் அங்கு வந்து பிச்சைக்காரனுடைய
வீட்டைத் திறந்து பார்த்தபொழுது, அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி
காத்திருந்தது. ஆம், பிச்சைக்காரனுடைய வீட்டில் தூசியும்
நூலாம்படையும் படிந்து, பார்ப்பதற்கு அவ்வளவு கேவலமாக இருந்தது.
அதே நேரத்தில் எங்கு பார்த்தாலும் பணம் குவிந்து கிடந்தது. அவற்றையெல்லாம்
அவர்கள் சேகரித்து எண்ணியபொழுது பல கோடிகளுக்கு மேல் வந்தது.
காவல்துறையினர் அந்தப் பணத்தை, மாலைவேளையில் பிச்சை எடுத்துவிட்டு
வீட்டுக்குத் திரும்பிய பிச்சைக்காரனிடம் கொடுத்து, "இவ்வளவு
பணம் வைத்திருக்கின்றாயே...! இன்னும் எதற்குப் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கின்றாய்...?
முதலில் உன்னுடைய வீட்டைச் சுத்தம் செய். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள்
இங்கு இருக்க முடியவில்லை என்று உன்மேல் குற்றம் சுமத்துகின்றார்கள்"
என்று எச்சரித்துவிட்டுச் சென்றார்கள்.
பிச்சைக்காரன் அவர்கள் சொன்னதைக் கண்டுகொள்ளவே இல்லை. வழக்கம்போல்
அவன் அதிகாலையில் எழுந்து, இருப்பூர்த்தி நிலையத்திற்கு
முன்பாக வந்து அமர்ந்துகொண்டு பிச்சையெடுக்கத் தொடங்கினான்.
இந்த நிகழ்வில் வருகின்ற பிச்சைக்காரனிடமிருந்து நாம் இரண்டு
செய்தியை பெற்றுக்கொள்ளலாம். ஒன்று, தன் தந்தையின் சொற்களுக்குக்
கீழ்ப்படிந்து, அவற்றுக்கு உண்மையாக இருந்தது. இரண்டு, தந்தை
சொல்லிவிட்டார் என்பதற்காக ஏராளமான பணம் சேர்ந்த பிறகும்
பிச்சை எடுத்தது அல்லது கண்மூடித்தனமாகச் செயல்பட்டது. இன்றைக்கும்
கூட ஒருசிலர் ஆண்டவரின் கட்டளைக் கடைப்பிடிக்கின்றேன் என்ற
பேரில், அவற்றின் உள்ளார்ந்த பொருளை உணர்ந்துகொள்ளாமல், கண்மூடித்தனமாகக்
கடைப்பிடிப்பதைக் காணமுடிகின்றது. இத்தகைய பின்னணியில் இன்றைய
முதல் வாசகம் நாம் ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழவேண்டும்,
அவற்றை எப்படிக் கடைப்பிடித்து வாழவேண்டும் போன்ற செய்திகளை எடுத்துக்கூறுகின்றது.
நாம் அவற்றைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
கடவுளின் கட்டளைகளை கடைப்பிடித்தால் அவரது சொந்தமக்களாவோம்
இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்,
மோசே இஸ்ரயேல் மக்களிடம், கடவுளுடைய முறைமைகளையும் நியமங்களையும்
கட்டளைகளையும் கடைப்பிடித்து வந்தால், நீங்கள் அவருடைய சொந்த
மக்களாகவும் தூய மக்களினமாகவும் இருப்பீர்கள் என்று
கூறுகின்றார்.
ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தனிப்பட்ட விதமாய்த்
தேர்ந்தெடுத்தது ஒருபக்கம் இருந்தாலும், அவர்கள் ஆண்டவருடைய கட்டளைகளின்படி
நடக்கின்றபொழுதுதான் அவர்கள் அவருடைய சொந்த மக்களாக மாறமுடியும்
என்று கூறுகின்றார். இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருடைய கட்டளைகளின்
படி நடந்தார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒருவேளை
அவர்கள் கடவுளின் கட்டளைகளின்படி நடந்திருந்தால், பிற தெய்வங்களை
வழிபட்டிருக்கமாட்டார்கள்; நாடுகடத்தப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.
கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல் போனதால்தான், எல்லாத்
தீமைகளுக்கும் அவர்களுக்கு வந்து சேர்ந்தன.
கட்டளைகளை உள்ளார்ந்த விதமாய்க் கடைபிடிக்கவேண்டும்
இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழவில்லை
என்பது ஒரு பக்கம் இருக்க, இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள்
கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிக்கிறேன் என்று அதை மேலார்ந்த
ரீதியாகக் கடைப்பிடித்தார்கள்; உள்ளார்ந்த ரீதியாகக் கடைப்பிடிக்கவில்லை.
இதனாலேயே இயேசு அவர்களை வெளிவேடக்காரர்கள் என்று சாடுகின்றார்.
மட்டுமல்லாமல், திருச்சட்டத்தின் நிறைவு அன்பே. அதை எந்தவொரு
வேறுபாடும் பார்க்காமல் கடைப்பிக்கவேண்டும் என்ற செய்தியையும்
குறிப்பிடுகின்றார். அவ்வாறெனில், நாம் கடவுளின் சொந்த மக்களாக
இருக்கவேண்டும் என்றால், அவருடைய கட்டளைகளை மேப்போக்காகக் கடைப்பிடிக்காமல்,
உள்ளார்ந்த விதமாய், அது உணர்த்தும் அன்பை நம்முடைய வாழ்வில்
கடைபிடிக்கவேண்டும். அப்படிச் செய்தால், நாம் கடவுளின் சொந்த
மக்களாவோம் என்பது உறுதி.
நாம் கடவுளின் கட்டளையை உள்ளார்ந்த விதமாய்க் கடைப்பிடிக்கின்றோமா?
சிந்திப்போம்.
சிந்தனை
"அன்பே திருச்சட்டத்தின் நிறைவு என்பார்" (உரோ 13: 10) என்பார்
புனித பவுல். ஆகையால், நாம் கடவுளின் கட்டளைகளை, அதுவும் அன்புக்
கட்டளையை உள்ளார்ந்த விதமாய்க் கடைப்பிடிப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 5: 43-48
"உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம்
வேண்டுங்கள்"
நிகழ்வு
மராட்டிய மன்னர் வீர சிவாஜியின் குரு இராமதாசர். ஒருநாள் இவர்
ஒரு சிற்றூரின் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது இவருக்குப்
பசி மிகுதியாக எடுக்கவே, ஒரு வீட்டின் முன் சென்று,
வீட்டினுள்ளே இருந்த பெண்மணியிடம், "அம்மா! பசிக்கின்றது... ஏதாவது
சாப்பாடு போடுங்கள்" என்று கெஞ்சிக் கேட்டார். அந்தப் பெண்மணியோ
வீட்டில் சாணம் மெழுகிக்கொண்டிருந்தார். அவர் இராமதாசரைப்
பார்த்ததும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. உடனே அவர் தான்
வைத்திருந்த சாணத் துணியை எடுத்து இராமதாசர்மீது வீசினார். பதிலுக்கு
அவர் எதுவுமே பேசாமல், தன்மீது வீசப்பட்ட சாணத் துணியை எடுத்துக்கொண்டு
தான் இருந்த இடத்திற்குச் சென்றார்.
பின்னர் அதனை நன்றாகத் துவைத்துத் தூய்மையாகி, அதில் திரிகள்
செய்து, விளக்கில் வைத்து. எண்ணெய் ஊற்றிப் பொருத்தி, எந்தப்
பெண்மணி தன்மீது சாணத் துணியை வீசினாரோ, அந்தப் பெண்மணிக்காக
அவர் இறைவனிடம் மிக உருக்கமாக வேண்டத் தொடங்கினார்.
இப்படியிருக்கையில் ஒருநாள் இராமதாசர் முன்பு சென்ற அதே
சிற்றூரின் வழியாகச் சென்றார். அப்பொழுது அவர்மீது சாணத்
துணியை வீசிய பெண்மணி அவரை அடையாளம் கண்டுகொண்டு, அவரிடம்
வந்து, "அன்றைக்கு ஏதோ கோபத்தில் அப்படிச் செய்துவிட்டேன்.
என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு, அவரைத்
தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவருக்கு
விருந்துகொடுத்து அனுப்பி வைத்தார்.
ஆம், நாம் நமக்கெதிராகத் தீமை செய்தவர்களுக்காக இறைவனிடம்
மன்றாடுகின்றபொழுது அல்லது நம் பகைவர்களை அன்பு
செய்கின்றபொழுது, அதற்கான பலன் நிச்சயம் உண்டு. அந்த
உண்மையைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பகைவர்களை அன்பு செய்யவும்
அவர்களுக்காக இறைவனிடம் வேண்டவும் அழைப்புத் தருகின்றார். அது
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பகைவரிடம் வெறுப்பு அல்ல, அன்பு கொள்ளுங்கள்
யூதர்கள், அடுத்திருப்பவரிடம் அன்பு காட்டினால் போதும்...
பகைவரிடம் வெறுப்புக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து
வந்தார்கள். "பகைவரிடம் வெறுப்புக் கொள்ளவேண்டும்" என்று பழைய
ஏற்பாட்டில் எங்கேயும் சொல்லப்படவில்லை என்றாலும், திபா 139:
19-22 -ல் வருகின்ற வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு பகைவர்மீது
வெறுப்போடு இருந்தார்கள். இங்கு யூதர்கள்,
"அடுத்திருப்பவர்மீது அன்புகொள்ளவேண்டும்" என்பதை எப்படிப்
புரிந்துவைத்திருந்தார்கள் என்பதையும் நாம்
தெரிந்துகொள்ளவேண்டும். தன்னுடைய இனத்தானையே அவர்கள்
அடுத்திருப்பவர் எனப் புரிந்துவைத்திருந்தார்கள். அவர்களிடம்
அன்புகொண்டாலே போதுமானது என்று நினைத்திருந்தார்கள்.
இப்படிப்பட்ட சூழலில்தான் ஆண்டவர் இயேசு "பகைவரிடம்
அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவொருக்காக இறைவனிடம்
வேண்டுங்கள்" என்று கூறுகின்றார். ஆண்டவர் இயேசு இவ்வாறு
சொல்வதன் முக்கியத்துவம் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
அப்போது நாம் விண்ணகத்தந்தையைப் போன்று நிறைவுள்ளவர்களாவோம்
ஆண்டவர் இயேசு பகைவரிடம் கூரவும் துன்புறுத்துவோருக்காக
மன்றாடவும் சொல்லக் காரணம், பிற இனத்தவர்களே அன்பு
செலுத்துவோர்மீது அன்புசெலுத்துவார்கள்; ஆண்டவரின் மக்கள்
அப்படியல்ல, அவர்கள் பகைவரிடமும் தன்னை வெறுப்போரிடமும் அன்பு
கூறுவார்கள்; ஏனென்றால், ஆண்டவர் தன்னை வெறுப்போரிடம் கூட
அன்புசெலுத்துபவராக இருக்கின்றார் என்பதாலாகும்.
அடுத்ததாக ஆண்டவர் நிறைவுள்ளவராக இருக்கின்றார். அவரைப் போன்று
பகைவரிடம் அன்புகூருகின்றகின்றபொழுது, துன்புறுத்துவோருக்காக
இறைவனிடம் மன்றாடுகின்றபொழுது நாமும் நிறைவுள்ளவர்களாக இருக்க
முடியும். அதனால்தான் இயேசு பகைவர்களிடம் அன்பு கூரச்
சொல்கின்றார்.
இப்பொழுது நமக்கு முன்பு சில கேள்வி எழலாம். "அது எப்படி
நம்முடைய பகைவரை அன்புகூருவது...?", "நமக்கெதிராகத் தீமை
செய்தவருக்காக இறைவனிடம் மன்றாடுவது...?" "இவையெல்லாம் மிகவும்
கடினமான செயல்களாகியிற்றே...! என்பனதான் அந்தச் சில கேள்விகள்.
பகைவரிடம் அன்புகூருவதும் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம்
வேண்டுவதும் கடினமான செயல்களாக இருந்தாலும், முடியாத செயல்கள்
அல்ல. ஏனென்றால், ஆண்டவர் இயேசு இவற்றையெல்லாம் நமக்கு
முன்பாகச் செய்துகாட்டிவிட்டார். ஆகையால், நாம் பகைவரிடம்
அன்புகூர்ந்து, துன்புறுத்துவோருக்காக இறைவனிடம்
மன்றாடுகின்றபொழுது அவருடைய அன்பு மக்களாவோம்; அவரைப் போன்று
நிறைவுள்ளவர்களாவோம் என்பது உறுதி.
சிந்தனை
"பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக் கருவாய்" என்று
பாடினார் பாரதியார். எனவே, நாம் நம் பகைவர்மீதும் இறைவன்
அருளைப் பொழிய வேண்டுமென்று மன்றாடுவோம். அவர்களை அன்பு செய்து
வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|