|
|
12 ஜூலை 2019 |
|
|
பொதுக்காலம் 14ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!
தொடக்க நூலிலிருந்து வாசகம் 46: 1-7,28-30
அந்நாள்களில் இஸ்ரயேல் தமக்கிருந்த யாவற்றையும்
சேர்த்துக்கொண்டு புறப்பட்டு, பெயேர்செபாவைச் சென்றடைந்தார்.
அவ்விடத்தில் தம் தந்தை ஈசாக்கின் கடவுளுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்தார்.
அன்றிரவு கடவுள் இஸ்ரயேலுக்குக் காட்சி அளித்து,
'யாக்கோபு!
யாக்கோபு!' என்று அழைத்தார்.
அவர், 'இதோ அடியேன்' என்றார். கடவுள், "உன் தந்தையின் கடவுளான
இறைவன் நானே. எகிப்திற்குச் செல்ல நீ அஞ்சவேண்டாம். அங்கே உன்னைப்
பெரிய இனமாக வளரச் செய்வேன். நானும் உன்னோடு எகிப்திற்கு வருவேன்.
உன்னை நான் அங்கிருந்து மீண்டும் அழைத்து வருவேன். யோசேப்பு தன்
கையாலே உன் கண்களை மூடுவான்"என்றார்.
யாக்கோபு பெயேர்செபாவை விட்டுப் புறப்பட்டார். இஸ்ரயேலின் புதல்வர்கள்
தம் தந்தையாகிய யாக்கோபையும் தங்கள் பிள்ளைகளையும் மனைவியரையும்
அவருக்குப் பார்வோன் அனுப்பியிருந்த வண்டிகளில் ஏற்றிக்கொண்டனர்.
கானான் நாட்டில் அவர்கள் சேர்த்திருந்த ஆடு மாடுகளையும் சொத்துகளையும்
சேகரித்துக் கொண்டனர்.
இவ்வாறு யாக்கோபு தம் வழிமரபினர் அனைவரோடும் எகிப்திற்குப்
போனார். தம் புதல்வரையும் அவர்கள் புதல்வரையும் தம் புதல்வியரையும்
புதல்வரின் புதல்வியரையும் தம் வழிமரபினர் அனைவரையும் அவர் தம்மோடு
எகிப்திற்கு அழைத்துக்கொண்டு சென்றார். கோசேன் பகுதியில்
யோசேப்பு தம்மை வந்து சந்திக்குமாறு யாக்கோபு யூதாவைத் தமக்குமுன்
அனுப்பியிருந்தார். அவர்கள் கோசேன் வந்து சேர்ந்தார்கள்.
யோசேப்பு தம் தேரைப் பூட்டிக்கொண்டு தம் தந்தை இஸ்ரயேலைச் சந்திக்கச்
சென்றார். யோசேப்பு தம் தந்தையைக் கண்டவுடன் அவரை அரவணைத்து
அவர் தோளில் சாய்ந்துகொண்டு வெகுநேரம் அழுதார். அப்பொழுது, இஸ்ரயேல்
யோசேப்பிடம், "இப்பொழுது நான் சாகத் தயார். நீ உயிரோடுதான் இருக்கிறாய்!
உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!" என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா:
37: 3-4. 18-19. 27-28. 39-40 (பல்லவி:
39a)
=================================================================================
பல்லவி: நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது.
3 ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத்
தக்கவராய் வாழ். 4 ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து
விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். பல்லவி
18 சான்றோரின் வாழ்நாள்களை ஆண்டவர் அறிவார்; அவர்கள் உரிமைச்
சொத்து என்றும் நிலைத்திருக்கும். 19 கேடு காலத்தில் அவர்கள்
இகழ்ச்சி அடைவதில்லை; பஞ்ச காலத்திலும் அவர்கள் நிறைவடைவார்கள்.
பல்லவி
27 தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில்
நிலைத்திருப்பாய். 28 ஏனெனில், ஆண்டவர் நேர்மையை
விரும்புகின்றார்; தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை; அவர்களை என்றும்
பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர். பல்லவி
39 நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது,
நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே. 40 ஆண்டவர்
துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை
விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை
மீட்கின்றார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 16: 13
அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது
அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் என்னிடமிருந்து
கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள்
தந்தையின் ஆவியாரே.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
10: 16-23
அக்காலத்தில் இயேசு தம் திருத்தூதர்களை நோக்கிக் கூறியது: "இதோ!
ஓநாய்கள் இடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன்.
எனவே பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாயும் புறாக்களைப் போலக்
கபடு அற்றவர்களாகவும் இருங்கள். எச்சரிக்கையாக இருங்கள்.
ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள்.
தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள்.
என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்
செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும்
சான்று பகர்வீர்கள்.
இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது,
'என்ன பேசுவது, எப்படிப்
பேசுவது' என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச
வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில்
பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள்
வழியாய்ப் பேசுவார்.
சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர்
பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள்
பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின்
பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன்
இருப்போரே மீட்கப்படுவர்.
அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு
ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்கு முன் நீங்கள் இஸ்ரயேலின்
எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்கமாட்டீர்கள் என உறுதியாகவே
உங்களுக்குச் சொல்கிறேன்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
வாழ்வில் உண்மையிருக்குமேயானால், உண்மையை நோக்கி வழிநடத்தும்
ஆவியானவர் நமக்காக பேசுவார். நாம் அஞ்ச வேண்டியது இல்லை.
உண்மையை சுட்டிக் காட்டுவது என்பதும், உண்மையாய் வாழ்வதும் என்பதும்
சுலபமான ஒன்றல்ல.
பொய்மையே உலகம் என ஆகிப் போன இந்த உலகிலே, போலிகளே இங்கங்குயென
இல்லாமல் எங்கும் வியாபித்து இருக்கும் சூழலிலே, உண்மையை ஊரு
ஏற்றுக் கொள்ளும், உலகம் புரிந்து கொள்ளும், மானுடம் மதிப்பளிக்கும்
என நினைப்பது ஒருவேளை பைத்தியக்காரத்தனமாக கூட இருக்கலாம்.
அதனால், உண்மை உறங்கிவிடும், உண்மை மதிப்பிழந்து போகும், உண்மையை
உலையில் போட்டு எரித்து விடலாம் என கனவு காண்போர் தான் பைத்தியக்காரர்கள்.
உண்மையும், வழியும், வாழ்வும் ஆனவர் எல்லாம் வல்லவர். அவரால்
எல்லாம் கூடும்.
உண்மைக்கு மதிப்பளித்து, உண்மையாய் இருப்போம். வாழ்வடைவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
தொடக்க நூல் 46: 1-7,
28-30
"நானும் உன்னோடு (எகிப்திற்கு) வருவேன்"
நிகழ்வு
போக்குவரத்து வசதி இல்லாத ஒரு கிராமத்தில் சிறுவன் ஒருவன் இருந்தான்.
அவன் பக்கத்து ஊரிலிருந்த ஓர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்புப்
படித்து வந்தான். அவனுடைய ஊரிலிருந்து அவன் மட்டும்தான் பத்தாம்
வகுப்புப் படித்து வந்ததால், பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு
வரும்போது தனியாகத்தான் வந்தான். அவன வீட்டிற்கு வருவதற்குள்
இருட்டிவிடும். இதனால் அவன் தனக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று
பயந்துகொண்டே வீட்டுக்கு வந்தான்.
இது குறித்து அவன் தன்னுடைய வகுப்புத் தோழர்களுடன்
பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களுள் ஒருவன், "இதற்கெல்லாமா பயப்படுவாய்...
சரியான பயந்தாங்கோழியாக இருக்கிறாயே!" என்று சொல்லி அவனைக்
கேலி செய்தான். இன்னொருவன் வீட்டிலிருந்து வரும்போது கையோடு ஒரு
டார்ச் லைட் கொண்டு வா... ஒருவேளை வீட்டிற்குப் போவதற்குள் இருட்டிவிட்டால்,
அந்த டார்ச் லைட்டைப் பிடித்துக்கொண்டு நீ உன்னுடைய வீட்டிற்கு
எந்தவிதமான பயமுமின்றி செல்லலாம்" என்றான். மற்றொருவன்,
"உன்னுடைய கடவுளுடைய பெயரைச் சொல்லிக்கொண்டே செல்... உனக்கு எந்தவிதமான
பயமும் ஏற்படாது" என்றான்.
இப்படி ஒவ்வொருவனும் சொன்ன யோசனை நன்றாக இருந்தாலும், எதிலும்
அவனுக்கு நிறைவு இல்லை. இதனால் அவன் வழக்கம்போல் பயந்துகொண்டேதான்
தன்னுடைய வீட்டிற்குச் சென்றான்.
இந்நிலையில் ஒருநாள் அவன் பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்குத் தனியாகத்
திரும்பி வந்துகொண்டிருந்தான். அப்பொழுது அந்த வழியாக வந்த
பெரியவர் ஒருவர் அவன் பயந்துகொண்டே நடந்துசெல்வதைப்
பார்த்துவிட்டு, அவனை நிறுத்திக் காரணத்தைக் கேட்டார். அவனோ தன்
நிலைமையையும் நண்பர்கள் அவனிடத்தில் சொன்னதையும் அவரிடம் எடுத்துச்
சொன்னான். அதைக்கேட்ட பெரியவர், "இனிமேல் நீ இதுகுறித்துக் கவலைப்படவும்
வேண்டாம்... அஞ்சவும் வேண்டாம். ஒவ்வொருநாளும் நான் என்னுடைய
காட்டு வேலையை முடித்துவிட்டு இதே நேரத்திற்குத்தான்
வீட்டிற்குத் திரும்பி வருவேன். ஒருவேளை நான் வரச் சிறிது காலம்தாழ்த்தினாலும்கூட,
நீ உன்னுடைய பள்ளிக்கூடத்திலேயே இரு. நான் உன்னுடைய பள்ளிக்கூடத்திற்கு
வந்து உன்னைக் கூட்டிக்கொண்டு பத்திரமாக உன்னுடைய வீட்டில்
விட்டுவிடுகிறேன்" என்றார். அவனும் அதற்குச் சரியென்று சொல்லி
அடுத்த நாளிலிருந்து பெரியவரின் துணையோடு அவன் பத்திரமாக
வீட்டிற்குச் சென்றான்.
இந்த நிகழ்வில் வரும் சிறுவனுக்கு அவனுடைய வகுப்புத் தோழர்கள்
வெறுமனே அறிவுரையை மட்டும் சொல்லிக்கொண்டிருந்தபோது, பெரியவரோ
அவனோடு துணையாகச் சென்று அவனுடைய அச்சத்தைப் போக்கியது நம்முடைய
கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில்
யாக்கோபு, எகிப்து நாட்டிற்குப் போவது குறித்துப் பயந்துகொண்டிருந்தபோது,
ஆண்டவராகிய கடவுள் அவர்க்கு கனவில் தோன்றி, "அஞ்சாதே, நானும்
உன்னோடு வருவேன்" என்று சொல்லி அவரைத் திடப்படுத்துகின்றார்.
அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவு
செய்வோம்.
'யாக்கோபு'... 'யாக்கோபு' என இருமுறை அழைத்த இறைவன்
கானானில் பெரிய பஞ்சம் ஏற்பட்டதைத் தொடர்ந்து யாக்கோபு, தன்
மகன் யோசேப்பின் அழைப்பின் பேரில் எகிப்து செல்வது பற்றி
யோசித்துக்கொண்டிருக்கிறார். அப்பொழுது கடவுள் அவருடைய கனவில்
தோன்றி, 'யாக்கோபு.. யாக்கோபு' என்று இரண்டுமுறை
அழைக்கின்றார். கடவுள் யாக்கோபின் பெயரைச் சொல்லி இரண்டுமுறை
அழைத்தது, அவர் சாமுவேலையும் (1சாமு 3: 10) சவுலையும் (திப
9:4) இரண்டுமுறை அழைத்ததை நமக்கு நினைவுபடுத்துகின்றது.
இதன்மூலம் ஆண்டவர் எப்படி சாமுவேலையும் சவுலையும் தனியொரு
பணிக்கென அழைத்தாரோ அதுபோன்று யாக்கோபையும் தனியொரு
திட்டத்திற்காக அழைக்கின்றார்.
அஞ்சவேண்டாம் என்று யாக்கோபுவைத் திடப்படுத்திய இறைவன்
ஆண்டவராகிய கடவுள் யாக்கோபை இருமுறை பெயர் சொல்லி அழைத்தது,
அவர் யாக்கோபின் தேவை என்ன என்று முற்றிலுமாக அறிந்திருந்தார்
என்பதை எடுத்துச் சொல்கின்றது. மேலும் எகிப்து நாட்டிற்குச்
செல்வது குறித்து யாக்கோபு யோசித்துக் கொண்டிருக்கையில் கடவுள்
அவரிடம், அஞ்சவேண்டாம்... நானும் உன்னோடு எகிப்திற்கு
வருகிறேன் என்று சொல்லி அவரை உறுதிப்படுத்துகின்றார்.
வாக்குறுதியை நிறைவேற்றும் இறைவன்
ஆண்டவராகிய கடவுள் யாக்கோபிடம் அஞ்சவேண்டாம் என்று சொன்னதோடு
மட்டுமல்லாமல், எகிப்தில் அவருடைய இனத்தைப் பலுகிப் பெருகச்
செய்வேன் என்றும் சொல்கின்றார். கடவுள் யாக்கோபிடம் சொல்லும்
இவ்வார்த்தைகள், தொநூ 28:15 ல் கடவுள் அவரிடம் சொன்ன
வார்த்தைகளை நினைவுபடுத்துவதாகவும் கடவுள் தான் கொடுத்த
வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற உண்மையை எடுத்துரைப்பதாக
இருக்கின்றது. ஆகையால், நாம் வாக்குறுதியை நிறைவேற்றும்,
நம்மோடு கூடவே வரும் ஆண்டவரின் துணையை நம்பி வாழக்
கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
'இதோ உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களோடு இருப்பேன்' (மத்
28:50) என்பார் இயேசு. ஆகவே, கடவுளின் இந்த ஆறுதலளிக்கும்
வார்த்தைகளை நம் உள்ளத்தில் தாங்கி, அச்சமின்றி வாழ்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 10: 16-23
ஓநாய்களிடையே ஆடுகளாய்!
நிகழ்வு
அது ஒரு துறவுமடம். அந்தத் துறவுமடத்தில் இருந்த குரு தன்னிடம்
பயிற்சி பெற்றுவந்த சீடர்களை அழைத்து, "நீங்கள் சுற்றிலும்
உள்ள ஊர்கட்குச் சென்று, நான் உங்கட்குக் கற்பித்ததை அங்குள்ள
மக்களிடம் போதித்துவிட்டு வாருங்கள்" என்றார். சீடர்களும் சரி
என்று சொல்லிவிட்டு தனித்தனியாகப் பிரிந்து சென்றார்கள்.
எல்லாச் சீடர்களும் பக்கத்து பக்கத்து ஊர்களில் போதிக்கச்
சென்றபோது, ஒரு சீடர் மட்டும் சற்றுத் தொலைவில் இருந்த ஓர்
ஊர்க்குப் போதிக்கச் சென்றார். அவரைப் பார்த்ததும் அங்கிருந்த
மக்கள் அனைவரும், தங்களுடைய ஊர்க்கு ஒரு மகான் வந்திருக்கிறார்
என்று அவர் பின்னாலேயே சென்றார்கள். அவரோ ஊரின் மத்தியில்
இருந்த ஒரு வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து, திரண்டிருந்த
மக்கட்குப் போதிக்கத் தொடங்கினார்.
மக்கள் எல்லாரும் அந்தச் சீடர் போதித்ததை மிக ஆர்வமாய்க்
கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது கூட்டத்திலிருந்து
ஒருசிலர், "இந்த ஆள் நம்மை ஏமாற்றப் பார்க்கின்றார். இவரை
இப்படியே விட்டுவைத்தால், ஊரில் இருக்கின்ற எல்லாரையும்
ஏமாற்றி, நம்மிடம் இருப்பவற்றையெல்லாம் பறித்துக்கொண்டு
போய்விடுவார். அதனால் இவரைச் சும்மா விடக்கூடாது" என்று
அவர்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள். அவரோ
அவர்களிடமிருந்து எப்படியோ தப்பித்துத் தான் இருந்த
துறவுமடத்திற்கு ஓடிவந்தார்.
அது இரவுநேரம் என்பதால் அவர்க்குச் சரியாக வழி தெரியவில்லை.
இன்னொரு பக்கம் தன்னைத் துரத்திக்கொண்டு வருபவர்கள் தன்னைப்
பிடித்து ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சம் அவரைத்
தொற்றிக்கொண்டது. அதனால் அவர் ஒரு மரத்திற்குப் பின்னால்
ஒளிந்துகொண்டு, துரத்திகொண்டு வருபவர்கள் பின்தொடர்ந்து
வருகிறார்களா என்று பார்த்தார். கண்ணுக்கு எட்டிய தூரம்மட்டும்
யாரும் தன்னைப் பின்தொடர்ந்து வரவில்லை என்று தெரிந்ததும்,
அந்த மரத்தடியிலே படுத்துத் தூங்கத் தொடங்கினார். ஆனால்,
அவர்க்குத் தூக்கம் வரவேயில்லை. உயிர் பயம் அவரைத்
தூங்கவிடாமல் செய்தது.
அப்பொழுது அவர்க்கு முன்பாக ஒரு வானதூதர் தோன்றி, "மகனே! நீ
எதைப்பற்றியும் கவலைப்படாமல் தூங்கு. உன்னை நான் தூங்காமல்
காவல்காக்கிறேன்" என்றது. வானதூதர் சொன்ன வார்த்தைகள் அவருடைய
உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதனால் அவர் படுத்து
நிம்மதியாகத் தூங்கத் தொடங்கினார். மறுநாள் அவர்
விழித்தெழுந்து பார்த்தபோது, வானதூதர் அவர்க்குப் பக்கத்திலயே
நின்றுகொண்டு அவரைப் பாதுகாப்பதைப் பார்த்து அவர் மிகவும்
மகிழ்ச்சியடைந்தார். பின்னர் அவர் வானதூதர்க்கு நன்றி
சொல்லிவிட்டு, பாதுகாப்பாக துறவுமடத்தை வந்து அடைந்தார்.
இறைப்பணி செய்வோர்க்கு பிரச்சினைகளும் சவால்களும் வந்தாலும்,
இறைவன் அவர்களைக் கைவிடாமல் தாங்கிக்கொள்வார் என்ற உண்மையை
இந்த நிகழ்வு மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தி
வாசகத்தில், பணித்தளங்கட்கு செல்லும் சீடர்கள் எப்படிப்பட்ட
பிரச்சினைகளையும் சவால்களையும் சந்திப்பார்கள். அப்பொழுது
இறைவனின் பராமரிப்பு அவர்கட்கு எப்படி இருக்கும் என்று இயேசு
கூறுகின்றார். நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப்
பார்த்து நிறைவுசெய்வோம்.
இயேசுவின் சீடர்கட்குத் துன்பங்கள் உண்டு
இயேசு தன் சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்றபோது,
ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவது போல் உங்களை நான்
அனுப்புகிறேன் என்கின்றார். இங்கு இயேசு ஓநாய் என்று
குறிப்பிடுவதை போலி இறைவாக்கினர்கள், நிறுவனமயமாக்கப்பட்ட
மதம், அச்சுறுத்தும் அரசாங்கம், குடும்ப உறவுகள் போன்ற பலவற்றை
சொல்லலாம். இத்தகைய சவால்கட்கும் பிரச்சினைகட்கும்
மத்தியில்தான் சீடர்கள் இயேசுவின் நற்செய்தியை
அறிவிக்கவேண்டும்.
துன்பங்களை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்
இயேசுவின் நற்செய்தியை மக்கட்கு அறிவிக்கின்றபோது பல்வேறு
பிரச்சினைகளும் சவால்களும் வரலாம். அவற்றையெல்லாம் வெறும்
பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், இயேசுவைப் பற்றிய நற்செய்தி
அறிவிப்பதற்கு ஒரு வாய்ப்பாகப் பார்க்கவேண்டும். அதுதான்
சிறந்த அணுகுமுறை. பல்வேறு புனிதர்களும் மறைசாட்சிகளும்
ஆண்டவர் இயேசுவின் பொருட்டுத் துன்புறுத்தப்பட்டதை நினைத்து
வருத்தமடையவில்லை. மாறாக, தாங்கள் துன்புறுத்தப்படுவதை ஒரு
வாய்ப்பாகப் பயன்படுத்தி இயேசுவைப் பற்றி அறிவித்தார்கள்.
நம்முடைய வாழ்விலும் இதுபோன்ற சூழல்களைச் சந்திக்கின்றபோது,
அவற்றை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு ஆண்டவரை பற்றி
அறிவிப்பது நல்லது.
இறைவனின் உடனிருப்பு
தன்னுடயை பணியைச் செய்யும் சீடர்கட்குத் துன்பங்களும்
சவால்களும் இருந்தாலும் இறைவனின் உடனிருப்பு அவர்களோடு என்றும்
இருக்கும் என்பதை இயேசு சுட்டிக்காட்டத் தவறவில்லை. நீங்கள்
ஆட்சியாளரிடமும் அதிகாரிகளிடம் இழுத்துச் செல்லப்படும்போது,
என்ன பேசவேண்டும் எப்படிப் பேசவேண்டும் என்பதைக் குறித்துக்
கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் தூய ஆவியார் உங்கள் வழியாகப்
பேசுகின்றார் என்று இயேசு கூறுகின்ற வார்த்தைகள்,
துன்பவேளையில் இறைவனின் உடனிப்பை மிக அழகாக எடுத்துச்
சொல்கின்றது. ஆகையால், இயேசுவின் சீடர்கள் யாவரும் இறைவனின்
பாதுக்காப்பை உணர்ந்து, அவருடைய பணியைச் செய்வது நல்லது.
சிந்தனை
'வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன்
கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடமெல்லாம் உன்னோடு
இருப்பேன்' (யோசு 1:9) என்பார் ஆண்டவர். ஆதலால், ஆண்டவர்
யோசுவிற்குச் சொன்ன இவ்வார்த்தைகளை உள்ளத்தில் ஏற்று,
மனவுறுதியோடும் துணிவோடும் இயேசுவின் நற்செய்தியை
எல்லார்க்கும் அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
|
|