Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   05 மார்ச் 2020  
    தவக்காலம் 1 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு துணையற்ற எனக்கு உதவி செய்யும்.

எஸ்தர் நூலிலிருந்து வாசகம் வாசகம் (கி) 4: 17k-m,r-t

சாவுக்குரிய துன்பத்தில் துடித்த எஸ்தர் அரசி ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை அவர் பின்வருமாறு மன்றாடினார். "என் ஆண்டவரே, நீர் மட்டுமே எங்கள் மன்னர். ஆதரவற்றவளும் உம்மைத் தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்; ஏனெனில், நான் என் உயிரைப் பணயம் வைத்துள்ளேன். ஆண்டவரே, நீர் எல்லா இனங்களிலிருந்தும் இஸ்ரயேலைத் தெரிந்தெடுத்தீர் என்றும் அவர்களின் மூதாதையர் அனைவரிடையிலிருந்தும் எங்கள் முன்னோரை என்றென்றைக்கும் உம் உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்தீர் என்றும், நீர் அவர்களுக்கு வாக்களித்ததையெல்லாம் நிறைவேற்றினீர் என்றும், நான் பிறந்த நாள்தொட்டு என் குலத்தாரும் குடும்பத்தாரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஆண்டவரே, எங்களை நினைவுகூரும்; எங்கள் துன்ப வேளையில் உம்மையே எங்களுக்கு வெளிப்படுத்தும். தெய்வங்களுக்கெல்லாம் மன்னரே, அரசுகள் அனைத்துக்கும் ஆண்டவரே, எனக்குத் துணிவைத் தாரும். சிங்கத்துக்குமுன் நாவன்மையுடன் பேசும் வரத்தை எனக்கு வழங்கும்; எங்களுக்கு எதிராகப் போரிடுபவனை மன்னர் வெறுக்கச் செய்யும்; இதனால் அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் அழியச் செய்யும்.

ஆண்டவரே, உமது கைவன்மையால் எங்களைக் காப்பாற்றும்; ஆதரவற்றவளும் உம்மைத் தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 138: 1-2a. 2bc-3. 7c-8 (பல்லவி: திபா 138:3a) Mp3
=================================================================================


பல்லவி: ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்.
1ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
2aஉம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். - பல்லவி

2bcஉம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.
3நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். - பல்லவி

7cஉமது வலக் கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.
8நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வசனம் (திபா 51: 10a, 12a)

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 7-12


அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!

ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 
எஸ்தர் (கிரேக்கம்) 4: 17

"எங்கள் துன்பங்களில் உம்மையே எங்களுக்கு வெளிப்படுத்தும்"

நிகழ்வு


இரண்டு கிறிஸ்தவர்கள் பேசிக்கொண்டார்கள். அதில் ஒருவர், "வாழ்க்கையின் இருள்சூழ்ந்த வேளையில் கடவுள்மீது நம்பிக்கை வைத்து வாழ்வது மிகவும் கடினமாக இருக்கின்றது" என்றார். அதற்கு மற்றவர் இவ்வாறு சொன்னார்: "மனிதர்கள் அடிக்கடி மாறுவார்கள். அதனால் அவர்கள்மீது நம்பிக்கை வைக்காமல் இருப்பதால் பெரிய இழப்பு ஒன்றும் இல்லை; ஆனால், கடவுள் அப்படியில்லை. அவர் என்றுமே மாறாதவர்; நிலைத்து நிற்பவர். அப்படிப்பட்டவர்மீது நம்பிக்கை வைக்காமல் இருந்தால், அதுவும் உன்னுடைய வாழ்வின் இருள் சூழ்ந்த வேளையில் நீ அவர்மீது நம்பிக்கை வைக்காமல் இருந்தால், அது உனக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்."

ஆம், நம்முடைய வாழ்க்கையில் துன்பம் வரும், துயரம் வரும். இன்னல் வரும் இக்கட்டு வரும். இத்தகைய வேளைகளில் நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தால், வாழ்வில் அளப்பரிய செயல்களைச் செய்யலாம். இத்தகைய செய்தியைத்தான் இந்த நிகழ்வும் இன்றைய முதல் வாசகமும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்த எஸ்தர்

இன்றைய முதல் வாசகத்தில் எஸ்தர் அரசி, ஆண்டவராகிய கடவுளிடம் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக ஆமான் செய்யும் சதித்திட்டத்திலிருந்து அவர்களை மீட்குமாறு வேண்டுகின்றார். இந்தப் பகுதியை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு இதன் பின்புலத்தை அறிந்துகொள்வது நல்லது.

பாரசிக மன்னன் அர்த்தக்சாஸ்தா, தன்னுடைய மனைவி வஸ்தி தன்னை விருந்தினர் முன்பாக அவமதித்துவிட்டாள் என்பதற்காக அவளைக் கொன்றுவிட்டு, யூத இனத்தைச் சார்ந்த எஸ்தரை மணந்துகொண்டான். இந்த அர்த்தசாஸ்தாவிடம் ஆமான் என்பவன் அமைச்சராக இருந்தான். அவன் மன்னனிடம், யூதர்கள் உம்முடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்லை. அதனால் அவர்களைக் கொல்லவேண்டும் என்று நயவஞ்சகமாகப் பேசுகின்றான். அர்த்தசாஸ்தாவும் அவனுடைய நயவஞ்சகப் பேச்சில் மயங்கி, அவர்களைக் கொல்வதற்கு ஆணையிடுகின்றான். இந்நிலையில் எஸ்தர் அரசி அரசரிடம் பேசி, உண்மையை விளக்கவேண்டும் என்பதற்காக அவரைச் சந்திக்க விரும்புகின்றார். அவர் அவரைச் சந்திப்பதற்கு முன்பாக, என்ன ஆகுமோ என்ற பதைபதைப்பில் இறைவனிடம் பேசுவதுதான் இன்றைய முதல் வாசகமாக அமைந்திருக்கின்றது.

இதில் நாம் கவனிக்கவேண்டியது எஸ்தர் அரசி இறைவனிடம் வேண்டுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும்தான். "என் ஆண்டவரே, நீர் மட்டுமே எங்கள் மன்னர். எனக்கு உதவி செய்யும்; எங்கள் துன்ப வேளைகளில் உம்மையே எங்களுக்கு வெளிப்படுத்தும்" என்று எஸ்தர் அரசி இறைவனிடம் எடுத்துரைக்கும் வார்த்தைகள் அவர் இறைவனிடம் எத்தகைய நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை நமக்கு எடுத்துக்கூறுகின்றன.

நம்பினோருக்குத் துணையாய் இருக்கும் ஆண்டவர்

ஆண்டவரிடம் நம்பிக்கை வைத்து வேண்டிய எஸ்தர் அரசி பின்னர் அரசரைச் சந்தித்து அவரையும் ஆமானையும் விருந்துக்கு அழைக்கின்றார். இருவரும் அதற்குச் சம்மதம் தெரிவிக்கவே, அவர் தக்கநேரத்தில் அரசரிடம் ஆமானின் சதித்திட்டங்களை எடுத்துக்கூறுகின்றார். அவர் அதனைக் கேள்விப்பட்டு ஆமானைக் கொன்றுபோடுடுகின்றார். இங்கு ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு தன்னுடைய உயிரையும் பயணம் வைத்துச் செயல்பட்ட எஸ்தர் அரசியின் செயல் நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது.

திருப்பாடல் ஆசிரியர் இவ்வாறு கூறுவார்: "நாம் ஆண்டவரை நம்பியிருக்கிறோம். அவரே நமக்குத் துணையும் கேடமும் ஆவார்." (திபா 33: 20). எஸ்தர் அரசி ஆண்டவரை மட்டுமே நம்பியிருந்தார். அதனால்தான் அவரால் ஆமானின் சதித்திட்டத்தை அரசரிடம் சொல்ல முடிந்தது. அவரும் ஆமானைக் கொன்றுபோட முடிந்தது. இன்றைக்கு நாம் யாரிடம் நம்பிக்கை வைத்திருக்கின்றோம்? யாரிடம் அடைக்கலம் புகுந்திருக்கின்றோம்? ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்க அழைக்கப்பட்டிருக்கின்றோம். பல நேரங்களில் நாம் யாரிடமெல்லாமோ நம்பிக்கை வைத்திருக்கின்றோம்... அடைக்கலம் புகுகின்றோம். மனிதரிடம் நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம் (திபா 118: 8). என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் எஸ்தர் அரசியைப் போன்று ஆண்டவரிம் நம்பிக்கை வைத்து, அவரிடம் அடைக்கலம் புகுவோம். அதன்வழியாக இறைவனின் ஆசியைப் பெறுவோம்.

சிந்தனை

"எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு" என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இன்றைய முதல் வாசகத்தில் வரும் எஸ்தர் அரசியைப் போன்று ஆண்டவரிடம் நம்மையே நாம் முழுமையாக ஒப்புக்கொடுத்து, அவருடைய வழிகாட்டுதலில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 7: 7-12

விண்ணகத்தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார்

நிகழ்வு


கிரேக்க இதிகாசங்களில் வரக்கூடிய நிகழ்வு இது. விடியலின் தேவதையான ஆரோரா, மண்ணகத்தில் பேரழகனாக வலம்வந்த டைடானியுஸ் என்ற இளைஞன் மீது காதல் கொண்டது. அது அவனைத் தன்னுடைய கணவனாக ஏற்றுக்கொள்ள முடிவுசெய்தது. எனவே, அது தெய்வங்களுக்குத் தலைவனாக இருந்த ஜேயுஸிடம் சென்று, தான் எடுத்திருக்கின்ற முடிவினைச் சொல்லி, டைட்டானியுசிற்கு சாகாவரம் தரும்மாறு கேட்டது. ஜேயுசும் அது கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, டைட்டானியுஸிற்குச் சாக வரம் தந்தார்.

ஆரோரா என்ற அந்தத் தேவதை டைட்டானியுஸிற்கு சாகாவரம் கேட்டதே ஒழிய, அவன் என்றுமே இளமையாக இருக்கவேண்டும் என்று ஜேயுசிடம் கேட்கவில்லை. இதனால் டைட்டானியுஸ் சாகவில்லையே ஒழிய, வயதாகிக் கொண்டே போனான். இதனால் ஆரோரா தான் உயிருக்குயிராகக் காதலித்து வந்த டைட்டானியுசை முற்றிலுமாக வெறுக்கத் தொடங்கியது.

கிரேக்க தெய்வங்கள் தாங்கள் வழங்கக்கூடிய வரங்களில் ஏதாவதொரு குறை இருந்துகொண்டே இருக்கும் என்பதற்காகச் சொல்லப்படக்கூடிய நிகழ்வு இது. பிற தெய்வங்கள் வழங்கக்கூடிய வரங்களில் குறையிருக்கலாம்; ஆனால், ஆண்டவர் நமக்கு வழங்குகின்ற வரங்களில் குறையே இருக்காது; மாறாக, அவை நல்லதாகவே இருக்கும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இடைவிடாது மன்றாடவேண்டும்

மத்தேயு எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு, இறைவனிடம் நாம் எப்படி மன்றாடவேண்டும் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். கேளுங்கள்... தேடுங்கள்... தட்டுங்கள் என்று நற்செய்தியில் அவர் பயன்படுத்துகின்ற வார்த்தைகள், நாம் இறைவனிடம் இடைவிடாது மன்றாடவேண்டும் என்ற உண்மையை மிக ஆழமாக எடுத்துக்கூறுவதாக இருக்கின்றன.

இயேசு கிறிஸ்து, இறைவனிடத்தில் மனந்தளராது, இடைவிடாது மன்றாடவேண்டும் என்ற செய்தியை நற்செய்தியில் ஆங்காங்கே வலியுறுத்திக்கொண்டேதான் இருக்கின்றார் (லூக் 11: 5-8, 18: 1-8). இன்றைய நற்செய்தியிலும் அதை நாம் தெளிவாகக் காணமுடிகின்றது. கேளுங்கள்... தேடுங்கள்... தட்டுங்கள்... என்று இயேசு சொல்வது, கேட்டுக்கொண்டே இருங்கள்... தேடிக்கொண்டே இருங்கள்... தட்டிக்கொண்டே இருங்கள் என்று சொல்வது போன்று இருக்கின்றது. ஆம், நாம் இறைவனிடத்தில் இறைவிடாது, மனந்தளராது மன்றாடுகின்றபோதுதான், இறைவனிடமிருந்து ஆசியைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

இறைவனிடம் இடைவிடாது மன்றாடுகின்றபொழுது, கூடவே நாம் நம்மிடத்தில் ஒருசில பண்புகளைக் கொண்டிருப்பது நல்லது. அவற்றை ஆண்டவர் இயேசு, "இரக்கம்" (மத் 5:7), "மன்னிப்பு" (மத் 6: 12), "வெளிவேடமற்றதன்மை" (மத் 6: 5-6), "இறைவனுடைய திருவுளத்திற்கு முதன்மையான இடம் கொடுத்தல்" என்று போகிற போக்கில் சொல்லிக்கொண்டே போகிறார். இத்தகைய பண்புகளைக் கொண்டு நாம் விடாமுயற்சியோடு இறைவனிடம் மன்றாடினால், நம்முடைய மன்றாட்டு கேட்கப்படுவது உறுதி.

நல்லதையே தரும் ஆண்டவர்

இறைவனிடத்தில் இடைவிடாது மன்றாடவேண்டும் என்று சொன்ன இயேசு, இறைவன் நம்முடைய மன்றாட்டிற்கு எப்படிப் பதிலளிக்கின்றார்...? அவர் எப்படிப் பட்டவராக இருக்கின்றார்...? என்பன குறித்தும் பேசுகின்றார்.

மனிதர்கள் தங்களுடைய பிள்ளைகள் தங்களிடம் ஒன்றைக் கேட்டால், அதற்கு வேறொன்றைத் தருவதில்லை... தீயதையும் தருவதில்லை. அப்படி இருக்கையில் விண்ணகத் தந்தையாகிய இறைவன் மட்டும் தன் பிள்ளைகள் தன்னிடத்தில் ஒன்றைக் கேட்கின்றபொழுது, அதற்கு வேறொன்றைத் தருவாரா? என்று கேட்டுவிட்டு, விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் அதிகமாக நன்மைகள் அளிப்பார் என்கிறார் இயேசு.

ஆம், நம்முடைய விண்ணகத் தந்தை நன்மைகளின் ஊற்றாகவும் தம் பிள்ளைகள் கேட்பவற்றை வாரி வழங்கக்கூடியவராகவும் இருக்கின்றார். அதே நேரத்தில் அவர் தன் பிள்ளைகள் கேட்கின்ற எல்லாவற்றையும் தந்துவிடுவதில்லை. தன்னுடைய திருவுளத்திற்கு ஏற்ப இருப்பவற்றிற்கே தருகின்றார் (1 யோவா 5: 14). ஆகையால், நாம் இறைவனிடம் இடைவிடாது மன்றாடுவோம். அப்படி மன்றாடுகின்றபொழுது, இரக்கம், மன்னிப்பு போன்ற பண்புகளை உள்ளத்தில் தாங்கியவர்களாய் மன்றாடுவோம். ஒருவேளை நாம் கேட்பது கிடைக்கவில்லை எனில், அது இறைவனின் திருவுளம் என ஏற்றுக்கொள்வோம். எப்பொழுதும் இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம்.

சிந்தனை

"வானத்தின் பலகணிகளைத் திறந்து, உங்கள் மேல் ததும்பி வழியுமாறு நான் உங்களுக்கு ஆசி வழங்குவேன்" (மலா 3: 10) என்பார் படைகளின் ஆண்டவர். ஆகையால், நாம் நம் விண்ணகத்தந்தையிடம் நம்பிக்கையோடும் விடமுயற்சியோடும் நல்ல மனத்தோடும் மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!