|
|
06
மார்ச் 2020 |
|
|
தவக்காலம் 1 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தீயவரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று
திரும்பி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்?
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 21-28
ஆண்டவர் கூறுவது:
தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி, என்
நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால்
அவர்கள் வாழ்வது உறுதி, அவர்கள் சாகார். அவர்கள் இழைத்த தவறுகள்
அனைத்தும் அவர்களுக்கெதிராக நினைக்கப்பட மாட்டா. அவர்கள் கடைப்பிடித்த
நேர்மையின் பொருட்டு அவர்கள் வாழ்வர். உண்மையில், பொல்லாரின்
சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று
திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? என்கிறார் தலைவராகிய
ஆண்டவர்.
நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்து,
பொல்லாரைப் போல் வெறுக்கத்தக்கவற்றை எல்லாம் செய்தால், அவர்கள்
வாழ்வரோ? அவர்கள் கடைப்பிடித்த நேர்மையானது எதுவும் நினைக்கப்படமாட்டாது.
அவர்கள் இழைத்த துரோகத்தின் பொருட்டும் செய்த பாவத்தின்
பொருட்டும் அவர்கள் சாவர். ஆயினும், "தலைவரின் வழி செம்மையானதாக
இல்லை" என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே!
கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகள் அன்றோ
நேர்மையற்றவை!
நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள்
தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். பொல்லார் தாம் செய்த
பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால்
தம் உயிரை அவர்கள் காத்துக்கொள்வர். அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து,
தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள்
வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-திபா 130: 1-2. 3-4. 5-6ac. 7-8 (பல்லவி: திபா 130:3)
Mp3
=================================================================================
பதிலுரைப் பாடல்
திபா 130: 1-2. 3-4. 5-6ac. 7-8 (பல்லவி: திபா 130:3)
பல்லவி: நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால்,
யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?
1ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;
2ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக்
குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். - பல்லவி
3ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால்,
யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?
4நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். -
பல்லவி
5ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம்
காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன்
காத்திருக்கின்றேன்.
6acவிடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய்
ஆவலுடன் காத்திருக்கின்றது. - பல்லவி
7இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது.
மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.
8எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வசனம் (எசே 18: 31)
எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும்
விட்டுவிடுங்கள். புதிய இதயத்தையும் புதிய மனத்தையும் பெற்றுக்
கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர்..
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நற்செய்தி வாசகம்
நீங்கள் போய் முதலில் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: மறைநூல் அறிஞர், பரிசேயர்
ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில்,
நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச்
சொல்லுகிறேன்: "கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத்
தீர்ப்புக்கு ஆளாவர்" என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச்
சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத்
தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ "முட்டாளே" என்பவர்
தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; "அறிவிலியே" என்பவர் எரிநரகத்துக்கு
ஆளாவார்.
ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது
உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல்
உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள்
காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச்செல்லும்போது
வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல்
உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம்
ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு
வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள்
என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எசேக்கியேல் 18: 21-28
வாழ்வுக்கு இட்டுச் செல்லும் மனமாற்றம்
நிகழ்வு
பிரபல வேதியியளாரான பாரடேயின் ஆய்வுக்கூடம் அது. அந்த ஆய்வுக்கூடத்தில்
ஒருநாள் பாரடேயின் உதவியாளர்களுள் ஒருவர் கையில் ஒரு
வெள்ளிக்கிண்ணத்தை ஏந்தி வந்துகொண்டிருந்தார். திடீரென்று அவருடைய
கால் இடற, அவருடைய கையில் இருந்த வெள்ளிக்கிண்ணமானது அருகில்
இருந்த அமிலத் தொட்டிக்குள் விழுந்துவிட்டது.
வெள்ளிக்கிண்ணம் அமிலத்தொட்டிக்குள் விழுந்த மறுகணம் உருகத் தொடங்கியது.
சுற்றியிருந்த மற்ற உதவியாளர்கள் பாவம் போல் அதைப் பார்த்தார்கள்.
அப்பொழுது அங்கு வந்த பாரடே, ஓர் இரசாயனத்தை அந்த அமிலத்
தொட்டிக்குள் ஊற்றினார். அவர் அந்த இரசாயனத்தை அமிலத்
தொட்டிக்குள் ஊற்றிய மறுகணம் வெள்ளிக்கிண்ணம் உருகுவது அப்படியே
நின்றது. பின்னர் அவர் லேசாக உருகியிருந்த அந்த வெள்ளிக்கிண்ணத்தை
பொற்கொல்லரிடம் கொடுக்க, அவர் அதைச் சரிசெய்தார். இப்பொழுது அந்த
வெள்ளிக்கிண்ணம் முன்பை விட மிகவும் பளபளப்பானது.
அமிலத் தொட்டிக்குள் உருகிக்கொண்டிருந்த வெள்ளிக்கிண்ணத்தில்
பாரடே ஊற்றிய இரசாயனம் எப்படி அந்த வெள்ளிக்கிண்ணத்தை உருகாமல்
காத்ததோடு மட்டுமன்றி, அதற்குப் புதுப்பொழிவு தந்ததோ, அப்படி
மனமாற்றம் என்பது ஒருவரை அழிவிலிருந்து காப்பதோடு மட்டுமன்றி,
அவரைப் புதுவாழ்வுக்கு இட்டுச் செல்லும். இன்றைய முதல் வாசகம்,
ஒரு பாவி மனமாற்றம் அடைகின்றபொழுது, அதனால் அவர் அடைகின்ற நன்மைகள்
என்ன, அதே நேரத்தில் நேர்மையாளர் ஒருவர் தன்னுடைய
வழியிலிருந்து விலகி பாவியாகும்போது, அவர் பெறுகின்ற தண்டனை என்ன?
போன்ற செய்திகளைத் தாங்கி வருகின்றது. நாம் அவற்றைக் குறித்து
இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
பாவி மனம்மாறினால் வாழ்வு
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இரண்டு செய்திகளைச்
சொல்கின்றார். ஒன்று, ஒரு பாவி மனம்மாறுகின்றபொழுது, அதனால்
அவருக்குக் கிடைக்கும் வாழ்வு. இரண்டு, நேரியவர் ஒருவர் தன்னுடைய
நேரிய வழியை விட்டு தீய வழியில் செல்கின்றபொழுது, அதனால் அவருக்குக்
கிடைக்கும் தண்டனை. இந்த இரண்டு செய்திகளையும் இப்பொழுது சற்று
விரிவாக சிந்தித்துப் பார்ப்போம்.
ஒரு பாவி தன்னுடைய தீய வழியிலிருந்து விலகி, நல்வழியில் நடந்தால்
வாழ்வார் என்று ஆண்டவர் கூறக்காரணம், பாவிகளின் மனமாற்றத்தில்
அவர் மகிழ்கின்றார் என்பதால்தான் (லூக் 15:7) மேலும் ஆண்டவர்
யாருடைய அழிவிலும் மகிழ்வதில்லை; அனைவரும் வாழ்வுபெறவேண்டும்.
அதுதான் அவருடைய விருப்பமாக இருக்கின்றது (யோவா 5: 40; 1 திமொ
2:4; 2 பேது 3:9). அதனால்தான் கடைசி நேரத்தில் மனம்மாறிய இரண்டு
குற்றவாளிகளுள் ஒருவனை ஆண்டவர் இயேசு பேரின்ப வீட்டில் ஏற்றுக்கொள்கின்றார்.
(லூக் 23: 42,43). அப்படியானால் ஒருவரின் மனமாற்றம் அவருடைய
வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அதே நேரத்தில் அதுவே
அவருடைய வாழ்வுக்குக் காரணமாகவும் இருக்கின்றது என்று
சொன்னால், அது மிகையில்லை.
இந்த இடத்தில் யூதர்கள் நடுவில் இருந்த ஒரு கருத்தைத்
தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், ஒருவர் செய்த குற்றம்,
அவரையும் அவருடைய பிள்ளைகளையும் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை
பாதிப்பை ஏற்படுத்தும் (எண் 14:18) என்பதாகும். நற்செய்தியில்கூட
இயேசுவின் சீடர்கள் இதுதொடர்பாக பிறவிலேயே பார்வையின்றி பிறந்த
ஒரு பார்வையற்ற மனிதரைச் சுட்டிக்காட்டி, இவர் இவ்வாறு பிறப்பதற்குக்
காரணம் இவர் செய்த குற்றமா அல்லது இவருடைய பெற்றோர் செய்த குற்றமா
என்று கேட்பார்கள் (யோவா 9: 1-3) இப்படி இருக்கின்ற சூழலில்,
இறைவாக்கினர் எசேக்கியேல், ஒருவன் தவறு செய்து, பின் மனம்மாறினால்,
அவன் வாழ்வடைவானேயன்றி, அவன் செய்த பாவத்தினால் அவனுக்குப்
பின்னால் வரும் தலைமுறை பாதிக்கப்படாது என்று சொல்லக்கூடிய கருத்து
நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.
நேரியவர் நெறிதவறினால் சாவார்
ஒரு பாவி தன்னுடைய குற்றத்தை உணர்ந்து மனம்மாறினால், அவர் வாழ்வடைவார்
என்று என்று மேலே சிந்தித்துப் பார்த்தோம். இப்பொழுது நேரியவர்
நெறிதவறினால் சாவார் என்ற செய்தியைக் குறித்து சிந்தித்துப்
பார்ப்போம்.
நேரியவர் நெறிதவறுகின்றபொழுது ஏன் சாவார் என்ற கேள்வி எழலாம்.
நேரியவர் நெறிதவறி நடந்தார் எனில், அவர் இத்தனை ஆண்டுகளும் தனக்கும்
கடவுளுக்கும் உண்மையில்லாமல் இருந்திருக்கின்றார் என்பதுதான்
நிரூபணமாக இருக்கின்றது (1 யோவா 2:9) இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு
யூதாசு இஸ்காரியோத்து. இவர் தொடக்கத்தில் "நல்லவராகத்தான்" இருந்தார்;
ஆனால், இவர் ஆண்டவர் இயேசுவைக் காட்டிக்கொடுத்த செயல் இவருடைய
ஒட்டுமொத்த வாழ்வையும் பாழாக்குகின்றது. அதுவே இவருடைய அழிவுக்குக்
காரணமாக அமைந்துவிடுகின்றது.
ஆகவே, ஒருகாலத்தில் நாம் நல்லவராக இருந்தோம் என்பது முக்கியமல்ல,
இப்பொழுது நாம் நல்லவராக இருக்கின்றோமா என்பதுதான் இங்கு நாம்
நம்முடைய மனத்தில் பதிய வைக்கின்ற செய்தியாக இருக்கின்றது. எனவே,
நாம் எப்பொழுதும் இறைவனின் நல்வழியில் நடந்து அவர் தருகின்ற
வாழ்வைக் கொடையாகப் பெற்றுக்கொள்வோம்.
சிந்தனை
"கடவுளுக்கு ஏற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே" (திபா 51:17) என்பார்
திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், செய்த தவறுகளை உணர்ந்தவர்களாய்
நாம் ஆண்டவரிடம் திரும்பி வந்து, அவரோடு ஒன்றித்திருப்போம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 5: 20-26
காலிப் படகு
நிகழ்வு
லின் சீ என்றொரு துறவி இருந்தார். அவர் யாரிடத்திலும் சினம்
கொள்வதே கிடையாது. இதற்கான காரணத்தை அவருடைய சீடர்கள் அவரிடம்
கேட்டபொழுது, அவர் அவர்களிடம், "ஒருநாள் நான் பக்கத்திலிருக்கின்ற
ஆற்றில் படகில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அப்படிச்
சென்றுகொண்டிருக்கும்பொழுது கண்களை மூடித் தியானம்
செய்துகொண்டே சென்றேன். அப்பொழுது ஏதோ ஒன்று நான் பயணம் செய்த
படகின்மீது இடிப்பதுபோன்று இருந்தது. எனக்குக் கடுமையான கோபம்
வந்தது. நான் கண்களைத் திறந்து பார்த்தபொழுது, எனக்கு முன்பாக
ஒரு காலிப் படகு இருந்தது. "போயும் போயும் இந்தக் காலிப் படகின்
மீதா எனக்கு கோபம் வந்தது என்று மிகவும் வருத்தப்பட்டேன்" என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டுத் தொடந்து அவர் அவர்களிடம் சொன்னார்:
"சினம் கொள்கின்ற ஒவ்வொருவரும் காலிப் படகுதான். அதனால்தான்
யாராவது என்மீது சினம்கொண்டாலோ அல்லது எரிந்துவிழுந்தாலோ "இவர்
காலிப் படகுபோல" என்று நினைத்துக்கொள்வேன். காலிப்படகான அந்த
மனிதர்மீது சினம்கொண்டு, நானும் காலிப்படகாகக்கூடாது என்று அமைதியாக
இருந்துவிடுவேன்."
சினம் கொள்கின்ற ஒவ்வொருவரும் காலிப்படகுத்தான் என்ற செய்தியை
எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில்
ஆண்டவர் இயேசு, சினத்தால் விளையும் கேடுகளையும் நல்லுறவு ஏற்படுத்திக்
கொள்வதன் முக்கியத்துவத்தையும் குறித்துப் பேசுகின்றார். அவற்றைக்
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கொலை செய்வது மட்டுமல்ல; சினம்கொள்வதுகூட குற்றம்
மலைப்பொழிவின் ஒரு பகுதியாக வரும் இன்றைய நற்செய்தி வாசகத்தில்,
ஆண்டவர் இயேசு, "கொலை செய்யாதே" என்ற பழைய ஏற்பாட்டுக் கட்டளைக்கு
மாற்றாக புதிய கட்டளையைத் தருகின்றார். அதுதான் "சினம்
கொள்ளாதே" என்ற கட்டளையாகும். "கொலை செய்யாதே" என்பது பத்துக்கட்டளைகளில்
வருகின்ற ஒரு கட்டளையாகும் (விப 20: 13). மேலும் கொலை செய்கிறவர்
எவரும் கொல்லப்பட வேண்டும் என்பது மோசே இஸ்ரயேல் மக்களுக்குக்
கொடுத்த கட்டளையாகும் (விப 21: 12; லேவி 24: 17). இப்படியிருக்கையில்
ஆண்டவர் இயேசு "தம் சகோதரர் சகோதரிகளிடம் சினம் கொள்கிறவர் தண்டனைத்
தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ முட்டாளே என்பவர்
தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார். அறிவிலியே என்பவர் எரிநரகத்துக்கு
ஆளாவார்" என்று கூறுகின்றார். காரணம், சினமே கொலைக்குக் காரணமாக
இருக்கின்றது. அதனால்தான் இயேசு சினத்தில் பேசப்படுகின்ற ஒவ்வொரு
வார்த்தைக்கும் அல்லது சினத்தில் செய்யப்படுகின்ற ஒவ்வொரு செயலுக்கும்
தண்டனை உண்டு என்று கூறுகின்றார்.
இங்கு ஆண்டவர் இயேசு கூறுகின்ற "எரிநரகம்" என்பதற்கு
திருவிவிலியத்தில் பாதாளம் (யோபு 24: 19; திபா 16: 10; மத் 16:
18), பள்ளத்தாக்கு (2 அர 23: 10) போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவையெல்லாம் தாங்கமுடியாத வேதனையை அளிக்கக்கூடிய இடங்கள். சினம்
கொள்கிறவருக்கு மிகக் கடுமையான தண்டனை உண்டு என்பதைக்
குறித்துக் காட்டவே ஆண்டவர் இயேசு "எரிநரகம்" என்ற
வார்த்தையைப் பயன்படுத்துகின்றார் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்
ஆண்டவர் இயேசு, சினம்கொள்ளாதே என்று சொன்னதோடு மட்டுமல்லாமல்,
அதற்கு மாற்றான ஒரு வழியை நமக்கு முன் வைக்கின்றார். அதுதான்
நல்லுறவு ஆகும்.
யூதர்கள் ஆண்டவருக்குக் காணிக்கை செலுத்த வருவதுண்டு. அப்படி
வருகின்றபொழுது, யாருக்காவது தங்கள்மீது மனத்தாங்கல் உண்டென
அவர்கள் நினைவுற்றால், காணிக்கையை பலிபீடத்தின்முன்
வைத்துவிட்டு, மனத்தாங்கலோடு இருப்பவரோடு நல்லுறவை
ஏற்படுத்திக் கொண்டு காணிக்கை செலுத்துவது நல்லது என்று
கூறுகின்றார் இயேசு. அதுபோன்று பழங்காலத்தில் ஒருவர் தான்
வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாவிட்டால், கடன்கொடுத்தவர்
கடன்வாங்கியவரை சிறையில் அடைத்துவிடுவார். கடன் வாங்கியவர்
கடனை திரும்பிச் செலுத்தியபின்தான், சிறையிலிருந்து
விடுவிக்கப்படுவார். இல்லையென்றால், சிறையிலியே செய்துமடிய
வேண்டியதுதான். இதற்காகவே அவர்கள் வழியில் உடன்பாடு
செய்துகொள்வார்கள்.
ஆண்டவர் இயேசு இந்த உண்மையை அபப்டியே எடுத்துக்கொண்டு, ஒருவர்
தன் சகோதரர் அல்லது சகோதரிடம் சினத்தில் ஏதாவது பேசியிருந்தாலோ
அல்லது செய்திருந்தாலோ அவரோடு நல்லுறவு ஏற்படுத்திக்கொள்வது
நல்லது. இல்லையென்றால் அவர் கடவுளின் அரியணையின் முன்பு
கணக்குக் கொடுக்கவேண்டும் என்று சொல்கின்றார்.
ஆகையால், அழிவுக்கு காரணமாக இருக்கும் சினத்தை நம்மிடமிருந்து
அகற்றிவிட்டு, வாழ்வுக்குக் காரணமாக இருக்கும் நல்லுறவை
அனைவரோடும் நாம் ஏற்படுத்தி வாழ முற்படுவோம்.
சிந்தனை
"எளிதில் சினம் கொள்பவரால் சண்டை உண்டாகும்; அவர் பல
தீங்குகளுக்குக் காரணமாவார்" (நீமொ 29: 22) என்கிறது
நீதிமொழிகள் நூல். ஆகையால், எல்லாவிதமான அழிவுக்குக் காரணமாக
இருக்கும் சினத்தை நாம் நம்முடைய வாழ்விலிருந்து அகற்றிவிட்டு,
மற்றவரோடு நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|