Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         11 மே 2019  
                           பாஸ்கா காலம் மூன்றாம் வாரம்- 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
திருச்சபை வளர்ச்சியுற்று தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 31-42

அந்நாள்களில் யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளில் எல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது.

பேதுரு எல்லா இடங்களுக்கும் சென்று வந்தார்; ஒரு நாள் லித்தாவில் வாழ்ந்த இறைமக்களிடம் வந்து சேர்ந்தார்.

அங்கே அவர் எட்டு ஆண்டுகள் முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்த ஐனேயா என்னும் பெயருடைய ஒருவரைக் கண்டார்; அவரிடம், "ஐனேயா, இயேசு கிறிஸ்து உம் பிணியைப் போக்குகிறார்; எழுந்து உம் படுக்கையை நீரே சரிப்படுத்தும்" என்று பேதுரு கூறினார்.

உடனே அவர் எழுந்தார். லித்தாவிலும் சாரோனிலும் வாழ்ந்து வந்தவர்கள் அனைவரும் அதைக் கண்டு ஆண்டவரிடம் திரும்பினார்கள்.

யோப்பா நகரில் தபித்தா என்னும் பெயருடைய பெண் சீடர் ஒருவர் இருந்தார். அவர் தொற்கா என்றும் அழைக்கப்பட்டார்; நன்மை செய்வதிலும் இரக்கச் செயல்கள் புரிவதிலும் அவர் முற்றிலும் ஈடுபட்டிருந்தார். உடல்நலம் குன்றி ஒரு நாள் அவர் இறந்துவிட்டார். அங்கிருந்தோர் அவரது உடலைக் குளிப்பாட்டி மேல்மாடியில் கிடத்தியிருந்தனர்.

யோப்பாவிற்கு அருகிலுள்ள லித்தாவுக்குப் பேதுரு வந்திருப்பதைச் சீடர்கள் கேள்விப்பட்டு இருவரை அவரிடம் அனுப்பி, "எங்களிடம் உடனே வாருங்கள்" என்று கெஞ்சிக் கேட்டார்கள்.

பேதுரு புறப்பட்டு அவர்களோடு வந்தார். வந்ததும் அவர்கள் அவரை மேல்மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். கைம்பெண்கள் அவரருகில் வந்து நின்று, தொற்கா தங்களோடு இருந்தபோது செய்துகொடுத்த எல்லா அங்கிகளையும் ஆடைகளையும் காண்பித்தவாறே அழுதார்கள்.

பேதுரு அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, முழந்தாள்படியிட்டு இறைவனிடம் வேண்டினார்; அவரது உடலின் பக்கமாகத் திரும்பி, "தபித்தா, எழுந்திடு" என்றார்.

உடனே அவர் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டு, எழுந்து உட்கார்ந்தார். பேதுரு அவருடைய கையைப் பிடித்து எழுந்து நிற்கச் செய்தார்.

இறைமக்களையும் கைம்பெண்களையும் கூப்பிட்டு, அவர்கள்முன் அவரை உயிருடன் நிறுத்தினார். இது யோப்பா நகர் முழுவதும் தெரிய வரவே, ஆண்டவர்மீது பலர் நம்பிக்கை கொண்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 116: 12-13. 14-15. 16-17 (பல்லவி:12)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் செய்த நன்மைகளுக்காக என்ன கைம்மாறு செய்வேன்?

அல்லது: அல்லேலூயா.

12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். பல்லவி

14 இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். 15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. பல்லவி

16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். 17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 6: 63b. 68b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 60-69

அக்காலத்தில் இயேசு நிலைவாழ்வு அளிக்கும் உணவு பற்றி கற்பித்துக்கொண்டிருந்த பொழுது, சீடர் பலர் இதைக் கேட்டு, "இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?" என்று பேசிக்கொண்டனர்.

இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், "நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்?

வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை" என்றார். நம்பாதோர் யார் யார் என்பதும், தம்மைக் காட்டிக்கொடுக்க இருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது.

மேலும் அவர், "இதன் காரணமாகத்தான் 'என் தந்தை அருள்கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது' என்று உங்களுக்குக் கூறினேன்" என்றார்.

அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரைவிட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. இயேசு பன்னிரு சீடரிடம், "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்டார்.

சீமோன் பேதுரு மறுமொழியாக, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 திருத்தூதர் பணிகள் 9: 31-42

முழந்தாள் படியிட்டு இறைவனிடம் வேண்டிய பேதுரு

நிகழ்வு

கார்லோஸ் வல்லஸ் (Carlos Valles) என்ற எழுத்தாளர் சொல்லக்கூடிய ஒரு சிறிய நிகழ்வு. ஒரு சமயம் மிகவும் பலம்வாய்ந்த யானை ஒன்று ஆற்றில் குளிக்கச் சென்றது. ஆற்றை அடைந்ததும் உள்ளே இறங்கி மிகவும் சந்தோசமாகக் குளிக்கத் தொடங்கியது. அப்பொழுது ஏதோ ஒன்று அதனுடைய காலைக் கவ்விப்பிடித்து இழுக்கத் தொடங்கியது. அது என்ன என்று யானை ஊற்றுப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அது முதலை என்று.

'ஒரு சாதாரண முதலை நம்முடைய காலைப் பிடித்து இழுப்பதா?" என்று யானை தன்னுடைய காலை உதறிவிட்டது. முதலையோ யானையின் காலை மிகவும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உள்ளே இழுத்தது. அப்பொழுதுதான் யானைக்குத் தெரிந்தது, 'அது சாதாரண முதலை' என்று. உடனே யானை தன்னுடைய முழு பலத்தையும் திரட்டிக்கொண்டு முதலையின் பிடியிலிருந்து தன்னை விடுவிக்கப் பார்த்தது. அப்பொழுதும் அதனால் முதலையின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. நேரம் ஆக ஆக யானை, முதலையின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது என்பதை உணர்ந்தது. அந்த நேரத்தில் அதற்கு ஒரு யோசனை தோன்றியது. 'இறைவனிடம் நாம் ஏன் வேண்டக்கூடாது?' என்று இறைவனிடம், "இறைவா! என்னைக் காப்பாற்றும்" என்று உரக்கக் பிளிறியது. உடனே அங்கு ஒரு கழுகு பறந்து வந்தது. அந்தக் கழுகு முதலையை ஐந்தாறு கொத்துக் கொத்தவே, அது தன்னுடைய பிடியைத் தளர்த்தியது. இதுதான் சமயம் என்று யானை முதலையிடமிருந்து தப்பித்து, கரைக்கு வந்தது.

கார்லோஸ் வல்லஸ் இந்த சம்பவத்தைச் சொல்லிவிட்டு இவ்வாறு முடிப்பார்: "மனிதர்களாக நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இறைவனிடம் மன்றாடுபவர்களாக அல்லது வேண்டுபவர்களாக இல்லை என்றால், நம்மால் வாழ்வில் வெற்றிபெற முடியாது." இன்றைய முதல் வாசகத்திலும் திருத்தூதர்களின் தலைவரான பேதுரு இயேசுவிடம் வேண்டிவிட்டு வல்ல செயல்கள் செய்வதைக் குறித்து வாசிக்கின்றோம். எனவே, நம்முடைய அன்றாட வாழ்வில் இறைவேண்டல் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி/ இயேசுவிடம் வேண்டிவிட்டு வல்லசெயல்கள் செய்த பேதுரு

திருத்தூதர் பணிகள் நூலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தில், தூய ஆவியாரின் துணையால் திருஅவை யூதேயா, கலிலேயா, சமாரியா போன்ற பகுதிகளில் வளர்ந்து வருவதையும் தொடர்ந்து பேதுரு ஒருவருக்கு நலமளிப்பதையும் இன்னொருவரை உயிர்த்தெழச் செய்வதையும் குறித்து வாசிக்கின்றோம்.

பேதுரு லித்தாவிற்குச் சென்றபோது அங்கு எட்டு ஆண்டுகளாக முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்த 'ஐனேயா' என்பதைக் குணப்படுத்துகின்றார். அப்படிக் குணப்படுத்தும்போது, "இயேசு கிறிஸ்து உன் பிணியைப் போக்குகின்றார்" என்று சொல்லிக் குணப்படுத்துகின்றார். இந்த நிகழ்விற்குப் பிறகு அவர் யோப்பா நகருக்குச் செல்கின்றார். இந்த யோப்பா நகரைக் குறித்து இறைவாக்கினர் யோவாவின் நூலில் ஒரு குறிப்பு வருகின்றது. அதுவும் இன்றைய முதல் வாசகமும் ஓர் உண்மையை உரக்கச் சொல்வதால், அதை இங்கே இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

யோனாவிடம் ஆண்டவர், நீ நினிவே நகருக்குப் போ என்று சொல்லும்போது, அவர் அதற்குக் கீழ்ப்படியாமல் யோப்பாவிற்கு வந்து தர்சீசுக்கு புறப்படும் கப்பலில் ஏறுவார். (யோனா1: 1-3) இதனால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட, அங்கிருந்தவர்கள் அவரைக் கடலில் தூக்கிப் போடுவர். இங்கு யோப்பா என்பது கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் தன்னுடைய விருப்பத்தின்படி யோனா சென்றதை நமக்கு நினைவூட்டுகின்றது. ஆனால், இன்றைய முதல் வாசகத்தில் யோப்பா நகரானது, ஆண்டவரின் குரலுக்குக் கீழ்ப்படிந்து வந்த பேதுருவை நமக்கு நினைவூட்டுவதாக இருக்கின்றது.

பேதுரு யோப்பாவிற்கு வந்ததும், அங்கிருந்த தப்பித்தா எனப்படும் தொற்கா என்பவர் இறந்த செய்தி சொல்கின்றது. உடனே பேதுரு அங்கு சென்று, இறைவனிடம் முழந்தாள் படியிட்டு வேண்டி அவரைக் குணப்படுத்துகின்றார். இங்கு பேதுரு இறைவனிடம் வேண்டிவிட்டு தொற்காவை உயிர்த்தெழச் செய்ததை நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டும். பேதுரு திருத்தூதர்களின் தலைவராக இருந்தாலும், அவர் தன்னால் எதையும் செய்யமுடியும் என்று நினைக்காமல், இறைவனின் திருப்பெயரில் நம்பிக்கை வைத்து, வேண்டிக் குணப்படுத்துகின்றார். ஆகவே, நாமும் இறைவேண்டலின் வல்லமையை உணர்ந்து வேண்டுவதும் வாழ்வதும் நல்லது.

சிந்தனை

'நான் கடவுளை நோக்கி மன்றாடுவேன். அவரும் என்னை மீட்டருள்வார்' (திபா 55:16) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகவே, நாம் பேதுருவைப் போன்று இறைவனிடம் நம்பிக்கையோடு மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
யோவான் 6: 60-69

இயேசுவின் வார்த்தைகள் நிலைவாழ்வை அளிக்கக்கூடியவை!

நிகழ்வு

ஜிம்பாப்வேவில் உள்ள திருவிவிலியப் பொதுச்சங்கத்தின் தலைவராக இருந்தவர் கய்லார்ட் கம்பராமி (Gaylord Kambarami). ஒருமுறை அவர் கடவுள்மீது நம்பிக்கை இல்லாத ஒருவரைச் சந்தித்தார். அவர் அந்த மனிதரிடம் புதிய ஏற்பாட்டைக் கொடுத்து, "இதை உனக்குக் நேரம் கிடைக்கின்றபோது வாசி" என்றார். அதற்கு அந்த மனிதர், "நான் இதிலுள்ள பக்கங்களை ஒரு சிகரெட்டைப் போன்று சுருட்டிப் புகைப்பேனே ஒழிய, இதை வாசிக்கவே மாட்டேன்" என்றார். "பரவாயில்லை. இதிலுள்ள பக்கங்களை சிகரெட்டைப் போன்று சுருட்டிப் புகைத்துக்கொள். ஆனால், அதற்கு முன்பாக ஒருமுறையேனும் இதை வாசி" என்றார். அவரும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

நாட்கள் நகர்ந்தன. ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் கழித்து, ஜிம்பாப்வேயில் நடந்த ஒரு நற்செய்திக் கூட்டத்தில் இரண்டு முக்கியமான மறைபோதகர்கள் கலந்துகொண்டார்கள். ஒருவர் கய்லார்ட் கம்பராமி. இன்னொருவர் ஒருகாலத்தில் கடவுள்மீது நம்பிக்கை இல்லாமலும் திருவிவிலியத்தின் பக்கங்களை சிகரெட்டைப் போன்று சுருட்டிப் புகைப்பேன் என்று சொன்னவரும் ஆவார்.

அவர் தனக்கு முன்பாகத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களைப் பார்த்து இவ்வாறு பேசத் தொடங்கினார்: "ஒரு காலத்தில் நான் கடவுள்மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வந்தேன். அப்படிப்பட்ட சமயத்தில்தான் இங்கே வீற்றிருக்கின்ற கய்லார்ட் கம்பராமி என்னிடம் புதிய ஏற்பாட்டைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். நானோ மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்தியின் பக்கங்களை சிகரெட்டைப் போன்று சுருட்டிப் புகைக்கத் தொடங்கினேன். எப்போது நான் யோவான் நற்செய்தி 3:16 ஐ தற்செயலாக வாசிக்கத் தொடங்கினேனோ, அப்போதே அதில் இடம்பெற்ற வார்த்தைகளால் ஆட்கொள்ளப்பட்டு, என் வாழ்வில் பெரிய மாற்றத்தைக் கண்டுகொண்டேன். அன்றைக்கு விவிலியத்தைக் கையிலெடுத்தவன்தான் இன்று வரை அதைப் பற்றி எல்லா மக்களுக்கும் எடுத்துரைத்துக்கொண்டிருக்கிறேன்."

இறைவனின் வார்த்தைகள் அடங்கிய பெட்டகமான திருவிவிலியம் சாதாரண புத்தகம் கிடையாது. அது வாழ்வளிக்கும் வார்த்தைகளைக் கொண்டது என்பதை இந்நிகழ்வானது நமக்கு மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் இறைவார்த்தைக்குரிய முக்கியத்துவத்தைக் குறித்துப் பேசுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசுவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த இயேசுவின் சீடர்கள்

இயேசு, "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே" என்று சொன்னதையும் "மானிட மகனுடைய உடலை உண்டு, இரத்தத்தைக் குடித்தாலொழிய வாழ்வு அடையமாட்டீர்கள்" என்று சொன்னதையும் கேட்டு இயேசுவின் சீடர்களில் ஒருசிலர், "இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்" என்று சொல்லி முணுமுணுக்கத் தொடங்குகிறார்கள், இறுதியில் அவர்கள் அவரைவிட்டு பிரிந்தும் போகிறார்கள். இயேசுவின் வார்த்தைகள் புரிந்துகொள்வதற்குக் கடினமானவையோ அல்லது ஏற்றுக்கொள்வதற்குக் கடினமானவையோ அல்ல. அப்படியிருந்தும் இயேசுவின் சீடர்களில் இருந்த ஒருசிலரால் அவற்றைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

இங்கு ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில். யோவான் நற்செய்தி 5: 24 ல் இயேசு கூறுவதுபோல, ஒருவர் நிலைவாழ்வைப் பெறவேண்டும் என்றால், அவர் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, இறைவன்மீது நம்பிக்கை வைக்கவேண்டும். நற்செய்தியிலோ, இயேசுவின் சீடர்களில் இருந்த ஒருசிலர் இயேசுவின் வார்த்தைகளை கேட்டு, அவர்மீதும் இறைவன்மீதும் நம்பிக்கை கொள்ளவில்லை. அதனால் இறைவன் தரும் நிலைவாழ்வைப் பெறாமலே போனார்கள். அப்படியானால் ஒருவர் நிலைவாழ்வு பெறுவது என்பது அவர் இயேசுவின் வார்த்தைகள்மீது நம்பிக்கை கொள்வதைப் பொறுத்து அடங்கி இருக்கின்றது என்று உறுதியாகச் சொல்லலாம்.

நிலைவாழ்வு அளிக்கும் இயேசுவின் வார்த்தைகள்

தன்னுடைய வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொள்ளாமல், சீடர்களில் ஒருசிலர் தன்னைவிட்டுப் பிரிந்துபோனதைத் தொடர்ந்து, இயேசு மற்ற சீடர்களிடம், "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? என்று கேட்கும்போதுதான் பேதுரு மறுமொழியாக, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" என்கின்றார்.

பேதுரு கூறுகின்ற இவ்வார்த்தைகள் அவர் இயேசுவின் மீதும் அவருடைய வார்த்தைகளின்மீதும் நம்பிக்கை கொண்டிருப்பதையும் இயேசுவின் வார்த்தைகளுக்கு இருக்கின்ற வல்லமையையும் நமக்கு எடுத்துரைக்கின்றன. பேதுருவுக்கு ஏற்பட்ட இந்த நம்பிக்கை நமக்கு ஏற்பட்டிருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்த்து, இயேசுவின் வார்த்தைகளின்மீது நம்பிக்கை வைத்து, இறைவன் தருகின்ற நிலைவாழ்வைப் பெறுவது தேவையான ஒன்றாக இருக்கின்றது.

சிந்தனை

'கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக்கப்பட்டு நம்பத் தக்கதாய் விளங்குகின்றது' (நீமொ 30: 5) என்கின்றது நீதிமொழிகள் நூல். ஆகவே, நம்பத்தக்கதாய், நிலைவாழ்வு அளிப்பதாய் இருக்கின்ற இயேசுவின் வார்த்தைகளின்மீது நம்பிக்கைகொண்டு, அவற்றை வாழ்வாக்க முற்படுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!