Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         14 மே 2019  
                        பாஸ்கா காலம் நான்காம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 19-26

அந்நாள்களில் ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போயினர். அவர்கள் யூதருக்கு மட்டுமே இறைவார்த்தையை அறிவித்தார்கள்; வேறு எவருக்கும் அறிவிக்கவில்லை.

அவர்களுள் சைப்பிரசு, சிரேன் ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலர் இருந்தனர். அவர்கள் அந்தியோக்கியாவுக்கு வந்து அங்குள்ள கிரேக்கரை அணுகி ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள். ஆண்டவரின் கைவன்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். பெருந்தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர். இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்றுவர அனுப்பி வைத்தார்கள்.

அவர் அங்குச் சென்றபோது, கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்; மேலும் உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய்ப் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.

பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்; அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்துவந்தார். அவர்கள் ஓராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள்.

அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா: 87: 1-3. 4-5. 6-7a (பல்லவி: திபா 117: 1a)
=================================================================================
பல்லவி: பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்!

அல்லது: அல்லேலூயா.

1 நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது. 2 யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும் விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார். 3 கடவுளின் நகரே! உன்னைப்பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. பல்லவி

4 எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, `இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்' என்று கூறப்படும். 5 'இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!' என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும். பல்லவி

6 மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, 'இவர் இங்கேதான் பிறந்தார்' என ஆண்டவர் எழுதுவார். 7a ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது' என்பர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 22-30

அக்காலத்தில் எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம். கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்துகொண்டிருந்தார்.

யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, "இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்" என்று கேட்டார்கள்.

இயேசு மறுமொழியாக, "நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள்தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன. ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ளமாட்டார். அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை:

சிதறிய மக்கள் நற்செய்தியை அறிவித்து சென்றனர்.

ஆண்டவரும் அவர்களோடு இருந்து, அவர்களை வல்லமையோடு செயல்பட செய்தார்.

மக்களும் ஆண்டவரிலே இணைந்தனர்.

கிறிஸ்துவை கொண்டிருந்ததால், மக்கள் அவர்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்தனர்.

நம்மிடம் இன்று கிறிஸ்துவை காண்கின்றார்களா?

நம்மை கிறிஸ்தவர்கள் என்றழைப்பதில் இன்று அர்த்தம் உள்ளதா?

பெயருக்குகந்த வாழ்வு வாழ முன்வருவோம்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 திருத்தூதர் பணிகள்

அடுத்தவரின் வளர்ச்சியில் மகிழ்ச்சியடைவோம்

நிகழ்வு

ஒரு தனியார் நிறுவனத்தில் சஞ்சனா என்றோர் இளம்பெண் பணிபுரிந்து வந்தார். அவர் பணியில் காட்டிய அர்ப்பண உணர்வையும் ஆர்வத்தையும் கண்டு மேலிடம் அவரை மிகக் குறுகிய காலக்கட்டத்திலேயே மிக உயர்ந்த பொறுப்பில் அமர்த்தியது. இதற்குப் பின்பு அவர் முன்பைவிட மிகச் சிறப்பாகப் பணிபுரிந்து வந்தார். இதனால் அவர் பணிபுரிந்து வந்த நிறுவனம் நல்லதொரு வளர்ச்சியைக் கண்டது.

இந்நிலையில் மேலிடம் சஞ்சனாவிற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதற்காக அனிதா என்ற இன்னொரு இளம்பெண்ணை வேலைக்கு அமர்த்தியது. இது சஞ்சனாவிற்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. அனிதா தனக்குப் போட்டியாக வந்துவிடக்கூடாது என்பதற்காக சஞ்சனா அவரைப் பற்றி எப்போதும் குறைகூறத் தொடங்கினார். இதை நீண்டநாட்களாகப் பொறுத்துப் பார்த்த மேலிடம் ஒருநாள் சஞ்சனாவை அழைத்து, "சஞ்சனா! நீ செய்வது கொஞ்சம்கூட நல்லாயில்லை. வேலைக்குச் சேர்ந்த புதிலில் நீயும் சிறுசிறு தவறுகள் செய்துகொண்டுதான் இருந்தாய் என்பதை மறந்துவிடாதே. மேலும் நீ இப்படித் தொடர்ந்து அணிதாவைக் குறைகூறிக்கொண்டிருந்தால் உன்னை வேலையிலிருந்து தூக்கவேண்டி வரும்" என்று எச்சரித்தது. இதைத் தொடர்ந்து சஞ்சனா, அனிதாவின்மீது எந்தவொரு குற்றச்சாட்டையும் வைக்காமல், அவரோடு இணக்கமாகவும் அன்பாகவும் பணிசெய்து வந்தார்.

இந்த நிகழ்வில் வரும் சஞ்சனாவைப் போன்றுதான் பலரும் அடுத்தவருடைய வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவதைக் காணமுடிகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அடுத்தவர்களுடைய வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைந்த, அவர்கள் மேலும் வளரவேண்டும் என்பதற்காக ஊக்கப்படுத்திய ஒருவரைக் குறித்து இன்றைய முதல் வாசகம் எடுத்துச் சொல்கின்றது. நாம் அவரைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்,

ஆண்டவரின் வார்த்தை அந்தியோக்கு நகர்க்குப் பரவுதல்

திருத்தொண்டரான ஸ்தேவான் கொல்லப்பட்டதற்குப் பிறகு கிறிஸ்தவர்கள் பல இடங்களுக்குச் சிதறிப்போனார்கள். குறிப்பாக பெனிசியா, சைப்பரசு, அந்தியோக்கு போன்ற பல்வேறு நகரங்களுக்குச் சிதறிப்போனார்கள். இவர்கள் அனைவரும் தாங்கள் இருந்த பகுதியில் இருந்த யூதர்களுக்கு மட்டும் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார்கள். வேறு எவர்க்கும் நற்செய்தியை அறிவிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சைப்பரசு, சிரேன் ஆகிய இடங்களைச் சார்ந்த சிலர் அந்தியோக்கு நகர்க்கு வந்து, அங்குள்ள கிரேக்கர்களுக்கு ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைக்கத் தொடங்கினார்கள். அவர்கள் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு, ஏராளமான கிரேக்கர்கள் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

இச்செய்தி எருசலேமில் இருந்த திருஅவையினர்க்குத் தெரியவர, அவர்கள் பர்னபாவை அங்கு அனுப்பி வைக்கின்றார்கள். அந்தியோக்கியாவிற்கு வரும் பர்னபா அங்கு என்ன செய்தார்? அவர் மக்களை எப்படியெல்லாம் வழிநடத்தினார்? என்பதைத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

அந்தியோக்கியாக் கிறிஸ்தவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பர்னபா

அந்தியோக்கியா நகர்க்கு வந்த பர்னபா எப்படிப்பட்ட பணியினை ஆற்றினார் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னம், அந்தியோக்கியா நகர் எப்படிப்பட்டது என்று தெரிந்துகொள்வது நல்லது. அந்தியோக்கியா, சிரியா நாட்டின் தலைநகரமாகும். இது உரோமையர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மூன்றாவது பெரிய நகரமாகும். இங்கு ஐந்து இலட்சத்தும் மேற்பட்டோர் வாழ்ந்துவந்தனர். தொழில் நகரமானது இதில் பணப்புழக்கமும் அதே சமையம் தீமையும் அதிகமாக மலிந்துகிடந்தது. இப்படிப்பட்ட நகரில் சைப்பரசு, சீரேன் போன்ற இடங்களைச் சார்ந்தவர்கள் ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைத்தும், அதை உடனே ஏற்றுக்கொண்டது நமக்கு வியப்பாக இருக்கின்றது. இதில் இன்னொரு முக்கியமான விடயம், இங்குதான் இயேசுவைப் பின்பற்றி வந்தவர்கள் முதன்முறையாகக் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

அந்தியோக்கியா நகரைக் குறித்து அறிந்துகொண்ட நாம் அந்நகரில் பர்னபா செய்த பணி என்ன என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். அந்தியோக்கியா நகர்க்கு வருகின்ற பர்னபா, அவர்களுடைய வளர்ச்சியைக் கண்டு மிகவும் மகிழ்கின்றார். இதனால் அவர் அவர்களை ஊக்கப்படுத்தத் தொடங்குகின்றார். பர்னபா என்றாலே ஊக்கப்படுத்துபவர் (திப 4:36) என்றுதான் அர்த்தம். இப்படிப் பெயர்க்கு ஏற்றார்போல் பர்னபா அந்தியோக்கியாவில் இருந்த கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்தினார். இதனால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போனது. பர்னபா செய்த இன்னொரு முக்கியமான காரியம் தர்சு நகரில் இருந்த பவுலை அந்தியோக்கியாவிற்கு அழைத்துக் கொண்டு வந்து, அவரையும் நற்செய்திப் பணியில் ஈடுபடுத்தியது. இவ்வாறு பர்னபா பலருடைய வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தார்.

சிந்தனை

'நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள். அவரது அன்பிற்குரிய இறைமக்கள்' (கொலோ 3: 12) என்பார் பவுல். ஆகவே, கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, பர்னபாவிடம் இருந்த ஊக்குவிக்கும் பண்பை, ஒருவருடைய வளர்ச்சியில் மகிழக் கூடிய பெருந்தன்மையை நாமும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
யோவான் 10: 22-30
நல்லாயன் இயேசுவின் ஆடுகள் யார் யார்?

நிகழ்வு

          முன்பொரு காலத்தில் பெர்சியா நாட்டில் அரசன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவன், தனக்கு ஆலோசகராக இருந்து பணிபுரிய திறமையான ஒருவர் தேவை... விரும்பமுள்ளவர்  மறுநாள் அரண்மனைக்கு வரவும் என்றோர் அறிவிப்புக் கொடுத்தான். அரசன் கொடுத்த இவ்வறிப்பினைக் கேட்டு, அடுத்த நாள் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் அவனுடைய அரண்மணைக்கு முன்பாகக் கூடினார்கள். அவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்துவிட்டு அரசனே ஒருகணம் ஆடிப்போய்விட்டான். பின்னர் அவன் தன்னுடைய அமைச்சரின் உதவியுடன் தகுதியான இரண்டு இளைஞர்களைத் தேர்ந்தெடுத்தான். அந்த இரண்டு இளைஞர்களில் யார் மிகவும் தகுதியானவர் என்று பார்க்க அரசன் அவர்களுக்கு இன்னொரு போட்டிவைத்தான்.

"இளைஞர்களே! இப்போது நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொள்ளுங்கள். இதுவரைக்கும் நீங்கள் பல்வேறுவிதமான போட்டிகளில் வெற்றிகொண்டு, இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சிக்குரிய காரணம். ஆனால் இப்போது நான் உங்களுக்கு வைக்கக்கூடிய போட்டியில் யார் வெற்றிபெறுகிறாரோ அவரே எனக்கு ஆலோசகராக இருக்கும் தகுதியைப் பெறுவார்" என்று சொல்லிவிட்டு அரசன் அவர்களிடம் தொடர்ந்து பேசினான்:      "ஊருக்குக் வெளியே ஒரு கிணறு இருக்கின்றது. அந்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் பெரியதொரு பாத்திரம் இருக்கின்றது. அந்தப் பாத்திரத்தில் அருகே வைக்கப்பட்டிருக்கும் வாளியைக்கொண்டு, கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து, அதை அந்தப் பத்திரத்தில் ஊற்றவேண்டும். மாலை நேரத்தில் வந்து பார்க்கின்றேன்." அரசன் சொன்னதற்குச் சரியென்று சொல்லிவிட்டு இரண்டு இளைஞர்களும் ஊருக்கு வெளியே இருந்த கிணற்றுக்குச் சென்றார்கள். அங்கு அரசன் சொன்னதுபோன்று ஒரு பெரிய பாத்திரமும் பக்கத்தில் இரண்டு வாளிகளும் இருந்தன.

பின்னர் அவர்கள் இருவரும் அங்கே வைக்கப்பட்டிருந்த வாளியைக் கிணற்றில் விட்டு தண்ணீர் இறைத்து, பக்கத்தில் இருந்த பாத்திரத்தில் ஊற்றத் தொடங்கினார்கள். ஓரிரு வாளித்தண்ணீர் ஊற்றியபின்புதான் தெரிந்தது. அது பாத்திரத்தில் ஊற்றப்படும் தண்ணீரெல்லாம் வெளியே வருகின்றது என்று. இதைப் பார்த்ததும் முதல் இளைஞன், "ஓட்டைப் பாத்திரத்தை எப்படித் தண்ணீரால் நிரப்புவது... இது முட்டாள்தனமான செயல். இனிமேலும் இப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்துகொண்டிருக்கமாட்டேன்" என்று சொல்லிவிட்டு, வாளியைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு, வீட்டுக்குச் சென்றான். ஆனால், இரண்டாவது இளைஞனோ, பாத்திரம் நிரம்பாவிட்டாலும் பரவாவில்லை. அரசன் சொல்லியிருக்கிறான்' என்பதற்காகத் தொடர்ந்து கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து, பாத்திரத்தில் ஊற்றுக்கொண்டே இருந்தேன்.

பிற்பகல் மூன்று மணி இருக்கும். ஏறக்குறைய கிணற்றிலிருந்த தண்ணீரெல்லாம் பாத்திரத்தில் இறைத்துக்கொட்டப்பட்ட நிலையில் அவன் கிணற்றை உற்றுப்பார்த்தான். அப்பொழுது ஏதோ ஒன்று பளபளப்பாக மின்னிக்கொண்டிருந்தது. அது என்னவென்று அவம் வாளியைவிட்டு வெளியே எடுத்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது. அது விலைமதிக்க முடியாத வைர மோதிரம் என்று. அரசர்தான் இதை இந்தக் கிணற்றுக்குள்ளே போட்டிருப்பார்போலும்' என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கையில் அரசன் அங்கு வந்தான். அவன் அந்த இளைஞனிடம், "தம்பி! இங்கு நடந்த எல்லாவற்றையும் நான் தொலைவிலிருந்து கவனித்துக்கொண்துதான் இருந்தேன். உங்களிடம் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து பாத்திரத்தில் ஊற்றச் சொன்னனே ஒழிய, அதை நிரப்பச் சொல்லவில்லை'. நான் சொன்ன இந்த வார்த்தைகளுக்கு முதல் இளைஞன் கீழ்ப்படியவில்லை. நீயோ கீழ்ப்படிந்து நடந்தாய். அதனால்தான் உனக்கு அந்த வைர மோதிரம் பரிசாகக் கிடைத்திருக்கின்றது, என்னுடைய ஆலோசகராகவும் வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது" என்று அரசன் அவனை வெகுவாகப் பாராட்டித் தன்னுடைய ஆலோசராக ஏற்படுத்தினான்.

எப்படி அரசனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்ததால் இரண்டாவது இளைஞன் அரசனுடைய ஆலோசகராக மாறினானோ அதுபோன்று யார் யாரெல்லாம் நல்லாயன் இயேசுவின் குரலுக்குச் செவிகொடுத்து வாழ்கிறார்களோ அவர்கள் நல்லாயன் இயேசுவின் ஆடுகள் ஆவார்கள் என்பது உறுதி.

இயேசுவின் குரலுக்குச் செவிசாய்போரே இயேசுவின் ஆடுகள்

          நற்செய்தியில் யூதர்கள் இயேசுவிடம், "நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்" என்று சொல்கின்றபோது, இயேசு அவர்களிடம், "நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள்தான் நம்பவில்லை" என்கிறார். இப்படிச் சொல்லிவிட்டு இயேசு அவர்களிடம், "நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் இல்லை. அதனால்தான் நீங்கள் என்னை நம்பாமலும் என் குரலுக்குச் செவிசாய்க்காமலும் இருக்கிறீர்கள்" என்கின்றார்.

இயேசுவின் வார்த்தைகள் நமக்கு ஓர் உண்மையை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. அது என்னவெனில், யார் யாராரெல்லாம் இயேசுவின் குரலுக்கு செவிசாய்க்கின்றார்களோ
, அவர்கள் இயேசுவின் மந்தையைச் சார்ந்தவர்கள் ஆவார்கள் என்பதாகும். எனவே, நாம் இயேசுவின் குரலுக்கு செவிசாய்த்து வாழ்வோம். அதன்வழியாக இயேசுவின் மந்தையாகி, நிலைவாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

சிந்தனை

 
          உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டுக் கூறிய எல்லா வழிகளிலும் நடங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்' (இச 5:33) என்கின்றது இறைவார்த்தை. நாம் இயேசுவின் குரலுக்கு, அவருடைய கட்டளைகளுக்குச் செவிசாய்த்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!