Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         14 மே 2019  
                        பாஸ்கா காலம் நான்காம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  - புனித மத்தியா - திருத்தூதர் விழா
=================================================================================
சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 15-17, 20-26

ஒரு நாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது: "அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்துத் தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த மறைநூல் வாக்கு நிறைவேறவேண்டியிருந்தது. அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான்.

திருப்பாடல்கள் நூலில், 'அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக!' என்றும் 'அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்!' என்றும் எழுதப்பட்டுள்ளது. ஆகையால் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க, அவர் நம்மிடையே செயல்பட்ட காலத்தில் நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடிவரவேண்டியது தேவையாயிற்று. யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த காலமுதல் ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் நம்மோடு இருந்திருக்க வேண்டும்."

அத்தகையோருள் இருவரை முன்னிறுத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா. இவருக்கு யுஸ்து என்னும் பெயரும் உண்டு. மற்றவர் மத்தியா.

பின்பு அவர்கள் அனைவரும், "ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும் அறிபவரே, யூதாசு திருத்தொண்டையும் திருத்தூதுப் பணியையும் விட்டகன்று தனக்குரிய இடத்தை அடைந்துவிட்டான். அந்த யூதாசுக்குப் பதிலாக யாரைத் தெரிந்தெடுக்க வேண்டும் என இந்த இருவருள் ஒருவரை எங்களுக்குக் காண்பியும்" என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டனர்.

அதன்பின் அவர்கள் சீட்டுக் குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா: 113: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 8)
=================================================================================
பல்லவி: உயர்குடி மக்களிடையே அவர்களை அமரச் செய்கின்றார். அல்லது: அல்லேலூயா!

1 ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். 2 ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! பல்லவி

3 கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக! 4 மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. பல்லவி

5 நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர் போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? 6 அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். பல்லவி

7 ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; 8 உயர்குடி மக்களிடையே - தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே -அவர்களை அமரச் செய்கின்றார். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-17

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.

என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.

இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.

நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்.

ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
திருச்சபையானது இன்று திருத்தூதரும் மறைசாட்சியுமான தூய மத்தியாசின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.

இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவனும், அவரைக் காட்டிக் கொடுத்தவனுமான யூதாஸ் இஸ்காரியோத்து 'ஒரு பாவமும் அறியாத இயேசுவைக் காட்டிக் கொடுத்துவிட்டேனே' என்று தற்கொலை செய்துகொள்கிறபோது திருத்தூதர்கள் குழுவில் ஒரு இடமானது காலியாக இருக்கின்றது. எனவே 120 சீடர்கள் ஒன்றாகக் குழுமியிருந்த நேரத்தில், பேதுரு அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, "ஆண்டவர் இயேசுயின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாக விளங்க, அவர் நம்மிடையே செயல்பட்ட காலத்தில் நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடி வரவேண்டிய தேவையாயிற்று. யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த காலம் முதல் ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து விண்ணேற்றம் அடைந்த நாள்வரை அவர் நம்மோடு இருந்திருக்க வேண்டும்" என்று யார் திருத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற காரணத்தை முன்மொழிகிறார்.

உடனே பேதுரு சொன்ன தகுதிகளுடன் இருவரது பெயர்கள் முன்மொழியப்படுகின்றது. அவர்கள் இருவரில் ஒருவர் யோசேப்பு எனப்படும் பர்சபா. மற்றொருவர் மத்தியாஸ். பின்னர் அவர்கள் இருவரது பெயர்களும் சீட்டுக் குலுக்கிப் போடப்படுகின்றன. இறுதியாக சீட்டு மத்தியாசின் பெயருக்கு விழுகிறது. அவர் பதினோரு திருத்தூதர்கள் அடங்கிய குழுவில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றார்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறும், "நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை, நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்' என்ற இறைவார்த்தையானது இப்படியாக இங்கே நிறைவேறுகிறது.

தூய மத்தியாசைப் பற்றி நாம் அறிய முற்படும்போது, அவரைப் பற்றிய குறிப்புகள் திருத்தூதர் பணிகள் நூல் முதல் அதிகாரத்தை தவிர, வேறு எங்கும் காணக் கிடைக்கவில்லை. ஆனால் திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத தூய அந்திரேயா எழுதிய மத்தியாசின் பணிகள் நூலில் இவர் காட்டு மிராண்டிகளுக்கு மத்தியில் நற்செய்தி அறிவித்ததாகவும், அப்போது அவரது கண் பறிக்கப்பட்டதாகவும், அந்திரேயா சென்றுதான் அவரைக் காப்பற்றியதாகவும் அவரைப் பற்றிய குறிப்புகள் உண்டு.

மேலும் இவரது இறப்பைப் பற்றியும் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இவர் பாலஸ்தீனா, சிரியா, அர்மேனியா போன்ற பகுதிகளில் நற்செய்தி அறிவிக்கும்போது சிலுவையில் அறைந்துகொள்ளப்பட்டார் என்றும், கல்லால் எறிந்து கொல்லப்பட்டார் என்றும் செய்திகள் நிலவுகின்றன. எப்படி இருந்தாலும் அவர் இயேசுவுக்காக, அவர்மீது கொண்ட அன்பிற்காக தன்னுடைய உயிரையே தியாக பலியாகத் தந்தார் என்பது மட்டும் உண்மை. மத்தியாஸ் அதிகமான தவ மற்றும் ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபட்டார் என்றும் சொல்லப்படுகின்றது

இவரது விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், இன்றைய நாள் இறைவார்த்தை நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம். யோவான் எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "நான் என் தந்தையின் கட்டளையைக் கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருப்பதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைபிடித்தால், என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.. நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்கவேண்டும் என்பதே என் கட்டளை... தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" என்கிறார்.

இயேசுவின் சீடர்களாக, அல்லது அவரது நண்பர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும், ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டு வாழவேண்டும், அதற்கு ஈடாக நம்முடைய உயிரையும் கொடுக்க முன்வரவேண்டும். இயேசுவின் நண்பராக, திருத்தூதராக இருந்த தூய மத்தியாஸ் இயேசுவின் மீதும், எல்லார்மீதும் அதிகமான அன்புகொண்டிருந்தார். அந்த அன்பிற்காக தன்னுடைய உயிரையும் கொடுக்க வந்தார். ஆகவே, ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டு வாழவேண்டும் என்பதுதான் தூய மத்தியாசின் விழா நமக்குத் தரும் செய்தியாக இருக்கின்றது.

ஒரு யூதக் கதை இது. இலியாஸ், யோசேப்பு என்ற உயிருக்குயிரான நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றார்கள்; ஒன்றாகவே படித்தார்கள். அப்படிப்பட்ட நண்பர்கள் இருவரும் ஒருகட்டத்தில் வேலை விசயமாக வேறு வேறு நாட்டிற்குப் பிரிந்து சென்றாகள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இலியாஸ் தன்னுடைய நண்பன் யோசேப்பைப் பார்ப்பதற்காக அவன் இருந்த நாட்டிற்குக் சென்றான். இலியாஸ் அந்நாட்டின் தெருக்களில் நடந்துவருவதைப் பார்த்த காவலர்கள் 'இவன் பார்ப்பதற்கு எதிரிநாட்டு ஒற்றன் போன்று இருக்கிறான்' என்று சொல்லி, இலியாசை அந்நாட்டு மன்னனிடம் இழுத்துக்கொண்டு சென்றனர்.

மன்னன் அவனைப் பார்த்துவிட்டு, 'இவன் தலை வெட்டிக் கொல்லப்படவேண்டும்' என்று உத்தரவிட்டான். உடனே இலியாஸ் மன்னனிடம், "மன்னா! நான் ஒரு வியாபாரி, எனக்கு மனைவியும், இரண்டு குழந்தைகம் இருக்கிறார்கள். அவர்கள் இப்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்கள் அவர்களிடம் சென்று, நான் வைத்திருக்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன், நான் வந்த பிறகு என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்" என்று கெஞ்சிக்கேட்டான். அதற்கு மன்னன், "அப்படியெல்லாம் விடமுடியாது, வேண்டுமானால், உனக்குப் பதிலாக வேறு ஒருவனை இங்கே நிறுத்து, நான் உன்னை உன்னுடைய மனைவி மக்களைப் பார்க்க அனுமதிக்கின்றேன்" என்றான். உடனே அவன், "இங்கு எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான், அவன் என் சார்பாக இங்கே நிற்பான்" என்றான்.

பின்னர் மன்னரின் உத்தரவின் பேரில் யோசேப்பு அங்கே கொண்டுவரப்பட்டு, காவலர்களின் கண்காணிப்பில் நிறுத்தப்பட்டான். இலியாசிற்கு ஒருமாத காலம் காலக்கெடு கொடுக்கப்பட்டது, அந்த ஒருமாதத்தில் அவன் திரும்பி வரவில்லை என்றால், அவனுடைய நண்பனின் தலைவெட்டப்படும் என்று எச்சரிக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டான்.

இலியாஸ் தன்னுடைய மனைவி, மக்களைப் பார்க்கப் போய் அதிகமான நாட்கள் ஆகியும் திரும்பிவரவே இல்லை. அவன் திரும்பி வராததால் அவனுடைய நண்பன் யோசேப்பிற்கு அந்த தண்டனையை நிறைவேற்ற மன்னன் உத்தரவிட்டான். எனவே, காவலர் ஒரு வாளை எடுத்து, அவனது தலையை வெட்ட தன்னுடைய கையை ஓங்கிய தருணம், "அவனை வெட்டவேண்டாம், இதோ நான் வந்துவிட்டேன்" என்ற ஒரு சத்தம் கேட்டு, எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். அங்கே இலியாஸ் நின்று கொண்டிருந்தான்.

உடனே காவலர்கள் யோசேப்பை வெட்டுவதை நிறுத்திவிட்டு, இலியாசின் தலையை வெட்ட முயன்றனர். இதைப் பார்த்த யோசேப்பு, அவனை வெட்ட வேண்டாம், என்னை வெட்டுங்கள்" என்று கத்தினான். இப்படி மாறி, மாறி அவர்கள் சத்தம் போட, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அரசன் 'இப்படிப்பட்ட நண்பர்களை நான் இதுவரை பார்த்ததில்லை' என்று சொல்லி, அவர்களை வெட்டவேண்டாம் என்று உத்தரவிட்டான். அதோடு, இப்படி ஒருவர் மற்றவருக்காக உயிரைக்கொடுக்கும் நண்பர்கள் குழுவில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டு, அதில் இணைந்துகொண்டான்.

இலியாசும், யோசேப்பும் ஒருவர் மற்றவருக்காகத் தங்களுடைய உயிரைக் கொடுக்க முன்வந்து, அவர்கள் நட்பிற்கு அன்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினார்கள்.

தூய மத்தியாசின் விழாவைக் கொண்டாடும் நாமும் அவரைப் போன்று, இயேசுவுக்கு சான்றுபகர்ந்து வாழ்வோம். ஒருவர் மற்றவரிடம் செலுத்துவோம், அதற்கு ஈடாக நம்முடைய உயிரையும் கொடுக்க முன்வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம். Fr. Maria Antonyraj, Palayamkottai.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!