Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         20 மே 2019  
                        பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 5-18

அந்நாள்களில் பிற இனத்தாரும் யூதரும் தம் தலைவர்களுடன் சேர்ந்து திருத்தூதரை இழிவுபடுத்தி, கல்லால் எறியத் திட்டமிட்டனர். இதை அவர்கள் அறிந்து லிக்கவோனியாவிலுள்ள நகரங்களான லிஸ்திராவுக்கும் தெருபைக்கும் அவற்றின் சுற்றுப்புறங்களுக்கும் தப்பிச் சென்றார்கள். அங்கெல்லாம் அவர்கள் நற்செய்தியை அறிவித்தார்கள். லிஸ்திராவில் கால் வழங்காத ஒருவர் இருந்தார். பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த அவர் ஒருபோதும் நடந்ததில்லை.

அவர் அமர்ந்து பவுல் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் நலம் பெறுவதற்கான நம்பிக்கை இருப்பதைக் கண்டு பவுல் அவரை உற்றுப்பார்த்து உரத்த குரலில், "நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும்" என்றார்.

அவர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினார். பவுல் செய்ததைக் கூட்டத்தினர் கண்டு லிக்கவோனிய மொழியில், "தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன" என்று குரலெழுப்பிக் கூறினர்.

அவர்கள் பர்னபாவைச் 'சேயுசு' என்றும், அங்குப் பவுலே பேசியபடியால் அவரை 'எர்மசு' என்றும் அழைத்தார்கள். நகருக்கு எதிரிலுள்ள சேயுசு கோவில் அர்ச்சகர் காளைகளையும் பூமாலைகளையும் கோவில் வாயிலுக்குக் கொண்டு வந்து கூட்டத்தினருடன் சேர்ந்து பலியிட விரும்பினார்.

இதைக் கேள்வியுற்ற திருத்தூதர் பர்னபாவும் பவுலும் தங்கள் மேலுடைகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள் பாய்ந்து சென்று உரக்கக் கூறியது: "மனிதர்களே, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்; நீங்கள் இந்தப் பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம். கடந்த காலங்களில் அவர் அனைத்து மக்கள் இனங்களையும் அவரவர் வழிகளில் நடக்கும்படி விட்டிருந்தார்; என்றாலும் அவர் தம்மைப்பற்றிய சான்று எதுவும் இல்லாதவாறு விட்டுவிடவில்லை. ஏனெனில் அவர் நன்மைகள் பல செய்கிறார்; வானிலிருந்து உங்களுக்கு மழையைக் கொடுக்கிறார்; வளமிக்க பருவ காலங்களைத் தருகிறார்; நிறைவாக உணவளித்து உங்கள் உள்ளங்களை மகிழ்ச்சி பொங்கச் செய்கிறார்."

இவற்றை அவர்கள் சொன்னபின்பு கூட்டத்தினர் தங்களுக்குப் பலியிடுவதை ஒருவாறு தடுக்க முடிந்தது.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 115: 1-2. 3-4. 15-16 (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: எங்களுக்கன்று, ஆண்டவரே! மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்.
அல்லது: அல்லேலூயா.
1 எங்களுக்கன்று, ஆண்டவரே! எங்களுக்கன்று: மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்; உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு அதை உமக்கே உரியதாக்கும். 2 'அவர்களுடைய கடவுள் எங்கே' எனப் பிற இனத்தார் வினவுவது ஏன்? பல்லவி

3 நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்; தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார். 4 அவர்களுடைய தெய்வச் சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே, வெறும் மனிதக் கைவேலையே! பல்லவி

15 நீங்கள் ஆண்டவரிடமிருந்து ஆசி பெறுவீர்களாக! விண்ணையும் மண்ணையும் உருவாக்கியவர் அவரே. 16 விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது; மண்ணகத்தையோ அவர் மானிடர்க்கு வழங்கியுள்ளார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 26

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 21-26

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர்மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்."

யூதா - இஸ்காரியோத்து யூதாசு அல்ல, மற்றவர் - அவரிடம், "ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?" என்று கேட்டார்.

அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: "என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

மனிதனை தெய்வமாக்கிப் பார்க்க சமூகம் விரும்புகின்றது.

இதனை சில மனிதர்களும் விரும்பி ஆசிக்கின்றார்கள்.

சில செயல்களை பார்க்கும் சமூகம் அந்த செயலை செய்ததற்கு, அந்த மனிதனை தெய்வமாக்கிப் பார்க்கின்றார்கள்.

அன்றைக்கு சீடர்களையும் தெய்வமாக்கிப் பார்க்க முற்பட்ட போது அந்த கோட்பாட்டிற்கு உடன்படாத சீடர்கள், தாங்களும் மனிதர்களே. துங்களால் அல்ல, மாறாக, தாங்கள் வழிபடும் இறைவனாலேயே இத்தகைய காரியங்கள் ஆனது என்பதனை கற்றுக் கொடுத்து, அவர்களை உண்மைக் கடவுளை வழிபட செய்தனர்.

இன்றைக்கு புளாங்காயிதம் அடைந்து, அதிலே அற்ப இன்பம் கண்டு பூரிப்படைகின்றனர். சமூகத்தை நேரிய வழியிலே நடத்திட நல்ல தெளிவான சிந்தையுள்ளவர்கள் இன்றைய தேவை.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 யோவான் 14: 21-26

கடவுளின் அன்பில் நிலைத்திருக்க, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்போம்

லே ஹன்ட் (Leigh Hunt) என்கிற பிரபல ஆங்கில எழுத்தாளர் எழுதிய கவிதைதான் "Love of Neighbor" என்பதாகும். இந்தக் கவிதையில் இடம் பெறுகின்ற ஒரு கதாப்பாத்திரம் அபு பென் ஆடம் (Abou Ben Adhem) என்பதாகும்.

அபு பென் ஆடம் நகரில் இருந்த ஒரு சாதாரண குடிசையில் வாழ்ந்து வந்தார். அவர் ஏழையாக இருந்தாலும் தன்னால் முடிந்தளவு பிறருக்கு உதவி செய்துவந்தார்.

ஒருநாள் அவர் தூங்கிக்கொண்டிருக்கும் ஏதோ ஒரு சத்தம் கேட்டு விழித்தெழுந்தார். அப்போது அவருடைய வீட்டில் ஒரு ஓரத்தில் வானதூதர் அமர்ந்து, தன்னுடைய கையில் வைத்திருந்த குறிபேட்டில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். வானதூதரைப் பார்த்து முதலில் திடுக்கிட்ட ஆடம், சிறிது சுதாரித்துக்கொண்டு, "இந்த இரவு நேரத்தில் குறிப்பேட்டில் அப்படி என்ன எழுதுகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு வானதூதர், "நான் கடவுளை அன்பு செய்வோருடைய பெயரை இந்தக் குறிப்பேட்டில் எழுதிக்கொண்டிருக்கிறன்" என்றார். உடனே ஆடம், "நீங்கள் எழுதும் இந்தப் பெயர்களில் என்னுடைய பெயர் இருக்கின்றதா?" என்று கேட்டார். "இல்லை" என்று வானதூதர் சொன்னதும் ஆடம் மிகவும் வருத்தமுற்றார். இருந்தாலும் மனதைத் தேற்றிக்கொண்டு தூங்கச் சென்றுவிட்டார்.

அடுத்த நாள் ஆடம் தூங்கிக்கொண்டிருக்கும்போது அதே போன்று வானதூதர் அவருடைய வீட்டிற்குக் வந்து, தன்னுடைய கையில் ஒரு குறிப்பேட்டை வைத்துக்கொண்டு எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த ஆடம், அவர் அருகே சென்று, "என்ன எழுதிகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். வானதூதர் அவரிடம், "கடவுள் யாராரை எல்லாம் அன்பு செய்கிறார்? என்று எழுதிக்கொண்டிருக்கிறேன்" என்றார். ஆடம் ஆர்வ மிகுதியால், "இந்த பட்டியலிலாவது என்னுடைய பெயர் இருக்கின்றதா?" என்று கேட்டார். அதற்கு வானதூதர், "ஆம், உன்னுடைய பெயர்தான் இந்தப் பட்டியலில் முதலில் இருக்கின்றது" என்றார். இதைக் கேட்டதும் அபு பென் ஆடமுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. அந்த சந்தோசத்தோடு அவர் தூங்கச் சென்றார்.

தம்மோடு இருப்பவரை யாராரெல்லாம் அன்பு செய்கிறார்களோ அதன்வழியாக கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிகிறார்களோ அவர்களைக் கடவுள் நிச்சயம் அன்பு செய்வார் என்பதைத்தான் இந்த கவிதையில் வரும் நிகழ்வு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்துக் கூறும் அறிவுரையாவது: என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என் மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர்மீது அன்புகொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்". இயேசுவின் வார்த்தைகளில் பொதிந்துள்ள உண்மையை இப்போது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஒருவர் மீது நமக்கிருக்கும் இருக்கும் அன்பை வெளிப்படுத்த நாம் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தலாம். பரிசுப் பொருட்களைத் தரலாம், இன்ன பிற காரியங்களையும் செய்யலாம். ஆனால், இவற்றையெல்லாம் விட பிறர்மீது நமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்த மிகச் சிறந்த வழி அவருக்குக் கீழ்படிந்து நடப்பதுதான் அல்லது அவருடைய வார்த்தையைக் கேட்டு நடப்பதுதான். அந்த விதத்தில் கடவுள்மீது நமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்த மிகச் சிறந்த வழி அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதுதான். அவருடைய கட்டளைகள் இறையன்பு, பிறரன்பு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஆகையால், நாம் கடவுளை அன்பு செய்கிறோம் என்பதற்கு மிகப்பெரிய சான்று அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதே ஆகும்.

இப்படி நாம் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அதன்வழியாக அவரை அன்பு செய்து வாழும்போது இரண்டு விதமான நன்மைகளை/ ஆசிர்வாதங்களைப் பெறுகின்றோம். ஒன்று கடவுள் நம்மை அன்பு செய்வார் என்பதாகும். ஆம், எவர் ஒருவர் ஆண்டவர் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்கின்றாரோ அவரைக் கடவுள் அதிகதிகமாக அன்பு செய்வார். இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது.

கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதால் நாம் பெறுகின்ற இரண்டாவது ஆசிர்வாதம் அவருடைய வெளிப்பாடாகும். இதுதான் அசைக்க முடியாத உண்மை. ஆண்டவராகிய இயேசு தன்னை அன்பு செய்த சீடர்களுக்குத் தான் உயிர்த்தெழுந்த பின் தன்னை வெளிப்படுத்தினார், அவரை வெறுத்து ஒதுக்கி, அவரைத் தாங்கள் விரும்பிய வண்ணம் நடத்திய பரிசேயர்கள் சதுசேயர்களுக்கு அல்ல.

ஆகவே, இயேசுவின் சீடர்களைய நாம், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடைய அன்பையும், இறை வெளிபாட்டையும் ஆசிராகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
யோவான் 14: 21-26

இயேசுவை அன்புசெய்வோர் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பர்

நிகழ்வு

ஹென்றி சாத்விக் (Hendry Chadwick) என்ற வரலாற்று ஆசிரியர் தன்னுடைய, The Pelican History of The Early Church and Rodney Stark, The Triump of Christianity என்ற நூலில் பதிவுசெய்கின்ற ஒரு நிகழ்வு.

251 ம் ஆண்டு கிரோக்கோ-உரோமானிய நாடுகளில் கடுமையான கொள்ளை நோய் (Plague) பரவியது. இதனால் அங்கிருந்த முக்கால்வாசிப் பேர் செத்து மடிந்தார்கள். கொள்ளை நோயால் பாதிக்கப்படாதவர்கள் தங்களுடைய உயிரைக் காத்துக்கொள்ள பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பி ஓடினார்கள். இதனால் கொள்ளைநோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ய யாருமே இல்லாத ஒரு நிலை ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கிறிஸ்தவர்கள் பலர் கொள்ளைநோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளும் இன்னபிற உதவிகளும் செய்ய முன்வந்தனர். இதனால் உயிர்க்குப் போராடிக்கொண்டிருந்த பலர் உயிர்பிழைத்தனர்.

உதவி செய்யச் சென்ற ஒருசில கிறிஸ்தவர்கள் கொள்ளைநோயினால் இறந்தபோதும், கிறிஸ்தவர்கள் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ததையும் மருத்துவச் சிகிச்சை அளித்ததையும் பார்த்துவிட்டு, பலரும் கிறிஸ்தவ மதத்தில் இணைத்தார்கள். இதனால் தொடக்ககாலத் திருஅவையே உயிரோட்டமான திருஅவையாக திகழ்ந்தது. இவர்கள் இப்படி இயேசுவின்மீதுகொண்ட அன்பின் வெளிப்பாடாக, அன்புச் செயல்களில் ஈடுபட்டதால், இயேசுவும் அவர்களோடு இருந்து, அவர்களுக்கு ஆசி வழங்கிக் காத்துவந்தார்.

நாம் நோயுற்றிருந்தேன்; என்னைக் கவனித்துக் கொண்டாய் (மத் 26:26) என்ற இயேசுவின் அன்புக் கட்டளையைத் தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வந்ததும் இயேசு அவர்களோடு இருந்ததும், இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகின்ற, "என் கட்டளைகளைக் கடைபிடிப்பவர் என்மீது அன்புகொண்டுள்ளார்" என்ற அவருடைய வார்த்தைகளை நினைவுபடுத்துவதாக இருக்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசுவின்மீது அன்பிருக்கின்றதென்றால், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழவேண்டும்

இயேசு இந்த மண்ணுலகத்தை விட்டுப் பிரிந்துபோகும் தருணத்தில், தன்னுடைய சீடர்களுக்குப் பல அறிவுரைத் தந்து அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார். அவற்றில் முக்கியமான ஓர் அறிவுரைதான் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதாகும். இயேசுவின்மீது ஒருவருக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்த பல வழிகள் இருந்தாலும் அவற்றில் முதன்மையானது, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதாகவும். இன்றைக்குப் பலரும் தங்களுக்கு இயேசுவின்மீது அன்பிருப்பதாகச் சொல்லிக்கொள்ளிக் கொண்டு பக்தி முயற்சிகளிலும் ஒறுத்தல் முயற்சிகளிலும் ஈடுபடுகின்றார்கள். பக்தி முயற்சிகளும் ஒறுத்தல் முயற்சிகளும் தேவைதான். ஆனால், அவை மட்டுமே கிறிஸ்துவின்மீது உள்ள அன்பை வெளிகாட்டுவதற்குப் போதுமான இருக்காது, நம்பிக்கையுடன் கூடிய இரக்கச் செயல்களும் வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இயேசுவின் அன்புக் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் இயேசுவை முழுமையாக அன்பு செய்பவர்களாக மாறமுடியும்.

இயேசுவை அன்பு செய்வோர்க்கு அவர் அளிக்கும் ஆசி

"என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார்" என்று சொல்லும் இயேசு, தொடர்ந்து சொல்ல வார்த்தைகள்தான், "என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர்மீது அன்புகொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்" என்பதாகும். இயேசு கூறுகின்ற இவ்வார்த்தைகளில், மூன்றுவிதமான ஆசிகள் உள்ளடங்கி இருக்கின்றன. ஒன்று, தந்தையின் அன்பு, இரண்டு, இயேசுவின் அன்பு. மூன்று, இயேசுவின் வெளிப்பாடு. இம்மூன்றையும் குறித்து சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

தந்தைக் கடவுள் எல்லார்மீதும் அன்புகொள்பவர் என்றாலும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வோர்க்கு அவர் ஆசி வழங்குவதாக இணைச்சட்ட நூல் (11:27) எடுத்துக் கூறுகின்றது. அப்படியானால் அவர் தன் மகன் இயேசுவின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வோரை அன்பு செய்வார் என்பது உறுதியாகின்றது. இதேதான் இயேசுவுக்கும் பொருந்துவதாக இருக்கின்றது. இயேசு எல்லாரையும் அன்பு செய்தாலும் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்போரை இன்னும் அதிகமாக அன்பு செய்கின்றார். இதைவிட முக்கியமான விடயம், யாரெல்லாம் இயேசுவை அன்புசெய்கின்றார்களோ அவர்களுக்கு இயேசு தன்னை வெளிப்படுத்துகின்றார். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவை அன்பு செய்யவில்லை. அதனால்தான் அவர்களுக்கு பல மறையுண்மைகள் வெளிப்படுத்தவில்லை. மாறாக, சீடர்கள் இயேசுவை அன்பு செய்தார்கள். அதனால் அவர்களுக்கு இயேசு தன்னை வெளிப்படுத்தினார். ஆகவே, இயேசுவிடமிருந்து இத்தகைய ஆசியைப் பெற, நாம் அவரைப் அன்பு செய்து வாழ்வோம்.

சிந்தனை

அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள்வதில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார் (1யோவா 4:8) என்பர் யோவான். ஆகவே, அன்பாய் இருக்கும் கடவுளை, இயேசுவை அன்பு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 முதல் வாசகம்

பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 5-18

நம்பிக்கையும் நல்வாழ்வும்

நிகழ்வு

ஆற்றங்கரையோரம் ஓரூர் இருந்தது. அந்த ஊரில் ஒருநாள் கடுமையாக வெள்ளப்பேருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கில் அவ்வூரில் இருந்த மனிதர்கள் எப்படியோ உயிர் தப்பினார்கள். ஆடு மாடுகள்தான் இழுத்துச் செல்லப்பட்டு இறந்துபோயின.

வெள்ளம் வடிவதற்கு ஒருவாரத்திற்கும் மேல் ஆகியது. ஒருவாரத்திற்குப் பிறகு ஊரில் இருந்த மக்களெல்லாம் ஆற்றங்கரைக்குச் சென்றார்கள். ஆறாம் வகுப்புப் படித்துவந்த செல்வியும் தன்னுடைய தந்தையோடு ஆற்றங்கரைக்குச் சென்றாள். அங்கு வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு செத்துக்கிடந்த ஆடுமாடுகளைப் பார்த்துவிட்டு, அதன் உரிமையாளர்கள் கதறி அழுதார்கள். வேறு சிலர் வேகமாகச் சென்றுகொண்டிருந்த ஆற்றுத் தண்ணீரை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி வேகமாகச் செல்லும் ஆற்றுத் தண்ணீரிலும் மீன்கள் துள்ளிக் குதித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தன.

இதைப் பார்த்துவிட்டு செல்வி தன்னுடைய தந்தையிடம், "அப்பா! எனக்கொரு சந்தேகம்!" என்றாள். "என்ன சந்தேகம்! தயங்காமல் கேள்" என்றார் செல்வியின் தந்தை. "அப்பா! இந்த வெள்ளத்தில் ஆடுமாடுகள் எல்லாம் அடிபட்டுச் செத்துக் கிடக்கின்றபோது, சாதாரண மீன்கள் மட்டும் எந்தவொரு பாதிப்புமில்லாமல் இருக்கின்றனவே. அது ஏன்?" என்று கேட்டாள் செல்வி. "நம்பிக்கைதான்மா" என்றார் செல்வியின் தந்தை.

"அப்பா! நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை. சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்" என்று செல்வி சொல்ல, அவளுடைய தந்தை அவளிடம், "ஆடுமாடுகள் வெள்ளப்பெருக்கைக் கண்டு பயந்துபோய் ஒதுங்கின. அதனால் வெள்ளப்பெருக்கில் மாட்டிக்கொண்டு இறந்துபோயினா. ஆனால், இந்த மீன்கள் அப்படியில்லை. அவை இந்த வெள்ளப்பெருக்கு நம்மை ஒன்றும் செய்யாது என்று நம்பிக்கையோடு இருந்து, அதன்போக்கிலே சென்றன. அதனால்தான் உயிரோடு இருக்கின்றன" என்றார். தன்னுடைய தந்தை இவ்வாறு சொன்னதைத் தொடர்ந்து செல்வி அவரிடம், "அப்படியானால் ஒன்றின்மீதோ அல்லது ஒருவர்மீதோ நாம் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்து வாழத் தொடங்கினால் அதுவோ அல்லது அவரோ நம்மை அழிவிலிருந்து காப்பாற்றி விடு(ம்)வார். இல்லையாப்பா" என்றாள். ஆமாம். நீ சொல்வது மிகச் சரி" என்றார் செல்வியின் தந்தை.

ஒருவரிடம் இருக்கும் நம்பிக்கை அவருடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட அதிசயத்தை நிகழ்த்திக் காட்டுகின்றது என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகத்திலும் நம்பிக்கையினால் குணப்பெற்ற ஒருவரைக் குறித்து வாசிக்கின்றோம். அவர் யார்? அவர் கொண்டிருந்த நம்பிக்கை அவர்க்கு எத்தகைய நன்மையைப் பெற்றுத் தந்தது? என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

நம்பிக்கையினால் நலம்பெற்ற கால் விழங்காத மனிதர்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், பவுல் லிக்கவோனியாவிலுள்ள லிஸ்திராவில் போதிக்கத் தொடங்குகின்றார். அவருடைய போதனையைப் பிறவியிலேயே கால் ஊனமுற்ற ஒருவர் கேட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்த பவுல், அவரிடம் நலம் பெறுவதற்கான நம்பிக்கை இருப்பதைக் கண்டு, "நீர் எழுந்து நேராக நில்லும்" என்கின்றார். இதனால் அந்த மனிதர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்குகின்றார். இதைப் பார்த்துவிட்டு மக்கள், "தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன" என்று கூறத் தொடங்குகிறார்கள்.

முதலில் கால் ஊனமுற்ற அந்த மனிதரின் நம்பிக்கை அவர்க்கு எவ்வாறு நலமளித்தது என்று பார்ப்போம். அதைத் தொடர்ந்து மக்கள் அதை எவ்வாறு பார்த்தார்கள் என்று பார்ப்போம். தூய பவுல் உரோமையர்க்கு எழுதிய திருமடலில், "அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்" (உரோ 10:17) என்பார். இந்த வார்த்தைகளுக்கு ஏற்ப பவுல், ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிவித்ததைக் கேட்டு, கால் ஊனமுற்ற மனிதர் அவர்மீது நம்பிக்கை கொள்கின்றார்கள். அந்த நம்பிக்கையினாலேயே அவர் எழுந்து நடக்கும் ஆற்றல் பெறுகின்றார். ஆகையால், ஒருவரிடம் நம்பிக்கை உருவாகவேண்டும் என்றால், அவர் ஆண்டவரைப் பற்றி அறிவிக்கப்படும் நற்செய்தியைக் கேட்டாகவேண்டும்.

மக்கள் பவுலையும் பர்னபாவையும் தெய்வமாக்க முயற்சி செய்தல்

பிறவியிலேயே கால் ஊனமுற்றவரைப் பவுல் குணமாக்கியதும், மக்கள் அவரை எர்மசு என்றும் பர்னபாவை சேயுசு என்றும் அழைத்து, அவர்களுக்குப் பலிசெலுத்தத் முயற்சி செய்கிறார்கள். அப்பொழுது பவுல் அவர்களைத் தடுத்தி நிறுத்தி, நாங்கள் சாதாரண மனிதர்கள்தான்... நீங்கள் வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்கின்றார். இதனால் அவர்கள் பவுலுக்கும் பர்னபாவுக்கும் பலிசெலுத்துவதை நிறுத்திக் கொள்கிறார்கள்.

பவுலும் பர்னபாபும் நினைத்திருந்தால் மக்களுக்கு முன்பாகத் தங்களைக் கடவுளாகக் காட்டியிருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யாமல், மக்களை வாழும் கடவுளிடம் திரும்பி வருமாறு சொல்கின்றார்கள். இவர்கள் இருவரிடமும் இருந்த இந்த மனநிலை அதாவது கடவுளுக்குப் பெருமை சேர்க்கும் எண்ணம் நம் ஒவ்வொருவரிடமும் இருப்பது தேவையானது.

சிந்தனை

ஏழைகளுக்கு நம்பிக்கையைத் தவிர வேறு மருந்தில்லை என்பார் ஷேக்ஸ்பியர். நம்பிக்கை ஏழைகளுக்கு மட்டுமல்ல, எல்லார்க்கும் மருந்துதான். ஆகவே, நமது வாழ்வில் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!