|
|
18 மே 2019 |
|
|
பாஸ்கா காலம்
நான்காம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 44-52
அடுத்து வந்த ஓய்வுநாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய
நகரத்தார் அனைவரும் கூடிவந்தனர். மக்கள் திரளைக் கண்ட யூதர்கள்
பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப்
பழித்துரைத்தார்கள்.
பவுலும் பர்னபாவும் துணிவுடன், "கடவுளின் வார்த்தையை உங்களுக்குத்தான்
முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித்
தள்ளி நிலைவாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே
தீர்ப்பளித்துக் கொண்டீர்கள்.
எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம். ஏனென்றால், `உலகம்
முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு
ஒளியாக ஏற்படுத்துவேன்' என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்"
என்று எடுத்துக் கூறினார்கள்.
இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின்
வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர்
அனைவரும் நம்பிக்கை கொண்டனர். அப்பகுதியெங்கும் ஆண்டவரின்
வார்த்தை பரவியது.
ஆனால் யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும்
நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும்
இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள்.
அவர்கள் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக
உதறிவிட்டு இக்கோனியாவுக்குச் சென்றார்கள். சீடர்களோ தூய ஆவியால்
ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
98: 1. 2-3ab, 3cd-4 (பல்லவி: 3c)
=================================================================================
பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
அல்லது: அல்லேலூயா.
1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு
செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும்
அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி
2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம்
நீதியை வெளிப்படுத்தினார். 3ab இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட
தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி
3உன உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப்
பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.
பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 8: 31b-32
அல்லேலூயா, அல்லேலூயா! என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து
வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும்
இருப்பீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என்னைக் காண்பது, தந்தையைக் காண்பது ஆகும்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
14: 7-14
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி: "நீங்கள் என்னை அறிந்திருந்தால்
என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை
அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்" என்றார்.
அப்போது பிலிப்பு அவரிடம், "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக்
காட்டும்; அதுவே போதும்" என்றார்.
இயேசு அவரிடம் கூறியது: "பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு
இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக்
காண்பது ஆகும். அப்படியிருக்க,
'தந்தையை எங்களுக்குக்
காட்டும்' என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும்
தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக்
கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர்
தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார்.
நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால்,
என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை
என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப்
பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு
தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக்
கேட்டாலும் செய்வேன்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை:
உலகம் முழுவதும் மீட்பினை அடைய நற்செய்தி அறிவிக்கப்பட
வேண்டும்.
வார்த்தை பரவியது. இன்னல் பெருகியது.
இன்றைக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டாலும் பரவுகின்றதா என்பது
கேள்வியே.
அறிவிப்பது நம்முடைய பணி. பரவச் செய்வதும் நம்பிக்கை கொண்டவர்களை
கூட்டிச் சேர்ப்பதும் அவருடைய பணி.
ஆனால் இன்றைக்கு அறிவிப்பது என்பது உண்மையாய் நடக்கின்றதா இல்லை
கடைச்சரக்காக மாறியிருக்கின்றதா என்பதனை கேட்டுப் பார்க்கும்
தருணம் இது.
இன்னல் பெருகி வருகின்றது.
இதுவும் ஒரு நல்ல அடையாளமே.
இதனை தாங்கி பயணிக்க செபத்தினால் ஒருவர் ஒருவரை தாங்குவோம்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
யோவான் 14: 7-14
"நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள்"
நிகழ்வு
முன்பொரு காலத்தில் உரோமையை ஓர் அரசர் ஆண்டுவந்தார். அவர் மற்ற
அரசர்களைப் போன்று அரண்மனையில் வாழாமல், மிகவும் சாதாரண ஒரு
வீட்டில் எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். ஒருசமயம் அவர் எதிரி
நாட்டோடு போர்த்தொடுத்து மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றதால்,
உரோமையில் அவருக்குப் பிரமாண்டமாக வரவேற்புக் கொடுக்க ஏற்பாடு
செய்யப்பட்டது. அதே நேரத்தில் அரசர் தன்னுடைய பரிவாரங்களோடு வருகின்றபோது
யாரும் குறுக்கே வந்துவிடக்கூடாது என்பதற்காக சாலையின் இரண்டு
பக்கமும் கயிறுகள் கட்டப்பட்டன.
குறிப்பிட்ட நாளில் வெற்றிவீரராய் நாட்டிற்குத் திரும்பிவரும்
அரசரை வரவேற்க மக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக்
கொண்டிருக்கும்போது, அரசர் தன்னுடைய பரிவாரங்களோடு
நாட்டிற்குள் நுழைந்தார். மக்கள் அனைவரும் தாங்கள் வைத்திருந்த
மலர்களை அள்ளி, அரசர்மீது தூவி வரவேற்புக்
கொடுத்துக்கொண்டிருக்கும்போது, ஒரு தாயோடு இருந்த சிறுவன் மட்டும்
கூட்டத்தையும் தனக்கு முன்பாகக் கட்டப்பட்டிருந்த கயிற்றையும்
விலக்கிக்கொண்டு தேரில் வந்துகொண்டிருந்த அரசரை நோக்கி ஓடினான்.
இதைப் பார்த்ததும், படைவீரன் ஒருவன் ஓடிவந்து அந்தச் சிறுவனைத்
தடுத்து நிறுத்தி, "தம்பி! இப்பொழுது வந்துகொண்டிருப்பது
யாரென்று உனக்குத் தெரியுமா...? அவர் இந்நாட்டு அரசர்... அவர்
வருக்கின்றபோது இப்படியெல்லாம் குறுக்கே வரக்கூடாது" என்றார்.
அதற்குச் அந்தச் சிறுவன், "அவர் உங்களுக்கு வேண்டுமானால் அரசாக
இருக்கலாம். எனக்கு அவர் தந்தை" என்றான். சிறுவன் இப்படிச்
சொன்னதும் படைவீரன் எதுவும் பேசாமல், சிறுவனை இளவரசனை தன்னுடைய
தந்தையை பார்க்க அனுமதித்தான்.
விவிலிய அறிஞரான வில்லியம் பார்க்லே சொல்லக்கூடிய இந்த நிகழ்வில்
வரும் அரசர், மற்றவருக்கு அரசராக இருந்தாலும், அந்தச்
சிறுவனுக்குக் அவர் தந்தைதான். அதுபோன்றுதான் இயேசு இந்த
உலகத்திற்கு மீட்பராகவும் ஆண்டவராகவும் இருக்கலாம். ஆனால் அவர்
நம்முடைய தந்தை (யோவான் 14:9; 21:5); அவரைக் காண்பது தந்தையைக்
காண்பதாகவும். ஆகவே, இத்தகைய உண்மையை எடுத்துச் சொல்லும்
இன்றைய நற்செய்தி வாசகத்தைக் குறித்து சிந்தித்துப் பார்த்து
நிறைவுசெய்வோம்.
இயேசுவைக் காண்பது தந்தைக் கடவுளை காண்பதற்கு இணையானது
நற்செய்தி வாசகத்தில் இயேசு தனக்கும் தந்தைக் கடவுளுக்கும்
உள்ள உறவை ஒற்றுமையை - குறித்துப் பேசுகின்றார். அப்படிப்
பேசுகின்றபோதுதான் பிலிப்பு அவரிடம், "ஆண்டவரே, தந்தையை
எங்களுக்குக் காட்டும்" என்கின்றார். உடனே இயேசு அவரிடம்,
"என்னை காண்பது தந்தையைக் காண்பதாகும்" என்கின்றார்.
இயேசு, பிலிப்பிடம் கூறிய இவ்வார்த்தைகளை இன்னும் ஆழமாகப்
புரிந்துகொள்ளவேண்டும் என்றால், யோவான் நற்செய்தி 5:26 ல்
வருகின்ற, "தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும்
வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்" என்ற வார்த்தைகளை
இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது. வாழ்வு கடவுளிடமிருந்து
வரக்கூடியது. அப்படிப்பட்ட வாழ்வு வார்த்தையாம்
இயேசுவிடமிருந்து வருகின்றதென்றால், தந்தைக் கடவுளும்
இயேசுவும் வேறுவேறு அல்ல ஒன்றுதான். எனவே, இயேசு சொல்வதுபோல்
அவரைக் காண்பது தந்தைக் கடவுளைக் காண்பதைப் போன்றதாகும்.
இப்படித் தந்தைக் கடவுளும் இயேசுவும் ஒன்றாக இருக்கும் நிலையை
இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்றால், அதற்கு இன்றைய
நற்செய்தியின் தொடக்கத்தில் இயேசு சொல்வதுபோல் அவரை
அறிந்துகொள்வது அவசியம்.
நான்குவிதமான அறிதல்கள்
இயேசுவைக் காண்பது தந்தைக் கடவுளைப் காண்பது என்று பார்த்தோம்.
இத்தகைய தெளிவினை இன்னும் ஆழமாகப் பெற்றுக்கொள்ளவேண்டும்
என்றால், இயேசுவை அறிதல் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை
இப்பொழுது பார்ப்போம்.
திருவிவிலியம் நான்குவிதமான அறிதல்களைக் குறித்துப்
பேசுகின்றது. ஒன்று. வெறுமனே அறிதல். இரண்டு, அறிவதோடு
மட்டுமல்லாமல், அந்த நிகழ்விற்குப் பின்னால் இருக்கும்
உண்மையையும் அறிதல். மூன்று, அறிந்தன்மீது நம்பிக்கை வைத்தல்
(யோவா 17:3; தொநூ 4:1) நான்கு, அறிவதோடும்
நம்பிக்கைகொள்வதோடும் மட்டுமல்லமால், அதோடு உறவை
ஏற்படுத்துதல். தூய பவுல் இதைதான், "கிறிஸ்துவையும் அவர்தம்
உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில்
பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்" (பிலி
3:10) என்று கூறுவார். ஆதலால், இயேசுவை அறிதல் என்பது அவரோடு
இணைந்திருந்து, அவரைப் போன்று துன்பங்களை ஏற்றுக்கொள்வதாகும்.
அப்படிப்பட்ட ஒருவரால்தான் இயேசுவை அறியமுடியும். மேலும்
இயேசுவை அறிகின்றபோதுதான் தந்தையையும் அறிந்துகொள்ள முடியும்.
சிந்தனை
'இறைமகன் வந்து உண்மையான இறைவனை அறிந்துகொள்ளும் ஆற்றலை
நமக்குத் தந்துள்ளார்'(1யோவா 5:20) என்பார் யோவான். ஆகவே,
தந்தைக் கடவுளை இயேசுவில் காணுகின்ற நாம், அவரை முழுமையாக
அறிந்து, அதன்வழியாக அவரோடு இணைந்து அவருக்கு உகந்த வாழ்க்கை
வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
திருத்தூதர் பணிகள் 13: 44-52
பவுலின்மீதும் பர்னபாவின்மீதும் பொறாமை கொண்ட யூதர்கள்
நிகழ்வு
உலக செல்வங்களைத் தூக்கி எறிந்துவிட்டு லிபியன் பாலைவனத்தில்
தனியாக நோன்பிருந்து வந்த வனத்து அந்தோனியாரை சாத்தான் பல
வழிகளில் சோதித்துப் பார்த்தது. அவரோ சாத்தானின் எல்லா விதமான
சோதனைகளையும் முறியடித்துவிட்டு தொடர்ந்து நோன்பிருந்து
வந்தார்.
ஒருநாள் சாத்தானுக்கு வித்தியாசமான ஒரு யோசனை வந்தது. 'இந்த
யோசனையின் படி செயல்பட்டால், அந்தோனியாரை எளிதாக
வெற்றிக்கொண்டு விடலாம்'என்று முடிவுசெய்துகொண்டு சாத்தான்
ஒரு வயதான துறவியைப் போன்று வேடம் தரித்துக்கொண்டு, வனத்து
அந்தோனியார்க்கு முன்பாகச் சென்று ஒரு வானதூதரைப் போன்று
வணங்கியது. பின்னர் அது அந்தோனியாரிடம், "சகோதரா! நான்
உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.
இந்த செய்தியைக் கேட்டால், நீங்கள் நிச்சயமாக
மகிழ்ச்சியடைவீர்கள்" என்றது. அதற்கு அந்தோனியார், "நான்
மகிழ்ச்சியடையும் அளவுக்கு அப்படியென்ன முக்கியமான செய்தியைக்
கொண்டுவந்திருக்கிறீர்கள்... அதை உடனடியாகச் சொல்லுங்கள்"
என்றார்.
உடனே சாத்தான் அவரிடம், "அது வேறொன்றுமில்லை.
அலெக்சாந்திரியாவில் உங்களுக்கு ஒரு சகோதரர் இருக்கிறார்
அல்லவா... அவர் அந்நகரின் ஆயராக உயர்த்தப்பட்டிருக்கிறார்"
என்றது. இதைக் கேட்டதும் பொறாமையினால் வானதூதரின் முகம் போன்று
இருந்த வனத்து அந்தோனியாரின் முகத்தில் ஒரு கணம் இருள்படியத்
தொடங்கியது. இதைப் பார்த்ததும் சாத்தான் தனக்குள்,
"அந்தோனியார் நாம் வைத்த சோதனையில் வீழ்ந்துவிட்டார்" என்று
சந்தோசப்படத் தொடங்கியது. ஆனால் வனத்து அந்தோனியார், தனக்குள்
ஒரு மாற்றம் ஏற்படுத்துவதை உணர்ந்து, 'நான் என் சகோதரனின்
வளர்ச்சியில் ஒருகணம் பொறாமைப்படும் அளவுக்கு ஆகிவிட்டதே!
அப்படியானால் நம்மோடு பேசிக்கொண்டிருப்பது உண்மையிலேயே
துறவியல்ல, சாத்தான்தான்'என்று அதனை விரட்டியடித்தார்.
ஒருவருடைய உள்ளத்தில் ஏற்படும் பொறாமை, அவரைச் சாத்தானாக்கிக்
கெட்டுச் சீரழிய வைத்துவிடும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு நல்ல
எடுத்துக்காட்டு. இன்றைய முதல் வாசகத்திலும் யூதர்கள்
பவுலின்மீதும் பர்னபாவின்மீதும் பொறாமை கொள்வதைக் குறித்து
வாசிக்கின்றோம். அவர்கள் அவர்கள் இருவர்மீதும் ஏன் பொறாமை
கொள்ளவேண்டும்? அந்தப் பொறாமை அவர்களை என்ன செய்ய வைக்கின்றது?
என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
பவுல் மற்றும் பர்னபாவின் போதனையைக் கேட்கத் திரண்டு வந்த
நகரத்தவரைப் பார்த்து, இருவர்மீதும் பொறாமைகொண்ட யூதர்கள்
திருத்தூதர் பணிகள் நூலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தில்,
ஓய்வுநாள் அன்று பவுல் மற்றும் பர்னபா போதித்த ஆண்டவரின்
வார்த்தையைக் கேட்க நகரத்தில் இருந்த அனைவரும் வருகின்றார்கள்.
இதைக் கண்டு யூதர்கள் அவர்கள்மீது பொறாமை கொள்கின்றார்கள்.
ஒருவர்மீது இன்னொருவர்க்கு வரும் பொறாமை என்னவெல்லாம் செய்யும்
என்பதற்கு இன்றைய முதல் வாசகம் ஒரு மிகச் சிறந்த
எடுத்துக்காட்டு. அடிப்படையில் தன்னால் முடியவில்லையே என்பதால்
வரும் பொறமை அந்த மனிதரை என்னவேண்டுமானாலும் செய்யத் தூண்டும்.
பழைய ஏற்பாட்டில் வரும் காயின் ஆபேலைக் கொன்றதும்
பொறாமையினால்தான், சவுல் தாவீது அரசரைக் கொல்லத் துணிந்ததும்
பொறாமையினால்தான். இயேசுவுக்கு யூதர்கள் சூழ்ச்சி செய்தததும்
பொறாமையினால்தான். அந்த அடிப்படையில் பவுல் மற்றும் பர்னபா
பேசுவதைக் கேட்க நகரத்தில் உள்ள எல்லாரும் வருகின்றார்களே என்ற
பொறாமையினால் அவரைப் பழித்துரைக்கத் தொடங்குகின்றார்கள்
யூதர்கள்.
இங்கு ஒரு முக்கியமான விடயத்தைக் கவனிக்கவேண்டும். அது
என்னவெனில் யூதர்கள் தங்களைப் பழித்துரைக்கிறார்கள்
என்பதற்காகப் பவுலும் அவரோடு இருந்த பர்னபாவும் பதிலுக்குப்
பழித்துரைக்கவில்லை. மாறாக, அவர்களுக்கு அவர்கள் உண்மையை
எடுத்துரைக்கின்றார்கள். பவுலும் பர்னபாவும் யூதர்களுக்கு
எடுத்துரைத்த உண்மை என்ன என்று தொடர்ந்து சிந்தித்துப்
பார்ப்போம்.
யூதர்கள் ஆண்டவரின் வாக்கைப் புறக்கணித்ததால், அவ்வாக்கு
புறவினத்தார்க்கு அறிவிக்கப்படுகின்றது
யூதர்கள் தங்களைப் பழித்துரைக்கத் தொடங்கியதும், பவுலும்
பர்னபாவும் அவர்களிடம், ஆண்டவரின் வாக்கு முதலில்
உங்களுக்குத்தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் நீங்கள் அதைப்
புறக்கணித்ததால், அவ்வாக்கு புறவினத்தார்க்கு
அறிவிக்கப்படுகின்றது என்கின்றார்கள். இவ்வாறு சொல்லிவிட்டுத்
தொடர்ந்து அவர்கள், "உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு
நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்'என்ற
இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்தில் இடம்பெறும் இறைவார்த்தையை
(எசா 49:6) மேற்கோள் காட்டிப் பேசுகின்றார்கள். இதனால்
யூதர்கள் அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டாலும், புறவினத்தார்
மகிழ்ச்சி அடைகின்றார்கள். இந்நிகழ்வு நமக்குச் சொல்லக்கூடியது
ஒன்றே ஒன்றுதான். அதுதான், எத்தகைய சூழ்நிலையிலும் நாம்
இறைவார்த்தையை எடுத்துரைக்க மறந்துவிடக்கூடாது என்பதாகும்.
சிந்தனை
'அந்துப்பூச்சி ஆடையை அரிப்பதுபோல், அழுக்காறு அல்லது பொறாமை
மனிதரை அழித்துவிடும்'என்பார் கிறிசோஸ்டம் என்ற எழுத்தாளர்.
எனவே, நம்முடைய அழிவிற்குக் காரணமான பொறாமையை நம்முடைய
வாழ்விலிருந்து அகற்றிவிட்டு, அடுத்தவர் வளர்ச்சியில் மகிழும்
நல்ல மனதை வளர்த்துக் கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
இயேசுவின் திருப்பெயர் நமக்குத் தரும் ஜெயம்
கம்யூனிஸ நாடாகிய சீனாவில் மறைபோதகப் பணியைச் செய்தவர்
வணக்கத்திற்குரிய ஆயர் மெல்கியோர் (Melchior) என்பவர்.
சீனாவில் நற்செய்திப் பணியைச் செய்வது என்பது மற்ற நாடுகளில்
நற்செய்திப் பணியைச் செய்வதைவிடவும் மிகவும் சவாலான ஒரு
காரியமாகும். அப்படியிருந்தும் நிறையப் பேர் தங்களுடைய உயிரைத்
துச்சமென நினைத்து, அங்கு சென்று நற்செய்திப் பணி செய்து,
இன்னுயிரைத் துறந்தார்கள். அப்படி இயேசுவுக்காக தன்னுடைய
உயிரைத் துறந்தவர்தான் ஆயர் மெல்கியோர்.
ஒருசமயம் அவர் ஆண்டவரின் நற்செய்தியை மக்களுக்குப் போதித்துக்
கொண்டிருக்கும்போது எதிரிகள் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். உடனே
அங்கிருந்த மக்கள் ஓடிவிட, அவர் மட்டும் தனியாளாய் பயப்படாமல்
அங்கு நின்றார். அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஐந்தாறு
பேர் சேர்ந்து அவருடைய ஆடையைக் களைந்து, அவரைத் தெருவில்
தரதரவென இழுத்துச் சென்று, ஊரின் பொதுவான இடத்தில் கொண்டு போய்
நிறுத்தினார்கள். இதைப் பார்த்து மக்கள் அனைவரும் அங்கு கூடி
வந்தனர்.
பின்னர் எதிரிகளின் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் ஆயர்
மெல்கியோரை ஒரு கம்பத்தில் கட்டிவைத்து அவருடைய விரல்களையும்
கைகளையும் கால்களையும் துண்டித்தான். இறுதியாக, அவருடைய
உயிரையும் அவரிடமிருந்து எடுத்தான். இப்படிப்பட்ட கொடிய
சித்திரவதையின்போது ஆயர் சிறிதளவும் வேதனைப் படவில்லை. மாறாக
'இயேசு இயேசு'என்று இறைவனின் திருப்பெயரைச் சொல்லிக்கொண்டே
இருந்தார். இயேசுவின் திருப்பெயர்தான் அவருக்குத் துன்பத்தை
இன்முகத்தோடு தாங்குவதற்கான வல்லமையைத் தந்தது. எல்லாவற்றையும்
கூடி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிலர் இயேசுவின்
மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினர்.
இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி மன்றாடும்போது நம்முடைய
துன்பங்கள் தூரப்போகும், வேதனைகள் குறையும், வேண்டுவது
கிடைக்கும் என்பதை இந்த நிகழ்வு நமக்க எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடத்தில்,
"நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு
தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால்
எதைக் கேட்டாலும் செய்வேன்" என்கிறார்.
நிறைய நேரங்களில் நாம் ஜெபிக்கின்றோம். ஆனால் நம்முடைய
ஜெபங்கள் கேட்கப்படாமல் போவதற்குக் காரணம், நாம் இயேசுவின்
பெயரைச் சொல்லி ஜெபிக்காததுதான். ஆண்டவர் இயேசுவோ என் பெயரால்
எதைக் கேட்டாலும் செய்வேன் என்கிறார். அப்படியானால் இயேசுவின்
பெயருக்கு எவ்வளவு வல்லமை இருக்கின்றது என்பதை நாம்
புரிந்துகொள்ளவேண்டும்.
தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய மடலில் சொல்வார், "இயேசுவின்
பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர், அனைவரும்
மண்டியிடுவர்" என்று கூறுவார் (பிலி 2:10). ஆம், இயேசுவின்
பெயர் அவ்வளவு உயர்ந்தது, அவ்வளவு வல்லமை நிறைந்தது. இயேசுவின்
பெயருக்கு உள்ள மகிமையை எடுத்துச் சொல்லும் பவுலடியார், "எதைச்
சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின்
பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையை கடவுளுக்கு நன்றி
செலுத்துங்கள்" என்று கூறுவார் (கொலோ 3:17). ஆகையால், நாம்
எதைச் செய்தாலும் சொன்னாலும் ஆண்டவருடைய பெயரைச் சொல்லிச்
செய்யும்போது அங்கே கடவுளுடைய ஆசிர் அபரிவிதமாய் இருக்கும்
என்பது உண்மையாக இருக்கின்றது.
திருத்தூதர் பணிகள் நூலில் இயேசுவின் பெயரால் நடக்கும் புதுமை
மிகவும் அற்புதமானது. பிற்பகல் வேளையில் இறைவனிடம்
வேண்டுவதற்காக பேதுருவும் யோவானும் செல்லும்போது எருசலேம்
திருக்கோவிலின் அழகுவாயில் அருகே இருந்த பிச்சைக்காரர்
அவர்களிடம் பிச்சைக் கேட்கின்றார். அப்போது பேதுருவோ அவரிடம்,
"வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக்
கொடுக்கின்றேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து
நடந்திடும்" என்கிறார். உடனே பிறவியிலே கால் ஊனமுற்ற அவர்
எழுந்து நடக்கின்றார் (திப 3:1-10). இயேசுவின் திருப்பெயரால்
எப்படியெல்லாம் வல்ல செயல்கள் நடக்கின்றன என்பதற்கு இந்த
நிகழ்வு ஒரு சான்று.
ஆகவே, நாம் ஜெபிக்கின்றபோது இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி
ஜெபிக்கவேண்டும், அப்போது நாம் கேட்டது கிடைக்கும். கேட்டது
கிடைக்கும் என்பதற்காக தீய எண்ணத்தோடு ஜெபித்தால் அது
ஒருபோதும் நிறைவேறாது. மாறாக தூய எண்ணத்தோடும் ஆண்டவரின்
திருப்பெயரைச் சொல்லி மன்றாடும்போதும் இறைவனின் ஆசிர்
நிறைவாகக் கிடைக்கும் என்பது உறுதி.
எனவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் இயேசுவின்
திருப்பெயரைச் சொல்லி மன்றாடுவோம், அதன்வழியாக இறைவன்
அளிக்கும் ஆசிரை நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்
சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜெர்மனியில் உள்ள வார்சா (Warsaw)
என்ற பகுதியில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் அங்கே
இருந்த நிலக்கிழார் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தான். ஆனால்
அந்த விவசாயியால் வாங்கிய கடனைத் திருப்பிய அடைக்க முடியாத
சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் நிலக்கிழார் விவசாயிடம், "நீ
நாளைக்குள் என்னிடம் வாங்கிய கடனைத் திருப்பி அடைக்காவிட்டால்,
உன்னையும் உன்னுடைய வீட்டில் இருக்கும் யாவரையும்
வெற்றுடம்போடு பனிக்கட்டியில் உருட்டி சித்ரவதை செய்வேன்"
என்று எச்சரித்திருந்தான். விவசாயி என்ன செய்வதென்று தெரியாமல்
விழித்தான்.
மாலை நேரம் தேவாலயத்தில் ஆலயமணி ஒலித்தபிறகு விவசாயி தன்னுடைய
குடும்பத்தில் இருந்த எல்லாரோடும் முழந்தாள் படியிட்டுச்
ஜெபிக்கத் தொடங்கினான். ஏறக்குறைய அரைமணி நேர ஜெபத்திற்குப்
பிறகு, திடிரென்று அவர்கள் இருந்த வீட்டின் ஜன்னல் கதவு
தட்டப்படும் சத்தம் கேட்டது.
உடனே விவசாயி எழுந்து சென்று, என்ன சத்தம் என்று பார்த்தான்.
அங்கே ஒரு காகம் நின்றுகொண்டிருந்தது. அதன் அலகில் மோதிரம்
ஒன்று இருந்தது. அந்த மோதிரம் சாதாரண மோதிரம் அல்ல, அது அரசர்
முன்பொருநாள் தவறவிட்ட மோதிரம். எனவே அவன் அந்த மோதிரத்தை
காகத்திடமிருந்து பறித்து, அரசனிடம் கொண்டுபோய்க் கொடுத்தான்.
அரசனும் அதைப் பார்த்து, மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தான்.
பின்னர் அரசன் தொலைந்து போன அந்த மோதிரத்தைத் கண்டுபிடித்துத்
தந்த அந்த விவசாயிக்கு நிறைய பணம் கொடுத்து அனுப்பினான்.
விவசாயி அந்தப் பணத்தை நிலக்கிழாரிடம் கொடுத்து, தன்னுடைய கடன்
நீங்கப்பெற்று, நிம்மதியாக வாழ்ந்து வந்தான்.
இறைவனிடம் கேட்கும்போது நாம் கேட்கின்ற வரங்களைத் தருவார்
தருவார் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "நீங்கள் என்னிடம்
கேட்பதை எல்லாம் நான் உங்களுக்குத் தருவேன்" என்கிறார்.
கேட்பது கிடைக்கும் என்ற இறைவனின் வாக்குறுதி நமக்கு எவ்வளவு
பெரிய நம்பிக்கையைத் தருகிறது. திருப்பாடல் 34:15 ல்
வாசிக்கின்றோம், "ஆண்டவரின் கண்கள் அவர்களை (நீதிமான்களை)
நோக்குகின்றன; அவரது செவிகள் அவர்களது மன்றாட்டுகளைக்
கேட்கின்றன" என்று. ஆம், நாம் இறைவனை நோக்கி மன்றாடும்போது,
அவர் நமது மன்றாட்டுகளைக் கேட்டு நமக்கு ஆசிர் அளிப்பார்
என்பதுதான் உண்மை.
ஒருசிலர் நினைக்கலாம் நான் இறைவனிடம் தொடர்ந்து கேட்டும், அவர்
எனக்கு ஒன்றும் தரவில்லையே என்று. இதற்கு முக்கியமான காரணம்
நமது வேண்டுதல் இறைவனுக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம்
அல்லது நாமே இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழாமல் இருக்கலாம்.
இஸ்ரயேல் மக்கள் கடவுளை நோக்கி, "நாங்கள் உண்ணா நோன்பிருந்த
பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்?; நாங்கள் எங்களைத்
தாழ்த்திக் கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்?
என்கிறார்கள். அதற்குக் கடவுள், "நீங்கள் நோன்பிருக்கும்
நாளில் உங்கள் ஆதாயத்தையே நாடுகின்றீர்கள்: உங்கள் வேலையாள்கள்
அனைவரையும் ஒடுக்குகின்றீர்கள். இதோ, வழக்காடவும், வீண்
சண்டையிடவும், கொடும் கையால் தாக்கவுமே நீங்கள்
நோன்பிருக்கிறீர்கள்! இன்றுபோல் நீங்கள் உண்ணா நோன்பிருந்தால்
உங்கள் குரல் உன்னதத்தில் கேட்கப்படாது" என்கிறார் (எசாயா
புத்தகம் 58: 3,4).
ஆக, நாம் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழாதபோது நமது ஜெபம்
கேட்கப்படாது என்பது உண்மை. எனவே நாம் இறைவனுக்கு உகந்த
வாழ்க்கை வாழ்ந்து, இறைவனின் நோக்கி மன்றாடுவோம். அதன்வழியாக
இறைவனின் அருளை நிறைவாய் பெறுவோம்.
திருப்பாடல் 120:1 நான் இன்னலுற்ற வேளையில் ஆண்டவரை நோக்கி
மன்றாடினேன்; அவரும் எனக்கு செவிசாய்த்தார்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
அதுவே போதும்
'ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும். அதுவே போதும்'
இது பிலிப்பின் விண்ணப்பம்.
இந்த விண்ணப்பத்திற்கு பதில் தரும் இயேசு அதை மூன்று
கேள்விகளாகத் தருகின்றார்:
(அ) இவ்வளவு காலம் நான் உங்களோடு உங்களோடு இருந்தும் நீ என்னை
அறிந்துகொள்ளவில்லையா?
(ஆ) என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க,
தந்தையை எங்களுக்குக் காட்டும் என்று நீ எப்படிக் கேட்கலாம்?
(இ) நான் தந்தையினுள்ளும், தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ
நம்புவதில்லையா?
இயேசுவின் இந்தக் கேள்விகள் அறிதல், கேட்டல், நம்பிக்கை
கொள்தல் என்ற மூன்று நிலைகளில் இருக்கிறது.
மேற்காணும் கேள்விகள்-பதில்களிலிருந்து நாம் மூன்று
உள்கருத்துக்களை எடுத்துக்கொள்வோம்:
1.தந்தையாகிய இறைவனே கடவுள். அந்தக் கடவுளிடம் திரும்பிச்
செல்கிறார் இயேசு. அப்படி என்றால், அவர் அந்தக்
கடவுளிடமிருந்து வந்தவர். மேலும், தந்தையும் இயேசுவும் ஒருவர்
மற்றவரோடு இணைந்திருப்பதால் இயேசுவும் கடவுளே.
2. தந்தை மற்றும் இயேசு என்னும் இந்தக் கடவுளோடு சீடர்களும்
இணைந்துகொள்ள முடியும். ஆக, கடவுள்தன்மையில் இருந்து மனிதர்கள்
அந்நியப்பட்டவர்கள் அல்லர். மாறாக, அந்த தன்மையில்
இணைந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள். இந்த ஆற்றலை உறுதி
செய்பவர் இயேசு.
3. சீடர்கள் இயேசுவோடு ஏற்படுத்திக்கொள்ளும் ஒன்றிணைப்புக்கு
அடிப்படை தேவை அவர்கள் இயேசுவின்மேல் கொண்டிருக்கின்ற
நம்பிக்கை. இயேசுவும் தந்தையும் ஒன்று என்று நம்ப வேண்டும்.
அந்த தந்தையின் ஒன்றிப்பை நம்புவதற்கு இயேசுவின் சொற்களும்,
செயல்களும் சான்றாக அமைகின்றன.
- Fr. Yesu Karunanidhi, Archdiocese of Madurai. +91 948 948
21 21
|
|