Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         11 ஜூலை 2019  
                                  பொதுக்காலம் 14ம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 

=================================================================================
உயிர்களைக் காக்கும் பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 44: 18-21,23-29; 45: 1-5


அந்நாள்களில் யூதா, யோசேப்பு அருகில் வந்து, "என் தலைவரே! அடியேன் ஒரு வார்த்தை கூற அனுமதி தாரும். என் தலைவரே! செவிசாய்த்தருளும். உம் அடியான் மீது சினம் கொள்ள வேண்டாம். நீர் பார்வோனுக்கு இணையானவர். என் தலைவராகிய தாங்கள் உம் பணியாளர்களாகிய எங்களிடம், 'உங்களுக்குத் தந்தையோ சகோதரனோ உண்டா?' என்று கேட்டீர்கள். அதற்கு நாங்கள், 'எங்களுக்கு வயது முதிர்ந்த தந்தையும், முதிர்ந்த வயதில் அவருக்குப் பிறந்த ஓர் இளைய சகோதரனும் உள்ளனர். அவனுடைய சகோதரன் இறந்துவிட்டான்.

அவன் தாயின் பிள்ளைகளில் அவன் ஒருவனே இருப்பதால், தந்தை அவன் மேல் அதிக அன்புகொண்டிருக்கிறார்" என்று தலைவராகிய தங்களுக்குச் சொன்னோம். அப்பொழுது தாங்கள், 'அவனை என்னிடம் அழைத்து வாருங்கள். நான் அவனை நேரில் பார்க்க வேண்டும்' என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள். அதற்குத் தாங்கள் 'உங்கள் இளைய சகோதரன் உங்களோடு வராவிட்டால் என் முகத்தில் விழிக்க வேண்டாம்' என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள்.

உம் பணியாளராகிய எங்கள் தந்தையிடம் திரும்பியவுடன் என் தலைவராகிய தாங்கள் சொல்லியவற்றை அவரிடம் எடுத்துரைத்தோம். பிறகு எங்கள் தந்தை, 'நீங்கள் திரும்பிப்போய் நமக்குக் கொஞ்சம் உணவுப் பொருள் வாங்கி வாருங்கள்' என்றார்.

நாங்கள் 'எங்களால், போக இயலாது, எங்கள் இளைய சகோதரன் எங்களோடு சேர்ந்து வந்தால் மட்டுமே புறப்படுவோம். வராவிட்டால், இவன் இல்லாமல் நாங்கள் அவர் முகத்தில் விழிக்க மாட்டோம்' என்றோம். உம் பணியாளராகிய எங்கள் தந்தை எங்களிடம் என் மனைவி, எனக்கு இரு பிள்ளைகளையே பெற்றெடுத்தாள் என்று உங்களுக்குத் தெரியும். ஒருவன் என்னைப் பிரிந்து வெளியே சென்றான். அவன் ஒரு கொடிய விலங்கால் பீறிக் கிழிக்கப்பட்டான் என்று நினைத்துக்கொண்டேன். ஏனெனில், இதுவரை அவனைக் காணவில்லை. இப்பொழுது நீங்கள் இவனையும் என்னிடமிருந்து பிரிக்கிறீர்கள். இவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், நரைத்த முடியுள்ள என்னைத் துயருக்குள்ளாக்கிப் பாதாளத்திற்குள் இறங்கச் செய்வீர்கள்' என்றார்.

அப்பொழுது யோசேப்பு தம் பணியாளர் அனைவர் முன்னிலையிலும் இதற்குமேல் தம்மை அடக்கிக் கொள்ள முடியாமல், 'எல்லாரும் என்னைவிட்டு வெளியே போங்கள்' என்று உரத்த குரலில் சொன்னார். யோசேப்பு தம் சகோதரருக்குத் தம்மைத் தெரியப்படுத்தும்பொழுது வேற்று மனிதர் எவரும் அவரோடு இல்லை. உடனே அவர் கூக்குரலிட்டு அழுதார். எகிப்தியர் அதைக் கேட்டனர். பார்வோன் வீட்டாரும் அதைப் பற்றிக் கேள்விப்பட்டனர்.

பின்பு, அவர் தம் சகோதரர்களை நோக்கி, "நான்தான் யோசேப்பு! என் தந்தை இன்னும் உயிரோடு இருக்கிறாரா?" என்று கேட்டார். ஆனால் அவரைப் பார்த்து அவர் சகோதரர்கள் திகில் அடைந்ததால், அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் யோசேப்பு தம் சகோதரர்களை நோக்கி, "என் அருகில் வாருங்கள்" என்றார். அவர்கள் அருகில் வந்தவுடன் அவர், "நீங்கள் எகிப்திற்குச் செல்லுமாறு விற்ற உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்! நான் இங்குச் செல்லுமாறு நீங்கள் என்னை விற்றுவிட்டது குறித்து மனம் கலங்க வேண்டாம். உங்கள்மீதே சினம் கொள்ளவேண்டாம். ஏனெனில், உயிர்களைக் காக்கும் பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார்" என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 105: 16-17. 18-19. 20-21 (பல்லவி: 5a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!

16 நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்; உணவெனும் ஊன்றுகோலை முறித்துவிட்டார். 17 அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பி வைத்தார்; யோசேப்பு என்பவர் அடிமையாக விற்கப்பட்டார். பல்லவி

18 அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர். அவர்தம் கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர். 19 காலம் வந்தது; அவர் உரைத்தது நிறைவேறிற்று; ஆண்டவரின் வார்த்தை அவர் உண்மையானவர் என மெய்ப்பித்தது. பல்லவி

20 மன்னர் ஆள் அனுப்பி அவரை விடுதலை செய்தார்; மக்களினங்களின் தலைவர் அவருக்கு விடுதலை அளித்தார்; 21 அவர் அவரைத் தம் அரண்மனைக்குத் தலைவர் ஆக்கினார்; தம் உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாளராக ஏற்படுத்தினார். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 7-15


அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: நீங்கள் சென்று 'விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.

பொன், வெள்ளி, செப்புக்காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக்கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.

நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள். அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள். வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள் மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாய் இருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.

உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரை விட்டு வெளியேறும் பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப் பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

கொடையாகப் பெற்றீர்கள், கொடையாக கொடுங்கள்.

பெற்றவையெல்லாம் அவராலேயே.

இதனை உணர்ந்தவர்களே, தாராளமாக கொடுத்திட முன்வருவார்கள்.

எல்லாம் என்னால் தான் கிடைத்தது என நினைப்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்களே.

தாங்கள் அனுபவிக்காமலேயே, அடுத்தவர்களுக்கும் கொடுக்காமலேயே, வாழ்வை முடித்துக் கொள்வர். ஆணவம் அவர்களை விழுத்தாட்டிடும்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 தொடக்க நூல் 44: 18-21, 23-29; 45: 1-5

ஒன்றுசேர்ந்த சகோதரர்கள்

நிகழ்வு

ஓரூரில் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன், தம்பி இருவர் இருந்தனர். அவர்களுடைய பெற்றோர் அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போதே அவர்களை அனாதையாக விட்டு இறந்துபோனதால் மூத்தவன்தான் இளையவனுக்கு எல்லாமுமாக இருந்து, அவன்மீது மிகுந்த அன்பு காட்டி வளர்த்து வந்தான். இளையனும் தன்னுடைய அண்ணனை அளவுகடந்த விதமாய் அன்புசெய்து வந்தான்.

இப்படி அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும்போது, திடீரென்று ஒருநாள் அவர்கள் இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் தம்பி கோபித்துக்கொண்டு தொலைதூரம் சென்றான். தம்பி ஓரிரு நாட்களில் திரும்பி வந்துவிடுவான் என்று நினைத்துக்கொண்டிருந்த அண்ணனுக்கு அவன் ஒருவார காலமாகியும் திரும்பி வராததால் உள்ளுக்குள் மெல்ல பயம் ஏற்படத் தொடங்கியது. உடனே அவன் தன்னுடைய உறவுக்காரர் ஒருவரைத் தூது அனுப்பி தம்பியைத் திரும்பி வரச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். அவர் அவனிடம் சென்று, அவனுடைய அண்ணன் அவனிடத்தில் சொன்ன செய்தியைச் சொன்னபோது, "அதெல்லாம் திரும்பி வரமுடியாது" என்று சொல்லி அனுப்பிவிட்டான்.

இதற்குப் பிறகு அண்ணன் தன்னுடைய நெருங்கிய நண்பனை அழைத்து, 'உன்னால் எவ்வளவு தூரம் திரும்பி வரமுடியுமோ அவ்வளவு திரும்பி வா... மீதித் தூரத்தை நானே கடந்துவருகிறேன்" என்பதைத் தன் தம்பியிடம் சொல்லுமாறு சொல்லி அவனை அனுப்பி வைத்தான். நண்பனும் அவனுடைய தம்பியை அடைந்து, அவனுடைய அண்ணன் அவனிடம் சொன்ன செய்தியைச் சொல்லிவிட்டுத் திரும்பினான்.

இதற்குப் பின்பு தம்பி தன்னுடைய தவற்றை உணர்ந்து வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். ஒருசில மைல்கள் தூரம்தான் அவன் நடந்திருப்பான். அப்பொழுது அவனுக்கு எதிரே அவனுடைய அண்ணனைப் போன்று ஒருவர் நடந்து வந்துகொண்டிருந்தார். அவரை உற்றுக் கவனித்தபோதுதான் அது வேறு வேறுயாருமல்ல தன்னுடைய அண்ணன்தான் என்பது அவனுக்குத் தெரிந்தது. உடனே அவன் தன் அண்ணனை நோக்கி ஓடி வந்தான். அண்ணனும் தன் தம்பியை நோக்கி ஓடிவந்து, கட்டியணைத்துக்கொண்டு இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் தாங்கள் செய்த தவற்றுக்கு மற்றவரிடம் மன்னிப்புக் கேட்டார்கள். பின்னர் ஒருவர் ஒருவருடைய கைகளைக் கோர்த்துக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியோடு தங்கள் வீடு திரும்பினார்கள்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் சகோதரர்கள் எப்படி தங்களிடம் இருந்த மனகசப்பை மறந்து ஒன்று சேர்ந்தார்களோ அதுபோன்று இன்றைய முதல் வாசகத்திலும் யாக்கோபின் பத்து மகன்கள் அவருடைய இன்னொரு மகனான யோசேப்போடு ஒன்றுசேர்கின்றார்கள். அவர்கள் ஒன்று சேர்வதற்குக் காரணமாக இருந்தது என்ன என்பதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

தங்களுடைய தவறை உணர்ந்து வருந்திய யோசேப்பின் சகோதரர்கள்

எகிப்தில் மட்டுமல்லாமல், சுற்றிலும் உள்ள நாடுகளில் உணவுக்குக் கடும்பஞ்சம் நிலவியபோது கானான் நாட்டில் வாழ்ந்து வந்த யாக்கோபு, தன் கடைசி மகனான பெஞ்சமினைத் தவிர்த்து மற்ற பத்துப் புதல்வர்களையும் எகிப்து நாட்டிற்குத் தானியம் வாங்க அனுப்பி வைக்கின்றார். ஏனென்றால் அங்குதான் யோசேப்பின் வழிகாட்டுதலில் தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

தந்தையின் ஆணையின் பேரில் எகிப்துக்கு வருகின்ற அந்தப் பத்துப் பேரை யோசேப்பு பாத்திர மாத்திரத்திலேயே அடையாளம் கண்டுகொள்கின்றார். இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், அவர்களிடம், அவர்களோடு பிறந்த இன்னொரு சகோதரரைக் கூட்டிக்கொண்டு வந்தால்தான் அவர்கட்கு உணவு கொடுப்பதாக அவர் அவரிகளிடம் சொல்கின்றார். இதனால் அவர்கள் ஒருவர் மற்றவரிடம் தாங்கள் செய்த தவறுக்காகத்தான் இப்படியெல்லாம் நடக்கின்றது என்று மிகவும் வருந்துகின்றார்கள். இங்கு ஒரு கேள்வி எழலாம். அது என்னவேனில், யோசேப்பு தன் சகோதரர்களைப் பார்த்தவுடன் அவர்களிடம் தன்னை வெளிபடுத்தியிருக்கலாமே, எதற்கு அவர் இவ்வளவு தாமதப்படுத்தவேண்டும் என்பதுதான் அக்கல்வி. இது குறித்து விவிலிய அறிஞர்கள் சொல்லும்போது, யோசேப்பின் சகோதர்கள் தங்களுடைய தவற்றை உள்ளார்ந்த விதமாய் உணரவேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு நடந்துகொண்டார் என்று சொல்வார்கள்.

தன் சகோதரர்களோடு ஒன்று சேர்ந்த யோசேப்பு

யோசேப்பின் சகோதரர்கள் தங்கள் தந்தையோடு இருக்கும் பெஞ்சமினைக் கூட்டிக்கொண்டு வருவதற்காக கானான் நாட்டிற்குச் சென்றுவிட்டு, அவரைக் கூட்டிக்கொண்டு வராமல் வெறுமென திரும்பி வருகின்றார்கள். அப்பொழுது யாக்கோபு அவர்களுடைய குற்றங்களை மன்னித்துவிட்டு, "நான்தான் யாக்கோபு" அவர்கட்குத் தன்னை வெளிப்படுத்துகின்றார். இதைக் கேட்டு அவர்கள் நம்ப முடியாமல் இருக்கின்றார்கள். அதன்பின்னர் யோசேப்பு அவர்களிடம், "என் அருகே வாருங்கள்" என்று சொன்னபிறகுதான் அவர்கள் அவரை நம்பத் தொடங்குகின்றார்கள். ஏனெனில், எகிப்தியர்கள் யூதர்களை தங்கள் அருகே அழைப்பதில்லை. இதனால் அந்தப் பத்துப் பேரும் யோசேப்பை தங்களுடைய சகோதரர் என்று அடியாளம் கண்டுகொள்கின்றார்கள்.

யோசேப்பு, தனக்கு எதிராகத் தன் சகோதரர்கள் செயல்பட்டபோதும் அதைப் பெரிது படுத்தாமல், அவர்களை மன்னித்தது, நாமும் நமக்கெதிராகச் செயல்படுபவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது.

சிந்தனை

'ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்தது போல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்' (எபே 4: 32) என்பார் பவுல். ஆகவே, யாக்கோபு தன் சகோதரர்களை மன்னித்து ஏற்றுகொண்டது போல, நாமும் ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 10: 7-15

குறைவான சுமை நிறைவான பயணம்"

நிகழ்வு

அமெரிக்காவில் மிசிசிப்பி என்றொரு பெரிய ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது. ஒரு சமயம் இந்த ஆற்றில், ஒரு சொகுசுக் கப்பலில் அமெரிக்காவில் இருந்த செல்வந்தர்கள் சிலர் உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்தார்கள்.

நன்றாகப் போய்க்கொண்டிருந்த அந்தக் கப்பலானது ஒரு பாறையில் மோதி, அதன் அடிப்பாகத்தின் வழியாகத் தண்ணீர் கப்பலுக்குள்ளே வரத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அந்தக் கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கையில் கிடைத்த பாதுகாப்பு வளையங்களையும் சிறு படகுகளையும் பிடித்துக்கொண்டு தப்பித்து கரைக்குச் சென்றனர். அந்தக் கப்பலில் பயணம் செய்த ஒருவர் மட்டும் கப்பல் தண்ணீருக்குள் மூழ்கப்போகிறது என்று தெரிந்தும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கப்பலின் உட்பகுதிக்குச் சென்று, எதை எதையோ எடுத்து தன்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டு தண்ணீருக்குள் குதித்தார்.

மறுநாள் காலையில், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் எல்லாம் மிசிசிப்பி ஆற்றில் சென்றுகொண்டிருந்த கப்பலானது பாறையில் மோதி மூழ்கியதையும் விபத்தியில் யாரும் இருக்கவில்லை என்ற செய்தியையும் வெளியிட்டிருந்தன. இதைத் தொடர்ந்து மீட்புப் படையினர் கப்பலில் பயணம் செய்த எல்லாரும் தப்பித்து விட்டார்களா? என்று சோதித்துப் பார்க்க விரும்பியது. அதன்படி மீட்புப் படையினர் பாறையில் மோதி, தண்ணீருக்குள் மூழ்கிய கப்பலில் யாரும் சிக்கி இருக்கிறார்களா? என்று சோதித்துப் பார்க்கத் தொடங்கியது.

அப்பொழுது ஓர் ஆள் மட்டும் தண்ணீரில் செத்து மிதந்து கொண்டிருப்பது தெரிந்தது. கப்பலில் பயணம் செய்த எல்லாரும் தப்பித்துச் சென்றிருக்கும்போது, இவர் மட்டும் ஏன் இப்படிச் செத்து மிதந்துகொண்டிருக்கின்றார் என்று மீட்புக் குழுவினர் அவரைச் சோதித்துப் பார்த்தார்கள. முடிவில்தான் அவருடைய இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியில் தங்கக்கட்டிகள் கட்டப்பட்டிருப்பது தெரிந்தது. முந்தைய நாளில் கப்பலில் பயணம் செய்த எல்லாரும் தங்களுடைய உயிரைக் காத்துக்கொள்வதற்குப் போராடிக்கொண்டிருந்தபோது, இந்த மனிதர் மட்டும் ,இதுதான் சமயம் என்று கப்பலில் இருந்த கஜானாவை உடைத்து தங்கக் கட்டிகளைத் தன்னுடைய இடுப்பிலும் முதுகுப் பகுதியிலும் கட்டினார். அதனால்தான் அவரால் தண்ணீரில் நீந்திச் செல்ல முடியாமல், மூழ்கி உயிரை இழக்க நேரிட்டது.

பொருளுக்கு (தங்கக் கட்டிகட்கு) ஆசைப்பட்டு, அதைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கின்ற ஒருவரால் எப்படி தொடர்ந்து நீந்த முடியாதோ, அதுபோன்று பணத்தின்மீது நம்பிக்கை வைத்து வாழக்கூடிய ஒருவரால் இயேசுவின் சீடராக இருக்க முடியாது. இன்றைய நற்செய்தி வாசகம், இயேசுவின் பணியைச் செய்யும் ஒருவர் எதன்மீது பற்றுக்கொண்டிருக்கவேண்டும், எத்தகைய வாழ்க்கை வாழவேண்டும் என்பதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம்

நற்செய்தியில் இயேசு பன்னிருவரையும் பணித்தளத்திற்கு அனுப்புகின்றார். அப்படி அனுப்புகின்றபோது, அவர்கட்கு ஒருசில அறிவுரைகளைச் சொல்கின்றார். அந்த அறிவுரைகளுள் ஒன்றுதான். பொன், வெள்ளி, செப்புக்காசு, பை, இரண்டு அங்கிகள், மிதியடி, கைத்தடி எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம்" என்பதாகும். இயேசு இவ்வாறு சொல்லக் காரணம், மேலே சொல்லப்பட்ட பொருட்களையும் இன்னபிறவற்றையும் பணித்தளங்கட்கு எடுத்துக்கொண்டு போகும்போது, அதுவே மிகப்பெரிய சுமையாகிவிடும். அப்பொழுது பயணமும் சரி, பணியும் சரி நன்றாக இருக்காது என்பதால்தான். பவுல் இத்தைத்தான், பொருளாசையே எல்லாத் தீமைகட்கும் காரணம்" (1 திமொ 6:7) என்று கூறுகின்றார். ஆகவே, இயேசுவின் சீடராக இருந்து, அவர் வழியில் நடக்கும் நாம், பொருளின்மீது ஆசை கொண்டு வாழ்வதைத் தவிர்ப்பது நல்லது.

ஆண்டவரை மட்டும் எடுத்துக்கொண்டு போகவேண்டும்

இயேசு தன் சீடர்களிடம் எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்று சொல்வது மறைமுகமாக, ஆண்டவரை உள்ளத்தில் எடுத்துக்கொண்டு போகவேண்டும் என்பதை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது.

எவர் ஒருவர் ஆண்டவரைத் தன்னுடைய உள்ளத்தில் எடுத்துக்கொண்டு போகிறாரோ அவருடைய பணிவாழ்வு மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. அன்னைத் தெரசா கல்கத்தாவில் இருந்த ஏழை எளியவர்க்கு மத்தியில் பணிசெய்யத் தொடங்கியபோது, அவரிடம் (ஐந்துரூபாய்யைத் தவிர) எதுவும் இல்லை. ஆனால், ஆண்டவர் அவருடைய உள்ளத்தில் இருந்தார். அதனால் அவருடைய வாழ்வு சிறப்பாக இருந்தது. நம்முடைய சீடத்துவ வாழ்வு சிறப்பாக இருக்கவேண்டும் என்றால், ஆண்டவரை நம்பிப் பணிசெய்ய வேண்டும்; அவரை நம்முடைய உள்ளத்டிஹ்ல் சுமந்து செல்பவராக இருக்கவேண்டும்.

சிந்தனை

'எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய ஆற்றலுண்டு' (பிலி 4:13) என்பார் பவுல். ஆகையால், நாம் ஆண்டவரையும் அவருடைய வல்லமையையும் நம்பிப் பணிசெய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!