|
|
29 ஜூன் 2019 |
|
|
பொதுக்காலம்
17ம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இம்மக்கள் தங்களுக்காகப் பொன்னால் தெய்வங்களை
உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32:
15-24,30-34
அந்நாள்களில் மோசே திரும்பி மலையிலிருந்து இறங்கி வந்தார்.
முன், பின் இரு புறமும் எழுதப்பட்ட உடன்படிக்கைப் பலகைகள் இரண்டும்
அவர் கையில் இருந்தன. அப்பலகைகள் கடவுளால் செய்யப்பட்டவை. பலகைகள்
மேல் பொறிக்கப்பட்டிருந்த எழுத்தும் கடவுள் எழுதியதே. அந்நேரத்தில்
மக்கள் எழுப்பிய கூச்சலைக் கேட்ட யோசுவா மோசேயை நோக்கி,
"இது
பாளையத்திலிருந்து எழும் போர் முழக்கம்" என்றார்.
அதற்கு மோசே,
"இது வெற்றி முழக்கமோ தோல்விக் குரலோ அன்று. களியாட்டம்தான்
எனக்குக் கேட்கிறது" என்றார். பாளையத்தை அவர் நெருங்கி வந்தபோது
கன்றுக்குட்டியையும் நடனங்களையும் கண்டார். மோசேக்குச் சினம்
மூண்டது. அவர் தம் கையிலிருந்து பலகைகளை மலையடிவாரத்தில்
வீசியெறிந்து உடைத்துப் போட்டார். அவர்கள் செய்து வைத்திருந்த
கன்றுக்குட்டியை எடுத்து நெருப்பில் சுட்டெரித்து மிருதுவான
பொடியாகு மட்டும் அதை இடித்துத் தண்ணீரில் தூவி, இஸ்ரயேல் மக்களைக்
குடிக்கச் செய்தார்.
பின்னர் மோசே ஆரோனை நோக்கி,
"இம்மக்கள் உமக்கு என்ன செய்தார்கள்?
இவர்கள் மேல் பெரும் பாவம் வந்துசேரச் செய்துவிட்டீரே!" என்று
கேட்டார். அதற்கு ஆரோன்,
"என் தலைவராகிய நீர் சினம் கொள்ள
வேண்டாம். இம்மக்கள் பொல்லாதவர்கள் என்பது உமக்குத் தெரியுமே!
அவர்கள் என்னை நோக்கி, "எங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்களைச்
செய்து கொடும். எங்களை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த அந்த
ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை' என்றனர். நானும் அவர்களிடம்
"பொன் அணிந்திருப்பவர்கள் கழற்றித் தாருங்கள்' என்றேன். அவர்களும்
என்னிடம் தந்தனர். நான் அதனை நெருப்பில் போட, இந்தக் கன்றுக்குட்டி
வெளிப்பட்டது" என்றார்.
மறுநாள் மோசே மக்களை நோக்கி, "நீங்கள் பெரும் பாவம் செய்து
விட்டீர்கள்; இப்போது நான் மலைமேல் ஏறி ஆண்டவரிடம் செல்லப்
போகிறேன். அங்கே ஒருவேளை உங்கள் பாவத்திற்காக நான் கழுவாய்
செய்ய இயலும்" என்றார்.
அவ்வாறே மோசே ஆண்டவரிடம் திரும்பிவந்து, "ஐயோ, இம்மக்கள் தங்களுக்காகப்
பொன்னால் தெய்வங்களை உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள்.
இப்போதும், நீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளும். இல்லையேல்,
நீர் எழுதிய உம் நூலிலிருந்து என் பெயரை நீக்கிவிடும்" என்றார்.
ஆண்டவரோ மோசேயிடம், "எவன் எனக்கு எதிராகப் பாவம் செய்தானோ,
அவனையே என் நூலிலிருந்து நீக்கி விடுவேன். நீ இப்போதே புறப்பட்டுப்
போ. உன்னிடம் நான் கூறியுள்ளபடி மக்களை நடத்திச் செல். இதோ என்
தூதர் உன் முன்னே செல்வார். ஆயினும் நான் தண்டனைத் தீர்ப்பு
வழங்கும் நாளில் அவர்கள் பாவத்தை அவர்கள் மேலேயே சுமத்துவேன்"
என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
106: 19-20. 21-22. 23 (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்!
அல்லது: அல்லேலூயா.
19 இஸ்ரயேலர் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொண்டனர்;
வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்; 20 தங்கள்
'மாட்சி'க்குப் பதிலாக, புல் தின்னும் காளையின் உருவத்தைச்
செய்து கொண்டனர்; பல்லவி
21 தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை
மறந்தனர்; 22 காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்;
செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர்.
பல்லவி
23 ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்; ஆனால்,
அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர்போல்
நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யாக் 1: 18
அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி
உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர்
விரும்பினார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கடுகு விதை வளர்ந்து வானத்துப் பறவைகள்
அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
13: 31-35
அக்காலத்தில் இயேசு மக்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: `"ஒருவர்
கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா
விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச்
செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில்
வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு
விதைக்கு ஒப்பாகும்."
அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: "பெண் ஒருவர்
புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து
வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு
மாவுக்கு ஒப்பாகும்." இவற்றை எல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு
உவமைகள் வாயிலாக உரைத்தார்.
உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. `"நான் உவமைகள்
வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்"
என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
விடுதலைப் பயணம் 32:
15-24; 30-34
"தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாளில் அவர்கள் பாவத்தை அவர்கள்
மேலேயே சுமத்துவேன்"
நிகழ்வு
முன்பொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவருடைய ஆட்சியில்
மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று மிகவும் மகிழ்ச்சியோடு
வாழ்ந்து வந்தார்கள். அப்படியிருக்கையில் அந்த நாட்டில் இருந்த
ஒரு திருடனால் மட்டும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டார்கள். அந்தத்
திருடன் யார் என்று அரசர் உட்பட எல்லார்க்கும் தெரியும். அப்படியிருந்தும்
தடயம் இல்லாமல் அவன் திருடிவந்ததால், அரசர் அவனைப் பிடித்துத்
தண்டிப்பதற்கு வழியில்லாமல் தவித்துக்கொண்டிருந்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த நாட்டிற்கு மகான் ஒருவர் வந்தார்.
அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட அரசர், அவரை அணுகிச் சென்று, தன்னுடைய
நாட்டில் இருக்கும் ஒரு திருடனால் எல்லாரும் அவதிப்படுகின்ற
செய்தியை எடுத்துச் சொன்னார். உடனே மகான் ஒரு தாளை எடுத்து, அதில்
ஏதோவொன்றை எழுதி அரசரிடம் கொடுத்தார். அரசரும் அதை வாங்கிப் படித்துப்
பார்த்துவிட்டு, மகானுக்கு நன்றி சொல்லிவிட்டு, அவரிடமிருந்து
விடைபெற்றார்.
அடுத்த நாள் அரசர், அந்தத் திருடனைத் தன்னுடைய அரண்மனைக்கு
விருந்துக்கு அழைத்தார். திருடனும் அரச விருந்து என்பதால் எந்தவொரு
மறுப்பும் சொல்லாமல், விருந்திற்குச் சென்றான். திருடனுக்கு அறுசுவை
உணவு வழங்கப்பட்டது. அவனும் அரசரோடு மிகவும் மகிழ்ச்சியாகப்
பேசி, விருந்துண்டான். விருந்து முடிந்ததும் அரசன் திருடனை தன்
அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அரசர் தன் இடையில்
வைத்திருந்த வாளால் திருடனின் தலையை ஒரே சீவாகச் சீவினார்.
பின்னர் அவனுடைய தலையை அரண்மனைக்கு முன்பாக, மக்கள் பார்வைக்காகத்
தொங்கவிட்டார்.
திருடனுடைய தலை அரண்மனைக்கு முன்னம் தொங்கிக்கொண்டிருப்பதைப்
பார்த்த மக்கள் அனைவரும், 'அரசர் எந்தத் தடயத்தை வைத்து திருடனைப்
பிடித்துக் கொன்றார்?' என்று பேசத் தொடங்கினார்கள். இதற்குள்
செய்தி திருடனின் ஆதரவாளர்கட்குத் தெரிய வந்தது. அவர்கள் அரசரிடம்
வந்து, "எந்தத் தடயத்தை வைத்து என் தலைவனைப் பிடித்துக்
கொன்றீர்கள்?. முதலில் அதைச் சொல்லுங்கள்?" என்றார்கள். அதற்கு
அரசர், "அது ராஜ இரகசியம்" என்றார். "அந்த இராஜ இரகசியத்தை எங்கட்குச்
சொல்லமாட்டீர்களா?" என்று அவர்கள் கேட்ட, அரசர் அவர்களிடம்,
"இராஜ இரகசியத்தைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டால், நீங்களும் உங்களுடைய
தலைவனைப் போன்று என்னுடைய வாளுக்கு இரையாக வேண்டும்... தயாரா?"
என்றார். அவர்களோ அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று ஒரே ஓட்டமாய்
ஓடிப்போனார்கள்.
நடந்த எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த அரசி அரசனிடம்,
"அப்படி என்னதான் மகான் அந்தத் தாளில் எழுதினார். அதை எனக்குச்
சொல்லுங்களேன்!" என்று கெஞ்சிக் கேட்டார். "'நியாயமாக நடப்பவர்களிடம்தான்
நீதியையும் நேர்மையையும் கடைப்பிடிக்கவேண்டும். அடாவடியாக நடப்பவர்கட்கு
முதலில் தண்டனையைக் கொடுத்துவிட்டு, அதன்பின் அதனை நியாயப்படுத்துவதற்கான
வழிகளைத் தேடவேண்டும்' என்று எழுதினார்" என்றார் அரசர். இப்படிச்
சொல்லிவிட்டு அரசர் அரசியிடம் சொன்னார்: "மனிதன் எதை
விதைக்கிறானோ அதையே அறுவடை செய்கின்றான். இந்தத் திருடன்
தீமையை விதைத்தான். அந்தத் தீமையாலேயே இறுதியில் அழிந்து
போனான்."
அரசர் தன் மனைவியிடம் இறுதியாகச் சொன்ன 'மனிதன் எதை
விதைக்கின்றானோ. அதையே அறுவடை செய்கின்றான்' என்ற வார்த்தைகள்
எவ்வளவு ஆழமானவை!. இன்றைய முதல் வாசகத்தில், பொன்னாலான கன்றுக்குட்டியைச்
செய்து வழிபட்ட இஸ்ரயேல் மக்களைப் பார்த்துக் கடவுள்,
"தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாளில் நீங்கள் செய்த பாவத்தை உங்கள்
மேலேயே சுமத்துவேன்" என்கின்றார். அது குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
இஸ்ரயேல் மக்கள் கடவுளோடு செய்த உடன்படிக்கையை மீறுதல்
மோசே, சீனாய் மலையில் ஆண்டவரோடு பேசச் சென்ற கால இடைவெளியில்
இஸ்ரயேல் மக்கள் பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து வழிபடத்
தொடங்குகின்றார்கள். இந்நிலையில் மலையில் ஆண்டவரோடு
உரையாடிவிட்டு அவரிடமிருந்து கட்டளைகளைப் பெற்றுத்
திரும்பிவந்த மோசே, மக்கள் பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து
வழிபடுவதைப் பார்த்துவிட்டு, தான் கொண்டுவந்த பலகைகளைக் கீழே
போட்டு உடைக்கின்றார். காரணம் இஸ்ரயேல் மக்கள் கடவுளோடு செய்த
உடன்படிக்கையை மீறிவிட்டார்கள் என்பதாலாகும்.
'ஆண்டவர் கூறிய அனைத்தையும் (விபா 20: 1-17) நாங்கள்
செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம்' (விப 24: 3-8)
என்பதுதான் இஸ்ரயேல் மக்கள் கடவுளோடு செய்த உடன்படிக்கை.
ஆனால், அதை அவர்கள் சிறிது காலத்திலேயே மறந்துவிட்டு
கன்றுகுட்டியை வழிபட்டதன் மூலம் உடன்படிக்கையை மீறினார்கள்.
இதனால்தான் கடவுள், அவர்கள் பாவத்தை அவர்கள் மேல் சுமத்துவேன்
என்கின்றார்.
கடவுள் அருளும் இரக்கமும் உள்ளவர்தான். அதே நேரத்தில்
மனிதர்கள் செய்யும் செயல்கட்கேற்ப நீதி வழங்குவார் என்பதை
மறந்து விடக்கூடாது. இஸ்ரயேல் மக்கள் கடவுளோடு செய்த
உடன்படிக்கையை மீறினார்கள். அதனால் அவர்கள் அதற்கான பலனை
அனுபவித்தார்கள். நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து
அவர்க்கு உகந்தவர்களாய் வாழ்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
'ஒருவர் தாம் விதைத்ததையே அறுவடை செய்வார். தம் ஊனியல்பாகிய
நிலத்தில் விதைப்போர் அந்த இயல்பிலிருந்து அறுவடை செய்வர்'
(கலா 6: 6-7) என்பார் பவுல். ஆகையால், நாம் சாத்தானின்
தூண்டுதலுக்கு உட்பட்டு, தீமையை விதைக்காமல், தூய ஆவியாரால்
தூண்டப்பட்டு, நல்ல செயல்களை விதைப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 13: 31-35
மாற்றத்தின் கருவியாய்...
நிகழ்வு
நம்முடைய நாட்டில் ஒரு பக்கம் தேவையில் உள்ளவர்கள் ஏராளமான
பேர் இருக்கின்றார்கள் என்றால், இன்னொரு பக்கம் தேவைக்கு
அதிகமாக வைத்திருப்பவர்கள் ஏராளமான பேர் இருக்கின்றார்கள்.
இத்தகையதோர் ஏற்றத்தாழ்வைக் களைவதற்கு பலரும் பலவிதமான
முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அந்த வரிசையில் ஒரு
புதுவிதமான முயற்சிதான் அன்புச் சுவர் என்பதாகும்.
அது என்ன அன்புச் சுவர் என்று கேட்கலாம். இன்றைய சூழலில்
வசதிபடைத்த பலர் தாங்கள் வாங்கிய உடைகளையோ, புத்தகங்களையோ.
காலணிகளையோ இன்ன பிற பொருட்களோ ஒருமுறையோ அல்லது இருமுறையோ
பயன்படுத்திவிட்டுத் தூக்கித் தூர எறியும் அவலநிலை தொடர்ந்து
கொண்டிருக்கின்றது. ஆனால், இதுகூடக் கிடைக்காமல் தவிப்போர்
ஏராளமான பேர் இருக்கின்றார்கள். இந்நிலையை மாற்றி, தேவையில்
உள்ளோர் யாவரும் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி வகையில்
தொடங்கிப் பட்டதுதான் அன்புச்சுவர்.
2017 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் நாள் அப்போதைய திருநெல்வேலி மாவட்ட
ஆட்சியர் சந்தீப் நந்தூரியால் முன்னெடுக்கப்பட்ட இந்த
முயற்சியால் உடுத்த உடையில்லாதவர்கள், படிக்க நோட்டுப்
புத்தகங்கள் இல்லாதவர்கள், அணிய சரியானக் காலணி இல்லாதவர்கள்
என பலர் மேற்சொன்ன யாவையும் இன்ன பிற பொருட்களையும் பெற்றுப்
பயனடைகின்றார்கள். மேலும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால்
தொடங்கப்பட்ட இம்முயற்சியானது திருச்சி, மதுரை, திருவாரூர்,
சிவகாசி போன்ற பல்வேறு இடங்கட்கும் பரவி, பலரும் பயன்பெற்று
வருகின்றார்கள். அன்புச் சுவரில் சிறப்பு என்னவென்றால்,
பொருள்களை அன்புச் சுவற்றில் யார் வைத்தார் என்று அதை
எடுப்பவர்க்கும் அன்புச் சுவற்றிலிருந்து பொருளை எடுத்தவர்
யார் என்று அதை வைத்தவர்க்கும் தெரியவே தெரியாது.
ஒரு மனிதரால் சிறிதளவில் தொடங்கப்பட்ட 'அன்புச் சுவர்' என்ற
இந்த முயற்சி, இன்றைக்குப் பல்வேறு இடங்கட்கும் பரவி,
பலர்க்கும் பயனுள்ளதாய் இருக்கின்றது என்பது, நாசரேத்து என்ற
ஓர் ஊரில் தொடங்கப்பட்ட இறையாட்சி இன்றைக்குக் உலகம் முழுவதும்
பரவி, நிறைந்த பலனைத் தந்துகொண்டிருப்பதை நமக்கு
நினைவூட்டுகின்றது.
விண்ணரசும் கடுகுவிதையும்
நற்செய்தியில் இயேசு விண்ணரசைக் கடுகுவிதைக்கு
ஒப்பிடுகின்றார். முற்காலத்தில் மிகச் சிறிய ஒன்றைக்
குறிப்பதற்காக கடுகுவிதையை ஒப்பிட்டுப் பேசுவது வழக்கமாக
இருந்து வந்தது (லூக் 17: 6). அந்த வகையில் இயேசு விண்ணரசைக்
கடுகுவிதைக்கு ஒப்பிடுகின்றார். கடுகு விதை அளவில் சிறியது.
ஆனால், அது மண்ணில் விதைக்கப்பட்டு, வளர்ந்து பெரிதாகும்போது
வானத்துப் பறவைகள் எல்லாம் அதன் கிளைகளில் தங்குகின்றன.
அதுபோன்றுதான் இறையாட்சியும் நாசரேத்து என்றொரு சாதாரண ஊரில்
தொடங்கப்பட்டு, இன்றைக்கு உலகமெங்கும் வியாபித்திருக்கின்றது.
ஆண்டவர் இயேசு இறையாட்சியைக் கடுகுவிதைக்கு ஒப்பிடுவது மேலும்
ஒருசில உண்மைகளை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து
சிந்தித்துப் பார்ப்போம்.
சிறியவற்றிலிருந்து மிகப்பெரியவற்றைச் செய்யும் இறைவன்
இயேசு சொல்லக்கூடிய கடுகு விதை உவமை நமக்கு உணர்த்தும்
முதன்மையான செய்தி, கடவுள் மிகச் சிறியவற்றிலிருந்து
மிகப்பெரியவற்றைச் செய்வார் என்பதாகும். நம்பிக்கையின் தந்தை
என அழைக்கப்படும் ஆபிரகாமிடமிருந்துதான் ஓர் இனத்தையே ஆண்டவர்
தோன்றச் செய்தார். அதுபோன்று இஸ்ரயேலின் பன்னிரு குலங்களில்
மிகச் சிறிய குலமாகிய யூதாவிலிருந்துதான் ஆண்டவர் மெசியாவைத்
தோன்றச் செய்தார். இவ்வாறு கடவுள் நினைத்தால் மிகச்
சிறியதிலிருந்தும் மிகப்பெரியவற்றைத் தோன்றச் செய்வர் என்பது
உறுதியாகின்றது.
மாற்றம் உடனடியாக நிகழ்ந்துவிடாது, படிப்படியாகத்தான் நிகழும்
ஆண்டவர் இயேசு சொல்லும் இந்தக் கடுகு விதை உவமை நமக்குச்
சொல்லும் இரண்டாவது செய்தி, இந்த மண்ணில் நடைபெறும் மாற்றம்
எதுவும் உடனடியாக நிகழ்ந்துவிடாது, அது படிப்படியாகத்தான்
நிகழ்வும் என்பதாகும். நிலத்தில் விதைக்கப்படும் விதையானது
உடனடியாக மரமாகிவிடுவதில்லை. அதுபோன்றுதான் இந்த மண்ணில்
உனடியாக மாற்றங்கள் நிகழ்ந்துவிடாது. அது படிப்படியாகத்தான்
நிகழும். மண்ணில் மாற்றம் நிகழ்வதற்கு நிறையக் காலம் ஆகும்
என்பதற்காக நாம் மாற்றத்தின் கருவியாக புளிப்பு மாவாக
செயல்படுவதை நிறுத்திக்கொள்ளக்கூடாது. நாம் தொடர்ந்து
செயலாற்றிக் கொண்டே இருக்கவேண்டும்.
பெரியார் ஒருமுறை இவ்வாறு குறிபிட்டார்: "ஊதுகின்ற சங்கை ஊதி,
என்றைக்காவது எவராவது காதில் விழும்." ஆகையால், நாம்
ஒவ்வொருவரும் இறையாட்சி இம்மண்ணில் மலரச் செய்வதற்கான பணிகளைத்
தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும். அப்பொழுது இம்மண்ணில்
இறையாட்சி மலரும், புது மாற்றமும் ஏற்படும்.
சிந்தனை
'கடவுளால் ஆகாது ஒன்றுமில்லை' (லூக் 1: 37) என்கிறது
இறைவார்த்தை. ஆகவே, சாதாரணமானவற்றிலிருந்து அசாதாரணமானவற்றைச்
செய்யும் ஆண்டவரின் கையில் நம்மை ஒப்படைத்து, இறையாட்சி
இம்மண்ணில் மலர உழைப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|