|
|
16 மே 2019 |
|
|
பாஸ்கா காலம்
நான்காம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கடவுள் தாவீது வழிமரபிலிருந்தே இயேசு என்னும்
மீட்பர் தோன்றச் செய்தார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 13-25
சகோதரர் சகோதரிகளே, பவுலும் அவரோடு இருந்தவர்களும்
பாப்போவிலிருந்து கப்பலேறி, பம்பிலியாவிலுள்ள பெருகை நகருக்கு
வந்தார்கள். அங்கே யோவான் அவர்களைவிட்டு அகன்று எருசலேமுக்குத்
திரும்பினார். அவர்கள் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று
பிசிதியாவிலுள்ள அந்தி யோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வுநாளன்று
அவர்கள் தொழுகைக் கூடத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்தார்கள்.
திருச்சட்டமும் இறைவாக்கினர் நூல்களும் வாசித்து முடிந்தபின்
தொழுகைக்கூடத் தலைவர்கள் அவர்களிடம் ஆள் அனுப்பி,
"சகோதரரே,
உங்களுள் யாராவது மக்களுக்கு அறிவுரை கூறுவதாயிருந்தால் கூறலாம்" என்று கேட்டுக்கொண்டார்கள்.
அப்போது பவுல் எழுந்து கையால் சைகை காட்டிவிட்டுக் கூறியது:
"இஸ்ரயேல்
மக்களே, கடவுளுக்கு அஞ்சுவோரே, கேளுங்கள். இந்த இஸ்ரயேல் மக்களின்
கடவுள் நம்முடைய மூதாதையரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்கள் எகிப்து
நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய
மக்களினமாக்கினார்.
பின்பு அவர் தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த
நாட்டைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்; நாற்பது ஆண்டு
காலமாய்ப் பாலைநிலத்தில் அவர்களிடம் மிகுந்த பொறுமை
காட்டினார். அவர் கானான் நாட்டின்மீது ஏழு மக்களினங்களை அழித்து
அவர்கள் நாட்டை இவர்களுக்கு ஏறக்குறைய நானூற்றைம்பது ஆண்டுகள்
உரிமைச் சொத்தாக அளித்தார்; அதன்பின்பு இறைவாக்கினர்
சாமுவேலின் காலம் வரை அவர்களுக்கு நீதித் தலைவர்களை அளித்தார்.
பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள்.
கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு
அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது
ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.
பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக
ஏற்படுத்தினார்; அவரைக்
குறித்து "ஈசாயின் மகனான தாவீதை என்
இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும்
அவன் நிறைவேற்றுவான்' என்று சான்று பகர்ந்தார். தாம் அளித்த
வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே
இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.
அவருடைய வருகைக்கு
முன்பே யோவான், "மனம் மாறி திருமுழுக்குப்
பெறுங்கள்' என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி
வந்தார்.
யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில்,
`நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ,
எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை
அவிழ்க்கவும் எனக்குத் தகுதி இல்லை' என்று
கூறினார்."
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
89: 1-2. 20-21. 24,26 (பல்லவி: 2a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை என்றென்றும் நான் அறிவிப்பேன்.
அல்லது: அல்லேலூயா.
1 ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர்
உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். 2
உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்;
உமது உண்மை வானைப்போல் உறுதியானது. பல்லவி
20 என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால்
அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன். 21 என் கை எப்பொழுதும்
அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை
வலிமைப்படுத்தும். பல்லவி
24 என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என்
பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும். 26
'நீரே என் தந்தை, என்
இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான்.
பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
திவெ 1: 5ab காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு கிறிஸ்துவே, நீரே
நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று
எழுந்தவர்; நீர் எம்மீது அன்புகூர்ந்து உமது இரத்தத்தினால்
பாவங்களிலிருந்து எங்களை விடுவித்தீர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே
ஏற்றுக்கொள்கிறார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 16-20
அக்காலத்தில் சீடர்களின் பாதங்களைக் கழுவியபின் இயேசு
அவர்களுக்குக் கூறியது:
"பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல;
தூது அனுப்பப் பட்டவரும் அவரை அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல
என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள்
பேறுபெற்றவர்கள். உங்கள் அனைவரையும்பற்றி நான் பேசவில்லை. நான்
தேர்ந்து கொண்டவர்கள் யாரென எனக்குத் தெரியும்.
எனினும், "என்னோடு உண்பவனே என்மேல்
பாய்ந்தான்" என்னும்
மறைநூல் வாக்கு நிறைவேறியாக வேண்டும்.
அது நிறைவேறும்போது, "இருக்கிறவர் நானே' என்று நீங்கள்
நம்புமாறு இப்போதே, அது நிறைவேறுமுன்பே, அதுபற்றி உங்களுக்குச்
சொல்லி வைக்கிறேன். நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர்
என்னையே ஏற்றுக்கொள்கிறார்.
என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார்
என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 13: 13-25
ஆண்டவரின் பேரன்பும் இஸ்ரயேல் மக்களின் பிரமாணிக்கமின்மையும்
நிகழ்வு
இங்கிலாந்து நாட்டில் ஜார்ஜ் ரோம்னே (George Romney) என்றொரு
பெரிய ஓவியர் இருந்தார். அவர் ஒரு பெண்ணை உயிருக்குயிராகக்
காதலித்தார். சில மாதங்கள் கழித்து அவரைத் திருமணமும்
செய்துகொண்டார்.
இருவருடைய திருமண வாழ்க்கையும் மிகவும் மகிழ்ச்சிகரமாகப்
போய்க்கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள், ஜார்ஜ் தன்னுடைய
மனைவியிடம், "நான் ஓவியம் வரைவதில் பெரிய இடத்தை அடையவேண்டும்.
அதற்காக நாம் பிரிவது நல்லது" என்றார். அவருடைய மனைவியும்
அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் சரியென்றார். இதனால் இரண்டு
பேரும் பிரிந்தார்கள். தன்னுடைய மனைவியை விட்டுப் பிரிந்த
பிறகு ஓவியர் ஜார்ஜ் ஓவியம் வரைவதே கதியெனக் கிடந்தார்.
ஏராளமான நல்ல ஓவியங்களை வரைந்து பேரையும் புகழையும்
சம்பாதித்தார். ஒருகட்டத்தில் உடம்புக்கு முடியாமல் போய்,
அடுத்தவருடைய உதவியின்றி எந்தவொரு செயலையும் செய்யமுடியாது
என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். அப்பொழுது அவர்க்கு, 'நாம் ஏன்
நம்முடைய மனைவியுடன் சேர்ந்து வாழக்கூடாது?'என்ற எண்ணம்
தோன்றியது. மறுகணமே, 'இத்தனை ஆண்டுகளும் அவரைப் பிரிந்து
வாழ்ந்துவிட்டு, இப்போது நம்முடைய தேவைக்காக அவரிடம் சேர்ந்து
வாழ்வது எந்த விதத்தில் நியாயம்!'என்ற எண்ணமும் தோன்றியது.
முடிவில், 'மனைவி என்ன நினைத்தாலும் பரவாயில்லை, நாம் அவரோடு
சேர்ந்து வாழ்வதே நல்லது'என்று முடிவுசெய்துவிட்டு அவரிடம்
சென்றார்.
ஜார்ஜின் மனைவி அவரைத் திரும்பக் கண்டபோது, அவரை உள்ளன்போடு
ஏற்றுக்கொண்டாரே ஒழிய, அவரிடம் எந்தவொரு கடுஞ்சொல்லும்
சொல்லவில்லை. இதற்குப் பின்பு அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக
வாழ்ந்து வந்தார்கள். அப்போதெல்லாம் ஜார்ஜ், "இவ்வளவு அருமையான
மனைவியை இவ்வளவு ஆண்டுகளும் பிரிந்து வாழ்ந்துவிட்டோமே'என்று
மிகவும் வருத்தப்பட்டார்.
இந்த நிகழ்வில் வரும் ஓவியர் ஜார்ஜ் ரோம்னேவைப் போன்றுதான்
இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் அன்பை உணர்ந்துகொள்ளாமல் அவரை
விட்டுப் பிரிந்து சென்றார்கள். ஆனாலும் கடவுள் இந்த நிகழ்வில்
வரும் ஜார்ஜ் ரோம்னேவின் மனைவியைப் போன்று அவர்கள்
மனம்திரும்பி வந்தபோதெல்லாம் அவர்களை உள்ளன்போடு மன்னித்து
ஏற்றுக்கொண்டார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து
எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் இந்த செய்தியைத்தான்
நமக்குக் எடுத்துரைக்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
கடவுளின் பேரன்பு
இன்றைய முதல் வாசகத்தில் பவுலும் அவரோடு இருந்தவர்களும்
பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவை அடைகின்றார்கள். ஓய்வுநான்று
அவர்கள் தொழுகைக்கூடத்திற்குச் செல்லும்போது, அங்கிருந்த
தொழுகைக்கூடத் தலைவர், "உங்களுள் யாராவது அறிவுரை கூறுவதாக
இருந்தால் கூறலாம்" என்கின்றார். உடனே பவுல் எழுந்து பேசத்
தொடங்குகின்றார். அவர் அங்கிருந்த மக்களிடம், ஆண்டவராகிய
கடவுள் முதுபெரும் தந்தையாகிய ஆபிரகாமைத்
தேர்ந்துகொண்டதிலிருந்து, ஆண்டவர் இயேசு இறந்து உயிர்தெழுந்தது
வரை பேசுகின்றார். இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள்
ஆபிரகாமைத் தேர்ந்துகொண்டதிலிருந்து திருமுழுக்கு யோவான்
இயேசுவைப் பற்றிச் சான்றுபகர்வது வரை இடம்பெறுகின்றது.
இப்பகுதியில் என்ன இருக்கின்றது என்று சிந்தித்துப்
பார்ப்போம்.
கடவுள் ஆபிரகாமைத் தேர்ந்துகொண்டதிலிருந்து, திருமுழுக்கு
யோவான் இயேசுவைப் பற்றிச் சான்றுபகர்கின்ற காலக்கட்டம்
வரையுள்ள பகுதியை இரண்டு தலைப்புகளில் பிரித்துவிடலாம். ஒன்று
கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் பேரன்பு காட்டியது. இரண்டு,
கடவுளின் பேரன்பை உணர்ந்துகொள்ளாமல், இஸ்ரயேல் மக்கள்
ஊதாரித்தனமாக வாழ்ந்தது. இந்த இரண்டையும் குறித்து இப்போது
பார்போம். ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமைத் தன் ஊழியனாகத்
தேர்ந்தெடுத்தார். அதன்பிறகு அவருடைய மக்கள் எகிப்தில்
அடிமைகளாக இருந்தபோது அவர்களை மீட்டு, பாலும் தேனும் பொழியும்
கானான்தேசத்தை வழங்கினார். அவர்களை வழிநடத்த
நீதித்தலைவர்களையும் அரசர்களையும் இறைவாக்கினர்களையும்
கொடுத்தார். அப்படியெல்லாம் செய்தபோதும் இஸ்ரயேல் மக்கள்
கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இருக்கவில்லை.
பிரமாணிக்கமின்றி இருந்த இஸ்ரயேல் மக்கள்
ஒருபக்கம் கடவுள் இஸ்ரயேல் மக்கள்மீது பேரன்பு காட்டியபோதும்
அவர்கள் அவர்க்குப் பிரமாணிக்கமின்றியும் நம்பிக்கைக்கு
உரியவர்களாகவும் இல்லாமல் இருந்தார்கள். இதனால் அவர்கள்
நாடுகடத்தப்பட்டார்கள்; வேற்று மண்ணில் அன்னியர்களைப் போன்று
வாழ்ந்துவந்தார்கள். அப்போது அவர்கள் தங்களுடைய தவற்றை
உணர்ந்து வருந்தியபோது, அவர்களைக் கடவுள் அவர்களுடைய சொந்த
நாட்டிற்குக் கூட்டிக்கொண்டு வந்தார். இவ்வாறு இஸ்ரயேல் மக்கள்
தனக்குப் பிரமாணிக்கமின்றி இருந்தபோதும் கடவுள் அவர்கள்மீது
பேரன்பு கொண்டவராக இருந்தார்.
சிந்தனை
'கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பது
போல நானும் உன் மக்களை அரவணைத்துக் கொள்ள எத்தனையோ முறை
விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே!'(மத் 23: 37) என்று
இயேசு எருசலேமைப் பார்த்துக் கூறுவார். இவ்வார்த்தைகள்
நமக்கும் பொருந்தும். ஆகவே, கடவுளின் பேரன்பை உணர்ந்து,
அவர்க்கு நம்பிக்கைக்குரிய மக்களாக இருப்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவா 13: 16-20
இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால்
நீங்கள் பேறுபெற்றவர்கள்
நிகழ்வு
பத்தொன்பாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய மறைபோதகர்
டி.எல்.மூடி (1837-1889). இவர், தான் இருந்த நார்த்ஃபீல்ட்
(Northfield) என்ற இடத்தில் அடிக்கடி விவிலியப் பயிலரங்கம்
நடத்தி வந்தார். இவர் நடத்தி வந்த விவிலியப் பயிலரங்கத்தில்
கலந்துகொள்வதற்கு பல்வேறு இடங்களிலிருந்தும் பலதரப்பட்ட மக்கள்
வந்துபோனார்கள்.
ஒரு சமயம் இவர் நடத்திவந்த விவிலியப் பயிலரங்கத்தில்
கலந்துகொள்வதற்கு பத்துக்கும் மேற்பட்ட இறைஊழியர்கள்
வந்தார்கள். ஒருவாரம் நடைபெற்ற விவிலியப் பயிலரங்கத்தில்
முதல்நாள் வகுப்பு முடிந்தபின்பு எல்லாரும் அவரவர்க்கு
ஒதுக்கப்பட்ட அறைகளில் தூங்கச் சென்றார்கள். வழக்கமாக
ஐரோப்பியர்கள் தாங்கள் அணிந்திருக்கும் காலணிகளை அறைக்கு
வெளியே கழற்றிவைத்துவிட்டுத்தான் தூங்கச் சென்றார்கள்.
காலையில் அவர்கள் எழுந்து பார்க்கும்போது அவர்களுடைய
பணியாளர்களால் அவை துடைத்து அழகுற வைக்கப்பட்டிருக்கும்.
விவிலியப் பயிலரங்கத்திற்கு வந்திருந்த இறைஊழியர்களும் அந்த
நினைப்பில்தான் தாங்கள் அணிந்திருந்த காலணிகளை அறைக்கு வெளியே
கழற்றிவைத்துவிட்டு தூங்கச் சென்றார்கள்.
டி.எல்.மூடி இரவுநேர இறைவேண்டலை முடித்துக்கொண்டு, எல்லாருடைய
அறைகளையும் கடந்து கடைசியாக இருந்த தன்னுடைய அறைக்கு
வந்துகொண்டிருந்தபோது, ஒவ்வோர் அறைக்கு முன்பாகவும் காலணிகள்
வைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அந்த வாரத்தில் காலணிகளைச்
சுத்தம் செய்யவேண்டிய பணியாளர் விடுப்பில் இருந்ததால், அவரே
எல்லாருடைய காலணிகளையும் துடைத்து, அழகுற வைத்தார். இது ஓரிரு
நாட்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. விவிலியப்
பயிலரங்கத்திற்கு வந்திருந்த இறைஊழியர்களும் அங்குள்ள
பணியாளர்களால்தான் காலணிகள் துடைத்து வைக்கப்படுகின்றன என்று
நினைத்துக்கொண்டு எதுவும் பேசாமல் இருந்தார்கள்.
ஒருநாள் அவர் எல்லாருடைய காலணிகளையும் துடைத்து அழகுற
வைத்துக்கொண்டிருந்தபோது, இறைஊழியர் ஒருவர் தற்செயலாகத்
தன்னுடைய அறையை விட்டுவெளியே வந்தார். அவர் டி.எல்.மூடி
செய்துகொண்டிருந்த காரியத்தைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகி,
"நீங்கள்தான் எங்களுடைய காலணிகளை எல்லாம் துடைத்து
வைக்கின்றீர்களா... நாங்கள் ஏதோ உங்களிடம் பணிபுரியம் பணியாளர்
அல்லவா துடைத்து வைகிறார் என்று
நினைத்துக்கொண்டிருக்கின்றோம்... எவ்வளவு பெரிய மனிதர்
நீங்கள்! நீங்கள்போய் எங்களுடைய காலணிகளைத் துடைக்கிறீர்களே"
என்று சொல்லி அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தார். அதற்கு
டி.எல்.மூடி அவர்களிடம், "தயவுசெய்து என்னைத்
தடுக்கவேண்டாம்... உங்களுடைய காலணிகளையெல்லாம் துடைத்துவைக்க
எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றதே, அதற்காக நான்
இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றேன். மேலும் நான் செய்யும்
இக்காரியத்தை வேறு யாரிடமும் சொல்லவேண்டாம்" என்று
வாக்குறுதியும் வாங்கிக் கொண்டார்.
எல்லாராலும் போற்றப்பட்ட டி.எல்.மூடி மற்றவருடைய காலணிகளைத்
துடைத்து அழகுற வைத்து, தாழ்ச்சியோடு பணிசெய்யவேண்டும் என்ற
செய்தியை நமக்கு எடுத்துரைக்கின்றார். இன்றைய நற்செய்தி
வாசகமும் நாம் ஒவ்வொருவரும் தாழ்ச்சியோடு பணிசெய்து
வாழவேண்டும் என்றோர் உயர்ந்த அழைப்பினைத் தருகின்றது. நாம் அது
குறித்து இப்பொழுது சிந்தித்து பார்ப்போம்.
பணியாளர் தலைவரைவிட பெரியவர் அல்ல என்று உணர்த்தும் இயேசு
இயேசு தன்னுடைய சீடர்களின் காலடிகளை கழுவியபின், தொடர்ந்து
பேசக்கூடிய வார்த்தைகள் இன்றைய நற்செய்தி வாசகமாக
அமைந்திருக்கின்றது. இயேசு தன்னுடைய சீடர்களிடம், "பணியாளர்
தலைவர்விடப் பெரியவர் அல்ல..." என்கின்றார். இப்படிச்
சொல்லிவிட்டு அவர் சொல்லக்கூடிய வார்த்தைகள்தான், "இவற்றை
நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள்
பெற்றுபெற்றவர்கள்" என்பதாகும். இதனடிப்படையில் பார்த்தால்,
யார் யாரெல்லாம் இயேசுவைப் போன்று தாழ்ச்சியோடு பணிவிடை
செய்கின்றார்களோ அவர்கள்தான் பேறுபெற்றவர்கள் ஆகமுடியும்.
நான்தான் பெரியவன் என்ற ஆணவத்தில் அலைபவர்கள் அல்ல.
இயேசு வாழ்ந்த காலத்தில் உடல் உழைப்பும் அடுத்தவருக்குப்
படைவிடை புரிவதும் உரோமையர்களாலும் கிரேக்கர்களாலும் மிகவும்
இழிவாகவே பார்க்கப்பட்டன. அப்படிப்பட்ட சமயத்தில் இயேசு
சீடர்களின் காலடிகளைக் கழுவினார். அதுமட்டுமல்லாமல், தன்னுடைய
சீடர்களும் அவ்வாறு இருக்க அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.
பணிவிடை பெறுவதில் அல்ல, பணிவிடைபுரிவதில்தான் உம்மையான
மகிழ்ச்சி உள்ளது
இயேசு தன்னுடைய சீடர்களின் காலடிகளைக் கழுவியதன் மூலம் பணிவிடை
பெறுவதுதான் பெரிய காரியம், அதுவே மகிழ்ச்சிக்குரிய காரியம்
என்று நினைத்துக்கொண்டிருந்த சீடர்களுக்கு பணிவிடை புரிவதுதான்
பெரிய காரியம் என்றும் அதுவே மகிழ்ச்சிக்குரிய காரியம் என்று
எடுத்துரைக்கின்றார். ஆகவே, இயேசு தன் சீடர்களுக்கு உணர்த்திய
இந்த உண்மையை, தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில்
உணர்த்துகின்ற உண்மையை (யாக் 1: 22-27) நாமும் நம்முடைய
வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தால், நம் வாழ்வு ஆசி பெற்றதாக
இருக்கும்.
சிந்தனை
'ஒருவர் மற்றவருக்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய காரியம்,
அவரைத் தன்னைவிடப் பெரியவர் என உணரச் செய்வதுதான்'என்பர்
ஜி.கே. செஸ்டேர்சன் என்ற அறிஞர். இயேசு சீடர்களின் காலடிகளைக்
கழுவியதன் மூலமாக அவர்களை மதிப்புக்குரியவர்கள் என உணரச்
செய்தது போன்று, நாமும் மற்றவருக்குச் செய்யும் சேவையினால்
அவர்களை மதிக்குப்குரியவர்களாக உணரச் செய்வோம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
|
|