Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   03 மார்ச் 2020  
    தவக்காலம் 1 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 என் வாக்கு என் விருப்பத்தைச் செயல்படுத்தும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11

ஆண்டவர் கூறுவது: மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 34: 3-4. 5-6. 15-16. 17-18 (பல்லவி: 17b) Mp3
=================================================================================
பல்லவி: நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கின்றார்.

3.என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4.துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -

பல்லவி

5.அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6.இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -

பல்லவி

15.ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.
16.ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். -

பல்லவி

17..நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.
18.உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். -

பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(மத் 4: 4b)

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15.

அக்காலத்தில், இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப்போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.

ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: "விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்."

மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மத்தேயு 6: 7-15

மன்னித்தால் மன்னிப்பு

நிகழ்வு

நேப்பிள்ஸ் மற்றும் சிசிலி நாட்டின் மன்னராக இருந்தவர் அல்போன்சுஸ் என்பவர். இவர் இரக்கத்திற்கும் மன்னிப்பிற்கும் பெயர் போனவர். இவர் தவறு செய்கின்றவர்களைத் தண்டியாமல், அவர்கள்மீது இரக்கம்கொண்டு மன்னித்து வந்தார். இது குறித்து ஒருசிலர் அவரிடம், "நீங்கள் ஏன் தவறு செய்கின்றவர்களைத் தண்டியாமல், மன்னித்து விடுகின்றீர்கள்?" என்று கேட்டனர். அதற்கு அவர் அவர்களிடம், "நல்லவர்களை நீதியால் வெல்லலாம், தீயவர்களை மன்னிப்பால்தான் வெல்ல முடியும். அதனால்தான் மன்னிக்கின்றேன்" என்றார். இதைக் கேட்டு அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்.

இன்னொரு முறை, மன்னர் அல்போன்சுஸிற்கு நெருகிய ஒருசிலர் அவரிடம், "நீங்கள் குற்றவாளிகளை மன்னித்துக்கொண்டே இருந்தால், அவர்களை தொடர்ந்து தவறு செய்துகொண்டுதான் இருப்பார்கள்" என்று குறைபட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களிடம், "காட்டில் வாழ்கின்ற விலங்குகள்தான் ஒன்றை ஒன்று அடித்துச் சாப்பிடும். அது அவற்றின் குணம். மனிதர்கள் அப்படிக் கிடையாது, அவர்கள் மன்னிக்கப் பிறந்தவர்கள். மன்னிக்கின்றபொழுதுதான் அவர்கள் மனிதர்களாக இருக்கின்றார்கள். இல்லையென்றால் விலங்குகளாகிவிடுவார்கள்" என்றார்.

மனிதர்களுக்கு அழகே மன்னிப்புதான். அது ஒருவரிடத்தில் இல்லாமல் போகின்றபொழுது அவர் விலங்காகிவிடுகின்றார் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது. நற்செய்தி வாசகம் மன்னிப்பின் முக்கியத்துவத்தையும் நாம் ஏன் மற்றவர்களை மன்னிக்கவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மன்னிக்கின்ற இறைவன்

மத்தேயு எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு கிறிஸ்து, மற்றவரை நாம் மன்னிக்கின்றபொழுது என்ன நடக்கின்றது என்பதையும் மற்றவர்களை நாம் மன்னியாது இருக்கின்றபொழுது, என்ன நடக்கின்றது என்பதையும் எடுத்துக்கூறுகின்றார். இவற்றைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது முன்பு, இறைவன் எப்படிப்பட்டவர் என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சீராக்கின் ஞான நூலில் இவ்வாறு வாசிக்கின்றோம்: "ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர்; பாவங்களை மன்னிப்பவர்." (சீரா 2:11) அதே போன்று திருப்பாடல் 130:3-4 இல் இவ்வாறு வாசிக்கின்றோம்: "ஆண்டவரே, நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர்." ஆம், இறைவன் நம்முடைய குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிக்கத் தொடங்கினால், நம்மால் அவர்முன் நிலைத்த் நிற்க முடியாது. அவர் மன்னிப்பு அளிப்பவராக இருப்பதால்தான் நம்மால் நிலைத்து நிற்க முடிகின்றது. அப்படியெனில், இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னிப்பது போல, நாம் பிறருடைய குற்றங்களை மன்னிக்கவேண்டும். அதுதான் தகுதியும் நீதியும் ஆகும்.

இறைவனின் மன்னிப்பைப் பெற நாம் பிறரை மன்னிக்க வேண்டும்

இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னிக்கின்றார் என்பதைக் குறித்து மேலே சிந்தித்துப் பார்த்தோம். இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னிக்கவேண்டும் என்றால், அதற்கு ஒரு நிபந்தனை இருக்கின்றது, அதுதான் மன்னிப்பு என்று கூறுகின்றார் ஆண்டவர் இயேசு. ஆம், மற்றவர் செய்யக்கூடிய குற்றங்களை நாம் மன்னிக்கின்றபொழுதுதான், இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னிப்பவராக இருக்கின்றார். ஒருவேளை நாம் மற்றவருடைய குற்றங்களை மன்னியாது இருப்போமெனில், இறைவனும் நம்முடைய குற்றங்களை மன்னிக்க மாட்டார் என்று ஆண்டவர் இயேசு மிகத்தெளிவாகக் கூறுகின்றார். இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டுதான் மன்னிக்க மறுத்த பணியாளர் உவமை (மத் 18).

ஆண்டவர் இயேசு மன்னிப்புக்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார் எனத் தெரிந்துவேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் "மன்னிப்பு" என்பது கேலிக்கூத்தாகப் பார்க்கப்படுகின்றது. மன்னிப்பவர்கள் கோழைகள்... அவர்கள் பலவீனமானவர்கள் என்ற பேச்சு கூட மக்கள் நடுவில் இருக்கிறது. உண்மையில் மன்னிப்புதான் ஒருவனை பலசாலியாக்கும்; நிறைவுள்ளவனாக்கும். ஏனெனில், இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னித்து நிறைவுள்ளவராக இருக்கின்றார் (மத் 5: 48) நாமும் மற்றவர்கள் செய்யக்கூடிய குற்றத்தை மன்னிக்கின்றபொழுதுதான் நிறைவுள்ளவர்களாக முடியும். அதனாலேயே இயேசு மன்னிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்.

ஆகையால், நாம் நமக்குத் தீமை செய்தவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்வோம். அதன்மூலம் இறைவனுடைய மன்னிப்பைப் பெறுவோம்.

சிந்தனை

"ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்கவேண்டும்" (கொலோ 3: 13) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் ஆண்டவர் நம்மை மன்னித்தது போல, ஒருவர் மற்றவரை மன்னிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 எசாயா 55: 10-11

வல்லமையுள்ள இறைவார்த்தை

நிகழ்வு

அது ஒரு கிறிஸ்தவக் கிராமம். அந்தக் கிராமத்தில் நாத்திகர் ஒருவர் இருந்தார். அவர் எப்பொழுதும் விதண்டாவாதமாக எதையாவது கேட்டுக்கொண்டே இருப்பார். ஒருநாள் அவர் ஒரு கிறிஸ்தவரிடம், "எனக்கு உங்களுடைய புனித நூலான திருவிவிலியத்தில் நம்பிக்கை இல்லை" என்றார். "ஏன் அவ்வாறு சொல்கின்றீர்கள்?" என்று கிறிஸ்தவர் அவரிடம் திரும்பிக் கேட்டதற்கு அவர், "திருவிவிலியத்தை யார் எழுதினர் என்றே தெரியவில்லை. அப்படிப்பட்ட ஒரு நூலை நான் எப்படி நம்புவது?" என்றார்.

உடனே கிறிஸ்தவர் அருகில் கிடந்த நாற்காலியைக் காட்டி, "இந்த நாற்காலியை யார் செய்தார் என்று சொல்ல முடியுமா?" என்றார். "இல்லை எனக்குத் தெரியாது" என்றார் நாத்திகர். "இந்த நாற்காலியை யார் செய்தார் என்பது தெரியாது என்பதற்காக இதன்மீது எனக்கு நம்பிக்கை இல்லை... இதன்மீது நான் அமரமாட்டேன் என்று உங்களால் சொல்லமுடியுமா...? என்றார் கிறிஸ்தவர். "அது எப்படி முடியும்? இந்த நாற்காலியை யார் செய்தார் என்பது எனக்குத் தெரியாவிட்டாலும், இது நான் அமர்வதற்கு வசதியாக இருப்பதால், இதன்மீது நான் நம்பிக்கை கொள்ளத்தான் செய்வேன்" என்றார் நாத்திகர்.

"இப்பொழுது சொன்னீர்களே! இதுதான் சரி. எப்படி நாற்காலியை யார் செய்தார் என உங்களுக்குத் தெரியாவிட்டாலும், நீங்கள் அமர்ந்துகொள்வதற்கு அது வசதியாக இருக்கின்றது என்பதால், அதில் அமர்ந்துகொள்கின்றீர்களோ, அப்படி திருவிவிலியத்தை யார் எழுதினார் என்பது உங்களுக்குத் தெரியாவிட்டாலும், அது இன்றைக்கும் வாழ்வுகொடுக்கும் நூலாக இருக்கின்றது என்பதால், அதனை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்" என்றார் கிறிஸ்தவர். இதற்கு அந்த நாத்திகரால் எதுவும் பேசமுடியவில்லை.

ஆம், திருவிவிலியம் சாதாரண நூலல்ல, அது வாழ்வளிக்கும் நூல். அந்த நூலில் இடம்பெறுகின்ற வார்த்தைகளை நாம் வாசிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அதை நாம் வாழ்வாக்கினால் நம்முடைய வாழ்க்கை கடவுளின் ஆசியை நிரம்பப் பெற்றதாக இருக்கும். இன்றைய முதல் வாசகம் இறைவார்த்தையின் வல்லமையையும் மகத்துவத்தையும் குறித்து எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

ஆறுதலின் நூலிலிருந்து ஆறுதலான வார்த்தைகள்

இன்றைய முதல் வாசகமானது இறைவாக்கினர் எசாயா நூலில் உள்ள ஆறுதலின் நூலிலிருந்து (Book of Consolation: Chapter 40 -55) எடுக்கப்பட்டிருக்கின்றது. இப்பகுதியானது பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்டு, வேறொரு நாட்டில் அடிமைகளாக வாழ்ந்துவந்த யூதர்களுக்கு ஆறுதலின் செய்தியை அறிவிப்பதாக இருக்கின்றது.

தென்னாடான யூதேயாவில் இருந்த மக்கள், கடவுளின் கட்டளைப்படி வாழாத்தால் பாபிலோனியர்களால் நாடுகடப்பட்டார்கள். இவர்கள் அங்கு அடிமைகளாக வாழ்ந்தபொழுது, கடவுள் தங்களைக் கைநெகிழ்ந்துவிட்டதாக வருந்தினார்கள். அப்பொழுதுதான் கடவுள் சைரசு மன்னன் வழியாக அவர்களை அவர்களுடைய சொந்த நாட்டில் குடியமர்த்துவதாக வாக்குறுதி தருகின்றார். இந்த வாக்குறுதி உண்மையெனவும் அவர் எடுத்துக் கூறுகின்றார். இத்தகைய பின்னணியில்தான் இன்றைய முதல் வாசகமானது எழுதப்பட்டிருக்கின்றது.

இறைவார்த்தை பலன்கொடுக்கவேண்டும் என்றால், நாம் அதனோடு ஒத்துழைக்கவேண்டும்

கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி, அதாவது அவர்களை அவர்களுடைய சொந்த நாட்டில் குடியமர்த்துவேன் என்ற வாக்குறுதி உண்மை என்பதை நிரூக்கின்ற வகையில் இருப்பதுதான் மழை, பனி என்ற உருவகங்கள். இவை இரண்டும் விண்ணிலிருந்து எதற்காக வருகின்றனவோ, அதற்கான நோக்கத்தை நிறைவேற்றும். அதுபோன்றுதான் இறைவார்த்தையும். இறைவார்த்தை சாதாரண வார்த்தை அல்ல, ஆற்றல் அளிக்கும் வார்த்தை (எபி 4:12). அத்தகைய இறைவார்த்தை இறைவனுடைய வாயிலிருந்து எதற்காக வந்ததோ அந்த நோக்கத்தை நிச்சயம் நிறைவேற்றும்.

இதில் நாம் கவனிக்கவேண்டிய உண்மை என்னவென்றால், இறைவார்த்தை நம்முடைய வாழ்வில் பலன்தரவேண்டும் என்றால், நாம் அதனோடு ஒத்துழைக்கவேண்டும் என்பதுதான். எத்தனையோ புனிதர்கள் இறைவனின் வார்த்தையைக் கேட்டு, அதைத் தங்களுடைய வாழ்க்கையில் செயல்படுத்தினார்கள். அதனால் அவர்கள் இன்றைக்கு மங்காப் புகழோடு இருக்கின்றார்கள். நாமும் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி வாழ்ந்தோமெனில் அல்லது இறைவார்த்தையோடு நாம் ஒத்துழைத்தோமெனில், நாமும் மங்காப் புகழ்வோடு இருப்போம் என்பது உறுதி. ஆகையால், நாம் இறைவார்த்தையைக் கேட்பவர்களாக மட்டுமல்லாமல், அதன்படி வாழ்பவர்களாகவும் இருப்போம் (யாக் 1:22)

சிந்தனை

"நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன" (மாற் 4: 8) என்பார் இயேசு. நாம் மிகுந்த பலன்கொடுக்கும் நல்ல நிலங்களாக விளங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!