Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         29 ஜூன 2019  
                                  பொதுக்காலம் 12ம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 

=================================================================================
ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ!

தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15

அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்க கூடார வாயிலைவிட்டு ஓடினார்.

அவர்கள் முன் தரை மட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, "என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம்மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டு வருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்" என்றார்.

"நீ சொன்னபடியே செய்" என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.

அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, "விரைவாக மூன்று மரக்கால் நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு" என்றார். ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடிச் சென்று, ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான். பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும் பொழுது அவர்கள் அருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்.

பின்பு அவர்கள் அவரை நோக்கி, " உன் மனைவி சாரா எங்கே?" என்று கேட்க, அவர், "அதோ கூடாரத்தில் இருக்கிறாள்" என்று பதில் கூறினார்.

அப்பொழுது ஆண்டவர், "நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்" என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆபிரகாமும் சாராவும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தனர். சாராவுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது. எனவே, சாரா தமக்குள் சிரித்து, "நானோ கிழவி; என் தலைவரோ வயது முதிர்ந்தவர். எனக்கா இன்பம்?" என்றாள்.

அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, " நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா' என்று சொல்லி சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்? ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ! இளவேனிற் காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நான் உன்னிடம் மீண்டும் வருவேன்.

அப்பொழுது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்" என்று சொன்னார். சாராவோ, "நான் சிரிக்கவில்லை" என்று சொல்லி மறுத்தார். ஏனெனில் அச்சம் அவரை ஆட்கொண்டது. அதற்கு ஆண்டவர், "இல்லை, நீ சிரித்தாய்" என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - லூக் 1: 47. 48-49. 50, 53. 54-55 (பல்லவி: 54a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தம் இரக்கத்தை என்றும் நினைவில் கொண்டுள்ளார்.

47 ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. பல்லவி

48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். 49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். பல்லவி

50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். 53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். பல்லவி

54-55 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 8: 17

அல்லேலூயா, அல்லேலூயா! அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-17

அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். "ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்" என்றார். இயேசு அவரிடம், "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார்.

நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் 'செல்க' என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் 'வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து 'இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்" என்றார்.

இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்" என்றார்.

பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, "நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்" என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான்.

இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார். பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின.

மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, `அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

தலைவனுக்கு இருக்க வேண்டிய பணிவு இங்கு மிளிர்வதை பார்க்கின்றோம். எந்த துறைக்கு தலைவராக இரந்தாலும், எத்தனை பேருக்கு தலைவராக இருந்தாலும், அவர்களுக்கு மேல் மற்றொருவர் உண்டு என உணர்ந்து பணிவு மிக்கவர்களே வாழ்வில் மிளிர்வார்கள். அவர்களே இறையாசீருக்கும் பாராட்டுக்குரியவர்களாகவும் ஆவார்கள் என்பதை உணர்த்தும் இந்த இறைவாக்குக்கு பணிவோம்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 தொடக்க நூல் 18: 1-15

ஆபிரகாம் அளித்த விருந்து

நிகழ்வு

ஒருநாள் நண்பர்கள் இருவர் அரேபியப் பாலைவனம் வழியாகச் சென்றுகொண்டிருந்தார்கள். பாலைவனத்தில் வெயிலின் கொடுமை அதிகமாக இருந்ததால், சற்றுத் தொலையில் தெரிந்த ஒரு குடிசையில் தங்கி ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம் என்று முடிவுசெய்தனர். அதன்படி அவர்கள் இருவரும் குடிசையில் இருந்த மனிதரிடம் தங்குவதற்கு அனுமதி கேட்டபோது, அவர் அவர்களிடம் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கிவிட்டுச் செல்லலாம் என்று சொன்னார். இதனால் அவர்கள் அவருடைய குடிசையில் மகிழ்ச்சியோடு தங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து குடிசையில் இருந்த மனிதர் தன்னுடைய வீட்டிற்குப் புதிதாக வந்த அந்த இரண்டு விருந்தாளிகட்கும் தன்னிடமிருந்த ஒரு ஒட்டகத்தை அடித்து விருந்து கொடுக்கத் தொடங்கினார். அவர் கொடுத்த விருந்தில் அவர்கள் மிகவும் மகிழ்ந்து போனார்கள். எல்லாரும் சிரித்துப் பேசிக்கொண்டிருகையிலேயே இருட்டத் தொடங்கியது. இதனால் குடிசையில் இருந்த மனிதர் வந்திருந்த விருந்தாளிகளிடம், "இருட்டி விட்டதால் இனிமேலும் உங்களுடைய பயணத்தைத் தொடர்வது அவ்வளவு நல்லதல்ல. அதனால், இன்றிரவு இங்கேயே தங்கி நன்றாக ஓய்வெடுத்துவிட்டுச் செல்லுங்கள் என்றார். அவர்களும் அதற்குச் சரியென்று ஓய்வெடுத்தார்கள்.

மறுநாள் அவர்கள் விழித்தெழுந்தபோது சூரியன் உச்சியில் இருந்தது. முந்தினநாள் சாப்பிட்ட சாப்பாடுதான் அவர்களை அவ்வாறு தூங்க வைத்திருந்தது. அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தார்கள். அங்கு வீட்டுக்காரர் இன்னொரு ஒட்டகத்தை அடித்து, அவர்கட்கு விருந்து படைத்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து இருவரும், "நேற்று அடித்த ஒட்டகத்தின் கறியே இன்னும் மிச்சம் இருக்கின்றபோது, இன்னொரு ஒட்டகத்தை ஏன் அடிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், "எங்களுடைய வழக்கப்படி பழைய கறியை விருந்துக்குப் பயன்படுத்தமாட்டோம். புதிய கறியைத்தான் பயன்படுத்துவோம் என்றார். பின்னர் அவர் அவர்கட்கு விருந்துபடைத்தார். அவர்களும் வயிறார உண்டார்கள்.

மாலை நேரம் வந்தது. இதற்கு மேலும் பயணத்தைத் தொடர முடியாது என்பதால், அவர்கள் இருவரும் அன்றிரவு அந்தக் குடிசையிலேயே தங்கி ஓய்வெடுத்துவிட்டு, அதிகாலையில் தங்களுடைய பயணத்தைத் தொடரலாம் என்று முடிவுசெய்தார்கள். அதன்படி அவர்கள் இருவரும் அந்தக் குடிசையில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு அதிகாலையில் தங்களுடைய பயணத்தைத் தொடர்வதற்கு முன்னம், குடிசையில் இருந்தவர்க்கு நன்றி சொல்வதற்கு அவரைத் தேடினார்கள். ஆனால், அவர் அவர்கட்கு முன்னமே எழுந்து வேலை விடயமாக வெளியே போயிருந்தார். இதனால் அவர்கள் இருவரும் அவருடைய மனைவியிடம் ஆயிரம் தெனாரியம் பெறுமான பணமுடிப்பைக் கொடுத்துவிட்டு, அவர்க்கு நன்றி சொல்லிவிட்டு தங்களுடைய பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

அவர்கள் நீண்ட தூரம் சென்றிருப்பார்கள். அப்பொழுது அவர்களை வீட்டில் தங்க வைத்து விருந்துகொடுத்த மனிதர் ஓடிவந்து, அவர்கள் அவருடைய மனைவியிடம் கொடுத்துவிட்டுச் சென்ற பணமுடிப்பைத் தூக்கி எறிந்துவிட்டு, அவர்களைக் கடுமையாகத் திட்டத் தொடங்கினார். அவர்கட்கு ஒன்றும் புரியவில்லை. 'ஒருவேளை தாங்கள் கொடுத்த பணம் போதவில்லையோ' என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கும்போது, அவர் அவர்களிடம், "இந்தப் பாலைவனத்தில் இருக்கின்ற எங்கட்கு எல்லாமே இலவசமாகக் கிடைக்கிறது. அப்படியிருக்கும்போது எங்களுடைய வீட்டிற்கு வந்த உங்களிடமிருந்து நாம் பணத்தைப் பெற்றால், நாங்கள் கொடுத்த விருந்திற்கே அர்த்தமில்லாமல் போய்விடும் என்று சொல்லிவிட்டு வேகமாக நடக்கத் தொடங்கினார். அந்த மனிதர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு அவர்கள் இருவரும், 'இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?' என்று மெய்மறந்து நின்றார்கள்.

வீட்டிற்கு வரக்கூடிய விருந்தாளிகளை எப்படி உபசரிக்கவேண்டும் அல்லது அவர்கட்கு விருந்துகொடுக்கவேண்டும் என்பதற்கு அரபு நாடுகளில் சொல்லப்பட்டும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகத்திலும் தன்னை நாடிவந்தவர்கட்கு நல்ல முறையில் விருந்தளித்த ஒருவரைக் குறித்து வாசிக்கின்றோம். அவர் யார்? அவர் அளித்த விருந்து எத்துணை உயர்ந்தது? என்பதை இப்பொழுது சிந்தித்து பார்ப்போம்.

ஆபிரகாம் அளித்த ஒப்பற்ற விருந்து


முதல் வாசகத்தில், ஆபிரகாம் தன்னுடைய கூடார வாசலில் அமர்ந்திருக்கையில், மூன்று மனிதர்கள் (ஆண்டவரும் அவருடைய இரண்டு தூதர்களும்) அருகில் நிற்பதைக் கண்டு, அவர்களைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து விருந்தளிக்கின்றார். ஆபிரகாம் அவர்கட்கு எவ்வாறு உணவளித்தார் என்பது குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் நல்லது.

ஆபிரகாமிற்கு அப்போது தொண்ணூற்று ஒன்பது வயது. அவர்க்கு முன்னூறு பணியாளர்கள் இருந்தார்கள் (தொநூ 14:14) அவர்களை அழைத்து, தன்னுடைய வீட்டிற்கு வந்த அந்த மூன்று பேர்க்கும் உணவு படைக்கச் சொல்லியிருக்கலாம். மாறாக, அவரே மந்தைக்கு விரைந்து சென்று, அது நண்பகல் வேளை ஒன்றும் பாராமல், நல்ல இளங்கன்றை பிடித்துவந்து, அதை உணவாக படைக்கச் சொல்கின்றார். அது மட்டுமல்லாமல், அவர்கள் சாப்பிடும்போது அவர்கள் அருகே இருந்து கவனிக்கின்றார். இப்படியாக தன்னுடைய வீட்டிற்கு வந்த விருந்தினர்க்கு நல்லமுறையில் விருந்து படைக்கின்றார். இதனால் மிகவும் மகிழ்ந்து போன ஆண்டவர், இளவேனிற் காலத்தில் மீண்டுமாக உன்னிடம் வரும்போது, சாராவுக்கு மகன் பிறந்திருப்பான் என்று சொல்லிவிட்டுச் சொல்கின்றார். அவர் சொன்னது போன்றே அடுத்த ஆண்டு சாராவுக்குக் குழந்தை பிறக்கின்றது.

ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு வருகின்ற விருந்தினர்க்கு நல்லமுறையில் விருந்துகொடுக்கின்றபோது, அவர் பெறும் ஆசி அளப்பெரியது என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று. நாமும் நம்முடைய வீட்டிற்கு வருவோர்க்கு நல்லமுறையில் விருந்துகொடுக்கும்போது, அதனால் இறைவனிடமிருந்து பெறும் ஆசி அளப்பெரியது.

சிந்தனை

'வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்' (உரோ 12:13) என்பார் பவுல். ஆகையால், நாம் ஆபிரகாமைப் போன்று விருந்தோம்பலில் சிறந்து விளங்குவோம். அதன்வழியாக இறையருளநிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 8: 5-17

இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரைவிட்டு நீங்கிற்று

நிகழ்வு

ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள ஜயர் (Zaire) என்ற நாட்டிலுள்ள ஒரு குக்கிராமம் அது. அக்கிராமத்தில் சிறுமி ஒருத்தி இருந்தாள். அவளுடைய பெற்றோர் இருவரும் பக்கத்து நகரத்தில் இருந்த ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தனர். காலையில் வேலைக்குச் செல்லும் அவர்கள், இரவில்தான் வருவார்கள். இதனால் அச்சிறுமி பள்ளிக்குப் போய்விட்டு பெரும்பாலான நேரங்களைத் தனிமையில்தான் கழிக்கவேண்டி இருந்தது. அந்நேரங்களில் அவள் தன்னுடைய வீட்டுக்குப் பின்னால் இருந்த தோட்டத்தில் விளையாடி வந்தாள்.

அவளுடைய வீட்டுத்தோட்டத்தை அடுத்து ஒரு பெரிய மைதானம் இருந்தது. அந்த மைதானத்திற்கும் அவளுடைய வீட்டுத் தோட்டத்திற்கும் இடையே ஒரு மதில் சுவர் இருந்தது. அதனால் அந்த பக்கம் யார் இருக்கிறார் என்பதுகூடத் தெரியாமலிருந்தது.

இதற்கிடையில் சிறுமியின் வீட்டுத் தோட்டத்திற்கு மறுபக்கம், மதில் சுவரை ஒட்டியிருந்த குடிசையில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பெற்றோர் கிடையாது. அவன் தன் பாட்டியுடன்தான் வாழ்ந்து வந்தான். அவனுடைய பாட்டியும்கூட வேலைக்குப் போய்விட்டு இரவில் நீண்டநேரம் கழித்துத்தான் வருவார். இதனால் அவனும் தன்னுடைய பெரும்பாலான நேரங்களைத் தனிமையில்தான் கழித்து வந்தான். ஒருசில நேரங்களில் அந்த மைதானத்திற்கு விளையாட வரும் சிறுவர்களோடு விளையாடுவான். அந்த நேரம்போக மற்ற நேரங்களில் அவன் தனியாகவே இருந்தான்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருநாள் சிறுமி தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மறுபக்கத்தில் இருந்த சிறுவனின் பாடல் சத்தத்தைக் கேட்டு அவனோடு பேச்சுக் கொடுத்தாள். பதிலுக்கு அவனும் அவளோடு பேசினான். இவ்வாறு அவர்கள் இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது.

மற்றொரு இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது அந்த மதில் சுவரில் கைவிடும் அளவுக்கு ஒரு சிறு துவாரம் இருக்கக் கண்டனர். அந்தத் துவாரத்தின் வழியாக இருவரும் தங்களுடைய கைகளைக் கொடுத்துத் அன்பைப் பரிமாறிக் கொண்டார்கள். இதற்குப் பின்பு அவர்கள் எப்போதெல்லாம் தனிமையாக இருப்பதை உணர்ந்தார்களோ, அப்போதெல்லாம் தங்களுடைய கைகளைக் கொடுத்து அன்பைப் பரிமாறிக் கொண்டு வந்தார்கள். இருவரும் ஒருவரையொருவர் நேரடியாகப் பார்த்திராவிட்டாலும், தொடுதல் வழியாக அவர்கட்கு இடையே நடந்த அன்புப் பரிமாற்றம் அவர்களுடைய தனிமையுணர்வைப் போக்கி ஆழமான நட்பை ஏற்படுத்தியது.

ஒருவர் மற்றவரை அன்போடு தொடுகின்றபோது அது எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த நிகழ்வின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. நற்செய்தியில் இயேசு தொடுதலின் வழியாக ஓர் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டுகின்றார். அது என்ன அதிசயம் என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

தொட்டு நலமாக்கிய இயேசு

நற்செய்தியில் இயேசு, நூற்றுவத் தலைவரின் பையனுக்கு நலமளித்துவிட்டு, சீமோன் பேதுருவின் வீட்டிற்குச் செல்கின்றார். அங்கு அவருடைய மாமியார் காய்ச்சலாய்ப் படுத்துக் கிடப்பதைக் கண்டதும், அவருடைய கையைத் தொடுக்கின்றார். உடனே காய்ச்சால் அவரை விட்டு நீங்குகின்றது.

இயேசு சீமோன் பேதுருவின் வீட்டிற்கு வந்ததையும் காய்ச்சலாய்ப் படுத்துக் கிடந்த சீமோனின் மாமியாரைத் தொட்டுக் குணப்படுத்தியதும் 'சட்டாம்பிகளான' பரிசேயர்கள் கவனித்திருக்கக்கூடும். 'ஒரு போதகர் பெண்ணின் கையைத் தொடுகிறாரே, இது எவ்வளவு பெரிய குற்றம்' என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும். இயேசு அதைப் பற்றியெல்லாம் நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல், சீமோனின் மாமியாரைத் தொட்டுக் குணப்படுத்துகின்றார். இங்கு நாம் இரண்டு விடயங்களை நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டும். ஒன்று, இயேசு தொட்டதும் சீமோன் பேதுருவின் மாமியார் நலமடைந்தது. இரண்டு, நலமடைந்த அவர் இயேசுவுக்குப் பணிவிடை செய்தது. இந்த இரண்டையும் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவைத் தொட்டதால் குணப்பெற்றவர்கள் என்று ஓர் பெரிய அட்டவணையே இருக்கின்றது (மத் 9: 21; 14:36). இதுபோக, இயேசுவால் தொடப்பட்டுக் குணமடைந்தவர்கள் என்ற பட்டியலும் இருக்கின்றது. தொழுநோயாளர் (மத் 8:3), பார்வையற்றவர் (மத் 9:29) வரிசையில் இயேசுவால் தொடப்பட்ட சீமோன் பேதுருவின் மாமியார் குணமடைந்தார் என்றால், இயேசுவுக்கு எவ்வளவு வல்லமை இருந்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்துபார்த்துக்கொள்ளலாம். அடுத்ததாக, இயேசுவால் குணம்பெற்ற சீமோன் பேதுருவின் மாமியார், குணம்பெற்றதும் சும்மா இருக்கவில்லை. மாறாக, அவர் இயேசுவுக்குப் பணிவிடை செய்கின்றார். ஆகையால், நாம் இயேசுவிடமிருந்து நன்மைகளைப் பெற்றுகின்றோம் என்றால், அந்த நன்மைகளைப் பிறர்க்கும் செய்யவேண்டிய கட்டாயம் இருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

சிந்தனை

'ஓர் அன்பான தொடுதல் எப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையையும் மகிழ்ச்சியாக மாற்றிவிடும்' என்பார் மைக்கேல் ப்ளிஸ் என்ற எழுத்தாளர். இயேசு நம்முடைய உள்ளத்தையும் உடலையும் தொடக் காத்திருக்கின்றார். ஆகையால், நம்பிக்கையோடு அவரிடம் வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!