|
|
16 ஜூலை 2019 |
|
|
பொதுக்காலம் 15ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
'நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்' என்று
கூறி, அவள் அவனுக்கு 'மோசே' என்று பெயரிட்டாள்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 2: 1-15
அந்நாள்களில் லேவி குலத்தவர் ஒருவர் லேவி குலப் பெண்ணொருத்தியை
மணம் செய்துகொண்டார். அவள் கருவுற்று ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தாள்;
அது அழகாயிருந்தது என்று கண்டாள்; மூன்று மாதங்களாக அதனை மறைத்து
வைத்திருந்தாள்.
இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், அதனுக்காகக் கோரைப்
புல்லால் பேழை ஒன்று செய்து அதன்மீது நிலக்கீல், கீல் இவற்றைப்
பூசினாள்; குழந்தையை அதனுள் வைத்து நைல் நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில்
விட்டு வைத்தாள். அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்து கொள்ளக் குழந்தையின்
சகோதரி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள். அப்போது பார்வோனின்
மகள் நைல் நதியில் நீராட இறங்கிச் சென்றாள். அவள் தோழியரோ நைல்
நதிக்கரையில் உலாவிக் கொண்டிருந்தனர்.
அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை
எடுத்தாள்; அதைத் திறந்தபோது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள்; அது
அழுதுகொண்டிருந்தது. அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள். `'இது
எபிரேயக் குழந்தைகளுள் ஒன்று" என்றாள் அவள்.
உடனே குழந்தையின் சகோதரி பார்வோன் மகளை நோக்கி,
'உமக்குப் பதிலாகப்
பாலூட்டி இக்குழந்தையை வளர்க்க, எபிரேயச் செவிலி ஒருத்தியை
நான் சென்று அழைத்து வரட்டுமா?" என்று கேட்டாள். பார்வோனின்
மகள் அவளை நோக்கி, `'சரி. சென்று வா" என்றாள். அந்தப் பெண்
சென்று குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.
பார்வோனின் மகள் அவளை நோக்கி,
'இந்தக் குழந்தையை நீ எடுத்துச்
செல். எனக்குப் பதிலாக நீ பாலூட்டி அதனை வளர்த்திடு. உனக்குக்
கூலி கொடுப்பேன்"என்றாள்.
எனவே குழந்தையை எடுத்துச் சென்று அதனைப் பாலூட்டி வளர்த்தாள்
அப்பெண். குழந்தை வளர்ந்தபின் அவள் பார்வோனின் மகளிடம் அவனைக்
கொண்டுபோய் விட்டாள். அவள் அவனைத் தன் மகன் எனக் கொண்டாள்.
'நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்' என்று கூறி அவள் அவனுக்கு
'மோசே' என்று பெயரிட்டாள்.
அக்காலத்தில் மோசே வளர்ந்துவிட்ட போது தம் இனத்தவரிடம்
சென்றிருந்தார்; அவர்களுடைய பாரச் சுமைகளையும் பார்த்தார்;
மேலும், தம் இனத்தவனான எபிரேயன் ஒருவனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதையும்
கண்டார்; சுற்றுமுற்றும் பார்த்து, யாருமே இல்லையெனக் கண்டு,
அந்த எகிப்தியனை அடித்துக் கொன்று மணலுக்குள் புதைத்து
விட்டார்.
அடுத்த நாள் அவர் வெளியே சென்றபோது, எபிரேயர் இருவருக்கு இடையே
கைகலப்பு நடந்து கொண்டிருந்ததைக் கண்டார்; குற்றவாளியை நோக்கி,
`'உன் இனத்தவனை ஏன் அடிக்கிறாய்?" என்று கேட்டார்.
அதற்கு அவன்,
'எங்கள்மேல் உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன்
எவன்? எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா நீ இப்படிப்
பேசுகிறாய்?" என்று சொன்னான்.
இதனால் மோசே அச்சமுற்றார்;
'நடந்தது தெரிந்துவிட்டது உறுதியே"
என்று சொல்லிக் கொண்டார்! இச்செய்தியைப் பார்வோன் கேள்வியுற்றபோது
மோசேயைக் கொல்லத் தேடினான். எனவே மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி,
மிதியான் நாட்டில் குடியிருக்க வேண்டியதாயிற்று.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
69: 2. 13. 29-30. 32-33 (பல்லவி: 32b)
=================================================================================
பல்லவி: கடவுளை நாடித் தேடுவோரே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.
2 ஆழமிகு நீர்த்திரளுள் அமிழ்ந்திருக்கின்றேன்; நிற்க இடமில்லை;
நிலைகொள்ளாத நீருக்குள் ஆழ்ந்திருக்கின்றேன்; வெள்ளம் என்மீது
புரண்டோடுகின்றது. பல்லவி
13 ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம்
செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப்
பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். பல்லவி
29 எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும்
மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! 30 கடவுளின் பெயரை
நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை
மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி
32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித்
தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. 33 ஆண்டவர் ஏழைகளின்
விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை
அவர் புறக்கணிப்பதில்லை. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
திபா 95: 8b,7b
அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்
கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச்
செவிகொடுத்தால் எத்துணை நலம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தீர்ப்பு நாளில் தீருக்கும்
சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும்
தண்டனை கடினமாகவே இருக்கும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 20-24
அக்காலத்தில் இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம்
மாறவில்லை. எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார்.
`'கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ!
உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள்
தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள்
முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர்.
தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட
உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான்
உங்களுக்குச் சொல்கிறேன்.
கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை
தாழ்த்தப்படுவாய். ஏனெனில் உன்னிடம் செய்யப்பட்ட வல்ல செயல்கள்
சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அது இன்றுவரை நிலைத்திருக்குமே!
தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட உனக்குக்
கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச்
சொல்கிறேன்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
வல்லமையை காண்பவர்கள், அனுகூலத்தை அனுபவித்தவர்கள் திருந்தாத
போது அது தான் பெரிய வேதனையை கொடுக்கின்றது.
மனம் மாறாத போக்குக்கு அசட்டையான மனநிலையே காரணமாய் அமைகின்றது.
அன்புள்ள இடத்தில் கண்டிப்பு இருக்கும். இதனையே இயேசு தன்னுடைய
வாழ்வில் திருந்தாத நகர்களின் மீது கடுமையாக சாடுகின்றார்.
அவருடைய மனநிலை அவர்களின் அசட்டையான போக்குக்கு வைக்கும் ஆப்பாக
அமைகின்றது.
மயிலே மயிலே இறகு போடு என்றால், ஆகாத போது, இத்தகைய கடுமையான
சாடல் அவசியமானதே. இதனை சரியான இடத்தில், சரியாகவே காட்டி
நிற்கின்றார்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
மத்தேயு 11: 20-24
கடவுள் கொடுக்கும் வாய்ப்பினை நல்லமுறையில்
பயன்படுத்திக் கொள்வோம்
நிகழ்வு
யோர்தான் ஆற்றகரையோரம் மீனவன் ஒருவன் வசித்து வந்தான். அவன் மிகவும்
ஏழை. ஆற்றில் பிடித்து மீன்களை விற்று, அவற்றிலிருந்து
கிடைக்கின்ற வருமானத்தைக் கொண்டுதான் தன்னுடைய குடும்பத்தை நடத்திவந்தான்.
'எப்படியும் பணக்காரன் ஆகிவிடவேண்டும்" என்பதுதான் அவனுடைய
நீண்டநாள் ஆசையாக இருந்தது. அதற்காக அவன் நீண்ட நேரம் ஆற்றில்
மீன்பிடித்து வந்தான்.
ஒருநாள் அவன் இரவு முழுவதும் மீன்பிடித்துவிட்டு, அதிகாலை
வேளையானதும் தன்னுடைய குடிசைக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தான்.
வருகின்ற வழியில் அவனுடைய காலில் ஏதோ மிதிபட்டது. அது என்ன என்று
அவன் கையில் எடுத்துப்பார்த்தபோது, ஒரு துணிப்பையில் சிறுவர்கள்
விளையாடும் கோலிக்குண்டு வடிவில் உருண்டையாக ஏதோ இருந்தது. உடனே
அவன் 'ஏதோ ஒரு சிறுவன்தான் இந்த கோலிக்குண்டுப் பையை இங்கே
போட்டுவிட்டான் போலும்" என நினைத்துக்கொண்டு, பணக்காரரான
பின்பு என்ன செய்வது என்ற கனவுகளுடன் அந்தத் துணிப்பையில் இருந்ததை
ஒவ்வொன்றாக எடுத்து ஆற்றிற்குள் தூக்கி எறிந்தான்.
'பணக்காரர் ஆனதும் முதலில் ஒரு பெரிய வீடுகட்டவேண்டும்... அதற்கடுத்து
நிறைய வேலையாட்களை வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் சொகுசான
வாழ்க்கை வாழ விலையுயர்ந்த ஆடைகள், நகைகள், மதுபானங்கள்
வாங்கிக்கொள்ளவேண்டும்"என்று யோசித்துக்கொண்டே தன்னுடைய
கையில் இருந்த உருண்டையான பொருளை ஆற்றில் தூக்கிப்போட்டான். அதுவரைக்க்கும்
ஒரே இருட்டாக இருந்த வாம் சூரிய ஒளி வந்து பிரகாசமானது. அப்பொழுதுதான்
அவன் தன்னுடைய கையில் இருப்பது சாதாரண பொருள்ள, விலையுயர்ந்த
இரத்தினக் கல் என்பதை உணரத் தொடங்கினான்.
அவனுக்கு அவன்மீதே கோபம் கோபமாக வந்தது. 'பணக்காரராக
மாறுவதற்கு நல்லதொரு வாய்ப்புக் கிடைத்தபோதும், அதை இப்படி
வீணடித்துவிட்டோமே... இனிமேல் இந்த ஒற்றை வைரக்கல்லை
வைத்துக்கொண்டு என்ன செய்வது" என்று அதையும் ஆற்றுக்குள்
தூக்கிப்போட்டுவிட்டு வருத்தத்தோடு வீடுதிரும்பினான்.
மேலே சொல்லப்பட்ட இந்த நிகழ்வில் வரும் மீனவனைப் போன்றுதான்
நாமும் பலநேரங்களில் கடவுள் நமக்கு கொடுக்கும் வாய்ப்புகளை
உதறித் தள்ளிவிட்டு வாழ்வைத் தொலைத்தவர்களாக இருக்கின்றோம்.
இத்தகைய சூழ்நிலையில் இன்றைய இறைவார்த்தை, கடவுள் நமக்குக்
கொடுத்திருக்கும் வாய்ப்புகளை நல்லவிதமாய்ப்
பயன்படுத்தவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. நாம் அதைக்
குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
கடவுள் கொடுத்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளாத கொராசின்,
பெத்சாய்தா நகர மக்கள்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கொராசின், பெத்சாய்தா,
கப்பர்நாகும் போன்ற நகர்களைக் கண்டிக்கத் தொடங்குகின்றார்.
இயேசு ஏன் அந்நகர்களைக் கண்டிக்கவேண்டும் என்பது குறித்துச்
சிந்தித்துப் பார்ப்பது மிகவும் தேவையானதாக இருக்கின்றது.
கொராசின் நகரிலும் சரி, பெத்சாய்தா நகரிலும் சரி -
பெத்சாய்தாவில் பார்வையற்ற ஒருவரைக் குணப்படுத்தியதைத்
தவிர்த்து - (மாற் 8:22) வல்ல செயல்கள் செய்ததாக எங்கேயும்
சான்று இல்லை. அப்படியிருக்கும்போது அங்கு இயேசு வல்லசெயல்கள்
செய்ததாக இன்றைய நற்செய்தியில் வருகின்றது. இதை நாம் எப்படிப்
புரிந்துகொள்வது? நற்செய்தியில் இடம்பெறும் இவ்வார்த்தைகளை
புரிந்துகொள்வதற்கு நாம் யோவான் நற்செய்தி 21: 25 ல் வருகின்ற,
"இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக
எழுதினால், எழுதப்படும் நூல்களை உலக கொள்ளாது"என்ற
வார்த்தைகளையும் இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் உண்மை
விளங்கும்.
இயேசு எவ்வளவோ வல்லசெயல்களை கொராசின் நகரிலும் பெத்சாய்தா
நகரிலும் பெய்திருக்கவேண்டும். அப்படியிருந்தும் அந்நகர்களில்
இருந்தவர்கள் மனம்மாறாததால் இயேசு அவர்களைக் கண்டிக்கின்றார்.
கடவுள் கொடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாத
கப்பர்நாகும் நகர் மக்கள்
கொராசின் மற்றும் பெத்சாய்தா நகர மக்களை இயேசு ஏன் கண்டித்தார்
என்று சிந்தித்துப் பார்த்த நாம், கப்பர்நாகும் நகர மக்களை
இயேசு ஏன் கண்டித்தார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு கொராசின் மற்றும் பெத்சாய்தா நகரங்களில் செய்த வல்ல
செயல்களை விடவும் அதிகமான வல்லசெயல்களை கப்பர்நாகுமில்
செய்திருக்கவேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால்
மத்தேயு நற்செய்தி 8,9 ஆகிய இரு அதிகாரங்களில் இயேசு செய்ததாக
இடம்பெறும் எட்டு வல்ல செயல்களில் நான்கு வல்லசெயல்களை
கப்பர்நாகுமில்தான் செய்திருக்கின்றார். அப்படியானால் இயேசு
அங்கு உள்ளவர்களை எந்தளவுக்கு அன்பு செய்திருக்கவேண்டும்
என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அப்படியும் அவர்கள்
மனம்திருந்தாமல் இருந்ததால்தான் இயேசு அந்நகரைப் பார்த்து, "நீ
பாதாளம் வரைத் தாழத்தப்படுவாய்"என்கின்றார். ஆகையால், கடவுள்
நமக்குக் கொடுத்திருக்கும் வாய்ப்புகளை நல்லமுறையில்
பயன்படுத்தி அவர்க்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வது மிகவும்
இன்றியமையாதது.
சிந்தனை
'இதோ நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கின்றேன்.
யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே
சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு
அருந்துவார்கள்" (திவெ 3:20) என்பார் இயேசு. ஆகையால், நம்மைத்
தேடிவரும் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அவர் வழி நடப்போம்.
கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை நல்லமுறையில் பயன்படுத்துவோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
விடுதலைப் பயணம் 2: 1-15
மனிதர்கள் வழியாகச் செயல்படும் இறைவன்
நிகழ்வு
ஒரு கிராமத்தில் கணவராலும் பின்னர் அவருடைய பிள்ளைகளாலும்
கைவிடப்பட்ட மூதாட்டி ஒருத்தி இருந்தாள். பெரும்பாலான
நேரங்களில் அவள், 'எனக்கேன் இப்படியெல்லாம் நடக்கின்றது?" என்ற
அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.
ஒருநாள் அவளுடைய வீட்டிற்கு அவளுடைய பால்ய காலத்துத் தோழி
ஒருத்தி வந்தார். அவளிடம் அவள் தன்னுடைய நிலைமையை எடுத்துச்
சொல்லி, "இப்போதெல்லாம் எனக்குக் கடவுள்மீது நம்பிக்கையே
போய்விட்டது. அவர் மட்டும் இருந்திருந்தால், நான் ஏன் இவ்வளவு
கஷ்டப்படவேண்டும்?"என்று புலம்பித் தள்ளினாள். உடனே அவளுடைய
தோழி அவளிடம், "இனிமேலும் நீ இப்படியெல்லாம் அழுது புலம்பிக்
கொண்டிராதே! கடவுளிடம் நீ உருக்கமாக மன்றாடு! அவர் உன்னைத்
தொடவேண்டும் என்று மனம் உருகி வேண்டு. நிச்சயம் அவர் உன்னைத்
தொடுவார்"என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
அன்றைய நாளின் இரவு வேளையில் அந்த மூதாட்டி, முழந்தாள்
படியிட்டு இறைவனிடம் மன்றாடத் தொடங்கினாள்; "ஆண்டவரே! என்மேல்
இறங்கிவாரும்! என்னைத் தொட்டு உம்முடைய வல்லமையால் என்னை
நிரம்பும்!"என்று உருக்கமாக மன்றாடினாள். அவள் இவ்வாறு
மன்றாடத் தொடங்கிய சிறிதுநேரத்தில் ஒரு கை அவளைத் தொட்டது.
உடனே அவள் மகிழ்ச்சியில், "ஆண்டவர் என்னைத் தொட்டுவிட்டார்...
ஆண்டவர் என்னைத் தொட்டுவிட்டார்"என்று துள்ளிக் குதிக்கத்
தொடங்கினாள். இச்செய்தியை தன்னுடைய தோழியிடம் சொல்வதற்கு
மறுநாள்வரை அவள் காத்திருந்தாள்.
மறுநாள் பிறந்தது. மூதாட்டி தன் தோழியின் வருகைக்காக ஆவலோடு
காத்துக்கொண்டிருந்தாள். அவளுடைய தோழி வந்ததும், அவளிடம்,
"நேற்று இரவு நீ சொன்னது போன்று நான் இறைவனிடம் வேண்டினேன்.
இறைவனும் என்னைத் தொட்டார்"என்றாள். அவளோடைய தோழியோ அவளை
ஆச்சரியமாகப் பார்த்தாள். மூதாட்டி தொடர்ந்து பேசினாள்:
"நேற்று இரவு நான் இறைவனிடம் வேண்டும்போது அவர் என்னைத்
தொட்டார் என்று சொன்னேன் அல்லவா... அவர் என்னைத் தொடும்போது நீ
என்னைத் தொடுவதுபோன்று அவ்வளவு வாஞ்சையாக இருந்தது.
அந்த மூதாட்டி இவ்வாறு சொல்லிமுடித்ததும், அவளுடைய தோழி
அவளிடம், "உண்மையில் நடந்ததுதான் இதுதான். நேற்று இரவு நீ
இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கும்போது உன்னைத் தொட்டது வேறு
யாரு நான்தான்"என்றாள். "நான்தான்"என்று அவளுடைய தோழி
சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போன அந்த மூதாட்டியிடம், அவளுடைய
தோழி, "பின்னே! இறைவன் உன்னைத் தொடுவார் என்றால்,
வானத்திலிருந்து தன் கைகளை நீட்டியா தொடுவார்? யாருடைய கை
பக்கத்தில் இருக்கின்றதோ, அந்தக் கையின் வழியாகத் தொடுவார்"
என்றார். இதற்குப் பிறகு அந்த மூதாட்டி, கடவுள் தன்னை விட்டு
விலகவில்லை... அவர் தன்னோடுதான் இருக்கின்றார்" என்ற உண்மையை
உணர்ந்துகொள்ளத் தொடங்குகின்றாள்.
கடவுள் தன் மக்களைக் கைவிட்டு விடுவதில்லை. அவர் மனிதர்கள்
வழியாகச் செயல்பட்டு அவர்களை மீட்கின்றார் என்ற உண்மையை இந்த
நிகழ்வானது நமக்கு எடுத்துரைக்கின்றது. இன்றைய முதல்
வாசகத்தில் எபிரேயர்கள் பார்வோனின் ஆட்சியில் சொல்லொண்ணா துயரை
அனுபவித்தபோது, அவர்களை விடுவிக்க கடவுள் மோசேயை அவர்கள்
மத்தியில் அனுப்புகின்றார். அது குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்ப்போம்.
எபிரேயர்களின் ஆண் குழந்தைகள் கொல்லப்படுதலும் மோசே
காப்பாற்றப்படுதலும்
பார்வோன் மன்னன் எபிரேயர்களின் வளர்ச்சியைப் பொறுக்க
முடியாமல், அவர்களை அழிக்க என்னவெல்லாமோ செய்து பார்த்தான்.
எதுவும் முடியாமல் போகவே, இறுதியில் அவர்களின் ஆண் குழந்தைகளை
நைல் நதியில் தூக்கிப் போடச் சொன்னான். இப்படி எல்லா எபிரேயக்
குழந்தைகள் நைல் நதியில் தூக்கிப்போடப்படும்போது அம்ராம் -
யோக்கபேது (விப 6:20) தம்பதியரின் மகனான மோசே மட்டும்
அதிலிருந்து அதிசயமாகக் காப்பாற்றப்படுகின்றார். காரணம் மோசே
மற்ற குழந்தைகள் போன்று கிடையாது. அவர் வித்தியாசமானவர் (எபி
11: 23). அவர்க்கென்று ஒரு திட்டத்தை இறைவன் வைத்திருந்ததால்
இறைவன் அவரை பார்வோனின் கையிலிருந்து காப்பாற்றுகின்றார்.
இஸ்ரயேல் மக்களை விடுவிக்கப்பிறந்த மோசே எப்படிப்பட்டவர்
எபிரேயர்களின் எல்லாக் குழந்தைகளும் நைல் நதியில் தூக்கி
வீசப்பட்டபோது, மோசே மட்டும் அதிசயமாகக் காப்பாற்றப்பட்டார்
என்று மேலே பார்த்தோம். இப்படி அதிசயமாகக் காப்பாற்றப்பட்ட
மோசே எப்படிப்பட்டவர் என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துச்
சொல்கின்றது. மோசே வளர்ந்து பெரியவனானபின் தன் மக்களின்
நிலையைக் காணச் சென்றபோது, தன் இனத்தானாகிய எபிரேயன் ஒருவனை
எகிப்தியன் ஒருவன் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனை
அடித்துக் கொள்கின்றார்.
இதைக் குறித்து விவிலிய அறிஞர்கள் சொல்லும்போது, மோசே தன்
இனத்தவனை அந்த எகிப்தினை அடித்தான் என்பதற்காக அடிக்கவில்லை.
மாறாக வறியவன் ஒருவனை வலிமையானவன் ஒருவன் அடித்தான் என்பதற்காக
அடித்தார் என்று சொல்வார்கள். இதன்மூலம் மோசே மக்கள்மீது
அதுவும் குறிப்பாக வறியவர்கள்மீது மிகுந்த இரக்கம் கொண்டவர்
என்பதைப் புரிந்துகொள்ளலாம். எண்ணிக்கை நூலும் கூட, "பூவுலகில்
உள்ள அனைத்து மாந்தரிலும் மோசே சந்தமுள்ள மாந்தராய்த்
திகழ்ந்தார்"(எண் 12: 3) என்றுதான் எடுத்துச் சொல்கின்றது.
இவ்வாறு, கடவுள் தன் மக்களைக் கைவிட்டுவிடுவதில்லை. அவர்களை
வழிநடத்த தன் தூதர்களை அனுப்புவார் என்பதை மோசேயின் வழியாக
நாம் அறிந்துகொள்ளலாம்.
சிந்தனை
'ஆண்டவரே! உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை" (திபா
9:10). என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நம்மைக்
கைவிடாமல், தன் தூதர்கள் வழியாக நம்மைக் காக்கும் இறைவனுக்கு
உண்மையுள்ளவர்களாக இருப்போம். அதவழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|