Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         27 ஜூலை 2019  
                                  பொதுக்காலம் 16ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 

=================================================================================
ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 24: 3-8


அந்நாள்களில் மோசே மக்களிடம் வந்து ஆண்டவர் சொன்ன அனைத்து வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக, "ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்" என்று விடையளித்தனர். மோசே ஆண்டவரின் வாக்குகள் அனைத்தையும் எழுதி வைத்தார்.

அதிகாலையில் அவர் எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தையும், இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களுக்காகப் பன்னிரண்டு தூண்களையும் எழுப்பினார். அவர் இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை அனுப்பி வைக்க, அவர்களும் ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தினர். மாடுகளை நல்லுறவுப் பலிகளாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர். மோசே இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துக் கலங்களில் விட்டு வைத்தார். மறு பாதியைப் பலிபீடத்தின் மேல் தெளித்தார். அவர் உடன்படிக்கையின் ஏட்டை எடுத்து மக்கள் காதுகளில் கேட்கும்படி வாசித்தார்.

அவர்கள், "ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம்" என்றனர். அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து, "இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ" என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 50: 1-2. 5-6. 14-15 (பல்லவி: 14a)
=================================================================================
பல்லவி: கடவுளுக்கு நன்றிப் பலி செலுத்துங்கள்.

1 தெய்வங்களுக்கெல்லாம் இறைவனாம் ஆண்டவர் பேசினார்; கதிரவன் எழும் முனையினின்று மறையும் முனைவரை பரந்துள்ள உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார். 2 எழிலின் நிறைவாம் சீயோனினின்று, ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள். பல்லவி

5 'பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்றுகூட்டுங்கள்.' 6 வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! பல்லவி

14 கடவுளுக்கு நன்றிப் பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள். 15 துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்; உங்களைக் காத்திடுவேன்; அப்போது, நீங்கள் என்னை மேன்மைப் படுத்துவீர்கள். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யாக் 1: 21b

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 அறுவடை வரை, இரண்டையும் வளர விடுங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-30

அக்காலத்தில் இயேசு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டன.

நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, 'ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?' என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், 'இது பகைவனுடைய வேலை' என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், 'நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?' என்று கேட்டார்கள்.

அவர், 'வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக் கூடும். அறுவடை வரை இரண்டையும் வளர விடுங்கள்.

அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்று கூறுவேன்' என்றார்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

களைகள் உவமை.

களைகள் பெருத்து விட்டது. தீமைகளின் கோரம் வெகுவாகி போய் விட்டது.

தீமைகளை கண்டு மனம் கொதித்து, முள்ளை முள்ளால் எடுப்போம் என புத்தியை தீட்டாமல் கத்தியை தீட்ட வேண்டாம்.

தீமைகளை களைய முடியாது. அது ஆண்டவனாலேயே கூட நடக்காத காரியம் என்று சொல்லி அவநம்பிக்கை கொண்டு வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்.

தீமைகளை கண்டு மனதிற்குள்ளாக மகிழ்ச்சியடைபவர்களாகவும் இருந்தால் தீர்ப்புள்ளாக வேண்டும் என்பதை 2 தெச 2: 12 கூறுகின்றது.

பவுல்.அடிகளார் கூறுவது போல தீமையை வெல்லவிடாது, நன்மையினால் தீமையை வெல்ல முன் வருவது காலத்தின் கட்டாயம். உரோ 12: 21

நன்மை செய்வோரின் எண்ணிக்கை பெருக வேண்டும்.

நீதி மொழி 3: 27  தேவையில் இருப்போருக்கு.

1 தெச 5; 15  எல்லாருக்கும், எப்பொழுதும்.

இது இன்றைய காலத்தோடு கூடிய தேவை.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 விடுதலைப் பயணம் 24: 3-8

"ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம்"

நிகழ்வு

1855 ஆம் ஆண்டு, ஆர்ஸ் நகரில் பங்குத்தந்தையாக இருந்த ஜான் மரியா வியான்னியைச் சந்திக்க ஃபர்னியர் என்றோர் இளம்பெண் வந்திருந்தாள். அவளுக்கு ஒரு கால் ஊனம் என்பதால் அவள் நொண்டி நொண்டி வியான்னியைப் பார்க்க வந்திருந்தாள்.

அவரைப் பார்த்ததும் அவள், "சாமி! என்னால் சரியாக நடக்கமுடியவில்லை. எங்கு சென்றாலும் நொண்டி நொண்டித்தான் நடந்து செல்லும் அளவிற்கு என்னுடைய கால் ஊனமாக இருக்கின்றது. இது எப்போது சரியாகும்" என்று கேட்டார். வியான்னி அவளை ஒரு நிமிடம் அன்போடு பார்த்துவிட்டுச் சொன்னார்: "நீ உன்னுடைய தாயாரின் வார்த்தைகட்கு கீழ்ப்படியாமல் இருப்பதால்தான் உன்னுடைய கால் இப்படி இருக்கின்றது. என்றைக்கு நீ உன் தாயாரின் வார்த்தைகட்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றோ அன்றைக்குத்தான் உன்னுடைய கால் சரியாகும். ஆனாலும் அது உடனடியாகச் சரியாகாது. நீ உன் தாயாரின் வார்த்தைகட்குக் கீழ்ப்படிந்து நடப்பதைப் பொறுத்துச் சரியாகும்."

தந்தை வியான்னி சொன்ன இவ்வார்த்தைகட்குச் சரியென்று சொல்லிவிட்டு ஃபர்னியர் தன் வீட்டிற்குச் சென்றாள். அங்கு அவள் தந்தை வியான்னி சொன்ன வார்த்தைகட்குக் கீழ்ப்படிந்து நடந்து வந்தாள். இதனால் அவருடைய கால் தந்தை வியான்னி சொன்னதுபோன்று மெல்லச் சரியானது. ஓராண்டு முடிவில் அவளுடைய கால் முற்றிலுமாகச் சரியானதும், தந்தை வியான்னியைப் பார்க்க வந்தாள். அவர் அவளுடைய கால் முழுவதுமாகக் குணமடைந்ததைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியோடு, "தொடர்ந்து நீ உன் தாய்க்கும் தந்தைக்கும் எல்லாவற்றிக்கும் மேலாகக் கடவுட்கும் கீழ்படிந்து நட. அப்பொழுது உனக்கு எல்லா ஆசியும் நிரம்பப் கிடைக்கும்" என்றார். அவளும் தந்தை வியான்னி சொன்னது போன்று, தன் தாய்க்கும் தந்தைக்கும் கடவுட்கும் கீழ்ப்படிந்து நடந்து வந்தாள்.

கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கை எத்தகைய ஆசியை ஒருவர்க்குப் பெற்றுத்தருகின்றது என்பதை இந்த நிகழ்வானது மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள், "ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம்" என்று வாக்குறுதி தருகின்றார்கள். உண்மையில் அவர்கள் கடவுட்குக் கொடுத்த வாக்குறுதிக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்களா?, அதன்மூலம் அவர்கள் கடவுள் அளிப்பதாகச் சொன்ன ஆசியைப் பெற்றுக்கொண்டார்களா? என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

பத்துக்கட்டளை கொடுத்த இறைவன்

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் கொடுத்த பத்துக் கட்டளைகளோடு சீனாய் மலையிலிருந்து திரும்பி வரும் மோசே, அவற்றை மக்கட்கு அறிவிக்கின்றார். இறையன்பையும் பிறரன்பையும் மையப்படுத்தி இருந்த அந்தப் பத்துக்கட்டளைகளை மோசே மக்கட்கு அறிவித்தபோது அவர்கள் ஒருமித்த குரலில், "ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்" என்கின்றார்கள்.

இங்கு மோசே சீனாய் மலையிலிருந்து பத்துக்கட்டளை வாங்கி, அவற்றை மக்கட்கு அறிவிக்கின்ற நிகழ்வு, புதிய ஏற்பாட்டில் புதிய மோசேயாம் இயேசு மலையிலிருந்து மக்கட்குப் போதிப்பதை நினைவுபடுத்துவதாக இருக்கின்றது. மோசே கடவுள் கொடுத்த பத்துக் கட்டளைகளை மக்களிடம் அறிவிக்கும்போது அவர்கள் சொன்ன, "ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்" என்ற வார்த்தைகள், "என்னை நோக்கி 'ஆண்டவரே ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்' (மத் 7:21) என்ற வார்த்தைகளையும் நினைவுபடுத்துவதாக இருக்கின்றன. இந்நிலையில் இஸ்ரயேல் மக்கள் கடவுட்குக் கொடுத்த வாக்குறுதிக்கு கீழ்ப்படிந்து நடந்ததார்களா என்பதைத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுட்குக் கொடுத்த வாக்குறுதிக்குக் கீழ்ப்படிந்து நடக்காத இஸ்ரயேல் மக்கள்

மோசே அறிவித்த கடவுளின் வார்த்தைகளைச் செயல்படுத்தி, கீழ்ப்படிந்து நடப்பதாக வாக்குறுதி தந்த இஸ்ரயேல் மக்கள், நாட்கள் செல்லச் செல்ல உண்மைக் கடவுளாம் யாவே இறைவனை மறந்துவிட்டு, போலி தெய்வங்களை வழிபடத் தொடங்கினார்கள். அது மட்டுமல்லாமல், ஆண்டவரின் அடியார்கட்கு எதிராகக் கலகம் செய்யத் தொடங்கினார்கள். இதனாலேயே அவர்கள் யாரும் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டிற்குள் செல்லவில்லை. அவர்களுடைய வழிமரபினரே கானான் நாட்டிற்குள் சென்றார்கள். அப்படியானால் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளையும் கட்டளைகளையும் கடைப்பிடித்து வாழ்வது எத்துணை முக்கியம் என்பதை உணர்ந்து வாழ்வது நல்லது.

சிந்தனை

'இன்று நான் உங்கட்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, பெருகி, ஆண்டவர் உங்கள் மூதாதையர்க்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டில் புகுந்து, அதை உங்கள் உடைமையாக்கிக் கொள்வீர்கள்' (இச 8:1) என்பார் ஆண்டவர். ஆகையால், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவர்க்குக் கீழ்ப்படிந்து நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 13: 24-30

யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம்மாற விரும்பும் இறைவன்

நிகழ்வு

தூய வின்சென்ட் ஃபெரர் குருவாகப் பணிசெய்துகொண்டிருந்த இடத்தில் பெண் ஒருவர் இருந்தார். அவர் ஆலயத்திற்குத் தவறாது வருவார். அதேநேரத்தில் அவர் துன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். குறிப்பாக அவர் பல ஆண்களும் கெட்டுப் போகக் காரணமாக இருந்தார். இதையறிந்த வின்சென்ட் ஃபெரர் தன்னுடைய மறையுரைகளில் பாவத்தின் விளைவுகளைக் குறித்தும் மனம்மாறி வருகின்றவர்களை இறைவன் அன்போடு ஏற்றுக்கொள்வதைக் குறித்தும் தொடர்ந்து போதித்து வந்தார். நாட்கள் செல்லச் செல்ல அவர் ஆற்றிய மறையுரைகள் அந்தப் பெண்மணியின் உள்ளத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தது.

ஒருநாள் வின்சென்ட் ஃபெரர் ஆற்றிய மறையுரையைக் கேட்டு அந்தப் பெண் கண்ணீர் விட்டு அழுது தரையில் விழுந்தார். விழுந்த அவர் மீண்டும் எழுந்திருக்கவே இல்லை. ஆமாம், அந்தப் பெண் தன்னுடைய பாவத்தை நினைத்து மனம்வருந்தி அழுது அழுது அப்படியே இறந்துபோனார். அவர் இறந்தது தெரிந்ததும் ஆலயத்தில் இருந்த அனைவரும் அவரைச் சுற்றிக்கூடி பலவாறாகப் பேசத் தொடங்கினார். "இவள் ஒரு பாவி... அதனால் இவள் நரகம்தான் செல்வாள்" என்றார்கள்.

எல்லாரையும் விலக்கிக்கொடு அங்கு வந்த வின்சென்ட் ஃபெரர், "இந்தப் பெண் பாவியாக இருந்தாலும், இவர் தன்னுடைய குற்றத்தை உணர்ந்துவிட்டார். அதனால் இவர் உத்தரிக்கத் தலம் செல்வதற்கு வாய்ப்பிருக்கின்றது. அதனால் இவர்க்காக நாம் இறைவனிடம் மன்றாடுவோம்" என்றார். அப்பொழுது ஓர் அசரீரி ஒலித்தது. அது, "இந்தப் பெண் மிகப்பெரிய பாவியாக இருந்தாலும், கடைசி நேரத்தில் தன்னுடைய தவற்றை உணர்ந்ததால், இறைவன் இவரை விண்ணகத்தில் சேர்த்துக்கொண்டார்" என்றது. அதைக்கேட்டு எல்லாரும் மெய்ம்மறந்து நின்றார்கள்.

இறைவன், இவ்வுலகில் இருக்கின்ற ஒவ்வொருவர்க்கும் அவரவர் செயல்கட்கு ஏற்பத் தீர்ப்பு வழங்கினாலும், யாரெல்லாம் தங்களுடைய தவற்றை உணர்ந்து மனம் வருந்துகிறார்களோ அவர்கள் மட்டில் அவர் இரக்கம்கொண்டு, அவர்களைத் தன்னுடைய பேரின்ப வீட்டினில் ஏற்றுக்கொள்கின்றார் என்ற உண்மையை உணர்த்தும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு வயலில் தோன்றிய களைகளின் உவமை வழியாக இறுதித் தீர்ப்பின்போது என்ன நடக்கும் என்பதையும் தங்களுடைய தவறுகளை உணர்ந்து வருந்துவோர் மட்டில் இறைவன் எந்தளவுக்கு இரக்கம் கொண்டிருக்கின்றார் என்பதைக் குறித்தும் எடுத்துச் சொல்கின்றார். நாம் அவற்றைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

நல்லதாகவே படைத்த இறைவன்

நற்செய்தியில் ஆண்டவர் வயலில் தோன்றிய களைகள் உவமையைக் குறித்துப் பேசுகின்றார். இவ்வுவமை நமக்கு மூன்று முக்கியமான செய்திகளை எடுத்துச் சொல்கின்றது. அதில் முதன்மையானது, கடவுள் இந்த உலகத்தில் படைத்த அனைத்தும் நல்லதாகவே படைத்தார் என்பதாகும். உவமையில் வரும் மனிதர் தன்னுடைய வயலில் நல்ல விதைகளை விதைத்தார் என்பது, படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் தான் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன (தொநூ ௧:31) என்ற வார்த்தைகளை ஒத்திருக்கின்றன. அப்படியானால் இந்த உலகத்தில் தோன்றிய களைகள் போன்ற தீமைகள், கலவரங்கள், இன்ன பிற யாவும் சாத்தானின் வேலைகள் என்றுதான் சொல்லவேண்டும்.

தீயோர் மனம்மாறக் காலம்தாழ்த்தும் இறைவன்

உவமையில் நிலக்கிழாரிடம் அவருடயை பணியாளர்கள், நிலத்தில் களைகள் இருப்பது பற்றியும் அவற்றை அகற்றவேண்டும் என்பது பற்றியும் சொல்கின்றபோது நிலக்கிழார் அவர்களிடம், அறுவடைக் காலம் காத்திருங்கள் என்று சொல்கின்றது. இவ்வார்த்தைகள் பேதுரு தன்னுடைய திருமுகத்தில் சொல்கின்ற, "ஆண்டவர் காலம்தாழ்த்துவதில்லை. அவர் உங்கட்காகப் பொறுமையோடிருக்கின்றார். யாரும் அழிந்துபோகாமல், எல்லாரும் மனம்மாறவேண்மென விரும்புகின்றார்" (2 பேது 3: 9) என்ற வார்த்தைகளை நினைவுபடுத்துவதாக இருக்கின்றது. உண்மையில் மானிடர் யாவரும் அழிய வேண்டும் என்பது அல்ல, வாழவேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுளம். அதற்காக அவர் பொறுமையோடு காத்திருக்கின்றார்.

இறுதியில் ஒவ்வொருவர்க்கும் அவரவர் செயல்கட்கு ஏற்பத் தீர்ப்பு வழங்கும் இறைவன்

இறைவன், பாவிகள் மனம்மாறக் காலம் தாழ்த்துகின்றார். அப்படியிருந்தும் அதையும் பொருட்படுத்தாமல் மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருந்தால் அவர்கட்கு அவர்களின் செயல்கட்கு ஏற்பத் தண்டனை கிடைக்கும் என்று இயேசு மிகத் தெளிவாகக் கூறுகின்றார். அதைத்தான் நாம், களைகளை எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்று நிலக்கிழார் கூறுகின்ற வார்த்தைகளில் காண்கின்றோம். ஆகையால், நாம் கடவுளின் இரக்கப் பெருக்கை உணர்ந்து, மனம் மாறி அவருடைய வழியில் நடக்க முயற்சி செய்வோம்.

சிந்தனை

'ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் கொண்டவர்' (திபா 103: 8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகவே, நாம் அழிந்துவிடாமல் வாழவேண்டும் என்று விரும்பும் இறைவனிடம் திரும்பி வந்து, அவர்க்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!