Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         15 மே 2019  
                        பாஸ்கா காலம் நான்காம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
பர்னபாவையும் சவுலையும் எனது பணிக்காக ஒதுக்கி வையுங்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 24 - 13: 5

அந்நாள்களில் கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது. பர்னபாவும் சவுலும் தங்கள் திருத்தொண்டை முடித்தபின், மாற்கு எனப்படும் யோவானைக் கூட்டிக்கொண்டு, எருசலேமிலிருந்து திரும்பிச் சென்றனர்.

அந்தியோக்கிய திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரேன் ஊரானாகிய லூக்கியு, குறுநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும் போதகராகவும் இருந்தனர்.

அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம், ``பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்'' என்று கூறினார்.

அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை அவ்விருவர்மீது வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள். இவ்வாறு தூய ஆவியாரால் அனுப்பப்பட்டவர்கள் செலூக்கியாவுக்குச் சென்றார்கள்; அங்கிருந்து சைப்பிரசுக்குக் கப்பலேறினார்கள்.

அவர்கள் சாலமி நகருக்கு வந்து அங்குள்ள யூதரின் தொழுகைக் கூடங்களில் கடவுளின் வார்த்தையை அறிவித்தார்கள்; யோவானைத் தங்கள் உதவியாளராகக் கொண்டிருந்தார்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா: 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 3)
=================================================================================
பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக!

அல்லது: அல்லேலூயா.

1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! 2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். பல்லவி

4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி

5 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! 7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 8: 12

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் உலகிற்கு ஒளியாக வந்தேன்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 44-50

அக்காலத்தில் இயேசு உரத்த குரலில் கூறியது: ``என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார். என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார். என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன். நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைக் கடைப்பிடியாதவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குபவன் நானல்ல.

ஏனெனில் நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன். என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவருக்குத் தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு; என் வார்த்தையே அது. இறுதி நாளில் அவர்களுக்கு அது தண்டனைத் தீர்ப்பு அளிக்கும்.

ஏனெனில் நானாக எதையும் பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன சொல்லவேண்டும், என்ன பேசவேண்டும் என்பதுபற்றி எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார். அவருடைய கட்டளை நிலைவாழ்வு தருகிறது என்பது எனக்குத் தெரியும். எனவே நான் சொல்பவற்றையெல்லாம் தந்தை என்னிடம் கூறியவாறே சொல்கிறேன்.''



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 திருத்தூதர் பணிகள் 12: 24-13:5

ஒவ்வொருவரையும் தனிப்பட்ட பணிக்கென அழைக்கும் இறைவன்

நிகழ்வு

ஆர். கென்ட் ஹுயூக்ஸ் (R.kent Hughes) எழுதிய 'Colosians and Philemon: The supremacy of Christ' என்ற நூலில் இடம்பெறும் நிகழ்வு இது. பிரான்ஸ் நாட்டில் மறைபோதகர் ஒருவர் இருந்தார். அவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு, பலரும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினர். அவர்களுள் ஒரு பார்வையற்ற பெண்மணியும் அடங்குவார். ஆண்டவரின் நற்செய்தியை கேட்டு, அவரை மீட்பராகவும் தலைவராகவும் ஏற்றுக்கொண்ட அந்தப் பார்வையற்ற பெண்மணியால் சும்மா இருக்கமுடியவில்லை. எனவே அவர் தனக்கு வேதம் போதித்த மறைபோதகரை அணுகிச் சென்று, பிரஞ்சு மொழியில் இருந்த ஒரு விவிலியத்தைக் கேட்டு வாங்கினார். பின்னர் அவர் யோவான் நற்செய்தி 3:16 ல் இடம்பெறும் இறைவார்த்தையை மட்டும் சிகப்பு நிறத்தால் அடிக்கோடிட்டுத் (Underline) தருமாறு கேட்டார். மறைபோதகரும் அவர் சொன்னது போன்றே, அப்பகுதியை அடிக்கோடித்து அவருக்குத் தந்தார்.

அதைப் பெற்றுக்கொண்ட அந்தப் பார்வையற்ற பெண்மணி ஒவ்வொருநாளும் அருகாமையில் இருந்த பள்ளிக்கூடத்தின் வாசலுக்கு முன்பாக நின்றுகொண்டு, பள்ளிக்கூடம் முடித்துவிட்டு வரும் மாணவர்களிடம், "உனக்கு பிரஞ்சு மொழி வாசிக்கத் தெரியுமா?" என்று கேட்டு வந்தார். அப்பொழுது யார் யாரெல்லாம் பிரஞ்சு மொழி தங்களுக்கு வாசிக்கத் தெரியும் என்று சொன்னார்களோ, அவர்களையெல்லாம் சிகப்பு நிறத்தால் அடிக்கோடிடப்பட்ட இறைவாக்குப் பகுதியை வாசிக்கச் சொன்னார். அவர்கள் அதை வாசித்த பின்பு அதைக் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

இப்படியே அவர் பல ஆண்டுகள் செய்துவந்ததால், அவர் போதித்த நற்செய்தியைக் கேட்டு இருபத்தைந்துக்கும் மேற்பட்டோர் குருவாக மாறினார்கள்.

பார்வையற்றவராக இருந்தும், இருபத்தைந்துக்கும் மேற்பட்டோர் குருவாக மாறக் காரணமாக இருந்த அந்தப் பெண்மணி நமக்குச் சொல்லக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான். அதுதான் கடவுள் ஒவ்வொருவர்க்கும் ஒரு திட்டத்தை ஒரு பணியை வைத்திருக்கின்றார். அது அவர் வழியாக மட்டுமே நடைபெறும் என்பதாகும். இன்றைய முதல் வாசகமும் இதே உண்மையைததான் நமக்கு எடுத்துரைக்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

மென்மேலும் பரவி வந்த கடவுளின் வார்த்தை

திருத்தொண்டரான ஸ்தேவான் கொல்லப்பட்டதற்கு பின்பு பல இடங்களுக்குச் சிதறிபோன கிறிஸ்தவர்கள், தாங்க இருந்த இடங்களில் உள்ள மக்களுக்கு ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்தார்கள். இது ஒருபுறம் இருக்க, அந்தியோக்கியாவில் இருந்த பர்னபா, சிமியோன், சிரேன் ஊரானாகிய லூக்கியு, மனாயீன், சவுல்(பவுல்) ஆகியோர் இறைவாக்கினராகவும் போதகராகவும் இருந்து ஆண்டவரின் நற்செய்தியை அறிவித்து வந்ததால், ஆண்டவரின் வார்த்தை எங்கும் பரவியது.

இந்த இடத்தில் தூய பவுல் கொரிந்தியர்க்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறுகின்ற, "நற்செய்தி அறிவிக்கின்ற கட்டாயம் எனக்கு உண்டு. நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு" (1 கொரி 9:16) என்ற வார்த்தைகளை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. மேலே குறிப்பிடப்பட்ட பவுல், பர்னபா உட்பட்ட ஐந்துபேரும் இறைவாக்கினர்களாக, போதகர்களாகத் திகழ்ந்து ஆண்டவரின் வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைத்தார்கள் என்றால், திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரின் வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைப்பது நமது கடமையாகும். இதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

ஒவ்வொருவர்க்கும் தனிப்பட்ட பணியைத் தரும் இறைவன்

அந்தியோக்கியா நகரில் கடவுளின் வார்த்தை மென்மேலும் பரவிக் கொண்டிருந்த சூழ்நிலையில் ஐவரும் நோன்பிருந்து மன்றாடியபோது, தூய ஆவியார் அவர்களிடம், "பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கின்றேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்" என்கின்றார். தூய ஆவியார் பர்னபாவையும் பவுலையும் புறவினத்தார்க்கு நற்செய்தி அறிவிக்க அழைத்தார். அதைத்தான் அவர் தனிப்பட்ட பணியெனச் சொல்கின்றார். இதைத் தொடர்ந்து பவுலும் பர்னபாவும் தங்களோடு மாற்கை தங்களோடு கூட்டிக்கொண்டு சைப்பிரசிற்குக் நற்செய்தி அறிவிக்கப் புறப்படுகின்றார்கள்.

பவுலையும் பர்னபாவையும் தனிப்பட்ட பணிக்கென இறைவன் அழைத்ததுபோன்றுதான் இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஒரு பணிக்கென அழைக்கின்றார். எனவே, இந்த உண்மையை உணர்ந்தவர்களாய், கடவுள் நம்மை எந்தப் பணிக்காக அழைத்திருக்கின்றாரோ அந்தப் பணியைச் செவ்வனே செய்து, ஆண்டவரை மகிமைப்படுத்துவது தேவையான ஒன்று.

சிந்தனை

'இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்' (எரே 1:10) என்று ஆண்டவராகிய கடவுள் எரேமியா இறைவாக்கினரிடம் கூறுவார். அவரைத் தன்னுடைய பணிக்காக தனிப்பட்ட பணிக்காக - அழைத்த இறைவன் நம்மையும் அழைத்திருக்கின்றார். இந்த உண்மையை உணர்ந்தவர்களாய் ஆண்டவர்க்கு நம்முடைய வார்த்தையாலும் வாழ்வாலும் சான்றுபகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
யோவான் 12: 44-50

இயேசுவின்மீது நம்பிக்கை கொள்பவர் இறைவன்மீதும் நம்பிக்கை கொள்கிறார்

நிகழ்வு

ஒரு கல்லூரியில் உயிரியல் (Biology) பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு நாத்திகவாதி. அவரிடம் வித்தியாசமான ஒரு வழக்கம் இருந்தது. அது என்னவெனில், கல்வியாண்டின் தொடக்கத்தில், புதிதாக வந்திருக்கும் மாணவர்களிடம் யார் யாருக்கெல்லாம் கடவுள்மீது நம்பிக்கை இருக்கிறது என்று கேட்பார். மாணவர்களில் ஒருசிலர் தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பதாகச் சொல்வார்கள். அப்பொழுது அவர்கள் அவரிடம், இந்தப் பருவம் (Semester) முடிவதற்குள் உங்களை என்னைப் போல் நாத்திகவாதியாக்கிக் காட்டுகிறேன் என்று சவால்விடுவார். அந்தப் பருவம் முடிவதற்குள் அவர் சொன்னதுபோன்றே கடவுள்மீது நம்பிக்கை கொண்டிருந்த மாணவர்களையெல்லாம் நாத்திகவாதியாக மாற்றிவிடுவார். இது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.

இப்படிப்பட்ட சமயத்தில் ஒருநாள் அவர் மலங்காட்டிற்குள் இருந்த தன்னுடைய பண்ணை வீட்டிற்குத் தனியாகச் சென்றுகொண்டிருந்தார். அதுவோ ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத காடு. அப்பொழுது வித்தியாசமான ஒரு சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். அங்கே ஒரு பெரிய கரடியானது நின்றுகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவருடைய இதயம் ஒருகணம் நின்றுதுடித்தது. பின்னர் அவர் தன்னுடைய உயிரைக் காத்துக்கொள்ள, வேகமாக ஓடினார். கரடியோ அவரைவிட வேகமாக ஓடிவந்து அவருக்குப் பக்கத்தில் வந்தது. 'இதற்கு மேலும் ஓடி எந்தவொரு பயனுமில்லை' என்பதை உணர்ந்த அவர், வானத்தை அண்ணார்ந்து பார்த்து, "கடவுளே என்னைக் காப்பாற்றும்" என்று உரக்கக் கத்தினார்.

அப்பொழுது வானத்திலிருந்து மின்னலைப் போன்ற ஓர் ஒளியானது அவர்மீது இறங்கியது. அதிலிருந்து கடவுள், "இத்தனை நாளும் நான் கிடையவே கிடையாது என்று உன்னிடம் பாடம்பயின்ற மாணவர்களுக்குக் கற்பித்து வந்தாயே! இப்பொழுது எங்கிருந்து வந்தது என்மீது நம்பிக்கை! சரி இனிமேலானது என்மீது நம்பிக்கை வைத்து வாழ்வாயானால், உன்னை இந்தக் கரடியிடமிருந்து காப்பாற்றுகிறேன்" என்றார்.. ஒருநொடி யோசித்த அந்த உயிரியல் பேராசிரியர், "அப்படியெல்லாம் என்னால் உன்மீது நம்பிக்கை வைத்து வாழமுடியாது. வேண்டுமானால், என்னைத் துரத்திக்கொண்டு வரும் இந்தக் கரடியை ஒரு கிறிஸ்தவராக்கிவிடு" என்றார். கடவுளும், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார்.

மறுகணம் பேராசிரியரை வேகமாகத் துரத்திக்கொண்டு வந்த கரடி சாந்தி சொருபியனது. அவருக்கோ ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. 'உண்மையில் இந்தக் கரடி கிறிஸ்தவராகிவிட்டதா' என்று அதையோ உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கும்போது, அது முழந்தாள் படியிட்டு, "இறைவா! இன்றைய உணவை எனக்குத் தந்ததற்காக உமக்கு நன்றி" என்று இறைவனை வணங்கிவிட்டு, பேராசிரியர்மீது பாய்ந்து, அவரைத் தனக்கு இரையாக்கிக் கொண்டது.

இறைவன்மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்பவர் எப்படி அழிவைச் சந்திக்கின்றார் என்பதை வேடிக்கையாகப் பதிவுசெய்யும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய நற்செய்தி வாசகமும் இறைவன்மீது நம்பிக்கை வாழ்வதால் ஒருவர் பெறுகின்ற ஆசியையும் இறைவன்மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பதால் ஒருவர் பெறுகின்ற தண்டனையையும் எடுத்துக் கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின்மீது நம்பிக்கை கொள்பவர் ஒளியில் இருப்பார்

யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தியில் இயேசு, "என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார்" என்று சொல்லிவிட்டு, "என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்" என்கின்றார். இயேசுவே இவ்வுலகின் ஒளி (யோவா 8:12). அப்படிப்பட்டவரிடம் ஒருவர் நம்பிக்கை கொண்டு வாழ்கின்றபோது, அவர் எத்தகைய சூழ்நிலையிலும் இருளில்/ அழிவில் விழமாட்டார் என்பது உண்மை. இன்றைக்குப் பலர் அழிந்து போவதற்கு காரணம் ஒளியாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளவில்லை, அவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை என்பதுதான் காரணம்.

இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாதவர் தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்

தன்மீது நம்பிக்கை கொள்ளும் ஒருவர் எத்தகைய ஆசியைப் பெறுவார் என்று எடுத்துச் சொல்லும் இயேசு, தொடர்ந்து தன்மீது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பவர் தண்டனைத் தீர்ப்புப் பெறுவார் என்கின்றார்.

இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளக்கூடியவர் அவரது வார்த்தையை நம்பவேண்டும். ஏனெனில், அவர் வார்த்தையானவர் (யோவா 1:14). யூதர்கள் இயேசுவின் வார்த்தைகளை நம்பாமல், அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் போனார்கள். அதனால்தான் கிபி. 70 ஆம் ஆண்டு உரோமையர்களிடமிருந்து தண்டனையைப் பெற்றார்கள். யூதர்கள் மட்டுமில்லை, இயேசுவின் வார்த்தைகளைக் கேளாமலும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமலும் இருந்தால், நாமும் தண்டனைத் தீர்ப்பைப் பெறுவோம் என்பது உறுதி.

சிந்தனை

'கடவுள் நமக்கு கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம். இதுவே அவரது கட்டளை' என்பார் யோவான் (1 யோவா 3:23) என்பார் யோவான். ஆகவே, நாம் இயேசுவின் நம்பிக்கை வைத்து, அவருடைய அன்புக் கட்டளையைக் கடைப்பிடித்து நிலைவாழ்வையும் இறையருளையும் நிறைவாய்ப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!