|
|
18 ஜூலை 2019 |
|
|
பொதுக்காலம் 15ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இருக்கின்றவர் நானே' என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 3: 13-20
அந்நாள்களில் மோசே கடவுளிடம், "இதோ! இஸ்ரயேல் மக்களிடம்
சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்
என்று நான் சொல்ல, 'அவர் பெயர் என்ன?' என்று அவர்கள் என்னை வினவினால்,
அவர்களுக்கு என்ன சொல்வேன்?" என்று கேட்டார்.
கடவுள் மோசேயை நோக்கி, 'இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே' என்றார்.
மேலும் அவர், "நீ இஸ்ரயேல் மக்களிடம்,
'இருக்கின்றவர் நானே'
என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்" என்றார்.
கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "நீ
இஸ்ரயேல் மக்களிடம், `உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் -
ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - என்னை
உங்களிடம் அனுப்பியுள்ளார்' என்று சொல். இதுவே என்றென்றும் என்
பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே! போ.
இஸ்ரயேலின் பெரியோர்களை ஒன்றுதிரட்டி அவர்களை நோக்கி, `உங்கள்
மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின்
கடவுள், யாக்கோபின் கடவுள் - எனக்குக் காட்சியளித்து இவ்வாறு
கூறினார்: உங்களையும், எகிப்தில் உங்களுக்கு நேரிட்டதையும்
நான் கண்ணாலே கண்டுகொண்டேன். எகிப்தின் கொடுமையிலிருந்து
கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர்
வாழும் நாட்டிற்கு - பாலும், தேனும் பொழியும் நாட்டிற்கு - உங்களை
நடத்திச் செல்வேன்' என்று அறிவிப்பாய். அவர்கள் நீ சொல்வதைக்
கேட்பர். நீயும் இஸ்ரயேலின் பெரியோர்களும் எகிப்திய மன்னனிடம்
செல்லுங்கள். அவனை
நோக்கி, 'எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களைச்
சந்தித்தார். இப்போதே நாங்கள் பாலை நிலத்தில் மூன்று நாள்
வழிப்பயணம் போக இசைவு தாரும். ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப்
பலிசெலுத்த வேண்டும்' என்று சொல்லுங்கள். என் கைவன்மையைக் கண்டாலன்றி,
எகிப்திய மன்னன் உங்களைப் போகவிடமாட்டான் என்பது எனக்குத்
தெரியும். எனவே என் கையை ஓங்குவேன். நான் செய்யப்போகும் அனைத்து
அருஞ்செயல்களாலும் எகிப்தியனைத் தண்டிப்பேன். அதற்குப் பின்
அவன் உங்களை அனுப்பிவிடுவான்."
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
105: 1,5. 8-9. 24-25. 26-27 (பல்லவி: 8a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில்
கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா.
1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி
வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும்,
அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.
பல்லவி
8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்;
ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை
நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும்
ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில்
கொண்டுள்ளார். பல்லவி
24 ஆண்டவர் தம் மக்களைப் பல்கிப் பெருகச் செய்தார்; அவர்களின்
எதிரிகளைவிட அவர்களை வலிமைமிக்கவர்கள் ஆக்கினார். 25 தம் மக்களை
வெறுக்கும்படியும், தம் அடியார்களுக்கு எதிராகச் சூழ்ச்சி
செய்யும்படியும் அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார். பல்லவி
26 அவர் தம் ஊழியராகிய மோசேயையும், தாம் தேர்ந்தெடுத்த ஆரோனையும்
அனுப்பினார். 27 அவர்கள் எகிப்தியரிடையே அவர்தம் அருஞ்செயல்களைச்
செய்தனர்; காம் நாட்டில் வியத்தகு செயல்களைச் செய்து காட்டினர்.
பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 28
அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே,
எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல்
தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30
அக்காலத்தில் இயேசு கூறியது: "பெருஞ்சுமை சுமந்து
சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு
இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன்.
ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்.
அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம்,
என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
தன்னை குறித்து கூறும் இயேசுவின் மொழிகள், நான் கனிவும், மனத்தாழ்மையும்
கொண்டவன் என்று.
இதனை தன் வாழ்வில் அவர் பலவழிகளில் நிருபித்தும் வந்திருக்கின்றார்.
கனிவு கொண்ட நெஞ்சத்தாலே, இறந்த மகனை உயிர்ப்பித்து
கொடுத்தார். உணவு பலுகச் செய்து கொடுத்தார். கனிவு கொண்ட உள்ளத்தாலேயே
ஆயனில்லாத ஆடுகள் போல இருந்த மக்களை கண்டு நீண்ட நேரம் உரையாடினார்.
மனத்தாழ்மையும் அவருடையதே. முனத்தாழ்மையிருந்தாலேயே தன்
பெற்றோருக்கு பணிந்து வாழ்ந்தார். தாயின் கட்டளையை தட்டாது
நிறைவேற்றினார். தன்னையே அவமானத்தின் சின்னமான சிலுவைச்
சாவுக்கு கையளித்தார்.
இன்று கனிவு கொண்ட செயல்கள் அருகிக் கொண்டே செல்லுவதற்கு காரணமே
மனத்தாழ்மையில்லாத நிலைப்பாடே.
மனத்தாழ்மையோடு நடந்தால் தன்னை மதிக்காது உலகம் என கருதி, தன்னிடம்
அழகு உண்டு, அறிவு உண்டு, பணம் உண்டு, அதிகாரம் எனக்குண்டு எனச்
சொல்லி பிறரை மதிக்காத நிலை. பெற்றவர்களுக்கு ஒன்றுமே தெரியாது
என சொல்லி அவர்களை புறக்கணித்தல், தன்னை யாரும் விஞ்சி விடக்கூடாது
என்பதால் மற்றவர்களின் பெயரை இழிவுபடுத்தி, மனங்களை காயப்படுத்தி
நடக்கும் போக்கு சர்வசாதரணமாக அரங்கேறி வருகின்றது.
மனத்தாழ்மையோடு மற்றவர்களை உங்களைவிட உயர்வாக கருதுங்கள், என்ற
பவுல் அடிகளாரின் வாக்கு இங்கு கவனத்தில் கொண்டு கடைபிடிக்கப்பட
வேண்டிய ஒன்று. (பிலி 2: 3)
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
விடுதலைப் பயணம் 3: 13-20
"இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே"
நிகழ்வு
செல்வந்தர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் வேலை விடயமாக
வெளியூர்க்குக் கிளம்பிப் போனார். அப்படிப் போகின்றபோது தன்னுடைய
உதவியாளரையும் தன்னோடு கூட்டிக்கொண்டு போனார். வழியில் இருட்டிவிடவே
அங்கிருந்த ஒரு விடுதியில் இரவு தங்கிவிட்டு, காலையில் கிளம்பிப்
போகலாம் என்று முடிவுசெய்தார். அதன்படி அவர் விடுதியின் உரிமையாளரிடம்
சென்று, "என்னுடைய உதவியாளரும் நானும் இந்த இரவு தங்குவதற்கு
இரண்டு அறைகள் வேண்டும்"என்று கேட்டார். அதற்கு விடுதியின் உரிமையாளர்
அவரிடம், "விடுதியில் ஒரே ஓர் அறைதான் காலியாக இருக்கின்றது.
விருப்பமிருந்தால் நீங்கள் இருவரும் ஒரே அறையில் தங்கிக்கொள்ளலாம்"
என்று சொல்ல, செல்வந்தர் வேறு வழியில்லாமல் அதற்குச் சரியென்று
சொல்லிவிட்டு, அந்த அறையில் தன்னுடைய உதவியாளரோடு தங்கினார்.
நடு இரவு இருக்கும். திடீரென்று தூக்கத்திலிருந்து
விழித்தெழுந்த செல்வந்தார் தனக்கு இருக்கும் கடன் பிரச்சினைகளை
நினைத்தும் குடும்பத்தில் பிள்ளைகளால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை
நினைத்தும் விம்மி விம்மி அழத் தொடங்கினார். நன்றாகத்
தூங்கிக்கொண்டிருந்த அந்தச் செல்வந்தரின் உதவியாளர், ஏதோவொரு
சத்தம் வருகின்றதே என்று எழுந்து பார்த்தபோது தன்னுடைய தலைவர்
விம்மி விம்மி அழுவதைப் பார்த்து அதிர்ந்து போனார். பின்னர்
அவர் தன் தலைவர் எதற்காக அழுகின்றார் என்பதைத் தெரிந்துகொண்டு,
"கடவுள் இறந்துபோய்விட்டாரோ?"அவரிடம் கேட்டார்.
"அப்படியொன்றுமில்லை. அவர் உயிரோடுதான் இருக்கின்றார்"என்றார்
செல்வந்தர்.
உதவியாளர் தொடர்ந்து பேசினார்: "கடவுள் இறக்கவில்லை. உயிரோடுதான்
இருக்கின்றார் என்று சொல்கின்றீர்கள். அப்படியானால், இத்தனை
நாட்களும் உங்களோடு இருந்து, உங்களைப் பாதுகாத்து வழிநடத்தியவர்,
இனிமேலும் உங்களோடு இருந்து, உங்களைப் பாதுகாத்து வழிநடத்துவார்தானே!
அப்படியிருக்கையில் எதற்காக நீங்கள் இப்படி அழுதுகொண்டிருக்கின்றீர்கள்?"
தன் உதவியாளர் சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்டு ஆறுதல் அடைந்த அந்த
செல்வந்தர். "ஆமாம், கடவுள் உயிரோடு இருக்கின்றபோது நான் எதற்கு
இப்படியெல்லாம் அழவேண்டும். இனிமேலும் நான் இப்படி அழமாட்டேன்"
என்று சொல்லி அமைதியானார்.
கடவுள் இறந்துபோய்விடவில்லை. அவர் உயிரோடு இருக்கின்றார், இனிமேலும்
உயிரோடு இருப்பார். எனவே, அப்படிப்பட்ட - இருக்கின்றவராக இருக்கின்ற
- கடவுள் நம்மோடு இருக்கின்றபோது நாம் எதற்கு எதை நினைத்தும்
கவலைப்படவேண்டும் என்ற உண்மையை உரக்கச் சொல்லும் இந்த நிகழ்வு
நமக்கு சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகத்தில், மோசே கடவுளிடம்,
உமது பெயரென்ன என்று கேட்கின்றபோது, அவர் "இருக்கின்றவராக இருக்கின்றவர்
நானே"என்கின்றார். இது குறித்து நாம் இப்பொழுது சிந்தித்துப்
பார்த்து நிறைவுசெய்வோம்.
தன்னை வெளிப்படுத்தும் இறைவன்
கடவுளின் மலையான ஓரேபை நோக்கி ஆடு மேய்த்துக்கொண்டு வரும்
மோசேக்குக் கடவுள் தோன்றி, அவரைத் தன்னுடைய பணிசெய்வதற்காக அழைத்தபோது,
அவர் ஆண்டவரிடம், நான் இஸ்ரயேல் மக்களிடம் சென்று, உங்கள்
மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று
சொல்ல, அவர்கள் உம்முடைய பெயரைக் கேட்டால், நான் அவர்களிடம் என்ன
சொல்வது என்று கேட்கின்றபோது, கடவுள் அவரிடம், "இருக்கின்றவராக
இருக்கின்றவர் நானே (I AM) என்று சொல்"என்கின்றார்.
ஏற்கனவே மக்கள், கடவுளை "ஆண்டவர்"(தொநூ 4:26) அழைத்திருந்தாலும்,
இங்கு அவர் தன்னுடைய பெயரை வெளிப்படுத்துவது நமது கவனத்திற்கு
உரியது. பின்னாளில் இயேசு இதைத்தான், "வாழ்வுதரும் உணவு நானே"
(யோவா 6:25), "உலகின் ஒளி நானே" (8:12), "நானே உண்மையான
திராட்சைச் செடி" (15:1) என்று எடுத்துரைக்கின்றார். ஆகையால்,
கடவுள் மோசேயிடம் சொன்னது போன்று, நம் கடவுள் இறந்தோரின்
கடவுளாக இல்லாமல், வாழ்வோரின் கடவுளாக இருப்பது மிகவும்
சிறப்பாக இருக்கின்றது.
மோசேக்கு இட்ட கட்டளை
கடவுள் தன்னை மோசேக்கு வெளிப்படுத்திய பின் அவரிடம், நீ
இஸ்ரயேல் மக்களிடம் சென்று, அவர்களுடைய துன்பங்களை நான்
கண்ணுற்றதாகவும் அவர்களை விடுவித்துப் பாலும் தேனும் பொழிகின்ற
கானான் நாட்டை வழங்கப் போவதாகவும் சொல் என்கின்றார்.
கடவுள் மோசேயிடம் கூறுகின்ற இவ்வார்த்தைகள், கடவுள் நம்முடைய
பிரச்சினைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர் அல்ல, மாறாக
அவர் அவற்றைப் போக்க வலுக்குறைந்த மனிதர்கள் வழியாகவும்கூட (1
கொரி 1: 27) செயலாற்றுகின்றார் என்ற உண்மையை மிக அழகாக
எடுத்துக்கூறுகின்றது. ஆகையால், கடவுள் நம் வழியாகச் செயல்பட
நாம் நம்மையே கடவுளின் கைகளில் ஒப்படைப்படைப்பது சிறந்தது.
சிந்தனை
"அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கின்றேன்; கலங்காதே, நான் உன்
கடவுள்" (எசா 41:10). என்பார் ஆண்டவராகிய கடவுள். ஆகையால்,
நம்மோடு இருக்கின்ற வாழும் இறைவனின் உடனிருப்பை உணர்ந்து, அவர்
நமக்குக் கொடுத்திருக்கும் பணிகளைச் சிறப்பாகச் செய்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 11: 28-30
"இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்
நிகழ்வு
பெரிய கப்பல் ஒன்று கடலில் சென்றுகொண்டிருந்து. அதில் பெரிய
பெரிய மனிதர்கெல்லாம் பயணம்செய்துகொண்டிருந்தார்கள். அதே
கப்பலில் ஓர் இளம்பெண்ணும் பயணம் செய்தாள். அவளிடம் ஒரு
(கெட்ட) பழக்கம் இருந்தது. அது என்னவெனில், சமுதாயத்தில்
உயர்ந்த இடங்களில் இருப்பவர்களிடமிருந்து ஆட்டோகிராப் வாங்கி,
அதைத் தன்னுடைய தோழிகளிடம் காட்டி, "பார்! எனக்கு எவ்வளவு
பெரிய ஆட்களையெல்லாம் தெரியும்"என்று பெருமையடித்துக்
கொள்வது. இதை அவள் பல ஆண்டுகளாகச் செய்துகொண்டு வந்தாள்.
அவள் பயணம் செய்துகொண்டிருந்தக் கப்பலில் அதிகம்
கற்றுத்தேர்ந்த பேராயர் ஒருவரும் பயணம் செய்துகொண்டு வந்தார்.
அவரிடமிருந்து அவள் எப்படியாவது ஆட்டோகிராப் வாங்கிவிட
வேண்டும் என்று முடிவுசெய்தாள். எனவே, அவள் பேராயரிடம் சென்று,
தன்னிடமிருந்த ஆட்டோகிராப் வாங்கும் புத்தகத்தை நீட்டி,
ஆட்டோகிராப் போடுமாறு மிகவும் பணிவோடு கேட்டார்.
"வழக்கமாக நான் யார்க்கும் ஆட்டோகிராப் போடுவதில்லை. நீ
வற்புறுத்திக் கேட்டதால் போடுக்கிறேன்"என்று சொல்லி
ஆட்டோகிராப் போட்டார். உடனே அந்த இளம்பெண், "பேராயர் அவர்களே!
உங்கள் பெயரோடு நீங்கள் படித்த படிப்பையும் உங்களுடைய
தகுதியையும் போட்டால், இன்னும் நன்றாக இருக்கும்"என்றார்.
"அப்படியா?"என்று கேட்டுவிட்டு, ஒருநிமிடம் யோசித்தார்.
பின்னர், அவர் அவருடைய பெயர்க்குப் பின்னால், "மிகப்பெரிய
பாவி"என்ற எழுதினார். அதைப் பார்த்துவிட்டு, அந்த இளம்பெண்
அதிர்ந்து போய், அவரிடம் கொடுத்த ஆட்டோகிராப் புத்தகத்தை
வாங்கிக்கொண்டு வேகமாக விரைந்து சென்றார்.
அந்த இளம்பெண், பேராயர் தான் படித்த படிப்பையெல்லாம்
குறிப்பிடுவார் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, அவர்
"மிகப்பெரிய பாவி" என்று குறிப்பிட்டது உண்மையில் வியப்பாக
இருந்திருக்கும். பேராயர் தன்னை மிகப்பெரிய பாவி என்று
குறிப்பிட்டார் எனில், அவரிடம் எந்தளவுக்குத் தாழ்ச்சி
இருந்திருக்கவேண்டும் என்பதை நாம் கற்பனை செய்து
பார்த்துக்கொள்ளலாம். நற்செய்தியில் இயேசு, "கனிவும்
மனத்தாழ்மையும் உள்ளவன்"என்று சொல்லிவிட்டு "என்னிடமிருந்து
கற்றுக்கொள்ளுங்கள்"என்று சொல்கின்றார். இயேசுவிடம் இருக்கும்
கனிவும் தாழ்ச்சியும் எத்தகையது? அவற்றை அவரிடமிருந்து
கற்றுக்கொள்வதால் ஒருவர்க்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன?
என்பது பற்றிச் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
கனிவும் மனத்தாழ்மையும் உள்ள இயேசு
நற்செய்தியில் இயேசு, பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே,
எல்லாரும் என்னிடம் வாருங்கள்... நான் கனிவும் மனத்தாழ்மையும்
உடையவன்... என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்... அப்பொழுது உங்கள்
உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்"என்கின்றார். இயேசு
கூறும் இவ்வார்த்தைகளில் இரண்டு முதன்மையான கருத்துகள்
இருக்கின்றன. ஒன்று, கனிவும் மனத்தாழ்மையும் உள்ள
இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதாகும்.
இரண்டு. அப்படி நாம் கற்றுக் கொள்கின்றபோது, நம்முடைய
உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்பதாகும். இந்த இரண்டு
கருத்துகளையும் இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவை மனத்தாழ்மைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்று
சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில், அவர் கடவுள் தன்மையில்
விளங்கியபோதும் தன்மையே தாழ்த்தி, மனிதராகி, சிலுவைச் சாவை
ஏற்றுக்கொண்டார். (பிலி 2: 6-11). மேலும் அவர்
செல்வராயிருந்தும் நமக்காக ஏழையானார் (2கொரி 8: 9). இவ்வாறு
இந்த உலகத்தில் யாரும் செய்யாததையும் செய்து, தாழ்ச்சிக்கு
மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். அதனால்தான்
அவரால் என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று இவ்வளவு
உறுதியாகச் சொல்ல முடிகின்றது.
இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டால் இளைப்பாறுதல் கிடைக்கும்
இயேசு, நான் கனிவும் மனத்தாழ்மையும் உடைவன் என்று சொல்லி
மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. மாறாக, என் நுகத்தை உங்கள்மேல்
ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்றும்
சொல்கின்றார். அப்படியானால், நாம் இயேசுவிடம் இருக்கும்
கனிவையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொள்வது அவசியமாகின்றது.
இன்றைக்குப் பலர்க்கு மனத்தாழ்மை என்ற ஒன்று கிடையாது.
அதனால்தான் அவரால்களால் சுமைகளை, மனக்கவலைகளை இன்ன பிறவற்றைத்
தாங்கிக்கொள்ள முடிவதில்லை. என்றைக்கு ஒருவர் இயேசுவைப் போன்று
மனத்தாழ்மையோடு இருக்கின்றாரோ அன்றைக்கு அவரால் நிச்சயம்
துன்பங்களையும் வேதனையையும் தாங்கிக்கொள்ள முடியும். அன்னை
மரியா அப்படித்தான் மனத்தாழ்மையோடு இருந்தார். அதனால் அவருடைய
வாழ்வில் வந்த வியாகுலங்களைத் தாங்கிக்கொள்ள முடிந்தது. எனவே,
நாமும் இயேசுவைப் போன்று, மரியாவைப் போன்று மனத்தாழ்மையோடு
இருக்கக் கற்றுக்கொள்வோம். அதன்மூலம் இயேசு தருகின்ற
இளைப்பாறுதலைப் பெறுவோம்.
சிந்தனை
"முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர்
அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவியார்
அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்"
(எபே 4:2) என்பார் பவுல். ஆகவே, நாம் இயேசுவிடமிருந்து
கனிவையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொண்டு, அதன்படி வாழ்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
|
|