Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         31 ஜூலை 2019  
                                    பொதுக்காலம் 17ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 

=================================================================================
மோசேயின் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்ததைக் கண்டு அவரை அணுகிச் செல்ல அஞ்சினர்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 34: 29-35

மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கிச் செல்கையில், உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் தம் கைகளில் தாங்கிக் கொண்டிருந்தார். மோசே கடவுளோடு பேசியதால் அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்தது. ஆனால் மோசே அதை அறியவில்லை. ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மோசேயைப் பார்த்தபோது, அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்ததைக் கண்டு அவரை அணுகிச் செல்ல அஞ்சினர். ஆனால் மோசே அவர்களைப் கூப்பிட்டார்.

ஆரோனும் மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் அவரை நோக்கி வந்தனர். மோசேயும் அவர்களிடம் பேசினார். பின்னர் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அவர் அருகில் வந்தனர். அப்போது, ஆண்டவர் சீனாய் மலையில் தமக்கு அறிவித்த அனைத்தையும் அவர் அவர்களுக்குக் கட்டளையாகக் கொடுத்தார்.

மோசே அவர்களோடு பேசி முடித்தபின், தம் முகத்தின் மேல் ஒரு முக்காடு போட்டுக் கொண்டார். மோசே ஆண்டவரோடு உரையாடும்படி அவர் திருமுன் செல்வதுமுதல் வெளியே வருவதுவரை முக்காட்டை எடுத்து விடுவார். அங்கிருந்து வெளியே வந்து, அவருக்குக் கட்டளையிடப் பட்டவற்றை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துக் கூறுவார். இஸ்ரயேல் மக்கள் மோசேயின் முகத்தைப் பார்க்கும்போது, மோசேயின் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருக்கும். மோசே ஆண்டவரோடு பேசச் செல்லும்வரை தம் முகத்தின் மேல் மீண்டும் முக்காடு போட்டுக் கொள்வார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 99: 5. 6. 7. 9 (பல்லவி: 9c)
=================================================================================
பல்லவி: நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்.

5 நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது அரியணைமுன் தாள் பணிந்து வணங்குங்கள்; அவரே தூயவர்! பல்லவி

6 மோசேயும் ஆரோனும் அவர்தம் குருக்கள்; அவரது பெயரால் மன்றாடுவோருள் சாமுவேலும் ஒருவர்; அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினர்; அவரும் அவர்களுக்குச் செவிசாய்த்தார். பல்லவி

7 மேகத் தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர்கள் அவருடைய ஒழுங்குமுறைகளையும் அவர் அவர்களுக்குத் தந்த நியமங்களையும் கடைப்பிடித்தார்கள். பல்லவி

9 நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது திருமலையில் அவரைத் தொழுங்கள். ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 15b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தமக்குள்ள யாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-46

அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: ``ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.

விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச்செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

புதையல், முத்து இவற்றை பெற எல்லா தியாகங்களையும் செய்கின்றோம். எதனையும் துறக்க முன்வருகின்றோம். ஆனால் அந்த புதையலோ, முத்தோ நிரந்தரம் அல்ல. அழிந்து போகக் கூடியது. முறைந்து போகக் கூடியது. அடுத்தவர் கைக்கு மாறிப் போக் கூடியது. இதற்கே இந்த பாடு என்றால், அழியாதா, மறையாதா, மாறாத, நிரந்தரமான செல்வமாகிய, புதையலாகிய, முத்தாகிய கிறிஸ்து இயேசுவை பெற்றுக் கொள்ள எதை துறக்கின்றோம். தியாகம் செய்கின்றோம்.

பவுல் அடிகளார் சொல்லுகின்றார். ஓப்பற்ற செல்வமாகிய இயேசு கிறிஸ்துவை பெற்றுக் கொள்ள பிற எல்லாவற்றையும் குப்பையாக கருதுகின்றோன் என்று.

நம்மால் சொல்ல இயலுமா?

குப்பைகளை சேகரித்து, குப்பை மேட்டினில் குடியிருந்து கொள்கின்றோமா?



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மத்தேயு 13: 44-46

இயேசுவுக்காகவும் இறையாட்சிக்காகவும் எதையும் இழக்கத் தயாராவோம்

நிகழ்வு

இளைஞன் ஒருவன் ஒருநாள் நகரில் இருந்த ஒரு யூத இராபியைச் சந்திக்கச் சென்றான். அவன் அவரைச் சந்தித்தும், தன்னுடைய நிலைமையை அவரிடத்தில் எடுத்துச் சொன்னான். "ஐயா! நான் இந்த நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றேன். வாடகைப் பணத்தைத் தனியோர் ஆளாகக் கட்டமுடியாது என்பதால் என்னையும் சேர்ந்து நான் இருக்கும் வாடகை வீட்டில் இப்பொழுது ஒன்பது பேர் வசிக்கின்றோம். இப்பொழுது பிரச்சினை என்னவென்றால், நாங்கள் ஒன்பது பேரும் தங்குகின்ற அளவுக்கு அந்த அரை போதுமான இல்லை. இதனால் வாழ்க்கையே எனக்கு வெறுத்துப் போய்விட்டது."

அவன் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த யூத இராபி, "உன்னுடைய பிரச்சினையைத் தீர்க்க நான் ஒருவழி சொல்வேன். அதன்படி செய்வாயா?" என்றார். அவனும், "சொல்லுங்கள் ஐயா! என்னுடைய பிரச்சினை தீர்வதற்கு நீங்கள் என்னிடம் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்" என்றான். "அப்படியா! நீ தங்கியிருக்கும் அந்த வாடகை வீட்டில் ஒரு செம்மறியாட்டைப் பிடித்துக் கட்டு" என்றார். "ஐயா! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று தெரிந்துதான் சொல்கிறீர்களா! ஏற்கனவே என்னுடைய அறையில் ஒன்பது பேர் இருப்பதுதான் மிகப்பெரிய பிரச்சினை என்றும் அதை நீங்கள் தீர்த்து வைக்கவேண்டும் என்றும்தான் நான் உங்களிடம் ஓடிவந்தேன். இப்பொழுது நீங்கள், அந்த நெருக்கடியான அறையில் ஓர் ஆட்டைப் பிடித்து ஒரு வாரத்திற்குக் கட்டிவைக்கச் சொல்கிறீர்களே! இது நியாயமா?" என்றான்.

"உன்னுடைய பிரச்சினை தீர வேண்டுமெனில், நான் சொல்வது போன்று நீ ஓர் ஆட்டைப் பிடித்து, அதை ஒரு வாரத்திற்கு நீ தங்கியிருக்கும் அறையில் கட்டி வைத்துவிட்டு, ஒரு வாரம் கழித்து என்னை வந்து பார்" என்றார். அந்த இளைஞனும் வேறு வழியின்று ஓர் ஆட்டைப் பிடித்து, ஒரு வாரத்திற்குத் அதைத் தான் தங்கியிருந்த அறையில் கட்டி வைத்துவிட்டு, ஒருவாரம் கழித்து, யூத இராபியைப் பார்க்க வந்தான் அந்த இளைஞன். "ஆட்டை நீ தங்கியிருக்கும் அறையில் கட்டிவைத்திருந்தாயே, அந்த அனுபவம் எப்படி இருந்தது?" என்று கேட்டார் யூத இராபி. "அதை ஏன் கேட்கிறீர்கள்... ஏற்கனவே அறையில் ஒன்பது பேர். இதில் இப்பொழுது இந்த ஆடும் சேர்ந்ததால் மிகுந்த நெருக்கடியில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இதில் அந்த ஆட்டிலிருந்து வரும் துர்நாற்றம் வேறு... முடியவில்லை" என்று அழாத குறையாகச் சொன்னான் இளைஞன்.

"நீ இருந்த அறையில் ஒருவார காலம் ஆட்டைக் கட்டிவைத்து வாழ்ந்தாய் அல்லவா! இப்பொழுது அந்த ஆட்டை வெளியே அவிழ்த்துவிட்டு, ஒருகாலம் அந்த அறையில் வாழ்ந்துவிட்டு, அதன்பிறகு வந்து என்னைப் பார்" என்றார் அவர். இளைஞனும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, தன்னுடைய அறையில் கட்டி வைத்திருந்த ஆட்டினை அவிழ்த்து வெளியேவிட்டு, ஒருவாரம் தன் அறையில் தங்கிவிட்டு, அதன்பின் யூத இராபியைப் பார்க்கச் சென்றான்.

"ஆட்டை வெளியே அனுப்பிவிட்டு, நீ உங்களுடைய அறையில் வாழ்ந்த அனுபவம் எப்படி இருந்தது?" என்று கேட்டார் யூத இராபி, அதற்கு அந்த இளைஞன், "அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாது. உண்மையில் இப்பொழுது என்னுடைய அறையில் இருக்கின்ற எல்லாரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இடம் போதுமானதாக இருப்பது போன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்" என்றான். இதைக் கேட்டுவிட்டு, இராபி அந்த இளைஞனிடம் சொன்னார்: "எப்பொழுதும் ஒன்றை இழக்கத் தயாராக இருக்கின்றபோதே அப்பொழுதுதான் உனக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும்" என்றார்.

உண்மைதான், நம்மிடம் இருப்பதை இழக்கத் தயாராக இருக்கின்றபோதுதான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும். இன்றைய நற்செய்தி வாசகமும் நம்மிடம் இருப்பதை இழப்பதால் கிடைக்கும் நன்மையைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

ஒப்பற்ற செல்வதைப் பெற, மற்ற அனைத்தையும் இழப்பதற்குத் தயாராக இருக்கவேண்டும்

நற்செய்தியில் இயேசு இறையாட்சியை நிலத்தில் மறைந்திருக்கும் புதையலுக்கு ஒப்பிடுகின்றார். நிலத்தில் மறைந்திருந்த புதையலைக் கண்டதும் அந்த மனிதர் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று, புதையல் இருக்கும் நிலத்தை வாங்கி, அதைத் தனக்குச் சொந்த மாக்கிக் கொள்கின்றார். அது போன்றுதான் இறையரசும் இறைவனும். இறைவன் ஒப்பற்ற செல்வம் (யோபு 22: 22-23) அத்தகைய ஒப்பற்ற / இணையில்லாத செல்வதை நாம் அடைவதற்கு நம்மிடம் இருக்கின்ற எல்லாவற்றையும் இழக்கவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், விலைமதிப்பில்லாத இறைவனை அடைய, ஒன்றுமில்லாவற்றை நாம் துறக்கத் தயாராகவேண்டும். அப்பொழுதுதான் நாம் உண்மையான செல்வதை அடைய முடியும். இந்த உண்மையை உணர்ந்து, இயேசுவின் பொருட்டு எதையும் இழக்கத் தயாரானாவோம் என்றால், இறைவன் அளிக்கும் விண்ணகக் கொடைகளை நாம் பெறுவோம் என்பது உறுதி.

சிந்தனை

'எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பெனக் கருதுகிறேன்' (பிலி 3:7) என்பார் பவுல். ஆகையால், கிறிஸ்துவை ஆதாயமாக அடையும் பொருட்டு, எல்லாவற்றையும் இழக்கத் துணிவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
விடுதலைப் பயணம் 34: 29-35

ஒளிமயமாக இருந்த மோசேயின் முகத்தோற்றம்


நிகழ்வு

இஸ்லாமிய நாடுகட்கும் கிறிஸ்தவ நாடுகட்கும் இடையே நடைபெற்ற சிலுவைப் போர் ஒன்றில் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த இராணுவ அதிகாரியை, இஸ்லாமியர் ஒருவர் கைதுசெய்து வீட்டுச் சிறையில் அடைத்து வைத்து, மிருகத்தைப் போன்று மிகக் கொடூரமாக நடத்தி வந்தார்.

ஒருநாள் அந்த இராணுவ அதிகாரி, இஸ்லாமியர் தன்னை அவ்வளவு கொடூரமாக நடத்துவைத் தாங்கமுடியாமல் அவரிடம், "நான் என்ன மனிதனா? இல்லை மிருகமா? என்னை ஏன் ஒரு மிருகத்தை விடவும் மிகவும் கொடூரமாக நடத்துகின்றீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்த இஸ்லாமியர், "நான் உன்னை மிருகத்தைப் போன்று, ஏன், அதைவிடக் கொடூரமாக நடத்துகிறேன் என்று என்னைக் கேள்வி கேட்கின்றாயே! இப்பொழுது நானும் உன்னிடத்தில் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். நீ கிறிஸ்தவன் தானே! என்னிடம் நீ அடிமையாக ஆறேழு மாதங்களாக இருக்கின்றாய்தானே. இந்த ஆறேழ மாதங்களில் என்றைக்காவது ஒருநாள் இறைவனின் வேண்டியிருக்கின்றாயா?" என்றார். அவர், "இல்லை" என்பதுபோல் தலையாட்டினார்

இதற்குப் பின் அந்த இஸ்லாமியர் தொடர்ந்து பேசினார்: "மனிதர்கள் என்றால், இறைவனிடம் மன்றாடவேண்டும். ஆடு மாடுகள் போன்ற மிருகங்கள் தான் இறைவனிடம் மன்றாடுவதில்லை. நீ ஆடு மாடுகளைப் போன்று இறைவனிடம் மன்றாடாமல் இருந்ததால்தான் உன்னை மிருகத்தைப் போன்று நடத்தத் தொடங்கினேன்." அவர் இவ்வாறு சொன்னபிறகுதான் பிரான்சு நாட்டைச் சார்ந்த அந்த கிறிஸ்தவ இராணுவ அதிகாரி தன் தவறை உணர்ந்து இறைவனிடம் மன்றாடத் தொடங்கினார். அதைப் பார்த்துவிட்டு இஸ்லாமியரும் அவரை விரைவில் விடுதலை செய்து, அவருடைய சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

ஒருவர் இறைவனிடம் மன்றாடாமல் இருக்கின்றபோது அவர் விலங்கைப் போன்று ஏன், விலங்கினும் கீழானவராக இருக்கின்றார். அதனால் அவருடைய முகத்திலும் சரி, வாழ்க்கையிலும் சரி அருள் என்பது இருக்கவே இருக்காது என்ற உண்மையை எடுத்துக் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகத்தில் மோசேயின் முகத்தோற்றம் ஒளிமயமாக இருப்பது குறித்து வாசிக்கின்றோம். அவருடைய முகத்தோற்றம் அப்படி ஒளிமயமாக இருப்பதற்குக் காரணமென்ன? நம்முடைய முகத்தோற்றமும் நம்முடைய வாழ்வும் ஒளிமயமானதாக இருக்க நாம் என்ன செய்வது என்று இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்

கடவுளோடு பேசியதால் ஒளிமயமான முகத்தோற்றத்தைப் பெற்ற மோசே

மோசே கடவுளோடு பேசிவிட்டு மலையிலிருந்து கீழே இறங்கி வருகின்றார். அப்படி இறங்கி வருகின்றபோது பத்துக் கட்டளைகள் அடங்கிய இரண்டு பலகைகளைத் தூக்கிக்கொண்டு வருகின்றார். அதைவிடவும் அவருடைய முகத்தோற்றம் மிகவும் ஒளிமயமாய் இருக்கின்றது. இதனால் ஆரோனும் இஸ்ரயேல் மக்களும் அவரை நெருங்கிச் செல்ல அஞ்சினார்கள். மோசேயின் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருக்கக் காரணம், அவர் கடவுளோடு பேசியதால்தான். மோசே கடவுட்கு முன்னம் நோன்பிருந்தார்... அவரோடு உரையாடினார்... அதனால்தான் அவருடைய முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்தது.

ஆண்டவரோடு மோசே பேசியதால் அவருடைய முகத்தோற்றம் ஒளிமயமாக இருந்தது என்றால், நாம் என்ன செய்வதன் வழியாக நம்முடைய வாழ்வையும் முகத்தோற்றத்தையும் ஒளிமயமாக்க முடியும் என்று சிந்தித்துப் பார்ப்பது இன்றியமையாததாக இருக்கின்றது.

இறைவனிடம் தொடர்ந்து மன்றாடி வந்தால் நம்முடைய முகத்தோற்றமும் வாழ்வும் ஒளிமயமாகும்

மோசேயின் முகத்தோற்றம் கடவுளோடு பேசியதால் ஒளிமயமானது என்று சிந்தித்துப் பார்த்த நாம், நம்முடைய முகத்தோற்றமும் வாழ்வும் ஒளிமயமாக இருக்க என்ன செய்வது என்று சிந்தித்துப் பார்க்கின்றபோது, இறைவனோடு நாம் கொள்ளக்கூடிய உறவின் மூலமாக அதிலும் குறிப்பாக நம்முடைய இறைவேண்டலின் வழியாக ஒளிமயமான தோற்றத்தைப் பெறலாம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த இடத்தில் இதையொட்டி இன்னொரு செய்தியையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், மோசே ஆண்டவரோடு பேசிய நேரம் போக மற்ற நேரத்தில் அவர் தன்னுடைய முகத்தை முக்காடு போட்டு மறைத்துக் கொண்டார். காரணம் அவருடைய மாட்சி மறையத் தொடங்கியது (2 கொரி 3: 13). நாம் இறைவனியடம் தொடர்ந்து வேண்டிக்கொண்டிருந்தால் நம்முடைய முகத்தோற்றம் ஒருபோதும் மங்காது என்பதை இதன்வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

ஆகையால், நாம் இறைவனிடம் தொடர்ந்து மன்றாடி வருவோம். அதன்வழியாக மாட்சிமை மிக்க வாழ்வைப் பெறுவோம்

சிந்தனை

'ஒருவன் ஏழு நாட்கள் மன்றாடவில்லை எனில், அவன் மிகவும் பலவீனமடைந்து விடுவான்' என்கிறது ஒரு முதுமொழி. ஆகையால், நாம் இறைவனிடம் தொடர்ந்து மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!