|
|
29 ஜூலை 2019 |
|
|
பொதுக்காலம் 14ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஈசாக்கு ரெபேக்கா மீது அன்பு வைத்திருந்தார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 23: 1-4, 19; 24: 1-8,62-67
அந்நாள்களில் சாரா நூற்றிருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தார்.
சாராவின் வயது இதுவே. கானான் நாட்டிலுள்ள எபிரோன் என்ற கிரியத்து
அர்பா நகரில் சாரா இறந்தார். அவருக்காகப் புலம்பி அழுவதற்காக
ஆபிரகாம் சென்றார்.
பிறகு சடலம் இருந்த இடத்தைவிட்டு அவர் எழுந்து இத்தியரிடம்
சென்று சொன்னது: "நான் உங்களிடையே அன்னியனும் அகதியுமாய் இருக்கிறேன்.
என் வீட்டில் இறந்தாரை நான் அடக்கம் செய்வதற்கான கல்லறை நிலத்தை
உங்களுக்குரிய சொத்திலிருந்து எனக்கு விற்றுவிடுங்கள்" என்று
கேட்டார்.
இவ்வாறு மம்ரே அருகில் மக்பேலா நிலத்தின் கல்லறையில் ஆபிரகாம்
தம் மனைவி சாராவை அடக்கம் செய்தார். இதுவே கானான் நாட்டில் இருக்கும்
எபிரோன். ஆபிரகாம் வயது மிகுந்தவராய் முதுமை அடைந்தார். ஆண்டவர்
அவருக்கு அனைத்திலும் ஆசி வழங்கியிருந்தார்.
ஒரு நாள் அவர் தம் வீட்டின் வேலைக்காரர்களில் மூத்தவரும், தமக்குரிய
அனைத்திற்கும் அதிகாரியுமானவரை நோக்கி, "உன் கையை என்
தொடையின் கீழ் வைத்து, விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் கடவுளாகிய
ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்: நான் வாழ்ந்துவரும் இக்கானான்
நாட்டுப் பெண்களிடையே என் மகனுக்குப் பெண் கொள்ளமாட்டாய் என்றும்
என் சொந்த நாட்டிற்குப் போய், என் உறவினரிடம் என் மகன் ஈசாக்கிற்குப்
பெண் கொள்வாய் என்றும் சொல்" என்றார்.
அதற்கு அவர், "ஒருவேளை பெண் என்னோடு இந்நாட்டிற்கு வர மறுத்துவிட்டால்
தாங்கள் விட்டுவந்த அந்நாட்டிற்குத் தங்கள் மகனைக் கூட்டிக்
கொண்டு போகலாமா?" என்று கேட்டார்.
அதற்கு ஆபிரகாம், "அங்கே என் மகனை ஒருக்காலும் கூட்டிக்கொண்டு
போகாதே. கவனமாயிரு. என் தந்தை வீட்டினின்றும் நான் பிறந்த
நாட்டினின்றும் என்னை அழைத்து வந்து, என்னோடு
பேசி, இந்த
நாட்டை உன் வழிமரபினருக்குத் தருவேன்' என்றுஆணையிட்டுக் கூறிய
அந்த விண்ணுலகின் கடவுளாகிய ஆண்டவரே உனக்கு முன் தம் தூதரை அனுப்பி
வைப்பார். நீ போய், அங்கே என் மகனுக்குப் பெண்கொள். உன்னோடு வர
அப்பெண் விரும்பாவிடில் எனக்கு நீ அளித்த வாக்குறுதியினின்று
விடுதலை பெறுவாய். என் மகனை மட்டும் அங்கே கூட்டிக்கொண்டு
போகாதே" என்றார்.
இதற்கிடையில், பெயேர்லகாய்ரோயி என்ற இடத்திலிருந்து ஈசாக்கு புறப்பட்டு
நெகேபு பகுதியில் வாழ்ந்து வந்தார். மாலையில் வெளியே வயல்புறம்
சென்றபோது, அவர் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவதைக்
கண்டார். ரெபேக்காவும் கண்களை உயர்த்தி ஈசாக்கைப் பார்த்தார்.
உடனே அவர் ஒட்டகத்தை விட்டு இறங்கினார். அவர் அந்த வேலைக்காரரிடம்,
"வயலில் நம்மைச் சந்திக்க வந்து கொண்டிருக்கும் அவர் யார்?"
என்று கேட்டார்.
அவ்வேலைக்காரரும், "அவர்தாம் என் தலைவர்" என்றார். உடனே
ரெபேக்கா தம் முக்காட்டை எடுத்து தம்மை மூடிக்கொண்டார்.
அப்பொழுது அவ்வேலைக்காரர் ஈசாக்கிடம் தாம் செய்தது அனைத்தையும்
பற்றிக் கூறினார். ஈசாக்கு தம் தாயார் சாராவின் கூடாரத்துக்குள்
ரெபேக்காவை அழைத்துச் சென்று மணந்து கொண்டார். அவரும் ஈசாக்குக்கு
மனைவியானார். அவர் ரெபேக்கா மீது அன்பு வைத்திருந்தார். இவ்வாறு
தம் தாயின் மறைவுக்குப் பிறகு ஈசாக்கு ஆறுதல் அடைந்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
106: 1-2. 3-4a. 4b-5 (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்!
1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்! என்றென்றும்
உள்ளது அவரது பேரன்பு! 2 ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை யாரால்
இயம்ப இயலும்? அவர்தம் புகழை யாரால் விளம்பக் கூடும்? பல்லவி
3 நீதிநெறி காப்போர் பேறுபெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர்
பேறுபெற்றோர்! 4ய ஆண்டவரே! நீர் உம் மக்கள்மீது இரக்கம்
காட்டும்போது என்னை நினைவுகூரும்! பல்லவி
4b அவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணை செய்யும்! 5
நீர் தேர்ந்தெடுத்த மக்களின் நல்வாழ்வை நான் காணும்படி
செய்யும்; உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு
கொள்ளும்படிச் செய்யும்! அப்போது, உமது உரிமைச் சொத்தான மக்களோடு
உம்மைப் போற்றிட இயலும். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 28
அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்து இருப்பவர்களே,
எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல்
தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
பலியை அல்ல, இரக்கத்தையே
விரும்புகிறேன்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
9: 9-13
அக்காலத்தில் மத்தேயு என்பவர் சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததை
இயேசு கண்டார்; அவரிடம், "என்னைப் பின்பற்றி வா" என்றார்.
அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள்,
பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும்
விருந்துண்டனர்.
இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், "உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும்
பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?" என்று கேட்டனர்.
இயேசு இதைக் கேட்டவுடன், "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே
மருத்துவர் தேவை. 'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன்
கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை
அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
மத்தேயு 9: 9-13
பாவியை அழைத்த இயேசு
நிகழ்வு
விடுமுறைக் காலம் அது. அதனால் சிறுவர் சிறுமியர் எல்லாரும் ஒரு
விளையாட்டு மைதானத்தில் மகிழ்ச்சியாக விளையாடிக்
கொண்டிருந்தார்கள். இதில் ஒரே ஒரு சிறுமி மட்டும் மைதானத்தின்
ஓர் ஓரமாய் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள்.
இதை அந்த வழியாக வந்த பெரியவர் ஒருவர் கவனித்தார். அவர் அந்தச்
சிறுமியிடம் சென்று, "பாப்பா! ஏன் இப்படித் தனியாக உட்கார்ந்து
அழுகொண்டிருக்கின்றாய்... உனக்கு என்ன ஆயிற்று?" என்று
கேட்டார். அதற்குச் சிறுமி, "நான் சின்னப் பிள்ளையாம். அதனால்
என்னை யாரும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளமாட்டேன் என்கின்றார்கள்.
அதனால்தான் இப்படி அழுதுகொண்டிருக்கின்றேன்" என்றாள்.
"ஓ! இதுதான் பிரச்சினையா! இதற்கெல்லாமா அழுவது... வா நான் உனக்கு
பிடித்த தின்பண்டங்களை வாங்கித் தருகிறேன்" என்று சொல்லி அழைத்துக்கொண்டு
போய், அவள் கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து, அவளை சமாதானப்படுத்தினார்
அந்தப் பெரியவர்.
இந்த நிகழ்வில் வரும் சிறுமியைப் போன்றுதான் நாம் பல நேரங்களில்
பல காரணங்களால் மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம் அல்லது
ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஆண்டவர் இயேசு அப்படியில்லாமல்
எல்லாரையும் அன்பு செய்கின்றவராக, எல்லாரையும் ஏற்றுக்கொள்பவராக
இருக்கின்றார். கடவுள் யாரையும் புறக்கணிப்பதில்லை, மாறாக ஏற்றுக்கொள்கின்றார்
என்பதற்குச் சான்றாக இன்றைய நற்செய்தி வாசகம் இருக்கின்றது.
நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவு
செய்வோம்.
'பாவி' எனக் கருதப்பட்ட மத்தேயு
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு மத்தேயுவை அழைப்பதைக் குறித்து
வாசிக்கின்றோம். இந்த மத்தேயு யாரென்றால் ஒரு வரிதண்டுபவர். அதாவது
யூதர்களால் பாவி என்று முத்திரை குத்தப்பட்டவர். யூதர்கள் வரிதண்டுபவர்களைப்
பாவி என்று முத்திரை குத்தியதற்குக் காரணம், அவர்கள் உரோமையர்க்குக்
கீழ் பணிசெய்துவந்தார்கள் என்பதால்தான். உரோமையர்களையும் அவர்களுடைய
ஆட்சியையும் அறவே வெறுத்த யூதர்கள், அவர்களிடம் இந்த வரிதண்டுபவர்கள்
வேலை செய்துவந்ததால், அவர்களைப் பாவிகள் என்றும் நாட்டைக்
காட்டிக் கொடுத்தவர்கள் என்றும் முத்திரை குத்தினார்கள். இதைவிட
இன்னொரு விடயமும் இருக்கின்றது. அது என்னவென்றால், வரிதண்டுபவர்கள்
தாங்கள் வசூலிக்க வேண்டிய வரிப்பணத்தை விடவும் அதிகமாக வசூலித்தார்கள்.
அதனால் மக்கள் அவர்களை பாவிகள் என்று அழைத்தார்கள்.
மத்தேயு சுங்கச் சாவடியிலிருந்து வரி வசூலித்துக் கொண்டிருந்ததால்,
அவரைப் பாவி என்று மக்கள் அழைத்திருப்பார்கள் என்பதை இயேசு நன்றாக
உணர்ந்திருப்பார் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.
பாவியை அழைத்த இயேசு
மத்தேயுவை யூதர்கள் பாவி என்று முத்திரை குத்தியிருக்கின்றார்கள்
என்பது இயேசுவுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அவர் அதையெல்லாம்
பொருட்படுத்தாமல், அவரைத் தன்னுடைய திருத்தூதர்களுள் ஒருவராகத்
தேர்ந்தெடுக்கின்றார். இவ்வாறு அவர் யாரையும் புறக்கணிக்காமல்,
எல்லாரையும் ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருக்கின்றார்.
இயேசு இவ்வுலகிற்கு வந்ததே, 'இழந்து போனதைத் தேடி மீட்கத்தான்'
(லூக் 19:10). அந்த நோக்கம் வரிதண்டுபவரான மத்தேயுவின்
அழைப்பில் நிறைவேறுகின்றது. மேலும் இயேசு மத்தேயுவின் வீட்டில்
உணவருத்திக்கொண்டிருக்கும்போது, அங்கு வந்த பரிசேயக் கூட்டம்
முணுமுணுப்பத்தைத் தொடர்ந்து, 'நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே
அழைக்கவந்தேன்' என்று சொல்வதன்மூலம் இதை உறுதி செய்கின்றார்.
இயேசுவுக்காகத் தன்னையே மாற்றிக்கொண்ட மத்தேயு
மக்கள் தன்னைப் பாவி என்று ஒதுக்கித் தள்ளியபோது, ஆண்டவர்
இயேசு தன்மீது உண்மையான அன்பு கொண்டு, தன்னை அவருடைய பணிக்காக
அழைத்ததை நினைத்து, மத்தேயு மிகவும் மகிழ்ந்திருக்கக்கூடும்.
அதனால் அவர் இயேசுவுக்காகத் தன்னையே மாற்றிக் கொள்ளத்
தொடங்குகின்றார். அதனுடைய தொடக்கமாக இருப்பதுதான் அவர்
இயேசுவுக்குத் தன்னுடைய வீட்டில் உணவளிப்பது. இதற்குப் பின்பு
அவர் இயேசுவோடு இருந்து, இயேசுவாகவே மாறத் தொடங்குகின்றார்.
இங்கு நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தி
என்னவென்றால், கடவுள் நம்மீது அன்புகொண்டு, நம்மை அவருடைய
பணிக்காக அழைக்கின்றார் எனில், அவரைப் போன்று மாறுவதும்
அவர்ககாக வாழ்வதும் தேவையான ஒன்றாக இருக்கின்றது.
இல்லையென்றால், நம்முடைய அழைப்பின் மேன்மையை உணராமல், அதை நாம்
வீணடிக்கின்றோம் என்று அர்த்தமாகிவிடும். ஆகையால், கடவுளால்
அன்பு செய்யப்படும், அழைக்கப்பட்டிருக்கும் நாம், அவர்க்கு
ஏற்ற வாழ்க்கை வாழ்வது மிகவும் தேவையானதாகும்.
சிந்தனை
'கடவுட்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே!' (திபா 51:17) என்பார்
திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் கடவுளின் அன்பையும்
ஆசியையும் பெற மத்தேயுவைப் போன்று நொறுங்கிய, குற்றத்தை
உணர்ந்த, தாழ்ச்சியான நெஞ்சம் கொண்டவராய் வாழ்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
தொடக்க நூல் 23: 1-4, 19, 24: 1-8, 62-67
ரெபேக்கா வழியாக ஆறுதல் அடைந்த ஈசாக்கு
நிகழ்வு
1975 ஆம் ஆண்டு வெளிவந்து, இதுவரைக்கும் முப்பத்தைந்து
லட்சத்திற்கும் மேல் விற்றுத் தீர்ந்த புத்தகம் தான் 'The
Total Woman'.
ஒருசமயம் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மரபெல் மோர்கனிடம்
(Marabel Morgan) பத்திரிகையாளர் ஒருவர், "ஒரு நல்ல
குடும்பத்தைக் கட்டியெழுப்ப, நீங்கள் பரிந்துரைக்கும் மிக
முக்கியமான விடயங்கள் என்னென்ன?" என்று கேட்டார். அதற்கு அவர்,
"ஒரு நல்ல குடும்பத்தைக் கட்டியெழுப்ப நான்கு முக்கியமான
விடயங்கள் இருக்கின்றன. அவற்றுள் முதன்மியானது, கணவனும்
மனைவியும் தங்களுடைய வாழ்க்கைத் துணையைக் கடவுள் தந்த பரிசாக
எண்ண வேண்டும். இரண்டாவது, ஒருவர் மற்றவரை ரசிக்கக்
கற்றுக்கொள்ளவேண்டும். மூன்றாவது, கருத்து வேறுபாடுகள்
இருந்தாலும் ஒருவர் மற்றவரோடு ஒத்துப் போகவேண்டும். நான்காவது,
ஒருவர் மற்றவரைப் பாராட்டக் கற்றுக்கொள்ளவேண்டும். இந்த நான்கு
விடயங்களையும் கடைப்பிடித்தால் ஒரு நல்ல குடும்பத்தைக் கட்டி
எழுப்பலாம்" என்றார்.
பல்வேறு காரணங்களால் பிரிந்து கிடக்கும் தம்பதிகள் மேலே
சொல்லப்பட்ட விடயங்களை தங்களுடைய வாழ்வில் கடைப்பிடித்து
வந்தால், நல்ல குடும்பத்தைக் கட்டி எழுப்ப முடியும் என்பதில்
எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. இன்றைய முதல் வாசகத்தில்
நல்லதொரு குடும்பத்தைக் கட்டி எழுப்பிய ஈசாக்கு ரெபேக்கா
தம்பதியரைக் குறித்து வாசிக்கின்றோம். அவர்கள் நல்ல
குடும்பத்தைக் கட்டி எழுப்ப என்னென்ன வழிமுறைகளைப்
பின்பற்றினார்கள் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்த்து
நிறைவு செய்வோம்.
தன் வாழ்க்கைத் துணையை கடவுள் கொடுத்த கொடையாகப் பார்த்த
ஈசாக்கு
ஆபிரகாமிற்கு முதிர்ந்த வயதாகின்றது. எனவே அவர் தான்
இறப்பதற்கு முன்னம், தன்னுடைய மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்
துணையை அமைத்துத் தர நினைக்கின்றார். எனவே, அவர் தன்னுடைய
பணியாளர்களுள் மூத்தவரும் தன்னுடைய உடைமைகள் அனைத்திற்கும்
அதிகாரியுமானவரை அழைத்து, தன்னுடைய உறவுக்காரப் பெண்களுள்
ஒருவரை தன் மகனுக்கு வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்து
வருமாறு அனுப்பி வைக்கின்றார். அவரும் கனானியரிடம் செல்லாமல்,
தன்னுடைய தலைவர் ஆபிரகாம் சொன்னதுபோன்று அவருடைய
உறவுக்கார்களிடம் சென்று, அவருடைய மகனுக்கேற்ற வாழ்க்கைத்
துணையாக ரெபேக்காவைத் தேர்ந்தெடுகின்றார். இதன்பிறகு
ஈசாக்கிற்கும் ரெபேக்காவிற்கும் அருட்சாதனம்
நடைபெறுகின்றது.
ஈசாக்கோ ரெபேக்காவை கடவுள் தனக்குக் கொடுத்த பரிசாகவே
பார்த்து. அவரோடு மிகவும் மகிழ்ச்சியாக வாழத் தொடங்குகின்றார்.
ஆதலால், ஒரு நல்ல குடும்பம் கட்டி எழுப்பப்படவேண்டும் என்றால்,
அந்தக் குடும்பத்தில் இருக்கின்ற கணவனும் மனைவியும் தங்களுடைய
வாழ்க்கைத் துணையை கடவுள் கொடுத்த மிகப்பெரிய பரிசாகப்
பார்க்கப் பழகவேண்டும்.
தன் மனைவியின்மீது மிகுந்த அன்புகூர்ந்த ஈசாக்கு
ஈசாக்கு ரெபேக்கா இருவர்க்கும் இடையே அருட்சாதனம்
நடைபெற்ற
பிறகு, ஈசாக்கு தன் மனைவி ரெபேக்காவின் மீது மிகுந்த
அன்புகூர்ந்தார் என்று இன்றைய முதல் வாசகம் மிகத் தெளிவாக
எடுத்துச் சொல்கின்றது. இதன்மூலம் திருமண உடன்படிக்கையில்
இணைந்திருக்கின்ற ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கைத் துணையிடம்
மிகுந்த அன்புகொண்டு வாழவேண்டும் என்ற செய்தியானது எடுத்துச்
சொல்லப்படுகின்றது.
இங்கே நாம் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விடயமும்
இருக்கின்றது. அது என்னவெனில், தொடக்க நூலில் வருகின்ற
மிகப்பெரிய அதிகாரம் இந்த 24 வது அதிகாரம்தான். திருமணத்திற்கு
முக்கியத்துவம் கொடுத்து வரும் இந்த அதிகாரத்தில் 67 வசனங்கள்
அல்லது இறைச் சொற்றொடர்கள் இடம்பெறுகின்றன. ஆனால், படைப்பு
குறித்து வரும் தொடக்க நூல், முதல் அதிகராத்தில் மொத்தமே 31
வசனங்கள்தான் வருகின்றன. அப்படியானால் கடவுளுடைய பார்வையில்
அருட்சாதனம்
மிகவும் முக்கியமான இடம் வகிக்கின்றது என்பதைப்
புரிந்துகொள்ளலாம். அந்தத் திருமண வாழ்வு நன்றாக
இருக்கவேண்டும் என்றால், கணவரும் மனைவியும் ஈசாக்கு ரெபேக்கா
தம்பதியரைப் போன்று ஒருவர் மற்றவர்மீது உள்ளார்ந்த அன்புகொண்டு
வாழவேண்டும்.
தன் மனைவியால் ஆறுதல் அடைந்த ஈசாக்கு
ஈசாக்கு தன் மனைவி ரெபேக்காவை மணந்து கொள்வதற்கு முன்னம்
தன்னுடைய தாய் சாராவை இழந்து மிகுந்த வேதனை அடைந்திருந்தார்.
இப்படிப்பட்ட தருணத்தில்தான் ஈசாக்கிற்கும் ரெபேக்காவிற்கும்
அருட்சாதனம்
நடைபெறுகின்றது. திருமணத்திற்குப் பிறகு ஈசாக்கு
தன்னுடைய மனைவியால் மிகுந்த ஆறுதல் அடைகின்றார். ஆகையால்,
திருமண உறவில் இணையும் கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவர்க்கு
ஆறுதலாக இருப்பது மிகவும் இன்றியமையாததாகும்.
சிந்தனை
'கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன்
ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்' (தொநூ 2:24)
என்பார் ஆண்டவர். ஆகவே, திருமண வாழ்வில் இணைந்திருக்கும்
ஒவ்வொரு கணவனும் மனைவியும் தன்னுடைய வாழ்க்கைத் துணையை தன்
உயிராகப் பார்த்து, உண்மையான அன்புகூர்ந்து வாழ்ந்தால்
அவர்களுடைய வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும் என்பது உறுதி.
நாமும் ஒருவர் மற்றவர் மீது உண்மையான அன்பு கொண்டு வாழ்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|