Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     24 மார்ச் 2018  
                                               தவக்காலம் மூன்றாம் ஞாயிறு  - 3ம் ஆண்டு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
"இருக்கின்றவராக இருக்கின்றவர்' என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 3: 1-8a,13-15

அந்நாள்களில் மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலைநிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக்கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார்.

அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்துகொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை.

"ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்" என்று மோசே கூறிக்கொண்டார்.

அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார்.

"மோசே, மோசே' என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் "இதோ நான்" என்றார்.

அவர், "இங்கே அணுகி வராதே; உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்றுகொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்" என்றார்.

மேலும் அவர், "உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே" என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார். அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கி வந்துள்ளேன்.

மோசே கடவுளிடம், "இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, "அவர் பெயர் என்ன?' என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?" என்று கேட்டார்.

கடவுள் மோசேயை நோக்கி, "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே' என்றார்.

மேலும் அவர், "நீ இஸ்ரயேல் மக்களிடம், "இருக்கின்றவர் நானே' என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்" என்றார்.

கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "நீ இஸ்ரயேல் மக்களிடம், "உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்' என்று சொல். இதுவே என்றென்றும் என் பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!"



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 103: 1-2. 3-4. 6-7. 8,11 (பல்லவி: 8a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி
3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

6 ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார். 7 அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. பல்லவி



================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 மோசேயோடு மக்கள் பாலைநிலத்தில் நடத்திய வாழ்க்கை நமக்கு அறிவுபுகட்டும் படிப்பினையாக எழுதப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 1-6,10-12


சகோதரர் சகோதரிகளே, நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நம் முன்னோர் அனைவரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர். அவர்கள் அனைவரும் கடலைக் கடந்து சென்றனர். அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிக உணவை உண்ட னர். அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிகப் பானத்தைப் பருகினர். தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆன்மிகப் பாறையிலிருந்து அவர்கள் பருகினார்கள்.

கிறிஸ்துவே அப்பாறை. அப்படியிருந்தும், அவர்களில் பெரும்பான்மையோர் கடவுளுக்கு உகந்தவராய் இருக்கவில்லை. பாலை நிலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் தீயனவற்றில் ஆசை கொண்டு இருந்தது போல நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன. அவர்களுள் சிலர் முணு முணுத்தனர். இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர். அவர்களைப்போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது. அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன.

இறுதிக் காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன. எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர் விழுந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளட்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 17

"மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது,' என்கிறார் ஆண்டவர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

அக்காலத்தில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.

அவர் அவர்களிடம் மறுமொழியாக, "இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும்விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.

சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்" என்றார்.

மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: "ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், "பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?' என்றார்.

தொழிலாளர் மறுமொழியாக, "ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்' என்று அவரிடம் கூறினார்."


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
மனம்மாறி இறைவனிடம் திரும்பி வருவோம்.

இங்கிலாந்து நாட்டின் டார்லிங்டன் நகரில் வாழ்ந்த ஒரு திருடன் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு வீடு திரும்பினான். வீட்டுக்கு வந்த அவனை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவன் வாழ்க்கையை வெறுத்துப் போயிருந்தான். ஒருநாள் அவன் தெருவில் நடந்துசென்று கொண்டிருந்தபோது, எதிரிலே அந்நகரின் மேயர் ஜான் மோர்சல் வந்துகொண்டிருந்தார். அவருக்கு இவனை நன்றாகவே தெரியும். உடனே அவன், அவரிடமிருந்து எப்படியாவது தன்னை மறைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒளிந்து ஒளிந்து சென்றான். அப்போது திடிரெண்டு ஒரு கை அவன் தோள்மேல் பட்டது. திரும்பி பார்த்த அவன் அதிர்ந்துபோனான். ஏனென்றால் அவன் எதிரே ஜான் மோர்சல் நின்றுகொண்டிருந்தார். அவர் அவன் தோள்மேல் கைபோட்டு, "என்ன சகோதரா! நன்றாக இருக்கிறீர்களா? என்று நலம் விசாரித்தார். இது அவனுக்கு இன்னும் அதிர்ச்சியைத் தந்தது. சிறிது நேரம் அவர் அவனிடம் பேசிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

வருடங்கள் பல சென்றன. ஒரு நாள், வேறொரு நகரில் அவன் ஜான் மோர்சலைப் பார்த்துஇ மிகுந்த சந்தோசத்தோடு அவரிடம் சென்று, "ஐயா! என்னை ஞாபகம் இருக்கிறதா?" என்றான். ஒரு நிமிடம் அவனை அமைதியாகப் பார்த்துவிட்டு அவர் ஞாபகம் இருக்கிறது என்பதுபோல் தலையாட்டினார். அப்போது அவன் அவரிடம், "ஐயா! அன்றைக்கு மட்டும் நீங்கள் என் தோள்மேல் கைபோட்டு, அன்பாகப் பேசி இருக்காவிட்டால், இன்றைக்கு நான் எப்படியோ இருந்திருப்பேன், என் வாழ்க்கையே முற்றிலும் சீரழிந்து போயிருக்கும். நீங்கள்தான் எல்லாரும் வெறுத்து ஒதுக்கிய திருடனாகிய என்னிடம் அன்பொழுகப் பேசினீர்கள்; நீங்கள்தான் என் குற்றங்களையெல்லாம் எல்லாம் மன்னித்து ஏற்றுக்கொண்டீர்கள்" என்றான். அன்போடு நடந்துகொண்டால் எப்படிப்பட்ட குற்றவாளியும் மனந்திரும்புவான் என்பதை இக்கதையானது சுட்டிக்காட்டுகிறது.

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமை வாசகங்கள் நமக்கு "மனந்திரும்பி வாழ அழைப்புத் தருகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவிடம் சிலர், பிலாத்து பலிசெலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைக் கொன்றான் என்ற செய்தியைச் சொல்கின்றனர். அதற்கு இயேசு, மனம் மாறாவிடில் நீங்கள் ஒவ்வொருவருமே அழிவீர்கள்" என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள் சற்றுக் கடினமாக இருந்தாலும், அவர் நாம் அனைவரும் மனந்திரும்பி வரவேண்டும் என்று அன்போடு காத்துக்கொண்டிருக்கிறார். இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், "நீங்கள் கடவுளைவிட்டு விலகி சென்ற இஸ்ரயேல் மக்கள் போன்று அல்லாமல், கடவுளை நோக்கி வரும் மக்களாக வாழவேண்டும்" (1கொரி 10:6) என்றதொரு அழைப்பினைத் தருகிறார். ஆம், கடவுளை விட்டு விலகிச்செல்வதுதான் பெரிய பாவம், விலகிச் சென்றவர்கள் மீண்டுமாக இறைவனிடம் திரும்பி வருவதே உண்மையான மனமாற்றம். ஆதலால் நாம் இருகின்றவராக, இருக்கின்ற இறைவனிடம் திரும்பி வருவோம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 
(விடுதலைப் பயணம் 3: 1-8, 13-15; 1கொரிந்தியர் 10: 1-6, 10-12; லூக்கா 13: 1-9)

மனமாற்றம் காலத்தின் கட்டாயம்!

நிகழ்வு

அது ஒரு விவசாயக் குடும்பம். அக்குடும்பத்தில், ஓர் அதிகாலை வேளையில், தோட்ட வேலையில் இருந்த அப்பாவுக்கு, மகனின் தீய பழக்கவழக்கங்கள் குறித்துத் தெரியவந்தது. உடனடியாகத் தன் மகனைக் கூப்பிட்டு, அவற்றைத் தவித்துவிடச் சொன்னார். அவனோ "இந்த வயதில் இப்படி இருப்பது சகஜம்... வயதானால் பழக்கவழக்கங்கள் தன்னால் விலகிவிடும்" என்றான். அதற்குத் தந்தை அவனிடம், தோட்டத்தில் இருந்த ஒரு சின்னஞ்சிறிய செடியைக் காட்டிப் பிடுங்கச் சொன்னார். பையன் பிடுங்கினான். அதன்பின்பு சற்றே வளர்ந்த செடியைக் காட்டிப் பிடுங்கச் சொன்னார். அவன் சிரமப்பட்டுப் பிடுங்கினான். பின்பு நன்கு வளர்ந்த முட்செடிகளைக் காட்டினார். அவனோ பிடுங்க முடியாமல் திணறினான்.

அப்பொழுது தந்தை அவனைப் பார்த்துச் சொன்னார், "பழக்கவழக்கங்களும் இப்படித்தான், வளர்ந்து விட்டால் மாற்ற முடியாது... சிறிதாய் இருக்கையில் அகற்றுவதே நல்லது" என்றார். மகனும் அறிவுத்தெளிவு பெற்றவனாய், தன்னிடமிருந்த தீய பழக்கவழக்கங்களை விட்டொழித்து, மனம்திருந்தி வாழத் தொடங்கினான்.

தீய வழியில் நடக்கும் ஒவ்வொருவரும் உடனடியாகத் தன்னுடைய தவற்றை உணர்ந்து, மனமாறவேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. தவக்காலம் மனமாற்றத்தின் காலம். தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுகிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளில் நாம் படிக்கக் கேட்ட நற்செய்தி வாசகம், 'மனமாற்றம் காலத்தின் கட்டாயம்' என்றதொரு சிந்தனையைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

கேள்விக்குக் கேள்வியாலேயே விடையளித்த இயேசு

இயேசு எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது, சிலர் இயேசுவிடம் வந்து, பலிசெலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவிக்கின்றனர். அவர்கள் இயேசுவிடம் இச்செய்தியை அறிவித்ததற்குக் காரணம், அதற்கு அவரின் பதிலென்ன என்பதைத் தெரிந்துகொள்ளத்தான். "பலிசெலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றானே! அதைக் குறித்து நீ என்ன நினைக்கிறீர்?" என்பது போன்றுதான் அவர்கள் இயேசுவிடம் கேட்டிருக்கவேண்டும். அவர்கள் கேட்ட கேள்விக்கு (!) இயேசு நேரடியாகப் பதில் சொல்லாமல், "இக்கலிலேயருக்கு இவ்வாறு நேர்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரைவிடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?" என்றொரு கேள்வியைத் திருப்பிகேட்டு அவர்களுக்கு விடையளிக்கின்றார்.

கேள்வி கேட்பவரிடமே கேள்வியைக் கேட்டு பதிலளிப்பது யூத இரபிக்களிடம் இருந்த ஒரு வழக்கம். இப்படித்தான் ஒருவன் ஒரு யூத இரபியிடம் வந்து, "ஐயா! நான் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கான பதிலை நேரடியாகச் சொல்லாமல், திரும்ப என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டு விடையளிக்கின்றீர்களே? அது ஏன்?" என்று கேட்டான். உடனே அந்த யூத இரபி, "ஏன், நான் அப்படிக் கேள்வி கேட்கக்கூடாதா?" என்றாராம். யூத இரபிக்களிடம் இருந்த இவ்வழக்கத்தை இயேசுவும் கடைப்பிடித்து தன்னிடம் கேள்வி கேட்டவரிடம், பதிலுக்கு ஒரு கேள்வியைக் கேட்டு பதிலளிக்கின்றார்.

இயேசு தன்னிடம் செய்தியை சொன்னவரிடம் அல்லது கேள்வி கேட்டவரிடம், நேரடியாகப் பதில் சொல்லாமல், கேள்விகேட்டுப் பதில் சொன்னதற்குக் காரணம், கலிலேயரைக் கொன்ற பிலாத்து சாதாரணமாவன் கிடையாது, அவன் உரோமை ஆளுநன். அவன் கலிலேயரைக் கொன்றது தவறு என்று சொன்னால், உரோமையரை வெறுத்து வந்த யூதர்களின் பகைமையை இயேசு சம்பாதிக்கவேண்டி வரும். அதே நேரத்தில் பிலாத்து கலிலேயரைக் கொன்றது தவறு என்று சொன்னால், உரோமையர்களின் பகையைச் சம்பாதிக்க வேண்டி வரும் என்பதால், "மனமாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்" என்று சொல்லி பிரச்சினையை புதிய கண்ணோட்டத்தில் பார்க்க அவர்களை அழைக்கின்றார்.

யாரும் யாரையும் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல், மனமாறுவது நல்லது

பிலாத்து பலிசெலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைக் கொன்றுவிட்டான் என்றதும் மக்கள் அவர்களைப் பாவிகள் என்று முத்திரை குத்தியிருக்கக்கூடும். இதை நன்குணர்ந்த இயேசு அவர்களிடம், "இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும்விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல. மனம்மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்" என்கின்றார். இதைத் தொடர்ந்து இயேசு சிலோவாமில் கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேர் இறந்ததைக் குறித்துச் சொல்கிறார். அதைச் சொல்லிவிட்டு முன்பு சொன்ன அதே வார்த்தைகளைச் சொல்லி, அவர்களை எச்சரிக்கின்றார்.

யாராவது தீராத நோயில் விழுந்தாலோ அல்லது விபத்துக்குள்ளானாலோ அல்லது இன்ன பிற காரணங்களால் இறந்துபோனாலோ உடனே நாம் 'இவன் பாவி, அதனால்தான் இவனுக்கு/இவளுக்கு இப்படி நேர்ந்திருக்கின்றது' என்று வாய்க்கு வந்த மாதிரி பேசத் தொடங்கிவிடுவோம். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களும் இப்படித்தான் இப்படித்தான் இருந்தார்கள் (யோவா 9:2). இதனை உணர்ந்துதான் இயேசு, அவருக்கு அப்படி நேர்ந்துவிட்டது, இவருக்கு இப்படி இப்படி நேர்ந்துவிட்டது, அதனால் அவர்கள் அனைவரும் பாவிகள் என்று சொல்லிக்கொண்டிருக்காமல், மனம்மாறாவிட்டால் அனைவரும் அப்படியே அழிவீர்கள் என்கின்றார். ஆதலால், யாரும் யாரையும் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல், மனமாறுவது நல்லது.

நாம் மனம்மாறுவதற்குப் பொறுமையோடு காத்திருக்கும் கடவுள்

'மனம்மாறாவிடில் அழிவீர்கள்' என்று சொன்ன இயேசு, ஒவ்வொருவரும் மனமாறவேண்டும் என்பதற்காகக் கடவுள் பொறுமையோடு காத்திருக்கின்றார் என்பதையும் ஓர் உவமை வழியாக எடுத்துச் சொல்கின்றார். இயேசு சொல்லும் உவமையில் மூன்று ஆண்டுகளாகியும் கனிகொடுக்காத அத்திமரத்தை வெட்டிவிடுமாறு தோட்டத்தின் உரிமையாளர் தொழிலாளரிடம் சொல்லும்போது, தொழிலாளர், "இன்னும் ஓராண்டு விட்டு வைப்போம், அடுத்தாண்டு கனிகொடுத்தால் சரி, இல்லையென்றால் வெட்டிவிடலாம்" என்கின்றார். யூதர்கள் புதிதாக நட்ட மரத்திலிருந்து முதல் மூன்று ஆண்டுகளுக்கு விளையும் கனிகளைப் பறிப்பதில்லை, நான்காமாண்டு விளையும் கனிகளை கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுப்பார்கள். அதபிறகு கிடைப்பவற்றையே அவர்கள் பறித்துக்கொள்வார்கள் (லேவி 19: 23-25)

இயேசு சொல்லும் உவமையில் வருகின்ற மனிதரோ ஏழு ஆண்டுகள் (முதல் மூன்று ஆண்டுகள் + கடவுளுக்கு ஓராண்டு + அதன்பிறகு மூன்று ஆண்டுகள்) காத்திருப்பதாக வாசிக்கின்றோம். அப்படியும் அத்திமரம் கனி கொடுக்காமல் இருந்ததால்தான் அதை வெட்டிவிடத் தீர்மானிக்கின்றார். ஏழாண்டுகள் என்பது அதிகமான காலம், அவ்வளவு காலம் தோட்ட உரிமையாளர் பொறுமையாக இருப்பது போன்று, ஆண்டவரும் நாம் மனம் மாறவேண்டும் (1பேதுரு 3:9) என்பதற்காகப் பொறுமையாக இருக்கின்றார் என்கிறார் இயேசு.

இப்பகுதியை எருசலேமின் அழிவோடும் ஒப்பிடலாம். அங்கிருந்தவர்கள் மனம்மாற வேண்டும் என்று இயேசு மூன்று ஆண்டுகள் போதித்தார். அதன்பிறகு தன்னுடைய சீடர்கள் வழியாக நாற்பது ஆண்டுகள் அம்மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கச் செய்தார். அப்படியிருந்தும் அங்கிருந்தவர்கள் மனம்மாறாதால் அவர்கள் கி.பி 70 ஆம் ஆண்டு உரோமையர்களால் அழிந்து போனார்கள். மக்கள் மனம்மாறுவதற்கு கடவுள் எவ்வளவோ பொறுமையாக இருந்தும், அவர்கள் மனமாறாமல் இருந்ததை என்னவென்று சொல்வது?

சிந்தனை

நாம் அழிந்துபோகவேண்டும் என்பதல்ல, மனம்மாறி வாழ வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பம். ஆகவே, குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மனம் மாறி இறைவனுக்கு உகந்த வழியில் நடக்க முயற்சிப்போம், தீர்ப்பிடாது வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
பாலைநிலத்திலிருந்து திரும்ப

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு
(மார்ச் 24, 2019)

விடுதலைப் பயணம் 3:1-8, 13-15
1 கொரிந்தியர் 10:1-6,10-12
லூக்கா 13:1-9

புனித இஞ்ஞாசியாரின் புகழ்பெற்ற "ஆன்மீகப் பயிற்சிகள்" ('Spiritual Exercises') நூலில், "தெரிதலும் தெரிவுசெய்தலும"('Discernment') பற்றிச் சொல்லும்போது, இருவகை உணர்வுகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்: "ஆறுதல்" ('consolation'), "வெறுமை" (desolation). நம் வாழ்வின் நிகழ்வுகள் நாம் எதிர்பார்ப்பது போலச் செல்லும்போது, அல்லது நமக்கு நடக்கும் எல்லாம் நேர்முகமாகவே நடக்கும்போது, நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் நாம் வெற்றி பெறுகிறபோது, நம் உறவுநிலைகள் நமக்கு அமைதி தருவனவாக இருக்கும்போது, நம் உடல்நலம் நன்றாக இருக்கும்போது போன்ற சூழல்களில் நாம் 'ஆறுதல்' கொள்கிறோம். ஆனால், 'ஆறுதல்' மட்டுமே நம் வாழ்வியில் அனுபவமாக இருப்பதில்லை. சில நிகழ்வுகள் நம் எதிர்பார்ப்பிற்கு முரணாக நடந்தேறும். நமக்கு நடக்கும் எல்லாம் எதிர்மறையாகவே நடக்கும். நம் முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியைத் தரும். நாம் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றி தராது. நம் உறவுநிலைகளில் அமைதி குலையும். நம் உடல்நலம் குன்றும். இச்சூழல்களில் நாம் அடையும் உணர்வின் பெயர் 'வெறுமை.'

நம் உடல் பசியால், தாகத்தால் வாடுவதுபோல, நம் மூளை புதிய சிந்தனை இல்லாமல் வறண்டு போவதுபோல, நம் இதயம் புதிய உறவுகளைத் தேடுவதுபோல, நம் உள்ளம் அல்லது ஆன்மாவும் வெறுமையை அனுபவிக்கிறது. ஆன்மாவின் ஊற்று சுரப்பது நிற்கும்போது, ஆன்மா என்னும் கிணறு வற்றும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையே இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

தவக்காலத்தின் முதல் வாரத்தில் இயேசுவோடு புறப்பாலைவனத்தில் இருந்து, அவரோடு இணைந்து நம் நம்பிக்கையை அறிக்கையிட்டோம். கடந்த வாரம் அவரோடு உருமாற்ற மலையில் இருந்து நம் வாழ்வின் உறுதியற்ற நிலையை எதிர்கொண்டோம். இன்று, நம் ஆன்மீகப் பாலைநிலத்திலிருந்து திரும்புவோம்.

இன்றைய முதல் வாசகம் (காண். விப 3:1-8,13-15) மோசேயின் அழைப்பு நிகழ்வை நமக்குப் படம்பிடித்துக்காட்டுகிறது. 'மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்துவந்தார்' என்ற தொடக்க வசனமே மோசேயின் பாலை அனுபவத்தை நமக்கு எடுத்துச் சொல்கிறது. எகிப்தின் வளம் மிக்க நைல் நதியிலிருந்து 'வெளியே எடுக்கப்பட்டு,' 'எபிரேயத் தாயே தாதியாகப் பாலூட்ட,' 'பாரவோனின் மகளின் அரவணைப்பில்' வாழ்ந்த மோசே, இப்போது, தனக்குச் சொந்தமில்லாத இடத்தில், தனக்குச் சொந்தமில்லாத ஆடுகளை, தனக்குச் சொந்தமில்லாத நிலத்தில் மேய்த்துக்கொண்டிருக்கிறார். இப்படியாக தனக்குத்தானே அந்நியராக நிற்கின்றார் மோசே. இந்த நேரத்தில்தான், முட்புதர் ஒன்று எரிந்துகொண்டிருப்பதையும் அது தீய்ந்துபோகாமல் இருப்பதையும் காண்கின்றார். 'இந்த மாபெரும் காட்சியைக் காண்பதற்காக நான் அப்பக்கமாகத் திரும்புவேன்' என்று மோசே முட்புதர் நோக்கித் திரும்புகின்றார். அவர் அணுகி வருவதைக் கண்டு, 'இந்த இடம் தூய்மையானது. இங்கே அணுகி வராதே. உன் மிதியடிகளை அகற்று' என எச்சரிக்கிறார் கடவுள். கடவுள் தன்னையே, 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று மோசேயின் மூதாதையரின் கடவுளாகத் தன்னை முன்வைக்கின்றார். எகிப்தில் தன் மக்கள் படும் துன்பங்களைக் கண்டு தான் இறங்கி வந்திருப்பதாகச் சொல்கின்றார் கடவுள்.

'அவர் பெயர் என்ன?' என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்? என முதல் தயக்கத்தை வெளிப்படுத்துகின்றார் மோசே. மோசே தன் கடவுள் பற்றியும், தன் மூதாதையர் பற்றியும் அறியாமல் இருக்கிறார். அல்லது அவருடைய இந்த இக்கட்டான நிலையில் கடவுள் தன்னிடம் இல்லை என்றுகூட அவர் நினைத்திருக்கலாம். 'இருக்கின்றவாக இருக்கின்றவர் நானே' என்று தன் பெயரை வெளிப்படுத்துகின்றார் கடவுள். 'யிஹ்யே' என்ற இந்த எபிரேயச் சொல்லை, 'இருக்கின்றவராக இருக்கின்றவர்,' 'இருக்கின்றவற்றை இருக்கச் செய்கிறவர்' போன்று பல பொருள்களில் மொழிபெயர்க்கலாம். கடவுளின் பெயர் ஒன்றை மட்டும் நமக்குச் சொல்கிறது. 'இல்லாததை இருக்கச் செய்பவரும்,' 'இருப்பதை இருக்கச் செய்கிறவரும்' இறைவனே. மோசேயின் வெறுமையை நிரப்புகிறவரும், மக்களின் துன்பங்கள் துடைக்கிறவரும் இறைவனே. ஆக, இஸ்ரயேல் மக்கள் அனுபவித்த அடிமைத்தனம் என்னும் பாலைநிலைத்திலிருந்து அவர்களை விடுவிக்க மோசே என்னும் வெறுமையின் பாலைநிலத்தைத் தேர்ந்துகொள்கிறார் கடவுள். எப்படி எரிகின்ற முட்புதர் தீய்ந்துபோகவில்லையோ, அப்படியே கடவுளின் இருப்பு இஸ்ரயேல் மக்களுக்கு தீர்ந்துபோகவில்லை. இந்த அனுபவத்தையே இன்றைய திருப்பாடலில் (காண். 103) ஆசிரியர், 'ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்' என்று புகழ்கின்றார்.

ஆக, 'ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மோசே' பாலைநிலத்திலிருந்து எகிப்திற்குத் திரும்புமாறு கடவுளால் அழைக்கப்படுகின்றார். இப்படித் திரும்பும் அவர் தன் கடவுளைக் கண்டுகொள்கின்றார். கடவுளைக் கண்டுகொண்ட அவர் கடவுள் அவருக்குத் தந்த பணியைச் செய்யப் புறப்படுகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 10:1-6, 10-12), சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணலாமா, வேண்டாமா என்பது பற்றிய அறிவுரையை கொரிந்து நகரத் திருச்சபைக்கு வழங்குகின்றார் பவுலடியார். கொரிந்து நகரத் திருச்சபை ஓர் அறிவுசார் திருச்சபை. எனவே, ஒரு சாரார், 'வேறு எந்தக் கடவுளும் இல்லை' (காண். 1 கொரி 8:4-6) என்ற புரிதலில், எல்லா உணவையும் - அது எந்த ஆலயத்தில் படைக்கப்பட்டாலும் - உண்ணலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தனர். மற்றொரு குழுவினர், இச்செயலைச் சிலைவழிபாடு என்று கருதி, மற்றவர்களின் இச்செயல்பாடு குறித்து இடறல்பட்டனர். இது நம்பிக்கையாளர்கள் நடுவே குழப்பத்தையும் பிரிவினையையும் உண்டாக்கியது. சிலைகள் கடவுளர்கள் அல்ல என்பதால் அவற்றுக்குப் படைக்கப்பட்ட யாவற்றையும் உண்ணலாம் என்று சொல்கின்ற பவுலடியார், அதே வேளையில், மற்ற நம்பிக்கையாளர்கள் இதைக் குறித்து இடறல் பட்டாலோ அல்லது இச்செயல் பிரிவினையை உண்டாக்கினாலோ, இச்செயல் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார் (காண். 1 கொரி 8:7-12, 10:23-30).

இந்தப் பின்புலத்தில், தனது அறிவுரைக்கு வலுசேர்க்கும் வண்ணம், முதல் ஏற்பாட்டு நிகழ்வு ஒன்றை எடுத்தாளுகின்றார் பவுல். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் கடவுள் ஆற்றிய அரும் பெரும் செயல்களை அறிந்திருந்தாலும், மேகத்தின்கீழ் வழிநடத்தப்பட்டு, கடலைக் கால் நனையாமல் கடந்து, ஒரே ஆன்மீக உணவை உண்டு, ஒரே பாறையின் தண்ணீரைக் குடித்தாலும் அவர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுக்கவும், சிலைவழிபாட்டில் ஈடுபடவும் செய்தனர். இதனால், அவர்கள் கடவுளின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளானார்கள். இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டும் பவுலடியார், 'இவை யாவும் நமக்கு முன்னடையாளமாய்த் திகழ்ந்தன' என்கிறார். மேலும், கொரிந்து நகர மக்களும் 'ஒரே திருமுழுக்கு பெற்றாலும்,' 'ஒரே ஆன்மீக உணவை' (நற்கருணை) உண்டாலும், சிலைவழிபாட்டிலிருந்து அவர்கள் விடுவிக்கப்படுவதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. இஸ்ரயேல் மக்களைப் போல கொரிந்து நகர மக்களும் பவுலின் அறிவுரைகளுக்கு எதிராக முணுமுணுக்கவே செய்தனர்.

ஆக, நம்பிக்கை கொண்ட கொரிந்து நகர மக்கள், சிலைவழிபாடு என்னும் தங்களின் பழைய பாலைநிலத்திலிருந்து, 'தண்ணீர் தரும் ஒரே பாறையாகிய கிறிஸ்துவை' நோக்கித் திரும்ப அவர்களை அழைக்கின்றார் பவுலடியார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் (காண். லூக் 13:1-9) முதல் பகுதி இரண்டு கொடூரமான நிகழ்வுகளோடு தொடங்குகிறது: ஒன்று, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான். இரண்டு, சீலோவாமிலே கோபுரம் விழுந்து அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பதினெட்டுப் பேர் இறக்கின்றனர். இப்படி இறந்தவர்கள் எல்லாருமே எதிர்பாராத விதத்தில், இறப்புக்கான எந்தவித முன்தயாரிப்புமின்றி இறக்கின்றனர். நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பகுதி, கனி தராத அத்திமரம் ஒன்று தன் தலைவரால் தான் எதிர்கொள்ளவிருக்கின்ற அழிவைப் பதிவு செய்கிறது. இந்நிகழ்வில் இயேசுவின் உருவகமாக வரும் தோட்டக்காரர், தலைவரிடம் அத்திமரத்திற்காக பரிந்து பேசி, கடைசி வாய்ப்பு ஒன்றைக் கெஞ்சிக் கேட்கின்றார்.

மேற்காணும் இரண்டு நிகழ்வுகள் வழியாகவும், காய்க்காத அத்திமரம் உருவகம் வழியாகவும் இயேசு தன் சமகாலத்தவரைத் தங்களின் 'பாலைநிலத்திலிருந்து உடனடியாக திரும்ப' அழைப்பு விடுக்கின்றார். எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில் இறந்தவர்களைப் பாவிகள் என்று அடையாளப்படுத்தும் போக்கை விடுத்து, தாங்கள் அந்நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றும், இறப்பு எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் வரலாம் என்பதால் உடனடியாக மனம் மாறவும், அந்த மாற்றத்திற்கு உறுதுணையாக இயேசுவைப் பற்றிக்கொள்ளவும் வேண்டும்.

ஆக, கனிதராத வாழ்வு என்ற பாலைநிலத்திலிருந்து கனிதருதல் என்ற நிலைக்குத் திரும்ப தம் சமகாலத்தவரை அழைக்கிறார் இயேசு.

இன்று நம் ஒவ்வொருவரின் தனிநபர் வாழ்வுநிலையை உடல்சார், அறிவுசார், உறவுசார், ஆன்மீகம்சார் என்று நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். இவற்றில் ஒவ்வொரு நிலையிலும் நாம் பாலைநில அனுபவம் பெறுகின்றோம். பசி என்பது உடல்சார் பாலை, அறியாமை என்பது அறிவுசார் பாலை, தனிமை என்பது உறவுசார் பாலை, வெறுமை, உறுதியற்ற தன்மை, தவறான தெரிவுகள் போன்றவை ஆன்மீகம்சார் பாலை. முதல் மூன்றுநிலைப் பாலை அனுபவங்களை நாம் மிக எளிதாக வெற்றிகொள்ள முடியும். ஆனால், நான்காம் பாலை - ஆன்மீகம்சார் பாலைநிலைத்தை - வெற்றிகொள்வது அவ்வளவு எளிதல்ல. மோசேக்கு கடவுளின் பெயர் தேவைப்பட்டது. கொரிந்து நகர மக்களுக்கு பவுலின் நினைவூட்டல் தேவைப்பட்டது. இயேசுவின் சமகாலத்தவருக்கு எச்சரிக்கையும் வேகமும் தேவைப்பட்டது.
இன்று நாம் உணரும் ஆன்மீகம்சார் பாலைநில அனுபவம் என்ன? அதிலிருந்து நாம் எப்படி வெளியேறுவது? அல்லது பசுமை நோக்கித் திரும்புவது?

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு மூன்று வழிகளைக் கற்பிக்கிறது:

1. இறைவனை அறிதல் வேண்டும் :
மோசே இறைவனால் அழைக்கப்படுவதற்கும் அனுப்பப்படுவதற்கும் முன் இறைவனை அவர் அறிந்துகொள்கின்றார். இறைவனின் அழைப்பும் அனுப்பப்படுதலும் மோசேக்கு அவர் எதிர்பாராத இடத்தில், அவர் எதிர்பாராத நேரத்தில், அவர் தன்னுடைய வேலையில் மும்முரமாய் இருந்தபோது அருளப்படுகின்றது. இறைவனின் அழைப்பை மோசே இரண்டு நிலைகளில் கண்டுகொள்கின்றார்: ஒன்று, தன் ஆடுகளின் பக்கம் இருந்த தன் முகத்தை எரியும் முட்புதர் பக்கம் திருப்புகின்றார். இரண்டு, இறைவனின் பெயரை அறிந்துகொள்கின்றார். ஆடுகளிலிருந்து கண்களைப் முட்புதர் பக்கம் திரும்புவது எளிதன்று. ஆடுகளை விட்டுவிடத் தயாராக இருக்க வேண்டும். தன் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேற வேண்டும். மலை என்னும் பாதுகாப்பின்மையை நோக்கிச் செல்ல வேண்டும். தன் மிதியடிகளைக் கழற்ற வேண்டும். சில நேரங்களில் நம் மனம் பாலை அனுபவத்தில் இருக்கும்போது, விரக்தியை அனுபவிக்கும்போது, நாம் நம் ஆடுகளை விட்டுவிடத் தயாராக இருப்பதில்லை. நம் பாதுகாப்பின்மையை அல்லது வலுவின்மையை ஏற்றுக்கொள்ளத் தயராhக இருப்பதில்லை. அந்நேரங்களில், 'இது என்ன? வித்தியாசமாக இருக்கிறதே! எனக்குள் வெறுமையும் இருக்கிறது. அதே வேளையில் நான் உயிரோடும் இருக்கின்றேனே!' என்று நம்மைப் பற்றி நாமே ஆச்சர்யப்பட்டுக் கொண்டால் அங்கே இறைவனை அறிதல் சாத்தியமாகும். அங்கே, ஒன்றும் 'இல்லாமையில்,' 'இருக்கின்ற இறைவன்' எல்லாவற்றையும் இருக்கச் செய்வார். இழந்ததையும் திரும்ப அளிப்பார். நாம் விட்டுவிட்டு ஓடிவந்த எகிப்திற்கே நம்மை புதிய பணிக்காக அனுப்புவார்.

2. அதீத நம்பிக்கை அகற்ற வேண்டும் :
பிரபலமான டைட்டானிக் கப்பல் தன் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கையால் தனக்கு முன் சென்ற படகின் எச்சரிக்கையை எடுத்துக்கொள்ளவில்லை. 'இறைவன் தங்களோடு இருக்கிறார்' என்ற அதீத நம்பிக்கையே, இஸ்ரயேல் மக்களை, 'நாங்கள் என்ன செய்தாலும் ஆண்டவர் அன்பு செலுத்துவார்' என்று நினைக்கத் தூண்டியது. ஆகையால்தான், அவர்கள் சிலைவழிபாட்டில் ஈடுபடத் தொடங்கினர். 'சிலைவழிபாட்டு உணவை விட வேண்டும்' என்ற எச்சரிக்கையையும் கொரிந்து நகர மக்கள் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. ஆக, ஆன்மீகப் பாலை அனுபவம் சில நேரங்களில் நம் அதீத நம்பிக்கையாலும், எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்துவதாலும் வரலாம்.

3. செயல் மாற்றம் வாழ்வு மாற்றம் :
சில நேரங்களில் நாம் பயம் அல்லது விரக்தி உணர்வுகளால் அல்லது எதிர்மறை உணர்வுகளால் ஆட்கொள்ளப்படும்போது என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறோம். அந்த மாதிரியான நேரங்களில் இரண்டு விடயங்கள் செய்ய வேண்டும் என்று சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்: (அ) இதுவரை செய்யாத ஒன்றைச் செய்வது - அத்திமரத்தை தலைவர் வெட்டப்போகிறார் என்று முடிவெடுத்தவுடன் தோட்டக்காரர் உடனடியாக மரத்திற்கு உரம் போட ஆரம்பிக்கிறார். இதுவரை செய்யாத ஒன்றை இவர் செய்ய ஆரம்பிக்கிறார். (ஆ) செயலை மாற்றுவதன் வழியாக உணர்வை மாற்றுவது - இது முந்தைய விடயத்தின் நீட்சியே. அதாவது, மனதை பிஸியாக வைத்துக்கொள்ளுமாறு ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இருப்பது. இம்மாதிரியான நேரங்களில் நம் மனம் ஒன்றும் செய்யாமல் இருந்துகொண்டு, 'எல்லாவற்றையும் தள்ளிப்போடச்' சொல்கிறது.

இவ்வாறாக,
தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு நம் ஆன்மீகப் பாலைவனத்திலிருந்து நம்மை வெளியே வர அழைக்கிறது. 'வாழ்வில் எல்லாம் முடிந்துவிட்டது. இனி இந்த அந்நிய மண்ணும், ஆடுகளும்தான் என் வாழ்வு' என்று எண்ணிய மோசேயைத் தடுத்தாட்கொள்ளும் கடவுள் எகிப்தின் வளமையை நோக்கிக் திரும்ப அனுப்புகிறார். நம்பிக்கையின்மை என்ற பாலைநிலத்திலிருந்து நம்பிக்கையை நோக்கிச் சென்ற கொரிந்து நகர மக்கள் ஒருவர் மற்றவருக்கு இடறலாக இல்லாத வண்ணம் பரந்த மனம் கொள்கின்றனர். மாற்றம், அதுவும் உடனே மாற்றம் என்று தன் சமகாலத்தவரை அவர்கள் இருந்த 'கண்டுகொள்ளாமை, தள்ளிப்போடுதல்' என்னும் பாலைநிலத்திலிருந்து வெளியே அழைக்கிறார் இயேசு. ஆறுதலும், வெறுமையும் மாறி மாறி வரும் வாழ்வியல் அலைகள். வெறுமையில் கொஞ்சம் அண்ணாந்து பார்த்தால், அங்கே 'இருக்கின்ற அவர் இருக்கின்றவராக இருப்பார்' - இன்றும் என்றும்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================
தவக்காலம் மூன்றாம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள்.

இன்றைய முதல் வாசகத்தில், இறைவன், "எகிப்தில் தன் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்" எனக் கூறுவதையும், அதிலிருந்து அவர்களை விடுவிக்க மோசேக்கு அழைப்பு விடுப்பதையும் காண்கின்றோம். ஆம், இறைவன் நம் துன்பங்களை, துயரங்களை, கண்ணீரைக் காண்பவராக இருக்கின்றார். நம்மை அதிலிருந்து விடுவிப்பவராகவும் அவரே இருக்கின்றார். துன்பங்களின்றி வாழ்க்கையில்லை. "உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள்" என இறைமகன் கூறுகின்றார். துன்பங்களை, பாடுகளை ஏற்கவே அவர் மண்ணுலகில் மனுவுரு எடுத்து வாழ்ந்து காட்டினார். அதனால், நாம் துன்பங்களில் சோர்ந்து விடாமல், துயரங்களில் தளர்ந்து விடாமல் இறைவன் நம்மை அதிலிருந்து விடுவிக்க வல்லவர் என்பதை உணர்ந்தவர்களாக துணிவுடன் அவற்றை ஏற்று வாழ முற்படுவோம்.
இன்றைய நற்செய்தி, நமக்கு உணர்த்தும் சிந்தனை, " நாம் மட்டும் நீதிமான், மற்றவர்கள் பாவிகள்" என நினைக்கும் பரிசேயத்தனத்தை விட்டொழித்து, நம் கண்ணில் உள்ள மரக்கட்டையைப் பார்த்து நம் வாழ்வை மாற்றிக் கொள்ள முற்பட வேண்டும். நாம் மனம் மாறாவிட்டால் அழிவு உண்டு என அனைவரையும் எச்சரிக்கின்றார். மேலும், "இன்னும் ஓராண்டு பார்ப்போம்" என நம் பொருட்டு இரக்கமுள்ளவராக, தந்தையிடம் பரிந்து பேசுபவராக, நம் மனமாற்றத்திற்காக பொறுமையுடன் காத்திருக்கின்றார். " நம் ஆண்டவரின் பொறுமையே நமக்கு மீட்பு எனக் கருதுங்கள்" என்ற புனித பேதுரு தம் திருமுகத்தில் கூறுகின்ற இறைவார்த்தையை உள்வாங்கியவர்களாக, உணர்நதவர்களாக. இறைவன் நமக்குத் கொடுத்திருக்கின்ற இக்காலத்தைப் பயன்படுத்தி, உறுதியான நல்ல மனமாற்றத்தைப் பெற அருள் வேண்டி, ஆற்றல் வேண்டி, இக்கல்வாரிப் பலியில் நம்மையே முழுமையாக ஒப்புக் கொடுப்போம்.

முதல் வாசக முன்னுரை: (விடுதலைப் பயணம் 3: 1-8இ13-15)

ஆண்டவருக்கு உரியவர்களே இன்றைய முதல் வாசகம் ஓரேபு மலையில் ஆடு மேய்த்து கொண்டிருந்த மோசேயை ஆண்டவர் அழைத்ததை பற்றி எடுத்துரைக்கிறது. எகிப்திய அடிமைத்தனத்தில் சிக்கித் தவித்த இஸ்ரயேல் மக்களை விடுவித்து பாலும் தேனும் பொழியும் பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்ல ஆண்டவர் மோசேயைத் தேர்ந்தெடுக்கிறார். எரியும் முட்புதரில் மோசேக்கு காட்சி அளித்த கடவுள்இ அவரிடம் தூய்மையை எதிர்பார்க்கிறார். "உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமானது" என்று ஆண்டவர் மோசேயிடம் அறிவுறுத்துவதைக் காண்கிறோம். என்றென்றும் 'இருக்கின்றவராக இருக்கின்ற' கடவுள் முன்னிலையில் தூயவர்களாக வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: (1 கொரிந்தியர் 10: 1-6இ 10-12)

ஆண்டவருக்கு உரியவர்களே இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரயேலரைப் பற்றி எடுத்துரைக்கிறார். பாலைநிலத்தில் அவர் களுக்கு உணவும் தண்ணீரும் கிடைத்த பொழுதும் பெரும்பான்மையோர் ஆண்டவருக்கு எதிராக முணுமுணுத்தனர். கடவுளுக்கு எதிராக செயல்பட்டதால் அவர்கள் அழிவுக்கு ஆளானார்கள். நாம் மனம் மாறும் பொருட்டு இவை நமக்கு எச்சரிக்கையாக அமைந்திருக்கின்றன என்பதை திருத்தூதர் சுட்டிக்காட்டுகிறார். பாவத்தின் தீய விளைவினை உணர்ந்தவர்களாய் மனம் மாறி புதுவாழ்வு வாழும் வரம் வேண்டி இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.


மன்றாட்டுக்கள்

" மனம் மாறி வாழ்வு பெறுங்கள் " என்றுரைத்த எம் இறைவா,
இத்தவகக்hலத்தில், எங்கள் எண்ணங்கள், செயல்கள் அனைத்திலும் வெளிவேடத்தனமில்லாது, உம் ஆசீருக்கும், அருளுக்கும் எங்கள் பாவங்கள்; தடைக்கற்களாக இல்லாதவண்ணம், உள்ளத்தின் ஆழத்தில் எங்கள் பாவங்களை உணாந்தவர்களாக, உம் அன்பிற்கும், இரக்கத்தையும் உணர்ந்தவர்களாக, எங்கள் வாழ்வை புதுப்பித்து, தூயதோர் உள்ளத்தை எங்களுக்குள் பெற்றவர்களாக, வாழ்ந்திட வரம் வேண்டி, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

" உனது ஆற்றலாலும் அல்ல, வலிமையாலும் அல்ல, எனது ஆவியாலே ஆகும்" என்றுரைத்த எம் இறைவா,
தங்கள் உடல் நோயினாலும், இன்னும் பல்வேறு சூழ்நிலைகளினாலும் இத்திருப்பலிக்கு வர இயலாத மாந்தர்களை உம்மிடம் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் நோய்கள், வேதனைகள், மனப்பாரங்கள் அனைத்தினின்றும் அவர்களை விடுவித்து, உம் நற்கருணை பிரசன்னத்தை அவர்களுக்குக் கொடுத்து, அவர்களை வாழ்வித்து, அவர்கள் விரைவில் உம் சந்நிதானம் வந்து, திருப்பலியை காணும் பேற்றினை பெற்று, உமக்கு நன்றியறிந்த மக்களாக வாழ்ந்திட வரம் வேண்டி, இறைவா! உமமை மன்றாடுகின்றோம்.

" தேவைக்கு மேல் உன்னிடம் உள்ளதையெல்லாம் தருமம் செய்துவிடு" என்றுரைத்த எம் இறைவா,
தங்கள் வாழ்வின் அடிப்படை வாழ்வாதாரங்களைக் கூட கிடைக்கப் பெறாத ஏழை, எளியவர்களை உம்மிடம் ஒப்புக் கொடுக்கின்றோம். தங்கள் வளமான வாழ்வுக்காக, தங்களின் வருங்கால தலைமுறையினருக்காக அவற்றை சுயநலனுடன் சொந்தமாக்கிக் கொள்ளாது, ஏழைகளின் வறுமை நிலையை உணரும் கனிவுள்ள இதயமுள்ளவர்களாக, தங்களிடமுள்ளதை பகிர்ந்து, தருமங்கள் செய்பவர்களாக வாழ்ந்திட வரம் வேண்டி, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

" நான் ஆள்பார்த்து செயல்படுவதில்லை" என்ற இறைவா,
எங்கள் வாழ்வில் ஏழை, பணக்காரர், சாதி, மதம், இனம் இவற்றை மனதில் வைத்து யாரையும் வெறுத்து, ஒதுக்காது அனைவரிலும் உம் சாயல், உயிர்மூச்சு இருக்கின்றது என்பதை உணர்ந்தவர்களாக, ஆள்பாராது, உயர்வு மனப்பான்மை கொள்ளாது, அனைவரையும் ஏற்று, நேசித்து, அன்பு செய்யும் பரந்த உள்ளத்தைப் பெற்றிட வரம் வேண்டி, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

"உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது மட்டும் அன்பு கொள்வதில் மட்டும் கருத்தாயிருங்கள்" என்ற இறைவா,
எங்கள் வாழ்வில் துன்பங்கள், சோதனைகள், பிரச்சனைகள் வரும்போது, உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்தவர்களாக, மறுதலிப்பவர்களாக, பிற சபையை, வேற்றுத் தெய்வங்ளை நாடிச் சென்று, சகுனம், குறிபார்த்தல் போன்ற தவறான வழிகளில் எங்கள் உண்மையான கிறிஸ்தவ வாழ்வை தொலைத்து விடாது, உயிருள்ள உம் நற்கருணை பிரசன்னத்தின் மகிமையை உணர்ந்தவர்களாக, உம்மை மட்டுமே முழு இதயத்தோடு, முழு மனத்தோடு, முழு ஆற்றலோடு அன்பு செய்யக்கூடிய உள்ளத்தைப் பெற்றிட வரம் வேண்டி, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.


=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================
தவக்காலம் 03ஆம் ஞாயிறு

மனமாற்றம் அடைந்து, பழைய பாவ வாழ்விலிருந்து விலகி, புதிய எண்ணங்களை மனதில் விதைக்கும் போது புதுவாழ்வு ஒன்று மலர்கின்றது என்பதை உணர்ந்து கொள்ள இத்தவக்காலம் மூன்றாம் ஞாயிறு திருப்பலி நம்மை அழைக்கின்றது. "மாற்றம் ஒன்றே மாறாதது; மாற்றத்திற்கு உட்படாதது அழிந்துவிடும்" என்ற எச்சரிக்கையை நமக்குத் தருகின்றது.

உடைகளில் ஏற்படும் மாற்றம்
நாகரீகத்தின் அடையாளமாக அமையும்.
உள்ளத்தில் ஏற்படும் மாற்றம்
நம் ஞானத்தின் அடையாளமாக அமையும்.
நாகரீகத்தைவிட ஞானம் மேலானது என்பதை
உணர்ந்து கொள்வதே உண்மையான மனமாற்றம்.

இன்றைய முதல் வாசகத்தில், "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" என்று மோசேக்கு தம்மை வெளிப்படுத்துகின்றார் இறைவன். தீய்ந்து போகாத முட்புதரைப் பார்க்க தான் நின்ற இடத்தை மாற்றினார். அம்மாற்றம் ஆடுகளின் ஆயனாய் இருந்தவரை மக்களை மீட்க இறைவன் அழைத்த கருவியாய் மாற்றியது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், பாவ வழியை விட்டு விலகி மனமாற்றம் பெறும் போது புதுவாழ்வு இறைவனால் அருளப்படும் என்பதை இயேசு உவமை வாயிலாக உணர்த்துகின்றார். பாவத்தினிமித்தம் அனைவரும் அழிக்கப்பட வேண்டுமென இறைவன் விரும்புவதில்லை. பாவத்தின் பாதையிலிருந்து விலகி நற்பாதையில் பாதம் பாதிக்கவே இறைவன் எதிர்பார்க்கின்றார்.

தவறிழைக்கா மனிதன் இல்லை;
திருத்த இயலா தவறுகள் இல்லை.

எனவே நமது பாவங்கள், தவறுகளைத் திருத்திக்கொள்ள தரப்பட்டுள்ள வாய்ப்புதான் இத்தவக்காலம். வெட்டப்படவேண்டிய மரத்திற்கு கிடைக்கப்பட்ட மறுவாய்ப்பு, உரத்தாலும் எருவாலும் நிலை நிறுத்தப்படுவது போல, நமது மனமாற்றம் அடைந்த வாழ்வும் ஜெபத்தாலும் தவத்தாலும் கனி கொடுக்க வேண்டும். இவற்றை மனதில் தாங்கி இப்பலியில் வேண்டுவோம்.

மன்றாட்டுகள்

1. மனம் மாறுங்கள் என அழைப்பு விடுப்பவரே எம் இறைவா!
எம் திருஅவையை வழிநடத்தும் தலைவர்கள், பணியாளர்கள் உமது பிரசன்னத்தை மக்கள் அறிந்து கொள்ளவும், மனமாற்றத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தவும் உதவிக்கரம் நீட்டி வழிநடத்திட வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. கனிதரா மரங்கள் வெட்டப்படும் என்றவரே எம் இறைவா!
ஒரே நாட்டை ஆளும் எம் தலைவர்கள் ஒரே மக்கள் ஆட்சியின் கீழ் இருந்தாலும் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு, நாட்டின் வளர்ச்சியைத் தடைப்படுத்தி வறுமையை உருவாக்கிய பாதையிலிருந்து விலகி, கனி தரும் மரங்களாக மாற்ற எருவாக இத்தேர்தல் அமையவும், சேவை உள்ள பெற்ற தலைவர்கள் ஆட்சியில் அமரவும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றவரே எம் இறைவா!
உம்மை அறிந்து கொள்ளவும், உம் வழியில் நடக்கவும், வாழ்க்கையில் ஆக்கத்தையும் அழிவையும் தரும் தொலைத்தொடர்பு சாதனங்கள், ஊடகங்களை ஆக்கப்பூர்வமான தேவைக்கு பயன்படுத்தி, ஆற்றல் மேலாண்மையை உமதருளால் கற்றுக் கொள்ளும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. குடும்ப உறவுகளை அன்பால் இணைப்பவரே எம் இறைவா!
குடும்பங்களில் அன்பு, நம்பிக்கை, பொறுமை மேலோங்கவும், உறவுகளுக்கு இடையே பிரச்சனைகள் எழும்போது பொறுமையோடு கனி தரா மரத்திற்கு மீண்டும் எரு போட்டு வாய்ப்பு தருவது போல, நிதானம் என்நும் குணம் பெற்று குடும்ப உறவுகள் மேம்பட வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!