Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         30 மே 2019  
                                     பாஸ்கா காலம் 6ம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
கொரிந்து நகரில் பவுல் வேலை செய்துவந்தார். ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக்கூடத்தில் பேசினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 1-8

அந்நாள்களில் பவுல் ஏதென்சை விட்டு கொரிந்துக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே போந்துப் பகுதியில் பிறந்த அக்கிலா என்னும் பெயருடைய ஒரு யூதரையும் அவர் மனைவி பிரிஸ்கில்லாவையும் கண்டு அவர்களிடம் சென்றார். அவர்கள், "யூதர் அனைவரும் உரோமை நகரத்தை விட்டு வெளியேற வேண்டும்"என்ற கிலவுதியு பேரரசருடைய கட்டளைக்கு இணங்கி இத்தாலிய நாட்டைவிட்டு அண்மையில் அங்கு வந்திருந்தார்கள். கூடாரம் செய்வது அவர்களது தொழில். தாமும் அதே தொழிலைச் செய்பவராதலால் பவுல் அவர்களிடம் தங்கி வேலை செய்துவந்தார்.

ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக் கூடத்தில் யூதரிடமும் கிரேக்கரிடமும் பேசி அவர்கள் நம்பிக்கை கொள்ளச் செய்தார். சீலாவும் திமொத்தேயுவும் மாசிதோனியாவிலிருந்து வந்தபோது பவுல் இறைவாக்கை அறிவிப்பதில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தார்; 'இயேசுவே மெசியா' என்று யூதரிடம் சான்று பகர்ந்துவந்தார்.

அவர்கள் அதனை எதிர்த்துப் பழித்துரைத்தபோது அவர் தமது மேலுடையிலிருந்த தூசியை உதறி, "உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பு, நான் அல்ல. இனிமேல் நான் பிற இனத்தாரிடம் செல்கிறேன்" என்று கூறினார்; அவ்விடத்தை விட்டுவிட்டுக் கடவுளை வழிபடும் தீத்துயுஸ்து என்னும் பெயருடைய ஒருவரின் வீட்டுக்குப் போனார். அவரது வீடு தொழுகைக்கூடத்தை அடுத்து இருந்தது. தொழுகைக்கூடத் தலைவரான கிறிஸ்பு என்பவர் தம் வீட்டார் அனைவரோடும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டார். கொரிந்தியருள் பலரும் பவுல் கூறியவற்றைக் கேட்டு நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெற்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 98: 1. 2-3ab, 3cd-4 (பல்லவி: 2b)
=================================================================================
பல்லவி: பிற இனத்தார் முன், ஆண்டவர் தம் நீதியை வெளிப்படுத்தினார். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ab இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3cd உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 18, 16: 22b

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்; உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 16-20

அக்காலத்தில் இயேசு தம் சீடரிடம்: "இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்"என்றார்.

அப்போது அவருடைய சீடருள் சிலர், " இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்' என்றும் `நான் தந்தையிடம் செல்கிறேன்' என்றும் சொல்லுவதன் பொருள் என்ன?"என்று தங்களிடையே பேசிக்கொண்டனர்.

"இந்தச் 'சிறிது காலம்' என்பது என்ன? அவர் பேசுவது நமக்குப் புரியவில்லையே"என்றும் பேசிக்கொண்டனர்.

அவர்கள் தம்மிடம் கேள்வி கேட்க விரும்புவதை அறிந்த இயேசு அவர்களிடம் கூறியது: " இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்' என்று நான் சொன்னதைப் பற்றி உங்களிடையே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்."



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 யோவான் 16: 16-20

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்!

பிரபல உளவியலாளரான கார்ல் ஜங் (Carl Jung) என்பவர் கஷ்டங்களோடும் வேதனைகளோடும் தன்னிடம் வரக்கூடிய மனிதர்களிடம், "நீங்கள் படுகின்ற கஷ்டங்களிலிருந்து உங்களுக்கு நல்லது கிடைக்கும்"(Something good will come out of it) என்று சொல்லி வந்தார்.

கார்ல் ஜங்கைக் குறித்து கேள்விப்பட்ட ஒரு தாய் பள்ளி செல்லும் தன்னுடைய மகனை அவரிடம் அழைத்துக்கொண்டு வந்து, "என் மகன் இவன் படிக்கவே மாட்டேன் என்கிறேன், இவனுக்கு நல்ல புத்திமதி சொல்லுங்கள்"என்றார். அந்தத் தாயின் மகனிடம் சிறுது நேரம் பேசிப்பார்த்த கார்ல் ஜங் அவனை தன்னுடைய வீட்டுக்கு அருகாமையில் இருந்த பட்டுப்பூச்சி வளர்க்கும் இடத்திற்குக் கூட்டிச் சென்று, "பட்டுப்பூச்சிகள் இவ்வளவு அழகாக இருக்கின்றனவே, இவையெல்லாம் இவ்வளவு அழகான இருப்பதற்குக் முன்பு, அவை எவ்வளவு கஷ்டங்களுக்கு உள்ளாகின்றன என்பதை நீயே பார்"என்று அவர் அவனிடத்தில் விளக்கிச் சொன்னார். அவன் கார்ல் ஜங் சொன்னதற்கிணங்க பட்டுப்பூச்சிகள் படிப்படியாக எப்படி வளருகின்ற என்பதை அவன் கூர்ந்து கவனித்தான்.

பின்னர் அவர் அவனிடத்தில், "ஒரு கூட்டுப் புழு பட்டுப்பூச்சியாக மாறுவதற்கு நிறையக் கஷ்டங்களை அனுபவிப்பது போல், நீயும் உன்னுடைய வாழ்க்கையில் இப்போது கஷ்டப்பட்டுப் படித்தால், பின்னாளில் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருக்கலாம், சந்தோசமாகவும் இருக்கலாம்" என்று அறிவுரை சொல்லி அவனை, அவனுடைய தாயிடத்தில் கொண்டுவந்து விட்டார். அதன்பிறகு அவன் கஷ்டப்பட்டு நன்றாகப் படித்து, வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைந்தான்.

'இப்போது நாம் படுகின்ற துன்பங்கள், எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகின்ற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை' (உரோ 8:18) என்ற பவுலடியாரின் வார்த்தைகளைத் தான் இந்த நிகழ்வு நமக்குத் தெளிவாக விளக்குகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம், "நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்"என்கிறார். இயேசு இந்த உலகத்தை விட்டுப் பிரிய இருக்கின்றார். அப்படிப் பிரிவதற்கு முன்பாக, அவர் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லும் அறிவுரைதான் இது. இயேசுவின் இவ்வார்த்தைகளை சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பது இந்த கால கட்டத்தில் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

யூதர்கள் காலத்தை இரண்டாகப் பிரித்தார்கள். ஒன்று நிகழ்காலம், இன்னொன்று வரக்கூடிய காலம் அதாவது, பொற்காலம். இந்த இரண்டு காலத்திற்கும் இடையே ஆண்டவர் நாள் இருப்பதாக யூதர்கள் நினைத்தார்கள். ஆண்டவரின் நாளைக் குறித்து பழைய ஏற்பாடும் சரி, புதிய ஏற்பாடும் சரி நிறையப் பேசுகின்றன (எசா 13:9, 2 பேது 3:10). "ஆண்டவருடைய நாள் திருடனைப் போல் வரும். வானங்கள் பெருமுழக்கத்தோடு மறைந்தொழியும்; பஞ்சபூதங்களும் வெந்துருகிப் போகும். மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும். இவையாவும் அழிந்து போகுமாதலால் நீங்கள் தூய, இறைபற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்கவேண்டும் என்று பேதுரு தன்னுடைய இரண்டாம் திருமுகத்தில் கூறுகின்றார். ஆண்டவரின் நாளை நாம் புடம்போடும் நாளாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். இந்த நாளில் தீமைகளைகள் அழைக்கப்பட்டு, நண்மைகள் நிலைநாட்டப்படும் என்பது உறுதி.

இவற்றையெல்லாம் ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாகவே அறிந்து வைத்திருந்தார், அதனைத் தன்னுடைய போதனையிலும் பயன்படுத்துகின்றார். அதனால்தான் (ஆண்டவரின் நாளில்) நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள். ஆனால் (பொற்காலத்தில்) உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும் என்கிறார் இயேசு.

கிறிஸ்தவர்களாகிய நாம் ஆண்டவர் தரக்கூடிய விண்ணக மகிமையை, மகிழ்ச்சியை பெற்றுக்கொள்ளவேண்டுமென்றால் துன்பங்களையும் பாடுகளையும் சிலுவைகளையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். துன்பத்தை நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாமல் போனால், இன்பத்தை நாம் பெறுவதற்கு அருகதையற்றவர்களாகப் போய்விடுகின்றோம் என்பதுதான் உண்மையாக இருக்கின்றது.

நிறைய நேரங்களில் நாம் கஷ்டமில்லா வாழ்க்கை வாழ நினைக்கின்றோம். துளையிடப்படாத மூங்கில் ஒருபோதும் புல்லாங்குழல் ஆகிவிடாது, உளிபடாத கல் ஒருபோதும் சிலையாகிவிடாது. ஆகவே, நம்முடைய வாழ்க்கையில் நாம் துன்பங்களையும், கஷ்டங்களையும் துணிவோடு ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளவேண்டும், அப்போதுதான் நாம் இறைவன் அளிக்கும் நிறைவான மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆகவே, இயேசுவின் சீடர்களாகிய நாம் நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கக்கூடிய துன்பங்களையும் கஷ்டங்களையும், சிலுவைகளையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வோம், அதன்வழியாக இறைவன் அளிக்கும் நிறை மகிழ்ச்சியைக் கொடையாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
யோவான் 16: 16-20

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்

பிரபல பேராசிரியரான ரிச்சர்ட் நெய்பூர் (Richard Niebur) தன்னுடைய மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அவர் வகுப்பை நிறைவுசெய்வதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பாக தன்னுடைய மாணவர்களிடம், "வாழ்க்கையில் நமக்கு வரும் துன்பங்களை எல்லாம், கடவுள் இன்பமாக மாற்றுவார்"என்றார்.

அந்த வகுப்பில் இருந்த மாணவன் ஒருவன் சில வாரங்களுக்கு முன்புதான் எதிர்பாராத விதமாக நடந்த விபத்து ஒன்றில் தன்னுடைய பெற்றோர், உடன்பிறப்புகள், உறவினர்கள் எல்லாரையும் இழந்திருந்தான். இப்படிப்பட்ட நேரத்தில் ஆசிரியர் 'கடவுள் உங்கள் துன்பத்தை இன்பமாக மாற்றுவார்' என்று சொன்னதைக் கேட்ட வகுப்பில் இருந்த ஒருசில மாணவர்கள், உறவுகள் அனைத்தையும் இழந்து வேதனையில் தவிக்கும் அந்த மாணவன் இதற்கு எதிர்வினையாற்றுவான்; அவரைத் தாறுமாறாகத் திட்டுவான் என்று நினைத்தார்கள்.

ஆனால் அந்த மாணவன் எழுந்துசென்று, ஆசிரியரிடத்தில் "கடவுள் நமது வாழ்வில் ஏற்படும் துன்பங்கள், இழப்புகள் எல்லாவற்றையும் இன்பமாக மாற்றுவார்' என்ற நம்பிக்கையில்தான் நான் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அத்தகைய நம்பிக்கையை எனக்கு மீண்டுமாக நினைவூட்டிய உங்களுக்கு என்னுடைய நன்றிகள் என்று சொல்லிவிட்டு, அந்த மாணவன் தன்னுடைய இருக்கையில் போய் உட்கார்ந்தான்.

"விடியாமல்தான் ஒரு இரவேது?, வழியாமல்தான் வெள்ளம் கிடையாது" என்பான் நா.முத்துக்குமார் என்ற கவிஞர். ஆம், வாழ்வில் நமக்கு ஏற்படும் தோல்விகள், துன்பங்கள் எதுவும் நிரந்தரமல்ல. கடவுள் அந்தத் துன்பங்களையெல்லாம் இன்பமாக மாற்றுவார் என்பதே மேலே சொல்லப்பட்ட நிகழ்வு உணர்த்தும் உண்மையாக இருக்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம், "நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள், அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்"என்கிறார். இயேசுவின் இத்தகைய வார்த்தைகள் துன்பங்களால், கஷ்டங்களால் கலங்கித் தவிக்கும் நமக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கின்றது.

இயேசு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஆகியோரின் கையில் ஒப்புவிக்கப்பட்டு, கொலை செய்யப்படுவார். இப்படிப்பட்ட ஒரு துயர சம்பவம் இயேசுவை மட்டுமே நம்பி வாழ்ந்த சீடர்களுக்கு, அவரைப் பின்பற்றியவர்களுக்கு மிகப்பெரிய துயரமாக இருக்கும். ஆனாலும் இயேசுவின் வாழ்வு சிலுவை மரணத்தோடு முடிந்துவிடுகின்ற ஒன்று அல்ல, அவர் மரித்தாலும் வெற்றி வீரராய் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார். இதனைக் கருத்தில் கொண்டுதான் இயேசு, நீங்கள் நான் இல்லாது துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்"என்கிறார்.

நமது வாழ்விலும் நாம் பல்வேறு பிரச்சனைகளை, துன்பங்களை, தோல்விகளை, அவமானங்களைச் சந்திக்க நேரிடலாம். அத்தகைய நேரங்களில் நாம் மனம் நொந்து அழத் தேவையில்லை. ஏனென்றால் நம்மைக் காத்து வழிநடத்தும் இறைவன் நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார். இதுதான் இயேசு நமக்குத் தரும் படிப்பினையாக இருக்கிறது.

இறையடியாரான யோபு தன்னுடைய வாழ்வில் சந்திக்காத துன்பங்கள் இல்லை. தன்னுடய பிள்ளைகளை இழந்தார். சொத்து, சுகங்கள் எல்லாவற்றையும் இழந்தார். தன்னுடைய மனைவியால் கடவுளைச் சபிக்க நிர்பந்திக்கப்பட்டார். ஆனால் அவர் கடவுள்மீது அசைக்கமுடியாத நம்பிக்கையோடு வாழ்ந்து வந்தார்; ஆண்டவர் கொடுத்தார், ஆண்டவர் எடுத்தார், ஆண்டவரது திருப்பெயர் போற்றப்பெறுக என்ற தெளிவாக மனநிலையோடு இருந்தார் (யோபு 1:21) அதனால்தான் இறுதியில் அவர் கடவுளால் அதிகமாக ஆசிர்வதிக்கப்பட்டார். ஆதலால், கடவுள் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் நாம் வாழவேண்டும்.

புலம்பல் ஆகமம் 3:31 ல் வாசிக்கின்றோம் "என் தலைவர் என்றுமே என்னைக் கைவிடமாட்டார்" என்று. எனவே, கடவுளின் உடனிருப்பை, பாதுகாப்பை நாம் உணர்வோம். நமது துன்பங்கள் இறையருளால் இன்பமாக மாறும் என்ற நம்பிக்கையில் வளர்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 யோவான் 16: 16-20

துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றும் இறைவன்


நிகழ்வு

ஜெர்மனியை ஆண்டுவந்த ஹிட்லர் தன்னுடைய நாசிப்படையைக் கொண்டு யூதர்களைக் கடுமையாக சித்ரவதைசெய்து கொன்றுகுவித்துக்கொண்டிருந்த தருணமது. அப்படிப்பட்ட தருணத்தில் கடவுள்மீது ஆழமான நம்பிக்கைகொண்டிருந்த யூத இனத்தைச் சார்ந்த சலோமியின் குடும்பமும் ஹிட்லரின் சித்ரவதைக்கு உள்ளானது.

சலோமி வதைமுகாமில் தான் சித்ரவதை செய்யப்படுவதை நினைத்து வருந்தவோ அல்லது தன்னைத் தூக்கிலிடப்போகும் சிறையதிகாரியைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக்கொள்ளவோ இல்லை. மாறாக அவர் அந்த சிறையதிகாரியைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே இருந்தார். நாட்கள் நகர்ந்துகொண்டே இருந்தன. ஆனால், சலோமி அந்த சிறையதிகாரியைப் பார்த்துப் புன்னகைப்பது மட்டும் நிற்கவில்லை. சலோமியையும் அவருடைய குடும்பத்தாரையும் தூக்கில் போடுவதற்கு முந்தின நாள், சிறையதிகாரி அவரிடம் வந்து, "சாகப் போகிறோம் என்று தெரிந்தும், எப்போதும்போல் என்னைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டும் இறைவன்மீது நம்பிக்கையோடும் இருந்தாயே, அதற்காக நான் உன்னையும் உன்னுடைய குடும்பத்தாரையும் இங்கிருந்து வெளியே அனுப்புகின்றேன். நீங்கள் எங்காவது கண்காணாத திசைக்குத் தப்பியோடி பிழைத்துக்கொள்ளுங்கள்" என்றார்.

இதைக் கேட்டதும் சலோமியும் அவருடைய குடும்பத்தாரும் மிகவும் மகிழ்ச்சியடைத்தார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி வேறோர் இடத்தில் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினார்கள்.

ஹிட்லரின் வதைமுகாமல் மாட்டிக்கொண்டு பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்தபோதும் புன்னைகை மாறாமலும் நம்பிக்கையோடும் இருந்த சலோமையையும் அவருடைய குடும்பத்தையும் எப்படி ஆண்டவர் காப்பாற்றி, அவர்களுடைய வாழ்வில் மகிழ்ச்சி பிறக்கச் செய்தாரோ, அதுபோன்று நாமும் இறைவனிடம் நம்பிக்கையோடு இருந்தோமெனில் நம்முடைய துயரமெல்லாம் மகிழ்சியாக மாறும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.

இயேசு தங்களை விட்டுப் பிரிவதை நினைத்து வருந்திய சீடர்கள்

நற்செய்தி இயேசு தன்னுடைய சீடர்களிடம், "இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்"என்கின்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட சீடர்கள், 'இயேசு தங்களை விட்டுப் பிரிந்துபோய்விடுவாரே' என்று வருத்தம் கொள்ளத் தொடங்குகின்றார்கள். உண்மையில் இயேசு இங்கே சொல்லக்கூடிய 'சிறிது காலம்' என்பது என்ன என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.

இயேசு தன்னுடைய சீடர்களிடம் சொல்லக்கூடிய இந்தச் 'சிறிது காலம்' என்பதை இரண்டுவிதமாகப் புரிந்துகொள்ளலாம். அவர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டது முதல் உயிர்த்தெழுந்தது வரைக்குமான காலத்தைச் சிறிதுகாலம் என ஒருவிதத்தில் ஒருவகையில் புரிந்துகொள்ளலாம். அப்படியில்லையென்றால், அவர் விண்ணேற்றம் அடைந்து மீண்டுமாகத் திரும்பிவரும் இடைவெளியைச் 'சிறிதுகாலம்' எனப் புரிந்துகொள்ளலாம். இக்கருத்தினை உறுதிசெய்வதாக இருக்கின்றது எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறுகின்ற "மிகக் குறுகிய காலமே இருக்கின்றது; வரவிருக்கிறவர் வந்து விடுவார்; காலம் தாழ்த்தமாட்டார்"என்ற வார்த்தைகள் (எபி 10:37).

இந்த இரண்டு கருத்துகளின் அடிப்படையில் சிந்தித்துப் பார்த்தால், சீடர்களை விட்டு/ நம்மை விட்டுச் சிறிது காலம் இயேசு பிரிந்திருந்தாலும், அவருடைய இரண்டாம் வருகை உறுதியாக இருப்பதால், அவர்மீது நம்பிக்கைகொண்டு வாழும் எவரும் எதற்கும் வருத்தமோ கவலையோ கொள்ளத் தேவையில்லை என்பது உறுதியாகின்றது.

துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றும் இறைவன்/ இயேசு

'சிறிதுகாலம் நீங்கள் என்னைக் காணமாட்டீர்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்' என்று சொன்ன இயேசு, "நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்பொழுது உலகம் மகிழும். நீங்கள் துயருவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்' என்கின்றார்.

இயேசு இந்த உலகத்தைவிட்டுப் பிரிந்துசென்ற பிறகு, அவருடைய சீடர்கள் பல்வேறுவிதமான சித்ரவதைகளை அனுபவிப்பார்கள். குறிப்பாக, ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முன்பாக நிறுத்தி வைக்கப்படுவார்கள், ஏன் கொலைகூட செய்யப்படுவார்கள். அதுவெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம்தான். அதற்குப் பின்பு அதாவது இயேசுவின் வருகைக்குப் பிறகு அந்தத் துன்பமெல்லாம் இன்பாக மாறும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை. இணைச்சட்ட நூலில் இவ்வாறு வாசிக்கின்றோம், "உன் கடவுளாகிய ஆண்டவர் சாபத்தை உனக்கு ஆசியாக மாற்றினார்."(இச 23:5). இப்படி சாபத்தை ஆசியாக மாற்றும் கடவுள் நம்முடைய துன்ப துயரங்களையும் கண்ணீர்க் கவலைகளையும் இன்பாக மாற்றி, நமக்கு ஆசி வழங்குவார் என்பு உறுதி.

சிந்தனை

'மகளே சியோனே! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி' (செப் 3:14) என்று இறைவாக்கினர் செப்பனியா வழியாக ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கு உரைப்பார். இஸ்ரயேல் மக்களின் கண்ணீரைத் துடைத்து மகிழ்ச்சியைத் தந்த இறைவன், நமக்கும் அத்தகைய மகிழ்ச்சியைத் தருவார் என்ற நம்பிக்கையுடன் இறைவனுடைய வழியில் தொடர்ந்து நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!