|
|
21 மே 2019 |
|
|
பாஸ்கா காலம்
ஐந்தாம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும்
அறிவித்தார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 19-28
அந்நாள்களில் அந்தியோக்கியாவிலிருந்தும் இக்கோனியாவிலிருந்தும்
யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல்மேல் கல் எறிந்தார்கள்;
அவர் இறந்துவிட்டார் என்று எண்ணி நகருக்கு வெளியே அவரை இழுத்துப்
போட்டார்கள். சீடர்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது அவர் எழுந்து
நகரினுள் சென்றார். மறுநாள் அவர் பர்னபாவுடன் தெருபைக்குப் புறப்பட்டுச்
சென்றார்.
அந்த நகரில் அவர்கள் நற்செய்தி அறிவித்துப் பலரைச் சீடராக்கியபின்
லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத்
திரும்பி வந்தார்கள். அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி,
"நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்" என்று
கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள்.
அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து,
நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை
கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; பின்பு
பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். பெருகை நகரில் இறைவார்த்தையை
அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா
வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று
அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து
முடித்துவிட்டார்கள். அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக்
கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற
இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள்.
அங்கே அவர்கள் சீடர்களுடன் பல நாள்கள் தங்கினார்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
145: 10-11. 12-13. 21 (பல்லவி: 10b.11a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம் மக்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பர்.
அல்லது: அல்லேலூயா.
10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்;
உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது
அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப்
பேசுவார்கள். பல்லவி
12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய
மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13 உமது அரசு எல்லாக்
காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது.
பல்லவி
21 என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல் கொண்ட அனைத்தும்
அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக! பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 24: 26,46
அல்லேலூயா, அல்லேலூயா! மெசியா பாடுபட்டு இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து
மாட்சிமை அடையவேண்டும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
14: 27-31b
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: அமைதியை உங்களுக்கு
விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்.
நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல.
நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். 'நான்
போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்' என்று நான் உங்களிடம்
சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால்
நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில்
தந்தை என்னைவிடப் பெரியவர். இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு
இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லிவிட்டேன்.
இனி நான் உங்களோடு மிகுதியாகப் பேசப் போவதில்லை; ஏனெனில் இவ்வுலகின்
தலைவன் வந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை.
ஆனால் நான் தந்தைமீது அன்புகொண்டுள்ளேன் என்பதையும் அவர் எனக்குக்
கட்டளையிட்டபடி செயல்படுகிறேன் என்பதையும் உலகு தெரிந்துகொள்ள
வேண்டும்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை:
வேதனைகளே மனிதனை உயர்த்தும்.
வேதனைகள் கற்றுக் கொடுக்கும் பாடம் ஏராளம்.
பலரும் ஞானிகளானது வேதனைகளில் தான்.
வேதனைகள் வழியாகவே நாம் இறையாட்சிக்குட்பட வேண்டும் என்று
சொல்லி சபையினரை நம்பிக்கையில் உறுதிபடுத்தினார்கள்.
எதனால் வேதனை? சபையில் சேர்ந்தால் மகிழ்ச்சி தானே ஊற்றெடுக்க
வேண்டும்?
இறையாட்சி என்பது வேறு, மனித நிலையென்பது வேறு.
இறையாட்சியின் விழுமியங்களை வாழ்வாக்க, மனித கண்ணோட்டத்தை
கைவிடுவது அவசியம்.
கடவுளுடைய எண்ணத்திற்கும், மனித எண்ணத்திற்கும் பாரதூர
வித்தியாசம் உண்டு.
கடவுளுடைய விழுமியங்களை வெகுதிறமையாக மனிதகுலம் புறக்கணிப்பதால்,
அதனை கடைபிடிப்போருக்கு வேதனையே மிச்சம்.
வேதனைகளை மனஉறுதியுடனே தாங்கிக் கொள்பவர்கள், நிலையான பேரின்பத்தை
சுதந்தரிப்பர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
யோவான் 14: 27-31
இயேசு தரும் அமைதி
அமெரிக்காவில் உள்ள வெஸ்ட் கோஸ்ட் (West Coast) என்னும் இடத்தில்
இருந்த மருத்துவர் ஒருவர், தான் நடத்தி வந்த மருத்துவமனையில்
இருந்த நோயாளிகளிடம் வித்தியாசமான ஒரு ஆய்வினைச் செய்து
பார்த்தார். அந்த ஆய்வு இதுதான். 'கடவுளிடம் நீங்கள் கேட்டவரம்
கிடைக்கும் என்றால், என்ன வரம் கேட்பீர்கள்? என்ற கேள்வியானது
அங்கிருந்த எல்லா நோயாளிகளிடமும் கேட்கப்பட்டது.
அதற்கு அந்த மருத்துவமனையில் இருந்த 87 சதவீதம் நோயாளிகள்
'எங்களுக்கு மன அமைதி வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் எவ்வளவோ வளர்ந்துவிட்டோம்
என்று நாம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தவேளையில், வசதியான
வாழ்க்கையல்ல, மன நிம்மதி போதும் என்கிறது ஆய்வின் முடிவுகள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம்,
"அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு
அளிக்கின்றேன். நான் தரும் அமைதி இந்த உலகம் தரும் அமைதி போன்றது
அல்ல"என்கிறார். அமைதியின் அரசராக இந்த உலகத்திற்கு வந்த ஆண்டவர்
இயேசு, தன்னுடைய சீடர்களுக்கு அமைதியைத் தருவது நமக்கு ஆறுதலிக்கும்
செய்தியாக இருக்கின்றது. இயேசு தரும் அமைதி எத்தகையது என்பதுதான்
நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
இந்த உலகம் சத்தங்கள் அற்ற, வன்முறைகளற்ற, போர்களும், குழப்பங்களும்
அற்ற ஒரு நிலையைத்தான் அமைதியென நினைத்துக்கொண்டிருக்கிறது. இது
உண்மையான் அமைதியாகாது. அதற்குப் பெயர் மயான அமைதி. ஆனால் ஆண்டவர்
இயேசு தரும் அமைதி இதைவிட உயர்ந்து, அது உள்ளத்தில் ஏற்படும்
அமைதி, சத்தங்களுக்கும், சந்தடிகளுக்கும் மத்தியிலும் நிகழும்
அமைதி. இத்தகைய அமைதி நாம் இயேசுவோடு ஒன்றாகும்போது, இயேசுவோடு
சங்கமமாகும்போது ஏற்படக்கூடிய அமைதி.
இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த நிக்கோலஸ் ரிட்லி (Nicholas
Ridley) என்னும் ஆயர் 1555 ஆம் ஆண்டு கிறிஸ்துவுக்காக தன்னுடைய
இன்னுயிரைத் துறந்தவர். இவர் கிறிஸ்துவைப் பற்றிப் போதித்ததற்காக
மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைத்துவைக்கப்பட்டார்.
ஆயர் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு, கொல்லப்படுவதற்கு
முந்தின நாள், ஆயருடைய சகோதரர் ஒருவர் ஆயருக்கு ஆறுதலாகவும்,
ஒத்தாசையாகவும் இருக்கும் என்பதற்காக, அவர் இருந்த சிறைக்கூடத்திற்கு
முன்பாக தூங்காமல் நின்றுகொண்டிருந்தார். இதைப் பார்த்த ஆயர்
அவரிடம், "எதற்காக இப்படி தூங்காமல்
விழித்துக்கொண்டிருக்கிறாய், வழக்கம்போல நீ தூங்கச் செல்"என்றார்.
அதற்கு அவருடைய சகோதரர், "நான் உங்களோடு நின்றுகொண்டிருந்தால்
உங்களுக்கு ஆறுதலாக இருக்குமே, அதற்காகத்தான் இங்கே இப்படி
நின்றுகொண்டிருக்கிறேன்"என்றார்.
உடனே ஆயர் அவரிடம், "உண்மையான அமைதியை வழங்கும் இறைவன் என்னோடு
இருக்கிறார். அவர் தன்னுடைய ஆறுதலிக்கும் தோள்களில் என்னைச் சுமந்துகொண்டிருக்கிறார்.
அதனால் எனக்கு எந்த பயமும் இல்லை"என்றார்.
ஆம், இயேசு தரும் அமைதி துன்பத்திலும், இடரிலும் நமக்கு ஆறுதலையும்,
வல்லமையையும் தருவதாக இருக்கிறது என்பதை இந்த நிகழ்வானது நமக்கு
எடுத்துக்கூறுகிறது. ஆகவே, நாம் இறைவனோடு இணைந்து வாழும்போது,
அவர் அளிக்கும் அமைதி நமக்குத் தேற்றரவாக இருக்கும் என்பது
யாராலும் மறுக்கப்படமுடியாத உண்மை.
அடுத்ததாக, இயேசு அளிக்கும் அமைதியைப் பெற்றுக்கொள்ளும் நாம்,
நம்முடைய சமுதாயத்திலும் நாம் அமைதியை ஏற்படுத்தும் கருவிகளாக
இருக்கவேண்டும். தூய பிரான்சிஸ் அசிசியார் இறைவனைப் பார்த்து,
"அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே' என்று மன்றாடுவதுபோல,
நாமும் இறைவனைப் பார்த்து மன்றாட வேண்டும்; நாமும் அமைதியின்
தூதுவர்களாக மாறவேண்டும். காரணம் இந்த உலகம் பணத்திற்கோ, பதவிக்கோ
ஏங்கித் தவிக்கவில்லை. உண்மையான அமைதிக்குத்தான் ஏங்கித் தவிக்கிறது
என்பது தொடக்கத்தில் சொல்லப்பட்ட நிகழ்விலிருந்து வெளிப்படும்
உண்மை.
ஆகவே, நாம் இறைவன் அளிக்கும் உண்மையான அமைதியை
பெற்றுக்கொள்வோம். அந்த அமைதியை உலகத்தவருக்கு அளிப்போம். அதன்வழியாக
இறையருள் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 14: 27-31
இயேசு தரும் அமைதி
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில்
ஒரு மிகப்பெரிய செல்வந்தர் வாழ்ந்து வந்தார். 1893 ஆம் ஆண்டு
சிகாகோவில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தினால் அவருடைய உடமைகள்,
சொத்துகள் அனைத்தும் எரிந்து நாசமாயின. அப்படியிருந்தும் அவர்
அதைக் குறித்து பெரிதாகக் கவலைப்படவில்லை, காரணம், அவர் ஆண்டவரின்
பராமரிப்பில் அதிகம் நம்பிக்கை வைத்து வாழ்ந்து வந்தார்.
இக்கோர சாம்பவம் நடந்து சில மாதங்கள் கழித்து, அந்த செல்வந்தரின்
மனைவியும் அவருடைய நான்கு பிள்ளைகளும் Ville Du Havre என்ற மிகப்பெரிய
சொகுசுக் கப்பலில் பயணம் செய்தார்கள். ஆனால், அந்தக் கப்பல் நடுக்
கடலில் போய்க்கொண்டிருக்கும்போது திடிரென்று கடலில் ஏற்பட்ட சுழற்சியினால்
கப்பலில் பயணம் செய்த ஒருசிலரைத் 226 பேர் இறந்து போனார்கள்.
செல்வந்தரின் மனைவியைத் தவிர அவருடைய நான்கு மகன்களும் அதில்
இறந்து போனார்கள். இச்செய்தியைக் கேட்டு அந்த செல்வந்தர் மிகவும்
நொறுங்கிப் போனார். இருந்தாலும் மனத்தைத் தேற்றிக்கொண்டு இங்கிலாந்திற்கு
பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்ட தன்னுடைய மனைவியை
மீட்டுக்கொண்டு வருவதற்காக கப்பலில் அவர் இங்கிலாந்துக்கு புறப்பட்டார்.
அவர் கப்பலில் போய்கொண்டிருக்கும்போது, கப்பல் ஓரிடத்தை வந்தடைந்தபோது
அதில் இருந்த ஒருசிலர், "இந்த இடத்தில்தான் சில நாட்களுக்கு
முன்பாக ஒரு கப்பல் விபத்துக்குள்ளாகிய அதில் பயணம் செய்த 226
பேர் இறந்துபோயினர்"என்றனர். இச்செய்தியைக் கேட்டு அந்த செல்வந்தர்
மிகுந்த கலக்கத்திற்கு உள்ளானார். அப்போது அவர் ஒரு பேனாவை எடுத்து
இவ்வாறாக எழுதத் தொடங்கினார்: வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள்
வருத்தங்கள் வந்திடினும் என் இறைவா நீர் என்னிடம், "மனமே கலங்காதிரு,
அமைதி கொள்"என்று எனக்குக் கற்றுத் தந்திருக்கிறீர், அது
போதும்".
ஓரிரு நாட்களில் அவர் இங்கிலாந்திற்குச் சென்று அங்கிருந்த தன்னுடைய
மனைவியைக் கண்டுபிடித்து, அதன்பிறகு அவர் ஆண்டவரின்
பாதுகாப்பிலும் அரவணைப்பிலும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் செல்வந்தருக்கு வாழ்க்கையில்
கஷ்டங்களுக்கு மேல் கஷ்டங்கள் வந்தன. ஆனாலும் அவர் கடவுளின் அமைதியிலும்
அரவணைப்பிலும் நம்பிக்கை வைத்து வாழ்ந்தார், அதுவே அவருக்கு சோதனைக்
காலங்களில் மிகவும் பக்க பலமாக இருந்தது. ஆண்டவர் தரும் அமைதி,
இந்த உலகம் தருகின்ற அமைதியை விட மிக உயர்ந்தது என்பதற்கு இந்த
நிகழ்வு ஒரு சான்றாக இருக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம்,
"அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு
அளிக்கின்றேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி
போன்றது அல்ல"என்கிறார். இயேசு இந்த உலகத்தில் அமைதியின் தூதுவனாகவே
பிறந்தார். அவர் இந்த உலகத்திற்குத் தருகின்ற மிகப்பெரிய
கொடையும் அமைதியாகத்தான் இருக்கின்றது. ஆனால், இயேசு தருகின்ற
அமைதியோ இந்த உலகம் தருகின்ற அமைதியைப் போன்றது அல்ல என்பதுதான்
நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய செய்தியாக இருக்கின்றது.
இந்த உலகமோ சண்டை சச்சரவு இல்லாத சமரச நிலையையே அமைதி என்று
சொல்கிறது. இது ஒருவிதத்தில் போலியான, தற்காலிக அமைதியே ஆகும்.
ஏனென்றால், சமரசமாக இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஒருவர்
மற்றவருக்கு எதிராகக் கிளர்ந்தெழலாம். இன்னும் ஒருசிலர் (இந்த
உலகத்தில் வாழ்ந்த துறவிகள், மகான்கள், ஞானிகள்) அமைதி
வேண்டுமென்றால் தனிமையான இடத்திற்குச் செல்லவும் என்கிறார்கள்.
அதாவது மயான அமைதியையே அவர்கள் அமைதி என்று சொல்கிறார்கள். இதுவும்
உண்மையான அமைதியாக இருக்க முடியாது. தப்பித்தால் (Escapism) எப்படி
உண்மையான அமைதியாக இருக்க முடியும்?.
ஆனால், ஆண்டவர் இயேசுவோ இது போன்ற அமைதியைத் தரவில்லை. அவருடைய
அமைதி உண்மையான அன்பிலும் நட்புறவிலும் சகோதரத்துவத்திலும்
விளையக்கூடியது. அவருடைய போதனைகளை நாம் வாழ்வாக்குகின்றபோது இந்த
உலகத்தில் அமைதி பிறக்கும் என்பது உறுதி. இயேசு சொல்லக்கூடிய
அமைதி என்ற சொல்லை 'Shalom' என்று கிரேக்க மொழியில் சொல்கிறார்கள்.
சலோம் என்று சொல்கின்றபோது அது உண்மையான அன்பில் பிறக்கக்கூடிய
அமைதியாக இருக்கின்றது. அது இயேசுவின் அன்புக் கட்டளைகளைக் கடைபிடிப்பதால்
மட்டுமே வரக்கூடியதாக இருக்கின்றது.
எனவே, நாம் இயேசு தரக்கூடிய உண்மையான அமைதியைப் பெற அவருடைய போதனையின்
படி நம்முடைய வாழ்வை அமைத்துக்கொள்வோம், அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
யோவான் 14: 27-31
நீங்கள் என்மீது அன்புகொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி
மகிழ்ச்சி அடைவீர்கள்.
நிகழ்வு
பிரபல எழுத்தாளராகிய வில்லியம் ஒயிட் எழுதிய 'Stories of
Journey' என்ற நூலில் இடம்பெறும் நிகழ்வு இது.
இங்கிலாந்தில் வாழ்ந்த வந்த ஹான்ஸ் எனிட் தம்பதியர் இரண்டாம்
உலகப்போரில் தங்களுடைய பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டு, தப்பித்தோம்,
பிழைத்தோம் என்று அமெரிக்காவில் வந்து குடியேறினர். ஹான்ஸ் இங்கிலாந்தில்
இருந்தபோது ஒரு கல்லூரில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்ததால்,
அமெரிக்காவிற்கு வந்தபிறகு, ஒரு குருமடத்தில் பேராசிரியராகப்
பணிபுரியும் வாய்ப்புப் பெற்றார். மேலும் ஹான்ஸ் தன்னுடைய மனைவி
எனிட்மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். சில சமயங்களில் அவர்
தன்னுடைய மனைவியைக் குருமடத்திற்கு அழைத்து வரும்போது, அங்கிருந்த
எல்லாருமே அவர் தன்னுடைய மனைவியின்மீது கொண்டிருந்த அன்பைக் கண்டு
மெச்சினார்கள். அந்தளவுக்கு ஹான்ஸ் தன் மனைவியின்மீது அளவில்லாத
அன்புகொண்டிருந்தார் .
இப்படி ஹான்ஸ்-எனிட் தம்பதியர் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாகப்
போய்க்கொண்டிருந்த சமயத்தில் எனிட் திடீரென்று நோய்வாய்ப்பட்டு
இறந்துபோனார். ஏற்கனவே தன்னுடைய பிள்ளைகளைப் போரில் இழந்திருந்த
ஹான்ஸிற்கு தன்னுடைய மனைவியின் திடீர் இறப்பு பேரிடியாய் அமைந்தது.
இதனால் அவர் குருமடத்திற்கு வகுப்பெடுக்கவும் செல்லாமல்,
வேறெங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளே முடங்கிக்கொண்டிருந்தார்.
சேதி கேள்விப்பட்ட குருமட அதிபர், குருமடத்தில் இருந்த ஒருசில
அருத்தந்தையர்களைத் தன்னோடு கூட்டிக்கொண்டு ஹான்ஸின்
வீட்டிற்குச் சென்றார். ஹான்ஸோ அவர்களிடம், "இறைவனிடம் நான்
வேண்டாத நாளில்லை. ஆனாலும் அவர் என்னுடைய பிள்ளைகளையும் என்னுடைய
மனைவியையும் என்னிடமிருந்து பிரித்துவிட்டார்! இனிமேல் நான் இறைவனிடம்
வேண்டப்போவதில்லை"என்று சொல்லிக் கண்ணீர்விட்டு அழுதார்.
இதைக் கேட்டு குருமட அதிபர் அவரிடம், "ஹான்ஸ்! நீ இறைவனிடம்
வேண்ட வேண்டாம். உனக்காக நானும் என்னோடு வந்திருக்கின்ற அருட்தந்தையர்களும்
வேண்டுகிறோம்"என்றார். இவ்வாறு சொல்லிவிட்டு குருமட அதிபரும்
குருமடத்தில் பணியாற்றிவந்த சக குருக்களும் ஒவ்வொருநாளும்
ஹான்ஸிற்காக இயேசுவிடம் மன்றாடி வந்தார்கள். ஏறக்குறைய ஒரு மாதம்
கழித்து ஹான்ஸ் குருமட அதிபரிடமும் ஏனைய குருக்களிடமும்,
"இதுவரை நீங்கள் எனக்காக வேண்டியதுபோதும். உங்களுடைய வேண்டுதலால்
நான் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டேன்... என்னுடைய மனதில் இருந்த
சுமையெல்லாம் அப்படியே குறைந்துவிட்டது. இனிமேல் நான் உங்களுக்காக
இறைவனிடம் வேண்டப்போகிறேன்"என்றார். இதைக் கேட்டு குருமட அதிபதிரும்
ஏனைய குருக்களும் இறைவனுக்கு நன்றிசெலுத்தினார்கள்.
ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுவது அல்லது பரிந்து பேசுவது
எவ்வளவு இன்றியமையாதது, அதனால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றன
என்பதை இந்த நிகழ்வானது மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகமும் பரிந்துபேசுவதன் முக்கியத்துவத்தைக்
குறித்துப் பேசுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்ப்போம்.
தந்தையிடம் செல்வதாகச் சொல்லும் இயேசு
இயேசு இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு முன்பாக தன்னுடைய சீடர்களுக்குப்
பல சேதிகளைச் சொல்கின்றார். அதில் முக்கியமான ஒருசெய்திதான்,
இயேசு தந்தையிடம் செல்வதாகும். இயேசு தன்னுடைய சீடர்களிடம் இவ்வாறு
சொன்னதைக் கேட்டு அவருடைய சீடர்கள் நிச்சயம் கலங்கியிருக்கக்
கூடும். அப்படிப்பட்ட சமயத்தில்தான் இயேசு, "நீங்கள் என்மீது
அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி
அடைவீர்கள்"என்கிறார். இயேசு தந்தையிடம் செல்வது நமக்கு/ சீடர்களுக்கு
எந்தவிதத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய காரியம் என்பதைத் தொடர்ந்து
சிந்தித்துப் பார்ப்போம்.
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருந்து நமக்காகப் பரிந்துபேசும் இயேசு
இயேசு தந்தையிடம் செல்வது நமக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒன்றாக
இருக்கக் காரணம், அவர் தந்தையின் வலப்பக்கம் வீற்றிருந்து நமக்காகப்
பரிந்துபேசுவதால்தான். இதை எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர்
கூறுகின்ற, "அவர்களுக்காகப் பரிந்துபேசுவதற்கென என்றுமே உயிர்
வாழ்கின்றார்"(எபி 7:25) என்ற வார்த்தைகளும், தூய பவுலின்,
"கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராக யார் தண்டனைத்
தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு,
கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப்
பரிந்து பேசுகிறார் அன்றோ"(உரோ 8:34) என்ற வார்த்தைகளும் உறுதிசெய்வதாக
இருக்கின்றன. ஆகவே, இயேசு தந்தையிடம் செல்வது நமக்காகப் பரிந்து
பேசுவதற்காகத்தான் என்ற உண்மையை உணர்ந்து, நாம் உள்ளம் கலங்காமல்,
மருளாமல் இருப்பது நல்லது.
சிந்தனை
'ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோர்க்காகப் பரிந்து
பேசினார்' (எசா 53: 12) என்று துன்புறும் ஊழியனாம் இயேசுவைக்
குறித்துப் பேசுவார் இறைவாக்கினர் எசாயா. ஆகவே, நமக்காகப் பரிந்துபேச
இயேசு இருக்கின்றார் என்ற நம்பிக்கையுடன், கலக்கம் நீக்கி, மகிழ்ச்சியோடு
இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாய்ப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
முதல் வாசகம்
திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும்
அறிவித்தார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 19-28
பல துன்பங்கள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்
நிகழ்வு
1930 மற்றும் 1940 களில் அமெரிக்கத் திசை உலகில் கொடிகட்டிப்
பறந்தவர் பிங் க்ரோஸ்பி (Bing Crosby) என்ற பாடகர். இவருடைய தனித்துவமான
குரலுக்கு உலகெங்கும் ஆயிரக்கணக்கான இரசிகர்கள் இருந்தார்கள்.
ஆனால் இவருடைய தொடக்க காலம் வேதனைகளாலும் அவமானங்களாலும் நிரம்பி
வழிந்தது. 1903 ம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனுக்கு
அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்த இவர்க்கு சிறுவயதிலிருந்தே
பாடுவது என்றால் அவ்வளவு இஷ்டம். இவருடைய பெற்றோரும் இவரிடமிருந்த
திறமையைப் பார்த்துவிட்டு, இவருடைய விரும்பப்படியே இவரை இசை சம்பந்தப்பட்ட
துறையில் பயணிக்க இசைவு தந்தனர். இதனால் இவர் வாஷிங்டனுக்குச்
சென்று தன்னுடைய 'இசை வாழக்கையைத்' துவங்கினார்.
வாஷிங்டனுக்குச் சென்றபிறகுதான் இவர்க்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இவருடைய குரல் மற்றவர்களுடைய குரலைவிட சற்று வித்தியாசமாக இருந்ததால்,
இசைக்குழுக்களை நடத்தி வந்தவர்கள் இவரை ஒதுக்கியும் சமயங்களில்
இவரைக் கூட்டத்தில் ஒருவராகவும் பாட வைத்தனர். இப்படிபட்ட
நிலையில் பிங் க்ரோஸ்பி 'தன்னுடைய குரல் ஏன் இப்படி இருக்கின்றது?
தனக்கு ஏதாவது பிரச்சினையா?' என்று யோசிக்கத் தொடங்கினார். அதன்
பின்னர் மருத்துவமனைக்குக் சென்று சிகிச்சை மேற்கொண்டார்.
சிகிச்சையின்போது அவருடைய தொண்டையில் கட்டி இருப்பது தெரியவந்தது.
உடனே அவர் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டார். அந்த சிகிச்சைப்
பிறகு உடல்நலம் தேறி, ஒரு மேடையில் பாடும்போது அவருடைய குரல்
பதின்வயதினரின் (Teenager) குரலைப் போன்று இருக்கக்கண்டு எல்லாரும்
ஆச்சரியப்பட்டார்கள்.
இதற்குப் பிறகு பிங் க்ரோஸ்பிக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்தன.
இதனால் அவர் இருபது ஆண்டுகளுக்கும் மேல் அமெரிக்கத் திரையிசை
உலகில் இசைக் சாம்ராஜ்ஜியம் நடந்துவந்தார்.
பிங் க்ரோஸ்பியை எதை வைத்து எல்லாரும் புறம்தள்ளினார்களோ அதுவே
அவர் பிரபலப் பாடகராக மாறக் காரணமாக இருந்தது. இதை வேறு
வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், பிங் க்ரோஸ்பி சந்தித்த
துன்பங்களும் அவமானங்களும்தான் அவரை மிகச்சிறந்த பாடகராக
மாற்றியது. இறையாட்சிக்கு உட்படுவதற்கும்கூட நாம் பல வேதனைகளையும்
துன்பங்களையும் அனுபவிக்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இந்த
உண்மையை எடுத்துச் சொல்லும் இன்றைய முதல் வாசகத்தைக் குறித்து
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
பவுலைக் கல்லால் எறிந்துகொல்ல முயன்ற யூதர்கள்
ஆண்டவருடைய வார்த்தையை யூதர்கள், புறவினத்தார் என்று எல்லா மக்களுக்கும்
பவுல் எடுத்துரைத்தார். இதனால் அவருடைய போதனையைக் கேட்ட
பெருந்திரளான வந்தார்கள். இதைக் கண்ட யூதர்கள் மக்களைத்
தூண்டிவிட்டு அவரைக் கல்லால் எறிகிறார்கள். அவர் இறந்துவிட்டார்
என்று எல்லாரும் நினைத்துக்கொண்டிருக்கும்போது, அவரோ எல்லார்க்கும்
முன்பாக எழுந்து, நகருக்குள் செல்கின்றார். பின்னர் தெருபைச்
சென்று நற்செய்தி அறிவித்துவிட்டு மீண்டுமாக லிஸ்திரா, இக்கோனியா,
அந்தியோக்கியா நகரங்களுக்கு வருகின்றார்.
இங்கு ஓர் உண்மையை நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டும். அது
என்னெவெனில், யூதர்கள் தன்மீது பொறாமைகொண்டு தன்னைப் பழித்துரைக்கிறார்கள்,
கல்லால் எறிந்துகொல்ல முயல்கிறார்கள் என்றெல்லாம் நினைத்து பவுல்
தன்னுடைய முயற்சியிலிருந்து பின்வாங்கிவிடவில்லை. மாறாக, தொடர்ந்து
அவர் ஆண்டவருடைய வார்த்தைகளை எடுத்துரைத்துக்கொண்டே இருக்கின்றார்.
அவர் இப்படிச் செயல்படுவதற்கு அவரை இயக்கிய உந்துசக்தி அல்லது
தத்துவம் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.
பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்
நற்செய்தி அறிவிப்புப் பணியில் பவுல் பல்வேறு துன்பங்களையும்
அவமானங்களையும் சந்தித்தபோதும், அவரைத் தொடர்ந்து இயங்க வைத்த
தத்துவம்தான், 'பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்'
என்பதாகும். ஆண்டவர் இயேசுவும் இதே செய்தியைத்தான் தன்னைப்
பின்பற்றி வரக்கூடியவர்களுக்குச் சொல்கின்றார். "என்னைப் பின்பற்ற
விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தன் சிலுவையைத்
தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்"(மத் 16: 25) என்ற
வார்த்தைகளில் இதை நாம் கண்டுகொள்ளலாம். எனவே, சீடத்துவ
வாழ்வாக இருந்தாலும் சரி, சாதாரண ஒரு வாழ்வாக இருந்தாலும் சரி
எவர் ஒருவர் துன்பங்களை ஏற்கத் தயாராகின்றாரோ அவரே இறையாட்சிக்குள்
நுழைய முடியும். அப்படியில்லாமல் ஒருவரால் இறையாட்சிக்குள்
நுழைவது சாத்தியமில்லை.
சிந்தனை
'உனக்கு வரவிருக்கின்ற துன்பத்தைப் பற்றி அஞ்சாதே. இறக்கும்வரை
நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச்
சூட்டுவேன்"(திவெ 2:10) என்பார் ஆண்டவர். ஆகவே, நம்முடைய
விசுவாச வாழ்வில் வரும் துன்பங்களையும் சவால்களையும் மனமுவந்து
தாங்கிக்கொண்டு, இலக்கை நோக்கித் தொடர்ந்து முன்னேறுவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
|
|