|
|
30 ஜூலை 2019 |
|
|
பொதுக்காலம் 17ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 33: 7-11; 34: 5-9,28
அந்நாள்களில் மோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச்
செல்வதும் பாளையத்திற்கு வெகு தூரத்தில் கூடாரம் அடிப்பதும்
வழக்கம். அதற்கு அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார்.
ஆண்டவரைத் தேடும் யாவரும் பாளையத்துக்கு வெளியே உள்ள சந்திப்புக்
கூடாரத்திற்குச் செல்வர். மோசே கூடாரத்துக்குச் செல்லும்
போதெல்லாம் மக்கள் அனைவரும் அவரவர் கூடார நுழைவாயிலில் எழுந்து
நின்று கொண்டு, அவர் கூடாரத்தில் நுழையும்வரை அவரைப்
பார்த்துக் கொண்டேயிருப்பர்.
மோசே கூடாரத்தில் நுழைந்ததும், மேகத்தூண் இறங்கி வந்து கூடார
நுழைவாயிலில் நின்று கொள்ளும். அப்போது கடவுள் மோசேயிடம்
பேசுவார். கூடார நுழைவாயிலில் மேகத்தூண் நின்று கொண்டிருப்பதை
மக்கள் அனைவரும் காண்பர். அப்போது அவரவர் கூடார நுழைவாயிலில்
நின்று கொண்டே மக்கள் அனைவரும் வணங்கித் தொழுவர். ஒருவன் தன்
நண்பனிடம் பேசுவது போலவே ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம்
பேசுவார். பின்னர் மோசே பாளையத்துக்குத் திரும்புவார். இளைஞனும்
நூனின் மகனுமான யோசுவா என்ற அவருடைய உதவியாளர் கூடாரத்தை
விட்டு அகலாமல் இருப்பார். ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே
அவர் பக்கமாய் நின்று கொண்டு, `ஆண்டவர்' என்ற பெயரை அறிவித்தார்.
அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், "ஆண்டவர்!
ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்;
பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்கு உரியவர். ஆயிரம் தலைமுறைக்கும்
பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்;
ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல் தந்தையரின் கொடுமையைப்
பிள்ளைகள் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும், மூன்றாம்
நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பவர்" என அறிவித்தார்.
உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, "என் தலைவரே!
நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள்
வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு
வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து
எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்" என்றார். அவர் அங்கே
நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவருடன் இருந்தார். அப்போது
அவர் அப்பம் உண்ணவும் இல்லை; தண்ணீர் பருகவும் இல்லை. உடன்படிக்கையின்
வார்த்தைகளான பத்துக் கட்டளைகளை அவர் பலகைகளின் மேல் எழுதினார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
103: 6-7. 8-9. 10-11. 12-13 (பல்லவி: 8a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
6 ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும்
அவர் உரிமைகளை வழங்குகின்றார். 7 அவர் தம் வழிகளை மோசேக்கு
வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி
செய்தார். பல்லவி
8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும்
உள்ளவர். 9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும்
சினம் கொள்ளுபவரல்லர். பல்லவி
10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு
ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. 11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக்
காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. பல்லவி
12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவில் உள்ளதோ, அத்துணைத்
தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்.
13 தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு
அஞ்சுவோர்மீது இரங்குகிறார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையே விதையாம்,
அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைபவர் எல்லாம் என்றென்றும்
நிலைத்திருப்பர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எவ்வாறு களைகளைப் பறித்துத்
தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
13: 36-43
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு
வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து,
"வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக்
கூறும்" என்றனர்.
அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்: "நல்ல விதைகளை விதைப்பவர்
மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட
மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன்,
அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர். எவ்வாறு
களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக
முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார்.
அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி
கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில்
தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது
நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர்.
கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை:
நல்ல விதைகள் தூவப்பட்ட இடத்தில் களைகள் முளைக்கின்றன.
களைகளால் நல்ல பயிருக்கு பாதகம் உண்டு.
போடப்படுகின்ற உரத்தையும், பாய்ச்சப்படுகின்ற நீரையும்
உறிஞ்சி, மிக விரைவாக வளருவதால் பயிருக்கு பாதகம் அதிகம் தான்.
சமூகத்திலும் நல்லவர்களுக்கு துன்பமும், துயரமும், வேதனையும்,
வருத்தமும், அவமானமும் உண்டு.
அன்றாட சிலுவைகளாக இதனை சுமக்காமல் இறையாட்சிக்கு உட்பட
முடியாது.
அன்றன்றையத் தொல்லை அன்றன்றைக்கு போதுமானது.
பச்சை மரத்திற்கே அந்த பாடுகள் என்றால் பட்டமரமாகிய நமக்கு
இவையெல்லாம் உண்டு என்பது உறுதியே.
நல்லவர்களும், தீயவர்களும் இணைந்தே பயணிப்பதால், நல்லவர்கள்
தீயவர்களின் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதில் மாற்று இல்லை.
இதற்காக நல்லவர்கள் தங்களது பாதையை மாற்றிக் கொள்வது என்பது
அறிவார்ந்த செயல் அல்ல.
களைகளோடு போரிட்டாலும், நல்ல விதை நல்ல பயிரையே தந்து,
விதைத்தவனுக்கு பலன் கொடுத்து, மகிழச் செய்கின்றது.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
மத்தேயு 13: 36-43
கதிரவனைப் போல் ஒளிவீசுபவர் யார்?
நிகழ்வு
ஈரோடைச் சார்ந்த சைக்கிளில் துணி வியாபாரம் செய்யும் ஒரு தந்தைக்கும்
வீட்டு வேலைகளைச் செய்துவரும் ஒரு தாய்க்கும் மகனாகப் பிறந்தவன்தான்
முகமது யாசின் என்ற எழுவது வயதுச் சிறுவன்.
இவன் தன்னுடைய வீட்டிற்கு மிக அருகாமையில் உள்ள ஓர் அரசாங்க பள்ளியில்
இரண்டாவது வகுப்புப் படித்து வருகின்றான். இவருடைய பெற்றோர்
இவனைச் சிறுவயது முதலே, 'யாருடைய பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது...
எப்பொழுதும் உண்மை பேசவேண்டும்... நேர்மையாக இருக்கவேண்டும்...
என்று சொல்லி வளர்த்து வந்தார்கள். இவனும் அதற்கேற்றாற் போல்
யாருடைய பொருளுக்கும் ஆசைப்படாமலும் நேர்மையாகவும் உண்மையாகவும்
வாழ்ந்து வந்தான்.
இந்நிலையில் 2018, ஜூலை 15 ஆம் நாள் பள்ளிக்கூடத்திற்குச்
சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் முகமது யாசின்
ஐம்பதாயிரம் உரூபாயைக் கண்டெடுத்தான். உடனே அவன் வேகமாக
வீட்டிற்குச் சென்று, வழியில் நிகழ்ந்தவற்றைத் தந்தையிடம் எடுத்துச்
சொல்லி, தந்தையைத் தன்னுடைய உதவிக்குக் கூட்டிக்கொண்டு காவல்நிலையத்திற்குச்
சென்று, அங்கிருந்த காவல்துறை அதிகாரியிடம் ஐம்பதாயிரம் உருபாய்ப்
பணத்தை ஒப்படைத்தான். காவல்துறை அதிகாரி அந்தப் பணத்தை உரியவரிடம்
ஒப்படைத்தார்.
இதைத் தொடர்ந்து சிறுவன் முகமது யாசின் தான் கண்டெடுத்த ஐம்பதாயிரம்
உருபாய்ப் பணத்தைக் காவல்துறை அதிகாரியிடம் ஒப்படைத்த செய்தி
மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இச்செய்தி நடிகர் திரு. ரஜினிகாந்த்
அவர்களுடைய செவிகளை எட்ட அவர், சிறுவன் முகமது யாசினின் படிப்புச்
செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாகச் சம்மதித்தார்.
ஒருவர் தன்னுடைய வாழ்வில் நேர்மையோடு இருக்கின்றபோது, அவர்க்கு
எத்தகைய ஆசி கிடைக்கின்றது என்பதை இந்த நிகழ்வின் வழியாக
அறிந்துகொள்ளலாம். இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு இதே
செய்தியைத்தான் எடுத்துச் சொல்கின்றது. எனவே, நாம் அதைக்
குறித்து சிந்தத்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
வயலில் தோன்றிய களைகள்
இன்றைய நற்செய்தி வாசகம், ஆண்டவர் இயேசு வயலில் தோன்றிய களைகள்
உவமைக்கு விளக்கம் அளிப்பதாக இருக்கின்றது. இயேசு சொல்லும்
உவமையில் வருகின்ற நிலக்கிழார் நல்ல விதைகளை விதைத்த போதும்,
சாத்தான் களைகளை விதைத்துவிட்டு போகிறது. இதைத் தொடர்ந்து
நடந்த அனைத்தையும் நிலக்கிழாரின் பணியாளர்கள் அவரிடம் சொல்ல,
அவர் அவர்களிடம் அறுவடைக்காலம் வரைக் காத்திருக்குமாறு
சொல்கிறார். இங்கு அறுவடைக் காலம் என்று சொல்லப்படுவதை இறுதித்
தீர்ப்பு என்று சொல்லலாம். இந்த இறுதித் தீர்ப்பில் இரண்டு
முக்கியமான விடயங்கள் நடைபெறுகின்றன. ஒன்று, தீயோர்க்குத்
தண்டனை, மற்றொன்று நல்லோர் அல்லது நேர்மையாளர்க்கு வெகுமதி.
இந்த இரண்டையும் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
தீயோர்க்குத் தண்டனை
இயேசு சொல்லும் 'வயலில் தோன்றிய களைகள்' உவமையின் இறுதியில்,
வானதூதர்கள் ஆண்டவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும்
நெறிகெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத்
தீச்சூளையில் தள்ளுவார்கள் என்கின்றார். இங்கு
குறிப்பிடப்படும் ஆண்டவரின் ஆட்சிக்குத் தடையாக உள்ளோரும்
நெறிகெட்டோரும் வேறு யாருமல்ல, அவர்கள் கடவுளின் வழியை
விட்டுவிட்டுச் சாத்தானின் வழியில் நடப்பவர்கள். இத்தகையோர்
தங்களோடு வாழும் சக மனிதரைக் குறித்து அக்கறை கொள்வதும்
கிடையாது... சகலமும் படைத்த இறைவனுக்கு உகந்த வாழ்க்கை
வாழ்வதும் கிடையாது. அதனாலேயே இவர்கள் தீச்சூளைக்குள்
தள்ளப்படுவார்கள்.
நேர்மையாளர் கதிரவனைப் போன்று ஒளிவீசுவர்
தீயோர் தீச்சூளையில் தள்ளப்பட்டு அழிக்கப்படுகையில்,
நேர்மையாளரோ கதிரவனைப் போன்று ஒளிவீசுவர் என்கின்றார் ஆண்டவர்.
கதிரவனைப் போன்று ஒளிவீசும் அளவுக்கு நேர்மையாளர் அப்படி என்ன
செய்திருப்பார் என்று சிந்தித்துப் பார்க்கையில், மத்தேயு
நற்செய்தியில் இயேசு கூறும் இறுதித் தீர்ப்பு உவமையே நமக்குப்
பதிலாக இருக்கின்றது.
இயேசு சொல்லும் அந்த இறுதித் தீர்ப்பு உவமையில், அரியணையில்
வீற்றிருப்பவர், தன் வலப்பக்கத்தில் உள்ள செம்மறியாடுகள்
எனப்படும் நேர்மையாளர்களைப் பார்த்து, "நான் பசியாய்
இருந்தேன்; நீங்கள் எனக்கு உணவு கொடுத்தீர்கள்... தாகமாய்
இருந்தேன்; நீங்கள் எனக்குத் தண்ணீர் அளித்தீர்கள்..." (மத்
25: 34-39) என்பார். ஆகையால், நேர்மையாளர் என்பவர் கடவுட்கு
உகந்த வழியில் நடந்து, சக மனிதரின் தேவையைப் பூர்த்தி
செய்பவர்தான் என்று உறுதியாகச் சொல்லலாம். அதனால் அவர்கள்
கதிரவனைப் போன்று ஒளிவீசுவார்கள். நாமும் நேர்மையாளர்களைப்
போன்ற வாழ்க்கை நடத்தினால், கடவுள் நமக்கும் அதே ஆசியைத்
தருவார் என்பது உறுதி.
சிந்தனை
'நீதி வெள்ளமெனப் பெருகி வருக, நேர்மை வற்றாத ஆறாய்ப் பாய்ந்து
வருக' (ஆமோ 5:24) என்பார் இறைவாக்கினர ஆமோஸ். ஆகவே, நாம்
நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து இறைவனுக்குப் பெருமை சேர்ப்போம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
விடுதலைப் பயணம் 33: 7-11, 34: 5-9, 28
"கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்"
நிகழ்வு
ஒரு கிராமத்தில் பதினாறு வயதுப் பையன் ஒருவன் இருந்தான்.
அவனுடைய ஆசையெல்லாம் விரைவிலேயே பெரியவனாக வேண்டும்...
விரும்பிய இடங்கட்கு விரும்பிய நேரம் செல்ல வேண்டும்...
விரும்பியபடி வாழவேண்டும் என்பதாக இருந்தது. தங்களுடைய மகனிடம்
இப்படியொரு தவறான நினைப்பு இருக்கின்றது என்பதை அறிந்த அந்தப்
பையனின் பெற்றோர் அவனை நன்றாக அடித்து, 'நல்லபிள்ளையாக
இருக்கவேண்டும்' என்று புத்திமதி சொன்னார்கள். இது அவனுக்குப்
பிடிக்கவே இல்லை. எனவே, அவன் வீட்டிலுள்ள யாரிடத்திலும்
சொல்லிக்கொள்ளாமல், ஓர் இரவில் வீட்டை விட்டே ஓடிப்போனான்.
வீட்டைவிட்டு வெளியே வந்த புதிதில் விரும்பிய இடங்கட்குச்
செல்வதும் விரும்பியபடி வாழ்வதற்கும் அவனுக்கு நன்றாக
இருந்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அது அவனுக்குப்
புளித்துப் போனது. அதனால் அவன், வீட்டில் தாய் தந்தையோடு
இருப்பதுதான் நல்லது என்பதை உணர்ந்தான். இருந்தாலும் அவனுடைய
கெளரவம் அவனைத் தடுத்தது. 'நம்மை இந்த அடி அடித்துக்
கடுமையாகத் திட்டியிருக்கின்றார்கள். அவர்களிடம் திரும்பிப்
போவதா? கூடாவே கூடாது' என்று அவன் கிடைத்த வேலையைப்
பார்த்துக்கொண்டு காலத்தைத் தள்ளினான். இப்படியே ஆறேழு
ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஒருநாள் அவன் தன் வேலையெல்லாம் முடித்துவிட்டு, தன்னுடைய
அறைக்குத் திரும்பினான். அறையில் கடிதம் ஒன்று கிடந்தது. அதை
யார் எழுதினார்? எங்கிருந்து வந்திருக்கின்றது? என்ற எந்தக்
குறிப்பும் இல்லை. இருந்தாலும் உள்ளே இருக்கின்றது என்று அவன்
கடிதத்தைத் திறந்து பார்த்தான். அதில் "பக்கத்துக் கதவு
திறந்தே இருக்கின்றது" என்ற வார்த்தைகள் மட்டும்
இடம்பெற்றிருந்தன. அதைப் படித்துப் பார்த்துவிட்டு அவன்,
'தந்தைதான் நானிருக்கும் இடத்தை எப்படியோ அறிந்துகொண்டு,
முன்கதவு மூடப்பட்டிருந்தாலும், பக்கத்துக் கதவு எப்போதும்
திறந்தே இருக்கும் என்று எழுதியிருக்கின்றார்' என்று
நினைத்துக்கொண்டான்.
உடனே அவன் 'தந்தை தான் என்னுடைய குற்றமனைத்தையும்
மன்னித்துவிட்டாரே... அவரிடம் உடனடியாகத் திரும்பிப் போவதுதான்
நல்லது' என்று முடிவு செய்தான். பின்னர் ஏதோ நினைத்தவனாய்,
'இன்னும் ஓரிரு வாரங்கள் போகட்டும்' என்று அப்படியே
இருந்துவிட்டான். இரண்டு நாட்கள் சென்றிருக்கும். அவனுக்கு
அவனுடைய தந்தையின் நினைவும் தாயின் நினைவும் அதிகமாக வாட்டின.
எனவே, இதுதான் சமயம் என்று வீட்டை நோக்கிக் கிளம்பினான். அவன்
தன் ஊரை அடைந்தபோது, நடுச் சாமமாக இருந்தது. 'இந்த நேரத்தில்
வீட்டில் உள்ளவர்கள் விழித்திருப்பார்களா? பக்கத்துக் கதவு
திறந்திருக்குமா?' என்று யோசித்துக் கொண்டே போனான்.
அவன் தன் வீட்டை அடைந்து முன் கதவைப் பார்த்தான். அது
மூடியிருந்தது. உடனே அவன் பக்கத்துக் கதவருகே வந்தான். அது
திறந்தே இருந்தது. அதைக் கண்டு அவன் மிகவும் ஆச்சரியப்பட்டான்.
பின்னர் அவன் தன்னுடைய அறைக்குள் நுழைந்தான். அங்கு அவன்,
சாப்பிடுவதற்கு உணவும் தண்ணீரும் படுத்துக்கொள்ள படுக்கையையும்
தயார்நிலையில் இருப்பதைப் பார்த்தான். அப்பொழுது அவன் தனக்குள்
நினைத்துக்கொண்டான். "இத்தனை ஆண்டுகட்குப் பிறகு வீட்டிற்குத்
திரும்பி வருகின்றேன். அப்படியிருந்தும் எல்லாம் தயார்
நிலையில் உள்ளன. அப்படியானால் என் பெற்றோர், இத்தனை ஆண்டுகளும்
'என் மகன் இன்றைக்கு வந்துவிடுவேன்... நாளைக்கு வந்துவிடுவான்'
என்றெல்லவா எனக்காக எல்லாவற்றையும் தயார் செய்து
காத்திருப்பார்கள்! இப்படிப்பட்ட தாய் தந்தையையா
விட்டுவிட்டுப் போனேன்' என்று தன் நிலையை எண்ணிக் கதறி
அழுதான்.
அவனுடைய அழுகைச் சத்தத்தைக் கேட்டு தூக்கத்திலிருந்து
விழித்தெழுந்த அவனுடைய பெற்றோர் அவனிடம் ஓடிவந்து அவனைக்
கட்டியணைத்தார்கள். அவனோ தன் தவற்றை உணர்ந்து, "அப்பா... அம்மா
என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்" என்றான். அவர்களோ அவனிடம்,
"மகனே! நாங்கள் உன்னை எப்போதோ மன்னித்துவிட்டோம். நீ திரும்பி
வந்தாயே. அதுபோதும்" என்று அவனை அரவணைத்துக் கொண்டார்கள்.
தவறை உணர்ந்து, திருந்தி வந்த மகனை அவனுடைய பெற்றோர் எப்படி
மன்னித்து ஏற்றுக்கொண்டார்களோ, அது போன்று இறைவனும் மன்னித்து
ஏற்றுக்கொள்பவராக இருக்கின்றார் என்று இன்றைய இறைவார்த்தை
சொல்கின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
இஸ்ரயேல் மக்களை மன்னித்த ஆண்டவர்
தன் மக்கள் தன்னை மறந்து, பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து
வழிபடுகின்றார்கள் என்ற செய்தியை அறிந்து, அவர்கள்மீது
சினங்கொண்ட ஆண்டவர், மோசே அவர்கட்காக அவரிடம் பரிந்துபேசியபோது
அவர் அவர்களை மன்னிக்கின்றார். அது மட்டுமல்லாமல், அவர்களை
மன்னித்துவிட்டதன் அடையாளமாக மீண்டுமாகப் பத்துக் கட்டளைகளைத்
தருகின்றார்.
இதைத் தொடர்ந்துதான் மோசே தனக்கு முன்பாகக் கடந்து போகும்
ஆண்டவரை நோக்கி, "ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள
இறைவன்... கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும்
மன்னிப்பவர்" என்கின்றார். கடவுள் நம்முடைய பாவங்களையெல்லாம்
மன்னித்து, எப்படி நம்மை ஏற்றுக்கொள்கின்றார் என்பதற்கு உதாரி
மைந்தன் உவமை உட்பட விவிலியத்தில் பல எடுத்துக்காட்டுகின்றன.
ஆகையால், நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் இறைவனிடம், நாம்
நம்முடைய குற்றங்களை உணர்ந்து திரும்புவது மிகவும் நன்மை
பயக்கும் செயலாகும்.
சிந்தனை
'அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ
வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்' (திபா 30:5) என்பார்
திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் கடவுளின் இரக்கத்தையும்
அன்பையும் உணர்ந்து, அவரிடம் திரும்பி வருவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
|
|