Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         27 மே 2019  
                              பாஸ்கா காலம் 6ம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 11-15

பவுல், சீலா, திமொத்தேயு, லூக்கா ஆகிய நாங்கள் துரோவாவிலிருந்து கப்பலேறிச் சமொத்திராக்கு தீவுக்கும், மறு நாள் நெயாப்பொலி நகருக்கும் நேராகச் சென்றோம்; அங்கிருந்து மாசிதோனியப் பகுதியின் முக்கிய நகரான பிலிப்பி சென்றோம். அது உரோமையரின் குடியேற்ற நகரம். அந்நகரில் சில நாள்கள் தங்கியிருந்தோம்.

ஓய்வுநாளன்று நாங்கள் நகர வாயிலுக்கு வெளியே வந்து ஆற்றங்கரைக்குச் சென்றோம். அங்கு இறைவேண்டல் செய்யும் இடம் ஏதேனும் இருக்கும் என்று எண்ணி அமர்ந்து, அங்கே கூடியிருந்த பெண்களோடு பேசினோம்.

அங்குத் தியத்திரா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் பெயர் லீதியா. செந்நிற ஆடைகளை விற்பவரான அவர் கடவுளை வழிபட்டுவந்தார். பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார். அவரும் அவர் வீட்டாரும் திருமுழுக்குப் பெற்றனர். அதன்பின் அவர் எங்களிடம், "நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால் என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்" என்று கெஞ்சிக் கேட்டு எங்களை இணங்கவைத்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா.

1 அல்லேலூயா! ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! பல்லவி

3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையில் உள்ள அவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைப்படுத்துவார். பல்லவி

5 அவருடைய அன்பர் மேன்மை அடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக! 6a அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; 9b இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 26b. 27a

அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 26 - 16:4

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள். நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இவற்றையெல்லாம் உங்களிடம் சொன்னேன்.

உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப் பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது.

தந்தையையும் என்னையும் அவர்கள் அறியாமல் இருப்பதால்தான் இவ்வாறு செய்வார்கள். இவை நிகழும் நேரம் வரும்போது நான் உங்களுக்கு இவை பற்றி முன்பே சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதற்காகவே இவற்றை உங்களிடம் கூறினேன்."


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 யோவான் 15: 26-16:4

துணையாளர் வருவார்

நிகழ்வு

மிகப்பெரிய மறைபோதகரான ஹெர்பர்ட் ஜாக்சன் (Herbert Jackson) தன்னுடைய மறைப்பணியைத் தொடங்கிபோது போக்குவரத்திற்கு வசதியாக மேலிடத்திலிருந்து ஒரு பழைய நான்கு சக்கர வாகனம் கொடுக்கப்பட்டது. நான்கு சக்கர வாகனம் கொடுக்கப்பட்டதை நினைத்து அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

ஆனால், அதில் ஒரு சிக்கல் இருந்தது. அது என்னவென்றால், வண்டியை யாராவது பின்னாலிருந்து தள்ளினால்தான் அது அங்கிருந்து நகரும். இல்லையென்றால் அது ஓர் அடிகூட முன்னால் நகராது. இதனால் அவர் பணித்தளங்களுக்கோ அல்லது வேறு எங்காவது வெளியே செல்ல நேர்ந்தால், பக்கத்திலிருந்த பள்ளிக்கூடத்திலிருந்து மாணவர்களை உதவிக்கு அழைத்து. அவர்களை வண்டியைப் பின்னாலிருந்து தள்ளச் சொல்லி பயணத்தைத் தொடங்குவார். போகிற இடத்திற்குப் போய்விட்டுத் திரும்பி வருகின்றபோதும் அப்படித்தான் யாரையாவது தள்ளச் சொல்லி, வண்டியை ஓட்டிக்கொண்டு வருவார்.

இப்படியே இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் நடந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் வேறோர் இடத்திற்கு மாற்றலாகிப் போனார். அப்படிப்போகும்போது அவருடைய இடத்திற்கு இன்னொரு மறைப்பணியாளர் வந்தார். அப்பொழுது அவர் அந்தப் புதிய மறைப்பணியாளரிடம், வண்டியில் உள்ள சிக்கலை எடுத்துச் சொன்னபோது, புதிய மறைப்பணியாளர் அந்த வண்டியை ஓட்டிப் பார்த்தார். அப்பொழுதுதான் அந்த வண்டியில் ஒரு வயர் தொய்வடைந்து இருப்பது தெரியவந்து. உடனே அவர் அந்த வயரைச் சரிசெய்துவிட்டது, வண்டியை ஓட்ட, வண்டியானது யாருமே உதவியுமின்றி அவ்வளவு சிறப்பாக ஓடியது.

இந்த நிகழ்வில் வரும் ஹெர்பர்ட் ஜாக்சன் எப்படி தன்னிடம் கொடுக்கப்பட்ட வண்டியின் மகத்துவம் புரியாமல், அதைப் பிறருடைய உதவியுடன் ஓட்டிகொண்டு இருந்தாரோ, அதுபோன்றுதான் நாமும் தந்தயைக் கடவுளிடமிருந்து இயேசு நமக்கு அனுப்பிய தூய ஆவியாரின் வல்லமையை உணர்ந்துகொள்ளாமலே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இப்படிப்பட்ட சூழநிலையில் இன்றைய நற்செய்தி வாசகம் தூய ஆவியாரின் துணையையும் அவருடைய வல்லமையையும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. எனவே, நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

தூய ஆவியாராம் துணையாளர்

யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, தூய ஆவியார் எப்படிப்பட்டவர் என்பதையும் அவருடைய வருகை தன்னுடைய சீடர்களுக்கு எப்படியெல்லாம் பேருதவியாக இருக்கும் என்பதையும் குறித்து மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார்.

இயேசு, தூய ஆவியாரைக் குறித்துப் பேசும்போது அவர் துணையாளர் என்று குறிப்பிடுகின்றார். அப்படியானால் இயேசுவின் பணியைச் செய்கின்ற இறைப்பணியைச் செய்கின்ற - ஒவ்வொருவருக்கும் எல்லாவிதத்திலும் எல்லாநேரமும் துணையாக இருப்பார் என்று புரிந்துகொள்ளலாம். பலர் நம்மிடம், 'நான் உனக்கு எப்போதும் துணையாக இருப்பேன்' என்று சொல்லக் கேட்டிருப்போம். அவர்கள் அப்படித் துணையாக இருந்தார்களா? என்பது கேள்விக்குறிதான். ஆனால், இயேசு, தந்தைக் கடவுளிடமிருந்து அனுப்பப் போகிற தூயஆவியார் நமக்குத் துணையாளராக இருப்பார்; நமக்காகப் பரிந்து பேசுவார் (உரோ 8:27). ஆகவே, தூய ஆவியார் நமக்கு எப்போதும் துணையார் இருப்பார் என்ற நம்பிக்கையுடன இறைப்பணியைச் செய்வது நன்மை பயக்கும்.

இயேசுவைக் குறித்து சான்று பகரும் நம்மையும் சான்றுபகரத் தூண்டும் தூய ஆவியார்

தூய ஆவியாரைத் 'துணையாளர்' என்று சொன்ன இயேசு, தொடர்ந்து சொல்லக்கூடிய வார்த்தைகள்தான், "அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்."

தொடக்ககாலத் திருஅவையில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் ஆட்சியாளர்கள், அதிகாரிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தார்கள். குறிப்பாக யூதர்களாக இருந்தவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபிறகு, நற்செய்தியில் இயேசு குறிப்பிடுவதுபோன்று தொழுகைக்கூடங்கிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்; கடுமையாகச் சித்ரவதை செய்துல்லப்பட்டார்கள். இப்படிப்பட்ட சமயத்தில் யார் யாரெல்லாம் தன்னுடைய பணியைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு தூய ஆவியார் துணையாக இருந்து, தன்னைப் பற்றிச் சான்றுபகர்வதற்கு உறுதுணையாக இருப்பார் என்று குறிப்பிடுகின்றார் இயேசு. எனவே இறைப்பணி செய்யகூடிய ஒருவர் அல்லது நாம் தூய ஆவியாரின் உடனிருப்பை உணர்ந்து, இறைப்பணியைச் செய்தால் மிகச் சிறப்பாகச் செய்யலாம் என்று உறுதி.

சிந்தனை

'தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழுங்கள்' என்பார் பவுல் (கலா 5:16). தூய ஆவியார் துணையாளர்தான், இயேசுவைப் பற்றிச் சான்று பகரச் செய்பவர்தான். அதே நேரத்தில் நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழவேண்டும். அப்போதுதான் நாம் இறைப்பணியை சிறப்பாக, செவ்வனே செய்யமுடியும். ஆகவே, தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்ந்து, இறைப்பணியைச் செவ்வனே செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
திருத்தூதர் பணிகள் 16: 11-15

ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார்

நிகழ்வு

ராபர்ட் எம். சாலமோன் எழுதிய 'A Feast for Soul' என்ற நூலில் இடம்பெறும் நிகழ்வு இது. மிகப்பெரிய மறைபோதகரும் மெதடிஸ்ட் திருஅவையின் நிறுவனருமான ஜான் வெஸ்லி (1703 -1791) ஒருநாள் தன்னுடைய நற்செய்திப் பணியை முடித்துக்கொண்டு தன்னுடைய இடத்திற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். அது இரவு நேரம்.

அப்பொழுது ஒரு திருடன் அவரை வழிமறித்து, அவரிடமிருந்த பணத்தையெல்லாம் பறித்துக்கொண்டு யாரும் பார்ப்பதற்குள் வேகமாக ஓட முயன்றான். ஜான் வெஸ்லி அவனைத் தடுத்து நிறுத்தி, "சகோதரா! ஒரு நிமிடம் நில். நான் சொல்வதைக் கேட்டுவிட்டு, அதன்பிறகு போகலாம்" என்றார். திருடனும் அவர் சொன்னதை கேட்டு நின்றான். "என்றாவது ஒருநாள் நீ வாழ்ந்துகொண்டிருக்கின்ற இவ்வாழ்க்கை மிகவும் தவறானது என்பதை உணர்வாய். அப்பொழுது 'இயேசுவின் இரத்தம் நம் பாவங்கள் அனைத்தையும் கழுவிப் போக்கிவிட்டது' என்பதை நினைத்துக்கொள்" என்றார். அவனும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு ஓடி ஒளிந்தான்.

ஆண்டுகள் பல உருண்டோடின. ஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலை வேளையில், ஜான் வெஸ்லி வழிபாட்டை முடித்துகொண்டு, ஆலயத்தை விட்டு வெளியே வந்தபோது, புதியவர் ஒருவர் வந்து அவரைச் சந்தித்தார். "என்னை நியாபகம் இருக்கின்றதா?" என்றார் வந்தவர். ஜான் வெஸ்லி அவரை மேலும் கீழும் பார்த்தபோது வந்தவர் பேசத் தொடங்கினார்: "ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பாக ஓர் இரவு வேளையில் உங்களிடமிருந்த பணத்தை எல்லாம் பறித்துக்கொண்டு ஓடினானே ஒரு திருடன். அந்தத் திருடன்தான் நான். உங்களிடமிருந்து பணத்தைப் பறித்துக்கொண்டு போன ஓரிரு நாட்கள் கழித்து, நீங்கள் சொன்ன வார்த்தைகளைக் குறித்து ஆழமாக சிந்தித்துப் பார்த்தான். அதன்பிறகுதான் நான் வாழ்ந்துகொண்டிருப்பது பாவமான வாழ்க்கை என்பதை உணர்ந்தேன். அதன்பிறகு நான் திருந்தி நடக்கத் தொடங்கினேன். இன்றைக்கு நான் பக்கத்து நகரில் ஒரு மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு நீங்கள்தான் காரணம்."

அந்த மனிதர் சொன்னதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த ஜான் வெஸ்லி, "உன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு நான் அல்ல, இயேசுவே காரணம்" என்றார். பின்னர் அவர், தன்னுடைய பாவ வாழ்க்கையிலிருந்து மனம்மாறி, புதியதொரு வாழ்க்கையை வாழத் தொடங்கிய அந்த மனிதர்க்கு ஆசிகூறி, அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்வில் வரும் மனிதரை ஆண்டவராகிய கடவுள், ஜான் வெஸ்லி வழியாக எப்படி உள்ளத்தைத் திறந்து, புதியதொரு வாழ்க்கை வாழ வழிவகுத்தாரோ அதுபோன்று, இன்றைய முதல் வாசகத்திலும் பவுல் வழியாக ஆண்டவராகிய கடவுள் ஒருவருடைய உள்ளத்தைத் திறந்து புதியதொரு வாழ வழிவகுக்கின்றார். அவர் யார்? அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

பவுலின் வழியாக லீதியாவின் உள்ளத்தைத் திறந்த ஆண்டவர்

பவுலும் திமொத்தேயும் அவரோடு லூக்காவும் மாசிதோனியாவில் உள்ள முக்கியமான நகரமான பிலிப்பிக்குச் சென்று, ஓர் ஓய்வுநாளில் நகர்க்கு வெளியே இறைவேண்டல் செய்வதற்காக ஏதேனும் இடமிருக்கின்றதா என்று அங்கிருந்த பெண்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, பவுலின் பேச்சைக் கேட்டுகொண்டிருந்த தியத்திரா நகரைச் சார்ந்த லீதியா என்ற பெண்மணியின் உள்ளத்தை ஆண்டவர் திறக்கின்றார்.

'அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்' (உரோ 10:17) என்ற பவுலின் வார்த்தைக்கு ஏற்ப, பவுல் பேசியதை அல்லது அவர் அறிவித்ததைக் கேட்டு தியத்திரா நகரைச் சார்ந்த லீதியாவின் உள்ளத்தில் நம்பிக்கை பிறக்கின்றது. இந்த லீதியா செந்நிற ஆடைகளை விற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆண்டவரை ஏற்றுக்கொண்ட பிறகு லீதியாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம்

பவுலின் வழியாக ஆண்டவரை ஏற்றுக்கொண்ட லீதியா தன்னுடைய குடும்பத்தினரோடு சேர்ந்து திருமுழுக்குப் பெறுகின்றார். இதற்குப் பின்பு திருத்தூதர்கள் தெசலோனிக்காவிற்குச் செல்லும் வரையில் (திப 16: 40-17:1) அவர்களுக்குத் தன்னுடைய வீட்டில் விருந்து கொடுத்து உபசரிக்கின்றார். மட்டுமல்லாமல் கடைசிவரைக்கும் ஆண்டவர்க்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து, புனிதையாக மாறுகின்றார் என்று மரபுகள் கூறுகின்றது. இவருடைய விழா ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் திங்கள் மூன்றாம் நாள் கொண்டாடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியானால், ஆண்டவருடைய நற்செய்தியை ஒருவர்க்கு எடுத்துரைக்கும்போது அது அவருடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இதன்வழியாக நாம் புரிந்துகொள்ளலாம்.

சிந்தனை

'எல்லா மக்களினத்தவர்க்கும் முதலில் நற்செய்தி அறிவிக்கப்படவேண்டும்' (மாற் 13:10) என்பார் இயேசு. ஆகவே, ஆண்டவர் இயேசுவின் இவ்வார்த்தைக்கு இணங்க ஆண்டவரின் நற்செய்தியை எல்லார்க்கும் அறிவித்து, அவர்களை ஆண்டவரிடம் கொண்டு வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்

தூய அந்தோனியார் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. தூய அந்தோனியார் தவக்காலம் தொடங்கி, தூய ஆவியார் பெருவிழா வரை, ஊர்கள்தோறும் சென்று மறையுரை ஆற்றிவந்தார்.

பெராரா என்ற இடத்தில் அவர் மறையுரை ஆற்றிக்கொண்டிருக்கும்போது இளம்பெண் ஒருத்தி, அந்தோனியாரின் காலடிகளில் விழுந்து கதறியழுதார். "அந்தோனியாரே! என்னுடைய கணவர், நான் அவருக்குப் பெற்றெடுத்த குழந்தையின்மீது சந்தேகப்படுக்கின்றார். நான் என்னுடைய கணவருக்கு உண்மையாக நடந்துகொள்பவள். அப்படி இருக்கும்போது அவர் ஒவ்வொருநாளும் என்மீது சந்தேகம்கொள்வது எனக்கு மிகப்பெரிய வேதனையாக இருக்கிறது" என்று சொன்னதும், அந்தோனியார் அவள்மீது இரக்கம்கொண்டு அவருடைய வீட்டிற்குச் சென்றார்.

அங்கே அவளுடைய கணவன் இருந்தான். அவன் அவ்வூரில் பெரிய பணக்காரன் போன்று இருந்தது. அவன் தன்னுடைய பங்குக்கு அந்தோனியாரிடம் முறையிட்டான், "அந்தோனியாரே பாருங்கள்! நானோ சிகப்பு, என்னுடைய மனைவியும் சிகப்பு. அப்படி இருக்கும்போது என்னுடைய குழந்தை மட்டும் கருப்பாய் இருந்தால், நான் என்னுடைய மனைவியின்மீது சந்தேகம் கொள்ளாமல் என்ன செய்வது?" என்றான்.

உடனே அந்தோனியார் அந்தக் குழந்தையைத் தன்னிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அந்தக் குழந்தையை மேலே தூக்கிப்போட்டு, "குழந்தையே! ஆண்டவரின் இயேசுவின் பெயரால் உனக்குச் சொல்கிறேன். உன்னுடைய தந்தை யாரென்று நீ எங்களுக்குக் காட்டு" என்றார். அப்போது அந்தக் குழந்தை தன்னுடைய உண்மையான தந்தையின் பக்கம் கைகாட்டி அதாவது அந்த இளம்பெண்ணின் கணவரைச் சுட்டிக் தன்னுடைய தந்தை யாரென்று எல்லாருக்கும் வெளிப்படுத்தியது.

அப்போது அந்த இளம்பெண்/ அந்தோனியாரின் பக்தை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவள் அந்தோனியாருக்கு நன்றிசெலுத்தினாள். அதன்பின்னர் அந்த இளம்பெண்ணின் கணவர் குழந்தையையும், அதனுடைய தாயையும் நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டு மகிழ்வோடு வாழ்ந்தான்.

இறைவன்/ தூய ஆவி இக்கட்டான நேரத்திலும் உண்மையை வெளிப்படுத்தி, நமக்கு உதவி புரிவார் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம், "தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து, உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்; அவர் வரும்போது என்னைப்பற்றி சான்று பகர்வார்" என்கிறார்.

துணையாளர் என்னும் தூய ஆவியார் கடவுள் நமக்குக் கொடுத்த மிகப்பெரும் கொடை. அவர் உண்மையை வெளிப்படுத்துபவராக இருக்கிறார். இன்றைக்கு எது உண்மை? எது பொய்? என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பொய்மை, உண்மையை விழுங்கத் துடித்துக்கொண்டிருக்கிறது. இத்தகைய பின்னணியில் தூய ஆவியார் உண்மையை வெளிப்படுத்துபவராக இருக்கிறார் என்பது நமக்கு மிகப்பெரிய ஆறுதலின் செய்தியாக இருக்கின்றது.

பழைய திருவழிபாட்டுப் பாடலில் வரும் ஒரு பாடலின் வரிகள் இவை:, "என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும், புது வலுவூட்டி என்னைத் தேற்றும்" என்பது. ஆம், தூய ஆவியார்தான் நமது வாழ்வில் நாம் திக்கற்றுத் தவிக்கும் வேளையில், நமக்கு வழிகாட்டியாக, துணியாக வருகிறார். ஆகவே நாம் எப்போதும் அவர்துணை நாடிச் சென்று, அவர்காட்டும் பாதையில் நடக்கவேண்டும். அப்படி நடக்கும்போது நாம் இடறிவிழமாட்டோம். இன்னலில் தவிக்கமாட்டோம்.

அடுத்ததாக தூய ஆவியார், ஆண்டவர் இயேசுவைக் குறித்து சான்று பகர்கின்றவராகவும் இருக்கின்றார். தொடக்ககாலத் திருச்சபையில் சீடர்கள் யூதர்களுக்குப் பயந்து வாழ்ந்தபோது தூய ஆவியார்தான் அவர்களுக்கு வலிவூட்டி, கிறிஸ்துவைப் பற்றி, சான்று பகரச் செய்கிறார்.

ஆகவே, நம்முடைய வாழ்வில் தூய ஆவியின் பிரசன்னத்தை உணர்ந்து, அவர் இயேசுவுக்கு சான்று பகர்வதுபோன்று, நாமும் இயேசுவுக்கு சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 தூய ஆவியார் வரும்போது நீங்களும் சான்று பகர்வீர்கள்

நம்முடைய இந்தியத் திருநாட்டில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய மகான் சாது சுந்தர் சிங் என்பவர். தன்னுடைய பதினான்கு வயதிலேயே தாயை இழந்ததால், மிகவும் தனிமைபடுத்தப்பட்டவராய் உணர்ந்தவர், அந்த நாட்களில் எல்லாம் அவர் கிறிஸ்தவ மதத்தை மிகக்கடுமையாக விமர்சித்து வந்தார். பின்னாளில் அவரே கிறிஸ்துவின் போதனைகளால் தொடப்பட்டு மிகச் சிறந்த கிறிஸ்தவராக மாறி, கிறிஸ்துவைப் பற்றி எல்லா மக்களுக்கும் எடுத்துரைக்கத் தொடங்கினார்.

ஒருநாள் அவரைச் சந்திக்க வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பேராசிரியர் அவரிடம், "கிறிஸ்தவ மதத்தில் அப்படி என்ன புதிதாகக் கண்டு கொண்டீர்கள்?" என்று கேட்டார். அதற்கு சாது சுந்தர் சிங் அவரிடம், "நான் கிறிஸ்தவ மதத்தில் கிறிஸ்துவைக் கண்டுகொண்டேன்" என்றார். அப்பேராசிரியர் விடமால் அவரிடம், "கிறிஸ்தவ மதத்தில் புதிதாக என்ன கண்டுகொண்டீர்கள்" என்று கேட்டார். அதற்கு அவர், "கிறிஸ்தவ மதத்தில் கிறிஸ்துவைத்தான் கண்டுகொண்டேன். அவர் பிற மதத்துக் கடவுளைப் போன்று அல்ல, அவர் உயிருள்ள கடவுள், இன்றைக்கும் அவர் நம் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இன்றைக்கும் நம் மத்தியில் செயலாற்றிக்கொண்டிருக்கிறார். இதையே நான் ஒவ்வொரு நாளும் மக்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கின்றேன்" என்றார்.

சாது சுந்தர் சிங் இவ்வாறு பதிலளித்ததைக் கண்டு அந்தப் பேராசிரியர் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்.

யார் கிறிஸ்தவ மதத்தை/ கிறிஸ்துவை மிகக் கடுமையாக விமர்சித்தாரோ அவரே கிறிஸ்துவைப் பற்றி எல்லா மக்களுக்கு சான்றுபகர்வதற்கு என்பது உண்மையிலே ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம், தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்" என்கிறார். இயேசு தூய ஆவியாம் துணையாளரின் வருகையினால் நாம் அடையும் நன்மைகளைக் குறித்துப் பேசுகின்றார். அவருடைய வருகையினால் நாம் அடையும் முதலாவது நன்மை, அவருடைய துணையும் உடனிருப்புதான். ஆண்டவர் இயேசு சொன்ன, "இதோ உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருப்பேன்" (மத் 28:20 என்ற வார்த்தைகள் தூய ஆவினால் நிறைவுபெறுகின்றன. தூய ஆவினால் நாம் அடையும் இரண்டாவது நன்மை, அவர் நமக்கு உண்மையை வெளிப்படுத்துவார் என்பதாகும். மூன்றாவது நன்மை, அவர் ஆண்டவர் இயேசுவைக் குறித்து சான்று பகர்வதோடு மட்டுமல்லாமல், நம்மையும் சான்று பகரச் செய்வார் என்பதாகும். தூய ஆவியின் வருகையினால் நமக்குக் கிடைக்கும் மூன்றாவது நன்மையைக் குறித்து மட்டும் இன்றைக்கு நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தூய ஆவியின் வருகையினால் நீங்களும் (நாமும்) சான்று பகர்வீர்கள் என்று ஆண்டவர் இயேசு சொல்கிறார். ஆம், இது முற்றிலும் உண்மை. தூய ஆவியின் வருகைக்குப் பிறகும்தான் திருத்தூதர்களும் சீடர்களும் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மிகத் துணிச்சலாக அறிவித்தார்கள். நாமும் ஆண்டவர் இயேசுவைப் பற்றி நற்செய்தியை மிகத் துணிச்சலாக அறிவிக்க, அவரைக் குறித்து சான்று பகர தூய ஆவியார்தான் நமக்கு வலுவினை ஊற்றுகிறார் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

நாம் ஆண்டவர் இயேசுவைப் பற்றி சான்று பகர தூய ஆவியார் நமக்கு வலுவூட்டுகிறார் என்று சிந்தித்துப் பார்த்த நாம், சான்று பகர்தல் என்றால் என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். விவிலிய அறிஞரான வில்லியம் பார்க்லே சான்று பகர்தலில் (Witness) மூன்று முக்கிய உன்மைகள் அடங்கி இருப்பதாகச் சொல்வார். அதில் முதலாவது, நாம் இயேசு கிறிஸ்துவைக் குறித்து முழுமையாக அறிந்து வைத்திருக்கவேண்டும் என்பதாகும். மற்றவர்கள் இயேசுவைக் குறித்து சொன்ன செய்திகளை வைத்து அவருக்கு சான்று பகர முடியாது, நாமே அவரை குறித்து முழுமையாக அறிந்து வைத்திருக்கவேண்டும், அவரைக் குறித்த அனுபவம் பெறவேண்டும் அப்போதுதான் சான்று பகர்தல் என்பது மிகச் சிறப்பாக இருக்கும்.

சான்று பகர்தலில் உள்ள இரண்டாவது உண்மை, நாம் இயேசுவைப் பற்றி முழுமையாக அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல், அதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும் (Conviction), நாம் அறிந்ததில் உறுதியாக இல்லையென்றால் நம்முடைய சான்று செல்லுபடியாகாது. மூன்றாவது, நாம் செய்யவேண்டியது அறிவிப்பதாகும். இயேசுவைக் குறித்து அறிந்த நாம், அதில் உறுதியாக இருக்கின்ற நாம், அதனை அடுத்தவருக்கு அறிவிக்கவேண்டும். அப்போதுதான் சான்று பகர்தல் என்பது முழுமைபெறும். இப்படியெல்லாம் நாம் இயேசுவைக் குறித்து சான்று பகரும்போது தூய ஆவியாரின் துணை நமக்கு எப்போதும் உண்டு என்பது உறுதி.

எனவே, தூய ஆவியின் துணையால் இயேசுவைக் குறித்து எல்லா மக்களுக்கும் சான்று பகர்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!