|
|
22 மே 2019 |
|
|
பாஸ்கா காலம்
ஐந்தாம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும்
இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 1-6
அந்நாள்களில் யூதேயாவிலிருந்து வந்த சிலர், "நீங்கள் மோசேயின்
முறைமைப்படி விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் மீட்படைய
முடியாது" என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர்.
அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து
வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள்
சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும்
இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.
அங்கிருந்து திருச்சபையார் அவர்களை வழியனுப்பிவைத்தனர். அவர்கள்
பெனிசியா, சமாரியா வழியாகச் சென்று பிற இனத்தவர் மனந்திரும்பிய
செய்தியை எடுத்துரைத்தார்கள்.
இது சகோதரர், சகோதரிகள் அனைவரிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அவர்கள் எருசலேம் வந்தபோது திருச்சபையாரும், திருத்தூதர்களும்,
மூப்பர்களும் அவர்களை வரவேற்றார்கள். அப்போது கடவுள் தங்கள் வழியாகச்
செய்த அனைத்தையும் அவர்கள் அறிவித்தார்கள்.
ஆனால் பரிசேயக் கட்சியினருள் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட சிலர்
எழுந்து, "அவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும்;
மோசேயினது சட்டத்தைக் கடைப்பிடிக்க அவர்களுக்குக் கட்டளையிட
வேண்டும்" என்று கூறினர். இதனை ஆய்ந்து பார்க்கத் திருத்தூதரும்
மூப்பரும் ஒன்று கூடினர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
122: 1-2. 4-5 (பல்லவி: 1)
=================================================================================
பல்லவி: அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம். அல்லது:
அல்லேலூயா.
1 "ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்", என்ற அழைப்பை நான் கேட்டபோது
அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து
உன் வாயில்களில் நிற்கின்றோம். பல்லவி
4 ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு
இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி
செலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன.
அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 4-5b
அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல
நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடன் இணைந்திருந்தால்
அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால்
அவர் மிகுந்த கனி தருவார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "உண்மையான
திராட்சைக் கொடிநானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள
கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும்
அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார்.
நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்.
நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து
இருங்கள். கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித்
தானாகக் கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக்
கனி தர இயலாது.
நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும்
நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப்
பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர்
கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள்
கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.
நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும்
நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.
நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு
மாட்சி அளிக்கிறது."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை:
எருசலேம் அன்றைக்கு தலைமையிடமாக இருந்தது.
திருத்தூதர்கள் அங்கு இருந்து செயலாற்றினார்கள்.
இன்றைக்கு அது நீர்வாக வசதிக்காக உரோமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சபைகளில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் எருசலேமிற்கு எடுத்துச் செல்லப்பட்டு
திருதூதர்கள் அதனை ஆய்வு செய்து, தருகின்ற தீர்வினை ஏற்று பயணப்பட்டார்கள்.
இன்றைக்கு சபைகள் பிரிந்து செல்வதற்கான காரணம் நாங்கள் ஏன்
திருஅவையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி பிரிந்த
செல்லுகின்ற கூட்டம் அதிகமே.
தலைமையையேற்று ஓரு கொடியின் கிளைகளாக வாழ்வதுவே இறைமகனுக்கு
செய்யும் சிறப்பாகும்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
யோவான் 15: 1-8
நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து
இருங்கள்!
நிகழ்வு
அமெரிக்காவில் அறிஞர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவரைப் பார்ப்பதற்காகப்
பத்திரிகையாளர் ஒருவர் வந்தார். அவர் அந்த அறிஞரிடம், "ஐயா!
நீங்கள் அடிக்கடி தொடர்புகளைக் குறித்தும் இணைந்திருப்பது
குறித்தும் பேசிக்கொண்டு வருகின்றீர்கள். இந்த இரண்டுக்கும் உள்ள
வித்தியாசத்தைச் சொன்னால் நன்றாக இருக்கும்" என்றார். அறிஞர்
அவரை ஒருமுறை உற்றுப்பார்த்துவிட்டுப் பேசத் தொடங்கினார்.
"தம்பி! நீர் யார்? எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார்
அவர். 'ஐயா! நான் ஒரு பத்திரிகையாளர். தற்சமயம் நியூயார்க்கில்
வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்" என்ற அந்தப் பத்திரிகையாளர். அறிஞர்
தொடர்ந்து அவரிடம், "உன்னுடைய குடும்பத்தில் யார் யாரெல்லாம்
இருக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா?" என்று கேட்டார். "ஐயா!
என்னுடைய தாயார் சில ஆண்டுகளுக்கு இறந்துபோனார். தந்தை மட்டுமே
இருக்கின்றார். உடன் பிறந்தவர் மொத்தம் ஐந்து பேர். மூன்று சகோதரர்கள்,
இரண்டு சகோதரிகள்" என்றார் பத்திரிகையாளர்.
"சரி தம்பி! உன்னுடைய தந்தையிடம் நீ எப்போது பேசினாய்? உன்னுடைய
சகோதர சகோதரிகளோடு எப்போது நீ சேர்ந்து இருந்தாய்?" என்றார் அறிஞர்.
'இதெயெல்லாம் ஏன் கேட்கின்றார் என்பதுபோல் பத்திரிகையாளர் அந்த
அறிஞரைப் பார்த்துவிட்டுச் சொன்னார், "என்னுடைய தந்தையோடு பேசி
ஒருமாதம் இருக்கும்... என்னுடைய சகோதர சகோதரிகளோடு சேர்ந்து இருந்து
எப்படியும் மூன்று நான்கு ஆண்டுகள் இருக்கும்." பத்திரிகையாளர்
இவ்வாறு சொன்னதைத் தொடர்ந்து அறிஞர் அவரிடம், "இவற்றையெல்லாம்
நான் ஏன் உன்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்று உனக்குத்
தோன்றலாம்... நீ கேட்ட கேள்விக்கான பதிலை உங்கள் வாயிலிருந்து
வரவைக்கத்தான் இவ்வாறெல்லாம் கேள்விகள் கேட்டுக்
கொண்டிருக்கிறேன்" என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டு அவர் அந்தப் பத்திரிகையாளரிடம் பேசத் தொடங்கினார்:
"தம்பி! இப்போது நீ உன்னுடைய தந்தையோடும் சகோத சகோதரிகளோடும்
வைத்திருக்கின்றாயே, அது உறவு அல்ல, வெறும் தொடர்பு மட்டுமே.
உண்மையான உறவு என்பது மனைவியை இழந்து வாழும் உன்னுடைய தந்தையோடு
மனதால் இணைந்து வாழ்வது... சம்பிரதாயத்திற்காக சேர்ந்துவரும்
நீயும் உன்னுடைய சகோதர சகோதரிகளும் மனதால் இணைந்து இருப்பது."
அறிஞர் ஒவ்வொரு வார்த்தையாய் சொல்லச் சொல்லப் பத்திரிகையாளரின்
கண்களிலிருந்து கண்ணீர் வரத் தொடங்கியது. தொடர்புக்கும் இணைந்து
இருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொண்டவராய் பத்திரிகையாளர்,
அறிஞர்க்கு நன்றி சொல்லிவிட்டு தன் தந்தையோடும் சகோதர சகோதரிகளோடும்
இணைந்துவாழ்வதற்கு வேகமாகச் சென்றார்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் பத்திரிகையாளரைப் போன்றுதான்
பலர் தங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களோடும் சரி, கடவுளோடும்
சரி, பெயருக்குத் தொடர்பில் இருக்கிறார்கள் ஒழிய, இணைந்து இருப்பதில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய நற்செய்தி வாசகம் இறைவனோடு
இணைந்திருப்பதன் முக்கியத்துவத்தைக் குறித்துப் பேசுகின்றது.
நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து
நிறைவுசெய்வோம்.
உண்மையான திராட்சைக் கொடியாம் இயேசு
நற்செய்தியில் இயேசு, "உண்மையான திராட்சைக் கொடி நானே" என்கின்றார்.
யோவான் நற்செய்தியில் வரும் ஏழாவது மற்றும் இறுதி 'நானே எனத்
தொடங்கும் வாக்கியம் இதுதான். (I am statement). இது குறித்து
நாம் சிந்தித்துப் பார்ப்பது முன்னம், விவிலியத்தில் யார்
யாரோடெல்லாம் 'திராட்சை கொடி என்ற வார்த்தை தொடர்புபடுத்திப்
பேசப்படுகிறது என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. முதலில்
இஸ்ரயேல் மக்களோடும் (எசா 5:1 -7; திபா 8:9) அடுத்ததாக இறைவனோடு
இருந்த உறவை முறித்துக்கொள்ளும் மக்களோடும் தொடர்புபடுத்திப்
பேசிப்பேசப்படுகின்றது (திவெ 14: 14-20) நிறைவாக இயேசுவோடு தொடர்புபடுத்திப்
பேசப்படுகின்றது. இதில் உள்ள வித்தியாசம் என்னவெனில், இஸ்ரேயல்
மக்களும் சரி, கடவுளோடு உறவை முறித்துக்கொண்ட மக்களும் சரி சரியான
பலன் தரவில்லை என்பதாகும். ஆனால், ஆண்டவர் இயேசுவோ வாழ்வின் ஊற்றாக
இருக்கின்றார் (யோவா 5:26). அதனால்தான் அவர் உண்மையான
திராட்சைக் கொடியாக விளங்குகின்றார்.
கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்திருக்கவேண்டும்
விவிலியத்தில் கையாளப்படும் ஒருசில உருவகங்கள், உவமைகள் யாவும்
இணைந்திருப்பதன் அவசியத்தை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றன. ஆயன்
ஆடுகள் உருவகமாக இருக்கட்டும் (யோவா 10) உடல்-உறுப்புகள் (1
கொரி 12) உருவகமாக இருக்கட்டும் மணமகன்- மணமகள் உருவகமாக இருக்கட்டும்
(எபி 5: 25-32) இவையெல்லாம் கடவுளோடு மனிதர்கள் இணைந்திருப்பதன்
முக்கியத்துவத்தைக் குறித்து மிக அழகாக எடுத்துக் கூறுகின்றன.
திராட்சைக் கொடி-கிளைகள் உருவகமும் அப்படித்தான். கிளைகள்
திராட்சைக் கொடியோடு இணைந்திருக்காவிடில் ஒன்றும் செய்யமுடியாது.
மனிதர்களாகிய நாமும் கடவுளோடு இணைந்திராவிடில் ஒன்றும் செய்ய
முடியாது.
சிந்தனை
'என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய முடியாது'(யோவா 15:5) என்பார் இயேசு. ஆகவே, நாம் நம்முடைய வாழ்வின் எல்லாமுமாக
இருக்கும் இயேசுவோடு இணைந்திருப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
என்னோடு இணைந்திருங்கள்
இந்திய நாட்டில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய மகான் கபீர்தாசர் என்பவர்.
அவர் இந்து, முஸ்லீம் என்று பிரிந்து கிடந்தவர்களை 'இந்தியர்'என்று இணைப்பதற்கு அரும்பாடு பட்டவர். அதற்காக அவர் இரண்டு தரப்பிலும்
இருந்து வசைமொழியை வாங்கிக் கட்டிக்கொண்டவர்.
ஒருநாள் அவர் இருந்த இடம் தேடி இந்துக்களும், முஸ்லீம்களும் வந்தார்கள்.
வந்தவர்கள் தொடர்ந்து அவர்மீது வசைமாறிப் பொழிந்தார்கள். அப்போதும்
கபீர்தாசர் சிரித்துக்கொண்டே இருந்தார்.
இதைக் கவனித்த கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரிடம்,
"இந்துக்களும் உம்மைத் திட்டுகிறார்கள். முஸ்லீம்களும் உம்மைத்
திட்டுகிறார்கள். அப்படி இருந்தும் நீர் சிரித்துக்கொண்டு இருக்கிறீரே!,
உமக்கு என்ன புத்தி பேதலித்துப் போய்விட்டதா?" என்று கேட்டார்.
அதற்கு அவர், "என்னைத் திட்டுவதிலாவது நீங்கள் இணைந்து வந்திருக்கிறீர்களே,
அதை நினைத்துதான் நான் சிரிக்கிறேன்" என்றார்.
இன்றைக்கு மக்கள் இனமாக, மொழியாக, சாதியாக, வர்க்கமாகப்
பிரிந்து கிடக்கிறார்கள். இப்படிப் பிரிந்து கிடப்பதால் ஏற்படும்
இழப்புகள் ஏராளம். இத்தகைய சூழ்நிலையில் நாம் இணைந்திருக்கவேண்டும்,
அதுவும் இறைவனோடு இணைந்திருக்கவேண்டும் என்ற அழைப்பினை இன்றைய
நற்செய்தி வாசகமானது நமக்குத் தருகிறது. நற்செய்தியில் இயேசு,
"நானே உண்மையான திராட்சைக் கொடி.... நான் உங்களோடு இணைத்திருப்பதுபோல
நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள்" என்கிறார்.
நானே வாயில், நானே நல்ல ஆயன், நானே வழி, உண்மை, வாழ்வு எனச்
சொன்ன இயேசு, இங்கே நானே உண்மையான திராட்சைக் கொடி என்கிறார்.
இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் திராட்சைத் தோட்டம் மிகவும் முக்கியமான
பங்கு வகிக்கிறது. அதை அவர்களுடைய வாழ்விலிருந்து பிரிக்கமுடியாது.
அந்தளவுக்கு அவர்களது வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்று
திராட்சைச் செடி, திராட்சைத் தோட்டம், திராத்சை இரசம். எனவே இயேசு
மக்களுக்குத் தெரிந்த, அவர்கள் அதிகமாக அறிந்த திராட்சைச்
செடியை வைத்து கடவுளுக்கும், மனிதருக்கும் இடையே இருக்கவேண்டிய
இணைப்பைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறார்.
எப்படி கிளைகள் திராட்சைச் செடியோடு இணைத்திருந்தாலன்றி கனிதர
இயலாதோ, அதுபோல கிறிஸ்தவர்களாகிய நாமும் கிறிஸ்துவோடு இணைந்திராதபோது
கனிதர இயலாது என்பதை ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாக எடுத்திரைக்கிறார்.
அடுத்து, இறைவனோடு எப்படி இணைந்திருப்பது என்று நாம்
சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசு கூறுவார், "நீங்கள் என்னுள்ளும்,
என் வார்த்தைகள் உங்களுக்குள்ளும் நிலைத்திருந்தால், நீங்கள்
விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்" என்று. ஆகவே நாம் இறைவனின்
வார்த்தையை நமது உள்ளத்தில் தாங்கி, அதன்படி வாழும்போது, நாம்
இறைவனோடு இணைத்திருக்கிறோம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
ஆதிப் பெற்றோர்கள் 'விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்ணக்
கூடாது என்ற கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்தவரைக்கும்
அவர்கள் கடவுளோடு இணைத்திருந்தார்கள்; கடவுளும் அவர்களோடு நடந்துசென்றார்.
என்றைக்கு அவர்கள் கடவுளின் வார்த்தையைப் புறக்கணித்து, விலக்கப்பட்ட
மரத்தின் கனியை உண்டார்களோ, அன்றைக்கே அவர்கள் கடவுளோடு இருந்த
உறவைத் துண்டித்துக் கொண்டார்கள். அதனால்தான் அவர்கள் கடவுளுக்குப்
பயந்து, செடிகொடிகளுக்கு உள்ளே மறைந்துகொள்கிறார்கள். ஆக, ஆதிபெற்றோர்கள்
இறைவனின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்ததுவரை அவர்கள் மகிழ்ச்சியாக
இருந்ததுபோல, நாமும் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கும்போது
நமக்கு மகிழ்ச்சிதான்.
இன்றைக்கு நாம் கடவுளோடு உள்ள உறவில் இணைந்திருக்கிறோமா?; அவரது
வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறோமா? என்று சிந்தித்துப்
பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் கடவுளோடு உள்ள உறவைத்
துண்டித்துச் செல்லும் ஆதிப் பெற்றோரைப் போன்று, இஸ்ரயேல் மக்களைப்
போன்று துண்டித்துக் கொள்கிறோம். அதனால் பாதிக்கப்படுவது என்னமோ
நான்தான்.
இயேசு கூறுவது போன்று, 'கடவுளோடு நிலைத்திருந்தால் நாம்
விரும்பிக் கேட்பது நடக்கும். ஆதலால் எல்லா அருளையும் நமக்குக்
கொடையாகத் தரும் இறைவனோடு இணைத்திருப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
திருத்தூதர் பணிகள் 15: 1-6
விருத்தசேதனம் செய்தால்தான் மீட்படைய முடியுமா?
நிகழ்வு
முதல் உலகப்போரின்போது இங்கிலாந்து நாட்டிற்காகப் போராடி, காயமடைந்திருந்த
36 இராணுவ வீரர்கள் அரண்மனைக்குப் பக்கத்திலுள்ள ஒரு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு,
அவர்களுக்கு ஆறுதல் சொல்லவும் நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைச்
சொல்லி உற்சாகப்படுத்ததும் இளவரசர் எட்வர்ட் அங்கு சென்றார்.
அவரை வரவேற்ற அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் காயமடைந்திருந்த
ஒவ்வோர் இராணுவவீரராக அவருக்குக் காட்டினார். இளவரசர் எட்வர்ட்டும்
ஒவ்வோர் இராணுவவீரருடைய கையைப் பிடித்து, நாட்டிற்காக அவர்கள்
செய்த தியாகத்திற்கு நன்றி சொல்லிச் சென்றார்.
இப்படி ஒவ்வோர் இராணுவவீரராகப் பார்த்து, அவர்களுக்கு அறுதல்
சொல்லிவந்த இளவரசர் எட்வர்ட் அந்த அறையில் 29 இராணுவவீரர்கள்
மட்டுமே வைக்கப்பட்டிருந்ததை அறிந்து தலைமை மருத்துவரிடம்,
"இங்கே 36 இராணுவ வீரர்கள் வைக்கப்பட்டிருகிறார்கள் என்று
கேள்விப்பட்டேன். நீங்கள் வெறும் 29 பேரை மட்டும் காட்டுகிறீர்கள்.
மீதி ஏழு இராணுவ வீரர்கள் எங்கே?" என்று கேட்டார். "இளவரசே! அந்த
ஏழுபேரும் மிக மோசமாகக் காயம்பட்டிருக்கிறார்கள். அவர்களைப்
பார்த்தால் நீங்கள் அதிர்ந்துபோய்விடுவீர்கள். அதனால்தான் அவர்களை
உங்களுக்குக் காட்டவில்லை" என்றார் தலைமை மருத்துவர்.
"எனக்கு அவர்களை உடனடியாகப் பார்க்கவேண்டும். அவர்கள் இருக்கும்
அறைக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போங்கள்" என்றார் இளவரசர்.
கேட்பது இளவரசர் என்பதால், மறுப்பேதும் சொல்லமுடியாமல் அவர் அந்த
இராணுவ வீரர்கள் இருந்த அறைக்கு இளவரசரைக் கூட்டிக்கொண்டு
போனார். அந்த அறையில் இருந்த இராணுவ வீரர்களைக் கண்டதும் ஒரு
நிமிடம் அதிர்ந்துபோனார் இளவரசர். ஏனென்றால் அந்த அறையில் இருந்த
ஓர் இராணுவ வீரர் தன்னுடைய ஒரு காலை இழந்திருந்தார். இன்னோர்
இராணுவ வீரர் தன்னுடைய ஒரு கையை இழந்திருந்தார். மற்றோர் இராணுவ
வீரர் தன்னுடைய தோள்பட்டையில் பயங்கர அடிபட்டு வலியால்
துடித்துக்கொண்டிருந்தார். இவர்களை எல்லாம் பார்த்தபோது இளவரசர்க்கு
கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. இருந்தாலும் அதை வெளியே
காட்டிக்கொள்ளாமல், ஒவ்வோர் இராணுவ வீரரின் அருகில் சென்று,
அவர்களைத் தேற்றி அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொன்னார்.
இப்படியே அவர் ஒவ்வோர் இராணுவவீரரிடமும் சென்றபோதுதான் அந்த அறையில்
ஆறு இராணுவ வீரர்கள் இருப்பது தெரிய வந்தது. உடனே இளவரசர் அந்தத்
தலைமை மருத்துவரிடம், "இந்த அறையில் ஏழு இராணுவ வீரர்கள் இருக்கிறார்கள்
என்று சொல்லித்தானே அழைத்துவந்தீர்கள். இங்கே ஆறு இராணுவவீரர்கள்தான்
இருக்கிறார்கள். இன்னொரு இராணுவ வீரர் எங்கே?" என்று கேட்டு,
அவரை அவசரப்படுத்தினார். தலைமை மருத்துவரோ சற்றுத் தயங்கிய குரலில்,
"இளவரசே! அவர் வேறோர் அறையில் இருக்கின்றார். அவருடைய உடல் இங்கே
இருக்கின்ற இந்த ஆறு இராணுவ வீரர்களின் உடல்களை விடவும்
சிதைத்து போய் இருக்கின்றது. அதனால் அவரைத் தயவுசெய்து பார்க்கவேண்டாம்"
என்றார். தலைமை மருத்துவர் இவ்வளவு சொல்லியும் இளவரசர் கேட்காததால்,
வேறு வழியின்றி அவர் மிகவும் மோசமாக அடிபட்டுக்கிடந்த இராணுவ
வீரர் வைக்கப்பட்டிருந்த அறைக்கு இளவரசரைக் கூட்டிக்கொண்டு
போனார்.
அவரைப் பார்த்தும் இலவரசர்க்கு எதுவம் ஓடவில்லை. ஏனெனில் அவருடைய
உடலில் இரண்டு கால்களும் இல்லை, கைகள் சிதைந்து போயிருந்தன. முகமோ
உருக்குலைந்து போயிருந்தது. அவருடைய உடலில் உயிர் இருக்கின்றது
என்பதை அவரிடமிருந்து வந்த முனகல் சத்தம்தான் தெரிவித்தது. அந்த
இராணுவ வீரரைக் கண்ட இளவரசர் உருக்குலைந்து போயிருந்த அவருடைய
முகத்தில் வாஞ்சையோடு முத்திசெய்து அவர்மீதான தன்னுடைய அன்பை
வெளிப்படுத்தி அங்கிருந்து வெளியே வந்தார்.
இந்த நிகழ்வில் வரும் தலைமை மருத்துவர் நன்றாக இருந்த இராணுவ
வீரர்களை மட்டும் காட்ட முற்பட்டபோது இளவரசரோ எல்லா இராணுவ வீரர்களையும்
அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார்.
இதுபோன்றுதான் யூதர்கள், மோசேயின் முறைப்படி விருத்தசேதனம்
செய்துகொண்ட தாங்கள் மட்டும்தான் மீட்பு பெற முடியும் என்று
நினைத்துக்கொண்டிருக்கும்போது, ஆண்டவராகிய கடவுள் எல்லாரும்
மீட்புப் பெற விரும்புகின்றார். அது தொடர்பாக வரும் இன்றைய முதல்
வாசகத்தைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.
யார் மீட்பு பெற முடியும்?
இன்றைய முதல் வாசகத்தில், யூதேயாவிலிருந்து வந்திருந்த சிலர்,
"மோசேயின் சட்டப்படி விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால்
மீட்புப் பெற முடியாது" என்று மக்களுக்குக் கற்பிக்கத் தொடங்குகின்றார்கள்.
இதனால் திருத்தூதர்களுக்கும் அவர்களுக்கும் இடையே பெருங்கருத்து
வேறுபாடும் விவாதமும் உண்டாகின்றன.
விருத்தசேதனம் என்பது பழைய துணிபோன்றது. அதை யூதர்கள்,
கிறிஸ்துவம் என்ற புதிய துணியோடு ஓட்டுப்போட முயற்சி (லூக் 5:
36-39) செய்தார்கள். இப்படிப்பட்ட தருணத்தில்தான் எருசலேம்
பொதுச் சங்கம் கூட்டப்படுகின்றது. அதில் ஆண்டவரின் அருளால்தான்
மீட்பே தவிர விருத்தசேதனத்தினால் மீட்பு இல்லை என்ற செய்தி
சொல்லப்படுகின்றது. ஆகவே, இத்தகைய மீட்பை எல்லார்க்கும் அதிலும்
குறிப்பாக இயேசுவின்மீது நம்பிக்கை வைப்போர்க்கு வழங்கும் இறைவனின்
அருளை எண்ணி அவர்க்கு நன்றி செலுத்துவோம். அதுமட்டுமட்ட்டுமல்லாமல்
அவர்க்கு உகந்த வழியில் நடப்போம்.
சிந்தனை
'அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக்குட்டியிடமிருந்தும்
மீட்பு வருகின்றது (திவெ 7:10) என்கின்றது திருவெளிப்பாடு
நூல். எனவே, நமக்கு மீட்பை வழங்கும் இறைவனிடமும் அவர் மகன் இயேசுவிடமும்
நம்பிக்கை கொள்வோம். வெளியடையாளங்களைக் கடைப்பிடித்தாலே போதும்
மீட்புப் பெற்றுவிடலாம் என்ற தவறான எண்ணத்தை விடுவோம். எப்பொழுதும்
இறைவனின் திருவுளத்தை உணர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
இயேசுவே உண்மையான திராட்சை செடி
1970 ஆம் அண்டு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர் ரஷ்யாவைச்
சார்ந்த புகழ்பெற்ற நாவலாசிரியர் அலெக்ஸ்சாண்டர் சொல்சனிட்சன்
(Alexander Solzhenitsyn 1918 - 2008) என்பவர். இவர்
ஸ்டாலினின் ஆட்சிக்காலத்தில் அவரது அடக்குமுறைக்கு எதிராகக் குரல்
கொடுத்ததால் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்.
1974 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய இருபது
ஆண்டுகள் சிறை வாசத்தை அனுபவித்தார். அத்தகைய காலகட்டத்தில்
அவர் எழுதிய நூற்கள் ரஷ்ய முழுவதும் வாசிக்கத் தடைசெய்யப்பட்டன.
அப்படிப்பட்ட அலெக்ஸ்சாண்டர் சொல்சனிட்சன் தன்னுடைய இளமைப் பருவத்தில்
நடந்ததாக ஒரு நிகழ்ச்சியைச் சொல்லிவிட்டு, அதன்பின்னர் நடைபெறுவதைச்
சொல்வார்.
ஒரு சமயம் அவரும் அவருடைய தாயாரும் ஆலயத்திற்குச் சென்று,
திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதை அவருடைய வகுப்புத் தோழர்களில்
ஒருவன் எப்படியோ பார்த்துவிட, மறுநாள் அலெக்ஸ்சாண்டர் சொல்சனிட்சன்
வகுப்புக்கு வந்ததும், அவர் ஆலயம் சென்றுவருவதைப் பார்த்த அவருடைய
வகுப்புத் தோழன், "நீ எதற்கு ஆலயத்திற்கு எல்லாம் போனாய்?,
ஆலயத்திற்குப் போகக்கூடாது என்று உனக்குத் தெரியாதா?" என்று
சொல்லி அவருடைய சட்டையைக் கிழித்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த
சிலுவையையும் தூக்கி எறிந்து, 'இனிமேலும் ஆலயத்திற்கு போனால்
அப்புறம் நடப்பது வேறு என்று எச்சரித்து அனுப்பிவைத்தான். அலெக்ஸ்சாண்டர்
சொல்சனிட்சனும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு யாருக்கும் தெரியாமலே
ஆலயத்திற்கு சென்று வந்தார். ஏனென்றால் இறை வழிபாடு என்பது இரஷ்ய
நாட்டில் அப்போது தடைசெய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு விட்டு அலெக்ஸ்சாண்டர் சொல்சனிட்சன்
பின்வருமாறு கூறுவார், "ரஷ்ய இப்போது சந்தித்துக்
கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கும் காரணம் அவர்கள் கடவுளை மறந்து
வாழ்ந்ததே (Men have forgotten God, that is why all this has
happened) ஆகும்"
ஆம், என்றைக்கு நாம் கடவுளை மறந்து, அவரைவிட்டுப் பிரிந்து தனித்து
வாழ்கின்றோமோ, அன்றைக்கு நாம் அழிவைச் சந்திப்போம் என்பதனை இந்த
நிகழ்வின் வழியாக அறிந்து கொள்ளலாம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "நானே உண்மையான
திராட்சைச் செடி, நீங்கள் அதன் கொடிகள் என்று சொல்லிவிட்டுத்
தொடர்ந்து சொல்வார், "என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும்
செய்ய முடியாது" என்று. ஆம், ரஷ்யா கடவுளை புறக்கணித்து வாழ்ந்ததனால்
எத்தகைய அழிவினைச் சந்தித்தது என்பதை இங்கே நாம் நினைத்துப்
பார்த்துக்கொள்ளலாம்.
நற்செய்தியில் ஆண்டவராகிய இயேசு தனக்கும் மக்களுக்கும் உள்ள
உறவை திராட்சைச் செடிக்கும் திராட்சைக் கொடிக்கும் இடையே உள்ள
உறவோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றார். விவிலியத்தில் திராட்சைச்
செடியானது இஸ்ரயேல் சமூகத்தோடு ஒப்பிடப்படுகின்றது (எசா 5:7).
அவர்கள் கடவுளுக்கு உகந்த உண்மையான திராட்சைச் செடியாக இருந்தார்களா
என்பது வேறு விஷயம். ஆனால், ஆண்டவர் இயேசுவோ உண்மையான
திராட்சைச் செடியாக விளங்குகின்றார்.
இயேசு திராட்சைச் செடியாக இருந்து, நாம் திராட்சைக் கொடிகளாக
இருக்கும்போது, நாம் அவரோடு இணைத்திருக்கவேண்டும். அப்படி இணைந்திருக்கும்போதுதான்
நம்மால் மிகுந்த கனி தரமுடியும். என்றைக்கு நாம் கடவுளைவிட்டுப்
பிரிந்து நிற்கின்றோமோ அன்றைக்கு நம்மால் கனிதர முடியாது என்பதுதான்
நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது. இஸ்ரயேல்
மக்கள் கடவுளோடு இணைந்திருந்தபோது அவர்கள் மிகுந்த ஆசிர்வாதத்தைப்
பெற்றார்கள். என்றைக்கு அவர்கள் கடவுளை விட்டுப் பிரிந்து, பிற
தெய்வங்களை வழிபடத் தொடங்கினார்களோ அன்றைக்கே அவர்கள் அழிவைச்
சந்தித்தார்கள்; நாடு கடத்தப்பட்டு அந்நிய தேசத்தில் அகதிகளாய்
வாழத் தொடங்கினார்கள். நாமும் கடவுளை விட்டுப் பிரிந்து
வாழும்போது அழிவின் பாதையில் இருக்கின்றோம் என்பது உறுதி.
அடுத்ததாக, இந்த மண்ணுலகத்தில் பிறந்த நாம் ஒவ்வொருவரும்
மிகுந்த பலன்/பயன் தரக்கூடிய வாழ்க்கையை வாழவேண்டும். கனிகொடாத
நிலையோ கடவுளுக்கு உகந்தல்ல, இயேசு சொல்லக்கூடிய தாலந்து உவமையில்
வருகின்ற ஒரு தாலந்து பெற்ற பணியாளனோ அதனைப் பயன்படுத்தாமல் மண்ணுக்குள்
புதைத்து வைக்கின்றான். அதனாலே தலைவனின் சினத்திற்கு உள்ளாகின்றான்.
கனிகொடாத கொடிகளையும் கடவுள் தரித்துவிடுவார் என்று இயேசு
சொல்கிறார். எனவே, கனி கொடுத்து வாழும் வாழ்க்கையே கடவுளுக்கு
உகந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆகையால், இயேசுவின் சீடர்களாகிய நாம் கனி கொடுக்கும் வாழ்க்கை
வாழ்வோம், அது கடவுளோடு இணைந்து வாழ்வதால் மட்டுமே முடியும் என்பதை
உணர்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
|
|