|
|
26 ஜூலை 2019 |
|
|
பொதுக்காலம் 16ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
மோசே வழியாகத் திருச்சட்டம் அருளப்படுகிறது.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 20: 1-17
கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: நானே உன் கடவுளாகிய ஆண்டவர்;
அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.
என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது.
மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில்
உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ
அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில்
உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ளமாட்டேன்;
என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல்
மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.
மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு
ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன். உன் கடவுளாகிய ஆண்டவரின்
பெயரை வீணாகப் பயன்படுத்தாதே; ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை
ஆண்டவர் தண்டியாது விடார்.
ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள்
நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன்
கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும்
மகளும் உன் அடிமையும் அடிமைப் பெண்ணும் உன் கால்நடைகளும் உன்
நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய
வேண்டாம். ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும்,
கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள்
நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட.
கொலை செய்யாதே. விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே. பிறருக்கு
எதிராகப் பொய்ச் சான்று சொல்லாதே. பிறர் வீட்டைக் கவர்ந்திட
விரும்பாதே; பிறர் மனைவி, அடிமை, அடிமைப் பெண், மாடு, கழுதை,
அல்லது பிறர்க்கு உரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
19: 8. 9. 10. 11 (பல்லவி: யோவா 6: 68)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே
உள்ளன.
8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.
ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன.
பல்லவி
9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும்
நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை
முற்றிலும் நீதியானவை. பல்லவி
10 அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை;
தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை.
பல்லவி
11 அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன்; அவற்றைக் கடைப்பிடிப்போருக்கு
மிகுந்த பரிசுண்டு. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 8: 15
அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக்
கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்
பேறுபெற்றோர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இறைவார்த்தையைக் கேட்டுப்
புரிந்துகொள்பவர்கள் பயன் அளிப்பர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-23
அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: "விதைப்பவர் உவமையைப்
பற்றிக் கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர்
இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள்.
அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச்
செல்வான். பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர்
இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்
கொள்வார்கள்.
ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே
நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ
நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள்.
முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறை
வார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை
நெருக்கிவிடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்.
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக்
கேட்டுப் புரிந்துகொள்வார்கள்.
இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும்,
சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
மிதிபடுபவர்கள், வேரற்றவர்கள், நெருக்குதலுக்கு பணிபவர்கள்
இவர்கள் பலன் கொடுக்க முடியாதவர்கள்.
இன்று பலன் கொடுக்காத வாழ்வு வாழ்வதாக நினைப்போர் இந்த மூன்று
நிலைகளில் தாங்கள் எந்த வகையைச் சார்ந்தவர்கள் என்று எண்ணிப்
பார்க்க கடமைப்பட்டவர்கள்.
தாங்கள் பாதையோரம் இருக்கிறோம் என்பது உணராமலேயே மற்றவர்களின்
மிதிபாட்டுக்கு உட்பட்டு தங்களின் வாழ்வை வீண்ணாக்கி வருபவர்கள்.
பாதையோரம் என்கின்ற போது, ஏனோதானோ என்கின்ற வாழ்வு வாழ்பவர்கள்.
பூமியிலே பிறந்து விட்டோம், வெந்தiதை தின்று விதி வந்தால்
சாவோம் என வாழ்வோர்.
வேரற்றவர்கள். இவாகள் எதிலும் நிலையற்று, பிடிப்பற்று
வாழ்பவர்கள். ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே அடுத்த கால் என்று
வாழ்பவர்கள். இவர்கள் எதிலும் நிறைவடையாது, நிம்மதியடையாது,
போதும் என்ற மனமும் இல்லாமல் இழுத்த இழுப்புக்கு எல்லாம்
வருபவர்கள். இவர்களாலும் பலன் கொடுத்திட முடியாது.
நெருக்குதலுக்கு பணிபவர்கள். இவர்கள் கோழைகளாக, துணிவின்றி
வாழ்பவர்கள். வீராவேசம் பேசி விட்டு வீட்டுக்குள் பொய் முடங்கி
கிடப்பவர்கள். வாய்ச்சாடல் அதிகம் இருக்கும். பின்னர் அடையாளம்
தெரியாமல் முகவரியில்லாது போய் விடுவார்கள்.
இதிலே எந்த ரகம் நாம் என கண்டு மாற்றிக் கொள்ளும் காலம் இது.
காலம் உள்ள போதே மாற்றிக் கொள்வது அறிவார்ந்த செயல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
மத்தேயு 13: 18-23
யாரால் நூறு மடங்காகவும் அறுபது மடங்காகவும்
முப்பது மடங்காகவும் பலனளிக்க முடியும்?
நிகழ்வு
குருவானவர் ஒருவர் ஆப்ரிக்கக் கண்டத்திற்கு நற்செய்தி அறிவிக்க
அனுப்பி வைக்கப்பட்டார். அவர் அங்கு சென்றபோது எல்லாருடைய கவனத்தையும்
ஈர்க்கும் வகையில் தன்னோடு முகம் பார்க்கும் கையடக்கக் கண்ணாடி
ஒன்றையும் எடுத்துச் சென்றார்.
அதுவரைக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்திராத அங்குள்ள
மக்கள் அக்கண்ணாடியை வியப்போடு பார்த்தார்கள். மேலும் அந்தக்
கண்ணாடியில் தங்களுடைய முகம் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
நாட்கள் செல்லச் செல்ல குருவானவர் முகம் பார்க்கும் கண்ணாடி
கொண்டு வந்திருகின்ற செய்தி எங்கும் பரவியது.
இச்செய்தி அந்நாட்டு அரசியின் செவிகளையும் எட்டியது. அவள் உலகிலேயே
மிகப்பெரிய அழகி என எல்லாராலும் பாராட்டப்பட்டவள். எனவே, அவள்
தன்னுடைய முகத்தை அந்தக் கண்ணாடியில் பார்த்து, தான் எவ்வளவு
பெரிய அழகி எனத் தெரிந்துகொள்ள விரும்பினாள். உடனே அவள் தன்னுடைய
பணியாளர்களைக் கூப்பிட்டு, முகம் பார்க்கும் கண்ணாடி
வைத்திருக்கும் குருவானவரைத் தன்னிடம் அழைத்து வரச் சொன்னாள்.
குருவும் அரசியின் அழைப்பை ஏற்று, அவளிடம் சென்று, முகம்
பார்க்கும் கண்ணாடியை அவளிடம் எடுத்துக் காட்டினார்.
கண்ணாடியில் தன்னுடைய முகத்தைப் பார்த்த அரசி, கடுங்சீற்றம் அடைந்தார்.
ஏனென்றால், கண்ணாடியில் அவளுடைய முகம் மிகவும் விகாரமாக இருந்தது.
உடனே அவள் கண்ணாடியைக் கீழே போட்டுச் சுக்குநூறாக உடைத்தாள்.
குருவானவர் ஒன்றும் புரியாமல் முழித்தார். உண்மையில் அரசியின்
முகம் விகாரமாகத்தான் இருந்தது. மக்கள்தான் அவள் மிகவும் அழகாக
இருக்கிறாள் என்று உசுப்பேத்தி விட்டிருந்தார்கள் - புகழ்ந்து
தள்ளியிருந்தார்கள். இப்போது கண்ணாடியில் அவளுடைய உண்மை முகம்
தெரிந்ததும் அவள் அதைக் கீழே போட்டு உடைந்தாள்.
இதற்குப் பின்னர் அவள் முகம்பார்க்கும் கண்ணாடியை யாரும் தன்னுடைய
நாட்டு எல்லைக்குள் கொண்டுவரக்கூடாது என்று ஆணையிட்டாள்.
முகம் பார்க்கும் கண்ணாடியில் தன்னுடைய முகத்தைப் பார்த்ததும்
எப்படி அந்த அரசி மிரண்டு போனாளோ, அதுபோன்றுதான் இன்றைக்கு பலர்
இறைவார்த்தையை வாசித்தால், எங்கே தங்களுடைய உண்மையான முகம்
தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் இறைவார்த்தையை வாசிக்காமலும்
வாசித்தாலும் அது தங்களைப் பாதிக்காத வகையிலும் பார்த்துக்
கொள்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் இன்றைய இறைவார்த்தை,
கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அது தங்களுடைய வாழ்க்கையில்
மாற்றத்தை ஏற்படுத்த அனுமதிப்போர் எந்தளவுக்குப்
பயனடைகின்றார்கள் என்பதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது.
நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து
நிறைவுசெய்வோம்.
இறைவார்த்தையால் தொடப்படாதவர்கள்
நற்செய்தியில் இயேசு விதைப்பவர் உவமைக்கான விளக்கத்தை
அளிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். இப்பகுதியைக் குறித்து
ஒருசில விவிலிய அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றபோது, இது
பிற்சேர்க்கை என்று கூறுகின்றார்கள். அது ஒருபக்கம்
இருந்தாலும் இப்பகுதியின் வழியாக இறைவன் நமக்குக் கூறும்
செய்தி நம்முடைய கவனத்திற்குரியவை.
விதைப்பவர் உவமையில் இயேசு இறைவார்த்தையை விதைக்கு
ஒப்பிடுகின்றார். காரணம், எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர்
சொல்வது போன்று அது உயிருள்ளது, ஆற்றல் (எபி 4:12) அத்தகைய
உயிருள்ள, ஆற்றல் வாய்ந்த இறைவார்த்தை மனித உள்ளம் என்னும்
நிலத்தில் விதைக்கப்படும்பொழுது, அதற்கான பலனைத் தரவில்லை
என்றால், பிரச்சினை விதையில் இல்லை, மனித உள்ளத்தில்தான்
இருக்கின்றது. இறைவார்த்தை என்னும் விதை உள்ளத்தை ஊடுருவ
அல்லது தொடுவதற்கு அனுமதித்தால் எங்கே தங்களுடைய தவறுகள்
வெளிப்பட்டு விடுமோ... எதையாவது இழக்க நேரிடுமோ... என்று
பலரும் இறைவார்த்தை தங்களுடைய உள்ளத்தைத் தொடுவதற்கு
அனுமதிப்பதே இல்லை. அதனால்தான் அவர்களால் பலன் கொடுக்க
முடியாமல் இருக்கின்றது.
இறைவார்த்தையால் தொடப்பட்டவர்கள்
இறைவார்த்தை என்ற விதையை யார் யாரெல்லாம் தங்களுடைய உள்ளத்தைத்
தொடவும் அல்லது ஊடுருவும் அனுமதிக்கவில்லையோ அவர்கள் எல்லாம்
பலனேதும் தராமல் போகின்றார்கள் என்று மேலே சிந்தித்துப்
பார்த்தோம். இப்பொழுது யார் யாரெல்லாம் இறைவார்த்தை என்ற விதை
தங்களுடைய உள்ளத்தைத் தொடவும் ஊடுருவவும் அனுமதிக்கின்றார்களோ
அவர்களுடைய வாழ்வில் அது எத்தகைய பலனைத் தருகின்றது என்று
பார்ப்போம்.
இறைவார்த்தை பலன் தராமல் போகாது (எசா 55: 10-11) என்பார் எசாயா
இறைவாக்கினர். அந்த அடிப்படையில் யார் யாரெல்லாம்
இறைவார்த்தையை தங்களுடைய உள்ளத்தைத் தொடவும் ஊடுருவவும்
அனுமதிக்கின்றார்களோ அவர்கள் நற்செய்தியில் இயேசு சொல்வது
போல், நூறு மடங்காகவும் அறுபது மடங்காகவும் முப்பது
மடங்காகவும் பலன் தருவார்கள் என்பது உறுதி. ஆகையால், நாம்
இறைவார்த்தை நம்முடைய உள்ளத்தைத் தொட அனுமதித்து, நிறைந்த பலன்
தருவோம்.
சிந்தனை
'ஆண்டவரே! நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும்
வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன'(யோவா 6:68) என்பார் பேதுரு.
ஆகையால், நாம் வாழ்வுதரும் இயேசுவின் வார்த்தைகள் நம்முடைய
உள்ளத்தைத் தொட அனுமதிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
விடுதலைப் பயணம் 20: 1-17
"உன் தந்தையையும் தாயையும் மதித்து நட"
நிகழ்வு
சில ஆண்டுகட்கு முன்னம், சவூதி அரேபியாத் தலைநகர் ரியாத்தில்
உள்ள நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த
வழக்கு, வயதான தந்தையை யார் வைத்துகொள்வது என்பது பற்றியது.
விசாரணை தொடங்கியதும், அந்த வயதான தந்தையின் மூத்த மகன் பேசத்
தொடங்கினார்: "எனக்கு இப்பொழுது என்பது வயது ஆகின்றது... கடந்த
நாற்பது ஆண்டுகளாக நான் என்னுடைய தந்தையைப் பராமரித்து
வருகிறேன். வீட்டில் மூத்தவன் என்பதாலும் இதுவரைக்கும்
நான்தான் என் தந்தையைப் பராமரித்து வந்தேன் என்பதாலும்,
இனிமேலும் நானே என்னுடைய தந்தையைப் பராமரிக்க எனக்கு
அனுமதியளிக்குமாறு நீதிபதி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்."
மூத்தமகன் தன் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொன்ன பின்பு,
இளையமகன் தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கத்
தொடங்கினார்: "என்னுடைய தந்தைக்கு என் அண்ணனும் நானும் இரண்டு
பிள்ளைகள். இருவர்க்கும் பத்து வயது வித்தியாசம். இதில்
என்னுடைய அண்ணன் கடந்த நாற்பது ஆண்டுகளாக என் தந்தையைப்
பராமரித்து வருகின்றார். இப்பொழுது அவர்க்கு வயதாகிவிட்டது
என்பதாலும், இத்தனை ஆண்டுகள் அவர் என் தந்தையைப் பராமரித்து
வந்திருக்கின்றார் என்பதாலும் இனிமேல் என் தந்தையை நான்
பராமரிப்பதற்கு எனக்கு அனுமதி தாருங்கள்."
இருதரப்புவாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஒருகணம்
ஆடிப்போய்விட்டார். "இத்தனை ஆண்டுகள் நான்தான் தந்தையைப்
பராமரித்திருக்கிறேன். அதனால் இனிமேலும் நான் அந்தக் கடமையைத்
தொடர்ந்து செய்வேன்'என்று சொல்லும் மூத்த மகனோடு தந்தையை
அனுப்பி வைப்பதா? இல்லை, 'மூத்தவரால் தந்தையை இனிமேலும்
பராமரிக்க முடியாது. அதனால் தந்தையைப் பராமரிப்பதற்கு நான்தான்
சரியான ஆள்'என்று சொல்லும் இளையமகனோடு தந்தையை அனுப்பி
வைப்பதா?" என்று நீதிபதி ஒருநிமிடம் குழம்பித் தவித்தார்.
பின்னர் ஒரு தீர்க்கமான முடிவிற்குப் பின் தீர்ப்பினை இவ்வாறு
வெளியிட்டார்:
"மூத்த மகன் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தந்தையைப் பராமரித்து
வந்திருக்கின்றார் என்பதாலும் அவருடைய மூப்பின் காரணமாக
இனிமேலும் அவரால் தந்தையைப் பராமரிக்க முடியாது என்பதாலும்
தந்தையைப் பராமரிக்கின்ற பொறுப்பினை இளைய மகனிடம் இந்த
நீதிமன்றம் ஒப்படைக்கின்றது."
இத்தீர்ப்பைக் கேட்டதும் மூத்த மகன் நீதிபதியை நோக்கி, "நான்
என்னுடைய தந்தையைப் பராமரிக்க முடியாமல் செய்ததன்மூலம் என்னை
விண்ணக வாசலிலிருந்து வெளியே தள்ளிவிட்டீர்களே!" என்று
கண்ணீர்விட்டு அழுதார். அவரோடு சேர்ந்து அந்த நீதிமன்றத்தில்
இருந்த அத்தனை பேரும் கண்ணீர்விட்டு அழுதார்கள். இதையெல்லாம்
பார்த்துவிட்டு, நீதிபதி, "என்னுடைய பணிவாழ்க்கையில்
இப்படியொரு வழக்கை நான் சந்தித்ததே இல்லை" என்றார்.
வயதான பெற்றோர்களை இங்கும் அங்கும் ஏன், முதியோர்
இல்லத்திற்கும் அனுப்பி வைக்கும் பிள்ளைகட்கு மத்தியில்,
தங்களுடைய தந்தையைப் பராமரிப்பதற்குப் போட்டிபோட்ட அந்த இரண்டு
வயதான அண்ணன் தம்பிகளின் செயல்பாடு நம்மை ஆழமாகச் சிந்திக்க
அழைக்கின்றது. இன்றைய முதல் வாசகம், தாய் தந்தையை மதித்து நட
என்று சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப்
பார்த்து நிறைவுசெய்வோம்.
பத்துக்கட்டளைகளுள் ஒன்றான 'தாய் தந்தையை மதித்து நட'என்ற
கட்டளை
ஆண்டவராகிய கடவுள், மோசேயிடம் பத்துக்கட்டளைத் தருகின்றார்.
இந்தப் பத்துக் கட்டளைகளுள் ஒன்றாக இருப்பதுதான், 'தாய்
தந்தையை மதித்து நட'என்ற கட்டளை. பழைய ஏற்பாடும் சரி, புதிய
ஏற்பாடும் சரி தாய் தந்தையை மதித்து நடக்கவேண்டியதன்
முக்கியத்துவத்தை பல இடங்களில் மிக அழுத்தம் திருத்தமாகப்
பதிவுசெய்கின்றது. அதிலும் குறிப்பாக தாய் தந்தையை
அடிக்கின்றவரும் சபிக்கின்றவரும் கொல்லப்படவேண்டும் என்றும்
(விப 21: 15,17) பெற்றோர்க்குக் கீழ்ப்படியுங்கள் (எபே 6: 1)
என்றும் சொல்கின்றது. இப்படி இருக்கையில் நாம் நம்முடைய தாய்
தந்தையை மதித்தும் அவர்கட்குக் கீழ்ப்படிந்தும் நடக்கின்றோமா
என்று சிந்தித்துப் பார்க்கவேண்டியதாக இருக்கின்றது.
தந்தையை (தாயை) மேன்மைப்படுத்துவோர் நீடுவாழ்வர்
தாய் தந்தையை மதித்து நடப்பது, அவர்களுடைய முதுமையில்
அவர்களைப் பேணிக்காப்பது பிள்ளைகளின் கடமை என்று சொல்லும்
இறைவார்த்தை, அப்படி அவர்களை மதித்து நடப்பதால் என்னென்ன ஆசி
நமக்குக் கிடைக்கின்றது என்று அழகாக எடுத்துச் சொல்கின்றது.
சீராக்கின் ஞான நூல் தந்தையரை மதிப்போர் பாவங்கட்குக் கழுவாய்
தேடிக்கொள்கிறார்கள் என்றும் அன்னையை மேன்மைப்படுத்துவோர்
செல்வம் திரட்டி வைப்போர்க்கு ஒப்போவர். இன்னும் பல ஆசிகளைப்
பெறுவர் (சீரா 3: 3-4) என்றும் எடுத்துச் சொல்கின்றது.
ஆகையால், நாம் இறைவனிடமிருந்து பல்வேறு விதமான ஆசிகளைப்
பெறுவதற்கு நம் தாய் தந்தையை மதித்து நடப்பதும் அவர்களைப்
பேணிப் பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து
வாழ்வது நல்லது.
சிந்தனை
'தந்தைக்குக் காட்டும் பரிவு மறக்கப்படாது. அது உன்
பாவங்கட்குக் கழுவாயாக இருக்கும்'(சீரா 3: 14) என்கின்றது
இறைவார்த்தை. ஆகையால், நாம் நம்முடைய பெற்றோர்களை மதித்து
நடந்து, அவர்களுடைய முதுமையில் அவர்களைப் பேணிப் பாதுகாப்போம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|