Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         13 மே 2019  
                        பாஸ்கா காலம் நான்காம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
வாழ்வுக்கு வழியான மன மாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 1-18

அந்நாள்களில் பிற இனத்தவரும் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டதைப்பற்றித் திருத்தூதர்களும் யூதேயாவிலுள்ள சகோதரர் சகோதரிகளும் கேள்விப்பட்டார்கள்.

பேதுரு எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, விருத்தசேதனம் செய்துகொண்டவர்கள் அவரோடு வாதிட்டனர். "நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?" என்று குறை கூறினர்.

பேதுரு நடந்தவற்றை ஒன்றன்பின் ஒன்றாக விளக்கிக் கூறத் தொடங்கினார். "நான் யோப்பா நகரில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது மெய்ம்மறந்த நிலையில் ஒரு காட்சி கண்டேன்.

பெரிய கப்பற்பாயைப் போன்ற ஒரு விரிப்பு நான்கு முனைகளிலும் கட்டப்பட்டு வானத்திலிருந்து இறக்கப்பட்டு என்னிடம் வந்தது. அதை நான் கவனமாக நோக்கியபோது, தரையில் நடப்பன, ஊர்வன, வானில் பறப்பன, காட்டு விலங்குகள் ஆகியவற்றைக் கண்டேன்.

'பேதுரு, எழுந்திடு! இவற்றைக் கொன்று சாப்பிடு' என்னும் ஒரு குரல் ஒலிப்பதையும் கேட்டேன்.

அதற்கு நான், 'வேண்டவே வேண்டாம் ஆண்டவரே, தீட்டானதும் தூய்மையற்றதுமான எதுவும் ஒருபோதும் என் வாய்க்குள் சென்றதில்லையே' என்றேன்.

இரண்டாம் முறையும் வானிலிருந்து மறுமொழியாக, 'தூய்மையானது எனக் கடவுள் கருதுவதைத் தீட்டாகக் கருதாதே' என்று அக்குரல் ஒலித்தது.

இப்படி மும்முறை நடந்தபின்பு யாவும் வானத்துக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்நேரத்தில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூவர் நான் தங்கியிருந்த வீட்டின் முன் வந்து நின்றனர்.

தூய ஆவியார் என்னிடம், 'தயக்கம் ஏதுமின்றி அவர்களோடு செல்' என்று கூறினார்.

உடனே நானும் இந்த ஆறு சகோதரர்களுமாக அந்த மனிதர் வீட்டுக்குச் சென்றோம்.

அவர் தம் வீட்டில் வானதூதர் வந்து நின்றதைக் கண்டதாகவும், அத்தூதர் பேதுரு என்னும் பெயர் கொண்ட சீமோனை வரவழையும்; நீரும் உம் வீட்டார் அனைவரும் மீட்புப் பெறுவதற்கான வார்த்தைகளை அவர் உம்மோடு பேசுவார் என்று தமக்குக் கூறியதாகவும் எங்களுக்கு அறிவித்தார்.

நான் பேசத்தொடங்கியதும் தூய ஆவி முதலில் நம்மீது இறங்கி வந்ததுபோல் அவர்கள் மீதும் இறங்கி வந்தது.

அப்போது, 'யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார்; ஆனால் நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்' என்ற ஆண்டவரின் வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன். இப்போதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டபோது நமக்கு அருளப்பட்ட அதே கொடையைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் கடவுளைத் தடுக்க நான் யார்?" என்றார்.

இவற்றைக் கேட்டு அவர்கள் அமைதி அடைந்தனர்; வாழ்வுக்கு வழியான மனமாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார் என்று கூறி அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா: 42: 1-2; 43: 3. 4 (பல்லவி: 42: 2a)
=================================================================================
பல்லவி: உயிருள்ள இறைவன்மீது என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது.

அல்லது: அல்லேலூயா.

42:1 கலைமான் நீரேடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. 2 என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்? பல்லவி

43:3 உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும். அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். பல்லவி

4 அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 10: 14-15

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஆடுகளுக்கு வாயில் நானே.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-10

அக்காலத்தில் இயேசு கூறியது: "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும்.

ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். அறியாத ஒருவரை அவை பின்தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது."

இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

மீண்டும் இயேசு கூறியது: "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே. எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்."


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 திருத்தூதர் பணிகள் 11: 1-18

தூய்மையானது எனக் கடவுள் கருதுவதைத் தீட்டாகக் கருதாதே!

நிகழ்வு

ஒரு கிறிஸ்துப் பிறப்பு நாளன்று, பகல் வேளையில் இரண்டு வெள்ளைக்காரப் பெண்மணிகள் குழந்தை இயேசுவைக் காண ஆலயத்திற்குச் சென்றார்கள். அவர்கள் இருவரும் ஆலயத்திற்குள்ளே சென்று, குடிலில் இருந்த குழந்தை இயேசுவைக் கண்டபோது ஒரு நிமிடம் அதிர்ந்துபோனார்கள். ஏனென்றால், குடிலில் வழக்காக இருக்கும் 'வெள்ளைநிற இயேசு' சுரூபம் இல்லை. மாறாக கறுப்பினத்தைச் சார்ந்த, பிறந்து ஓரிரு நாட்களேயான குழந்தை கையையும் காலையும் மேலும் கீழுமாய் ஆட்டிக்கொண்டிருந்தது.

அப்பொழுது அந்த இரண்டு வெள்ளைக்காரப் பெண்மணிகளில் ஒருவர், "குழந்தை இயேசு வெள்ளையாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். இப்படிக் கறுப்பாக இருந்தால் நன்றாகவே இருக்கின்றது" என்று சொல்லி முகத்தைச் சுழித்துக்கொண்டார். இன்னொரு பெண்மணியோ, "ஆமாம், நீ சொல்வதுதான் சரி. குழந்தை இயேசு வெள்ளை நிறத்தில்தான் பார்ப்பதற்கு இலட்சணமாக இருக்கும். இப்படிக் கறுப்பாக இருந்தால் கும்பிடுவதற்கே எப்படிக் கும்பிடுவதற்கு மனம்வரும்" என்றார். பின்னர் அவர்கள் இருவரும் ஆலயப் பணியாளரைக் கூப்பிட்டு, குடிலில் இருப்பதைச் சுட்டிக்காட்டினர். அவரோ ஒன்றும் புரியாதவராய் காவல்துறையினைத் தொடர்புகொண்டு, நடந்த எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல, அவர்கள் வந்து குடிலில் இருந்த கறுப்பினத்துக் குழந்தையை எடுத்துக்கொண்டு போனார்கள். அதன்பிறகு ஆலயப்பணியாளர் 'வெள்ளைநிறக் குழந்தை இயேசுவைக்' குடிலில் வைக்க, அந்த இரண்டு வெள்ளைக்காரப் பெண்களுக்கும் 'வெள்ளைநிற குழந்தை இயேசு' சுரூபத்திற்கு முன்பாக விழுந்து விழுந்து வணங்கிவிட்டு மிகுந்த மகிழ்ச்சியோடு தங்களுடைய இல்லங்களுக்குச் சென்றார்கள்.

எல்ஃபரீட் பெக்கர் (Elfried Becker) என்ற எழுத்தாளர் குறிப்பிடுகின்ற இந்த நிகழ்வு நிறம், இனம், குலம், வர்க்கம் போன்றவற்றின் அடிப்படையின் மனிதர்களைப் பிரித்தும் தீட்டாகக் கருதும் அவலநிலையை வெட்ட வெளிச்சமாக்குகின்றது. இத்தகைய பின்னணியில் கடவுள் படைத்த அடைத்தும் தூயது/நல்லது என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இன்றைய முதல் வாசகத்தைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது மிகவும் நல்லது.

தீட்டானவர்கள்/தீட்டானவை என ஒதுக்கி வைப்பது நியாயமாகுமா?

திருத்தூதர் பணிகள் நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் விருத்த சேதனம் செய்துகொண்டவர்கள் பேதுருவிடம் வந்து, "நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று, அவர்களுடன் உணவு உண்டீர்?" என்று வாதாடத் தொடங்குகின்றனர். அப்பொழுது பேதுரு அவர்களிடம், யோப்போ நகரில் தான் இறைவனிடம் வேண்டுக்கொண்டிருந்தபோது கண்ட காட்சியையும் அந்தக் காட்சியின்மூலம் வெளிப்படுத்தப்பட்ட, 'தூய்மையானது எனக் கடவுள் கருதுவதைத் தீட்டாகக் கருதாதே' என்பதையும் அதன் பிறகு நடத்தவற்றையும் அவர்களுக்கு எடுத்துக் கூறுகின்றார். இதனால் பேதுருவோடு வாடாத வந்தவர்கள், 'வாழ்வுக்கு வழியாக மனமாற்றத்தை பிற இனத்தவர்க்கும் கடவுள் கொடுத்தார் என்று கூறி அவற்றைப் போற்றிப் புகழத் தொடங்குகின்றார்கள்.

'ஆண்டவராக கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினர். அவை மிகவும் நன்றாக இருந்தன' (தொநூ 1:31) என்றுதான் திருநூல் எடுத்துச் சொல்கின்றது. அப்படிப்பட்ட நிலையில் 'இவை இவையெல்லாம் தீட்டானவை', இவர்கள் எல்லாம் தீட்டானவர்' என்று யூதர்கள் ஒதுக்கிவைத்தார்கள். இதற்கு இயேசுவின் சீடர்களும் விதிவிலக்கில்லை என்பதுதான் பேதுரு தொடக்கத்தில் பேசுகின்ற வார்த்தைகள் (திப 11:8) எடுத்துக்கூறுவதாக இருக்கின்றன. இத்தகைய மனநிலையோடு இருந்த பேதுருவை அவர்மூலமாக விருத்த சேதனம் செய்துகொண்டவர்களை, வானத்திலிருந்து ஒலித்த குரல், கடவுள் படைத்த அனைத்தும் நல்லவை, தூய்மையானவை என்ற உண்மையை உணர்த்துவதாக இருக்கின்றது. இப்படி கடவுள் படைத்த எல்லாமும்/எல்லாரும் தூயதாக/தூயவர்களாக இருக்கின்றபோது அவைகளை/அவர்களைத் தீட்டானவர்கள் என்று ஒதுக்கு வைப்பது எந்தவிதத்தில் நியாயம்!

வாழ்வுக்கான வழியை பிற இனத்தவர்க்கும் கொடுத்த கடவுள்

பேதுரு தன்னிடம் வந்த விருத்த சேதனம் செய்துகொண்டவர்களுக்கு தக்க விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் வாழ்விற்கான வழியை பிற இனத்தவர்க்கும் கடவுள் கொடுத்திருக்கின்றார் என்று கடவுளைப் போற்றிப் புகழ்கின்றார்கள். பவுலடியார் இதே கருத்தைத்தான், "எல்லாருக்கும் மீட்புப் பெறவேண்டும் என்பதுதான் கடவுளின் திருவுளம்" (1திமொ 2:4) என்று கூறுகின்றார். கடவுளின் திருவுளம் இப்படி இருக்கையில் மனிதர்களாக நாம் இவர்கள் தீட்டானர்கள், இவர்கள் இழிவானவர்கள் என்று ஒதுக்கிவைப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை. ஆகவே, நாம் அனைவரும் சகோதர் சகோதரிகள் என்ற மனப்பான்மையோடும் இறைவன் நம்முடைய தந்தை என்ற மனப்பான்மையோடும் ஒருமனப்பட்டு வாழ்வது நல்லது.

சிந்தனை

'கிறிஸ்து இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள்' (கலா 3:26) என்பார் பவுல். இந்த உண்மையை உணர்ந்தவர்களாய் அனைவரும் சகோதர சகோதரிகளாக வாழ்ந்து இறையரசைக் கட்டி எழுப்புவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
யோவான் 10: 1-10

ஆடுகள் வாழ்வை நிறைவாகப் பெறும்பொருட்டு வந்த இயேசு

நிகழ்வு

மோன்டேய்ஸ் என்றொரு குருவானவர் இருந்தார். அவர் மெக்சிக்கோவில் இருந்த ஒரு பங்கில் பங்குத்தந்தையாகப் பணியாற்றி வந்தார். மக்களை நம்பிக்கை வாழ்வில் கட்டியெழுப்பிய அவரை எல்லாருக்கும் பிடித்துப்போனது. இப்படிப்பட்ட சமயத்தில் மெக்சிக்கோ அரசாங்கமானது, நாட்டில் எங்கேயும் கிறிஸ்தவ ஆலயங்களோ, ஆலய வழிபாடோ நடைபெறக்கூடாது என்ற ஆணை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து பல இடங்களில் ஆலய வழிபாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால் அருட்தந்தை மோன்டேய்ஸ் மட்டும் யாருக்கும் பயப்படாமல், ஆலய வழிபாட்டைத் தொடர்ந்து நடத்திவந்தார். இச்செய்தியானது அரசாங்க அதிகாரிகளுடைய செவிகளை எட்டியது. அவர்கள் படைவீரர்களுடன் வந்து, அருட்தந்தை மோன்டேய்சைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று போட்டுவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்குப் பின்பு அவர்கள், 'அரசாங்க ஆணைக்குக் கீழ்ப்படியாமல் ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து நடத்திவந்த அருட்தந்தை மோன்டேய்சை கொன்றுபோட்டு விட்டதால், இனிமேல் யாரும் ஆலய வழிபாடு நடத்தமாட்டார்கள்' என்று நினைத்திருந்தார்கள். ஆனால் அருட்தந்தை மோன்டேய்ஸ் கொல்லப்பட்ட அதே நாளில், அதே பங்கில் இன்னொரு குருவானவர் யாருக்கும் அஞ்சாமல் ஆலய வழிபாடுகளை நடத்தத் தொடங்கினார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட அரசாங்க அதிகாரிகள் 'சாவுக்கு அஞ்சாத இதுபோன்ற அருட்தந்தையர்களை ஒன்றும் செய்ய முடியாது... 'ஆலயங்கள் இருக்கக்கூடியது, ஆலய வழிபாடு நடக்கக்கூடாது' என்று நாம் சொல்லச்சொல்ல இவர்கள் தொடர்ந்து நடத்திக்கொண்டுதான் இருப்பார்கள்' என்று முன்பு விடுத்திருந்த அரசாங்க ஆணையை இரத்து செய்தார்கள்.

கிராஹாம் ஹில் எழுதிய 'The power of glory' என்ற நூலில் இடம்பெறும் நிகழ்வில் வரும் இந்த அருட்தந்தையர்கள், மெக்சிக்கன் திருஅவை அல்லது கிறிஸ்துவின் மந்தை இறைநம்பிக்கையில் வளரவும் இறையன்பிலும் பிறரன்பிலும் வாழவும் தங்களுடைய வாழ்வையே தர முன்வந்து, நல்ல ஆயர்களுக்கு எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றார்கள். இன்றைய நற்செய்தி வாசகமும் ஆடுகள், வாழ்வை நிறைவாகப் பெறும்பொருட்டு தன்னையே தந்த நல்லாயன் இயேசுவைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

திருடர்களைப் போன்று செயல்பட்ட இஸ்ரயேல் தலைவர்கள்

யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தியில் இயேசு, "நானே வாயில்" என்று சொல்லிவிட்டு, தனக்கு முன்பாக இருந்த ஆயர்கள் எப்படியெல்லாம் இருந்தார்கள் என்பதையும் தான் எப்படி இருப்பேன் என்பதை எடுத்துக் கூறுகின்றார். நாம் இயேசுவின் காலத்திற்கு முன்பாக ஆயர்கள் எப்படியெல்லாம் இருந்தார்கள் என்பதை அறிந்துவிட்டு, நல்லாயன் இயேசு எப்படி இருந்தார்/ இருக்கின்றார் என்பதை அறிந்துகொள்வோம்.

இந்த நற்செய்திப் பகுதிக்கு முன்பாக இயேசு பிறவிலேயே பார்வையற்ற ஒருவரைக் குணப்படுத்தி இருப்பார். யூதத் தலைவர்களோ, "பிறவியிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?" என்று சொல்லி அவரைப் பிடித்து வெளியே தள்ளுவார்கள் (யோவா 9:34). இந்த ஒரு நிகழ்வு போதும், இயேசுவின் காலத்திற்கு முன்பாக ஆயர்கள் எப்படி இருந்தார்கள் என்பதற்கு. மக்களை நல்லமுறையில் வழிநடத்தவேண்டிய ஆயர்கள் அல்லது யூதத் தலைவர்கள், பேராசையோடும் (லூக் 16:14) கைம்பெண்களின் வீடுகளை அபகரித்துக் கொள்ளக்கூடியவர்களாகவும் (மாற் 12:40) ஆண்டவர் உறைந்திருக்கும் எருசலேம் திருக்கோவிலையே கள்வர் குகையாக மாற்றக் கூடியவர்களாகவும் (மத் 21: 13) இருந்தார்கள். இதனால்தான் இயேசு தன்னுடைய காலத்திற்கு முன்பாக இருந்த ஆயர்களை யூதத் தலைவர்களை- திருடர்கள் என்று அழைக்கின்றார்.

தன்னுடைய மந்தை வாழ்வை நிறைவாகப் பெறுவதற்காக உயிரைத் தரும் நல்லாயன் இயேசு

தனக்கு முன்பாக இருந்த ஆயர்கள் எல்லாம் ஆயர்களே அல்ல என்று சொல்லும் இயேசு, தன்னை ஆடுகள் வாழ்வை நிறைவாகப் பெறும்பொருட்டு வந்தவர் என்று குறிப்பிடுக்கின்றார்.

இயேசுவின் காலத்திற்கு முன்பாக இருந்த ஆயர்கள் ஆடுகளை அறியாமலும் அவற்றை முன்னின்று வழிநடத்தாமலும் இருந்தபோது, நல்லாயனாம் இயேசு, ஆடுகளான தன் மக்களை நல்ல முறையில் அறிந்துவைத்திருக்கின்றார். அது மட்டுமல்லாமல், ஆடுகளுக்கும் முன்பாச் சென்று, அவைகளை நல்ல மேய்ச்சல் நிலங்களுக்கு இட்டுச் செல்கின்றார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஆடுகளாகிய நமக்காகத் தன் உயிரையும் தருகின்றார். இதனால்தான் இயேசு நல்ல ஆயனாக இருக்கின்றார். ஆகவே, இப்படிப்பட்ட நல்ல ஆயன் தருக்கின்ற வாழ்வினைப் பெற நாம் ஒவ்வொருவரும் அவருடைய குரலைக் கேட்டு, அவருடைய வழியில் நடப்பது சாலச் சிறந்தது.

சிந்தனை

'நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன் என்கிறார் ஆண்டவர்' (எசே 43:15) என்கின்றது இறைவார்த்தை. ஆகவே, ஆடுகளாகிய நமக்கு எல்லாமுமாக இருக்கின்ற நல்லாயனின் குரல் கேட்டு, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!