|
|
17 ஜூலை 2019 |
|
|
பொதுக்காலம் 15ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத்
தோன்றினார்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 3: 1-6, 9-12
அந்நாள்களில் மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின்
ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப்
பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக்கொண்டு கடவுளின் மலையாகிய
ஓரேபை வந்தடைந்தார். அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின்
நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது
முட்புதர் நெருப்பால் எரிந்துகொண்டிருந்தது.
ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை. "ஏன் முட்புதர்
தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக
நான் அப்பக்கமாகச் செல்வேன்"என்று மோசே கூறிக்கொண்டார்.
அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார்.
`மோசே, மோசே' என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து
அவரை அழைக்க, அவர் "இதோ நான்"என்றார். அவர், "இங்கே அணுகி
வராதே; உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில்
நீ நின்றுகொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்"என்றார்.
மேலும் அவர், "உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள்,
ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே"என்றுரைத்தார்.
மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை
மூடிக்கொண்டார். அப்போது, இதோ! இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை
எட்டியுள்ளது.
மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன்.
எனவே இப்போதே போ; இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து
நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்.''
மோசே கடவுளிடம், "பார்வோனிடம் செல்வதற்கும், இஸ்ரயேல் மக்களை
எகிப்திலிருந்து அழைத்துப் போவதற்கும் நான் யார்?" என்றார்.
அப்போது கடவுள், "நான் உன்னோடு இருப்பேன். மேலும் இம்மக்களை
எகிப்திலிருந்து அழைத்துச் செல்லும்போது நீங்கள் இம்மலையில்
கடவுளை வழிபடுவீர்கள். நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு அடையாளம்
இதுவே"என்றுரைத்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா :103: 1-2. 3-4. 6-7 (பல்லவி: 8a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது
திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி
3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன்
நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப்
படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும்
இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி
6 ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும்
அவர் உரிமைகளை வழங்குகின்றார். 7 அவர் தம் வழிகளை மோசேக்கு
வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள்
காணும்படி செய்தார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 25 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும்
ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், விண்ணரசின்
மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு
வெளிப்படுத்தினீர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-27
அக்காலத்தில் இயேசு கூறியது: "தந்தையே, விண்ணுக்கும்
மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில்
ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக்
குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும்
என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு
எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த
வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை
அறியார்"என்று கூறினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை:
குழந்தை எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவம்
கொண்டது. யார் என்ன சொன்னாலும் அதனை தட்டாது கேட்கின்ற மனம்
கொண்டது.
இங்கு குறிப்பிடுகின்ற குழந்தைகள், இத்தகைய மனநிலையோடு
இறைவார்த்தைக்கு செவிசாய்கின்றவர்களை குறிக்கின்றது.
இறைவார்த்தையை குழந்தைப் போன்று ஏற்று செயல்படுத்த
முன்வருவோருக்கு, யாவற்றையும் வெளிப்படுத்துகின்றார்.
படித்தோம். தெரிந்தோம். என்பதாலேயே எல்லாம் தெரியும் என்று
சொல்லிவிட முடியாது.
கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு.
தாழ்ச்சியோடு நம்மை ஓப்புக் கொடுத்தாலேயே, பலவற்றையும்
தெரிந்து கொண்டேயிருக்க முடியும்.
கற்பது என்றைக்கும் முடிவு பெறாத ஓன்றே.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
மத்தேயு 11: 25-27
இறைஞானமும் தாழ்ச்சியும்
நிகழ்வு
ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்குக் கடவுளைக்
காணவேண்டும் என்று நீண்டநாள் ஆசை. எனவே, அவன் ஊர்க்கு வெளியே
இருந்த காட்டிற்குச் சென்று கடுந்தவம் புரியவதென்று
முடிவுசெய்தான்.
குறிப்பிட்ட நாளில் அவன் ஒரு துறவியைப் போன்று உடை
தரித்துக்கொண்டு, காட்டில் இருந்த ஒரு பெரிய ஆலமரத்திற்கு
அடியில் உட்கார்ந்து, கடுந்தவம் மேற்கொள்ளத் தொடங்கினான்.
நாட்கள் சென்றன. அவனால் கடவுளைக் காணமுடியவில்லை. நாட்கள்
மாதங்களாகி, ஆண்டுகள் பல ஆயின. அப்படியும் அவனால் கடவுளைக் காண
முடியவில்லை.
இந்த சமயத்தில் அந்த வழியாக ஒரு ஞானி வந்தார். அவன் அவனிடம்,
தன்னுடைய உள்ளக்குமுறலை எடுத்துச்சொல்லி, "கடவுளைக் காண்பதற்கு
நான் பல ஆண்டுகளாகக் கடுந்தவம் புரிந்துகொண்டிருக்கின்றேன்.
என்னால் கடவுளைக் காணமுடியவே இல்லை" என்றான். அவன் சொன்னதை
அமைதியாகக் கேட்டுவிட்டு, ஞானி அவனிடம் சொன்னார், "கடவுளைக்
காண்பதற்கு உன்னிடம் இருக்கின்ற 'நானை'க் கழற்றி எறிந்துவிடு,
அப்பொழுது உன்னால் கடவுளை எளிதாகக் காணமுடியும்." அவனும்
தன்னிடம் இருந்த 'நான்' என்ற அகந்தையைக் கழற்றி எறிந்துவிட்டு
தவம் மேற்கொள்ளத் தொடங்கினான். ஓரிரு நாட்களிலேயே அவன் கடவுளை
எளிதாகக் கண்டு கொண்டான்.
எவர் ஒருவர் உள்ளத்தில் தாழ்ச்சியோடு இருக்கின்றாரோ, அவரால்
கடவுளை / இறைஞானத்தை மிக எளிதாகக் கண்டுகொள்ள முடியும் என்ற
உண்மையை இந்த நிகழ்வானது மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான்
எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
குழந்தைகட்கு /குழந்தை உள்ளம் கொண்டவர்க்கு
வெளிப்படுத்தப்படும் இறைஞானம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு தந்தைக் கடவுளைப்
போற்றிப் புகழ்கின்றார். ஏனென்றால், அவர் தன்னை அல்லது ஞானத்தை
ஞானிகட்கும் அறிஞர்கட்கும் மறைத்து குழந்தைகட்கு
வெளிப்படுத்தினார் என்பதற்காக. ஏன், இறைஞானம் ஞானிகட்கும்
அறிஞர்கட்கும் மறைக்கப்பட்டு, குழந்தைகட்கு
வெளிப்படுத்தப்படுகின்றது என்பது குறித்து சிந்தித்துப்
பார்ப்பது மிகவும் இன்றியமையாததாகும்.
குழந்தைகள் இயல்பிலேயே தாழ்ச்சிக்கும் தூய்மையான
உள்ளத்திற்கும் பெயர் போனவர்கள். அதனால் அவர்களால் கடவுளையும்
இறைஞானத்தையும் மிக எளிதாகக் கண்டுகொள்ள முடிகின்றது.
இதைத்தான் ஆண்டவர் இயேசு மலைப்பொழிவில், "தூய்மையான உள்ளத்தோர்
பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்" (மத் 5:8)
என்று கூறுகின்றார். ஆகையால், இறைஞானம் நமக்கு
வெளிப்படுத்தப்படவேண்டும் என்றால் குழந்தைகளைப் போன்று
தாழ்ச்சியும் தூய்மையான உள்ளத்தையும் கொண்டவர்களாய் இருப்பது
நல்லது.
ஞானிகட்கும் அறிஞர்கட்கும் மறைக்கப்படும் இறைஞானம்
குழந்தைகள் தாழ்ச்சியோடும் தூய்மையான உள்ளத்தோடும் இருப்பதால்
அவர்கட்கு இறைஞானம் வெளிப்படுத்தப்படுகின்றது என்று மேலே
பார்த்தோம். அதே இறைஞானம் ஞானிகட்கும் அறிஞர்கட்கும்
மறைக்கப்பட்டிருப்பதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. அதுதான்
அவர்கள் உள்ளத்தில் தாழ்ச்சியோடும் தூய்மையோடும்
இல்லாதிருப்பதாகும். இதையே வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும்
என்றால், ஞானிகளும் அறிஞர்களும் தங்கட்கு எல்லாம் தெரியும்
என்ற மிதப்பில், தலைக்கனத்தில் இருப்பார்கள். அதனாலேயே
அவர்கட்கு இறைஞானம் வெளிப்படுத்தப்படாமலேயே இருக்கின்றது.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த பரிசேயர்களும் மறைநூல்
அறிஞர்களும் விருந்துகளிலும் தொழுகைக்கூடங்களிலும் முதன்மையான
இடங்களை, இருக்கைகளை விரும்பினார்கள்... சந்தைவெளிகளில் மக்கள்
தங்களை இரபி என அழைக்கவேண்டும் என்று விரும்பினார்கள். இவ்வாறு
அவர்கள் மற்றவர்களை விட தங்களைப் பெரிதாகக்
காட்டிக்கொண்டார்கள். இன்றைக்கும் ஒருசிலர் இப்படித்தான்
இருக்கின்றார்கள். அவர்கள் மற்ற எல்லாரையும் விட தாங்கள் மிக
உயர்ந்தவர்கள் என்ற ஆணவத்தோடும் அகந்தையோடும்
இருக்கின்றார்கள். அதனாலேயே அவர்கட்கு இறைஞானம் என்பது
வெளிப்படுத்தப்படாமலேயே இருக்கின்றது.
இக்கருத்தினை நீதிமொழிகள் புத்தகம் மிக அழகாக
எடுத்துக்கூறுகின்றது: "தம்மை ஞானமுள்ளவரென்று
சொல்லிக்கொள்ளும் யாரையாவது நீ பார்த்திருக்கிறாயா? மூடராவது
ஒருவேளை திருந்துவார்; ஆனால் இவர் திருந்தவேமாட்டார்." (நீமொ
226: 12) எவ்வளவு அர்த்தம் நிறைந்த வார்த்தைகள் இவை!. எவர்
ஒருவர் தனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக்கொள்கின்றாரோ
அவர்க்கு ஒன்றும் தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். மாறாக,
இயேசுவைப் போன்று மனத்தாழ்மையோடும் தூய்மையோடும் இருக்கின்றாரோ
அவர்க்கு எல்லாம் வெளிப்படுத்தப்படும் என்பது உறுதி.
சிந்தனை
'மனிதர் தலைகுனிவர்; மானிடமைந்தர் தாழ்வுறுவர்; இறுமாப்பு
கொண்டோரின் பார்வை தாழ்ச்சியடையும்' (எசா 5:15) என்பார் எசாயா
இறைவாக்கினர். ஆகவே, அழிவிற்கு இட்டுச்செல்லும் இறுமாப்போடும்
அகந்தையோடும் இல்லாமல், இறைவனின் ஆசியைப் பெற்றுத்தரும்
தாழ்ச்சியோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
விடுதலைப் பயணம் 3: 1-6, 9-12
கடவுளின் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து நடப்போம்
நிகழ்வு
பதினோறாம் நூற்றாண்டில் பவேரியாவை மூன்றாம் ஹென்றி என்ற அரசர்
ஆண்டு வந்தார். அவர்க்குத் திடீரென்று ஒரு நாள் அரச
வாழ்க்கையைத் துறந்துவிட்டு, துறவற வாழ்க்கையை மேற்கொள்ளலாம்
என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே அவர் அங்கிருந்த ரிச்சர்ட் என்ற
மடாதிபதியைச் சந்தித்துத் துறவியாக மாறப்போகும் தன்னுடைய
எண்ணத்தை வெளிப்படுத்தினார்.
"அரசே! நீங்கள் இத்தனை ஆண்டுகளும் எல்லார்மீதும் அதிகாரம்
செலுத்தி வாழ்ந்திருக்கின்றீர்கள். அப்படிப்பட்ட நீங்கள்
துறவியான பின்பு எனக்கும் சபை ஒழுங்குகட்கும் கீழ்ப்படிந்து
நடக்கவேண்டும். அது உங்களால் சாத்தியப்படாது" என்றார்
மடாதிபதி. "அப்படியெல்லாம் இல்லை. துறவற வாழ்க்கையை மேற்கொண்ட
பிறகு நான் உங்கட்கும் சபை ஒழுங்குகட்கும் நிச்சயம்
கீழ்ப்படிந்து நடப்பேன். இது உறுதி" என்றார் அரசர்.
அரசரை ஒருகணம் அன்பொழுகப் பார்த்துவிட்டு, மடாதிபதி அவரிடம்
சொன்னார்: "நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடப்பீர்கள்தானே!
அப்படியானால் நீங்கள் இப்போது வகிக்கின்ற அரசர் பதவியில்
இருந்துகொண்டு மக்களைக் கடவுட்கு ஏற்ற வழியில் வழிநடத்துங்கள்.
அதுவே போதும்." மடாதிபதி சொன்ன இவ்வார்த்தைகட்குச் சரியென்று
சொல்லிவிட்டு மூன்றாம் ஹென்றி என்ற அந்த அரசர் மக்களைக்
கடவுட்குகந்த வழியில் நடத்தி, எல்லாருடைய நன்மதிப்பையும்
பெற்று, இறையடி சேர்ந்தார். அவர் இறந்த பிறகு அவருடைய
கல்லறையில் இவ்வாறு பொறிக்கப்பட்டது: "கடவுளின் அழைப்பிற்குக்
கீழ்படிந்து நடந்த இவர், அரசராக இருந்தும் துறவியைப் போன்று
வாழ்ந்து வந்தார்."
கடவுள் ஒவ்வொருவரையும் தன்னுடைய பணியைச் செய்ய அழைக்கின்றார்.
அவருடைய அழைப்பிற்கு நாம் எந்தவிதத்தில் கீழ்ப்படிந்து
நடக்கின்றோம் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்
கூறுகின்றது. இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள்
மோசேயைத் தன்னுடைய பணிக்காக அழைக்கின்றார். அவ்வாறு
அழைக்கையில் அவர் எப்படிக் கீழ்ப்படிந்து நடந்தார் என்பதை
இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மோசேயை அழைத்த கடவுள்
முதல் வாசகத்தில், மோசே தன் மாமனாரின் ஆடுகளை ஓட்டிக்கொண்டு,
கடவுளின் மலையான ஒரேபை நோக்கிச் செல்கின்றார். அங்கு கடவுளின்
தூதர் மோசேக்கு முட்புதரின் நடுவில், தீப்பிழப்பில் தோன்றி,
'மோசே, மோசே' என்று அழைக்கின்றார்.
இங்கு நாம் ஒரு விடயத்தை நம்முடைய கவனத்தில் பதிய
வைத்துக்கொள்வது நல்லது. அது என்னவெனில், கடவுள் யாராரெல்லாம்
பணிசெய்து கொண்டிருந்தார்களோ, அவர்களைத் தன்னுடைய பணிக்காக
அழைத்தார் இன்றும் அழைக்கின்றார் என்பதாகும்.. கிதியோன்,
சாமுவேல், தாவீது, திருத்தூதர்கள்... இப்படி எல்லாருமே ஏதோவொரு
பணியைச் செய்துகையில்தான் கடவுள் அவர்களை அழைத்தார். சும்மா
இருந்தவர்களை கடவுள் தன்னுடைய பணிக்காக அழைக்கவில்லை.
அப்படியானால், கடவுளின் சிறப்பான அழைப்பினைப் பெற வேண்டும்
என்றால், நாம் நம்முடைய பணிகளைக் கருத்தூன்றிச் செய்வது
நல்லது.
தன்னுடைய இயலாமையை வெளிபடுத்திய மோசே
ஆண்டவராகிய கடவுள் மோசேயிடம், இஸ்ரயேல் மக்களின் அழுகுரலைத்
தன் காதால் கேட்டதாகவும் எகிப்தியர்கள் அவர்களைக்
கொடுமைப்படுத்துவதாகவும் சொல்லிவிட்டு, இஸ்ரயேல் மக்களை
எகிப்திலிருந்து அழைத்து வர, பார்வோனிடம் நீ இப்போதே போ
என்கின்றார். கடவுள் இவ்வாறு சொன்னதைத் தொடர்ந்து மோசே
அவரிடம், "பார்வோனிடம் செல்வதற்கும் இஸ்ரயேல் மக்களை
எகிப்திலிருந்து அழைத்துப் போவதற்கும் நான் யார்?" என்று
தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்துகின்றார்.
ஆண்டவர் அழைத்தபோது மோசே எப்படித் தன்னுடைய இயலாமையை
வெளிப்படுத்தினாரோ, அதுபோன்று 'நான் அசுத்த உதடுகளைக்
கொண்டவன்' என்று இறைவாக்கினர் எசயாவும் 'நான்
சிறுபிள்ளையாயிற்றே' என்று இறைவாக்கினர் எரேமியாவும் இன்னும்
பலரும் தங்களுடைய இயலாமையை வெளிப்படுத்தினார்கள்.
அவர்களையெல்லாம் கடவுள் எப்படித் தேற்றினாரோ, அதுபோன்று
மோசேயையும் தேற்றுகின்றார். அது குறித்துத் தொடர்ந்து
சிந்தித்துப் பார்ப்போம்.
உன்னோடு இருப்பேன் என்று மோசேக்கு நம்பிக்கையூட்டிய கடவுள்
மோசே ஆண்டவரிடம் தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தியபோது, "நான்
உன்னோடு இருப்பேன்" என்று அவர்க்கு நம்பிக்கையையும்
தைரியத்தியும் ஊட்டுகின்றார். இதிலிருந்து நாம் ஓர் உண்மையை
அறிந்துகொள்ளலாம், அது என்னவெனில், கடவுள் யார் யாரையெல்லாம்
தன்னுடைய பணிக்காக அழைக்கின்றாரோ, அவர்களைத் தனியாக
விட்டுவிடுவதில்லை. அவர்களோடு உடனிருந்து அவர்களைக்
காத்திடுவார் என்பதாகும். ஆகவே, மோசேயைப் போன்று கடவுளின்
உடனிருப்பை உணர்ந்து, நம் அவருடைய பணியைச் செய்ய முன்வருவது
சிறந்தது.
சிந்தனை
'மோசேயுடன் நான் இருந்ததுபோல் உன்னோடும் நான் இருப்பேன்.
உன்னைக் கைநெகிழ மாட்டேன்; கைவிடவும் மாட்டேன்' (யோசு 1:5)
என்று ஆண்டவர் யோசுவாவைப் பார்த்துக் கூறுவார். ஆகையால்,
கடவுளின் இம்மேலான பராமரிப்பினை உணர்ந்து, அவருடைய பணியச்
செய்ய, அவருடைய குரலுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
|
|