Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         10 மே 2019  
                     பாஸ்கா காலம் மூன்றாம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
பிற இனத்தவருக்கு எனது பெயரை எடுத்துச்செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் சவுல் இருக்கிறார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-20

அந்நாள்களில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் சீடர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி, இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைது செய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார்.

இவ்வாறு அவர் புறப்பட்டுச் சென்று தமஸ்குவை நெருங்கியபோது, திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது. அவர் தரையில் விழ, "சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?" என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார்.

அதற்கு அவர், "ஆண்டவரே நீர் யார்?" எனக் கேட்டார்.

ஆண்டவர், "நீ துன்புறுத்தும் இயேசு நானே. நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்" என்றார்.

அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர். ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர். சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை.

தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார். ஆண்டவர் அவருக்குத் தோன்றி, "அனனியா!" என அழைக்க, அவர், "ஆண்டவரே, இதோ அடியேன்" என்றார்.

அப்போது ஆண்டவர் அவரிடம், "நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கிறார். அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார்" என்று கூறினார்.

அதற்கு அனனியா மறுமொழியாக, "ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான்" என்றார்.

அதற்கு ஆண்டவர் அவரிடம், "நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச்செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் இருக்கிறார். என் பெயரின் பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக் காட்டுவேன்" என்றார்.

அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று, கைகளை அவர்மீது வைத்து, "சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்" என்றார்.

உடனே அவருடைய கண்களிலிருந்து செதில்கள் போன்றவை விழவே, அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார்.

பின்பு சவுல் உணவு அருந்தி வலிமை பெற்றார். சில நாள்களாக சவுல் தமஸ்குவில் சீடர்களுடன் தங்கியிருந்தார். உடனடியாக அவர் இயேசுவே இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 117: 1. 2 (பல்லவி: மாற் 16: 15)
=================================================================================
பல்லவி: உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

அல்லது: அல்லேலூயா.

1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! பல்லவி

2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலூயா! பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 6: 56

அல்லேலூயா, அல்லேலூயா! "எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்," என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 52-59


அக்காலத்தில் "நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?" என்ற வாக்குவாதம் யூதர்களிடையே எழுந்தது.

இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்."

இயேசு கப்பர்நாகுமில் உள்ள தொழுகைக்கூடத்தில் இவ்வாறு கற்பித்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை:

'ஏன் என்னை துன்புறுத்துகின்றாய்?'

பிறருக்குரியதை பறிக்கும் போது,

பிறருக்கெதிராக சதி செய்யும் போது,

பிறரை பழிக்கும் போது,

பிறரை பற்றி வதந்தியை பரப்பும் போது,

பிறரை பழிவாங்க துடிக்கும் போது,



கிறிஸ்து இன்றும் துன்புறுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கின்றார்.

பாடுகள் ஓயவில்லை, தொடருகின்றன.

கசையடியும், முள் முடியும் தொடர்கதையாகின்றது.

உலகம் இருக்கும் வரை இது தொடரும் என்றாலும், நான் பிலாத்துவாக, ஏரோதுவாக, தலைமை சங்க உறுப்பினராக, சவுலாக இருக்கின்றேனா?

'நீ துன்புறுத்தும் கிறிஸ்துவே நான்' என்ற குரல் கேட்கவில்லையா?


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 
திருத்தூதர் பணிகள் 9: 1-20

கிறிஸ்தவர்களைக் கொல்பவராக இருந்து, கிறிஸ்துவுக்காகக் கொல்லப்படுபவரான பவுல்

நிகழ்வு

முன்பொரு காலத்தில் காசியை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். ஒருநாள் அவனுடைய ரதம் இமயமலையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கை மேல் மிகவும் வெறுப்புக்கொண்டிருந்த அம்மன்னன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தான். எல்லாம் இருந்தும் மனநிம்மதி இல்லை. குழப்பமான சிந்தனைகளுடன் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த மனிதரைப் பார்த்தான். எளிமையான உடைகளுடன் இருந்த அந்த மனிதரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுவதை வியப்புடன் நோக்கினான்.

தனது இறப்பிற்கு முன்பு இந்த மனிதரிடம் ஆசுவாசமாகப் பேசிக்கொண்டிருக்கலாம் என்று நினைத்து, ரதத்தை நிறுத்தி இறங்கினான். தனது மூடிய விழிகளைத் திறந்தார் அந்த மாமனிதர். தன் முன் நின்ற மன்னனைப் பார்த்து, "என்ன வேண்டும்?" என்று கேட்டார். "நான் ஓர் அரசன். எல்லாம் இருந்தும், ஏதும் இல்லாத எண்ணமே என்னை வதைத்துக்கொண்டிருக்கிறது. என் பிரச்சினையை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. உங்கள் ஒளியுடைய முகம் என்னை ஈர்த்தது. நான் சாவதற்கு முடிவு எடுத்துள்ளேன். என் பிரச்சினை என்னவென்று அதற்கு முன்னம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்றான் மன்னன்.

மன்னன் சொல்வதையேல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், அந்த மனிதரின் பார்வை மன்னனின் கால்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது. மன்னனுக்குச் சிறு வயது முதலே காலாட்டுகிற பழக்கம் உண்டு. அந்த மனிதர் தன் கால்களைப் பார்க்கிறார் என்பதை அறிந்த மன்னன் சட்டென்று காலாட்டுவதை நிறுத்திவிட்டான். "மன்னனே உனக்கு எவ்வளவு காலமாக காலாட்டுகிற பழக்கம் உள்ளது?" என்று கேட்டார். தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் காலாட்டுவதாக மன்னன் பதில் கூறினான். "இப்போது நீ ஏன் காலாட்டுவதை நிறுத்திவிட்டாய்?" என்று கேட்டார் அந்த மனிதர். "நீங்கள் என் கால்களையே கவனித்தீர்கள். அதனால்தான்" என்று பதிலளித்தான் மன்னன்.  "நான் உன் கால்களையே கவனித்ததால் உன் நீண்ட நாள் பழக்கத்தை நிறுத்திவிட்டேன் என்கிறாய். இனிமேல் நீயே உன்னைக் கவனி. எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பது உனக்கே தெரியவரும்." மன்னனின் இருண்ட மனதில் ஓர் ஒளிக்கீற்று தெரியத் தொடங்கியது. மிகுந்த பணிவோடு,  "நீங்கள் யார்?" என்று கேட்டான் மன்னன். "புத்தர்" என்று பதில் வந்தது. மன்னன் அவர் காலில் விழுந்து வணங்கினான். *தன்னைத்தானே கவனித்தலே வாழும் கலை* என்பதை அறிந்த மன்னனின் தேர் இப்போது அரண்மனை நோக்கி ஓடத் தொடங்கியது.

          மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் மன்னன் எப்படி தான் செய்துகொண்டிருப்பது என்ன என்பதை உணர்ந்ததால், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு புதியதொரு வாழ்க்கை வாழத் தொடங்கினானோ, அது போன்று இன்றைய முதல் வாசகத்தில் வரும் பவுல் என்ற சவுல், தான் கிறிஸ்துவைத்தான் துன்புறுத்திக் கொண்டிருக்கின்றோம் என்ற உண்மையை உணர்ந்ததும் திருந்தி நடக்க அதாவது கிறிஸ்துவுக்காகத் தன் உயிரையும் தரத் துணிகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

கடவுளுக்கு ஊழியம் செய்வதாய் நினைத்து கிறிஸ்துவர்களைத் துன்புறுத்திய பவுல்

          திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், புதிய நெறியை - கிறிஸ்தவை நெறியைப் - பின்பற்றி வந்தவர்களைக் கைது செய்து, எருசலேமிற்கு  இழுத்துக்கொண்டு வர சவுல் தமஸ்கு நகர் நோக்கிச் செல்கின்றார். சவுல் ஏன் கிறிஸ்தவர்களின்மீது இவ்வளவு காட்டமாக இருந்தார் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

          "தொங்கவிடப்பட்டவன் சபிக்கப்பட்டவன்" (இச 21:23) என்கிறது இணைச்சட்ட நூல். இதை உள்வாங்கிக் கொண்டதாலோ என்னவோ சவுல், 'சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட இயேசு எப்படி மெசியாவாக முடியும்?' என்று கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றி வந்தவர்களையெல்லாம் கொன்றொழிக்கத் திட்டம் தீட்டுகின்றார். இதையெல்லாம் அவர் ஒரு சமயக் கடமையாகவே செய்கின்றார். இப்படிப்பட்ட சமயத்தில்தான் அவர் தமஸ்கு நகர் நோக்கிச் சொல்லும் வழியில் இயேசுவால் தடுத்தாட்கொள்ளப்படுகின்றார். இந்த நிகழ்வில் இயேசு சவுலிடம் பேசுகின்ற, "சவுலே! ஏன் என்னைத் துன்புறுத்துகின்றாய்?" என்ற வார்த்தைகள் மிகவும் கவனிக்கத் தக்கவை. இவ்வார்த்தைகள் கிறிஸ்தவர்களில் கிறிஸ்து இருக்கின்றார் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. மேலும் இதே வார்த்தைகள், கடவுளுக்காகப் பணிசெய்துகொண்டிருக்கின்றோம் என்று நினைத்துக் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய சவுலை புதியதொரு வாழ்விற்கு அழைக்கின்றது. இதன் பிறகு சவுல் கிறிஸ்துவுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணிக்கின்றார்.


பவுல் சவுலாக இருந்தபோது, சரி என்று நினைத்து தவறுசெய்துகொண்டிருந்தது போல, நாமும் பலநேரங்களில் சரியென நினைத்துத் தவறு செய்கின்றோம். அப்படிப்பட்ட நாம் இறைவனின் வார்த்தைக்குச் செவிகொடுத்து நேரிய வழியில் நடக்க முயற்சி செய்வது நல்லது.

சிந்தனை

          'நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?' (லூக் 12: 57) என்பார் இயேசு. ஆகவே, நாம் பவுலைப் போன்று உண்மையானது எதுவென, நேர்மையானது எதுவென அறிந்து, இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
யோவான் 6: 52-59

"இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்"


நிகழ்வு

கி.பி.நான்காம் நூற்றாண்டைச் சார்ந்தவர் மெய்யியலாளர் சினிலோப் நகரத்து டையோஜனஸ் (Diogenes of Sinilope) என்பவர். ஒரு சமயம் இவர் ஏகினாவை (Aegina) நோக்கிப் கப்பலில் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென்று வந்த கடல் கொள்ளையர்கள் இவரையும் இவரோடு இருந்த மனிதர்களையும் கடத்திக் கொண்டுபோய், கிரேட் நகரில் இருந்த அடிமைச் சந்தையில் ஏலம்விடத் தொடங்கினர்.

டையோஜனசை விலைக்கு வாங்க ஏராளமான பேர் போட்டிபோட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது டையோஜனஸ் ஒரு குறிப்பிட்ட மனிதரைச் சுட்டிக்காட்டி, தன்னைக் கடத்திக்கொண்டுவந்த கடற்கொள்ளையர்களின் தலைவனிடம், "ஐயா! என்னை இந்த மனிதர்க்கு விற்றுவிடுங்கள்" என்றார். அவர் சொன்னதற்கேற்ப கடற்கொள்ளையர்களின் தலைவனும் டையோஜனசை குறிப்பிட்ட அந்த மனிதர்க்கு ஒரு பெரிய தொகைக்கு விற்றான்.

இதற்குப் பின்பு டையோஜனசை ஏலத்துக்கு எடுத்த அந்த மனிதன் அதாவது கொரிந்து நகரத்தைச் சார்ந்த ஜெனியதஸ் (Xaniades) என்பவன் டையோஜனனிடம், "உமக்கு என்னென்ன வேலைகள் தெரியும்?" என்று கேட்டான். அதற்கு டையோஜனஸ் அவனிடம், "எனக்குத் தெரிந்த ஒரே வேலை, மனிதர்கள் சுயக்கட்டுப்பாடு வாழ்வதற்கான வழிமுறையைக் கற்றுத்தருவதுதான்" என்றார். இதைக் கேட்டதும் ஜெனியதஸ், "நீர் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறீர்... இனிமேல் எனக்கு மட்டுமல்லாது என்னுடைய குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவர்க்கும் சுயகட்டுப்பாடோடு வாழ்வதற்கான நெறிமுறையைக் கற்றுத்தாரும்" என்றார்.

டையோஜனஸ் ஜெனியதஸின் வீட்டிற்கு வந்தபிறகு, அவர் தன்னிடம் கேட்டுக்கொண்டதற்கேற்ப, அவருடைய வீட்டிலிருந்த எல்லார்க்கும் சுய கட்டுப்பாடோடு வாழ்வதற்கான வழிமுறைகளைப் போதிக்கத் தொடங்கினார். இதனால் ஜெனியதஸின் வீட்டிலிருந்த எல்லாரும் சுயக்கட்டுப்பாடோடும் கொரிந்து நகரில் இருந்த எல்லார்க்கும் எடுத்துக்காட்டாக வாழத் தொடங்கினர். இதுகுறித்து ஜெனியதஸ் தன்னுடைய நண்பர்களிடம் பேசும்போது, "எப்பொழுது டையோஜனஸ் என்னுடைய வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாரோ, அப்பொழுதே என்னுடைய வீட்டிலிருக்கின்ற எல்லாருடைய வாழ்வும் முற்றிலும் மாறிப்போனது" என்றார்.

எப்படி மெய்யியலாளர் டையோஜனஸ், ஜெனியதஸின் வீட்டிற்குள் வந்ததால் அவருடைய வீட்டிலிருந்த எல்லாருடைய வாழ்வும் மாற்றம் அடைந்ததோ, அதுபோன்று வாழ்வுதரும் உணவாம் நற்கருணை ஆண்டவரை நம்பிக்கையோடு உட்கொண்டால் நம்முடைய வாழ்வு மாறி, நிலைவாழ்வு பெறுவோம் என்பது உறுதி. நற்செய்தி வாசகத்தில் இயேசு, வாழ்வுதரும் உணவைக் குறித்து பேசுவது, யூதர்கள் மத்தியில் மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்துகின்றது. உண்மையில் இயேசு அவர்களிடம் என்ன சொல்ல வந்தார்? என்பதையும் அதை அவர்கள் எப்படிப் புரிந்துகொண்டார்கள்? என்பதையும் இயேசு அளிக்கின்ற நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள ஒவ்வொருவரும் என்ன செய்வது? என்பதையும் இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவை சொன்னதை மேலோட்டமாகப் புரிந்துகொண்ட யூதர்கள்

நற்செய்தியில் இயேசு, "மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்" என்கின்றார். இயேசு இவ்வாறு சொன்னதைக் கேட்டு யூதர்கள், "நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?" என்று முணுமுணுக்கத் தொடங்குகிறார்கள். யூதர்களைப் பொறுத்தளவில், இறைச்சியைக் குருதியோடு உண்பது என்பது மிகப்பெரிய குற்றமாகும். காரணம் உயிர் குருதியில்தான் இருக்கின்றது என்பது அவர்களின் நம்பிக்கை (தொநூ 9: 3-4; லேவி 17: 10-16, 19: 26). ஆனால், இயேசு யூதர்கள் நினைப்பதுபோல் தன்னுடைய உடலை எல்லாரும் அப்படியே உண்ணவேண்டும் சொல்லவில்லை. அதை அடையாளமுறையில் உட்கொள்ளவேண்டும் என்றுதான் சொல்கின்றார். அதைப் புரிந்துகொள்ளாமல், மேலோட்டமாகப் புரிந்துகொண்டு யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுகிறார்கள்.

இயேசு பரிசேயரான நிக்கோதேமிடம், தூய ஆவியாரால் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று சொன்னதை அவர், தாயின் வயிற்றுக்குள் நுழைந்து, மீண்டுமாகப் பிறக்கவேண்டும் என்று புரிந்துகொண்டதையும் இந்தக் கண்ணோட்டத்தில்தான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும் (யோவா 3:4)

இயேசு அளிக்கும் நிலைவாழ்வைப் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்?

இயேசு சொன்னதை மேலோட்டமாகப் புரிந்துகொண்டு யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்ததைக் குறித்து மேலே பார்த்தோம். அப்படியானால் இயேசு சொல்ல வருவதுதான் என்ன என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

இயேசுவின் சதையை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடிப்பது என்பது அவராகவே வாழ்வது. இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இயேசுவின் போதித்த அன்பு, மன்னிப்பு, தியாகம் போன்ற விழுமியங்களை வாழ்வாக்குவது. எவர் ஒருவர் இயேசுவின் விழுமியங்களை வாழ்வாக்குகின்றாரோ அவர் இயேசு தருகின்ற நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வார் என்பது உறுதி.

சிந்தனை

'நம்முடைய உள்ளத்திற்குள் வந்து, நம்மைத் தன்னுடைய அருளால் நிரப்ப விரும்பிய இயேசு, அதை நற்கருணை வழியாக செய்கின்றார்' என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகவே, நமக்கு வாழ்வு தருகின்ற நற்கருணையை நம்பிக்கையோடு உட்கொண்டு, நற்கருணை நமக்கு உணர்த்தும் உண்மையை வாழ்வாக்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!