Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         10 ஜூலை 2019  
                                  பொதுக்காலம் 14ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 

=================================================================================
உண்மையாகவே நம் சகோதரனை முன்னிட்டே இப்பொழுது நாம் தண்டிக்கப்படுகிறோம்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 41: 55-57; 42: 5-7,17-24

அந்நாள்களில் எகிப்து நாடு முழுவதும் பஞ்சம் வந்தபோது, மக்கள் பார்வோனிடம் வந்து உணவுக்காக ஓலமிட்டனர். பார்வோன் எகிப்தியர் அனைவரையும் நோக்கி,"யோசேப்பிடம் செல்லுங்கள்; அவர் சொல்வதைச் செய்யுங்கள்" என்று கூறினான்.

நாடு முழுவதும் பஞ்சம் பரவிய பொழுது, யோசேப்பு களஞ்சியங்களைத் திறந்து, எகிப்தியர்களுக்குத் தானியங்களை விற்குமாறு செய்தார். ஏனெனில் எகிப்து நாட்டில் பஞ்சம் கடுமையாய் இருந்தது. உலகம் எங்கும் கொடும் பஞ்சம் நிலவியது. அனைத்து நாட்டு மக்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க எகிப்திற்கு வந்தார்கள். கானான் நாட்டிலும் பஞ்சம் நிலவியதால், அங்கிருந்து தானியம் வாங்கச் சென்ற மற்றவர்களோடு இஸ்ரயேலின் புதல்வர்களும் சேர்ந்து சென்றனர்.

அப்பொழுது, யோசேப்பு நாட்டுக்கு ஆளுநராய் இருந்து மக்கள் அனைவருக்கும் தானியம் விற்கும் அதிகாரம் பெற்றிருந்தார். எனவே அவருடைய சகோதரர்கள் வந்து, தரை மட்டும் தாழ்ந்து யோசேப்பை வணங்கினார்கள். யோசேப்பு தம் சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்டார்.

ஆயினும் அவர்களை அறியாதவர்போல் கடுமையாக அவர்களிடம் பேசி, "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று வினவினார். அவர்களோ, "நாங்கள் கானான் நாட்டிலிருந்து உணவுப் பொருள்கள் வாங்க வந்திருக்கிறோம்' என்று பதில் கூறினார்கள்.

பின்னர் அவர் அவர்களை மூன்று நாள் காவலில் வைத்தார். மூன்றாம் நாள் யோசேப்பு அவர்களை நோக்கி, "நான் சொல்கிறபடி செய்யுங்கள்; செய்தால், பிழைக்கலாம். ஏனெனில் நான் கடவுளுக்கு அஞ்சுபவன். நீங்கள் குற்றமற்றவர்களானால் சகோதரராகிய உங்களில் ஒருவன் சிறைச்சாலையில் அடைபட்டிருக்கட்டும். மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்குத் தானியம் கொண்டு போகலாம். உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள்.

அப்பொழுது நீங்கள் கூறியது உண்மையென்று விளங்கும். நீங்களும் சாவுக்கு உள்ளாகமாட்டீர்கள்" என்றார். அவர்களும் அப்படியே செய்தனர்.

அப்போது, அவர்கள் ஒருவர் மற்றவரிடம், "உண்மையாகவே நம் சகோதரனை முன்னிட்டே இப்பொழுது நாம் தண்டிக்கப்படுகிறோம். தன் உயிருக்காக எவ்வளவு துயரத்துடன் நம்மிடம் கெஞ்சி மன்றாடினான்! நாமோ அவனுக்குச் செவிசாய்க்கவில்லை! நமக்கு இத்துன்பம் ஏற்பட்டதற்கு அதுவே காரணம்" என்று சொல்லிக் கொண்டனர்.

அப்பொழுது ரூபன் மற்றவர்களிடம், "பையனுக்கு எத்தீங்கும் இழைக்காதீர்கள் என்று உங்களுக்கு நான் சொல்லவில்லையா? நீங்களோ செவிகொடுக்கவில்லை. இதோ, அவனது இரத்தம் நம்மிடம் ஈடு கேட்கிறது!" என்றார்.

யோசேப்பு மொழிபெயர்ப்பாளன் மூலம் அவர்களிடம் பேசியதால், தாங்கள் சொன்னது அவருக்குத் தெரியுமென்று அவர்கள் அறியவில்லை.

அப்போது அவர் அவர்களிடமிருந்து ஒதுங்கிச்சென்று அழுதார். பின்பு, திரும்பி வந்து அவர்களோடு பேசுகையில் சிமியோனைப் பிடித்து அவர்கள் கண்முன்பாக அவனுக்கு விலங்கிட்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 33: 2-3. 10-11. 18-19 (பல்லவி: 22 காண்க)
=================================================================================
பல்லவி: உம்மையே நம்பும் எங்கள்மீது உமது பேரன்பு இருப்பதாக.

2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். 3 புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். பல்லவி

10 வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்து விடுகின்றார். 11 ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-7

அக்காலத்தில் இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வருமாறு: முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரிதண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து.

இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: "பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.

மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது "விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றுங்கள்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

வழி தவறிப் போன ஆடுகளிடமே செல்லுங்கள்.

பல காரணங்களுக்கு இன்று தடம் மாறி போகும் மக்கள் கூட்டம் அதிகம்.

காரணங்கள் பல இருந்தாலும், ஓரே குடையின் கீழ் இருக்க வேண்டும் என்ற மனநிலையில்லாது போவது வருத்தத்திற்கரியதே.

'ஓரே ஆயன் ஓரே மந்தை' என்ற நிலை உருவாக செபித்தவரை வைத்து, இன்று கூறு போட்டுக் கொள்ளும் நிலை எதிர் சாட்சியமே.

மந்தையிடமே செல்லுங்கள். கூட்டிச் சேர்ப்பதுவே இறையாட்சியின் பணியாகும் என்று கற்றுக் கொடுக்கின்றார்.

யார் பெரியவர் என்ற தன்னலப் போக்கு மறைந்து, தனிப்பட்ட விருப்பு வெறுப்பு மறைந்து, இறையாட்சியின் விழுமியத்திற்காய் ஒன்றுபட்டு நிற்பது என்பது காலத்தின் கட்டாயம்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 தொடக்க நூல் 41: 55-57; 42: 5-7, 17-24

நடப்பவை எல்லாம் நன்மைக்கே


நிகழ்வு

முன்பொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவனுக்கு மாம்பழம் என்றால் உயிர். ஒருநாள் அவன் தன்னுடைய தோட்டத்தில் விளைந்த பாம்பழங்களைக் கத்தியால் சீவிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, தவறுதலாக கத்தி அவனுடைய இடக்கையின் சுண்டுவிரலில் பட்டு, அவ்விரலைத் துண்டாக்கியது. இதனால் அவன் வலி பொறுக்க முடியாமல் அலறினான்.

அரசனுடைய அலறல் சத்தம் கேட்டு அரண்மனையில் இருந்த அரசி, மந்திரி, சேவகர்கள் என எல்லாரும் ஓடிவந்தார்கள். வந்தவர்கள் அரசனுடைய இடக்கையின் சுண்டுவிரல் இரண்டு துண்டுகளாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்துபோய் நின்றார்கள். பின்னர் அரண்மனையில் இருந்த வைத்தியர்க்குச் செய்தி சொல்லப்பட்டு அவர் வரவழைக்கப்பட்டார். அவர் வெட்டப்பட்டுக் கிடந்த அரசனின் சுண்டுவிரலை ஒட்டுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். ஆனால், அது ஒட்டவே இல்லை. இதனால் அவர் அரசனின் வலி நீங்குவதற்கு மட்டும் வைத்தியம் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துபோனார்.

இதைத் தொடர்ந்து மந்திரி அரசனின் அருகில் வந்து, "அரசே! நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். 'எல்லாம் நன்மை' என்றார். இதைக் கேட்டு அரசனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. 'நாமோ விரலை இழந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இவர் என்னவென்றால், 'எல்லாம் நன்மைக்கே' என்று சொல்கிறாரே' என்று மனதில் நினைத்துக்கொண்டு தன் படைவீரர்களை அழைத்து, மந்திரியைப் பிடித்துச் சிறையில் அடைக்கச் சொல்ல, அவர்கள் அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்தார்கள். அப்பொழுதும் அவர் 'எல்லாம் நன்மைக்கே' என்றார். அரசன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.

இது நடந்து சில நாட்கள் கழித்து அரசன் தன் பரிவாரங்களோடு காட்டிற்கு வேட்டைக்குச் சென்றான். நடுக்காட்டை அடைந்ததும் அவனோடு வந்த படைவீரர்கள் வேறொரு பக்கம் போக, அவன் மட்டும் தனித்துவிடப்பட்டான். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த ஆதிவாசிகள் கூட்டம் அவனைப் பிடித்துப் பிடித்துக்கொண்டு போய், தங்களுடைய இஷ்ட தெய்வத்திற்கு பலியிடத் தயாரானார்கள்.

அந்த ஆதிவாசிகளின் கூட்டத்தின் தலைவன் அரசனைப் பலிபீடத்தில் கிடத்திய பின் தன்னுடைய கையில் இருந்த வாளை மேலே உயர்த்தி அரசனை வெட்ட முற்பட்டபோதுதான் கவனித்தான், அரசனுடைய இடக்கையின் சுண்டுவிரல் வெட்டுண்டு இருப்பதை. உடனே அவன், "குறைபாடோடு இருப்பவனைத் தெய்வத்திற்குப் பலியிடுவது நல்லதல்ல' என்று அவனை விடுவித்தான். அப்பொழுதுதான் அரசனுக்கு, 'எல்லாம் நன்மைக்கே' என்று மந்திரி சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே அவன் அங்கிருந்து அரண்மனைக்கு விரைந்து வந்து, சிறையில் இருந்த மந்திரியிடம், "மந்திரியாரே! நான் என்னுடைய சுண்டுவிரலை இழந்து நின்றபோது, நீங்கள் சொன்ன 'எல்லாம் நன்மைக்கே' என்பதன் அர்த்தம் விளங்கவில்லை. ஆதிவாதிகள் என்னை அவர்களுடைய இஷ்ட தெய்வத்திற்குப் பலிகொடுக்கத் தொடங்கியபோதுதான் அதன் அர்த்தம் விளங்கியது. இது புரியாமல் உங்களைச் சிறையில் அடைத்து வைத்துவிட்டேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்" என்றார்.

தொடர்ந்து அவர் மந்திரியிடம், "அது சரி, நான் உங்களைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டபோதும் நீங்கள் 'எல்லாம் நன்மைக்கே' என்று சொன்னேர்களே. அது ஏன்?" என்று கேட்டார். அதற்கு அவர் அரசனிடம், "நீங்கள் மட்டும் என்னைச் சிறையில் அடைக்காமல் இருந்திருந்தால், உங்களோடு நானும் ஆதிவாசிகளிடம் மாட்டியிருப்பேன். அப்பொழுது குறைபாடு இல்லாமல் இருக்கும் என்னை அவர்கள் பலியிட்டிருப்பார்கள். அதனால்தான் 'எல்லாம் நன்மைக்கே' என்றேன்" என்றார். இதைக் கேட்டு அரசன் வியந்துபோய் மந்திரியின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டினார்.

நம்முடைய வாழ்க்கையில் சில சமயங்களில் எதிர்பாராதவை நடக்கலாம். அவற்றையெல்லாம் நன்மைக்கே அல்லது இறைவனின் திருவுளம் என எடுத்துக்கொண்டு நடந்தால், நம்முடைய வாழ்வில் இன்பம்தான் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகத்திலும் இதை ஒத்த நிகழ்வு நடைபெறுகின்றது. நாம் அதைக் குறித்துச் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

உணவுப் பஞ்சம் ஏற்படுதலும் யாக்கோபின் குடும்பம் ஒன்று சேர்தலும்

எகிப்தையும் அதைச் சுற்றிலும் உள்ள நாடுகளிலும் உணவுப் பஞ்சம் ஏற்படுகின்றது. இந்நிலையில் கானான் நாட்டில் தன் புதல்வர்களோடு வாழ்ந்து வந்த யாக்கோபு, எகிப்தில் தானியங்கள் மிகுதியாக இருக்கின்ற செய்தியைக் கேள்விப்பட்டு, தன் புதல்வர்களை அங்கு அனுப்பி வைக்கின்றார்.

முன்னதாக யாக்கோபுவின் பத்துப் புதல்வர்களும் யோசேப்பின்மீது காழ்ப்புணர்வு கொண்டு அவரை இஸ்மாயலர்களிடம் விற்கிறார்கள். அவர்களிடமிருந்து பாரவோனின் அரண்மனைக்குள் ஒரு பணியாளராக நுழையும் யோசேப்பு, அரசனின் நன்மதிப்பைப் பெற்று, ஆளுநராகின்றார். பஞ்சக் காலத்தில் எல்லார்க்கும் ஏன், தன்னுடைய குடும்பத்திற்கே உணவிடும் அளவுக்கு உயர்கின்றார். யோசேப்பு இஸ்மாயலர்களிடம் விற்கப்பட்டது, துரதிஸ்டம் என்றாலும் கூட, அதுவே பஞ்சகாலத்தில் தன்னுடைய குடும்பத்திற்கு உணவிடுவதற்கு உதவியாக அமைகின்றது.

இது குறித்து யோசேப்பு தன் சகோதரர்களிடம் கூறும்போது, "நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால், கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு காக்கும்பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார்" (தொநூ 50:20) என்று கூறுவார். யோசேப்பின் வாழ்க்கையில் நடைபெற்ற இந்த எதிர்பாராத நிகழ்வைப் போன்று நம்முடைய வாழ்க்கையிலும் நடைபெறலாம். அதை நாம் இறைத்திருவுளமென ஏற்கப் பழகினால், எப்போதும் மகிழ்ச்சிதான்.

சிந்தனை

'நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்; தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார்' (திபா 115: 3) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகவே, நம்முடைய வாழ்வில் நடப்பவற்றை இறைத்திருவுளமாக ஏற்றுக்கொண்டு, அவருடைய திருவுளத்தின் படி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 10: 1-7

"தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார்"

நிகழ்வு

ஒரு சமயம் அமெரிக்கா ஐக்கிய மாகாணத்திலிருந்து சீனாவிற்குக் கப்பல் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்தக் கப்பலின் மேல்தளத்தில் இருவர் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் வணிகர். இன்னொருவர் கத்தோலிகக் குருவானவர்.

இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் கேட்டறிந்த பின், வணிகர் குருவானவரிடம் இவ்வாறு சொன்னார்: "ஐயா! நீங்கள் சீனாவிற்கு நற்செய்தி அறிவிக்கச் செல்வதால் இந்த உண்மையை உங்களிடம் சொல்கிறேன்... சில ஆண்டுகட்கு முன்னம், மர்பி என்று ஒரு குருவானவர் சீனாவிற்குச் சென்று நற்செய்தி அறிவித்துக்கொண்டிருந்தார். மிகச் சிறப்பான முறையில் நற்செய்தியை அறிவித்து வந்த அவரை சில கயவர்கள் தூக்கிக்கொண்டுபோய் பணம் தருமாறு மிரட்டினார். அவர்கள் கேட்ட பணம் வருவதற்குக் காலதாமதம் ஏற்படவே அவர்கள் அந்தக் குருவானவருடைய விரலை வெட்டி எறிந்தார்கள். பணம் வருவதற்கு மூன்று வாரங்கள் ஆனதால், அவரைத் தூக்கிக்கொண்டு போனவர்கள் அவருடைய மூன்று விரல்களை வெட்டி எறிந்திருந்தார்கள். பணம் வந்தபின்னே அவர்கள் அவரை விடுதலை செய்தார்கள். இப்பொழுது அந்தக் குருவானவர் அவருடைய சொந்த நாட்டிற்குப் போய்விட்டார் என்று நினைக்கிறேன். ஆகையால் நீங்கள் சீனாவில் நற்செய்தி அறிவிக்கும்போது கவனமாக இருங்கள்."

வணிகர் இவ்வாறு சொன்னதையடுத்து குருவானவர் அவரிடம் ஏதோ சொல்வதற்கு வாயை எடுத்தார். அதற்குள் சாப்பாட்டிற்கான மணி ஒலிக்கவே, இருவரும் விடைபெறத் தொடங்கினர். இருவரும் அவ்வாறு விடைபெறும்போது, தங்களுடைய கைகளைக் கொடுத்துவிட்டு விடைபெற்றனர். வணிகர் அவசரமாக குருவானவரிடமிருந்து விடைபெற்றதால், அவருடைய கையில் மூன்று விரல்கள் இல்லாதது அவர்க்குத் தெரியவில்லை.

ஆம், சீனாவிற்கு மீண்டுமாகச் சென்றுகொண்டிருந்த அந்தக் குருவானவர்தான் தன்னுடைய மூன்று விரல்களையும் இழந்தவர். அப்படியிருந்தும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், சீனாவில் உள்ள எல்லாரும் ஆண்டவரின் நற்செய்தி அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத் துணிவோடு சென்றுகொண்டிருந்தார்.

'கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்' (2 திமொ 1:7) என்பார் பவுல். பவுலின் இவ்வார்த்தைகட்கு ஏற்ப, வல்லமை/துணிவுள்ள உள்ளத்தோடு மர்பி என்ற அந்தக் குருவானவர் சீனாவிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார். இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, தம்மோடு இருக்கவும் நற்செய்தி அறிவிக்கவும் துணிவுள்ள பன்னிரு சீடர்களைத் தேர்ந்தெடுக்கின்றார். இயேசு சீடர்களைத் தேர்ந்துகொண்டதன் நோக்கமென்ன, அவர்கள் வழியாக இயேசு செய்தது என்ன என்று இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

தம்மோடு இருக்க

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு பன்னிரு சீடர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு சீடர்களை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதற்கான காரணம் இன்றைய நற்செய்தியில் சரியாகச் சொல்லப்படாவிட்டாலும், மாற்கு நற்செய்தியில் (3:14), தம்மோடு இருக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் இயேசு பன்னிருவரை நியமித்தார் என்று மிகத் தெளிவாகச் சொல்லப்படுகின்றது.

சீடர்கள் என்றால், அடிப்படையில் கற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கவேண்டும். கற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத ஒருவர் (இயேசுவின்) சீடராக இருக்கமுடியாது. மேலும் கற்றுகொள்வது நிகழவேண்டும் என்றால், சீடர் குருவோடு இருக்கவேண்டும். அதைத்தான் மாற்கு நற்செய்தியாளர், தம்மோடு இருக்க இயேசு சீடர்களைத் தேர்ந்தெடுத்தார் என்று பதிவுசெய்கின்றார். இயேசுவின் சீடர்கள் அவரோடு இருந்து நிறையக் கற்றுக்கொண்டார்கள்.

நற்செய்தியைப் பறைசாற்ற

இயேசு பன்னிருவரைத் தம்மோடு இருக்க தேர்ந்தெடுத்தது என்பது முதல்படி என்றால், நற்செய்தி அறிவிக்க என்பது இரண்டாவது படி. இயேசுவின் சீடர்கள் அவரோடு இருந்து, நிறையக் கற்றிருக்கவேண்டும். அவ்வாறு கற்றுக்கொண்டத்தை அவருடைய சீடர்கள் மற்றவர்க்கும் அறிவிக்கவேண்டும். அப்பொழுதுதான் சீடத்துவ வாழ்வானது முழுமை பெறும்.

இயேசு தன்னுடைய சீடர்கள் தன்னோடு இருந்து ஓரளவு பயிற்சி பெற்றதைத் தொடர்ந்து, அவர் அவர்கட்கு பேய்களை ஒட்டவும் பிணிகளைப் போக்கவும் அதிகாரம் கொடுத்து, அவர்களை விண்ணரசு பற்றிய நற்செய்தியை அறிவிக்க மக்கள் மத்தியில் அனுப்பி வைக்கின்றார். அவர்களும் மக்களிடம் சென்று விண்ணரசு பற்றிய நற்செய்தியை அறிவிக்கின்றார்கள். அப்படியானால், இயேசுவின் வழியில் நடக்கின்ற அவருடைய சீடர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இயேசுவை அறிந்தபின்பு அவரைப் பற்றி மக்கட்கு அறிவிப்பது கடமையாகும்.

சிந்தனை

'நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு' (1 கொரி 9:16) என்பார் பவுல். நாமும் ஆண்டவர் இயேசுவின் சீடராய் இருந்து, நற்செய்தி அறிவிப்பது நம்முடைய கடமை என்பதை உணர்ந்து, அவருடைய நற்செய்தியை அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!