Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         02 ஜூலை 2019  
                                  பொதுக்காலம் 13ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 

=================================================================================
ஆண்டவர் வானத்திலிருந்து சோதோம், கொமோரா நகர்களின்மேல் கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 19: 15-29

அந்நாள்களில் பொழுது விடியும் வேளையில் தூதர்கள் லோத்தை நோக்கி, "நீ எழுந்திரு! உன் மனைவியையும், உன் இரு புதல்வியரையும் கூட்டிக்கொண்டு போ! இல்லையேல், இந்நகரின் தண்டனைத் தீர்ப்பில் நீயும் அகப்பட்டு அழிவாய்" என்று வற்புறுத்திக் கூறினார்கள். அவர் காலந்தாழ்த்தினார்.

ஆண்டவர் அவர் மீது இரக்கம் வைத்திருந்ததால், அந்த மனிதர்கள் அவரது கையையும், அவர் மனைவியின் கையையும், அவர் இரு புதல்வியர் கையையும் பிடித்துக் கொண்டுபோய் நகருக்கு வெளியே விட்டார்கள். அவர்களை வெளியே அழைத்து வந்தவுடன் அந்த மனிதர்கள் அவரை நோக்கி, "நீ உயிர் தப்புமாறு ஓடிப்போ; திரும்பிப் பார்க்காதே; சமவெளி எங்கேயும் தங்காதே; மலையை நோக்கித் தப்பி ஓடு; இல்லையேல் அழிந்து போவாய்" என்றார்கள்.

லோத்து அவர்களை நோக்கி: "என் தலைவர்களே, வேண்டாம். உங்கள் அடியானுக்கு உங்கள் பார்வையில் இரக்கம் கிடைத்துள்ளது. என் உயிரைக் காக்கும் பொருட்டு நீர் காட்டிய பேரன்பு உயர்ந்தது. ஆயினும் மலையை நோக்கித் தப்பியோட என்னால் இயலாது. ஓடினால் தீங்கு ஏற்பட்டு, நான் செத்துப் போவேன். எனவே, நான் தப்பியோடிச் சேர்வதற்கு வசதியாக, இதோ ஒரு நகர் அருகிலுள்ளது. அது சிறியதாய் இருக்கிறது. அதற்குள் ஓடிப்போக விடுங்கள். அது சிறிய நகர் தானே? நானும் உயிர் பிழைப்பேன்" என்றார்.

அதற்கு தூதர் ஒருவர், "நல்லது, அப்படியே ஆகட்டும். இக்காரியத்திலும் உனக்குக் கருணை காட்டியுள்ளேன். நீ கேட்டபடி அந்நகரை நான்அழிக்க மாட்டேன். நீ அங்கு விரைந்தோடித் தப்பித்துக் கொள். நீ அங்குச் சென்று சேருமட்டும் என்னால் ஒன்றும் செய்ய இயலாது" என்றார். இதனால் அந்த நகருக்குச் "சோவார்" என்னும் பெயர் வழங்கிற்று. லோத்து சோவாரை அடைந்தபோது கதிரவன் மண்ணுலகின் மேல் உதித்திருந்தான்.

அப்பொழுது ஆண்டவர் வானத்திலிருந்து சோதோம், கொமோரா நகர்களின்மேல் கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார். அந்நகரங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த சமவெளி முழுவதையும் அழித்தார். நகர்களில் வாழ்ந்த அனைவரையும், நிலத்தில் தளிர்த்தனவற்றையும் அழித்தார். அப்பொழுது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். உடனே உப்புத் தூணாக மாறினாள்.

ஆபிரகாம் காலையில் எழுந்திருந்து, தாம் ஏற்கெனவே ஆண்டவர் திருமுன் நின்ற இடத்திற்குப் போனார். அவர் சோதோமையும் கொமோராவையும் சூழ்ந்திருந்த நிலப்பகுதியையும் நோக்கிப் பார்த்தபோது சூளையின் புகைபோல நிலப்பரப்பிலிருந்து புகை கிளம்பக் கண்டார். கடவுள் சமவெளி நகர்களை அழித்தபோது, ஆபிரகாமை நினைவு கூர்ந்தார். எனவே லோத்து குடியிருந்த நகர்களை அழித்தபோது கடவுள் அவரைக் காப்பாற்றினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 26: 2-3. 9-10. 11-12 (பல்லவி: 3a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு என் கண்முன் இருக்கின்றது.

2 ஆண்டவரே, என்னைச் சோதித்து ஆராய்ந்து பாரும்; என் மனத்தையும் உள்ளத்தையும் புடமிட்டுப் பாரும்; 3 ஏனெனில், உமது பேரன்பு என் கண்முன் இருக்கின்றது; உமக்கு உண்மையாக நடந்து வருகிறேன். பல்லவி

9 பாவிகளுக்குச் செய்வதுபோல் என் உயிரைப் பறித்துவிடாதீர்! கொலை வெறியர்களுக்குச் செய்வதுபோல் என் வாழ்வை அழித்து விடாதீர்! 10 அவர்கள் கைகளில் தீச்செயல்கள்; அவர்கள் வலக் கையில் நிறையக் கையூட்டு. பல்லவி

11 நானோ மாசற்றவனாய் நடந்து கொள்கின்றேன்; என்னை மீட்டருளும்; எனக்கு இரங்கியருளும். 12 என் கால்கள் சமமான தளத்தில் நிற்கின்றன; மாபெரும் சபையில் ஆண்டவரைப் புகழ்ந்திடுவேன். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 130: 5

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
================================================================================
இயேசு எழுந்து காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 23-27


அக்காலத்தில் இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள். திடீரெனக் கடலில் பெருங் கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக் கொண்டிருந்தார்.

சீடர்கள் அவரிடம் வந்து, "ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்" என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.

இயேசு அவர்களை நோக்கி, "நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?" என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்து கொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.

மக்கள் எல்லாரும், "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?" என்று வியந்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

படைத்தவரை அருகில் வைத்து, பயந்தவர்களை பார்த்து கடுமையாக சாடுகின்றார்.

இதனால் தானோ அன்று தோமாவிடம் காணாமலேயே விசுவசிப்போர் பேறுபெற்றோர் என்றாரோ?

காணும் கண்கள் பேறுபெற்றது என்றாலும், நம்பிக்கை குறைவுறும் போது, தேர்வு செய்யப்பட்டவர்களும், கண்டனத்திற்கு ஆளாகின்றார்கள்.

கண்கள் கண்டாலும், காதுகள் கேட்டாலும், நம்பும் போதே நல்லது அரங்கேறும்.

அரச ஆலுவலர் மகன் மரணப்படுக்கையில் இருந்த போது, இயேசுவை கண்டார், அவர் வருவேன் என்ற மொழி கேட்டார், மகன் மரணத்தை சந்தித்து விட்டான் என்று சொன்ன போதும் நம்பினார் நல்லது விளைந்தது.

நாமும் நம்பும் போதே நல்லது நடக்கும்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 தொடக்கநூல் 19: 15-29

"உனக்குக் கருணை காட்டியுள்ளேன்"

நிகழ்வு

ஒரு குரு தன்னுடைய சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, சீடர்களுள் ஒருவர் அவரிடம், "குருவே! கடவுள் கடுமையானவரா? கருணையே வடிவானவரா?" என்றொரு கேள்வியைக் கேட்டார். அதற்கு குரு அவரிடம், "இந்த கேள்வியை விளக்க உனக்கொரு கதை சொல்கின்றேன். அந்தக் கதையின் முடிவில் நீ கேட்ட கேள்விக்கான பதில் கிடைத்துவிடும்" என்று சொல்லிவிட்டுக் கதையைத் தொடர்ந்தார்:

"ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் மிகப்பெரிய பாவி. ஒருசமயம் அவன் பக்கத்து ஊர்க்குக் கால்நடையாக நடந்து சென்றுகொண்டிருந்தான். அதுவோ சரியான வெயில் காலம். அதனால் அவனுக்கு நா வறண்டு தாகம் எடுக்கத் தொடங்கியது. அவன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். தொலைவில் ஒரு கிணறு தெரிந்தது. அந்தக் கிணற்றுக்குச் சென்றால், தாகத்திற்குத் தண்ணீர் அருந்திவிட்டு, பயணத்தைத் தொடரலாம் என்று முடிவுசெய்தான். அதன்படி அவன் தொலைவில் தெரிந்த கிணற்றடிக்குச் சென்றான்.

அந்தக் கிணற்றில் தண்ணீர் மேலே கிடந்தது. ஆனால், அதை மொண்டு குடிப்பதற்குத்தான் பாத்திரம் எதுவுமில்லை. எனவே, அவன் தான் அணிந்திருந்த காலணிகளில் ஒன்றைக் கழற்றிக் கிணற்றுக்குள் விட்டு, தண்ணீர் மொண்டு குடிக்கத் தயாரானான். அப்பொழுது அவனைப் போன்று மிகவும் தாகத்தோடு ஓடிவந்த ஒரு நாயானது அவனருகில் வந்து, அவனையே பார்த்தது. அதைப் பார்த்ததும், அவனுக்கு அதன்மேல் வார்த்தையால் விவிரிக்க முடியாத அளவுக்கு இரக்கம் ஏற்பட்டது. எனவே, அவன் தான் குடிப்பதற்கு மொண்ட தண்ணீரை அந்த நாய்க்குக் குடிக்கக் கொடுத்து, அதன்பிறகு தண்ணீரை மொண்டு அவன் குடித்தான். இப்படி அவன் தாகாத்தால் தவித்துக் கொண்டிருந்த ஒரு நாய்க்கு தண்ணீர் குடிக்கக் கொடுத்ததால், கடவுள் அவனுக்கு விண்ணகத்தைப் பரிசாக வழங்கினார்."

இதைக் சொல்லி முடித்ததும் குரு தன்னிடம் கேள்விகேட்ட அந்தச் சீடரிடம், "இப்பொழுது சொல். கடவுள் கடுமையானவரா? கருணையே வடிவானவரா?" என்று கேட்டார். "தாகத்தால் தவித்துக்கொண்டிருந்த ஒரு நாய்க்கு இரக்கம் காட்டிய பாவிக்கு விண்ணகம் கிடைத்திருக்கின்றதெல்லாம், கடவுள் உண்மையிலேயே கருணையே வடிவானவர்தான்" என்றார். "மிகச் சரியாகச் சொன்னாய். வாழ்த்துகள்" என்று அவரை மனதார வாழ்த்தினார் குரு.

கடவுள் கருணையே வடிவானவர் என்பதை இந்த நிகழ்வானது மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகமும் கடவுள் கருணையே வடிவானவர் என்பதையும் அதே நேரத்தில் கடுமையானவர் என்பதையும் எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்

லோத்துவின் குடும்பத்தார்மீது கருணை காட்டிய கடவுள்

தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவரின் தூதர்கள், லோத்துவிடம் வந்து, நீயும் உன்னுடைய மனைவி மற்றும் இரு புதல்விகளும் இந்த நகரிலிருந்து தப்பித்து ஓடிவிடு. இல்லையென்றால் இந்த நகரில் உள்ளவர்களோடு நீயும் அழிந்து போவாய் என்கின்றார்.

கடவுளிடம் தூதர்கள் நகரில் இருந்த எல்லாரையும் அழிக்க முற்பட்டபோது, லோத்துவின்மீதும் அவருடைய குடும்பத்தார்மீதும் கருணை காட்டினர் எனில், அதற்கான காரணம் என்னவென்று தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். இதற்கான பதிலை பேதுரு எழுதிய இரண்டாவது திருமுகத்தில் வாசிக்கலாம். அப்பகுதியில், லோத்து நேர்மையாளர் (2 பேது 2: 6-9) என்று சொல்லப்படுகின்றது. அதனால்தான் கடவுளின் தூதர்கள் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் அழிக்காமல், அவர்களை அங்கிருந்து வேறோர் இடத்திற்குப் போகச் சொல்கின்றார். அதற்கு லோத்து கடவுளின் தூதர்களிடம், என்னால் அவ்வளவு தூரம் போகமுடியாது அருகில் ஓர் ஊர் இருக்கின்றது. அதற்குள் ஒளிந்துகொள்கின்றேன் என்று சொல்கின்றபோது, தூதர் ஒருவர், "அப்படியே ஆகட்டும். இக்காரியத்திலும் நான் உனக்குக் கருணை காட்டியுள்ளேன்" என்கின்றார்.

அப்படியானால், கடவுளின் கருணை லோத்துவுக்குக் கிடைத்ததுபோல் நமக்குக் கிடைக்கவேண்டுமெனில், நாம் நேர்மையான வாழ்க்கை வாழ்வது மிகவும் அவசியாகும்.

கடவுளின் வார்த்தையைக் கேட்டும் திருந்தாமல் இருந்ததால், அழிந்து போன மக்கள்

கடவுள் லோத்துவையும் அவருடைய குடும்பத்தையும் அழிவிலிருந்து காப்பாற்றி, அவர் கருணையே வடிவானவர் என்று காட்டும் அதே வேளையில், தன்னுடைய வார்த்தைகளைக் கேட்டும் மனம் திருந்தாமல் இருந்தத (எரே 23:14) சோதோம், கொமோரோ நகர மக்கள்மீது கடவுள் கடுமையாகச் செயல்படுகின்றார். அதாவது அவர்களை அழிக்கின்றார்.

கடவுளின் விரும்பம், பாவிகள் அழிந்துபோகக்கூடாது. மாறாக மனம்மாற வேண்டும் (2 பேது 3:9) என்பதுதான். ஆனாலும் அவர்கள் மனம் திரும்பாமல் இருப்பதால், அவர்களே அவர்களுடைய அழிவுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றார்கள். இங்கு கடவுள் சோதோம், கொமோரோ நகர மக்கள்மீது கடுமையாகச் செயல்பட்டார் என்று சொல்வதை விடவும், அவர்களுடைய செயல்களே அவர்களுடைய அழிவுக்குக் காரணமாக அமைந்தது என்றுதான் சொல்லவேண்டும். ஆகையால், கடவுளின் வார்த்தை நமக்கு அறிவிக்கப்படுகின்றதென்றால், அதைக் கேட்டு அதன்வழி நடக்கவேண்டும்.

சிந்தனை

'ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்' (திபா 103: 8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், பேரன்பும் கருணையும் கொண்ட கடவுளின் வழியில் நடப்போம். அதன்மூலம் அழிவிலிருந்து காக்கப்பட்டு, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 8: 23-27

நம்பிக்கை குன்றியவர்களே!


நிகழ்வு

மலையடிவாரத்தில் துறவுமடம் ஒன்று இருந்தது. அதில் ஏராளமான இளைஞர்கள் சீடர்கள் - தங்கிப் பயிற்சி பெற்று வந்தார்கள்.

ஒருநாள் அந்தத் துறவுமடத்தில் இருந்த துறவி அங்கிருந்த சீடர்களுள் ஒருவரைப் பக்கத்துக்கு ஊர்க்கு வேலை விடயமாக அனுப்பி வைத்தார். சீடரும் துறவி சொன்னதற்கிணங்க பக்கத்து ஊர்க்குக் கிளம்பிச் சென்றார். போகிற வழியில் பயங்கர இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. சீடர்க்கு பயம் தொற்றிக்கொண்டது. 'இந்த மழையில் பக்கத்துக்கு ஊர்க்குச் சென்றால் அவ்வளவுதான்' என்று நினைத்துக்கொண்டு துறவியிடம் ஓடிவந்து, நடந்தது அனைத்தையும் அவரிடம் கூறினார்.

"நீ ஒன்றும் பயப்படாதே! ஆண்டவரின் திருப்பெயரைச் சொல்லிக்கொண்டே செல்... உனக்கு முன்பாக இருக்கும் எத்தகைய இடரும் பனிபோல மறைந்துவிடும்" என்று துறவி அவரிடம் சொல்லி அனுப்பினார். சீடரும் துறவி சொன்ன வார்த்தைகளை நம்பி, ஆண்டவரின் திருப்பெயரைச் சொல்லிக்கொண்டு எந்தவோர் ஆபத்துமின்றிப் பக்கத்து ஊர்க்குச் சென்றார். அவர் துறவியிடம் திரும்பி வந்து, நடந்தது அனைத்தையும் அவரிடம் எடுத்துச் சொன்னபோது, அவர் மிகவும் வியப்படைந்தார்.

மறுநாள் துறவி ஒரு முக்கியமான விடயமாகப் பக்கத்து ஊர்க்குச் செல்லவேண்டி வந்தது. அன்றைக்கும் இடியுடன் கூடிய மழை பெய்தது. ஆனாலும் அவர் அதைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து நடந்து சென்றார். வழியில் ஒரு வாய்க்கால் இருந்தது. அதில் அன்றைக்குத் தண்ணீர் அதிகமாகச் சென்றது. 'இதை எப்படிக் கடப்பது?' என்று யோசித்த அவர்க்கு, முந்தைய நாள் தன் சீடர்க்கு சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே அவர் ஆண்டவரின் திருப்பெயரைச் சொல்லி அதில் நடக்கத் தொடங்கினார். அவரால் எளிதாக அந்த வாய்க்காலில் நடந்து செல்ல முடிந்தது.

திடீரென அந்த வாய்க்காலில் நீர்வரத்து அதிகமாக வரத் தொடங்கியது. அப்பொழுது அவர்க்கு, 'என்னால் இந்த வாய்க்காலைக் கடந்து போக முடியுமா? முடியாதா?' என்ற ஐயம் ஏற்பட்டது. அவர் இவ்வாறு ஐயம்கொள்ளத் தொடங்கிய மறுகணம் அவர் அந்த வாய்க்காலில் விழுந்து இறந்துபோனார்.

'அவநம்பிக்கைதான் அழிவுக்குக் காரணம்' என்பர். அதை உணர்த்தக்கூடியதாக இருக்கின்றது மேலே சொல்லப்பட்ட நிகழ்வு. இன்றைய நற்செய்தி நற்செய்தி வாசகம் நம்மிடம் இருக்கின்ற நம்பிக்கையற்றத் தன்மையை விட்டுவிட்டு ஆண்டவர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு வாழ அழைப்புத் தருகின்றது. நாம் அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

கடலில் சீடர்களுடன் பயணம் சென்ற இயேசு

நற்செய்தியில் இயேசு தன் சீடர்களுடன் கலிலேயாக் கடலில் தன் சீடர்களுடன் பயணம் செய்கின்றார். இக்கடலானது பதிமூன்று மைல் நீளமும் எட்டு மைல் அகலமும் கொண்டது. இதில் பெருங்காற்றிற்கும் புயலுக்கும் பஞ்சம் கிடையாது. அடிக்கடி இக்கடலில் புயலும் பெருங்காற்றும் வந்துகொண்டுதான் இருக்கும். இயேசு தன் சீடர்களுடன் கடலில் போகின்றபோது பெருங்கொந்தளிப்பு ஏற்படுகின்றது; அலைகள் படகிற்கு மேல் எழுகின்றன. இதில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில், அத்தகைய சூழலிலும் இயேசு தூங்கிக்கொண்டிருக்கின்றார் என்பதுதான். அதற்குக் காரணம், கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கைதான். ஆனால், சீடர்கட்கு அந்த நம்பிக்கை இல்லை, அதனால்தான் அலறுகின்றர்கள்.

சீடர்களை அவநம்பிக்கையிலிருந்து நம்பிக்கை கொள்ளச் செய்ய இயேசு

இயேசு தன் சீடர்களோடு இருந்தும், அவர்கள் அலைகளையும் கடல் கொந்தளிப்பையும் கண்டு அலறுவது நமக்கு வியப்பாக இருக்கின்றது. இயேசு அவர்களோடு இருந்தும், அவர்கள் இவ்வாறு அலறுவது அவர்களுடைய நம்பிக்கையின்மையை எடுத்துக் கூறுகின்றது. அதனால்தான் அவர் அவர்களைப் பார்த்து, "நம்பிக்கை குன்றியவர்களே" என்று சாடுகின்றார்.

இயேசு தன்னுடைய சீடர்களிடம் நம்பிக்கை குன்றியவர்களே என்று சொல்வது புதிதல்ல. ஏற்கனவே அவர் அவர்களிடம் மத்தேயு 6:30 ல் கூறியிருக்கின்றார். இங்கு அவர் மறுபடியும் கூறுகின்றார். 'புறவினத்தைச் சார்ந்த நூற்றுவத் தலைவனே தன்னிடம் அவ்வளவு ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கும்போது, என்னுடைய சீடர்கள் இப்படி நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றார்களே' என்று இயேசு நிச்சயம் வருந்தியிருக்கக்கூடும். அதனால்தான் அவர் அவர்களை அப்படிக் கடிந்து கொள்கின்றார்.

நாமும் இயேசுவின் சீடர்களைப் போன்றுதான் நம்பிக்கையின்றி இருக்கின்றோம். எனவே, நாம் நம்மிடம் இருக்கும் அவநம்பிக்கையைத் தூக்கி எறிந்துவிட்டு, நம்பிக்கையோடு வாழ்வது நல்லது.

சிந்தனை

'அம்மா, உம் நம்பிக்கை பெரியது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்' (மத் 15:28) என்று கானானியப் பெண்மணியைப் பார்த்து இயேசு கூறுவார். நாமும் இயேசுவிடம் உறுதியான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 நற்செய்தி (மத் 8:23-27) சாகப்போகிறோம்


'பதற்றம்' - இது இன்றை நம்மில் பலரைப் பீடித்திருக்கும் ஒரு நோய். இந்த நோயின் தாயின் பெயர் 'அவசரம்.' 'அவசரம்' என்ற உணர்வு மூளை சார்ந்ததா அல்லது உடல் சார்ந்ததா? என்று பார்த்தால், உடல் உபாதை அல்லது உடல் பசி நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் 'அவசரம்' என்பது உள்ளம் சார்ந்ததே. 'பதற்றம்' என்பது மூளைக்கும் உடலுக்கும் நடுவில் உள்ள இடைவெளி. எடுத்துக்காட்டாக, நான் 11 மணிக்கு ஒரு கருத்தரங்கத்தில் பேச வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். 10 மணிக்கே எனக்கு பதற்றமாக இருக்கிறது என்றால் என்ன அர்த்தம். என்னுடைய மூளை 11 மணிக்குப் போய்விட்டது. உடல் 10 மணியில் இருக்கிறது. மூளை உடலைப் பார்த்து, 'வா ... வா ... சீக்கிரம் பேசு' என்று அவசரப்படுத்தும். ஆனால், உடலால் 10 மணியிலிருந்து 11 மணிக்கு தாவ முடியாது. அது ஒவ்வொரு நொடியாகத்தான் நகரும். தன்னால் தாவ முடியவில்லையே என்று சொல்லும் கையறுநிலைதான் பதற்றம்.

சீடர்களும் இயேசுவும் படகில் இருக்கிறார்கள். அவர்கள் இருந்த கடல் திபேரியாக் கடல். அலைகள் இல்லாத, அல்லது சிற்றலைகள் எழுகின்ற கடவுள் அது. சீடர்கள் பெரும்பாலானவர்கள் மீனவர்கள், மீன்பிடித் தொழில் செய்தவர்கள். கடலின் அலைகளை எதிர்கொள்ளும் திறன் பெற்றவர்கள். படகில் உள்ள ஒரு விதிவிலக்கு இயேசு. இவர் தச்சர். தண்ணீரின் ஓட்டம், அலைகளின் தாக்கம் தச்சனுக்குத் தெரியாது. ஆனாலும், தச்சன் தூங்குகிறார். மீனவர்கள் அலறுகிறார்கள்.

சீடர்களின் அலறலுக்குக் காரணம் அவர்களின் பதற்றம்.

அவர்களுடைய மூளை சாவுக்கு அருகில் சென்றுவிட்டது. உடல் படகில் இருக்கிறது. இரண்டிற்குமான இடைவெளியைச் சரிசெய்ய முடியாமால், 'ஆண்டவரே, காப்பாற்றும், சாகப்போகிறோம்' என அலறி, தூங்கிக்கொண்டிருந்தவரை எழுப்புகின்றனர்.

அலைகள் அடிக்கின்ற நேரத்திலேயே, 'சாகப்போகிறோம்' என்ற குரல் எழுப்புவது சீடர்களின் முதிர்ச்சியின்மையையும் காட்டுகின்றது. சீடர்கள் தங்களுடைய அதீத எண்ண ஓட்டங்களால் நடக்கவிருப்பதை மிகைப்படுத்துகிறார்கள்.

ஆனால், இயேசு மிகவும் சாதாரணமாக அல்லது இயல்பாக இருக்கிறார். 'என்னப்பா ஆச்சு! ஏன் சத்தம் போடுறீங்க?' என்று எதார்த்தமாகக் கேட்கிறார். 'நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?' எனக் கடிந்துகொள்கின்றார்.

'அவசரம்,' 'அச்சம்,' 'பதற்றம்,' 'சாவு பற்றிய பயம்,' 'நம்பிக்கையின்மை' - இவை சீடர்களின் உணர்வுகள்.

'அமைதி' - இது மட்டுமே இயேசுவின் உணர்வு.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 19:15-29) சோதோம் நகரிலிருந்து லோத்தையும் அவரின் குடும்பத்தையும் வெளியேற்றிவிட்டு, ஆண்டவராகிய கடவுள் அந்நகரின்மேல் நெருப்பும் கந்தகமும் பொழியச் செய்கின்றார். 'திரும்பிப் பார்க்காதே' என்று ஆண்டவர் கட்டளையிட்டும், லோத்தின் மனைவி திரும்பிப் பார்க்கிறாள். உப்புச்சிலையாக மாறுகிறாள்.

ஏன் அவள் திரும்பினாள்?

'ஆர்வத்தினாலா,' 'உண்மையாகவே அழிகிறதா என்று பார்க்கவா,' 'தனக்குப் பின் யாராவது வருகிறாரா?' என்ற அக்கறையினாலா?

தெரியவில்லை.

ஆனால், நகரை விட்டு ஓடும் அவசரம், பதற்றம் அவளைத் திரும்பிப்பார்க்க வைத்திருக்கலாம். பதற்றத்தில் நாம் அடிக்கடி திரும்பியும் பார்ப்போம் - உடலால் உள்ளத்தால். சீடர்களும் கரைக்குத் திரும்பலாமா என்று திரும்பிப் பார்த்திருப்பார்கள்.

அவசரம், பதற்றம், அச்சம், திரும்பிப் பார்த்தல் ஆகியவற்றை விடுத்து அமைதி மட்டும் பெற்றால் எத்துணை நலம்!



- Rev. Fr. Yesu Karunanidhi


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!