|
|
06 ஜூலை 2019 |
|
|
பொதுக்காலம் 13ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
யாக்கோபு தன் சகோதரனை வஞ்சித்து, அவனுக்குரிய ஆசியைக் கவர்ந்து
கொண்டான்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 27: 1-5, 15-29
ஈசாக்கு முதிர்ந்த வயதை அடைந்தபோது அவர் கண்களின் பார்வை மங்கிப்போயிற்று.
அவர் தம் மூத்த மகன் ஏசாவை அழைத்து, 'என் மகனே' என்றார்; ஏசா,
'இதோ வந்து விட்டேன்' என்றான்.
அவர் அவனை நோக்கி, "இதோ பார்; எனக்கு வயதாகிவிட்டது. சாவு எந்நாள்
வருமோ என்று அறியேன். இப்பொழுது உன் கருவிகளான வில்லையும் அம்புக்
கூட்டையும் எடுத்துக்கொள். காட்டுக்குப் போ. வேட்டையாடி, எனக்கு
வேட்டைக் கறி கொண்டுவா. நான் விரும்பும் முறையில் சுவையான உணவு
வகைகளைச் சமைத்து என்னிடம் கொண்டு வா. நான் அவற்றை உண்பேன்.
நான் சாகுமுன், உனக்கு மனமார ஆசி வழங்குவேன்" என்றார்.
ஈசாக்கு தம் மகன் ஏசாவிடம் பேசியதை ரெபேக்கா கேட்டுக்
கொண்டிருந்தார். வேட்டையாடி வேட்டைக்கறி கொண்டு வருமாறு ஏசா
காட்டிற்குப் புறப்பட்டவுடன் ரெபேக்கா தம்முடன் வீட்டில்
வைத்திருந்த தம் மூத்த மகன் ஏசாவின் உடைகளில் சிறந்தவற்றைத் தம்
இளைய மகன் யாக்கோபுக்கு உடுத்துவித்தார்.
அவன் கைகளையும் மிருதுவான கழுத்தையும் வெள்ளாட்டுக் குட்டிகளின்
தோலால் மூடினார். அவர் சுவையான உணவு வகைகளையும், தாம் சுட்ட அப்பங்களையும்
தம் மகன் யாக்கோபின் கையில் கொடுத்தார்.
அவனும் அவற்றைத் தன் தந்தையிடம் எடுத்துச்சென்று,
'அப்பா' என்று
அழைத்தான்.
அவரும் மறுமொழியாக,
'ஆம் மகனே, நீ எந்த மகன்?' என்று கேட்க,
யாக்கோபு தன் தந்தையிடம், "நான்தான் உங்கள் தலைப்பேறான ஏசா.
நீங்கள் சொன்னவாறு செய்திருக்கிறேன். எழுந்து உட்கார்ந்து என்
வேட்டைப் பதார்த்தங்களை உண்டு மனமார எனக்கு ஆசி வழங்குங்கள்"
என்றான்.
ஈசாக்கு தன் மகனை நோக்கி, "மகனே! இது உனக்கு இவ்வளவு விரைவில்
எப்படி அகப்பட்டது?" என்று கேட்க, அவன், "உம் கடவுளாகிய ஆண்டவரால்தான்
எனக்கு இது நிகழ்ந்தது," என்றான்.
ஈசாக்கு யாக்கோபிடம், "மகனே, அருகில் வா, நீ உண்மையிலேயே என்
மகன் ஏசாதானா என்று நான் உன்னைத் தடவிப் பார்த்துத்
தெரிந்துகொள்வேன்" என்றார்.
யாக்கோபு தன் தந்தை அருகில் வந்தான். ஈசாக்கு அவனைத் தடவிப்
பார்த்து, 'குரல் யாக்கோபின் குரல்; ஆனால் கைகளோ ஏசாவின் கைகள்'
என்றார். அவன் கைகள் அவன் சகோதரன் ஏசாவின் கைகளைப் போல் உரோமம்
அடர்ந்தவையாய் இருந்ததால், அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
எனவே அவனுக்கு ஆசி வழங்கினார்.
மீண்டும் அவர் 'நீ உண்மையிலேயே என் மகன் ஏசாதானா?' என்று வினவ,
அவனும் 'ஆம்' என்றான்.
அப்பொழுது அவர், மகனே, உண்பதற்கு வேட்டைப் பதார்த்தங்களைக்
கொண்டு வா. மனமார நான் உனக்கு ஆசி வழங்குவேன்' என்றார். அவ்வாறே
யாக்கோபு கொண்டுவர, அவர் அதை உண்டார். பின், அவன் திராட்சை ரசம்
கொண்டுவர, அவர் அதைக் குடித்தார்.
அப்பொழுது அவன் தந்தை ஈசாக்கு அவனை
நோக்கி, 'மகனே, அருகில் வந்து
என்னை முத்தமிடு' என்றார்.
அவனும் அருகில் போய் அவரை முத்தமிட, ஈசாக்கு அவன் அணிந்திருந்த
ஆடைகளின் நறுமணத்தை முகர்ந்து ஆசி வழங்கி உரைத்தது இதுவே: "இதோ,
என் மகனிடமிருந்து எழும்பும் நறுமணம்! ஆண்டவரின் ஆசிபெற்ற விளை
நிலத்தின் வாசனையாம்! வானின் பனித் துளியும், மண்ணின்
செழுமையும், மிகுந்த தானியமும், திராட்சை இரசமும் கடவுள் உனக்கு
வழங்குவாராக! நாடுகள் உனக்குப் பணி புரிந்திடுக! மக்கள் உனக்குப்
பணிந்திடுக! உன்றன் சோதரர்க்குத் தலைவன் நீ ஆகிடுவாய்! உன் அன்னையின்
மைந்தர் உன்னடி பணிந்திடுவர்! உன்னைச் சபிப்பார் சாபம் பெறுக!
உன்னை வாழ்த்துவார் வளமுற வாழ்க!" என்று ஆசி வழங்கினார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
135: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 3a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரைப் புகழுங்கள்! ஏனெனில், அவர் நல்லவர்.
1 ஆண்டவரின் பெயரைப் புகழுங்கள்; ஆண்டவரின் ஊழியரே! அவரைப் புகழுங்கள்.
2 ஆண்டவரின் கோவிலுள் நிற்பவர்களே! நம் கடவுளின் கோவில் முற்றங்களில்
உள்ளவர்களே! பல்லவி
3 ஆண்டவரைப் புகழுங்கள்! ஏனெனில், அவர் நல்லவர்; அவரது பெயரைப்
போற்றிப் பாடுங்கள்; ஏனெனில், அவர் இனியவர். 4 ஆண்டவர்
யாக்கோபைத் தமக்கென்று தேர்ந்துகொண்டார்; இஸ்ரயேலைத் தமக்குரிய
தனிச் சொத்தாகத் தெரிந்தெடுத்தார். பல்லவி
5 ஆண்டவர் மேன்மைமிக்கவர் என்பதை அறிவேன்; நம் ஆண்டவர் எல்லாத்
தெய்வங்களுக்கும் மேலானவர் என்பதும் எனக்குத் தெரியும். 6
விண்ணிலும் மண்ணிலும் கடல்களிலும் எல்லா ஆழ்பகுதிகளிலும், ஆண்டவர்
தமக்கு விருப்பமான யாவற்றையும் செய்கின்றார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச்
செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்
பின்தொடர்கின்றன. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள்
துக்கம் கொண்டாட முடியுமா?
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-17
அக்காலத்தில் யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, "நாங்களும் பரிசேயரும்
அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?"
என்றனர்.
அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்கும்வரை
மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை
விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்பொழுது அவர்களும்
நோன்பு இருப்பார்கள்.
மேலும் எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை.
ஏனெனில் அந்த ஒட்டு ஆடையைக் கிழித்துவிடும்; கிழிசலும்
பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை
ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் தோற்பைகள் வெடிக்கும்; மதுவும்
சிந்திப்போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய
தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் வீணாய்ப்
போகா" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை:
வஞ்சிப்பது பாவம். கவர்ந்து கொள்வது பாவம். இது நீதிக்கெதிரான
குற்றமாகும். பிறருக்குரியதை அவருக்கு கொடுக்காமல் பறித்துக்
கொள்வது பாவச் செயலே.
பத்துக் கட்டளைகளில் கடைசி இரண்டு கட்டளை பிறர் தாரத்தை, பிறர்
உடைமையை விரும்பாதிருப்பாயாக என்ற கட்டளைக்கு எதிரானது.
பார்வை குறைபாடோடு உள்ள மனிதனை வஞ்சிப்பது கொடும் செயலே. தனக்கு
பலமானவர்களை அல்லாமல், தன்னைவிட வலுக்குறைந்த மனிதர்களிடமிருந்தே
வஞ்சித்துப் பறிக்கிறார்கள், இது சற்றே கூடுதலான பாவச் செயலே.
வலுக்குறைந்தவர்களுக்கு ஆண்டவரே துணை. ஆண்டவரிடமே போராடுவோர்
ஆவர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
தொடக்க நூல் 27: 1-5,
15-29
முன்மாதிரிகையாக இருக்கவேண்டிய பெற்றோர்
நிகழ்வு
அன்பான மனைவி, அருமையான இரண்டு ஆண் குழந்தைகள் என்று பாக்கியம்
மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் தன்னுடைய
நெருங்கிய நண்பனின் குடும்பத்தோடும் தன்னுடைய குடும்பத்தோடும்
வேளாங்கண்ணித் திருத்தலத்திற்கு பேருந்தில் பயணமானான்.
பேருந்தில் நடத்துநர் ஒவ்வொருவரிடமிருந்தும் பணத்தை
வாங்கிகொண்டு, பயணச் சீட்டுக்குளைக் கொடுத்துக்கொண்டே வந்தார்.
முதலில் பாக்கியத்தின் நண்பர் அவருடைய குடும்பத்திற்குப் பயணச்
சீட்டுகளை வாங்கினார். அதன்பின்னர் பாக்கியத்தின் பக்கம் நடத்துநர்
வந்தபோது அவன், "நான்கு பேர்க்கு வேளாங்கண்ணிக்குப் பயணச்
சீட்டுத் தாருங்கள்" என்றான்.
இதைப் பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டே பாக்கியத்தின் நண்பர்
அவனுடைய காதுகளில், "உனக்கும் உன்னுடைய மனைவிக்கும் உன்னுடைய
மூத்த மகனுக்கும் என மூன்று முழு பயணச்சீட்டுகளை
வாங்கிக்கொண்டு, குள்ளமாக இருக்கும் உன்னுடைய இளைய மகனுடைய வயதைக்
குறைத்துச் சொல்லி, அவனுக்கு அறை பயணச்சீட்டு வாங்கவேண்டியதுதானே...
நீ உன்னுடைய இளைய மகனுடைய வயதைக் குறைத்துச் சொன்னால், அவர்க்கு
என்ன தெரியவா போகிறது... ஏன் பணத்தை இப்படி வீணடிக்கின்றாய்?"
என்றார். அதற்கு பாக்கியம் அவரிடம், "நான் என்னுடைய இளைய மகனுடைய
வயதைக் குறைத்துச் சொல்லி, பயணத்தை மிச்சம் பிடிக்கலாம்தான்.
ஆனால், என்னுடைய இளைய மகன், 'பணத்திற்காக என் அப்பா என்னுடைய
வயதை இப்படிக் குறைத்துச் சொல்கிறாரே' என்றல்லவா நினைப்பான்"
என்று சொல்ல, பாக்கத்தின் நண்பர் அமைதியானார்.
பெற்றோர்கள் தன்னுடைய பிள்ளைகட்கு முன்னம் தங்களுடைய
சொல்லாலும் செயலாலும் எடுத்துக்காட்டன வாழ்க்கை வாழவேண்டும் என்பதை
இந்த நிகழ்வானது மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது. இதற்கு
முற்றிலும் மாறாக, இன்றைய வாசகம் பெற்றோர்கள் எடுத்துக்காட்டன
வாழ்க்கை வாழத் தவறுகின்றபோது பிள்ளைகள் எப்படிப்பட்டவர்களாக
மாறுகின்றார்கள் என்பதைப் பதிவு செய்வதாக இருக்கின்றது. அதைக்
குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து, நாம் ஒவ்வொருவரும்
எடுத்துக்காட்டான வாழக்கை வாழ என்ன செய்வது என்று சிந்தித்துப்
பார்த்து நிறைவுசெய்வோம்.
உன்னதமான வழியைத் தேர்ந்துகொள்வதை விடுத்து உணவைப் பெரிதாக
நாடிய ஈசாக்கு
ஈசாக்கிற்கு வயது ஏறிக்கொண்டே போகிறது. அதனால் அவருடைய பார்வை
மங்கத் தொடங்குகின்றது. இந்நிலையில் அவர் தன்னுடைய மூத்த மகனை
அழைத்து, தனக்குப் பிடித்த உணவுப் பதார்த்தங்களைக் கொண்டு வரச்
சொல்கின்றார். இங்கு நாம் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால்,
ஈசாக்கு தன்னுடைய தந்தை ஆபிரகாமைப் போன்று தன் பிள்ளைகள் ஏசாவிற்கும்
யாக்கோபிற்கும் திருமண காரியங்களை நடத்தி வைத்திருக்கலாம். ஆபிரகாம்
தன்னுடைய முதிர்ந்த வயதில் ஈசாக்கிற்கு நல்லதொரு மனைவி அமையவேண்டும்
என்றுதான் பாடுபட்டார். ஆனால், ஈசாக்கு அப்படிச் செய்யாமல்,
உணவுக்கு ஆசைப்பட்டு தன் மூத்த மகனை தனக்குப் பிடித்த உணவு வகைகளைத்
தயார்செய்துகொண்டு வரச் சொல்கின்றார். இங்கு உணவு என்று வருவதை
உடல் தேவைகள் வேறு என்ன வேண்டுமானாலும் போட்டு நிரப்பிக் கொள்ளலாம்.
இப்படி ஈசாக்கு தனது கடைசிக் காலத்தில் தன்னுடைய பிள்ளைகட்கு
நல்ல வழியைக் காட்டாமல், வெறும் உணவுக்கு ஆசைப்பட்டு இறுதியில்
ஏமாந்துபோனதை ஒரு நல்ல தந்தைக்குரிய கடமையை ஆற்றவில்லை என்றுதான்
சொல்லவேண்டும்.
தன் கணவரையே ஏமாற்ற முயன்ற ரெபேக்கா
ஈசாக்கு தனக்குப் பிடித்த தன் மூத்த மகனைக் கூப்பிட்டு உணவுப்
பதார்த்தங்களைக் கொண்டு வரச் சொன்னதைப் பார்க்கும் ரெபேக்கா,
தான் மிகவும் நேசித்த தன்னுடைய இளைய மகன் யாக்கோபை அழைத்து,
அவனிடம் உணவுப் பதார்த்தங்களைக் கொடுத்து, ஈசாக்கிடமிருந்து
திருட்டுத்தனமாக ஆசியைப் பெற வைக்கின்றார். பெற்றோர் தங்கள்
பிள்ளைகளிடம் மிகுந்த அன்பு கொள்வதில் எந்தவொரு தவறும் இல்லை.
அதற்காக அவர்களைத் தவறான வழியில் நடத்துவது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளத்
தக்கது அல்ல. ரெபேக்கா தன் மகன் யாக்கோபின் வழியாக ஈசாக்கை ஏமாற்றி,
அவர் அவனுக்கு ஆசி வழங்கியதையும் நாம் எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள
முடியாது.
ஏமாற்றுப்பேர்வழியான யாக்கோபு
யாக்கோபு, தன் தாய் தன்னை ஏமாற்றச் சொல்கிறார் என்று தெரிந்து,
'வேண்டாம்' என்று சொல்லி விலகி இருக்கலாம். ஆனால், அவர் தன்
தாய் சொன்னதுபோன்ற தன் தந்தையை ஏமாற்றி ஆசி பெறுகின்றார். இதன்மூலம்
பெற்றோர்கள் பிள்ளைகட்கு எப்படி எடுத்துக்காட்டான வாழ்க்கை
வாழ்கின்றார்களோ அதன்படிதான் பிள்ளைகள் இருப்பார்கள் என்பதைப்
புரிந்துகொள்ளலாம். யாக்கோபு தன் தந்தை ஈசாக்கிடமிருந்து ஆசி
பெற்றது இறைவனின் திருவுளமாக இருந்தாலும், அவருடைய ஏமாற்று
வேலையை நாம் எந்தவிதத்திலும் பிறர்க்குப் பரிந்துரைக்ககூடாது.
சிந்தனை
'தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை' என்பது பழமொழி. எனவே,
பெற்றோரும் சரி, நாம் அனைவரும் சரி எல்லார்க்கும் எடுத்துக்காட்டன
வாழக்கையை வாழ்ந்து காட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 9: 14-17
குற்றம் கண்டுபிடிப்போர் சூழ் உலகு
நிகழ்வு
ஒரு குடும்பத்தில் ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். இதில் மூத்த
சகோதரர்க்கு மற்ற சகோதரர்கள் சரியில்லை, சரியாக இறைவனிடம்
வேண்டிவதில்லை என்ற வருத்தம் இருந்துகொண்டே இருந்தது.
இப்படிப்பட்ட சமயத்தில் அந்த ஊர்க்கு ஒரு மகான் வந்தார். அவரைச்
சந்தித்த அந்த மூத்த சகோதரர், "சாமி! எனக்கு ஆறு சகோதரர்கள் இருக்கின்றார்கள்...
அவர்கள் என்னைப் போன்று சரியாக இறைவனிடம் வேண்டுவதுமில்லை, பக்தியாக
இருப்பதுமில்லை. அவர்களை நல்ல வழிக்குக் கொண்டுவருவதற்கு நான்
என்ன செய்யவேண்டும்" என்று பணிவோடு கேட்டார். அவர் சொன்னதை அமைதியாகக்
கேட்டுக்கொண்டிருந்த அந்த மகான், "மகனே! நான் சொல்வதை மிகக்
கவனமாகக் கேள். நீ இப்படி அவர் இறைவனிடம் மன்றாடவில்லை, இவர்
இறைவனிடம் மன்றாடவில்லை என்று அடுத்தவரைப் பற்றிக்
குறைகூறிக்கொண்டிருப்பதற்குப் பதில் நீ இறைவனிடம் மன்றாடாமல்
இருப்பதே நல்லது" என்றார். இதைக் கேட்டு மூத்தவர் எதுவும் பேசாமல்
அமைதியானார்.
மேலே சொல்லப்பட்ட இந்த நிகழ்வில் வரும் மூத்த சகோதரரைப் போன்று
இன்றைக்கும் பலபேர் தாங்கள் நல்லவர்கள், ஒழுக்கசீலர்கள் என்று
காட்ட விரும்பி, மற்றவர்களைக் குறைகூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
இத்தகைய போக்கு மிகவும் தவறானது என்பதையும் உண்மையான வழிபாடு
எது என்பதையும் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துச்
சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப்
பார்த்து நிறைவு செய்வோம்.
தங்களை ஒழுக்கசீலர்களாகக் காட்டிக் கொள்பவர்கள்
நாம் வாழும் இந்த சமூகத்திலும் சரி, நம்மைச் சுற்றிலும் சரி,
சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் எப்போதும் மற்றவர்களைவிடத்
தாங்கள் ஒருபடி மேல் என்று நினைப்பார்கள். அவர்கள் நினைப்பதில்
ஒன்றும் தவறில்லை. ஆனால், அவர்கள் தங்களுடைய கருத்தினை மற்றவர்கள்மீது
திணித்து அவர்களும் அவ்வாறு இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள்.
அப்படித்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவானின் சீடர் இயேசுவிடம்
வந்து, "நாங்களும் பரிசேயர்களும் அதிகமாக நோன்பிருக்க, உம்முடைய
சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை" என்கின்றார்.
யோவானின் சீடரும் பரிசேயரும் எவ்வளவு முறை வேண்டுமானாலும்
நோன்பிருக்கலாம் அல்லது இருந்திருக்கலாம். அது அவர்களுடைய
தனிப்பட்ட விரும்பம் என்று சொல்லிவிடலாம். ஆனால், அவர்கள்
இயேசுவிடம், "உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை? என்று
கேட்பதுதான் வியப்பாக இருக்கின்றது. இது ஒருவிதத்தில்,
யோவானின் சீடர்கள் தங்களுடைய விருப்பத்தை இயேசுவின்
சீடர்கள்மீது சுமத்துவதாக இருக்கின்றது. ஒருவரின் விரும்பத்தை
அல்லது அவருடைய கருத்துகளை அடுத்தவர்மீது திணிப்பது எவ்வளவு
பெரிய தவறு என்பதை நாம் உணர்ந்துகொள்வது நல்லது.
உண்மையான வழிபாடு எது என்பதை உணர்த்தும் இயேசு
யோவான் சீடர்கள் இயேசுவிடம், உம்முடைய சீடர்கள் ஏன்
நோன்பிருப்பதில்லை என்று கேட்டதும், இயேசு அவர்களிடம், "மணமகன்
தங்களோடு இருக்கும்வரை மணவீட்டார் துக்கம் கொண்டாட முடியுமா?
மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும் அப்பொழுது
அவர்களும் நோன்பிருப்பார்கள்" என்கின்றார்.
இயேசு யோவானிடம் சீடர்க்குச் சொல்கின்ற பதிலில் இரண்டு
உண்மைகள் அடங்கியிருக்கின்றன. ஒன்று, இயேசு இவ்வுலகிற்குத்
துக்கத்தை அல்ல, மகிழ்ச்சியைக் கொண்டு வந்தார் என்பதாகும்.
இயேசுவின் பிறப்பின்போது, வானதூதர் இடையர்கட்குத்
தோன்றுகின்றபோது, "எல்லா மக்கட்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும்
நற்செய்தியை அறிவிக்கிறேன்" (லூக் 2:10) என்று சொல்கின்றார்.
அதைப் போன்று இயேசு தன்னுடைய சீடர்களோடு இருக்கின்றபோது, "என்
மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவுபெறவுமே
இவற்றை உங்களிடம் சொன்னேன்" என்கின்றார் (யோவா 15:11).
இதன்மூலம் இயேசு இவ்வுலகிற்கு துக்கத்தை அல்ல, மகிழ்ச்சியைக்
கொண்டுவந்தார் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
அடுத்ததாக, இயேசு யோவானின் சீடர்களிடம் சொல்கின்றவற்றிலிருந்து
நாம் அறிந்துகொள்ளும் உண்மை, நோன்பிருப்பதற்கு என்று ஒருகாலம்
இருக்கின்றது. அந்தக் காலத்தில் அதைச் செய்தால் போதும்
என்பதாகும். யூதர்கள் பல காரணங்கட்காக நோன்பிருந்தாலும்,
பிரதான காரணமாக இருந்தது மெசியாவின் வருகைகாக
நோன்பிருந்ததுதான். இந்த உண்மையை உணராமல்தான் நோன்பை ஒரு
சடங்காகச் செய்தார்கள். ஆகையால், நாம் இருக்கின்ற நோன்பாக
இருக்கட்டும் எதுவாக இருக்கட்டும், அதன் அர்த்தத்தை உணர்ந்து
செய்கின்றபோது தான் அதற்கான ஆசிரைப் பெறமுடியும்
சிந்தனை
'பசித்தோர்க்கு உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லாத
வறியவரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும் உடையற்றவரைக்
காணும்போது அவர்கட்கு உடுக்கக் கொடுப்பதும் அன்றோ... நான்
விரும்பும் நோன்பு' (எசாய 57:8) என்பார் ஆண்டவர். ஆகையால்,
நாம் மேற்கொள்ளும் பக்தி முயற்சியை பிறர்மீது திணிக்காமலும்
கடமைக்காகச் செய்யாமலும் இருந்து, பொருள் உணர்ந்து செய்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
|
|