Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   02 மார்ச் 2020  
 தவக்காலம் முதல் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு.

லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 11-18


ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்!

களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும் ஒருவரை ஒருவர் வஞ்சியாமலும், என் பெயரால் பொய்யாணையிட்டு, உங்கள் கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள். நான் ஆண்டவர்! அடுத்திருப்பவரை ஒடுக்கவோ அவருக்குரியதைக் கொள்ளையிடவோ வேண்டாம்; வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது. காது கேளாதோரைச் சபிக்காதே! பார்வையற்றோரை இடறச் செய்யாதே! உன் கடவுளுக்கு அஞ்சி நட. நான் ஆண்டவர்!

தீர்ப்பிடுகையில், அநீதி இழைக்காதே. சிறியோர் பெரியோர் என முகம் பாராது, உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு. உன் இனத்தாருக்குள் புறங்கூறித் திரியாதே. உனக்கு அடுத்து வாழ்பவரின் குருதிப் பழிக்குக் காரணம் ஆகாதே! நான் ஆண்டவர்!

உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கு அடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்துகொள். பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 19: 7. 8. 9. 14 (பல்லவி: யோவா6:63b)
=================================================================================
பதிலுரைப் பாடல்
திபா 19: 7. 8. 9. 14 (பல்லவி: யோவா6:63b)

பல்லவி: ஆண்டவருடைய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.
7ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. - பல்லவி

8ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - பல்லவி

9ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. - பல்லவி

14என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வசனம் (2 கொரி 6: 2b)

இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நற்செய்தி வாசகம்
மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: "வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக்கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்பார்.

அதற்கு நேர்மையாளர்கள் "ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?" என்று கேட்பார்கள். அதற்கு அரசர், "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார்.

பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை" என்பார்.

அதற்கு அவர்கள், "ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?" எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், "மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலைவாழ்வு பெறவும் செல்வார்கள்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 லேவியர் 19: 1-2, 11-18

கடவுளைப் போன்று நாம் தூயோராக இருக்கின்றோமா?

நிகழ்வு

அருள்பணியாளர் ரெய்மொந்து எழுதிய ஒரு முக்கியமான நூல், "Three Religious Rebels" இதில் இவர் குறிப்பிடுகின்ற ஒரு நிகழ்வு.

செல்வந்தர் ஒருவர் இருந்தார். இவருக்கு ஏராளமான சொத்துப் பத்தும் நிலபுலன்களும் இருந்தன. இப்படிப்பட்டவருக்கு ராபர்ட் என்ற ஒரே ஒரு மகன் இருந்தான். அவனை இவர் தனக்குப் பின் தன் சொத்துகளுக்கு அதிபதியாக நினைத்தார். அதனால் இவர் அவனைச் செல்வச் செழிப்பில் வளர்த்து வந்தார்; ஆனால், ராபர்ட்டிற்கோ செல்வத்தின் மீதும் உலக இன்பத்தின்மூலம் சிறிதளவுகூட நாட்டம் இல்லை. மாறாக, அவன் ஒரு துறவியாக மாறவேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தான். இது ராபர்டின் தந்தைக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அதனால் அவர் இவனுடைய மனத்தை மாற்றுவதற்கு எப்படியெல்லாமோ முயற்சி செய்து பார்த்தார். எல்லாம் தோல்வியில்தான் போய் முடிந்தது. கடைசியில் ராபர்ட் ஒரு துறவியானான்.

ஆண்டுகள் வேகமாக உருண்டோடின. ராபர்டின் தந்தை வயதாகிப் படுக்கையில் விழுந்தார். ஆதலால், ராபர்ட் அவரைப் பார்ப்பதற்கு வீட்டிற்கு வரவழைக்கப்பட்டான். தன்னுடைய தந்தையின் அழைப்பை ஏற்று வீட்டிற்கு வந்த ராபர்ட், தந்தையின் அருகில் சென்று அமைதியாக நின்றான். அப்பொழுது அவனுடைய தந்தை அவனிடம் மிகவும் அமைந்த குரலில் பேசத் தொடங்கினார்: "என் அன்பு மகனே ராபர்ட்! உன்னிடத்தில் ஒருசில வார்த்தைகள் பேசவேண்டும். சிறுவயதில் நீ உலக செல்வத்தின்மீது நாட்டமில்லாமல் இருந்தபொழுது, நான் உன்னை உலக செல்வத்திற்கும் இன்பத்திற்கும் அடிமையாக்க நினைத்தேன். இப்பொழுது அதற்கான நான் மன்னிப்புக் கேட்கின்றேன்... ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய தீமை, அவரைத் தூயவராக வாழவிடாமல் தடுப்பதுதான். நான் அந்தத் தீமையை உனக்குச் செய்தேன். என்னை மன்னித்துக்கொள்."

ஆம். இந்த உலகத்தில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய தீமை, அவனை தூயவனாக வாழவிடாமல் தடுப்பதுதான். அவன் தூய்மையற்ற வாழ்க்கை வாழ்வதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம் ஏற்றுக்கொள்ளலாம். அதுகூடிய தவறுதான். ஆனால், மற்றவரைத் தூய்மையான வாழ்க்கை வாழவிடாமல் தடுப்பது மிகப்பெரிய குற்றமாகும். இன்றைய முதல் வாசகம், கடவுளைப் போன்று நாம் தூயவர்களாக இருக்க அழைப்புத் தருகின்றது. நாம் எப்படித் தூயவர்களாக இருப்பது என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

தூய்மை என்பது தீமை செய்யாமல் இருப்பது அல்ல

லேவியர் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், "உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயோராய் இருப்பது போல, நீங்களும் தூயோராய் இருங்கள்" என்று கூறுகின்றது. நாம் எப்படித் தூயோராய் இருப்பது எனத் தெரிந்துகொள்வது நல்லது.

தூயோராய் இருத்தல் என்றால் களவு, பொய், வஞ்சனை, பொய்யாணை போன்ற தவறுகளையும் இதுபோன்ற இன்னும் பல தவறுகளையும் செய்யாமல் இருப்பதா? நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நற்செய்தியில் இயேசுவிடம் வந்த செல்வந்தனாகிய இளைஞன் (மத் 19) எந்தத் தவற்றையும் செய்யவில்லை என்று சொன்னான். அது தூய்மையான வாழ்க்கையா? இல்லை. அப்படிப்பட்ட வாழ்க்கையை யார் வேண்டுமானாலும் வாழலாம். தூயோராய் இருப்பது அதை விட உயர்ந்தது, மேலானது. அது என்ன என்று தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தூய்மை என்பது நன்மை செய்வது

தீமை செய்யாமல் இருப்பது மட்டும் தூயோராய் இருப்பது அல்ல என்றால், எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தால், ஒருவர் தூயோராய் இருக்கலாம் என்ற கேள்வி எழலாம். அதற்கான விடைதான் இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாவது பகுதியில் இருக்கின்றது. ஆம், உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூரவேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கைதான் தூயோராய் இருப்பது ஆகும். அடுத்திருப்பவர் என்பவர் நம்முடைய இனத்தார் மட்டுமல்ல, எல்லா இனத்தாரும், குறிப்பாக தேவையில் உள்ள யாவரும் அடுத்திருப்பவர்தான். ஆகையால், தேவையில் உள்ள யாவரையும் எந்தவித வேறுபாடு பார்க்காமல் அன்பு செய்தால், நாம் தூயோராய் இருக்கமுடியும் என்பது உறுதி.

ஆகையால், நாம் தேவையில் உள்ள யாவரையும் அன்புசெய்து, அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வோம். அதன்மூலம் தூயோராய் வாழ்வோம்.

சிந்தனை

"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்" (லூக் 6: 36) என்பார் இயேசு. ஆண்டவரின் தூய்மை அவருடைய இரக்கத்தில் வெளிப்பட்டது போல, நாம் தூயவர்களாய் இருக்கின்றோம் என்பதை நம்முடைய இரக்கச் செயல்களில் வெளிப்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 25: 31-46

"எனக்கே செய்தீர்கள்"

நிகழ்வு

இறையடியார் ஒருவர் இருந்தார். ஒருநாள் அதிகாலை வேளையில் அவர் ஒரு புத்தத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். புத்தகத்தைத் தீவிரமாக அவர் வாசித்துக்கொண்டிருக்கும்பொழுதுதான் கவனித்தார், வழிபாட்டிற்கு நேரமாகிவிட்டது என்பதை. உடனே அவர் தான் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தை முடிவீட்டு மெல்ல எழுந்தார். அப்பொழுது அவர் தன் வீட்டில் வளர்ந்து வந்த பூனை ஒன்று, தான் அணிந்திருந்த அங்கியில் நிம்மதியாய்ப் படுத்துத் தூங்குவதைக் கண்டார்.

அவர் அந்தப் பூனையின் தூக்கத்தைக் கெடுக்க நினைக்காமல், தனது கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த ஒரு கத்தரிக்கோலை எடுத்து, அங்கியில் பூனை தூங்கிக்கொண்டிருந்த பகுதியை மட்டும் வெட்டிவிட்டு வழிபாட்டிற்குச் சென்றார். அன்றைக்கு அவருடைய உள்ளத்தில் மற்ற எல்லா நாள்களையும் விடவும் அவ்வளவு மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.

ஆம், நம்மோடு இருக்கின்ற உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் செய்கின்ற சிறு உதவிக்கு தக்க பலன் கிடைக்கும் (அது மனமகிழ்ச்சியாகவும் இருக்கலாம் வேறு எதுவாகவும் இருக்கலாம்) அப்படிப்பட்ட உதவி இறைவனுக்கே செய்ததாக இருக்கும். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இறுதித்தீர்ப்பு உவமையைக் குறித்துப் பேசுகின்றார். இதில் அவர். மிகச் சிறிய சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்று கூறுகின்றார். அது எப்படி என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மாட்சியுடன் வரும் மானிடமகன்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு இறுதித் தீர்ப்பு உவமையைக் குறித்துப் பேசுகின்றார். இதில் அவர் ஒரு சாதாரண தச்சராக அல்ல, மாறாக வானதூதர்கள் அனைவரும் புடைசூழ மாட்சியுடன் வருவதாகக் குறிப்பிடுகின்றார். பின்னர் அவர் அரியணையில் அமர்ந்திருக்க எல்லா மக்களிடத்தாரும் அவர்முன் ஒன்றுகூட்டப்படுவதாகவும் ஓர் ஆயர் வெள்ளாடுகளையும் செம்மறியாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார் என்றும் கூறுகின்றார்.

இங்கு இயேசு சொல்லக்கூடிய வார்த்தைகள் ஓர் உண்மையை மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. அது என்னவெனில், ஒருவர் நல்லவராக இருக்கவேண்டும் அல்லது தீயவராக இருக்கவேண்டும். இரண்டு கெட்டான இருக்கக் கூடாது. அப்படி இரண்டும் கெட்டானாக இருப்பவருக்கு விண்ணகத்தில் மட்டுமல்ல, பாதாளத்தில் கூட இல்லை. இயேசு சொல்லும் உவமையில் வெள்ளாடுகள் செம்மறியாடுகள் அல்லது நேர்மையாளர்கள் நேர்மையற்றவர்கள் என்ற பிரிக்கப்படுகின்றார்களே ஒழிய, இரண்டும் கேட்டான் என்ற பேச்சுக்கு இடமில்லை. அப்படி இரண்டு கெட்டானாக இருக்கக்கூடிய "இலவோதிக்கேயா திருஅவையோ" கடவுளின் சினத்திற்கு உள்ளாகின்றது (திவெ 3: 15-16).

மனிதரில் கடவுள்

இயேசு சொல்லும் இறுதித்தீர்ப்பு உவமை நமக்குச் சொல்லக்கூடிய இரண்டாவது முக்கியமான செய்தி, இறைவன் ஒவ்வொருவரிலும் குடிகொண்டிருக்கின்றார் என்பதாகும். ஆம், கடவுள் மனிதரைப் படைத்தபொழுது, தம் உருவிலும் சாயலிலுமே உண்டாக்கினார் (தொநூ 1: 26). அதே போல் சவுல் பவுலாவதற்கு முன்னால், அவர் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களைப் பிடித்துத் துன்புறுத்தியபொழுது, ஆண்டவர் இயேசு, "ஏன் என்னைத் துன்புறுத்துகின்றாய்?" (திப 9:4) என்றுதான் கேட்கின்றார். இவையெல்லாம் இறைவன் ஒவ்வொருவரிலும் குடிகொண்டிருக்கின்றார் என்ற உண்மையை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றன. நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய, "மிகச் சிறிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்" என்ற வார்த்தைகள்கூட மேலே சொல்லப்பட்ட உண்மையைத்தான் நமக்கு எடுத்துக்கூறுகின்றன.

வாழ்வும் தாழ்வும் அவரவர் செய்கின்ற இரக்கச் செயல்களைப் பொறுத்தே!

இயேசு சொல்லும் இறுதித்தீர்ப்பு உவமை நமக்குச் சொல்லக்கூடிய மூன்றாவது செய்தி, ஒருவருடைய வாழ்வும் தாழ்வும் அவர் செய்கின்ற இரக்கச் செயல்களைப் பொறுத்தே என்பதாகும். உவமையில் வருகின்ற நேர்மையாளர்கள் அதாவது தங்களோடு வாழ்ந்தவர்களுக்கு உணவும் தண்ணீரும் ஆடையும் இருக்க இடமும், இன்ன பிற உதவிகளையும் செய்தோர், "ஆசிபெற்றவர்கள்" என்று அழைக்கப்படக் காரணம், அவர்கள் செய்த இரக்கச் செயல்கள்தான். அதே நேரத்தில் உவமையில் வருகின்ற நேர்மையற்றவர் அதாவது இடப்பக்கத்தில் இருந்தோர், "சபிக்கப்பட்டோர்" என அழைக்கப்படக் காரணம், அவர்கள் எந்த இரக்கச் செயலையும் செய்யவில்லை என்பதால்தான். அப்படியானால், ஒருவருடைய இரக்கச் செயல்கள் அவருடைய உயர்வுக்கும் நிலைவாழ்வைப் பெறுவதற்கும் காரணமாக இருக்கின்றன என்று உறுதியாகச் சொல்லலாம்.

நாம் நம்மோடு வாழக்கூடிய சக மனிதர்களில் கடவுளைக் கண்டு, அவர்களுக்கு இரக்கச் செயல்களைச் செய்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

"ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்ப கடவுள் கைம்மாறு செய்வார்" (உரோ 2: 6) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் எல்லாரிலும் இறைவனைக் கண்டு, அவர்களுக்கு நம்மால் இயன்ற நன்மைகளைச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
தவக்காலம் 1வது வாரம் திங்கட்கிழமை (02-03-2020) திருப்பலி மறையுரை :

இன்றைய திருப்பலி மறையுரை :

''நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவுகொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்'' (மத்தேயு 25:35)

மத்தேயு நற்செய்தியின் இறுதிப் பகுதியில் ''மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு'' என்னும் பிரிவு உள்ளது (மத் 25:31-46). இயேசு வழங்கிய அன்புக் கட்டளையை வாழ்வில் கடைப்பிடிக்கும்போது இறையன்பும் பிறரன்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதை இப்பகுதி காட்டுகின்றது. ஒவ்வொரு மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்பதை ''நல்ல சமாரியர்'' உவமை வழியாக எடுத்துரைத்த இயேசு (காண்க: லூக் 10:25-37), இங்கே நாம் பிறர் மட்டில் காட்டுகின்ற அன்பு கடவுளுக்கு நாம் காட்டுகின்ற அன்பின் மறுவடிவமே என்று எடுத்துரைக்கிறார். உலகத்தில் பசியாலும் தாகத்தாலும் வாடுகின்ற மனிதர் பலருண்டு; அன்னியராக நடத்தப்படுவோர் உண்டு; இருக்க இடமும் உடுக்க ஆடையும் இல்லாதோர் உண்டு; நோயினால் வாடுவோர் உண்டு; சிறைப்பட்டுத் துன்புறுவோர் உண்டு. இவர்களைப் பார்க்கும்போது இயேசுவே இவ்வாறு பசி பிணி நோய் போன்ற துன்பங்களை அனுபவிக்கிறார் என உணரவும், மனிதருக்குச் செய்வதையே அவருக்கே செய்கிறோம் என அறியவும் இயேசு நம்மை அழைக்கிறார்.

இங்கே ஒரு முரண்பாடு எழுவதுபோல் தெரிகிறது. அதாவது, இயேசு சாவை வென்று நம் ஆண்டவராக ஏற்கெனவே மகிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதே நேரத்தில் இயேசு இவ்வுலகில் மனிதராக நம்மிடையே நடமாடுகிறார். குறிப்பாக, ஏழை எளியவர்கள், ஒடுக்கப்பட்டோர் போன்ற ''மிகச்சிறியோர்'' (மத் 25:40,25) வடிவத்தில் அவர் நம்மிடையே உள்ளார். இந்த உண்மையைத் தூய பவுல் ''நாம் கிறிஸ்துவின் உடல்'' என விளக்குவார் (காண்க: உரோ 12:4). மனித குலம் முழுவதும் மனிதராக நம்மிடையே வந்த கிறிஸ்துவில் ஒன்றித்திருப்பதால் நாம் ஒருவர் ஒருவருக்குச் செய்வதை (நன்மையோ தீமையோ) கிறிஸ்துவுக்கே செய்கிறோம் எனலாம். ஆக, நம்மிடையே சகோதர அன்பு விளங்கும்போது அங்கே இறையன்பும் துலங்குகிறது; அதற்கு மாறாக, சகோதர அன்பு குறைபடுகின்ற வேளையில் இறையன்பும் குறைபடுகிறது. நேர்மையாளராக நாம் வாழ்ந்து ''நிலைவாழ்வு'' அடைவதும், தீயோராக நடந்து ''தண்டனை'' பெறுவதும் நாம் பிறரில் கடவுளைக் கண்டு அவர்களை அன்போடு நடத்தினோமா இல்லையா என்பதன் அடிப்படையில் அமையும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!