Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         09 ஜூலை 2019  
                                  பொதுக்காலம் 14ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 

=================================================================================
உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாது. 'இஸ்ரயேல்' எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 32: 22-32

யாக்கோபு எழுந்து, தம் இரு மனைவியரையும் இரு வேலைக்காரிகளையும் புதல்வர் பதினொருவரையும் அழைத்துக் கொண்டு யாபோக்கு ஆற்றின் துறையைக் கடந்தார். அப்படி அவர்களை ஆற்றைக் கடக்கச் செய்தபோது, தமக்கிருந்த அனைத்தையும் அனுப்பி வைத்தார்.

யாக்கோபு மட்டும் இவ்வாறு தனித்திருக்க, ஓர் ஆடவர் பொழுது விடியுமட்டும் அவரோடு மற்போரிட்டார். யாக்கோபை வெற்றி கொள்ள முடியாது என்று கண்ட அந்த ஆடவர் அவரது தொடைச்சந்தைத் தொட்டார். யாக்கோபு அவரோடு மற்போரிடுகையில் தொடைச்சந்து இடம் விலகியது.

அப்பொழுது ஆடவர் 'என்னைப் போக விடு; பொழுது புலரப்போகிறது' என, யாக்கோபு, 'நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போக விடேன்" என்று மறுமொழி சொன்னார்.

ஆடவர், 'உன் பெயர் என்ன?" என, அவர்: 'நான் யாக்கோபு" என்றார்.

அப்பொழுது அவர், 'உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாது, 'இஸ்ரயேல்' எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்" என்றார்.

யாக்கோபு அவரை நோக்கி, 'உம் பெயரைச் சொல்லும்" என்றார். அவர், `'என் பெயரை நீ கேட்பதேன்?" என்று, அந்த இடத்திலேயே அவருக்கு ஆசி வழங்கினார்.

அப்பொழுது யாக்கோபு, 'நான் கடவுளின் முகத்தை நேரில் கண்டும் உயிர் தப்பிப் பிழைத்தேன்" என்று சொல்லி, அந்த இடத்திற்குப் 'பெனியேல்' என்று பெயரிட்டார்.

அவர் பெனியேலுக்கு அப்பால் சென்றவுடன் கதிரவன் தோன்றினான். தொடை விலகியதால் அவரும் நொண்டி நொண்டி நடந்தார். அதன் பொருட்டு, இஸ்ரயேலர் இந்நாள்வரை தொடைச்சந்துச் சதை நாரை உண்பதில்லை. ஏனென்றால், அந்த ஆடவர் யாக்கோபின் தொடைச்சந்துச் சதை நாரைத் தொட்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 17: 1. 2-3. 6-7. 8, 15 (பல்லவி: 15a)
=================================================================================
பல்லவி: நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்.

1 ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். பல்லவி

2 உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்; உம் கண்கள் நேரியன காணட்டும். 3 என் உள்ளத்தை ஆய்ந்தறியும்; இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்; என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்; தீமை எதையும் என்னிடம் காண மாட்டீர்; என் வாய் பிழை செய்யக் கூடாதென உறுதி கொண்டேன். பல்லவி

6 இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும். 7 உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே! பல்லவி

8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். 15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 10: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 32-38

அக்காலத்தில் பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, 'இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை" என்றனர்.

ஆனால் பரிசேயர், 'இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்" என்றனர்.

இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய்நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்.

அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, 'அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

இன்றைய தேவை அறுவடைக்கு ஆண்டவரை மன்றாடுவதா அல்லது மந்தையின் மேய்ப்பர்களுக்காகவா?

ஊழியத்திற்கு வந்தவர்களுக்காக மன்றாடுவதே இன்றைய காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

மந்தையை சிதறடிக்கும் மேய்ப்பர்களும், தவறான மாதிரிகை காட்டும் ஊழியகாரர்களும், போதனையை செய்ய இன்று எந்த பயிற்சியும், முயற்சியும் இல்லாது ஈடுபடுவோருக்காக மன்றாடுவது காலத்தின் கட்டாயமாக அமைந்துள்ளது.

ஏல்லாரும் போதகர்கள் ஆக வேண்டாம் என யாக்கோபு கூறிப்பிடுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது உள்ளது.

இளைஞர்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ள சலிப்புத் தன்மைக்கு காரணம் கண்டு, அதனை அகற்ற முயற்சியும், அதற்காய் செபிப்பதும் அவசியமானதாக உள்ளது.

இளைஞர்கள் ஆர்வமாய் தான் உள்ளனர். அழைக்கின்றவரும் தன் பணிக்காய் அழைத்துக் கொண்டே தான் இருக்கின்றார். அழைக்கப்பட்டவர்களின் வாழ்வு மாதிரிகையாய் அழையாமல் போகும் போது, இத்தகைய சலிப்புத ;தன்மை ஏற்படுகின்றது.

உரிய காலத்தில் அவரின் குறிக்கீடு இருக்கும் என பழைய உடன்படிக்கை நூலில் உள்ள எச்சரிக்கையை ஏற்று மனம் திருந்துவது, மனம் மாறுவது நல்லது.

இதற்காய் செபிப்போம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 தொடக்க நூல் 32: 22-32

"நீ எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடமாட்டேன்"

நிகழ்வு

புனித நாடுகட்குத் திருப்பயணமாக இலண்டனிலிருந்து கில்பர்ட் பெக்கட் என்ற வணிகரும் அவருடைய உதவியாளரும் சென்றனர். போகும் வழியில் அரபு நாட்டைச் சார்ந்த முகமதியர் ஒருவர் இருவரையும் பிடித்து வைத்து, அடிமைகளைப் போன்று நடத்தத் தொடங்கினார். இதற்கிடையில் அந்த முகமதியர்க்கு ஒரு மகள் இருந்தாள். அவள் கில்பர்ட் பெக்கட்டின் மீது காதல் கொள்ளத் தொடங்கினாள். தொடக்கத்தில் அந்தப் பெண்ணின் காதலை கில்பர்ட் பெக்கட் ஏற்க மறுத்தாலும், நாட்கள் ஆக ஆக அவர் அவளுடைய காதலை ஏற்கத் தொடங்கி, இருவரும் ஒருவர் மற்றவரை மனதாரக் காதலிக்கத் தொடங்கினர்.

இப்படியே நாட்கள் சென்றுகொண்டிருக்க கில்பர்ட் பெக்கட்டை அடிமையாக வைத்திருந்த முகமதியரின் கொடுமை தாங்க முடியாமல், ஒருநாள் இரவு கில்பர்ட் பெக்கட்டும் அவருடைய உதவியாளரும் அவரிடமிருந்து தப்பித்து, கப்பல் வழியாக இங்கிலாந்தை அடைந்தனர். அங்கு போன சில நாட்கட்கு கில்பர்ட் பெக்கட், 'என்னை மிகவும் நேசிக்கும் என்னுடைய காதலியை விட்டுவிட்டு இப்படி ஓடிவந்துவிட்டோனே' என மிகவும் வருந்தினார். ஆனால், நாட்கள் உருண்டோடத் தொடங்கியதும் அவர் அவளை மறந்துவிட்டு தன்னுடைய வியாபாரத்தைப் பார்க்கத் தொடங்கினார்.

இன்னொரு பக்கம் கில்பர்ட் பெக்கட்டை நினைத்து அவருடைய காதலி ஒவ்வொரு நாளும் உருகிக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் கில்பர்ட் பெக்கட் நினைவு அவளை மிகவும் வருத்தவே, அவள் மாறுவேடம் பூண்டு, வீட்டை விட்டு வெளியேறி கில்பர்ட் பெக்கட் இருக்கும் இலண்டனுக்குப் புறப்படத் தயாரானாள். அப்பொழுது அவளுக்கு ஒரு சின்னத் தடுமாற்றம் ஏற்பட்டது. 'அவ்வளவு பெரிய இலண்டனில் என் காதலன் கில்பர்ட் பெக்கட்டை எப்படிக் கண்டுபிடிப்பது? அங்குள்ளவர்கள் பேசும் மொழியும் எனக்குத் தெரியாதே!' என்பதுதான் அவளுடைய தடுமாற்றத்திற்குக் காரணமாக இருந்தது. இருந்தாலும் மனதில் நம்பிக்கையும் தைரியத்தையும் வரவழைத்துக்கொண்டு, இலண்டனைச் நோக்கிச் சென்ற அவள் ஒரு கப்பலில் ஏறினாள். பயணத்திற்குக் கட்டணமாக தான் அணிந்திருந்த நகைகளைத் தந்தாள்.

கப்பல் பயணத்தைத் தொடங்கி, ஒரு குறிப்பிட்ட நாளில் இலண்டனை அடைந்தது. கப்பலிலிருந்து இறங்கியவள் 'இலண்டன்', 'கில்பர்ட் பெக்கட்' என்ற இரண்டு வார்த்தைகளை மீண்டும் மீண்டுமாக உச்சரித்துக்கொண்டு, இலண்டன் தெருக்களில் நடந்து சென்றாள். நாட்கள் கடந்து சென்றபோதும் அவளால் அவளுடைய காதலனைக்க் கண்டுகொள்ள முடியவில்லை. இருந்தாலும் விடாமுயற்சியோடு அவள் அவரைத் தேடினாள். அவள் 'இலண்டன்', 'கில்பர்ட் பெக்கட்' என்ற இரண்டு வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப சொல்லியதைப் பார்த்துவிட்டு, எல்லாரும் ஆச்சரியமாக அவளைப் பார்த்தார்கள். ஆனாலும் அவள் யாரைப் பற்றியும் கவலைப்படாமல், அந்த இரண்டு வார்த்தைகளையும் திரும்பத் திரும்ப உச்சரித்துக்கொண்டு இலண்டன் தெருக்களில் நடந்து சென்றாள்.

ஒருநாள் காலை வேளையில் அவள் லண்டனின் தெருக்களில் இரண்டு வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப உச்சரித்துக்கொண்டு செல்வதைப் பார்த்த கில்பர்ட் பெக்கட்டின் உதவியாளர் செய்தியை அவரிடம் போய்ச் சொன்னார். உடனே அவர் தன்னைத் தேடித் தன்னுடைய சொந்த ஊர்க்கே வந்திருந்த தன்னுடைய காதலியிடம் ஓடிவந்து, அவளைக் கடித் தழுவி முத்தமிட்டார். இதற்கு பிறகு அவர்கள் இருவரும் அருட்சாதனம் முடித்து மிகவும் மகிழ்ச்சியாக தொடங்கினார்கள்.

தன்னுடைய காதலனை விடாமுயற்சியோடு தேடி, இறுதியில் கண்டுகொண்ட அந்தப் பெண் நமக்கு கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். இன்றைய முதல் வாசகத்தில் யாக்கோபு தன்னோடு இரவு முழுக்க மற்போரிட்டவரிடம், நீர் எனக்கு ஆசி வழங்கினாலோழிய நான் உம்மைப் போகவிடமாட்டேன் என்று விடாமுயற்சியோடு போராடி, இறுதியில் ஆசி பெறுகின்றார். தன்னுடைய விடாமுயற்சியால் யாக்கோபு இறைவனிடமிருந்து எத்தகைய ஆசியைப் பெறுகின்றார் என்று இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

விடாமுயற்சியோடு போராடிய யாக்கோபு

யாக்கோபு, யாபோக்கு ஆற்றைக் கடந்த பின்பு தனித்திருக்கும்போது ஆடவர் ஒருவர் அவரோடு இரவு முடியும் மட்டும் மற்போர் புரிகின்றார். ஆனால், யாக்கோபு அவரோடு விடாமுயற்சியோடு போராடி இறுதியில் வெற்றி பெறுகின்றார். அது மட்டுமல்லாமல், தனக்கு ஆசி வழங்கினாலொழிய போகவிடமாட்டேன் என்று சொல்லி அவரிடமிருந்து ஆசியையும் அவர் பெற்றுக்கொள்கின்றார்.

யாக்கோபுவிடம் விளங்கிய இந்த விடாமுயற்சி நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்கின்றது. இறைவனிடம் வேண்டுவதாக இருக்கட்டும், எந்தவொரு செயலைச் செய்வதாக இருந்தாலும் அதை விடாமுயற்சியோடு செய்திட்டால், வெற்றி நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

சிந்தனை

'தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது, கடவுள் அவர்கட்கு நீதி வழங்காமல் இருப்பாரா? விரைவில் அவர்கட்கு நீதி வழங்குவார் என்ற உறுதியாக உங்கட்குச் சொல்கிறேன்' (லூக் 18: 7-8) என்பார் இயேசு. ஆகையால், இறைவனிடம் விடாமுயற்சியோடு மனந்தளராமலும் மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 9: 32-38

அறுவடை மிகுதி வேலையாட்களோ குறைவு

நிகழ்வு

மியான்மார் மக்கள் பேசும் பர்மிய மொழியில் திருவிவிலியத்தை மொழிபெயர்த்தவர் அதோனிரம் ஜூட்சன் (Adoniram Judson) என்பவர். அமெரிக்கரான இவர் எப்படி மியான்மார்க்குச் சென்றார், அங்கு அவர் என்னென்ன பணிகளைச் செய்தார் என்று அறிந்துகொள்வது மிகவும் நல்லது.

1788 ஆம் ஆண்டு பிறந்த இவர், குருத்துவப் படிப்பினை முடித்தபின் பாஸ்டன் நகரில் உதவிக் குருவாக நியமிக்கப்பட்டார். இவர் பாஸ்டன் நகரில் உதவிக் குருவாக நியமிக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட இவருடைய குடும்பத்தில் இருந்த அனைவரும், 'பாஸ்டன் எவ்வளவு பெரிய இடம்... அங்கு நம்முடைய குடும்பத்திலிருந்து ஒருவர் உதவிக் குருவாக நியமிக்கப்படுவது என்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய விடயம்" என்று மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

ஆனால், அதோனிரம் ஜூட்சன் மற்ற எல்லாரையும் போன்று, தான் பாஸ்டனில் உதவிக் குருவாக நியமிக்கப்பட்டதை நினைத்து மகிழ்ச்சியடையவில்லை. மாறாக அவர் அவருடைய மறைமாவட்டப் பேராயரைச் சந்தித்து, "நான் பாஸ்டன் நகரில் உதவிக் குருவாக பணியாற்றுவதை விடவும் கடல்கடந்து சென்று நற்செய்திப்பணி செய்வது எனக்குப் பிடித்திருக்கின்றது" என்றார். இதைக் கேட்டதும் அதோனிரம் ஜூட்சனின் பேராயர் வியந்து போய், "எல்லாரும் பாஸ்டனில் பணிசெய்வதை மிகவும் விரும்புவார்கள். அப்படியிருக்கும்போது நீங்கள் அதை விரும்பாமல், எங்கோ சென்று பணிசெய்யப் போவதாகச் சொல்கிறீர்களே" என்று கேட்டதற்கு அவர், "பாஸ்டனில் பணிசெய்வதற்கு எத்தனையோ பர் இருக்கிறார்கள்... ஆசியக் கண்டத்தில் பணிசெய்வதற்குத்தான் ஆட்கள் இல்லை... அதனால்தான் நான் அங்கு செல்கின்றேன்" என்றார்.

அதோனிரம் ஜூட்சன் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பேராயர், "உங்களுடைய நோக்கம் மிகவும் உயர்ந்தது. உங்களுடைய விரும்பம் போன்று நீங்கள் ஆசியக் கண்டத்திற்குச் சென்று நற்செய்தி அறிவியுங்கள்" என்றார். இதற்குப் பின்பு அதோனிரம் ஜூட்சன் ஆசியாவில் உள்ள மியான்மார் அல்லது பர்மாவிற்கு வந்து, அங்குள்ள மக்கட்கு நற்செய்தி அறிவித்து ஆயிரக்கணக்கான மக்களை ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார். அதன்பின்னர் அங்குள்ள மக்கள் இயேசுவை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு வசதியாகத் திருவிவிலியத்தை அவர்களுடைய மொழியில் மொழிபெயர்த்தார். இவ்வாறு அவர் ஆண்டவரின் நற்செய்தியை பர்மா நாட்டு மக்கள் அறிந்துகொள்வதற்குக் காரணமானார்.

மறைபோதகரான அதோனிரம் ஜூட்சன் நினைத்திருந்தால் பாஸ்டன் நகரில் மிகவும் இலகுவாக, வசதியாக நற்செய்திப் பணி செய்திருக்கலாம். ஆனால், அவர் இயேசுவைப் பற்றிக் கேட்டிராத, அறிந்திராத பர்மா மக்கட்கு நற்செய்தியை அறிவிக்க தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்தது நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகம் அதிகமாக இருக்கும் அறுவடைக்குத் தேவையான ஆட்கள் வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

மிகுதியாக இருக்கும் அறுவடை

நற்செய்தியில் ஆண்டவர் நகர்கள், சிற்றூர்கள் மற்றும் யூதர்களின் தொழுகைக்கூடங்கட்குச் சென்று, விண்ணரசு பற்றிய நற்செய்தியை அறிவித்து வருகின்றார். அப்படி அறிவிக்கும்போது எத்தனை மக்கட்கு நற்செய்தி அறிவிக்கப்படுவதன் தேவையை உணர்கின்றார். அதனால்தான் அவர் தன் சீடர்களிடம், "அறுவடை மிகுதி. வேலையாட்களோ குறைவு" என்கின்றார். இயேசு கூறும் இவ்வார்த்தைகள் நமக்கு ஒரு முக்கியமான செய்தியை உணர்த்துகின்றது. அது என்னவெனில், ஆண்டவருடைய பணியைத் தனியாகச் செய்ய முடியாது, மாறாக எல்லாருடைய கூட்டு முயற்சியால்தான் செய்யமுடியும் என்பதாகும். ஆகவே, எல்லாரும் சேர்ந்து செய்யவேண்டிய இறையாட்சிப் பணியைச் செய்வதற்கு ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்.

ஆண்டவரின் நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?

'அறுவை மிகுதி, வேலையாட்களோ குறைவு' என்று இயேசு சொல்கின்றார் எனில், மிகுதியாக இருக்கும் அறுவடையை அல்லது இறையாட்சிப் பணியை நாம் எப்படிச் செய்யப் போகிறோம் என்பது பற்றிச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் On Being a Missionary என்ற நூலில் அதன் ஆசிரியர் தாமஸ் ஹலே (Thomas Hale) சொல்லக்கூடிய வார்த்தைகள் நம்முடைய கவனத்திற்கு உரியவையாக இருக்கின்றன. "சிலர் கூறுகின்றார்கள் 'மறைபரப்புப் பணிக்குப் பணவுதவி செய்தாலே போதும்' என்று. மறைபரப்புப் பணிக்கு பணவுதவி தேவைதான். ஆனால், அதைவிடவும் நம்மையே அதற்கு அர்ப்பணிப்பது மிகவும் சிறந்தது." இச்செய்தியைத்தான் தாமஸ் ஹலே தன்னுடைய புத்தகத்தில் பதிவுசெய்கின்றார்.

ஆகவே, நாம் ஒவ்வொருவரும் நற்செய்திப் பணிக்கு நம்மை எந்தளவுக்கு அர்ப்பணிக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்த்து, இயேசுவின் நற்செய்தி எல்லா மக்கட்கும் அறிவிக்கப்பட எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

சிந்தனை

'இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்' என்று இறைவாக்கினர எசாயா, 'யாரை நான் அனுப்புவேன். எனது பணிக்காக யார் போவார்?' என்று கேட்கின்ற ஆண்டவரிடம் சொல்வார் (எசாயா 6:8). நாமும் எசாயாவைப் போன்று ஆண்டவரின் பணிசெய்ய நானிருக்கிறேன் என்று சொல்லி முன்வருவோம். அவர் பணியைச் சிறப்பாகச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 முதல் வாசகம் (தொநூ 32:22-32)

உம்மைப் போகவிடேன்

'நான் உம்மைப் போகவிடேன்!' என்று உங்களிடம் யாராவது சொல்லியிருக்கிறார்களா?

'என் வீட்டில் உணவருந்தாமல் நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்!'

'நீ என்னோடு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்காமல் நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்!'

'நீ என்னைக் குணப்படுத்தாமல் நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்!'

'நீ இந்தப் பத்திரத்தில் கையெழுத்து போடாமல் நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்!'

'நீ வழக்கைத் திரும்பப் பெறாமால் நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்!'

'நீ என் வண்டியை இடிச்சதுக்கு ஈடு தராமல் நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்!'

- இப்படியாக அன்பு, நட்பு, பிளவு, விரிசல், பிரச்சினை வரை, 'நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்' என்று நான் மற்றவரிடமும், மற்றவர்கள் நம்மிடமும் என வார்த்தைப் பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் யாக்கோபு, தன்னுடன் மற்போர் செய்த ஆடவரிடம், 'நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்!' என்கிறார்.

இந்த நிகழ்வின் பின்புலம் என்ன?

தன் சகோதரன் ஏசாவை ஏமாற்றி தலைப்பேறு உரிமையையும், ஆசீரையும் வாங்கிக்கொண்டு, தன் மாமா லாபானிடம் தப்பி ஓடுகின்றார் யாக்கோபு. அங்கே லாபானால் ஏமாற்றப்படுகிற யாக்கோபு அங்கிருந்து தப்பி மீண்டும் தன் ஊர் திரும்புகின்றார். திரும்பும் வழியில் இவர் தன் சகோதரன் ஏசாவை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம். தன் சகோதரனை ஏமாற்ற இன்னொரு வழியைக் கண்டுபிடிக்கலாமே! என்ற எண்ணத்தில் யாக்கோபு இருக்கும்போதுதான், பெயர் தெரியாத ஆ(ண்)டவரோடு மற்போர் நிகழ்கிறது.

இது யாக்கோபின் உள்ளத்திலிருந்து ஒரு போர் என்று இதைச் சொல்லலாம்.

'ஏமாற்றுவதா? வேண்டாமா?' என்று மனத்திற்குள் போராடி, 'ஏமாற்றுவதில்லை. சகோதரனை நேருக்கு நேர் எதிர்கொள்வோம்' என்று முடிவெடுக்கிறார் யாக்கோபு. ஆகையால்தான், 'யாக்கோபு' (ஏமாற்றுபவன்) என்ற பெயர் மாற்றப்பட்டு, 'இஸ்ரயேல்' (போரிடுபவன்) என்ற பெயர் அவருக்கு வழங்கப்படுகிறது.

நிகழ்வின் இறுதியில் யாக்கோபு நொண்டி நொண்டி நடக்கிறார்.

அதாவது, தனக்கு எல்லா நேரமும் வெற்றி கிடைக்க வேண்டும், தனக்கே எல்லாம் வேண்டும், தன்னைத் தவிர இவ்வுலகில் யாரும் சிறந்தவர் இல்லை என்ற நிலையிலிருந்து இறங்கி, தன்னுடைய வலுவின்மையை முதன்முதலாக ஏற்றுக்கொள்கிறார் யாக்கோபு.

இங்கே மனம் மாறுகின்ற யாக்கோபு துணிவுடன் ஏசாவை எதிர்கொள்கிறார்.

இந்த வாழ்க்கை மாற்றம் தான் இவர் பெற்ற ஆசி.

ஆகையால், 'நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய நான் உம்மைப் போகவிடேன்' என அடம் பிடிக்கிறார் யாக்கோபு.

நம் மனத்திலும் சில போராட்டங்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக, எனக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். என்னுடைய இந்தப் பழக்கத்திற்கு நானே நியாயம் கற்பிப்பேன். 'யார்தான் குடிக்கல?' 'நான் மட்டும்தான் தப்ப செய்றேனா?' 'அடுத்தவரை ஏமாற்றி வாங்கிய பணத்திலா குடிக்கிறேன். என் பணத்தில்தானே குடிக்கிறேன்!' 'நான் குடித்துவிட்டு சண்டையா போடுறேன்' என்றெல்லாம் நிறையக் கேள்விகள் கேட்பேன். 'நான் விட்டுவிட நினைக்கும் ஒன்றின் மேல் இன்னும் என் மனம் சென்றால் அங்கேயேதான் நான் இருக்கிறேன்' என்பது செல்டிக் ஞானம். 'விட்டுவிட்டால் என்ன ஆகும்?' 'விடாவிட்டால் என்ன?' என்ற கேள்விகளும் என் மனத்தில் பெரிய போராட்டத்தை ஏற்படுத்தும். 'விட்டுவிடலாம்' என்பதற்கு என் மூளை நூறு பதில்கள் தரும். 'விட்டுவிட வேண்டாம்' என்பதற்கும் நூறு பதில்கள் தரும். இப்படிப்பட்ட நேரத்தில்தான் நான் கடவுளிடம், 'நீர் எனக்கு ஆசி வழங்கினாலன்றி நான் உம்மைப் போகவிடேன்!' என்று அடம் பிடிக்க வேண்டும்.

இந்த நேரத்தில், 'கடவுள் இருக்கிறாரா?' என்று கேட்டு மூளை இன்னும் என்னைக் குழப்பிவிடும்.

யாக்கோபின் போராட்டங்கள் போல நம் வாழ்வின் போராட்டங்கள் எளிதாய் இருப்பதில்லை.

இந்த இழுபறி நிலையைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 9:32-38) பார்க்கிறோம். 'ஆயர் இல்லா ஆடுகள் போல மக்கள் அலைக்கழிக்கப்பட்டதைக் கண்டு அவர்கள் மேல் பரிவு கொள்கிறார்' இயேசு.

அலைக்கழிக்கப்பட்டு, 'ஏமாற்றவா?' 'வேண்டாமா' என்ற போராடிய யாக்கோபு வெல்கிறார்.

நொண்டி நொண்டி நடத்தல் கூட, 'இனி ஏமாற்றக் கூடாது' என்பதற்கான வெளிப்புற அடையாளமாக, நினைவூட்டலாக அவருக்கு மாறியிருக்கலாம்.


Rev. Fr. Yesu Karunanidhi


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!