Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         17 மே 2019  
                        பாஸ்கா காலம் நான்காம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து தமது வாக்குறுதியை நிறைவேற்றினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 26-33

அந்நாள்களில் பவுல் பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவுக்கு வந்தபோது, அவர் தொழுகைக்கூடத்தில் கூறியது: "சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது.

எருசலேமில் குடியிருக்கும் மக்களும் அவர்களுடைய தலைவர்களும் அம்மீட்பரை அறியவில்லை; ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைப் புரிந்துகொள்ளவில்லை; ஆயினும் அவருக்கு அவர்கள் தீர்ப்பளித்தபோது அவ்வார்த்தைகள் நிறைவேறின. சாவுக்குரிய காரணம் எதுவும் அவரிடம் இல்லாதிருந்தும், அவரைக் கொல்ல அவர்கள் பிலாத்திடம் கேட்டார்கள்.

மறைநூலில் அவரைப்பற்றி எழுதியுள்ள அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தார்கள். பின்பு அவரைச் சிலுவையிலிருந்து இறக்கிக் கல்லறையில் வைத்தார்கள். ஆனால் இறந்த அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார்.

அவர் கலிலேயாவிலிருந்து தம்முடன் எருசலேம் வந்தவர்களுக்குப் பல நாள்கள் தோன்றினார். அவர்கள் இப்போது அவர்தம் சாட்சிகளாக மக்கள் முன் விளங்குகின்றார்கள். இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக மூதாதையருக்கு அளித்த வாக்குறுதியை அவர்கள் பிள்ளை களாகிய நமக்கென நிறைவேற்றினார்.

இதுவே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி. இதுபற்றி இரண்டாம் திருப்பாடலில், "நீரே என் மகன், இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்' என்று எழுதப்பட்டுள்ளது."

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 2: 6-7. 8-9. 10-11 (பல்லவி: 7)
=================================================================================
பல்லவி: நீரே என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.

அல்லது: அல்லேலூயா.

6 என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தினேன். 7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; `நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். பல்லவி

8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன். 9 இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்'. பல்லவி

10 மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்; பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள். 11 அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்! அவர்முன் அகமகிழுங்கள்! பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை,"  என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
வழியும் உண்மையும் வாழ்வும் நானே.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6


அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், "உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்' என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.

நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும். "தோமா அவரிடம், "ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?"என்றார்.

இயேசு அவரிடம், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 யோவான் 14: 1-6

வழியும் உண்மையும் வாழ்வுமான இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோம்

நிகழ்வு

ஒருசமயம் ஜெர்மனியைச் சார்ந்த மிகப்பெரிய இசைக்கலைஞரான மென்டல்சன் (Mendelssohn), ஃபிரைபோர்க் (Fribourg) நகரில் இருந்த பேராலயத்திற்குச் சென்றிருந்தார். அவர் அங்கு சென்ற நேரம், அவருக்கு அறிமுகமான ஒருவர் அவரிடம், பேராலயத்திற்கென்று விலையுயர்ந்த பியானோ ஒன்று வாங்கப்பட்டிருக்கின்ற செய்தியை அவரிடம் எடுத்துச் சொன்னார். இச்செய்தியைக் கேட்டதும், மென்டல்சனுக்கு அந்தப் பியானோவை எப்படியாவது வாசிக்கவேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.

உடனே அவர் பேராலயத்தில் பியானோ வாசிக்கும் மனிதரிடம் சென்று, தன்னுடைய விருப்பத்தை எடுத்துச் சொன்னார். அந்த மனிதரோ மெண்டல்சன்னை அதற்கு முன்பாகப் பார்த்திராதவர். அவர் மென்டல்சன்னிடம், "ஐயா! இந்தப் பியானோவை நான் மட்டும்தான் வாசிக்கவேண்டும்... புதிய ஆள் யாரும் வாசிக்கக்கூடாது என்று பங்குத்தந்தை சொல்லியிருக்கின்றார்"என்று சொல்லி தட்டிக்கழித்தார். மென்டல்சன்னோ விடாபிடியாய் இருந்து, ஒருவழியாய் அந்தப் பியானோவில் வாசிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். அவர் பியானோவை வாசிக்க வாசிக்க அதைப் பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்த மனிதர் மிரண்டு போய், "ஐயா! நீங்கள் யார்? உங்களுடைய பெயர் என்ன?" என்று கேட்டார்.

அதற்கு மென்டல்சன், "நான்தான் மென்டல்சன்" என்றார். இதைக் கேட்டதும் பேராலயத்தில் பியானோ வாசிக்கும் அந்த மனிதர், "ஐயா! நீங்கள் யாரென்று தெரியாமல் உங்களிடம் அப்படிப் பேசிவிட்டேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்"என்றார்.

இந்த நிகழ்வில் வரும் பேராலயத்தில் பியானோ வாசிக்கும் மனிதர் எப்படி மென்டல்சன்னை யாரென்று தெரியாமலும் அவர்மீது நம்பிக்கை வைக்காமலும் இருந்தாரோ அதுபோன்றுதான் நாமும் பலநேரங்களில் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாமலும் அவர் நம்முடைய வாழ்வில் நுழையவிடாமலும் நாம் தடுத்துக்கொண்டிருக்கும். என்றைக்கு நாம் அவர்மீது நம்பிக்கை வைத்து, வழியும் உண்மையும் வாழ்வுமான அவரை நம்முடைய வாழ்வில் நுழைய அனுமதிக்கின்றோமோ அன்றைக்கு நம்முடைய வாழ்வில் கலக்கமில்லை, எதுவும் இல்லை. அத்தகைய உண்மையை எடுத்துச் சொல்லும் இன்றைய நற்செய்தி வாசகத்தைக் குறித்துச் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

உள்ளம் கலங்கவேண்டாம்

யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்க இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், "நீங்கள் உள்ளம் கலங்கவேண்டும்"என்ற ஆறுதல் வார்த்தைகளைக் கூறுகின்றார். இயேசு இவ்வாறு கூறுவதன் நோக்கம் என்ன என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

இன்றைய நற்செய்தி வாசகத்திற்கு முந்தைய பகுதியில் இயேசு பேதுருவிடம், "எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" (யோவா 13: 38) என்பார். இதைக் கேட்டு இயேசுவின் சீடர்கள் நிச்சயம் கலங்கி இருக்கக்கூடும். காரணம், இயேசுவின் சீடர்களில் பேதுரு மிகவும் துணிச்சலான மனிதர். அப்படிப்பட்டரே இயேசுவை மறுதலிக்கும்போது, தாங்களெல்லாம் எம்மாத்திரம் என்ற கவலை அவர்களை வருத்தியிருக்கக்கூடும். அப்படிப்பட்ட சமயத்தில்தான் இயேசு அவர்களிடம் மேலே உள்ள வார்த்தைகளைக் கூறுகின்றார்.

உள்ளம் கலங்காமலிருக்க இறைவனிடமும் இயேசுவிடமும் நம்பிக்கை கொள்ளவேண்டும்

இயேசு தன்னுடைய சீடர்களிடம் உள்ளம் கலங்காமல் இருங்கள் என்று சொல்லிவிட்டு, அப்படி இருப்பதற்கு ஒருவர் என்னசெய்யவேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்கின்றார். அதுதான் கடவுள்மீதும் தன்மீதும் நம்பிக்கை கொள்வதாகும்.

கடவுள் நம்மோடு எப்போதும் இருப்பவர் (எசா 41:10). எனவே, அவர்மீது நம்பிக்கை கொள்ளும் ஒருவர் எதற்கும் கலங்கத் தேவையில்லை. இயேசுவோ நமக்காக விண்ணகத்தில் இடம் ஏற்பாடு செய்பவர். இந்த விண்ணகமானது பேதுருவால் 'என்றும் நிலைக்கும் ஆட்சி (2 பேது 1:11) என்றும் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியரால் 'சிறப்பான ஒரு நாடு (எபி 11:16) என்றும் இயேசுவால் வீடு (யோவா 14:2) என்றும் யோவானால் கண்ணீரோ, சாவோ, அழுகையோ, துன்பமோ, துயரமோ எதுவுமே இல்லாத ஓர் இடம் (திவெ 21:4) என்றும் அழைக்கப்படுகின்றது. அப்படிப்பட்ட ஓரிடத்தை இயேசு அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களுக்கு வழங்க இருப்பதால், உள்ளம் கலங்கவேண்டாம் என்று சொல்கின்றார். மேலும் இப்படிப்பட்ட ஓர் இடத்தை இயேசு வழியாக அன்றி, வேறு எவர் வழியாகவும் பெற்றுக்கொள்ள முடியாது என்பது உண்மை.

சிந்தனை

'அதில் (இயேசுவில்) நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார்' (1 பேது 2:6) என்பார் பேதுரு. ஆகவே, அழுகையோ, கவலையோ, கண்ணீரோ எதுவுமே இல்லாத விண்ணகத்தை நமக்கு வழங்க இருக்கும் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நானே வழி

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற தருணம். மலாயா என்ற தீவில் (தற்போதைய சிங்கப்பூர்) போரானது மிகவும் உச்சக் கட்டத்தை எட்டியிருந்தது. அப்போது பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த படைவீரன் ஒருவன் போரிலிருந்து தன்னையே விடுவித்துக்கொண்டு, தப்பித்து காட்டுக்குள் ஓடினான். அவன் அவ்விடத்திற்கு புதியவனாக இருந்ததால், காட்டுக்குள் வழி தெரியாது விழிபிதுங்கி நின்றான்.

அந்நேரத்தில் அவ்வழியாக வந்த விவசாயி ஒருவர் படைவீரனின் நிலையை உணர்ந்துகொண்டு, "நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன், நீங்கள் கவலைப்படாமல் என்பின்னால் வாருங்கள்" என்று சொல்லி, அந்த அடர்ந்த காடுவழியாக அவனைக் கூட்டிச் சென்றார்.

இந்தக் காட்டைக் கடந்துவிட்டால், அதன்பிறகு வரும் கடற்கரைக்குச் சென்று, அங்கே இருக்கும் ஏதாவது ஒரு கப்பலில் ஏறிசென்று, தப்பித்துவிடலாம் என்பதுதான் படைவீரனின் எண்ணமாக இருந்தது. எனவே அவன் விவசாயி கூட்டிப்போன வழியெங்கும் அவர் பின்னாலே சென்றான்.

ஒருகட்டத்தில் விவசாயி தன்னைச் சரியான பாதையில்தான் கூட்டிக்கொண்டு போகிறாரா என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. அதனால் அவன் விவசாயிடம் கேட்டான், "ஐயா! உங்களுக்கு இந்த காடுவழியாக, கடற்கரைக்குச் செல்வதற்கான வழி தெரியுமா? என்று. அதற்கு அவர் மிகவும் சாதாரணமாக, தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் "There is no Way, I am the way' (இங்கே வழி ஒன்றும் கிடையாது, நானே வழி) என்று பதிலளித்தார். இறுதியில் இரண்டு, மூன்றுநாட்கள் பயணத்திற்குப் பிறகு அவர்கள் காட்டைக் கடந்து, கடற்கரையை அடைந்தார்கள். அங்கே விவசாயி படைவீரனை கப்பலில் ஏற்றி, வழியனுப்பிவிட்டு வந்தார்.

தானே வழியாக இருந்து, ஆபத்தில் இருந்த அந்தப் படைவீரனுக்கு உதவிய விவசாயின் பரந்த உள்ளம் உண்மையில் பாராட்டுக்குரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம், "நான் போகுமிடத்திற்கான வழி உங்களுக்குத் தெரியும்"என்று சொல்கிறபோது, தோமா அவரிடம், "ஆண்டவரே! நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்திற்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்வது?"என்கிறார். அதற்கு இயேசு, "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி, எவரும் பரம தந்தையிடம் வருவதில்லை"என்கிறார்.

இன்றைக்கு எத்தனையோ மனிதர்கள் தங்களை 'வழிகாட்டிகள்' என்று சொல்லிக்கொண்டு நம்மை சிக்கலில், பிரச்னையில், அதாள பாதாளத்தில் தள்ளுவதை நாம் நமது வாழ்வில் கண்கூடாகப் பார்க்கிறோம். அப்படி இருக்கும்போது இயேசு வழியாய் இருக்கிறார் என்பது நமக்குக் ஆறுதலான ஒரு செய்தியாக இருக்கின்றது.

பழைய கிறிஸ்தவப் பாடல் ஒன்றின் பாடல் வரிகள் இவை: "நான்கு திசையும் பாதைகள், சந்திக்கின்ற வேளைகள். நன்மை என்ன? தீமை என்ன? அறியாத கோலங்கள். நீயே எங்கள் வழியாவாய்". ஆம், நாம் திக்கற்றுத் தவிக்கும் வேளையில் இயேசுதான் நமக்கு வழியாய் இருந்து, நாம் சரியான பாதையில் நடக்க நமக்குத் துணை புரிகின்றார். மேலும் இயேசுதான் நாம் தந்தையாம் இறைவனை அடைவதற்கான வழியை, நெறிமுறையைச் சுட்டிக்காட்டியிருகிறார். ஆகவே, நாம் இயேசு நமக்குச் சுட்டிக்காட்டிய போதனைகளின்படி நடக்கும்போது; அவர் காட்டிய பாதையின் வழி நடக்கும்போது இறைவனை அடையலாம் என்பது திண்ணம்.

எனவே நாம் ஜான் நியூட்டன் (John Newton) என்ற பாடலாசிரியர் பாடுவதுபோன்று, "ஆண்டவரே என்னை ஒளியின் பாதையில் வழி நடத்திச் செல்லும்"("Lord, Lead kindly into the Light) என்று இறைவனை நோக்கி பாடுவோம், மன்றாடுவோம். இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 இயேசுவே வழியும் உண்மையும் வாழ்வுமாய் இருக்கின்றார்

ஒருவர் மலைப்பாங்கான இடத்திலிருந்த தன்னுடைய நெருங்கிய நண்பரது இல்லத்தில் நடைபெற இருந்த திருமண நிகழ்விற்காக தூர தொலைவிலிருந்து நான்கு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பாக அந்த இடத்திற்கு வந்தவர், இப்போதுதான் மீண்டுமாக அங்கே வருகின்றார். ஏற்கனவே இரவு நேரம் ஆகிவிட்டதால் தான் பயணமாகும் பாதை சரிதானா என்கிற குழப்பம் அவருக்கு ஏற்பட்டது. இருந்தாலும் தன்னுடைய ஞாபகத்திற்கு எட்டிய அளவில் அவர் வாகனத்தை ஓட்டிக்கொண்டே வந்தார்.

ஒரு கட்டத்தில் அவருக்கு, தான் பத்து கிலோமீட்டர் தள்ளி வந்துவிட்டோமோ என்கிற சந்தேகம் வந்துவிட்டது, அதே நேரத்தில் சரியான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. இப்படி இருவேறு சிந்தனைகளுக்கு ஆட்பட்ட அவர் ஒருவித சந்தேகத்தோடு பயணத்தைத் தொடர்ந்தார். இப்படியாக அவர் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ஓரிடத்தில் அவர் செல்லவேண்டிய இடத்திற்கான பெயர்பலகை தெளிவாய் அவருடைய கண்ணில் பட்டது. அதைக் கண்டு அவர் மிகவும் சந்தோசப்பட்டார். இதுவரையும் தான் வந்த பாதை சரிதான் என்று மனதிற்குள்ளே சொல்லியவாறு, வாகனத்தை வேகமாக ஒட்டி தன்னுடைய நண்பரின் இல்லத்தை இலகுவாக அடைந்தார்.

வாழ்க்கையில் பல நேரங்களில், எந்த பாதையில் செல்லவேண்டும், எப்படிச் செல்லவேண்டும் என்கிற குழப்பம் நமக்கு ஏற்படலாம். அத்தகைய தருணங்களில் மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் பயணிக்கு தக்க தருணத்தில் பெயர்பலகை ஒன்று வழிகாட்டியது போல நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் நம்முடைய வழியாய் இருக்கின்றார். அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பேசிக்கொண்டிருக்கும்போது, "நான் போகுமிடத்திற்கான வழி உங்களுக்குத் தெரியும்"என்கிறார். அப்போது இயேசுவின் சீடர்களில் ஒருவரான தோமா, "ஆண்டவரே, நீர் எங்கே செல்கிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்திற்காண வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?" என்று கேட்கின்றார். அதற்கு இயேசு அவரிடத்தில், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" என்கிறார்.

இயேசு இப்படியாகச் சொன்னது யூதரல்லாத மற்றவருக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம், ஆனால் யூதர்களுக்கு இது நன்றாக அறிமுகமானதுதான். பழைய ஏற்பாட்டில் வழியும் உண்மையும் வாழ்வும் கடவுளோடு தொடர்புடையதாக இருக்கின்றது.

இணைச்சட்ட நூலில் மோசே இஸ்ரயேல் மக்களிடம் "ஆகவே, உங்கள் ஆண்டவராகிய கடவுள் உங்களுக்கு கட்டளையிட்டவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிருங்கள். வலமோ இடமோ விலகி நடக்கவேண்டாம். மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டுக் கூறிய எல்லா வழியிலும் நடங்கள்; அப்போது வாழ்வீர்கள். அது உங்களுக்கு நலமாகும். நீங்கள் உடமையாக்கிக்கொள்ளப் போகும் நாட்டில் நெடுநாள் வாழ்வீர்கள்"(இச 5:32-33) என்று ஆண்டவரின் வாக்கை எடுத்துச் சொல்கிறார். ஆண்டவரின் வழியில் நடக்கும்போது ஆசியைப் பெறுவோம் என்பதுதான் நாம் இங்கே புரிந்துகொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது.

அதைப் போன்று திருப்பாடலில், "ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப நான் நடக்குமாறு உமது வழியை எனக்குக் கற்பியும்"என்று படிக்கின்றோம் (திப 86:11). இங்கே கடவுளே உண்மை. உண்மைதான் கடவுள் என்ற செய்தியையும் அறிந்துகொள்கின்றோம். அடுத்ததாக நீதிமொழிகள் புத்தகத்தில், "கட்டளை என்பது விளக்கு; அறவுரை என்பது ஒளி; கண்டித்தாலும் தண்டித்தலும் நல்வாழ்வுக்கான வழி"(நீமொ 6:23) என்று வாசிக்கின்றோம். இதில் நல்வாழ்வு வாழ்வு என்பது இறைவனோடு தொடர்புடையது. ஆகையால் இறைவனோடு தொடர்புடைய வழியும் உண்மையும் வாழ்வும் நானே என்கிறார் இயேசு.

இந்த உலகத்தில் பிறந்த எத்தனையோ மகான்கள், தலைவர்கள் மக்களுக்கு வாழ்வதற்கான வழியை சொல்லிக்கொடுத்திருக்கலாம். ஆனால் ஆண்டவர் இயேசுவோ தாமே வழியும் உண்மையும் வாழ்வாக இருக்கின்றார் என்பதுதான் இங்கே சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. ஆகையால், யாராரெல்லாம் இயேசுவைப் பின்பற்றி நடக்கிறார்களோ அவர்கள் வாழ்வடைவார்கள் என்பது ஆழமான உண்மை.

பல நேரங்களில் நம்முடைய விருப்பப்படி நமக்கு நடக்கத் தோன்றலாம், ஆனால், நாம் அத்தகைய தீய சிந்தனைகளை நம்முடைய வாழ்க்கையில் அப்புறப்படுத்தி, இயேசுவின் வழியில் நடக்கும் போது ஆசியைப் பெறுவோம் என்பது உறுதி. எனவே, நாம் வழியும் உண்மையும் வாழ்வுமான இயேசுவைப் பின்தொடர்ந்து நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 திருத்தூதர் பணிகள் 13: 26-33

"இறந்த அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார்"

நிகழ்வு

மிகப்பெரிய ஓவியரான மைக்கேல் ஆஞ்சலோவிடம் உதவியாளர் ஒருவர் இருந்தார். அவர் எப்போது பார்த்தாலும், இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பது போன்றும் இயேசு சிலுவையில் உயிர்விடுவது போன்றும் இயேசு சோகமாக இருப்பது போன்றும் ஓவியங்களை வரைந்துகொண்டே இருந்தார்.

இதைப் பார்த்துவிட்டு மைக்கேல் ஆஞ்சலோ அவரிடம், "கிறிஸ்துவின் வாழ்க்கை அவர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதோடு முடிந்துவிடவில்லை. அதற்குப் பின்னும் தொடர்கின்றது. அவர் இறந்த மூன்றாம் நாளில் வெற்றிவீரராய் உயிர்த்தெழுந்தார். ஆகவே, அவர் உயிர்த்தெழுந்தது போன்றும் கல்லறையிலிருந்து வெளியே வருவதுபோன்றும் மலர்ந்த முகத்தோடு தன்னுடைய சீடர்களுக்குத் தோன்றுவது போன்றும் ஓவியம் வரலாம்"என்றார். இதற்குப் பின்பு அவர் மைக்கேல் ஆஞ்சலோ சொன்னதுபோன்றே ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுவது போன்று ஓவியங்களை வரைந்து மக்களுடைய கவனத்தைப் பெற்றார்.

லாரி தாம்சன் எழுதிய, 'Hidden Heroes' என்ற நூலில் இடம்பெறும் இந்த நிகழ்வு ஆண்டவர் இயேசுவின் வாழ்க்கை அவருடைய இறப்போடு முடிந்துவிடவில்லை. இறப்புக்குப் பின்பு மூன்றாம் நாளில் வெற்றிவீரராய் உயிர்த்தெழுந்தார் என்ற உண்மையை உரக்கச் சொல்வதாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்திலும் பவுல் மக்களிடம் இதே செய்தியைத்தான் சொல்கின்றார். நாம் இதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசுவை அறிந்துகொள்ளாத இஸ்ரயேல் மக்கள்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், பவுல் பிசிதியாலுள்ள அந்தியாக்கியாவில் இருந்த தொழுகைக்கூடத்தில் போதிக்கத் தொடங்குகின்றார். அவருடைய போதனை முதுபெரும் தந்தை ஆபிரகாமிலிருந்து, ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தது வரை இடம்பெறுகின்றது. நேற்றைய முதல் வாசகத்தில், ஆபிரகாம் தொடங்கி இயேசுவுக்குச் சான்று பகர்ந்து வந்த திருமுழுக்கு யோவான் வரை இடம்பெற்றிருந்தது. இன்றைய முதல் வாசகத்தில் இயேசுவினுடைய பணியும் அவர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதும் மூன்றாம் நாளில் வெற்றிவீரராய் உயிர்த்தெழுந்ததும் சீடர்கள் இயேசுவுக்குச் சான்று பகர்வதும் இடம்பெறுகின்றது. இவற்றின் மூலம் இறைவன் நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு இந்த மண்ணுலகில் வாழ்ந்து வந்தபோது, ஆண்டவரின் இரக்கத்தையும் அவருடைய அன்பையும் போதித்தும் பல்வேறு வல்லசெயல்கள் செய்தும் தான் இறைமகன் என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தார். ஆனால், மக்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை, அவரைப் புரிந்துகொள்ளவும் இல்லை (யோவா 1:11). மாறாக, அவர்கள் அவர்க்கு தங்கள் விருப்பம்போன்று செய்து, சிலுவையில் அறைந்துகொன்றார்கள். இயேசுவைச் சிலுவையில் அறைந்துகொன்றபிறகு எல்லாமும் முடிந்துவிட்டதுதான் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால், நடந்தது வேறொன்று.

சொன்னபடி உயிர்த்தெழுந்த இயேசு

இயேசுவைச் சிலுவையில் அறைந்துகொன்றதுடன் எல்லாமே முடிந்துவிட்டது என்று ஆட்சியாளர் நினைத்தார்கள். ஆனால், கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்து, வாக்குறுதியை நிறைவேற்றுபவராக மாறுகின்றார். இதற்குச் சாட்சியாகத்தான் இயேசுவின் சீடர்கள் இருக்கின்றார்கள்.

இன்றைக்கு எத்தனையோ தலைவர்கள் வாக்குறுதிகளை அள்ளிவீசிவிட்டு அதை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் ஆண்டவராகிய கடவுள், இயேசுவை உயிர்த்தெழச் செய்ததன் வழியாக மூதாதையர்க்கு கொடுத்த வாக்குறுதியை (2சாமு 7: 12-17) நிறைவேற்றுபவராக இருக்கின்றார். இப்படிப்பட்ட செய்தியைச் சொல்லிவிட்டு பவுல் இதற்குக் நாங்கள் அனைவரும் சாட்சிகளாக இருக்கின்றோம் என்றது சொல்கின்றார்.

உயிர்த்த ஆண்டவர்க்குச் சாட்சிகளாகத் திகழவேண்டும்

பவுல் அந்தியாக்கிவிலுள்ள மக்களுக்கு எடுத்துரைத்த இந்தச் செய்தி நமக்கு முன்பாக இரண்டு சவால்களை வைக்கின்றது. ஒன்று, இயேசுவை மெசியா என்று ஏற்றுக்கொள்வது. இரண்டு, இயேசுவை மெசியா என்றும் இறந்த அவரைக் கடவுள் மூன்றாம் நாளில் உயிர்த்தெழச் செய்தார் என்றும் ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அவரைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பது. இந்த இரண்டு செயல்களையும் செய்கின்றபோதுதான் நாம் இயேசுவின் உயிர்ப்புச் சாட்சியாகத் திகழமுடியும்

தூய ஆவியார் சீடர்கள்மீது இறங்கிய பெந்தக்கோஸ்து நாளில், பேதுரு திரண்டிருந்த மக்களுக்கு முன்பாக எழுந்து நின்று, "வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள்" (திப 3:15) என்று கூறுவார். இன்றைய முதல் வாசகத்தில் பவுலும் 'நாங்கள் சாட்சிகள்' என்று கூறுகின்றார். ஆகவே, இயேசுவின் சீடர்களாக நாம், அவருடைய உயிர்ப்புச் செய்தியை எல்லார்க்கும் எடுத்துரைத்து, அவருடைய உயிர்ப்புக்குச் சாட்சிகளாகத் திகழ்வது தேவையான ஒன்று.

சிந்தனை

'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்' (மாற் 16:15) என்பார் இயேசு. நாமும் இயேசுவின் இக்கட்டளை நம்முடைய உள்ளத்தில் ஏற்று, இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை எல்லார்க்கும் அறிவித்து, அவருடைய உயிர்ப்புக்குச் சாட்சிகளாகத் திகழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================
எங்கே போகிறீர்?

இறுதி இராவுணவில் இயேசுவும் அவருடைய சீடர்களும் பேசிக்கொள்ளும் உரையாடல் நேரம் கூடக்கூட ரொம்ப அப்ஸ்ட்ராக்ட் ஆக இருக்கிறது. திராட்சை ரசம் கொஞ்சம் கூடிடுச்சோ என்று எண்ணத் தோன்றுகிறது.

'நான் போகுமிடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்' என்கிறார் இயேசு.

தோமா ரொம்ப பிராக்டிகலான ஆளு. உடனே குறுக்கிட்டு, 'ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படி தெரிந்துகொள்ள இயலும்?' என விசாரிக்கிறார்.

'வழியும் உண்மையும் வாழ்வும் நானே' என்று இன்னும் கொஞ்சம் குழப்பிவிடுகிறார் இயேசு.

'எங்கே போகிறீர்?' - இது நாம் நம் வாழ்வில் பல இடங்களில் நாம் பலரையும், பலர் நம்மையும் கேட்டிருப்போம். 'எங்கே போகிறீர்?' என்ற கேள்வியில் நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதும் அடங்கியிருப்பதோடு, இந்தக் கேள்வி நம் பயணத்தின் இலக்கையும் குறிக்கிறது.

எல்லாம் நானே என்பதன் வழியாக இயேசு நம்வாழ்வின் இலக்கு என தன்னையே முன்வைக்கின்றார்.

இன்று தோமா இயேசுவைக் கேட்ட கேள்வியை நாமும் நமக்குள்ளே கேட்டுப்பார்ப்போம். அவரை நோக்கி என் பயணம் இருந்தால் எத்துணை நலம்!

- Fr. Yesu Karunanidhi, Archdiocese of Madurai.


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!