Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         04 ஜூலை 2019  
                                  பொதுக்காலம் 13ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 

=================================================================================
நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலி.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-19

அந்நாள்களில் கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் 'இதோ! அடியேன்' என்றார். அவர், "உன் மகனை, நீ அன்புகூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப் பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரிபலியாக அவனை நீ பலியிட வேண்டும்" என்றார்.

அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தமது கழுதைக்குச் சேணமிட்டு, தம் வேலைக்காரருள் இருவரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு, எரிபலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டியபின், கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். மூன்றாம் நாள் ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார்.

உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, "நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவ்விடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்" என்றார்.

பின் ஆபிரகாம் எரிபலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை எடுத்துத் தம் மகன் ஈசாக்கின்மீது வைத்தார். நெருப்பையும் கத்தியையும் தம் கையில் எடுத்துக்கொண்டார். இவ்வாறு இருவரும் சேர்ந்து சென்றனர்.

அப்பொழுது, ஈசாக்கு தன் தந்தையாகிய ஆபிரகாமை நோக்கி, `அப்பா!' என, அவர், 'என்ன? மகனே!' என்று கேட்டார்.

அதற்கு அவன், "இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக் குட்டி எங்கே?" என்று வினவினான்.

அதற்கு ஆபிரகாம், "எரிபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பொறுத்தமட்டில், கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே" என்றார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து நடந்தனர். ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து, அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின்மீது இருந்த விறகுக் கட்டைகளின்மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையில் எடுத்தார்.

அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று 'ஆபிரகாம்! ஆபிரகாம்' என்று கூப்பிட, அவர் 'இதோ! அடியேன்' என்றார். அவர், "பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்துகொண்டேன்" என்றார்.

அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்து தம் மகனுக்குப் பதிலாக எரிபலியாக்கினார். எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு `யாவேயிரே' என்று பெயரிட்டார். ஆதலால்தான் 'மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்' என்று இன்றுவரை வழங்கி வருகிறது.

ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, "ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து, விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவி கொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்" என்றார்.

பின் ஆபிரகாம் தம் வேலைக்காரரிடம் திரும்பி வந்தார். அவர்கள் ஒன்று சேர்ந்து பெயேர்செபாவுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கேயே ஆபிரகாம் வாழ்ந்து வந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 116: 1-2. 3-4. 5-6. 8-9 (பல்லவி: 9)
=================================================================================
பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.

1 ஆண்டவர்மீது அன்பு கூர்கின்றேன்; ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார். 2 அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார். பல்லவி

3 சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன. பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக்கொண்டன; துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன. 4 நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்; `ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்' என்று கெஞ்சினேன். பல்லவி

5 ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்; நம் கடவுள் இரக்கம் உள்ளவர். 6 எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்; நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார். பல்லவி

8 என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்; என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார். 9 உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
2 கொரி 5: 19
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அவரே அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மக்கள் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-8-

அக்காலத்தில் இயேசு படகேறி மறு கரைக்குச் சென்று தம் சொந்த நகரை அடைந்தார். அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, துணிவோடிரு, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.

அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர், "இவன் கடவுளைப் பழிக்கிறான்" என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர். அவர்களுடைய சிந்தனைகளை இயேசு அறிந்து அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்? `உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்பதா, `எழுந்து நட' என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ" என்றார். அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார். இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:


அதிகாரத்தை அதிகார போதையில் அல்லாமல், அன்புடனே அதிகாரத்தை ஆள பயன்படுத்துவது சிறப்புத்தானே.

அதற்காகத் தானே அதிகாரம் வழங்கப்படுகின்றது.

அடக்கி ஆள அல்ல, அன்புடனே வழிகாட்டிட அதிகாரம் தேவையே.

அதிகாரத்தோடு போதிப்பது, ஆணவம் இல்லாமல் வழிகாட்ட, ஆணையிடுவது, கண்டிப்புடனே கடிந்துரைக்க, பாசத்துடனே பரிந்துரைக்க, நேசமுடனே தட்டிக் கொடுக்க, ஊக்கமுட்ட, உற்சாகப்படுத்த, நேரிய வழியில் ஓருங்கிணைத்து வழிநடத்த தலைமைப் பண்போடு கூடிய அதிகாரம் தேவையே.

அதிகாரத்தை பெற்றவர்கள், அதனை உரிய வழியில் பயன்படுத்த தவறும் போது, அது பாவமாகாதா?

தங்களது பலவீனத்திலேயே இருந்து போகிறவர்கள், இதனை பயன்படுத்த தவறிப் போகிறார்கள். இதனை பயன்படுத்த அச்சம் கொள்கின்றார்கள். அச்சம் தவிர்த்து, உறுதியான மனநிலையோடு, தங்களை புதுப்பித்துக் கொண்டவர்களாக இதனை பயன்படுத்தும் போது, அதிகமாக கொடுப்பப்பட்டவர்களிடம் அதிகமாக கணக்கு கேட்கப்படுகின்ற காலத்தில்; நெஞ்சை நிமிர்த்தி பதில் சொல்லிட முடியும்.




இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மத்தேயு 9: 1-8

வலுவற்றவர்களைத் தூக்கிச் சுமப்போம்

நிகழ்வு

சீனாவில் உள்ள சூச்சூவாங் என்ற மாகாணத்தில் மீசான் என்றோர் அழகிய ஊர் உள்ளது. இங்கு சூப்பியாங் என்றோர் சிறுவன் இருக்கின்றான். சமீப காலத்தில் சீனாவில் இருக்கின்ற இந்த சூப்பியாங்கைக் குறித்துத்தான் மக்கள் அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கின்றார். இப்படி எல்லாரும் பேசக்கூடிய அளவுக்கு சூப்பியாங் அப்படி என்ன செய்தான் என்ற கேள்விக்கான விடையாக இருப்பதுதான் இந்த நிகழ்வு.

பதினான்கு வயதுச் சூப்பியாங்கிற்கு சாங்கி என்றொரு நண்பன் உண்டு. இருவரும் வகுப்புத் தோழர்கள். ஆனால், சாங்கியால் நடக்கமுடியாது, கால் ஊனம். அதனால் சூப்பியாங்தான் சாங்கியை எங்கு வேண்டுமாலும் தன் தோள்மேல் வைத்துத் தூக்கிக்கொண்டு போவான். சாங்கிக்கு நான்கு வயது நடக்கும்போது பக்கவாதம் ஏற்பட்டது. அதனால் அவனால் எங்கும் நடக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில்தான் சாங்கியின் நண்பனான சூப்பியாங், அவனை எங்கும் சென்றாலும் அது பள்ளிக்கூடமாக இருக்கட்டும், விளையாட்டுத் திடலாக இருக்கட்டும், கழிவறைவாக இருக்கட்டும் எல்லா இடங்கட்கும் கடந்த ஆறேழு ஆண்டுகளாகத் தூக்கிக்கொண்டு செல்கின்றான்.

இது குறித்து அறிந்த ஒரு செய்தியாளர் சூப்பியாங்கைச் சந்தித்து, நேர்காணல் செய்தார். அவர் சூப்பியாங்கிடம், "உன்னால் எப்படி சாங்கியை எல்லா இடங்கட்கும் தூக்கிக்கொண்டு போக முடிகின்றது?" என்று கேட்டார். அதற்கு சூப்பியாங் அவரிடம், "என்னுடைய எடை நாற்பது, என்னுடைய நண்பன் சாங்கியின் எடையோ இருபத்து ஐந்துதான். இதனால் என்னுடைய நண்பன் அவனை எங்கு வேண்டுமானாலும் தூக்கிச் செல்வதில் எனக்கு எந்தவொரு கஷ்டமில்லை" என்று சொன்னான். இதைக்கேட்டு அந்த செய்தியாளர் மிகவும் வியப்படைந்து, அவனை மனதாரப் பாராட்டினார்.

சூப்பியாங்கைப் போன்று வறியநிலையில் அல்லது வலுவற்ற நிலையில் இருப்பவர்களைத் தூக்கிச் சுமப்பவர்கள் கிடைத்தால் எல்லாருடைய வாழ்வும் எவ்வளவு நன்றாக இருக்கும். இன்றைய நற்செய்தி வாசகத்தில், முடக்குவாதமுற்ற ஒருவரை அவருடைய நண்பர்கள் இயேசுவிடம் தூக்கிக் கொண்டுவருவதையும் இயேசு அவர்களுடைய அன்பையும் நம்பிக்கையும் கண்டு முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்துவதைக் குறித்தும் வாசிக்கின்றோம். அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

முடக்குவாதமுற்றவரைத் சுமந்துகொண்டு வந்த சிலர்

நற்செய்தியில் இயேசு தன்னுடைய ஊர்க்கு வருகின்றார். அவர் வீட்டில் இருக்கின்றார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, பலர் அவர் இருந்த வீட்டில் கூடுகின்றார்கள். இந்நிலையில் முடக்குவாதமுற்றவரைத் தூக்கிக்கொண்டு வரும் சிலர், அவரை இயேசுவின் அருகே கொண்டுசெல்வது மிகவும் கடினம் என் நினைத்து, கூரையைப் பிய்த்து அதன்வழியாக அந்த முடக்குவாதமுற்றவரைக் கீழே இறக்குகின்றார்கள். இதைத் தொடர்ந்து இயேசு அந்த மனிதரை எவ்வாறு குணப்படுத்தினார் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னம், முடக்குவாதமுற்றவரைக் கட்டிலில் வைத்துச் சுமந்துகொண்டு வந்த சிலரின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

மத்தேயு நற்செய்தியில், முடக்குவாதமுற்றவரைச் சிலர் தூக்கிக்கொண்டு வந்தார்கள் என்று வருவது, மாற்கு நற்செய்தியில் நால்வர் (மாற் 2:3) என்று வருகின்றது. இந்த நால்வரும் முடக்குவாதமுற்றவர்க்கு நண்பர்களாக இருந்திருக்கலாம் அல்லது அவர்மீது உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டவர்களாக இருந்திருக்கலாம். எப்படி இருந்தாலும் அவர்கள் இயேசுவைக் குறித்து அறிந்து அவரிடம் தங்கள் நண்பரை எப்படியாவது தூக்கிச் சென்று, அவர்க்கு நலம் கிடைக்கச் செய்யவேண்டும் என்று முடிவுசெய்து, அவரைக் கட்டிலில் வைத்துத் தூக்கிக்கொண்டு வருகின்றார்கள். இயேசுவைச் சுற்றி மக்கள்கூட்டம் அதிகமாக இருக்கின்றது என்று நினைத்து அவர்கள் கவலைப்பட்டுக்கொண்டிருக்கவில்லை. அதையும் மீறி, அவர்கள் இயேசுவுக்கு முன்னே முடக்குவாதமுற்றவரை இறக்குகிறார்கள், அவரைக் குணம்பெறச் செய்கின்றார்கள். இந்த நால்வரைப் போன்று நம்மோடு வாழக்கூடியவர்களை, வலுக்குறைந்தவர்களை நாம் தூக்கிச் சுமப்பது தேவையான ஒன்றாக இருக்கின்றது.

முடக்குவாதமுற்றவர்க்கு நலமளித்த இயேசு

முடக்குவாதமுற்றவரை அவர்கள் தூக்கிக்கொண்டு வருவதைப் பார்த்து இயேசு உண்மையில் வியந்திருக்கவேண்டும். அதனால் அவர் அந்த முடக்குவாதமுற்றவரை நோக்கி, "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று சொல்லிக் குணப்படுத்துகின்றார். இந்த நிகழ்வு நாம் நம்மோடு நம்முடைய கடமைகளைச் செய்கின்றபோது அல்லது அன்புச் செயல்களைச் செய்கின்றபோது, அதற்கான பலனை ஆண்டவர் நிச்சயம் தருவார் என்பதை உரக்கச் சொல்வதாக இருக்கின்றது. ஆகவே, நாம் நம்முடைய கடமைகளை, இரக்கச் செயல்களைத் தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம். இறைவன் அதற்கான ஆசியை நிச்சயம் தருவார்.

சிந்தனை

'ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக்கொள்ளுங்கள' (கலா 6:2) என்பார் பவுல். ஆகையால், நாம் வலுவற்ற நிலையில், வறியநிலையில் இருப்பவர்களை, அவர்களுடைய சுமைகளைத் தாங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
தொடக்க நூல் 22: 1-19

"நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்"


நிகழ்வு

அரசர் ஒருவர் இருந்தார். அவர்க்கு விவிலியம் என்றால் உயிர். யாராவது விவிலியம் குறித்துப் பேசத் தொடங்கினால் அதை மெய்மறந்து கேட்பார்.

இந்நிலையில் அந்த அரசருடைய அரண்மனைக்குப் புலவர் ஒருவர் வந்தார். அவருடைய நோக்கம், அரசரைப் புகழ்ந்து பாடினால் பரிசு கிடைக்கும், அதை வைத்து மகிழ்ச்சியாக வாழலாம் என்பதாக இருந்தது. அதனால் அவர் அரண்மனைக்குள் நுழைந்து, அரசரைச் சந்தித்து அவரைப் புகழ்ந்து பாடத் தொடங்கினார். அப்பொழுது அரசர் அவரைத் தடுத்து நிறுத்தி, "நீங்கள் என்னைப் புகழ்ந்து பாடுவதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால், நீங்கள் எனக்காக ஒரு காரியம் செய்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்" என்றார்.

"சொல்லுங்கள் அரசே! நான் என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்" என்று புலவர் சொல்ல, அரசர் அவரிடம், "எனக்கு விவிலியத்தில் வருகின்ற நம்பிக்கையின் தந்தை என அழைக்கப்படும் ஆபிரகாமைக் குறித்து, நான் என்னுடைய கையிலுள்ள எலுமிச்சம்பழத்தை மேலே தூக்கிப்போட்டுப் பிடிப்பதற்குள் சொன்னால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்" என்றார். இதைக்கேட்டுப் புலவர் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார். "ஆபிரகமைக் குறித்து எவ்வளவோ இருக்கின்றன. அவரைக் குறித்து எலுமிச்சம்பழத்தை மேலே தூக்கிப் போட்டுப் பிடிக்கின்ற கணத்தில் சொல்ல முடியுமா? இருந்தாலும் சொல்கிறேன். ஆனால் எனக்கு ஒருவார காலம் அவகாசம் தாருங்கள்" என்றார். அரசரும் அதற்குச் சரியென்று சொல்ல, புலவர் தன்னுடைய இல்லத்திற்குச் சென்று அது குறித்துத் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார்; ஆபிரகாமைக் குறித்து நிறையப் புத்தகங்களைத் தேடித் தேடித் படிக்கத் தொடங்கினார்.

இதற்கிடையில் அரண்மனையில் நடந்தது எல்லார்க்கும் தெரிய வந்தது. எனவே, மக்கள் அனைவரும் குறிப்பிட்ட நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தார்கள். குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது. பொதுமக்களும் அவையோர் அனைவரும் கூடியிருந்த வேளையில் புலவரும் அங்கு இருந்தார். அப்பொழுது அரசர் தன்னுடைய கையில் வைத்திருந்த எலுமிச்சம்பழத்தைத் தூக்கிப் போட்டார். எல்லாரும் புலவர் என்ன சொல்லப்போகிறாரோ என்று ஆவலுடன் காத்திருந்தார்கள். அரசர் மேலே தூக்கிப்போட்ட எலுமிச்சம்பழத்தைக் கையில் பிடித்த மறுகணம் புலவர் உரத்த குரலில், "நேர்மையாளர் தன் நம்பிக்கையால் வாழ்வடைவர்" என்று சொன்னார். இதைக் கேட்டு அரசர் மட்டுமல்ல, அங்கிருந்த எல்லாரும் மிகவும் மகிழ்ச்சியடைந்து, சத்தமாகக் கைகளைத் தட்டி தங்களுடைய வாழ்த்துகளை அவர்க்குத் தெரிவித்தார்கள். பின்னர் அரசர் அந்தப் புலவர்க்கு ஏராளமான பொற்காசுகளைத் தந்து வழியனுப்பி வைத்தார்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் புலவர் சொன்னது போன்று, ஆபிரகாம் தன்னுடைய நம்பிக்கையினால் வாழ்வடைந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைய முதல் வாசகமும் ஆபிரகாம் தன்னுடைய நம்பிக்கைக்குச் சாட்சியாக விளங்கிய ஒரு நிகழ்வைக் குறித்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

ஆண்டவர் ஆபிரகாமைச் சோதித்தல்

முதல் வாசகத்தில் ஆண்டவர் ஆபிரகாமிடம், நீ அன்புகூரும் உன் ஒரே மகனை எரிபலியாகப் பலியிடவேண்டும் என்று சொல்கின்றார். ஆபிரகாமும் ஆண்டவர் தனக்குச் சொன்னதுபோன்று தன் ஒரே மகனைப் பலியிடத் துணிகின்றார்.

ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமைப் பலமுறை சோதித்தார். ஆபிரகாமைத் தன் சொந்த நாட்டையும் ஊரையும்விட்டு வேறோர் இடத்திற்குப் போகச் சொன்னது தொடங்கி, அவர் மிகவும் அன்புகூர்ந்த ஈசாக்கைப் எரிபலியாகத் தருவது வரை பலமுறை (தொநூ 11: 27-12:5; 12: 10-13:4; 14: 1-6 17: 24) சோதித்தார். அந்தத் சோதனைகளை எல்லாம் ஆபிரகாம் நம்பிக்கையோடு இருந்து வெற்றி கொண்டார். 'தன் ஒரே மகனை ஆபிரகாம் எப்படி பலியிடத் துணிவோரோ' என்று கடவுள் நினைத்திருக்கலாம். ஆனால், அவர் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு, மகனைப் பலியிடத் துணிகின்றார். இதனால் கடவுட்கு அவர் உகந்தவர் ஆகின்றார்.

நம்பிக்கையினால் வாழ்வடைந்த ஆபிரகாம்

எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் சொன்னதுபோன்று ஆபிரகாம் ஆண்டவர்மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் (எபி 11: 12) அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக அவர் தன் ஒரே மகனைக் கையளிக்கத் துணிந்தார். இதனால், கடவுள் அவரைக் குறித்து மிகவும் மகிழ்ந்து அவருடைய சந்ததியை கடற்கரை மணலைப் போலவும் வானத்து விண்மீன்களைப் போலவும் பெருகச் செய்வேன் என்று சொல்லி, அதன்படியே செய்கின்றார். ஆகையால், நாமும் ஆபிரகாமைப் போன்று ஆண்டவரிடம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தால் அவரைப் போன்று வாழ்வடைவோம் என்பது உறுதி.

சிந்தனை

'நம்பிக்கையினால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்' (எபி 11:12) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகவே, நாமும் ஆபிரகாமைப் போன்று, நம் மூதாதையரைப் போன்று நம்பிக்கையினால் ஆண்டவர்க்கு நற்சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 நற்செய்தி (மத் 9:1-8)

சமூகப் பொறுப்புணர்வு

'இன்னைக்கு யாரு சார் யாரையும் பத்தி கவலைப்படுறா?' என்ற புலம்பல், கேள்வி, விரக்திஉணர்வு நம் காதுகளில் அடிக்கடி விழுகிறது.

தங்களைப் பற்றியே கவலைப்பட நேரம் இல்லாத மனிதர்களுக்கு மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட நேரம் எங்கிருந்து வரும்?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி இயேசுவிடம் தூக்கிக்கொண்டு வருகின்றனர். இயேசு குணமாக்குவதைக் கண்டு சிலர் முணுமுணுக்கின்றனர். சமூகத்தின் இரண்டு வகை மனிதர்களை இங்கே பார்க்கிறோம். தூக்கி வந்த மனிதர்கள் தங்களுடைய சக உதரன் (சகோதரன்) மேல் உள்ள பொறுப்புணர்வைக் காட்டுகின்றனர். முணுமுணுத்தவர்கள் தங்களுடைய பொறுப்புணர்வை மறந்ததோடல்லாமல், ஒட்டுமொத்த நிகழ்வின்மேல் காழ்ப்புணர்வு அல்லது கசப்புணர்வு காட்டுகின்றனர்.

முடக்குவாதமுற்றவருக்கு நலம் தந்த இயேசு, அவரிடம், 'உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு போ' என்கிறார்.

இது அவர் கொள்ள வேண்டிய பொறுப்புணர்வை அவருக்கு நினைவூட்டுவதாக இருக்கிறது. நலமில்லாத இருக்கும்போது அடுத்தவர் உன்மேல் பொறுப்புணர்வு காட்டுவர். நலமாயிருக்கும் நீ உனக்கு நீயே பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று இயேசு சொல்வதுபோல இருக்கிறது. ஆக, நான் அடுத்தவர்மேல் காட்ட வேண்டிய பொறுப்புணர்வையும், என்மேல் கொள்ள வேண்டிய பொறுப்புணர்வையும் ஒருசேரச் சொல்லிவிடுகிறார் இயேசு.

முணுமுணுக்கும் ஒருவர் தன் பொறுப்பைத் தட்டிக்கழிப்பார். அல்லது வேண்டா வெறுப்பாக நிறைவேற்றுவார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 22:1-19), தன் அன்பு மகன், தன் ஒரே மகன் ஈசாக்கை ஆபிரகாம் பலியிடத் துணிகின்றார். அவரிடம் எந்தவொரு முணுமுணுப்போ, வெறுப்போ இல்லை. மாறாக, 'இதோ! தருகிறேன்!' என்று கடவுளுக்குத் தான் கொடுத்த வார்த்தைகளுக்கு பொறுப்பேற்கின்றார் ஆபிரகாம். தனக்கு இழப்பு என்றாலும் அதை ஏற்கத் துணிகின்றார்.

பொறுப்புணர்வைச் செயல்படுத்த நாம் நிறையவற்றை இழக்க வேண்டும். முடக்குவாதமுற்றவரைத் தூக்கிக்கொண்டு வந்தவர்கள் தங்களுடைய நேரம், ஆற்றல், முதன்மையானவை அனைத்தையும் இழக்கின்றனர். ஆனால், இந்த இழப்பால் ஒருவர் நலம் பெறுகிறார்.

ஆபிரகாமும் தன் மகனைப் பலியிடுவதற்காகத் தூக்கிவந்தார். கடவுளின் உடனிருப்பால் தன் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டு இல்லம் செல்கின்றார்.

ஆக, இரண்டு கேள்விகள்:

(அ) இன்று நான் யாருடைய கட்டிலையாவது சுமக்க முன்வருகிறேனா?

(ஆ) என் கட்டிலை நான் சுமக்க மறுக்கிறேனா?


Rev. Fr. Yesu Karunanidhi

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!