|
|
29 மே 2019 |
|
|
பாஸ்கா காலம்
6ம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீங்கள் அறியாமல் வழிபட்டுக்கொண்டிருக்கும் அந்தத் தெய்வத்தையே
நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 17: 15,22 - 18: 1
அந்நாள்களில் பவுலுடன் சென்றவர்கள் அவரை ஏதென்சு வரை அழைத்துச்
சென்றார்கள். சீலாவும் திமொத்தேயுவும் விரைவில் வந்து சேரவேண்டும்
என்னும் கட்டளையைப் பவுலிடமிருந்து பெற்றுக்கொண்டு அவர்கள்
திரும்பிச் சென்றார்கள். அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல்
எழுந்து நின்று கூறியது: ``ஏதென்சு நகர மக்களே, நீங்கள்
மிகுந்த சமயப் பற்றுள்ளவர்கள் என்பதை நான் காண்கிறேன்.
நான் உங்களுடைய தொழுகையிடங்களை உற்றுப் பார்த்துக்கொண்டு வந்தபோது
`அறியாத தெய்வத்துக்கு' என்று எழுதப்பட்டிருந்த பலிபீடம் ஒன்றைக்
கண்டேன். நீங்கள் அறியாமல் வழிபட்டுக்கொண்டிருக்கும் அந்தத்
தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். உலகையும், அதிலுள்ள
அனைத்தையும் படைத்த கடவுள் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர்.
மனிதர் கையால் கட்டிய திருக்கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை.
அனைவருக்கும் உயிரையும் மூச்சையும் மற்றனைத்தையும் கொடுப்பவர்
அவரே. எனவே மனிதர் கையால் செய்யும் ஊழியம் எதுவும் அவருக்குத்
தேவையில்லை. ஒரே ஆளிலிருந்து அவர் மக்களினம் அனைத்தையும் படைத்து
அவர்களை மண்ணுலகின்மீது குடியிருக்கச் செய்தார்; அவர்களுக்குக்
குறிப்பிட்ட காலங்களையும் குடியிருக்கும் எல்லைகளையும் வரையறுத்துக்
கொடுத்தார். கடவுள் தம்மை அவர்கள் தேடவேண்டும் என்பதற்காக இப்படிச்
செய்தார்; தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே
இவ்வாறு செய்தார். ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே
உள்ளார். அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம்,
இருக்கின்றோம்.
உங்கள் கவிஞர் சிலர் கூறுவதுபோல,
"நாம் அவருடைய பிள்ளைகளே.'
நாம் கடவுளுடைய பிள்ளைகளாய் இருப்பதால், மனிதக் கற்பனையாலும்
சிற்ப வேலைத் திறமையாலும் உருவாக்கப்பட்ட பொன், வெள்ளி, கல் உருவங்களைப்போலக்
கடவுள் இருப்பார் என நாம் எண்ணுவது முறையாகாது. ஏனெனில் மக்கள்
அறியாமையில் வாழ்ந்த காலத்தில் கடவுள் இதனைப் பொருட்படுத்தவில்லை.
ஆனால் இப்போது எங்குமுள்ள மக்கள் யாவரும் மனம் மாற வேண்டும் என்று
அவர் கட்டளையிடுகிறார். ஏனென்றால் ஒரு நாள் வரும். அப்போது
தாம் நியமித்த ஒருவரைக் கொண்டு அவர் உலகத்துக்கு நேர்மையான
தீர்ப்பு அளிப்பார்.
இறந்த அவரை உயிர்த்தெழச் செய்ததன் வாயிலாக இந்நம்பிக்கை உறுதியானது
என எல்லாருக்கும் தெளிவுபடுத்தினார்." இறந்தவர் உயிர்த்தெழுதல்'
என்பது பற்றிக் கேட்டதும் சிலர் அவரைக் கிண்டல் செய்தனர். மற்றவர்கள்,
``இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து
பேசும்; கேட்போம்"என்றார்கள்.
அதன்பின் பவுல் அவர்கள் நடுவிலிருந்து வெளியே சென்றார். சிலர்
நம்பிக்கை கொண்டு அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அவர்களுள் அரயோபாகு
மன்றத்தின் உறுப்பினரான தியோனிசியுவும் தாமரி என்னும் பெண் ஒருவரும்
வேறு சிலரும் அடங்குவர். இவற்றுக்குப் பின்பு பவுல் ஏதென்சை
விட்டுக் கொரிந்துக்குப் போய்ச் சேர்ந்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
148: 1-2. 11-12. 13. 14
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, விண்ணும் மண்ணும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
அல்லது: அல்லேலூயா.
1 விண்ணுலகில் உள்ளவையே, ஆண்டவரைப் போற்றுங்கள்; உன்னதங்களில்
அவரைப் போற்றுங்கள். 2 அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப்
போற்றுங்கள்; அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்.
பல்லவி
11 உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே, தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,
12 இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும்
ஆண்டவரைப் போற்றுங்கள். பல்லவி
13 அவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக; அவரது பெயர் மட்டுமே
உயர்ந்தது; அவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது. பல்லவி
14 அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார்; அவருடைய அனைத்து
அடியாரும் அவருக்கு நெருங்கிய அன்பார்ந்த மக்களாகிய இஸ்ரயேல்
மக்களும் அவரைப் போற்றுவார்கள். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 16
அல்லேலூயா, அல்லேலூயா! உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு
துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை
அவரை உங்களுக்கு அருள்வார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது முழு உண்மையை
நோக்கி உங்களை வழிநடத்துவார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 12-15
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நான் உங்களிடம்
சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால்
தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது
அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும்
பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை உங்களுக்கு
அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார்.
இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும்
என்னுடையவையே. எனவேதான்
"அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு
அறிவிப்பார்' என்றேன்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை:
அறியாத கடவுளையே நாங்கள் அறிவிக்கின்றோம்.
தட்டுதடுமாறியாவது தேட வேண்டும் என்பதற்காகவே அவர் நம் அருகிலே
உள்ளார்.
நாம் அறிந்துள்ளோம். அவரே கடவுள் என்று அறிக்கையிடுகின்றோம்.
அவர் நம் அருகில் உள்ளார் என்பதனை உணர்;ந்து மகிழ்வோம்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்
இத்தாலியில் தோன்றிய மிகப்பெரிய இசைக் கலைஞர் ரோச்சினி
(Rossini) என்பவர். அவருடைய திறமையைப் பார்த்துவிட்டு,
பிரான்ஸ் நாட்டு அரசர் அவருக்கு விலையுயர்ந்த கடிகாரம் ஒன்றைப்
பரிசாகக் கொடுத்தார். ரோச்சினியும் அதனை மிகப்பெரிய பொக்கிஷமாகப்
பாதுகாத்து வந்தார்.
ஒருநாள் ரோச்சினி தன்னுடைய நண்பரிடம்
பேசிக்கொண்டிருக்கும்போது, தான் அணிந்திருக்கும் கடிகாரத்தைக்
குறித்துப் பேசினார். அப்போது அவருடைய நண்பர், "உங்களுக்கு இந்தக்
கடிகாரத்தின் மதிப்பு இன்னும் சரியாகத் தெரியவில்லை என்று
நினைக்கிறேன்" என்றார். "அப்படியா! இந்தக் கடிகாரம் அரசர் பரிசாகக்
கொடுத்தது என்பதைத் தவிர, வேறு என்ன சிறப்பம்சம் இதில் இருக்கிறது"
என்று கேட்டார். அதற்கு அவருடைய நண்பர் அவரிடமிருந்து கடிகாரத்தை
வாங்கி, அதன் அடிப்பாகத்தில் இருந்த ஒரு பட்டனை மெதுவாக அழுத்தினார்.
உடனே கடிகாரத்தின் மேல்பக்கம் திறந்தது, அதன் உள்ளே இருந்து
ரோச்சினியின் உருவம் தாங்கிய ஓவியம் இருந்தது. இதைக் கண்டு
ரோச்சினி, 'இத்தனை நாளும் இந்தக் கடிகாரம் என்னிடத்தில்தான் இருக்கின்றது,
ஆனால், இதன் உள்ளே என்னுடைய உருவம் பொறித்த ஓவியம் இருப்பது இப்போதுதான்
தெரிகிறது என்று மிகவும் ஆச்சரியப்பட்டுச் சொன்னார்.
ரோச்சினிக்கு எப்படி அவருடைய நண்பர் கடிகாரத்தில் இருந்த உண்மையை
வெளிப்படுத்தினாரோ, அதுபோன்று தூய ஆவியானவர் நமக்கு முழு உண்மையை
வெளிப்படுத்துகின்றார். அது எப்படி என்று இன்றைய நாளில் நாம்
வாசிக்கக்கேட்ட நற்செய்தியின் வழியாக சிந்தித்துப் பார்ப்போம்.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, இந்த உலகத்தை விட்டுப் பிரிவதற்கு
முன்பாக தன்னுடைய சீடர்களுக்கு பல்வேறு காரியங்களை எடுத்துக்கூறுகின்றார்.
அவற்றில் ஒன்றுதான் தூய ஆவியானவர். "உண்மையை வெளிப்படுத்தும்
தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்திச்
செல்வார்" என்று இயேசு தூய ஆவியானவரைக் குறித்துப்
பேசுகின்றார்.
இந்த உலகத்தில் பெரும்பாலான நேரங்களில் நாம் பேசுவது, கேட்பது
அனைத்தும் பொய்யாக இருக்கும்போது தூய ஆவியார் முழு உண்மையை
நோக்கி நம்மை வழிநடத்திச் செல்வார் என்று இயேசு சொல்வது நம்முடைய
சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. மேலும் முழு உண்மை என்று
சொல்கிறபோது அது 'ஆண்டவராகிய இயேசுவே (யோவா 14:6) தவிர, வேறு
யாரும் இருக்க முடியாது என்பதும் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்றாக
இருக்கின்றது. அந்த விதத்தில் பார்க்கின்றபோது தூய ஆவியார் நம்மை
முழு உண்மையை நோக்கி/ ஆண்டவர் இயேசுவை நோக்கி எப்படி வழிநடத்தப்
போகின்றார் என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் சாலச் சிறந்த
ஒன்றாகும்.
உண்மையை நோக்கி வழிநடத்தும் தூய ஆவியார், "தாமாக எதையும் பேசமாட்டார்;
தாம் கேட்டதையே பேசுவார்" என்கிறார் இயேசு. எப்படி ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்து தந்தைக் கடவுளிடமிருந்து கேட்டு, அதை மக்களுக்கு
அறிவித்தாரோ, அது போன்று தூய ஆவியார் தாமாக எதையும் பேசாமல்,
இயேசு கிறிஸ்து தனக்குச் சொன்னவற்றை, வெளிப்படுத்துபவை பற்றி
பேசுவார் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.
அடுத்ததாக, தூய ஆவியார் வரப்போகின்றவற்றை நமக்கு அறிவிப்பார்
என்கிறார் இயேசு. இதுவும் தூய ஆவியார் ஆற்றக்கூடிய பணிகளில் ஒன்றாக
நாம் புரிந்துகொள்ளலாம். இயேசுவின் இரண்டாம் வருகையை, உலக
முடிவை, கடவுளின் இறுதித் தீர்ப்பை இவற்றையெல்லாம் குறித்து
தூய ஆவியார் மக்களுக்கு அறிவிப்பார் என்ற விதத்தில் நாம்
புரிந்துகொள்ளலாம்.
நிறைவாக, தூய ஆவியார் என்னிடமிருந்து கேட்டு, உங்களுக்கு அறிவிப்பார்
என்கிறார் இயேசு. இயேசு எவற்றையெல்லாம் தூய ஆவியாருக்குச்
சொல்கிறாரோ, அவற்றைத்தான் தூய ஆவியார் மக்களுக்கு அறிவிப்பார்
என்று நாம் புரிந்துகொள்ளலாம். ஆகையால், இயேசு இந்த உலகத்தில்
விட்டுச்சென்ற பணியை தூய ஆவியார் தொடர்ந்து செய்வார் என்பது உறுதியாகின்றது.
அதைப் போன்று இயேசு இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து
போய்விட்டாரோ என்று நாம் வருந்தவும் தேவையில்லை. அவர் தூய ஆவியாரின்
வழியாக இன்றும் செயலாற்றுகின்றார் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
ஆகையால், திருமுழுக்கின் வழியாக தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட
நாம், தூய ஆவியானவர் எப்படி ஆண்டவரிடமிருந்து கேட்டதை மக்களுக்கு
அறிவித்தாரோ, அது போன்று நாமும் செய்யவேண்டும். அப்போதுதான்
நாம் உண்மைக் கிறிஸ்தவர்களாக மாறமுடியும். இந்த இடத்தில் ஐசக்
டி. ஹெக்கர் என்ற எழுத்தாளர் கூறுகின்ற வார்த்தைகள் நம்முடைய
சிந்தனைக்குரியது. அவர் கூறுவார், "மானுட சமூகத்தின் எதிர்காலமானது
நாம் ஒவ்வொரு ஆன்மாவையும் தூய ஆவியின் ஆளுகைக்குள் கொண்டுவருதில்
இருக்கின்றது (The whole future of the human race depends on
bringing the individual soul more completely and perfectly
under the sway of othe Holy Spirit). இது முற்றிலும் உண்மை.
எனவே, நாம் முழு உண்மையை நோக்கி நம்மை வழிநடத்தும் தூய ஆவியார்
வழியில் நடப்போம், அவருடைய பிரசன்னத்திற்குள் நம்மை உட்படுத்துவோம்,
அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
முழு உண்மையை நோக்கி வழிநடத்தும் தூய ஆவியார்
தந்தை ஒருவர் பக்கத்து ஊரில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளைக்
கண்டுகளிப்பதற்காக தன்னுடைய மகனோடு சென்றார்.
அங்கே விளையாட்டு அரங்கத்திற்கு முன்பாக டிக்கெட் விநியோகம்
செய்யப்பட்டுக் கொண்டு இருந்தது. தந்தை டிக்கெட் விநியோகிப்பவரிடம்
சென்று, டிக்கெட் விலை என்ன? என்று கேட்டார். அதற்கு அவர்,
"பெரியவர்களுக்கு ஐம்பது ரூபாயும், ஆறு வயதுக்கும் குறைவானவர்களுக்கு
டிக்கெட் வசூலிக்கப்படாது' என்றும் கூறினார்.
உடனே தந்தை, தனக்கும், தன்னுடைய மகனுக்கும் என்று இரண்டு
டிக்கெட்கள் தாருங்கள் என்றார். உடனே டிக்கெட் விநியோகிப்பவர்
தந்தையை மேலும், கீழும் ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "உன்னுடைய
மகனுக்கு எத்தனை வயதாகிறது?" என்று கேட்டார். அதற்கு அவர்,
"அவனுக்கு இப்போது ஏழு வயது ஆகிறது" என்றார்.
டிக்கெட் விநியோகிப்பவர் அவரிடம் மறுமொழியாக, "உன்னுடைய மகனுக்கு
நீ சொல்லித்தான் ஏழு வயது என்று தெரிகிறது. ஆனால் அவன் ஆறு வயதுப்
பையன் போன்றுதான் தெரிகிறான். உன் மகனுக்கு ஆறு வயதுதான் ஆகிறது
என்று நீ சொல்லியிருந்தாலும் நான் அதை நம்பத்தான்
செய்திருப்பேன். எதற்காக உன் பையனுக்கு ஏழு வயது என்று சொல்லி,
தேவையில்லாமல் ஐம்பது ரூபாயை விரயமாக்குகிறாய்?" என்றார். அதற்கு
தந்தையானவர், "நான் என்னுடைய மகனுக்கு ஆறுவயது ஆகிறது என்று
சொன்னால், என்னுடைய மகன் 'வெறும் ஐம்பது ரூபாய்க்காக தந்தை
பொய் சொல்கிறாரே என்று தவறாக நினைப்பான். அதனால்தான் நான் அவனுடைய
உண்மையான வயதைச் சொன்னேன்" என்றார்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த அந்த டிக்கெட்
விநியோப்பாளர் தந்தையின் உண்மை பேசும் தன்மையைக் கண்டு, வியந்து
நின்றார்.
எங்கும் எதிலும் பொய்யானது நீக்கமற நிறைந்திருக்கும்போது இந்த
காலக் கட்டத்தில் உண்மைபேசும் அந்த தந்தையின் குணம் உண்மையிலே
பாராட்டுக்குரியது. காந்தியடிகள் ஒருமுறை இவ்வாறு
குறிப்பிட்டார் 'உண்மைதான் கடவுள், கடவுள்தான் உண்மை' என்று.
இது முற்றிலும் உண்மை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம்,
உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது, அவர் முழு உண்மையை
நோக்கி உங்களை வழிநடத்திச் செல்வார்" என்கிறார். கடவுளுக்கு மறுபெயர்தான்
உண்மை (உரோமையர் 3:4). அந்த உண்மையின் கடவுள் நம்மை முழு உண்மையை
நோக்கி வழிநடத்திச் செல்வார் என்பதே ஆறுதலான விஷயம்.
இன்றைக்கு நம்மை வழி நடத்திச் செல்லக்கூடியவர்கள், நம்மை உண்மையின்
பாதையில் வழிநடத்திச் செல்கிறார்களா? என்பது மிகப்பெரிய
கேள்விக்குறியாக இருக்கின்றது. வழிநடத்துதல் என்ற பெயரில் படுகுழியில்
தள்ளக்கூடியவர்களைத் தான் பார்க்கின்றோம். இதற்கு அரசியல் தலைவர்கள்,
சமூகத் தலைவர்கள், நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் யாருமே
விதிவிலக்கல்ல. ஆனால் இயேசு அனுப்பக்கூடிய தூய ஆவியார் நம்மை
முழு உண்மையை நோக்கி வழிநடத்திச் செல்லக்கூடியவர்.
நீதிமொழிகள் புத்தகம் 16:9 ல் வாசிக்கின்றோம், "மனிதர் தம் வழியை
வகுத்தமைக்கின்றார். ஆனால் அதில் வழி நடத்துபவரோ ஆண்டவரே" என்று.
அதேபோன்று, விடுதலைப் பயண நூல் 15:13 ல் வாசிக்கின்றோம், "நீர்
மீட்டுக்கொண்ட மக்களை உம் பேரருளால் வழிநடத்திச் சென்றீர்; உம்
ஆற்றலால் அவர்களை உம் புனித உறைவிடம் நோக்கி வழி நடத்திச்
சென்றீர்" என்று.
ஆகவே, நாம் உண்மையின் வழியில் வழிநடத்தக்கூடியவர் தூய ஆவியார்/கடவுள்
ஒருவரே என்றும், அவர் வழிநடத்துதலில் நாம் இருக்கும்போது, நமக்கு
ஆபத்து இல்லை என்பதை உணர்ந்துகொண்டு, நாம் தூய ஆவியால் வழிநடத்தப்பட
இறைவனின் கைகளில் நம்மையே நாம் ஒப்புக் கொடுப்போம். உண்மையின்
வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
திருத்தூதர் பணிகள் 17: 15, 22-18: 1
நான் அவரைச் சார்ந்துதான் வாழ்கின்றோம்,
இயங்குகின்றோம், இருக்கின்றோம்
நிகழ்வு
பதினோறாம் நூற்றாண்டில் நார்மானியர்க்கும் இங்கிலாந்து நாட்டவர்க்கும்
இடையே கடுமையான போர் நடைபெற்றது. நார்மானியரை அரசர் வில்லியம்
தலைமை தாங்கி வழிநடத்திக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில் முதற்கட்டப்போரில் அரசர் வில்லியம் இங்கிலாந்து
நாட்டுப் படைவீரர்களால் கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தி,
நார்மானியர்கள் மத்தியில் காட்டுத் தீப்போல பரவியது. 'ஐயோ நம்முடைய
அரசரை எதிரிகள் கொன்றுபோட்டுவிட்டனரே... இனிமேல் நம்மால்
போரில் வெற்றிகொள்ளவே முடியாதே' என்று படைவீரர்கள்
சோர்வுற்றார்கள். இதைக் கேள்வியுற்ற அரசர், 'நாம் உயிரோடு இருக்கும்போது
இப்படியொரு செய்தி பரப்பப்படுகின்றதே... இதை உடனடியாகத் தடுத்து
நிறுத்தி, நம்முடைய நாட்டுப் படைவீரர்களிடம் உண்மையை எடுத்துச்
சொல்லி, அவர்களை உறுதிப்படுத்தவேண்டும்' என்று தன்னுடைய
நாட்டுப் படைவீரர்கள் இருந்த பாளையத்திற்குள் சென்று, தான் உயிரோடுதான்
இருக்கின்றேன் என்பதை அவர்கட்க்கு வெளிப்படுத்தினார்.
அரசர் உயிரோடுதான் இருக்கின்றார் என்பதை அறிந்ததும் நார்மனியப்
படைவீரர்கள் உற்சாகமடைந்தார்கள். இதற்கு பின்பு அரசர் வில்லியம்
தன்னுடைய படைவீரர்களை ஒன்றுதிரட்டிக்கொண்டு போய், இங்கிலாந்து
நாட்டுப் படைவீரர்களோடு போர்தொடுத்து, போரில் மிக எளிதாக
வெற்றிபெற்றார்கள்.
எப்படி வில்லியம் என்ற அந்த அரசரின் உடனிருப்பு நார்மானியப் படைவீரர்களுக்குப்
புதுத் தெம்பும் எதிரி நாட்டவரோடு போர்புரிவதற்கான எல்லா ஆற்றலையும்
தந்ததோ, அதுபோன்று மனிதர்களாக நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்கும்
இயங்குவதற்கும் இருப்பதற்கும் ஆண்டவரின் உடனிருப்பது உறுதுணையாக
இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாவது. இன்றைய முதல் வாசகம்
ஆண்டவர் இயேசு எப்படிப்பட்டவர், அவருடைய உடனிருப்பு நமக்கு எத்தகைய
ஆசியைத் தருகின்றது என்ற உண்மையை எடுத்துச் சொல்கின்றது. எனவே,
நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவு
செய்வோம்.
இந்த உலகத்தைப் படைத்தவர் எல்லாம் வல்ல இறைவனே
திருத்தூதர் பணிகள் நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்,
பவுல் அரயோப்பாகு மன்றத்தில் பேசத் தொடங்குகின்றார். அவர் அங்கிருந்த
மக்களுக்கு அதாவது ஏதென்ஸ் நகர மக்களுக்குப் பேசியதில் மூன்று
முக்கியமான உண்மைகள் அடங்கியிருக்கின்றன. அந்த மூன்று உண்மைகளையும்
இப்பொழுது தனித்தனியாக சிந்தித்துப் பார்ப்போம்.
ஏதென்சு மக்களுடைய தொழுகைக்கூடத்தில் 'அறியா தெய்வத்திற்கென்று'
இருந்த ஒரு பலிபீடத்தைச் சுட்டிக்காட்டிப் பேசும் பவுல், அந்த
அறியா தெய்வம் வேறு யாருமல்ல, இந்த உலகத்தைப் படைத்து, இதிலுள்ள
எல்லார்க்கும் உயிர்மூச்சையும் மற்றனைத்தையும் கொடுக்கும் ஆண்டவரே
என்று கூறுகின்றார். இதன்மூலம் பவுல் அங்கிருந்த ஏதென்சு மக்களிடம்
வேறு எந்த சக்தியும் அல்ல, எல்லாம் வல்ல ஆண்டவரே இந்த உலகத்தைப்
படைத்தார் என்ற உண்மையை எடுத்துச் சொல்கின்றார்.
இந்த உலகத்தை வாழ்விப்பவரும் இயங்க வைப்பவரும் இறைவனே!
இந்த உலகத்தைப் படைத்தது எல்லாம் வல்ல இறைவனே என்று
சுட்டிக்காட்டிய பவுல், நாம் வாழ்வதும் இயங்குவதும் இருப்பதும்
அவரால்தான் என்று குறிப்பிடுகின்றார். இன்றைக்குப் பலர்,
'எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை... என்னிடம் எல்லாமும் இருக்கின்றது.
அதனால் எதைவேண்டுமானாலும் என்னால் செய்ய முடியும்' என்று
சொல்லிக்கொண்டு அழைவதைக் காணமுடிகின்றது. உண்மையில் இப்படிப்பட்டவர்கள்
உண்மையை அறியாத அரைவேக்காடுகளாக இருக்கிறார்கள் என்று சொன்னால்
அது மிகையாகாது. ஏனென்றால், இறைவனுடைய துணையின்றி நம்மால் எதுவும்
செய்யமுடியாது. அப்படியிருக்கும்போது எனக்கு யாருடைய உதவியும்
தேவையில்லை என்று சொல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எல்லாம் வல்ல இறைவனிடம் திரும்பி வரவேண்டும்
பவுல் ஏதென்சு மக்களிடம் பேசிய மிக முக்கியமான உண்மை, நாம் ஒவொருவரும்
மனம்மாறி ஆண்டவரிடம் திரும்பி வரவேண்டும் என்பதாகும். இந்த
உலகத்தில் இருக்கின்ற எல்லாமும் ஏன் இந்த வாழ்வே அவருடையதாக இருக்கின்றபோது,
அவருடைய வழியில் நடப்பதுதானே சாலச் சிறந்தது. நாம் ஆண்டவரிடம்
திரும்பி வருவதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கின்றது.
அது என்னவெனில், அவரே நமக்குத் தீர்ப்பு வழங்கக்கூடியவர். இத்தகைய
வல்லமையை அவர் உயிர்த்தெழுதலின் வழியாக பெறுகின்றார்.
இந்த மூன்று உண்மையை பவுல் ஏதென்சு மக்களிடம் எடுத்துச் சொன்னபோது
ஒருசிலர் நகைக்கின்றார்கள். இன்னொரு ஒருசிலர் அவரிடம்,
மீண்டும் வந்து பேசும் கேட்போம் என்கிறார்கள். இன்னும் ஒருசிலரோ
நம்பிக்கைக் கொண்டு அவரோடு சேர்ந்துகொள்கின்றார்கள். இந்த
மூன்றுவிதமான மனிதர்களில், ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை
ஏற்றுக்கொண்டு அவரிடம் திரும்பிவந்த மூன்றாவது விதமான மனிதர்களைப்
போன்று இருப்பது தேவையான ஒன்றாக இருக்கின்றது.
சிந்தனை
'இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?'
(1யோவா 5:5) என்பார் யோவான். ஆகவே, நாம் இயேசுவே மெசியா என்றும்
அவரே இறைமகன் என்றும் ஏற்றுக்கொண்டு அவர் வழியில் நடப்போம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
யோவான் 16: 12-15
முழு உண்மையை நோக்கி வழிநடத்தும் இறைவன்
நிகழ்வு
ஒரு நகரில் நடைபெற்ற கொலைக்குற்றத்தில் நேரடி சாட்சியாக பனிரண்டு
வயதுச் சிறுவன் ஒருவன் நீதிமன்றில் ஆஜர் ஆனான். அவனை விசாரணை
செய்த எதிர்த்தரப்பு வழக்குரைஞர் அதாவது குற்றவாளியின் சார்பாக
வழக்காடிய வழக்குரைஞர் சிறுவனை அப்படி இப்படி என்று குறுக்கு
விசாரணை செய்தார். அவனோ எதற்கும் பயப்படாமல் தான் கண்ணால் கண்ட
உண்மையை அப்படியே எடுத்துச் சொன்னான்.
இதைப் பார்த்துவிட்டு அந்த எதிர்த்தரப்பு வழக்குரைஞர் அவனிடம்,
"தம்பி யாராவது உன்னிடம் காணாத ஒன்றைக் கண்டேன் என்று சொல்லச்
சொன்னார்களா?" என்று கேட்டார். அதற்குச் சிறுவன் அவரிடம்,
"அப்படியெல்லாம் இல்லை. என் தந்தைதான் என்னிடம் 'எக்காரணத்தைக்
கொண்டும் நீ காணாத ஒன்றைக் கண்டேன் என்று சொல்லக்கூடாது... வழக்குரைஞர்
உன்னை குறுக்கு விசாரணை செய்வார். அப்படிப்பட்ட தருணத்தில் நீ
அவருக்கு அஞ்சாமல், நடந்ததை அப்படியே சொல்லவேண்டும் என்று சொல்லச்
சொன்னார்" என்றார். இதை கேட்டு அந்த வழக்குரைஞர் மட்டுமல்லாது,
நீதிமன்றத்தில் கூடியிருந்த எல்லாரும், யாருக்கும் அஞ்சாமல் உண்மையை
மட்டுமே பேசிய அந்தச் சிறுவனின் துணிச்சலைக் கண்டு வியந்து
நின்றார்கள். (Source: The Speakers's Quote Book Roy B.
Zuck).
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் சிறுவனை அவனுடைய தந்தை எப்படி உண்மையின்
வழியில், உண்மையை நோக்கி வழிநடத்திச் சென்றாரோ, அதுபோன்றுதான்
தூய ஆவியாரும் நம்மை முழு உண்மையை வழிநடத்திச் செல்வதாக இயேசு
கூறுகின்றார். எனவே, நாம் அதைக் குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
முழு உண்மையை நோக்கி வழிநடத்தும் தூய ஆவியார்
யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நசெய்தி வாசகத்தில்
இயேசு, துணையாளராம் தூய ஆவியாரைக் குறித்துப் பேசுகின்றார். அப்படிப்
பேசுகின்றபோது அவர் சொல்லக்கூடிய வார்த்தைகள்தான், "உண்மையை
வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை
நோக்கி உங்களை வழிநடத்துவார்" என்பதாகும்.
இங்கு இயேசு சொல்லக்கூடிய உண்மை என்பது எது? அல்லது யார்? எனத்
தெரிந்துகொல்வது நல்லது. யோவான் நற்செய்தியில் இயேசு தோமாவைப்
பார்த்துக்கூறுவார், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய்
அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை." (யோவா 14:6) இயேசு
கூறுகின்ற இவ்வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தால், இயேசுதான் உண்மை
என அறிந்துகொள்ளலாம். ஆகவே, இயேசு தந்தைக் கடவுளிடமிருந்து நமக்கு
அனுப்பப்போகின்ற துணையாளராம் தூய ஆவியார் இயேசுவை நோக்கி வழிநடத்துவார்
என்பது உண்மையாகின்றது.
இன்றைக்குப் பலர் 'வாழ்வுதரக்கூடியவர்' என்று யார் யாரையோ
சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றார். அவர்களால் நமக்கு
வாழ்வையும் மீட்பையும் நிம்மதியையும் தந்துவிட முடியுமா? என்பது
மிகப்பெரிய கேள்விக்குறியே. அப்படிப் பார்த்தால், அவர்கள் ஒருவகையில்
குருட்டு வழிகாட்டிகளே! ஆனால், தூய ஆவியார் அப்படியில்லை. அவர்
வாழ்வுதருபவரும் (யோவா 10:10) உண்மையுமான இயேசுவிடம் வழிநடத்திச்
செல்கின்றார். ஆகையால், தூய ஆவியாரை உண்மையான வழிகாட்டி என்று
உறுதியாகச் சொல்லலாம்.
தாமாக எதையும் பேசாத தூய ஆவியார்
இயேசு தூய ஆவியாரைக் குறித்து வெளிப்படுத்தும் அடுத்த உண்மை,
அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார் என்பதாகும்.
இயேசு தூய ஆவியாரைக் குறித்துப் பேசும் இவ்வார்த்தைகள், அவர்
தனித்துச் செயல்படமாட்டார். மாறாக தந்தைக் கடவுளிடமிருந்தும்
இயேசுவிடமிருந்தும் கேட்பதையே பேசுவார் என்ற உண்மையை அழகாக எடுத்துக்கூறுகின்றது.
மூவொரு கடவுளிடம் இருக்கும் இந்த ஒற்றுமை, அன்பு போன்ற பண்புகளை
நம்முடைய அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வது நல்லது.
வரப்போகிறவற்றை அறிவிக்கும் தூய ஆவியார்
இயேசு, தூய ஆவியாரைக் குறித்து எடுத்துரைக்கும் மூன்றாவது உண்மை,
அவர் வரப்போகிறவற்றை அறிவிப்பார் என்பதாகும். அது எப்படியெனில்
காலங்கள், யுகங்கள் யாவும் இயேசுவினுடையவையாக இருக்கும்போது
அவருக்கு எல்லாம் தெரியும். ஆகவே, தூய ஆவியார் தன்னிடமிருந்து
அனைத்தையும் பெற்றுக்கொண்டு, அவற்றை மக்களுக்கு அறிவிப்பார் என்பதைத்தான்
இயேசு இவ்வாறு சொல்கின்றார். இப்படித் தூய ஆவியார் வரப்போகிறவற்றை
அறிவிப்பவராக இருப்பதால், நாம் எதற்கும் ஆயத்தமாகவும் விழிப்பாகவும்
இருக்கலாம்.
சிந்தனை
'ஆகவே, பொய்யை விலக்கி ஒருவரோடு உண்மை பேசுங்கள். ஏனெனில் நாம்
யாவரும் ஓருடலில் உறுப்புகளாய் இருகின்றோம்' (எபே 4:25) என்பார்
பவுல் எனவே, தூய முழு உண்மையாம் இயேசுவை நோக்கி நம்மை வழிநடத்திச்
சொல்லும் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப உண்மை பேசி, உண்மையின்
வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
முழு உண்மை
'உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை
நோக்கி உங்களை வழிநடத்துவார்.'
- இயேசுவின் இறுதி வார்த்தைகளில் வரும் 'முழு உண்மை' என்ற
சொல்லாடலை நாம் நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
அது என்னங்க முழு உண்மை?
உண்மை அல்லது பொய். இவ்வளவுதான.
சதுரங்க வேட்டை திரைப்படத்தில் கதாநாயகன் சொல்வார்: 'ஒரு பொய்
சொல்லும்போது அதுல கொஞ்சம் உண்மை கலந்திருக்கணும். அப்பத்தான்
அது பொய்னு தெரியாது.' ஆக, பொய்யிலும் உண்மை இருக்கிறது. அப்படி
என்றால், உண்மையிலும் பொய் இருக்கலாம். முழு உண்மை என்பது பொய்
இல்லாத உண்மையா?
இயேசு மற்றும் பிலாத்து உரையாடலில் பிலாத்து இயேசுவிடம், 'உண்மையா
அது என்ன?' என்று கேட்பார். தொடர்ந்து தன் மனைவியிடம், 'கிளவுதியா,
உண்மை என்றால் என்ன?' எனக் கேட்பார். அதற்கு மனைவி, 'அதை நீயே
உணராவிட்டால் அதை யாரும் உனக்குக் கற்பிக்க முடியாது' என்பார்
மனைவி.
'சத்' என்றால் சமஸ்கிருதத்தில் இருப்பு என்பது பொருள். ஆக, இருப்பு
இருப்பாக இருக்கும்போது அது உண்மையாக இருக்கிறது. இருப்பில் கறை
படியும்போது அது பொய் ஆகிவிடுகிறது. 'இது இல்லை. இது இல்லை' என்று
ஒவ்வொன்றாகக் களைந்துவிடும்போது இறுதியில் நிற்கும் இருப்பே உண்மை.
அந்த உண்மையை நோக்கிய பயணத்தில் உதவி செய்பவர் தூய ஆவியார்.
- Fr. Yesu Karunanidhi.
|
|