Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         01 ஜூலை 2019  
                                  பொதுக்காலம் 13ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 

=================================================================================
தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ?

தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 16-33

மூன்று மனிதர்களும் எழுந்து, சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமும் உடன்சென்று அவர்களை வழியனுப்பினார். அப்பொழுது ஆண்டவர், "நான் செய்ய இருப்பதை ஆபிரகாமிடமிருந்து மறைப்பேனா? ஆபிரகாமிடமிருந்தே வலிமைமிக்க மாபெரும் இனம் தோன்றும். அவன் மூலம் மண்ணுலகின் எல்லா இனத்தாரும் ஆசி பெற்றுக் கொள்வர்.

ஏனெனில், நீதி, நேர்மை வழி நின்று எனக்குக் கீழ்ப்படியும்படி தன் புதல்வருக்கும், தனக்குப்பின் தன் வழிமரபினருக்கும் கற்றுத்தருமாறு ஆண்டவராகிய நான் ஆபிரகாமுக்கு வாக்களித்ததை அவன் நிறைவேற்றுவான்" என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.

ஆதலால் ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, "சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெரும் கண்டனக் குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது. என்னை வந்தடைந்த கண்டனக் குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்து கொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்" என்றார்.

அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார்.

ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: "தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ? தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?" என்றார்.

அதற்கு ஆண்டவர், "நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்" என்றார்.

அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, "தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்து விட்டேன்; ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?" என்றார்.

அதற்கு அவர், "நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்" என்றார்.

மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, "ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?" என்று கேட்க, ஆண்டவர், "நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்" என்றார்.

அப்பொழுது ஆபிரகாம்: "என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்?" என, அவரும் "முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்" என்று பதிலளித்தார்.

அவர், "என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத் துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?" என, அதற்கு அவர், "இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்" என்றார்.

அதற்கு அவர், "என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒருவேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?" என, அவர், "அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்" என்றார்.

ஆபிரகாமோடு பேசி முடித்தபின் ஆண்டவர் அவரை விட்டுச் சென்றார். ஆபிரகாமும் தம் இடத்திற்குத் திரும்பிச் சென்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 103: 1-2. 3-4. 8-9. 10-11 (பல்லவி: 8a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினம் கொள்பவரல்லர். பல்லவி

10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. 11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
95: 8b,7b

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என்னைப் பின்பற்றி வாரும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 18-22

அக்காலத்தில் இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார். அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, "போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்" என்றார்.

இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்.

இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, "ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்" என்றார்.

இயேசு அவரைப் பார்த்து, நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்" என்றார்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 
தொடக்க நூல் 18: 16-33

பரிந்துபேசும் ஆபிரகாம்

நிகழ்வு

அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் அதிபராக இருந்தபோது அவரைப் பார்ப்பதற்கு அவருடைய பால்ய கால நண்பரும் குருவுமான ஒருவர் வந்தார். அவரைச் சந்தித்ததும் ஜார்ஜ் வாஷிங்டன் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். அதன்பிறகு இருவரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளைக் குறித்து நீண்டநேரம் பேசினார்கள். பின்னர் ஜார்ஜ் வாஷிங்டன் தன்னுடைய நண்பரும் குருவுமானவரிடம், "நண்பா! நீ இங்கு வந்ததான் நோக்கத்தைப் பற்றி நான் தெரிந்துகொள்ளலாமா?" என்று கேட்டார். அதற்கு அவர் ஒரு குறிப்பிட்ட பெயரைச் சொல்லி, "இவர்க்கு நீங்கள் மரணதண்டனை விதிக்கப்போவதாகக் கேள்விப்பட்டேன். அவர்மீது இரக்கம்காட்டி, அவருடைய தண்டனையைக் குறைக்கவேண்டும் என்று சொல்வதற்காகத்தான் இங்கு வந்தேன்" என்றார்.

இதைக் கேட்டதும் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் கண்கள் சிவந்தன. "நீ என்னுடைய நண்பன் என்பதற்காக உனக்காக எதுவேண்டுமானாலும் செய்வான். ஆனால், கொலைக்குற்றவாளி உன் நண்பன் என்பதற்காக அவனுடைய தண்டனையைக் குறைக்க முடியாது" என்றார் அவர். உடனே குரு அவரிடம், "அந்த மனிதர் என்னுடைய நண்பர் என்பதற்காக நான் அவர்க்கு உங்களிடம் பரிந்துபேச வரவில்லை. அவர் என்னுடைய எதிரி. அதனால்தான் அவர்க்காக நான் உங்களிடம் பரிந்துபேச வந்திருக்கின்றேன்" என்றார். "என்னது... அவர் உன்னுடைய எதிரியா...? அவர்க்காகவா நீ என்னிடம் பரிந்து பேச வந்திருக்கிறாய்?" என்று கேட்டதற்கு, அவருடைய குருவானவரும் நண்பருமானவர், "ஆமாம், அவர் என்னுடைய எதிரிதான். பங்கில் என்னைப் பற்றி மிகவும் தவறாக விமர்சிப்பவர்... நான் என்னென்ன பணிகளைச் செய்கின்றேனோ அவற்றிற்கெல்லாம் முட்டுக்கட்டை போடக்கூடியவர்" என்றார்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த ஜார்ஜ் வாஷிங்டன், "தெரிந்தவர்கள் அல்லது நண்பர்கட்காகப் பரிந்துபேசுகின்ற நிறைய மனிதர்களைப் பார்த்திருக்கின்றேன். முதன்முறை தீமை செய்தவர்க்காகப் பரிந்துபேசுகின்ற ஒருவரைப் பார்க்கின்றேன். உண்மையில் நீ மிகப்பெரிய மனிதன். உன்பொருட்டு அந்தக் கொலைக் குற்றவாளியின் மரணதண்டனையை இரத்துசெய்து ஆயுள்தண்டனைக் கைதியாக மாற்றுகிறேன்" என்று சொல்லிவிட்டுச் சொன்னபோடியே செய்தார்.

தனக்குத் தீமை செய்தவர்க்குப் பரிந்துபேசிய குருவைப்போன்று, இன்றைய முதல் வாசகத்தில் பாவத்தில் மூழ்கிப் போன சோதோம், கொமோராவுக்காக ஆபிரகாம், ஆண்டவரிடம் பரிந்துபேசுகின்றார். அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

சோதோம், கொமோரோ மக்கள் செய்த பாவம்

தொடக்க நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் சோதோம், கொமோரோ நகரை அழிக்க விரைந்தபோது, ஆபிரகாம் அவரிடம் அந்த நகரங்களில் இருந்தவர்கட்காகப் பரிந்துபேசுவதைக் குறித்து வாசிக்கின்றோம். ஆண்டவர் சோதோம், கொமோரோ நகரை அழிக்கத் துணியும் அளவுக்கு அங்கிருந்தவர்கள் செய்த குற்றம் என்ன என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது மிகவும் நல்லது.

தொடக்க நூல் 13:13; 19:15 மற்றும் யூதா 1:7 ஆகிய பகுதிகளில் நாம் வாசிப்பது போல, அங்கு இருந்தவர்கள் தகாத, இயற்கைக்குப் புறம்பான பாவங்களைச் செய்து, கொடிய பாவிகளாக இருந்துவந்தார்கள். இவர்கள் தங்களுடைய பாவங்களிலிருந்து மனம்மாறவே இல்லை (எரே 23:14). அதனால்தான் அந்த நகர்களில் இருந்தவர்களை அழித்தொழிப்பதற்கு ஆண்டவர் விரைந்து செல்கின்றார். அப்பொழுதுதான் ஆபிரகாம் அவர்கட்காகப் பரிந்து பேசுகின்றார்.

மக்கட்காகப் பரிந்து பேசும் ஆபிரகாம்

ஆண்டவராகிய கடவுள் சோதோம், கொமோரோ நகர்களை அழிக்கப் போகிறார் என்று தெரிந்ததும், அவர்கட்காகப் பரிந்துபேசுகின்றார். அதனால் அவர் கடவுளிடம், "தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்துவிடுவீரோ?" என்று கேட்டுவிட்டு ஐம்பது, நாற்பத்தைந்து, முப்பது, இருபது, பத்து நீதிமான்கள் இருந்தால் அவர்களை முன்னிட்டு அந்த நகர்களை அழியாமல் இருப்பீர்தானே" என்று கேட்கின்றார்கள். ஆபிராகாமின் பிரதான நோக்கம் அந்த நகர்களில் நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து வந்த தன் சகோதரன் (2 பேது 2: 6-9) லோத்து காப்பாற்றப்படவேண்டும் என்று இருந்தாலும், அவருடைய முன்மாதிரிகையான வாழ்க்கையைப் பார்த்து, அவரைப் போன்று இன்னும் ஒருசிலர் வாழ்ந்துவந்தால் சோதோம், கொமோரோவே அழிவிலிருந்து காப்பாற்றப்படும் என்பதால்தான் அவர் ஆண்டவரிடம் அப்படிக் கேட்கின்றார். ஆனால், லோத்துவைத் தவிர வேறு யாரும் நேர்மையாளர்கள் இல்லை என்பதுதான் துரதிஸ்டம். அதனால்தான் அந்த நகர்கள் அழிக்கப்படுகின்றன. லோத்து மட்டும் அதிலிருந்து காப்பாற்றப்படுகின்றார்.

இங்கு ஆபிராகம் சோதோம், கொமோரோ நகரில் இருந்தவர்கட்காக ஆண்டவரிடம் பரிந்துபேசியதைப் போன்று அல்லது மன்றாடியதைப் போன்று நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரிடம் பரிந்துபேசினால், பலர் அழிவிலிருந்து காப்பாற்றப் படலாம்.

சிந்தனை

'இறந்து, ஏன், உயிர்த்தெழுந்து கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்து நமக்காகப் பரிந்து பேசுகின்றார் அன்றோ' (உரோ 8:34) என்பார் பவுல். ஆதலால், நாம் இயேசுவைப் போன்று பாவிகள் மனம்மாறி, நல்வழிக்குத் திரும்பிவர அவர்கட்காக இயேசுவிடம் பரிந்து பேசுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 8: 18-22

சிம்மாசனத்தை மட்டுமல்ல, சிலுவையும் ஏற்பதுதான் சீடத்துவ வாழ்வு

நிகழ்வு

1930-களில் ஜெர்மனியில் உள்ள பெர்லின் பல்கலைக்கழகத்தில் இறையியல் பேராசியராகப் பணியாற்றி வந்தவர் அருட்தந்தை டயட்ரிச் போனஃபர் (Dietrich Bonhoeffer). இவருடைய காலத்தில் ஜெர்மன் திருஅவையானது ஹிட்லரின் பொருட்டு இரண்டாக உடைந்தது. ஒரு திருஅவை ஹிட்லரின் கொள்கைகட்கு ஆதரவாகவும் அதாவது ஜெர்மானியர்களை மட்டும் உள்ளடக்கியதாகவும் இன்னொரு திருஅவை ஹிட்லர்க்கு எதிராகவும் அதாவது யூதர்களையும் உள்ளடக்கியதாகவும் இருந்தது. அருட்தந்தை டயட்ரிச் போனஃபர் யூதர்களை உள்ளடக்கிய திருஅவையின் பக்கம் இருந்தார். இதனால் அவர் பேராசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் லண்டனுக்குச் சென்று, சில காலம் அங்கு பனிசெய்து வந்தார்.

1937 ஆம் ஆண்டு அவர்க்கு இரண்டு வகையான அழைப்புகள் வந்தன. ஒன்று நியூயார்க் நகரில் இருந்த புகழ்பெற்ற ஒரு குருமடத்தில் பணியாற்றுவது. இன்னொன்று ஜெர்மனிக்கு வந்து, யூதர்கள் முதற்கொண்டு எல்லாரையும் உள்ளடக்கிய குருமடத்திற்கு அதிபராக இருந்து பணிபுரிவது. இந்த அழைப்பு வந்ததும் டயட்ரிச் போனஃபர் யோசிக்கத் தொடங்கினார். 'நியூயார்க்கிற்குச் சென்றால் எந்தவொரு பிரச்சினையும் இன்றி மகிழ்ச்சியாக இருக்காலம். ஆனால், ஜெர்மனியில் கொடுங்கோலன் ஹிட்லரின் ஆட்சியில் பணிபுரிவது மிகவும் சவால்நிறைந்தது. மேலும் நியூயார்க்கில் பேராசிரியராக யார் வேண்டுமானாலும் பணியாற்றலாம். ஆனால், ஜெர்மனியில் பணிபுரிய யாரும் முன்வரமாட்டார்கள். ஆனாலும் அத்தகையதொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதே நல்லது' என்று ஜெர்மனிக்குச் சென்று, எல்லாரையும் உள்ளடக்கிய குருமடத்தில் அதிபராக இருந்து பணியாற்றத் தொடங்கினார்.

1943 ஆம் ஆண்டு, டயட்ரிச் போனஃபர் இளைஞர்களை எல்லாம் திசைதிருப்புகிறார் என்று ஹிட்லரின் நாசிப்படையினர் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். அங்கும்கூட அவர் ஆண்டவரின் வார்த்தையை எடுத்துரைக்கத் தவறவில்லை. சிறையில் இருந்த கைகட்கு அவர் ஆண்டவரின் வார்த்தையை எடுத்துரைக்கத் தொடங்கியதும், பலர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள். இதனால் கடுஞ்சீற்றம் அடைந்த சிறைஅதிகாரி 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் நாள் டயட்ரிச் போனஃபரை கடுமையாகச் சித்ரவதை செய்து, கொன்றுபோட்டது.

டயட்ரிச் போனஃபர் நினைத்திருந்தால் மிகவும் சொகுசான, எந்தவொரு பிரச்சினையும் இன்றி வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் அது சீடத்துவ வாழ்க்கை அல்ல என்பதை உணர்ந்து, ஜெர்மனிக்கு வந்து, ஹிட்லரின் அடக்குமுறைக்கு மத்தியிலும் குருமாணவர்களை உருவாக்கும் சவால்நிறைந்த பணியைச் செய்தார். கடைசியில் கொல்லப்பட்டார். இவ்வாறு அவர் இயேசுவின் உண்மையான சீடராய் விளங்குகின்றார். இன்றைய நற்செய்தி வாசகமும் சிலுவைகளை ஏற்பதே சீடத்துவ வாழ்வு என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசுவைப் பின்பற்ற விரும்பிய மறைநூல் அறிஞர்

ஆண்டவர் இயேசு தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கியபோது, பலரும் அவருடைய போதனையால், ஆற்றிய வல்லசெயல்களால் ஈர்க்கப்பட்டு, அவரைப் பின்பற்ற விரும்பினார்கள். அப்படி இயேசுவைப் பின்பற்ற விரும்பியவர்களுள் ஒருவர்தான் மறைநூல் அறிஞர். அவர் இயேசுவைப் பின்பற்ற விரும்பியதைக் குற்றம் சொல்ல முடியாது. ஆனால், அவருடைய நோக்கம்தான் தவறாக இருந்தது. 'இயேசுவைப் பின்பற்றினால் மக்களுடைய செல்வாக்கைப் பெறலாம்... எல்லாராலும் மதிக்கப்படலாம்... மகிழ்ச்சியாக இருக்கலாம்' என்று நினைத்து அவர் இயேசுவைப் பின்பற்ற விரும்பியிருக்கக்கூடும். இத்தகைய மனநிலையோடு இருந்த அந்த மறைநூல் அறிஞர்க்கு இயேசு என்ன மறுமொழி கூறினார் என்று தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

எது சீடத்துவ வாழ்வு என்பதை எடுத்துரைத்த இயேசு

சீடத்துவ வாழ்க்கை குறித்து சரியான புரிதல் இல்லாமல் இயேசுவிடம் வந்த மறைநூல் அறிஞரிடம் இயேசு, "நரிகட்குப் பதுங்குக்குழிகளும் வானத்துப் பறைவைகட்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை" என்று சொல்லி, சீடத்துவ வாழ்க்கை என்றால், கஷ்டமே இல்லாத வாழ்க்கை அல்ல, கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் வாழ்க்கை, சிலுவைகளே இல்லாத வாழ்க்கை அல்ல, சிலுவைகளைச் சுமக்கும் வாழ்க்கை என்று எடுத்துரைக்கின்றார். இயேசு அவரிடம் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, அவர் இயேசுவைப் பின்தொடராமல் போகின்றார். நாமும் கூட பல நேரங்களில் சீடத்துவ வாழ்க்கை குறித்த போதிய தெளிவில்லாமல் இருக்கின்றோம். இந்நிலையில் ஆண்டவர் இன்றைய நற்செய்தியின் வழியாக எடுத்துரைக்கும் செய்தியை உள்வாங்கிக்கொண்டு வாழ்வது நல்லது.

சிந்தனை

'என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்' (மத் 16:25) என்பார் இயேசு. இயேசுவின் வழியில் நடக்கும் நாம், நம்முடைய வாழ்வில் சீடத்துவ வாழ்வில் வரும் சிலுவைகளைத் துணிவோடு தாங்கிக் கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 நற்செய்தி (மத் 8:18-22)

இறந்தோரைப் பற்றி

'கடந்த காலத்தைப் பற்றி நாம் நினைக்கலாமா?' என்ற கேள்விக்கு நம்முடைய விடை மூன்று நிலைகளில் இருக்கிறது: (அ) 'கடந்த காலம்' நம்முடைய வேர். வேர் இல்லாமல் கிளை இல்லை. ஆக, எவ்வளவுதான் நாம் கிளை பரப்பினாலும் நம்முடைய வேரை மறந்துவிடக்கூடாது. ஆக, கடந்த காலத்தை எப்போதும் மனத்தில் வைத்திருக்க வேண்டும். (ஆ) கடந்த காலத்தை நினைக்க வேண்டும். அதற்காக மனத்தை அதிலேயே வைத்திருக்கக் கூடாது. முன்நோக்கிப் பார்த்து நடந்து முன்னேற வேண்டும். அதாவது, கார் ஓட்டுவது போல. பின்னால் வரும் அல்லது நாம் கடந்த வந்த பாதையை 'ரேர் மிரரில்' பார்க்கலாம். ஆனால், ரேர் மிரரை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் நாம் முன்னால் மோதிவிடுவோம். ரேர் மிரரைப் பார்த்தும் பார்க்காமல் இருந்துகொண்டு, கண்முன் இருக்கும் பெரிய கண்ணாடி வழியாக வரவிருப்பதைப் பார்க்க வேண்டும். (இ) கடந்த காலத்தை முற்றிலும் மறந்துவிட வேண்டும். கடந்த காலம் நம்மைக் கட்டி வைக்கும் சங்கிலி. அதிலிருந்து விடுபடுவர் ஒருவரே மகிழ்ச்சியாளர். இதை கௌதம புத்தர் அதிகமாக வலியுறுத்துகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவிடம் வருகின்ற மறைநூல் அறிஞர் ஒருவர், தான் இயேசுவைப் பின்பற்ற விரும்புவதாகச் சொல்கின்றார். அவரிடம் 'மானிட மகனுக்குத் தலைசாய்க்கவும் இடமில்லை' என்கிறார். இன்னொரு சீடர், 'நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்' என்று சொல்ல, இயேசுவோ, 'நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்' என்கிறார்.

இயேசுவின் அறிவுரையை எப்படிப் புரிந்துகொள்வது?

'இறந்தவர்' என்பது 'கடந்த காலத்தின்' உருவகமா? அல்லது

'உறவு, உடைமை என்று இறந்து கிடப்போரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீர் நுழையும் இறையாட்சி உறவில் இரத்த உறவும் இல்லை, திருமண உறவும் இல்லை' என்ற புதிய புரிதலா? அல்லது

'நடக்க வேண்டியது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும். நீ இன்றை மட்டும் நினைத்து வாழ்!' என்பதா?

இன்றைய முதல் வாசகத்தை (தொநூ 18:16-33) நம் துணைக்கு அழைத்துக் கொள்வோம். ஆண்டவராகிய கடவுள் சோதோம் நகரை அழிக்க முடிவெடுக்கின்றார். ஏனெனில், அங்கே பாவம் பெருகிவிட்டது. தனது இத்திட்டத்தைக் கடவுள் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகின்றார். 'தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்துவிடுவீரோ?' எனக் கேட்கின்ற ஆபிரகாம், ஐம்பது, நாற்பத்தைந்து, நாற்பது, முப்பது, இருபது, பத்துப் பேர் நீதிமான்களாக இருந்தாலும் நகர் அழிக்கப்படுமோ என இறைஞ்சுகின்றார். பத்துப் பேர் கூட இல்லை என்பதுதான் எதார்த்தம்.

இங்கே கடவுள் ஆபிரகாமிடம் சொல்வது இதுதான்: '(பாவத்தில்) இறந்தோரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவர். நீ என்னைப் பின்தொடர்!'

ஆக, இறந்தவர்கள் என்பவர்கள் தங்களைத் தாங்களே உறைநிலையில் வைத்துக்கொள்பவர்கள் - அது பாவமாக இருக்கலாம், எதிர்மறை உணர்வுகளாக இருக்கலாம், கடந்த காலமாக இருக்கலாம். உறைநிலையில் வாழ்க்கையை இருத்திக்கொள்பவர்கள் இறந்தவர்கள். இவர்களைப் பற்றிக் கவலைப்படுவதால் மற்றவர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது என்பதே உண்மை.

ஆகையால்தான், தன்னைப் பின்பற்றும் சீடர்களை உறைநிலையிலிருந்து விடுவிக்க நினைக்கின்ற இயேசு, 'இறந்தோரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்' என்கிறார்.

இன்று என் வாழ்வின் உறைநிலை எது? நான் எதில் இறந்தவராக இருக்கிறேன்?

Rev. Fr. Yesu Karunanidhi

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!