|
|
13 ஜூலை 2019 |
|
|
பொதுக்காலம் 14ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். இந்த
நாட்டிலிருந்து அவர் உங்களை அழைத்துச் செல்வார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம்
49: 29-32; 50: 15-26a
அந்நாள்களில் யாக்கோபு தம் புதல்வர்களுக்குக் கட்டளையிட்டுக்
கூறியது: "இதோ நான் என் இனத்தவரோடு சேர்க்கப்பட இருக்கிறேன்.
என்னை என் தந்தையருடன் இத்தியனான எப்ரோனின் நிலத்திலுள்ள
குகையில் அடக்கம் செய்யுங்கள். அது கானான் நாட்டில் மம்ரே பகுதிக்கு
அருகேயுள்ள மக்பேலாவின் நிலத்தில் அமைந்துள்ளது. ஆபிரகாம் இத்தியனான
எப்ரோனிடமிருந்து அந்த நிலத்தை கல்லறை நிலத்திற்கென விலைக்கு
வாங்கினார். அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவி சாராவையும் அடக்கம்
செய்தனர்; அங்கு ஈசாக்கையும் அவர் மனைவி ரெபேக்காவையும் அடக்கம்
செய்தனர்; அங்கேதான் நானும் லேயாவை அடக்கம் செய்துள்ளேன். அந்நிலமும்
அக்கல்லறையும் இத்தியரிடமிருந்து விலைக்கு வாங்கப்பெற்றவை."
யாக்கோபு தம் புதல்வர்களுக்குக் கட்டளைகளை வழங்கி முடித்தபின்,
தம் கால்களைப் படுக்கையினுள் மடக்கிக்கொண்டு உயிர் நீத்து, தம்
இனத்தாருடன் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
அப்பொழுது, யோசேப்பின் சகோதரர் தங்கள் தந்தை இறந்துவிட்டதைக்
கண்டு, "யோசேப்பு நாம் அவருக்குச் செய்த அனைத்துத் தீமைகளையும்
கருதி, இப்பொழுது நம்மை வெறுத்து உறுதியாகப் பழிவாங்குவார்"
என்று எண்ணினர்.
எனவே அவர்கள் யோசேப்புக்கு இவ்வாறு செய்தி அனுப்பினர்: "உம்
தந்தை இறப்பதற்குமுன்,
'உன் சகோதரர் உனக்குத் தீங்கிழைத்ததன்
மூலம் உண்டான குற்றப்பழியையும், பாவத்தையும் மன்னித்துவிடு என்று
யோசேப்புக்குச் சொல்லுங்கள்'என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.
ஆகவே, இப்பொழுது உம் தந்தையின் கடவுளுடைய அடியார்களாகிய எங்களின்
குற்றப்பழியை மன்னித்தருளும். "அவர்கள் இதைத் தம்மிடம் அறிவித்தபோது
யோசேப்பு அழுதார். அவர் சகோதரரும் அழுது அவர்முன் தாள் பணிந்து,
`நாங்கள் உம் அடிமைகள்'என்றனர்.
யோசேப்பு அவர்களிடம், "அஞ்சாதீர்கள்; நான் கடவுளுக்கு இணையானவனா?
நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால் கடவுள் அதை
இன்று நடப்பதுபோல், திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு
நன்மையாக மாற்றிவிட்டார். ஆகவே இப்பொழுது அஞ்சவேண்டாம். உங்களையும்
உங்கள் குழந்தைகளையும் நான் பேணிக் காப்பேன்" என்றார்.
இப்படியாக அவர் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்; அவர்களுடன் இதமாகப்
பேசிவந்தார். யோசேப்பும் அவர் தந்தையின் வீட்டாரும் எகிப்தில்
குடியிருந்தனர். யோசேப்பு நூற்றுப் பத்து ஆண்டுகள் உயிர்
வாழ்ந்தார். எப்ராயிமின் மூன்றாம் தலைமுறையைப் பார்க்கும் வரையிலும்
மனாசேயின் மகன் மாக்கிரின் குழந்தைகள் தம் மடியில் விளையாடும்
வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார்.
யோசேப்பு தம் சகோதரரிடம், "நான் சாகும் வேளை வந்துவிட்டது. ஆனால்
கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். ஆபிரகாம்,
ஈசாக்கு, யாக்கோபுக்குத் தாம் கொடுப்பதாக வாக்களித்த
நாட்டிற்கு இந்த நாட்டிலிருந்து அவர் உங்களை அழைத்துச்
செல்வார்"என்றார்.
மீண்டும் யோசேப்பு, "கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக
வருவார். அப்பொழுது நீங்கள் என் எலும்புகளை இங்கிருந்து எடுத்துச்
செல்லுங்கள்"என்று சொல்லி, இஸ்ரயேல் புதல்வரிடமிருந்து உறுதிமொழி
பெற்றுக்கொண்டார். யோசேப்பு தம் நூற்றுப்பத்தாம் வயதில் இறந்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
105: 1-2. 3-4. 6-7 (பல்லவி: திபா 69: 32)
=================================================================================
பல்லவி: கடவுளை நாடித் தேடுவோரே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.
1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி
வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம்
வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! பல்லவி
3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத்
தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! 4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும்
தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! பல்லவி
6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட
யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின்
நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
1 பேது 4: 14
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது
வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின்
மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 24-33
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: "சீடர்
குருவை விடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரை விடப் பெரியவர்
அல்ல. சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப்
போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செபூல்
என அழைப்பவர்கள் வீட்டாரைப் பற்றி இன்னும் தரக் குறைவாகப் பேச
மாட்டார்களா? எனவே, அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில் வெளிப்
படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும்
ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில்
கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல் தளத்திலிருந்து
அறிவியுங்கள்.
ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச
வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே
அஞ்சுங்கள். காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா?
எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித்
தரையில் விழாது. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது.
சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.
மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும்
என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள்
முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற
என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
மத்தேயு 10: 24-34
கடவுட்கு அஞ்சுகிறவர் வேறு யார்க்கும் அஞ்ச வேண்டியதில்லை
நிகழ்வு
ஒரு தாய் இருந்தார். அவர்க்கு பத்து வயதில் ஒரு மகனும் ஏழு வயதில்
ஒரு மகனும் என இரண்டு மகன்கள் இருந்தார்கள். இருவரும் பயங்கர
சேட்டைக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் இருவரையும் நல்வழிப்படுத்த
அந்தத் தாய் நினைத்தார். எனவே அவர் தன் இரண்டு மகன்களையும்
கூட்டிக்கொண்டு பங்குத்தந்தையிடம் சென்றார். "சாமி இவர்கள் இருவரும்
என்னுடைய மகன்கள்... இவர்க்கு இருவருமே பயங்கர சேட்டைக்காரர்களாக
இருக்கிறார்கள். ஆதலால், இவர்கள் இருவருடைய உள்ளத்திலும் நீங்கள்
இறையச்சத்தை - தெய்வ பயத்தை - ஊட்டிவிட்டால் இருவரும் நல்ல
பிள்ளைகளாகிவிடுவார்கள்" என்றார்.
அந்தத் தாய் சொன்னதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, பங்குத்தந்தை
அவர்கள் இருவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசத்தொடங்கினார்.
முதலில் அவர் அந்தத் தாயின் இளைய மகனைக் கூப்பிட்டு அவனிடம், "கடவுள்
எங்கே இருக்கிறார்?" என்று கேட்டார். அவன் திருதிருவென
முழித்தான். உடனே பங்குத்தந்தை, தான் கேட்ட கேள்வி புரியாமல்தான்
இவன் இப்படித் திருதிருவென முழிக்கிறான் என நினைத்துக்கொண்டு
அவனிடம் இன்னும் சத்தமாக அதே கேள்வியைக் கேட்டார். அவனுக்கு
பயமாய்ப் போய்விட்டது.
அடுத்த நொடி அவன் பங்குத்தந்தையிடமிருந்து தன் அண்ணனிடம் ஓடிவந்தான்.
"அண்ணே! கடவுளை நாம்தான் திருடி வைத்திருக்கிறோம் என்பதுபோல்
பங்குத்தந்தை 'கடவுள் எங்கே இருக்கிறார்?'என்று கேட்கிறார்"
என்று சொல்லி அழத் தொடங்கினான். அவன் அழுவதைப் பார்த்துவிட்டு
மூத்தவனும் அழத் தொடங்கினான். இருவரையும் அவனுடைய தாய் வந்து
தேற்றிய பிறகுதான் அமைதியானார்கள். இதற்குப் பின்பு அவர்கள்
கடவுள் என்ற வார்த்தையைக் கேட்டதும் அச்சம் கொள்ளத் தொடங்கினார்கள்.
அது மட்டுமல்லாமல் சேட்டைகள் செய்வதையும் குறைத்துக் கொண்டார்கள்.
வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், இறையச்சம் -
தெய்வபயம் - நம்முடைய வாழ்விற்கு எந்தளவிற்கு இன்றியமையாதது என்பதை
மிக அழகாக எடுத்துக் கூறுகிறது. நற்செய்தி வாசகத்தில் இயேசு இறையச்சத்தின்
தேவையை மிக அழகாக எடுத்துக் கூறுகிறார். நாம் அதைக் குறித்து
இப்போது சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
அர்த்தமின்றி விமர்சிப்போர்க்கு அஞ்சவேண்டாம்
இயேசு தன் சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்றார். அவ்வாறு
அனுப்புகின்ற போது அவர்கட்குச் சொல்லும் அறிவுரைதான் இன்றைய
நற்செய்தி வாசகமாக அமைந்திருக்கின்றது. இன்றைய நற்செய்தியில்
யார் யார்க்கு அஞ்சவேண்டாம் என்பதையும் யார்க்கு அஞ்சவேண்டும்
என்பதையும் குறித்துப் பேசுகின்றார். முதலில் நாம் யார்க்கு
அஞ்ச வேண்டாம் என்பதைக் குறித்துச் சிந்தித்துப்
பார்த்துவிட்டு, யார்க்கு அஞ்ச வேண்டும் என்பதைக் குறித்து
சிந்தித்துப் பார்ப்போம். இயேசு தன் சீடர்களிடம், அர்த்தமின்றி
விமர்சிப்போரைக் கண்டு அஞ்சவேண்டாம் என்று கூறுகின்றார்.
ஏனென்றால், ஒருவருடைய வளர்ச்சியைக் கண்டு விமர்சிப்பவர்கள்
எப்படியும் விமர்சிப்பார்கள்... தன்னையும் அவர்கள்
அப்படித்தான் விமர்சித்திருக்கிறார்கள்... அதனால் அவர்களைக்
குறித்து அஞ்சவேண்டாம் என்று இயேசு சீடர்களிடம் கூறுகின்றார்.
உயிரைக் கொல்பவர்க்கு அஞ்சவேண்டாம்
இயேசு தன் சீடர்களிடம் அஞ்சவேண்டாம் என்று சொல்கின்ற இரண்டாவது
வகையினர், உயிரைக் கொல்பவர்கள் ஆவார். இவர்களைக் குறித்து நாம்
ஏன் அஞ்சவேண்டாம் என்றால், இவர்களால் நம்மிடமிருந்து உயிரை
மட்டுமே பறிக்க முடியும். வேறெதுவும் செய்யமுடியாது. உயிரை விட
ஆன்மா என்ற ஒன்று இருக்கின்றது. அவர்களால் அதை ஒன்றும் செய்ய
முடியாது என்பதுதான் உண்மை. எத்தனையோ புனிதர்கள் குறிப்பாக
மரிய கொரற்றி போன்றோர் உடலைவிட ஆன்மா பெரிது என நினைத்து சாவை
ஏற்றார்கள். ஆகையால் நாம் உடலைக் கொல்பவர்க்கு அஞ்ச வேண்டிய
தேவையில்லை.
ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போம்
அர்த்தமின்றி விமர்சிப்போர்க்கும் உயிரைக் கொல்வோர்க்கும்
அஞ்சவேண்டாம் என்று சொன்ன இயேசு, இறுதியில் ஆண்டவர்க்கு
அஞ்சவேண்டும் என்று சொல்கிறார். காரணம் ஆண்டவர்க்கு மட்டுமே
எல்லா அதிகாரமும் இருக்கிறது. அவரால் மட்டுமே உடலோடு சேர்த்து
ஆன்மாவையும் நரகத்தில் தள்ள முடியும். அதனாலேயே இயேசு அவ்வாறு
சொல்கிறார். யோபு புத்தகத்தில் இவ்வாறு வாசிக்கின்றோம்:
"அவர்களின் ஆன்மாவைக் குழியிலிருந்தும் உயிரை வாளின்
அழிவிலிருந்தும் காக்கின்றார்." (யோபு 33:18) உண்மைதான்
கடவுளால் மட்டுமே நம் ஆன்மாவைக் குழியில் தள்ளவும் அதிலிருந்து
காக்கவும் முடியும். ஆகையால் அப்படிப்பட்டவர்க்கு அஞ்சி
வாழ்வது மிகவும் இன்றியமையாதது.
சிந்தனை
'கடவுட்கு அஞ்சுகிறவர் வேறு யார்க்கும் அஞ்ச வேண்டியதில்லை'
என்பார் மார்டின் லூதர். எனவே நம்முடைய வாழ்வின் ஆதார
சுருதியாக இருக்கும் ஆண்டவர்க்கு அஞ்சி, அவர் வழி நடப்போம்.
அதன் வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
தொடக்க நூல் 49: 29-32; 50: 15-26
மனதார மன்னிப்போம்
நிகழ்வு
ஒரு சமயம் திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் வத்திகானில் உள்ள
தனது இல்லத்தின் பால்கனியிலிருந்து மக்கட்கு ஆசி
வழங்கிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவரைக் கொல்வதற்காக
மக்களோடு மக்களாக வந்திருந்த கயவன் ஒருவன் தன்னுடைய கையில்
வைத்திருந்த துப்பாக்கியால் திருத்தந்தை அவர்களைக்
குறிபார்த்துச் சுடத் தொடங்கினான். ஆனால், அவன் வைத்த குறி
கொஞ்சம் பிசகிவிட திருத்தந்தை எப்படியோ அதிலிருந்து
தப்பித்தார்.
இதைத் தொடர்ந்து திருத்தந்தையைக் காவல் காத்துக்கொண்டிருந்த
காவலாளிகள், திருத்தந்தையைச் சுடமுயன்ற அந்தக் கயவனை
ஓடிச்சென்று பிடித்தார்கள். பின்னர் அவனைச் சிறையில் அடைத்துக்
காவல்காத்து வந்தார்கள். இரண்டு மூன்று நாட்கள் கழித்து
திருத்தந்தை அவர்கள் தன்னைக் கொல்ல முயன்றவனைப் பார்க்கச்
சென்றார். அவனோ திருத்தந்தையின் காலில் விழுந்து, தன்னை மனதார
மன்னிக்குமாறு கேட்டான். திருத்தந்தையும் அவனை மனதார
மன்னித்தார்.
பின்னர் அவர் அவனிடம் சிரித்துக்கொண்டே, "நீ நான் இறையாசி
வழங்கிய கூட்டத்தில் ஒருவனாக இருந்ததால்தான் உன்னால் என்னைக்
குறிபார்த்துச் சுட முடியவில்லை... நான் வழங்கிய இறையாசி
உன்னைச் சரியாகக் குறிபார்க்க விடாமல் செய்திருக்கும்.
அடுத்தமுறை நீ என்னைச் சுட நினைத்தால், தனியாக இருந்துகொண்டு
என்னைச் சுட முயற்சி செய். அப்பொழுது உன்னால் என்னைச் சரியாகக்
குறிவைத்துச் சுட முடியும்" என்றார். தொடர்ந்து அவர் அவனிடம்,
"நீ என்னைச் சுடமுயன்ற செய்தி உன் வீட்டில் இருக்கின்ற
எல்லார்க்கும் எப்படியும் தெரிந்திருக்கும். அவர்கள் அதை
நினைத்து மிகவும் வருந்திக்கொண்டிருப்பார்கள். அதனால் நீ
உடனடியாக வீட்டிற்குச் சென்று, 'திருத்தந்தை என்னை மனதார
மன்னித்துவிட்டார் எனச் சொல்" என்று சொல்லி அவனை அனுப்பி
வைத்தார். அவனும் தன்னுடைய வீட்டிற்குச் சென்று, திருத்தந்தை
தன்னிடம் கூறியவற்றை அவர்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களுடைய
வருத்தத்தைப் போக்கினான்.
தன்னைக் கொள்ள முயன்றவனையும் திருத்தந்தை மனதார மன்னித்த
இச்செய்தி அந்நாட்களில் பத்திரிகைகளில் மிகவும் பரபரப்பாகப்
பேசப்பட்டது.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் திருத்தந்தை எப்படி தன்னைக்
கொல்லமுயன்றவனை மனதார மன்னித்தாரோ அப்படியே இன்றைய முதல்
வாசகத்தில் தன்னைக் கொல்ல முயன்ற தன் சகோதரர்களை யோசேப்பு
மனதார மன்னிக்கின்றார். அது குறித்து இப்பொழுது சிந்தித்துப்
பார்த்து நிறைவுசெய்வோம்.
குற்றப்பழியோடு இருந்தவர்களை மனதார மன்னித்த யோசேப்பு
முதல் வாசகத்தில், யாக்கோபு இறந்ததும் அவருடைய பத்துப்
புதல்வர்களும், தாங்கள் யோசேப்புக்கு எதிராகத் தவறு செய்ததற்கு
அவன் தங்களைப் பழி வாங்குவான் என்று எண்ணத்
தொடங்குகின்றார்கள். அது மட்டுமல்லாமல், யாக்கோபு இறப்பதற்கு
முன்னம், தாங்கள் செய்த தவறுகளை எல்லாம் யோசேப்பு
மன்னிக்கவேண்டும் என்றும் அவர் அவனிடம் கூறச் சொன்னதாகச்
சொல்கின்றார்கள். இதைக் கேட்டு யோசேப்பு கண்ணீர் விட்டு
அழுகின்றார்.
யோசேப்பு தன் சகோதரர்கள் செய்த குற்றத்தை ஏற்கனவே
மன்னித்திருந்தார் (தொநூ 45: 5). அப்படியிருந்தும் அவர்கள் அதை
நம்பமால், தன் சகோதரன் தங்களை முழுமையாக மன்னிக்கவில்லை என்ற
குற்றவுணர்வோடே இருக்கின்றார்கள். அதனால்தான் அவர்கள்
தங்களுடைய தந்தையின் இறப்பிற்குப் பின் யோசேப்பு தங்களைப்
பழிவாங்குவார் என்று நினைக்கின்றார்கள். இந்நிலையில்தான்
யோசேப்பு அவர்களை மனதார மன்னித்து, அவர்களை அவர்களுடைய
குற்றவுணர்விலிருந்து வெளியே வரச் செய்கின்றார்.
தீமையில் நன்மை இருப்பதாக எடுத்துச் சொன்ன யோசேப்பு
யோசேப்பை அவர்களுடைய சகோதரர்கள் பத்துப் பேரும் சேர்ந்து கொல்ல
முயன்றார்கள். ஆனால், அவர்களுள் ஒருவன், அவனைக்
கொல்லவேண்டும்... விற்றுவிடுவோம் என்று சொல்ல, அதுபோன்றே
செய்தார்கள். இது ஒருபுறத்தில் மிகப்பெரிய குற்றமாக
இருந்தாலும், இதன்மூலம் கடவுள் யோசேப்பை எகிப்து நாட்டின்
ஆளுநராக உயர்த்தி, பஞ்சக் காலத்தில் அவர்கட்கு உணவிடுமாறு
செய்கின்றார். இதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் யோசேப்பு தன்
சகோதரர்களிடம், "நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள்.
ஆனால், கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு
காக்கும்பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார்" என்று
கூறுகின்றார்.
ஆகையால், நம்முடைய வாழ்க்கையில் நடக்கின்ற சில எதிர்பாராத
சம்பவங்களை நினைத்துக் குழம்பிக் கொண்டிருக்காமல், அதைத்
இறைத்திருவுளமென ஏற்று, அவருடைய திருவுளத்திற்குப் பணிந்து
நடக்கக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
'ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்கவேண்டும்
(கொலோ 3:13) என்பார் பவுல். ஆகையால், யோசேப்பு தன் சகோதரர்களை
மன்னித்து போல, ஆண்டவர் நம்மை மன்னித்தது போல், நாமும் ஒருவர்
மற்றவரை மன்னிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|