|
|
28 மே 2019 |
|
|
பாஸ்கா காலம்
6ம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது
நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 22-34
அந்நாள்களில் பிலிப்பி நகர் மக்கள் திரண்டெழுந்து, பவுலையும்
சீலாவையும் தாக்கினார்கள். நடுவர்கள் அவர்களுடைய மேலுடைகளைக்
கிழித்து அவர்களைத் தடியால் அடிக்க ஆணையிட்டார்கள். அவர்களை நன்கு
அடித்துச் சிறையில் தள்ளிக் கருத்தாய்க் காவல் செய்யுமாறு
சிறைக் காவலர் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள். இவ்வாறு கட்டளை
பெற்ற அவர் அவர்களை உட்சிறையில் தள்ளி, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில்
உறுதியாய் மாட்டிவைத்தார்.
நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம்
வேண்டினர். மற்றக் கைதிகளோ இதனைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறைக் கூடத்தின் அடித்தளமே
அதிர்ந்தது. உடனே கதவுகள் அனைத்தும் திறந்தன. அனைவரின் விலங்குகளும்
கழன்று விழுந்தன.
சிறைக் காவலர் விழித்தெழுந்து, சிறைக் கூடத்தின் கதவுகள் திறந்திருப்பதைக்
கண்டு, கைதிகள் தப்பி ஓடியிருப்பார்கள் என எண்ணி, வாளை உருவித்
தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
பவுல் உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, "நீர் உமக்குத்
தீங்கு எதுவும் செய்துகொள்ளாதீர்; நாங்கள் அனைவரும் இங்கேதான்
இருக்கிறோம்" என்றார். சிறைக் காவலர் உடனே ஒரு விளக்கைக்
கொண்டுவரச் சொல்லி, விரைந்தோடி வந்து, நடுங்கியவாறே பவுல்,
சீலா ஆகியோரின் காலில் விழுந்தார்.
அவர்களை வெளியே அழைத்து வந்து, "பெரியோரே, மீட்படைய நான் என்ன
செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், "ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை
கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்"
என்றார்கள். பின்பு அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை அவருக்கும்
அவர் வீட்டில் இருந்தோர் அனைவருக்கும் அறிவித்தார்கள். அவ்விரவு
நேரத்திலேயே அவர் அவர்களைக் கூட்டிச் சென்று அவர்களின் காயங்களைக்
கழுவினார்.
பின்பு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள்.
அவர் அவர்களைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறினார்.
கடவுள்மீது நம்பிக்கை கொண்டதால் தம் வீட்டார் அனைவரோடும்
சேர்ந்து அவர் பேருவகை அடைந்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
138: 1-2a. 2bc-3. 7c-8 (பல்லவி: 7c)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.
அல்லது: அல்லேலூயா.
1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள்
முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
2a உம் திருக்கோவிலை நோக்கித்
திரும்பி உம்மைத் தாள்பணிவேன். பல்லவி
2bc உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி
செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம்
வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 3 நான் மன்றாடிய நாளில்
எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். பல்லவி
7c உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். 8 நீர் வாக்களித்த
அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது
உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 16: 7,13
அல்லேலூயா, அல்லேலூயா! துணையாளரை உங்களிடம் அனுப்புவேன். உண்மையை
வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது, அவர் முழு உண்மையை
நோக்கி உங்களை வழிநடத்துவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================நான்
போகாவிட்டால், துணையாளர் உங்களிடம் வரமாட்டார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
16: 5-11
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "இப்போது என்னை
அனுப்பியவரிடம் போகிறேன்; ஆனால் உங்களுள் எவரும் `நீர் எங்கே
போகிறீர்?' என்று என்னிடம் கேட்காமலேயே நான் சொன்னவற்றைக்
குறித்துத் துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள்.
நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள்.
நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான்
போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன். அவர் வந்து பாவம், நீதி,
தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை
என எடுத்துக்காட்டுவார்.
பாவம் பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் என்னிடம் அவர்கள்
நம்பிக்கை கொள்ளவில்லை. நீதி பற்றிய அவர்கள் கருத்து தவறானது;
ஏனெனில் நான் தந்தையிடம் செல்கிறேன்; நீங்களும் இனி என்னைக் காணமாட்டீர்கள்.
தீர்ப்பு பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் இவ்வுலகின்
தலைவன் தண்டனை பெற்றுவிட்டான்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை:
செபத்திற்கு வல்லமையுண்டு என்பதனை நீருபிக்கும் விதமாக இன்றைய
முதல் வாசகம் அமைந்துள்ளது.
சிறை கதவுகள் திறக்கப்பட்டது. விலங்குகள் உடைந்து போனது.
காவலன் கண்டு தன்னை மாய்த்துக் கொள்ள முற்பட்ட போது, தடுக்கப்பட்டார்.
நம்பினார் வீட்டாரோடு திருமுழுக்கு பெற்று மீட்ப பெற்றார்.
நம்பிக்கை நமக்கு நலம் தரும்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 16: 22-34
அபயம் தரும் இறைவேண்டல்!
நிகழ்வு
1970 களில், விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா கொடிகட்டிப்
பறந்துகொண்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் 1970 ம் ஆண்டு,
Apollo 13 என்ற விண்கலத்தை மேலே செலுத்தி, தங்களுடைய
நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்க நினைத்தார்கள் அமெரிக்க
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். குறிப்பிட்ட தேதியில் Apollo 13
என்ற விண்கலமானது மேலே செலுத்தப்பட்டது. ஒட்டுமொத்த அமெரிக்காவே
விண்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரிய சாதனை நிகழ்த்திவிட்டோம் என்று
புளகாங்கிதம் அடைந்துகொண்டிருந்த தருணத்தில், 'விண்கலத்தில் ஏதோ
பிரச்சினை ஏற்பட்டுவிட்டது என்றும் அது எந்த நேரத்திலும்
வெடித்துச் சிதறலாம் என்றும் தெரியவந்தது. அவ்வளவு பெரிய விண்கலம்
பூமியில் விழுந்தால் அது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும், அதைத்
தடுப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் கையறு
நிலையில் இருந்தார்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.
இந்நிலையில் செய்தியைக் கேள்விப்பட்ட அப்போதிருந்த அமெரிக்க அதிபர்
நிக்சன், வேறு எதைப் பற்றியும் யோசித்துக்கொண்டிருக்காமல்,
வானொலி வழியாக மக்களிடம் பேசத் தொடங்கினார்: "அன்பார்ந்த மக்களே!
நாம் ஓர் ஆபத்தான நிலையில் இருந்துகொண்டிருக்கின்றோம்.
விண்வெளியில் ஏவப்பட்ட Apollo 13 என்ற விண்கலமானது எப்போது
வேண்டுமானாலும் வெடித்து, எங்கு வேண்டுமானாலும் விழலாம். ஆகையால்,
நம்மையெல்லாம் காப்பாற்றும் பொருட்டு, இறைவனிடம் நம்பிக்கையோடு
வேண்டுவோம்." அதிபரின் இவ்வுரையைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் மட்டுமல்லாது,
உலக மக்கள் அனைவரும் விண்கலத்தினால் மக்களுக்கு எந்தவோர் ஆபத்தும்
நேரிடக்கூடாது என்று இறைவனிடம் உருக்கமாக மன்றாடினார்கள்.
மக்களுடைய வேண்டுதல் வீண்போகவில்லை. விண்வெளியிலிருந்து
வெடித்துச் சிதறிய Apollo 13 என்ற விண்கலம் மக்களுக்கு எந்தவொரு
பாதிப்பு ஏற்படா வண்ணம் அட்லாண்டிக் கடலில் போய்விழுந்தது. இதைத்
தொடர்ந்து மக்கள் அனைவரும், தங்களை மிகப்பெரிய ஆபத்திலிருந்து
காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.
இறைவனிடம் நம்பிக்கையோடு மன்றாடுகின்றபோது, அந்த வேண்டுதல் மனிதர்களை
எப்படியெல்லாம் ஆபத்திலிருந்து காப்பாற்றுகின்றது என்ற உண்மையை
எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய
முதல் வாசகத்திலும் இறைவேண்டலினால் ஆபத்திலிருந்து விடுவிக்கப்பட்டவர்களைக்
குறித்து வாசிக்கின்றோம். அதைக் குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
இக்கட்டான வேளையிலும் இறைவனிடம் மன்றாடுதல்
திருத்தூதர் பணிகள் நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்
பவுலும் அவருடைய உடன் பணியாளருமான சீலாவும் பிலிப்பி நகர மக்களால்
கடுமையாக அடிக்கப்பட்ட சிறையில் அடைக்கப்படுகின்றார்கள்.
பிலிப்பி நகர மக்கள் அவர்கள் இருவரையும் அடித்ததற்குக் காரணம்,
குறிசொல்லும் ஆவியைத் தன்னுள் கொண்டிருந்த ஓர் அடிமைப்பெண்ணிடமிருந்து
தீய ஆவியை விரட்டியடிக்கின்றார்கள். இதனால் அந்தப் பெண்ணை
வைத்து வருமானம் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் தங்களுக்கு வருமானம்
போய்விட்டதே என்று அவர்களை அடிக்கின்றார்கள்.
பவுலும் சீலாவும் மக்கள் தங்களை அடித்துத்
துன்புறுத்திவிட்டார்களே என்று வருந்திக்கொண்டிருக்கவில்லை.
மாறாக நள்ளிரவு வேளையிலும் இறைவனுக்குப் புகழ்ப்பா
பாடிக்கொண்டிருக்கின்றார்கள். இதனால் மிகப்பெரிய நிலநடுக்கம்
ஏற்பட்டு, சிறையின் அடித்தளம் அசைக்கின்றது; கைதிகளின்மீது கட்டப்பட்டிருந்த
விலங்குகள் எல்லாம் கீழே விழுகின்றன. பவுலும் சீலாவும் இறைவேண்டலின்
வல்லமையை உணர்ந்திருக்கவேண்டும் என்றுதான் சொல்லவேண்டும் (2
குறி 20: 1-22) அதனால்தான் விலங்குகளால் கட்டப்பட்ட நிலையிலும்
அவர்கள் இறைவனுக்குப் புகழ்ப்பா பாடுகின்றார்கள். அவர்கள்
பாடிய புகழ்பாடலே அவர்கள் சிறையிலிருந்து விடுபடக் காரணமாக இருக்கின்றது.
மீட்புப் பெற இறைமகன் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவேண்டும்
பவுலும் சீலாவும் பாடிய புகழ்ப்பாவைத் தொடர்ந்து நிலைமை தலைகீழாக
மாறுகின்றது. இதைத் தொடர்ந்து சிறைக் காவலர் பவுலும் சீலாவும்
தப்பித்து ஓடிவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு தற்கொலை
செய்துகொள்ள முயற்சிக்கின்றார். அப்போது பவுல் உரத்த குரல் எழுப்பி
அவரைச் சாவிலிருந்து காப்பாடுகின்றார். அது மட்டுமல்லாமல் அவர்
மீட்புப் பெறுவதற்கான வழியையும் சொல்கின்றார். அந்த சிறைக் காவலர்
பவுலிடம், "நான் மீட்பு பெற என்ன செய்யவேண்டும் என்று கேட்கின்றபோது,
பவுல் அவரிடம், "ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை
கொள்ளும்; அப்பொழுது நீரும் உன் வீட்டாரும் மீட்படைவீர்கள்" என்கின்றார்.
இங்கு நாம் கவனிக்கவேண்டிய முக்கியான விடயம், மீட்பு பெறுவதற்கான
வழியாகப் பவுல் விருத்தசேதனத்தை முன்னிலைப்படுத்தவில்லை. மாறாக
இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கையை முன்னிலைப்படுத்துகின்றார்.
ஆகையால், நாம் மீட்பு பெறுவதற்கு இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கை,
அந்த நம்பிக்கைக்கேற்ற வாழ்க்கை மிகவும் தேவையானது என்பதை நாம்
புரிந்துகொள்ளவேண்டும்.
சிந்தனை
'உன்னால் முடிந்தவற்றை நீயே செய். உன்னால் முடியாதவற்றிற்காக
இறைவேண்டல் செய்' என்பார் அகுஸ்தினார். ஆதலால், நாம் பவுலைப்
போன்றும் சீலாவைப் போன்று நமது இக்கட்டான வேளையில் இறைவனிடம்
மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 16: 5-11
"நான் போவதால் நீங்கள் பயனடைவீரர்கள்"
நிகழ்வு
ஒருநாள் இரவுவேளையில் பால் பிராண்ட் (Paul Brand) என்ற இறைஊழியர்
சிறிய அளவில் இருந்த மக்களுக்குப் போதித்துக்கும்போது, 'உங்கள்
ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது உங்கள் நற்செயல்களைக் கண்டு
உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்" (மத் 5: 16)
என்ற இறைவார்த்தையை மையமாக வைத்துப் போதித்துக்
கொண்டிருந்தார். அதுவோ மின்சார வசதி இல்லாத காலம். எனவே சிம்னி
விளக்கின் வெளிச்சத்தில்தான் அவரால் போதிக்க முடிந்தது. நேரம்
போகப் போக, சிம்னி விளக்கில் இருந்த எண்ணெய் தீர்ந்துபோய் விளக்கு
அணைந்துபோனது. அதைத் தொடர்ந்து அவ்விளக்கில் வைக்கப்பட்டிருந்த
திரியிலிருந்து புகைவரத் தொடங்கியது.
இதைப் பார்த்துவிட்டு பால் பிராண்ட் என்ற அந்த இறை ஊழியர் தனக்கு
முன்பாக இருந்த மக்களைப் பார்த்து இவ்வாறு சொன்னார்: "இந்தச்
சிம்னி விளக்கில் இருக்கும் திரி என்பது மனிதராகிய நாம். அதிலுள்ள
எண்ணெய் இந்த உலக செல்வங்கள், வாய்ப்பு வசதிகள்... எவர் ஒருவர்
தன்னையும் இந்த உலக செல்வங்களையும் நம்பிப் பணிசெய்கின்றாரோ,
அவர் இந்த சிம்னி விளக்கைப் போன்று விரைவில் அணைந்துபோவார்.
மாறாக எவர் ஒருவர் தூய ஆவியாரில் வேரூன்றி, அவரை நம்பிப் பணிசெய்கின்றாரோ
அவர் என்றைக்கும் நிலைத்து நிற்பார்." (Source: '750 Engaging
Ilustration for Preachers, Teachers and Writers' Craig Brian
Larson)
மேலே சொல்லப்பட்ட நிகழ்வு, இறைப்பணியை செய்யும் ஒவ்வொருவரும்
தூய ஆவியாரின் துணியை நம்பிப் பணிசெய்வதன் முக்கியத்துவத்தைக்
குறித்து மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. இன்றைய நற்செய்தி
வாசகமும் தூய ஆவியாரின் வருகையைக் குறித்தும் அவருடைய வருகையினால்
நடைபெறும் சில முக்கியமான பணிகளைக் குறித்தும் எடுத்துச்
சொல்கின்றது. நாம் அதை குறித்து இப்பொழுது சிந்தித்துப்
பார்த்து நிறைவுசெய்வோம்.
தூய ஆவியாரின் வருகையை உறுதிசெய்யும் இயேசு
இயேசு இந்த உலகத்தை விட்டு அல்லது தன்னுடைய சீடர்களை விட்டுப்
போவதற்கு முன்பாக, அவர்களுக்குப் பல காரியங்களைக் குறித்துப்
பேசுகின்றார். அதில் முக்கியமான ஒரு காரியம்தான் 'தூய ஆவியாரின்
வருகை' ஆகும். இயேசு தூய ஆவியாரின் வருகையைக் குறித்து இலைமறைக்
காயமாக முன்னமே (இன்னும் சிறிதுகாலமே உங்களோடு இருப்பேன் யோவா
13: 33, 36) எடுத்துச் சொன்னாலும், இங்கு மிகத் தெளிவாக, மிக
வெளிப்படையாக, "நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான்
போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார்" என்று எடுத்துரைக்கின்றார்.
அவர் சொன்னதுபோன்றே, இயேசு இவ்வுலகத்தை விட்டுச் சென்றபிறகு
தூய ஆவியார் சீடர்கள்மீது இறங்கி வருகின்றார்.
தூய ஆவியாரின் வருகைக்குப் பின் நடப்பது என்ன?
தூய ஆவியாரின் வருகையை உறுதிசெய்யும் இயேசு, அவர் வந்தபிறகு என்னென்ன
செய்வார் என்பதை அழகாக எடுத்துக்கூறுகின்றார். தூய ஆவியார் வந்தபிறகு
மூன்று முக்கியமான காரியங்கள் நடப்பதாக இயேசு கூறுகின்றார்.
அதில் முதலாவது காரியம், மக்களின் அவநம்பிக்கையைக்
சுட்டிக்காட்டி, அவர்களை இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்வதாகும்.
இயேசு இவ்வுலகிற்கு வந்தபோது, மக்கள் அவரை இறைமகனாக ஏற்றுக்கொள்ளவில்லை
(யோவா 1:11) அவரிடம் நம்பிக்கை கொள்ளவும் இல்லை. எனவே, இந்த நம்பிக்கையற்ற
போக்கை பாவம் என்று சுட்டிவிட்டு, மக்களை இயேசுவின்மேல் நம்பிக்கைகொள்ள
வைப்பார் தூய ஆவியார். தூய ஆவியாரின் வருகைக்குப் பின் நடக்கின்ற
இரண்டாவது காரியம், ஆண்டவர் இயேசு மெய்யாகவே உயிர்த்துவிட்டார்
என்பதை மக்களுக்கு எடுத்துரைப்பதாகும். இயேசு சிலுவையில் அறைந்து
கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சீடர்கள் அறைக்குள் தங்களை அடைத்துக்கொண்டு
இருந்தார்கள் (யோவா 21:1) இப்படிப் பயந்து நடுங்கிக்கொண்டிருந்த
சீடர்கள்மேல் தூய ஆவியார் இறங்கிவருகின்றார். அதன்பின் அவர்கள்
இயேசு உண்மையாகவே உயிர்த்துவிட்டார், இதற்கு நாங்கள் சாட்சிகள்
என்று உரக்கச் சொல்கின்றார்கள். இத்தகைய ஒரு காரியம் தூய ஆவியாரின்
வருகைக்குப் பின்னே நடக்கின்றது.
தூய ஆவியாரின் வருகைக்குப் பின் நடக்கின்ற மூன்றாவது காரியம்,
இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றுவிட்டான் என்று எடுத்துரைக்கப்படும்.
இத்தகைய செயல் பவுலடியார் வழியாக நடக்கின்றது. இதைத் தூய பவுல்
கொரிந்தியர்க்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறுகின்ற "சாவே
கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும்" (1கொரி 15: 26) என்ற
வார்த்தைகளில் கண்டுகொள்ளலாம். ஆகவே, இதுபோன்ற காரியங்கள் தூய
ஆவியாரின் வருகைக்குப் பின் நடந்தேறும் என்பதை நாம்
புரிந்துகொண்டு இறைத்திருவுளத்திற்கு ஏற்றாற்போல் வாழ்வது நல்லது.
சிந்தனை
'தூய ஆவியாரின் துணையின்றி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது' என்பார்
சார்லஸ் ஸ்பெர்ஜியோன் என்ற அறிஞர். ஆகவே, நாம், நமக்குத்
துணையாக இருக்கும் தூய ஆவியாரின்மீது நம்பிக்கை வைத்து, இறைப்பணியை
சிறப்பாகச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
அனைத்தையும் கற்றுத்தரும் தூய ஆவியார்
சில ஆண்டுகளுக்கு முன்பாக வட கிழக்கு இந்தியாவிள்ள பழங்குடி மக்களுக்கு
மத்தியில் மறைபோதகப் பணியைச் செய்து வந்த அருட்பணியாளர் ஒருவர்,
தவக்காலத்தின் ஒரு நாளில் அவர்களுக்கு "Passion of Christ" என்ற
திரைப்படத்தைப் போட்டுக் காண்பித்து, இயேசுபட்ட பாடுகளை அவர்களுக்கு
அவர்களுடைய மொழியில் அவர் விளக்கிக்கொண்டிருந்தார்.
திரைப்படத்தில் இயேசு சிலுவையில் அறைப்படும் காட்சியைப்
பார்த்துவிட்டு ஒருவர், "இயேசுவே இந்தக் கொடிய சிலுவை மரணம்
நான் படவேண்டியது, எனக்காக நீர் படுகிறாரா?, உமக்கு இது வேண்டவே
வேண்டாம்" என்று சொல்லி அவர் இயேசுவைச் சிலுவையிலிருந்து இறக்கி
விட ஓடினார். ஆனால், இது திரைப்படம் என்று அருட்பணியாளர் அவருக்கு
விளக்கிச் சொன்னதும் அவர் அமைதியானார்.
இப்போதுதான் நாம், ஒருபாவமும் அறியாத இயேசுவை யூதர்கள்
சிலுவையில் அறைந்து கொன்றது மிகப்பெரிய குற்றம் சென்று
நினைக்கின்றோம். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக யூதர்கள்
இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றது சரியென்றே நினைத்தார்கள்.
இத்தகைய ஒரு (மன) மாற்றத்திற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது
தூய ஆவியே என்பதுதான் நம்முடைய சிந்தனையில் வைக்கவேண்டிய ஒன்றாக
இருக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தூய ஆவியைக் குறித்துப்
பேசுகின்றார். அப்படிப் பேசுகின்றபோது அவர் சொல்லக்கூடிய
செய்தி, "தூய ஆவியானவர் வந்து, பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை
பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார்"
என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், தூய ஆவியானவர்
நமக்கு அனைத்தையும் கற்றுத் தந்து முழு உண்மையை நோக்கி நடத்திச்
செல்வார் என்று புரிந்துகொள்ளலாம்.
யூதர்கள் ஆண்டவர் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்வது/ கொன்றது
சரியே என்று நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால் பெந்தகோஸ்தே
நாளில் தூய ஆவியானவர் சீடர்கள் மீது இறங்கி வர அவர்கள்,
"கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவிப்பின்படியும்
இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம்
அறியாதவர் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள்" என்று
அறிவித்தபோது, யூதர்கள் தங்களுடைய குற்றங்களை உணர்ந்தவர்களாய்,
"நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்கிறார்கள். உடனேதான்
பேதுரு அவர்களிடம், "நீங்கள் மனம்மாறி ஆண்டவர் இயேசுவின் பெயரால்
திருமுழுக்குப் பெறுங்கள்" என்கிறார் (திப 2:23, 37-39). ஆகையால்,
யூதர்களின் இத்தகைய மனமாற்றத்திற்கு தூய ஆவியானவர்தான் அடிப்படைக்
காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
பல நேரங்களில் நாமும்கூட இது பாவம் கிடையாது, இது ஒன்றும் அவ்வளவு
பெரிய தவறு கிடையாது என்று ஏராளமான தவறுகளைச் செய்வோம், ஆனால்
நம்முடைய உள்ளத்தில் இருக்கும் தூய ஆவியானவரோ நாம் செய்வது தவறுதான்
என்று உணர்த்துவார். இதுவே தூய ஆவியானவர் பாவம் குறித்த நம்முடைய
எண்ணங்கள் தவறு என்று உணர்த்துகின்றார் என்பதற்கு மிகச் சிறந்த
சான்றாக இருக்கின்றது.
அடுத்ததாக தூய ஆவியானவர், உலகத்தவர் நீதிபற்றி கொண்டிருக்கின்ற
கருத்துகளும் தவறானவை என்று எடுத்துரைப்பார் என்கிறார் இயேசு.
இந்த உலகம் எல்லாரையும் சமமாகப் பார்க்கவேண்டும் என்று சொல்கிறது.
ஆனால், விவிலியமோ எல்லாரையும் சமமாகப் பார்க்கும் அதே வேளையில்
ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் இன்னும் சிறப்புக் கவனம் கொடுக்கவேண்டும்
என்று சொல்கிறது (மத் 20: 1-16). இத்தகைய தெளிவை தூய ஆவியானவர்
மக்களுக்குத் தருவார் என்கிறார் இயேசு.
நிறைவாக, தூய ஆவியானவர் வருகின்றபோது அவர், தீர்ப்பு பற்றி
உலகத்தவர் கொண்டிருக்கின்ற கருத்துகளும் தவறானவை என்று எடுத்துரைப்பார்
என்கிறார் இயேசு. தீர்ப்பளிக்கின்ற அதிகாரம் கடவுள் ஒருவருக்கு
மட்டுமே உரித்தானது, மனிதர் எவருக்கு அத்தகைய அதிகாரம்
கிடையாது. ஆனால், வேடிக்கை என்னவென்றால், தீர்ப்பு அளிக்கின்ற
ஒருவரையே, தீர்ப்புக்கு உள்ளாக்குகிறார்கள். பின்னாளில் இதுவும்
தவறு என்று தூய ஆவியார் எடுத்துரைக்கின்றார். ஆகவே, தூய ஆவியின்
வருகையினால் நாம் முழு உண்மையை அறிந்துகொள்வோம் என்பதுதான்
நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
நிறைய நேரங்களில் நாம் நினைத்துதான் சரி, நாம் செய்வதுதான் சரி
என்று சொல்வோம். இத்தகைய தருணங்களில் நாம் தூய ஆவியின் துணியை
அழைப்பது நல்லது. அவர் நமக்கு உண்மையைச் சுட்டிக்காட்டுவார்.
ஆகவே, ஆண்டவர் இயேசு நமக்குக் கொடையாகத் தந்திருக்கும் தூய ஆவியானவர்
நம்முள்ளே செயல்பட அனுமதிப்போம். அதன்வழியாக இறைவனுக்கு உகந்த
வழியில் நடப்போம்; இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
முதல் வாசகம் (திப 16:22-34)
தன்மாண்பு
நாம ஒரு பக்கம் வண்டிய திருப்புனா, அது இன்னொரு பக்கம் போகுது!
என்ற நிலை திருத்தூதர்கள் பவுலுக்கும், சீலாவுக்கும் கூட வருகின்றது.
பிலிப்பி நகரில் பவுலும், சீலாவும் பணி செய்துகொண்டிருக்கின்றனர்
(காண். திப 16:16-40). குறி சொல்லும் ஆவியைக் கொண்டிருந்த ஓர்
அடிமைப்பெண் இவர்களை யார் என்று அறிந்து, இவர்களின் அடையாளத்தை
வெளிப்படுத்துகிறார்: 'இவர்கள் உன்னத கடவுளின் பணியாளர்கள்.
மீட்பின் வழியை உங்களுக்கு அறிவிக்கிறவர்கள்.' பவுல் மற்றும்
சீலாவைப் பற்றிய நல்ல வார்த்தைகளே இவை என்றாலும், பவுல் கோபப்பட்டு
இவரிடமிருந்து ஆவியை விரட்டி விடுகின்றார். ஆவி போய்விட்டதால்
இவரை அடிமையாக வைத்து வேலை பார்த்து வந்த தலைவருக்கு வருவாய்
போய்விட்டது. கோபமும், பொறாமையும் கொண்ட அவர், திருத்தூதர்களுக்கு
எதிராக கலக்கம் உருவாக்க, பவுலும், சீலாவும் சிறையிடப்படுகின்றனர்.
சிறையிடப்பட்ட இரவில் இவர்கள் இறைவனைப் புகழ்ந்து
பாடிக்கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டு, கதவுகள் உடைகின்றன.
கைதிகள் தப்பித்திருக்கலாம் என நினைக்கிற சிறைத்தலைவர் தற்கொலை
செய்து கொள்ள முயற்சி செய்கிறார். 'நாங்கள் இங்கேதான் இருக்கிறோம்!
உமக்குத் தீங்கு எதுவும் செய்து கொள்ளாதீர்!' என்று பவுல் ஆறுதல்
சொல்ல, அவசர அவசரமாக வந்த அவர், 'பெரியோரே, மீட்படைய நான் என்ன
செய்ய வேண்டும்?' என்கிறார்.
இதற்கிடையில் பவுலும், சீலாவும் போகலாம் என அறிவிக்கப்பட, 'உரோமைக்குடிமக்களை
இப்படியா தொந்தரவு செய்வது?' என்று எதிர்கேள்வி கேட்கின்றார்
பவுல்.
இவர்கள் உரோமைக்குடிகள் என்றவுடன் பதறியடித்து வந்த தலைமை அதிகாரிகள்
இவர்களிடம் மன்னிப்பு வேண்டுகின்றனர்.
சிறைக்கதவுகள் திறந்திருந்தும் பவுலும், சீலாவும் ஏன் வெளியே
போகவில்லை?
இதை நான் காந்தியின் அகிம்சை அல்லது சத்தியாகிரகத்தோடு ஒப்பிட
விழைகிறேன்.
நம்மை அழிக்க நினைக்கும் எதிரியிடமிருந்து தப்பி ஓடாமல்,
நேருக்கு நேர் நின்று நம் உரிமை நிலைநாட்டப்படும் வரை இறங்கிவராமல்
இருப்பதுதான் அது.
மேலும், திருத்தூதர்கள் தங்கள் வாழ்வில் முதன்மையானது என்பதை
அறிந்து வைத்திருந்தனர். சிறையிலிருந்து தப்புவது முக்கிமல்ல.
'கதவு திறந்து கிடந்தது. நாங்கள் வந்தோம்' என சூழ்நிலைக் கைதிகளாக
அவர்கள் தங்களை நினைக்கவில்லை. தப்பி ஓடாமல் இருந்ததால்
சிறைக்காவலரின் குடும்பமே மனமாற்றம் அடையவும், தலைவர்கள் தங்கள்
தவற்றை ஒப்புக்கொள்ளவும் செய்கின்றனர்.
வளைந்து கொடுக்காத இந்த தன்மாண்பு நமக்கு நல்ல பாடம்.
- Rev. Fr. Yesu Karunanidhi.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5