|
|
29 ஜூன் 2019 |
|
|
பொதுக்காலம்
12ம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம் புனிதர்கள்
பேதுரு, பவுல் - திருத்தூதர்கள்
பெருவிழா
=================================================================================
திருநாள் திருப்பலி
ஏரோதின் கையிலிருந்து ஆண்டவர் என்னை விடுவித்துக் காத்தார் என்று
நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 1-11
அந்நாள்களில் ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப்
பிடித்துக் கொடுமைப்படுத்தினான். யோவானின் சகோதரரான யாக்கோபை
வாளால் கொன்றான். அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு
அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்ப
விழா நாள்களில் நடந்தது. அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக்
காவல் செய்யுமாறு நான்கு படைவீரர் கொண்ட நான்கு குழுக்களிடம்
அவன் ஒப்புவித்தான். பாஸ்கா விழாவுக்குப் பின் மக்கள் முன்பாக
அவரது வழக்கை விசாரிக்கலாம் என விரும்பினான். பேதுரு இவ்வாறு
சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது திருச்சபை அவருக்காகக்
கடவுளிடம் உருக்கமாக வேண்டியது. ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு
முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால்
கட்டப்பட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு
முன் சிறையைக் காவல் செய்து கொண்டிருந்தார்கள்.
அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது.
அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, "உடனே எழுந்திடும்" என்று
கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன. வானதூதர்
அவரிடம், "இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப்
போட்டுக்கொள்ளும்" என்றார். அவரும் அவ்வாறே செய்தார். தூதர்
அவரிடம், "உமது மேலுடையை அணிந்துகொண்டு என்னைப் பின்தொடரும்"
என்றார்.
பேதுரு வானதூதரைப் பின்தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம்
உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர்
நினைத்துக்கொண்டார். அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம்
காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே
வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே
வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரை
விட்டு அகன்றார்.
பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, "ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி
ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த
எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்"
என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 4b)
=================================================================================
பல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை
விடுவித்தார்.
1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும்
என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப்
பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி
3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க
மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்;
அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார். பல்லவி
5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள்
முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்;
ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும்
அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி
7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று
காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப்
பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி
இரண்டாம் வாசகம்
இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி
வாகையே.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து
வாசகம் 4: 6-8, 17-18
அன்பிற்குரியவரே, நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன்.
நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு
போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன்.
விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி
வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான
அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக்
காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்.
நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக்
கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்;
சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும்
அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார்.
அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 16: 18
அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல்
என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல்
வெற்றிகொள்ளா. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை
நான் உன்னிடம் தருவேன்._
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
16: 13-19
அக்காலத்தில் இயேசு பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார்.
அவர் தம் சீடரை நோக்கி, "மானிடமகன் யாரென்று மக்கள்
சொல்கிறார்கள்?" என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர்
எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள்
ஒருவர் என்றும் சொல்கின்றனர்" என்றார்கள்.
"ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர்
கேட்டார்.
சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்"
என்று உரைத்தார்.
அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில்
எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள
என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக்
கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என்
திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல்
வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.
மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில்
நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழா 29
06 2019
நிகழ்வு
பேதுருவைக் குறித்து சொல்லப்படுகின்ற ஒரு தொன்மம். உரோமையை ஆண்ட
நீரோ மன்னன் திருச்சபையின் தலைவரான பேதுருவைக் கொல்வதற்குத்
திட்டம் தீட்டினான். இதையறிந்த கிறிஸ்தவர்கள் பேதுருவை எப்படியாவது
உரோமை நகரைவிட்டு தப்பிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
பேதுருவும் அரை மனதாக உரோமை நகரைவிட்டு தப்பித்து வெளியே
போய்க்கொண்டிருந்தார். அவர் போகும்வழியில் இயேசு எதிரே வந்துகொண்டிருந்தார்.
அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போன பேதுரு, "ஆண்டவரே! நீர்
எங்கே செல்கிறீர்?" என்று கேட்டார். அதற்கு இயேசு, "நான் உரோமை
நகரில் மீண்டுமாக கொல்லப்படப்
போகிறேன்" என்றார். இவ்வார்த்தைகளைக்
கேட்டதுதான் தாமதம், பேதுரு வெளியே தப்பித்துப் போகும் தன்னுடைய
எண்ணத்தை மாற்றிக்கொண்டு, உரோமை நகருக்குச் சென்று, அங்கேயே மறைசாட்சியாக
தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.
இன்று திருச்சபையானது திருச்சபையின் இருபெரும் தூண்களான தூய
பேதுரு மற்றும் பவுலின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. முதலில்
இவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்து சிந்தித்துப்
பார்த்துவிட்டு, அதன்பிறகு இவர்கள் நமக்குக் கற்றுத்தரும் பாடம்
என்ன என சிந்தித்து நிறைவுசெய்வோம்.
வாழ்க்கை வரலாறு
பேதுரு கலிலேயாவில் உள்ள பெத்சாய்தா என்னும் ஊரில் பிறந்தார்.
இவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது ஆண்டவர் இயேசு
இவரிடம் "என் பின்னே வா நான் உன்னை மனிதர்களைப் பிடிப்பவன் ஆக்குவேன்"
(மத் 4: 18-21) என்று சொல்லி அழைத்தபோது அவர் எல்லாவற்றையும்
விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார். இயேசுவின் சீடர்கள்
குலாமில் சேர்ந்த பேதுரு, அவருடைய மூன்று முதன்மைச் சீடர்களில்
ஒருவராக மாறுகின்றார். குறிப்பாக இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த
மிகவும் முக்கியமான நிகழ்வுகளான உருமாற்றம், தொழுகைக்கூடத் தலைவரான
யாயிரின் மகளை உயிர்ப்பித்தல், கெத்சமணித் தோட்டத்தில் இரத்த
வியர்வை வியத்தல் போன்ற நிகழ்வுகளில் இவர் இயேசுவோடு உடனிருக்கிறார்.
ஆண்டவர் இயேசு சீடர்களிடத்தில் "நீங்கள் என்னை யாரெனச்
சொல்கிறீர்கள்?" என்று கேட்கும்போது பேதுரு மறுமொழியாக,
"ஆண்டவரே நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" (மத் 16:16) என்று
சொன்னதினால் இயேசு அவரை திருச்சபையின் தலைவராக ஏற்படுத்தி, எல்லா
அதிகாரங்களையும் அவருக்குக் கொடுக்கின்றார். இயேசு தன்னுடைய உயிர்ப்புக்கு
பிறகு, அவருக்குத் தோன்றியபோது, "என் ஆடுகளை
மேய்" என்று
சொல்லி அதனை உறுதிசெய்கிறார் (யோவா 21: 15-18).
பேதுருவைப் பொறுத்தளவில் உணர்ச்சிப் பெருக்கின் அடையாளமாக இருக்கின்றார்.
அவசரப்பட்டு ஏதாவது பேசுவார். பின்னர் அவர் பேசிய வார்த்தைகளை
அவரே மீறுவார். எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த பேதுருதான்
பின்னாளில், "ஆண்டவரே உம்மைப் பின்பற்றிவந்த எங்களுக்கு என்ன
கியிக்கும்?" என்று கேட்பார். "எல்லாரும் உம்மைவிட்டுப்
போனாலும் நான் உம்மைவிட்டுப் போகமாட்டேன்" என்று சொன்னவர், பிறகு
இயேசுவை மூன்றுமுறை காட்டிக்கொடுப்பார். எனக்கு எதிராகத்
தீங்கு செய்யும் என்னுடைய சகோதரனை எத்தனை முறை மன்னிப்பது? ஏழுமுறையா?" என்று கேட்டவர் படைவீரனாகிய மால்கு இயேசுவைக் கைதுசெய்ய வரும்போது,
அவருடைய காதைத் துண்டிப்பார். இப்படியாக அவர் பேசிய வார்த்தைகளை
அவரே மீறுவார். இருந்தாலும் அவர் இயேசுவின்மீது அளவு கடந்த அன்புகொண்டிருந்தார்,
அவருக்காகத் தன்னுடைய உயிரையும் கொடுத்தார்.
ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு பேதுரு திருச்சபையின்
தலைவராக இருந்து புரிந்த பணிகள் ஏராளம். மத்தியாசை திருத்தூதராகத்
தேர்ந்தெடுப்பதற்கு பேதுருதான் முன்னின்று செயலாற்றினார். பெந்தகோஸ்தே
நாளில் பேதுருதான் சீடர்களின் சார்பாக இருந்து பேசுகின்றார்.
அதேபோன்று புறவினத்தாரிலும் தூய ஆவியார் செயல்படுகிறார் என்பதை
அறிந்து, அவர்களையும் இறைமக்கள் கூட்டத்தில் சேர்ப்பதற்கு
பேதுருதான் காரண கர்த்தாவாக இருக்கின்றார் (திப 10: 34- 43).
பேதுருதான் திருத்தூதர்களில் முதன்முறையாக இயேசுவின் பெயரால்
புதுமையை ஆற்றியவர் (திப 3: 1-9). இவ்வாறாக பேதுரு திருச்சபையின்
தலைவராக இருந்து, சீடர்களை ஒருங்கிணைத்தும் இறைமக்கள் கூட்டத்தை
வழிநடத்தியும் சிறப்பான ஒரு பணியைச் செய்தார்.
பேதுரு தொடக்கத்தில் அந்தியோக்கு நகரில் நற்செய்திப் பணி
செய்தார். அதன்பிறகு அவர் உரோமை நகருக்குச் சென்று, அங்கே நற்செய்திப்
பணியை ஆற்றி வந்தார். அப்போதுதான் நீரோ மன்னன் பேதுருவைப்
பிடித்து சிறையில் அடைத்து, அவரைச் சித்ரவதை செய்தான். இறுதியாக
அவர் சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டு கொல்லப்பட்டார். இவ்வாறாக
பேதுரு, இயேசுவின் மீது கொண்டிருந்த அன்பினால் அவருக்காகத் தன்னுடைய
இன்னுயிரைத் துறந்தார். அவர் மறைசாட்சியாகக் கொல்லப்பட்ட ஆண்டு
கி.பி.64.
தூய பவுல்
சவுல் எனப்படும் பவுல் தர்சீஸ் நகரைச் சேர்ந்தவர்; பெஞ்சமின்
குலத்தில் பிறந்தவர். இவர் கமாலியேல் என்பவரிடம் கல்வி கற்று,
யூத சமயத்தில் மிக உறுதியாக இருந்த ஒரு பரிசேயராக விளங்கினார்.
அப்போதுதான் இவர் கிறிஸ்தவம் என்ற புதிய நெறியைக் குறித்துக்
கேள்விப்பட்டு, அது யூத சமயத்திற்கு எதிராக இருப்பதாக
நினைத்து, அம்மதத்தைப் பின்பற்றுவோரை அழித்தொழிக்க நினைத்தார்.
அதற்காக அவர் எருசலேமிலிருந்து ஆணையை வாங்கிக்கொண்டு தமஸ்கு
நகர் வழியாகக் குதிரையில் வந்துகொண்டிருந்தார். அந்நேரத்தில்
வானத்திலிருந்து தோன்றிய ஒளி அவரை நிலைகுலையச் செய்தது. அதனால்
அவர் தடுமாறி கீழே விழுந்தார். "சவுலே, சவுலே ஏன் என்னைத்
துன்புறுத்துகிறாய்" என்று வானத்திலிருந்து குரல் ஒலித்தது.
அதற்கு அவர்,
"ஆண்டவரே! நீர் யார்?" எனக் கேட்க, "நீ
துன்புறுத்தும் இயேசு
நானே" என அந்தக் குரல் பதிலளித்தது. இந்நிகழ்ச்சிக்குப்
பிறகு சவுல் பவுலாகின்றார். அவர் புறவினத்தாருக்கு நற்செய்தி
அறிவிக்கும் நற்செய்திப் பணியாளர் ஆனார்.
எந்த மதத்தைக் கூண்டோடு அழிக்கவேண்டும் என்று நினைத்தாரோ, அந்த
மதத்திற்காக பவுல் தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார்.
நற்செய்தி அறிவிப்பிற்காக பவுல் மேற்கொண்ட மூன்று திருத்தூது
பயணங்கள் மிகவும் முக்கியமானவை. அதைவிடவும் அவர் நமக்கு வழங்கிவிட்டுச்
சென்ற பதிமூன்று திருமுகங்கள் மிகவும் முக்கியமானவை. இத்திருமுகங்களைப்
படித்துப் பார்க்கும்போது பவுல் ஆண்டவர் இயேசுவின்மீது எந்தளவுக்கு
அன்பும் பற்றும் கொண்டிருந்தார் என நாம் புரிந்துகொள்ளலாம்.
"வாழ்வது நானல்ல, என்னில்
கிறிஸ்துவே வாழ்கிறார்" என்று சொல்லி
அவர் மறு கிறிஸ்துவாக மாறிவிடுகின்றார் (கலா 2:20).
"பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை
சாவின் வாயிலில் நின்றேன். ஐந்துமுறை யூதர்கள் என்னைச்
சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். மூன்றுமுறை
தடியால் அடிபட்டேன்; ஒருமுறை கல்லெறிபட்டேன்; மூன்றுமுறை கப்பல்
சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன்.
பயணங்கள் பல செய்தேன்; அவற்றில், ஆறுகளாலும் இடர்கள், என்
சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும்
இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித்
திருத்தூதர்களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன்.
பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண்விழித்தேன்; பசிதாகமுற்றேன்;
பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன்"
(2 கொரி 11: 24- 27) என்று பவுல் சொல்வதன் வழியாக அவர்
கிறிஸ்துவுக்காக பட்ட பாடுகளை நாம் அறிந்துகொள்ளலாம். இப்படியாக
ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவித்து,
அதற்காக துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவித்த புறவினத்தாரின்
திருத்தூதராக பவுல் 67 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய பேதுரு மற்றும் பவுலின் வாழக்கை வரலாற்றைக் குறித்து
வாசித்த நாம் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்
என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
1. கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் தருதல்
பேதுருவும் பவுலும் இருவேறு துருவங்களாக இருந்தாலும் அவர்கள்
இருவரும் ஆண்டவர் இயேசுவில் ஒன்றிணைந்து வந்தார்கள்; அவர்கள்
இருவரும் இயேசு கிறிஸ்துவுக்காக எதையும் தர, ஏன் தங்களுடைய உயிரையும்
தர முன்வந்தார்கள். இந்த இருவருடைய விழாவைக் கொண்டாடும் இந்த
நாளில் நாம் அவர்களைப் போன்று இயேசுவுக்காக நம்மையே முழுவதுமாய்
தர முன்வருகிறோமா என சிந்தித்துப் பார்ப்போம்.
ஒருசமயம் கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள், அவ்வாறு கடலில்
மூழ்கும்போது எப்போதோ கடலில் மூழ்கிய ஒரு கப்பலைக் கண்டுபிடித்தார்கள்.
அதிலிருந்து அவர்கள் நிறைய விலை உயர்ந்த பொருட்களை கண்டெடுத்தார்கள்.
அதில் ஒன்றுதான் வைரத்தால் ஆன மோதிரம். அந்த மோதிரத்தில் ஒரு
கையானது இதயத்தைத் தாங்கிப் பிடிப்பது போன்று இருந்தது. அதற்குக்
கீழே " I have nothing more to give you" ( என்னுடைய இதயத்தைத்
தவிர உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை) என்ற வசனம்
பொறிக்கப்பட்டிருந்தது. இந்த மோதிரம் ஒருவர் மற்றவர்மீது கொண்ட
அன்பை வெளிப்படுத்த மிக உன்னத பரிசைத் தருவது போன்று இருக்கின்றது.
பேதுருவும் பவுலும் தங்களுடைய உயிரையே தந்து, இயேசுவின் மீது
உள்ள அன்பை வெளிப்படுத்துகிறார்கள். நாமும் இயேசுவின் மீது
கொண்ட அன்பை வெளிபடுத்த நமது உயிரைத் தரமுன்வரவேண்டும்.
நற்செய்தியில் இயேசுகூறுவார், "என் பொருட்டு தம்மையே அழித்துக்கொள்கிற
எவரும் வாழ்வடைவார் (மத் 16:25). பேதுருவும் பவுல் இயேசுவுக்காக
தம்மை இழந்தார்கள், வாழ்வடைந்தார்கள். நாமும் அவ்வாறு
செய்வோம். வாழ்வடைவோம்.
2. வலுவின்மையில் சிறந்தோங்கும் வலிமை
பேதுருவும் பவுல் குறைபாடு உள்ளவர்கள்தான். பேதுரு படிக்காதவர்,
ஆண்டவரை இயேசுவை மும்முறை மறுதலித்தவர். இருந்தாலும் இயேசு அவரை
திருச்சபையின் தலைவராக ஏற்படுத்துகிறார். பவுல் திருச்சபையை
துன்புறுத்தியவர், உடல் குறைபாடோடு இருந்தவர் ("உடலில் தைத்த
முள்" (2 கொரி 12: 7-9)என பவுல் சொல்வதை விவிலிய அறிஞர்கள்,
அவர் பார்வைக் குறைபாடோடு, திக்கு வாயராக இருந்ததை
குறித்துக்காட்ட சொல்வதாக விளக்கம் தருவார்கள்) அப்படியிருந்தாலும்
கடவுள் அவரை புறவினத்தாருக்கு திருத்தூதராக ஏற்படுத்துகிறார்.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவர்கள் இயேசுவின் மீது கொண்ட
நம்பிக்கையும் அன்பும்தான்.
நாம் குறைபாடு உள்ளவர்களாக இருந்தாலும், பலவீனமானவர்களாக இருந்தாலும்
இறைவன் தன்னுடைய வலிமையை நம்முடைய வலுவின்மையில் சிறந்தோங்கச்
செய்வார். அதனை இவர்கள் இருவருடைய வாழ்விலிருந்தும் நாம் கண்டுகொள்கிறோம்.
ஆகவே, தூய பேதுரு, பவுலின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில்
அவர்களை இறைவன் நமக்குத் தந்ததற்காக இறைவனைப் போற்றுவோம், அவர்களைப்
போன்று ஆண்டவர் இயேசு பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும்
அறிவிப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மறையுரைச் சிந்தனை (ஜூன் 29)
இன்று நாம் திருச்சபையின் இருபெரும் தூண்களான தூய பேதுரு மற்றும்
பவுலின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இன்று திருச்சபை உலக
முழுவதும் ஆலமரம் போன்று விரிந்திருக்கிறது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர்கள்
இந்த இரண்டு திருத்தூதர்களுமே என்று சொன்னால் அது மிகையாது.
இவர்களது பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவர்களது
வாழ்வு நமக்கு என்ன பாடத்தைக் கற்றுத்தருகிறது என்று
சிந்தித்துப் பார்ப்போம்.
தூய பேதுருவும், பவுலும் அடிப்படையில் இருவேறுபட்ட ஆளுமைகள்.
பேதுருவோ படிக்காத பாமரர், (தொடக்கத்தில்) யூதர்களுக்கு மட்டுமே
மீட்பு உண்டு என்று நம்பியவர். ஆனால் பவுலோ, இவருக்கு
முற்றிலும் மாறாக மெத்தப் படித்தவர், யூத மரபுகளையும், திருச்சட்டத்தையும்
கரைத்துக் குடித்தவர். எல்லா மக்களுக்கும் (யூதர் அல்லாத புறவினத்தாருக்கும்)
கடவுள் தரும் மீட்பு உண்டு என்ற கொள்கையில் நம்பிக்கையுள்ளவர்.
ஆளுமையில் மட்டுமல்லாமல், ஆற்றிய பணியிலும் இருவரும் வேறுபட்டு
இருந்தார்கள். தூய பேதுரு திருச்சபையின் தலைவராக இருந்து, யூதர்கள்
நடுவில் நற்செய்திப் பணியாற்றினார். தூய பவுலோ யூதர்களைக் கடந்து,
புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தார். தூய பவுல் ஆற்றிய பணிகள்,
மேற்கொண்ட பயணங்கள், எழுதிய எழுத்துகள் எல்லாம் இன்றைக்கும்
நமக்கு ஆச்சரியத்தையும், வியப்பையும் தருகிறது. எப்படி இந்த மனிதனால்
மட்டும் இவ்வளவு பணியை ஆற்ற முடிந்தது என்று.
இவர்கள் இருவரும் ஆளுமையில், ஆற்றிய பணியிலும் வேறுபட்டு இருந்தாலும்
கிறிஸ்து இயேசுவில் ஒன்றுபட்டு இருந்தார்கள். இன்னொரு சிறப்பு
என்னவென்றால் இருவருமே கி.பி. 67 ஆண்டில்தான் நீரோ மன்னனால்
கொல்லப்பட்டார்கள். ஆகவே இவர்கள் இருவரது சாட்சிய வாழ்வும் நமக்குக்
கற்றுத்தரும் உண்மைகள் என்ன என்று சிந்தித்துப் பார்த்து
நிறைவு செய்வோம்.
முதலாவதாக. தூய பேதுருவும், பவுலும் பலவீனமானவர்களாக/ வலுவற்றவர்களாக
இருந்தாலும், இறைவன் அவர்களை வலுவுள்ளவர்களாக, பலமுள்ளவர்களாக
மாற்றுகின்றார். ஆம், பேதுரு படிப்பறிவில்லாதவர், ஆண்டவர் இயேசுவையே
தெரியாது என்று மறுதலித்தவர். அப்படியிருந்தாலும் இயேசு அவரைத்
திருச்சபையின் தலைவராக ஏற்படுத்துகின்றார். தூய பவுலோ தொடக்கத்தில்
திருச்சபையைத் துன்புறுத்தியவர். அவரையும் ஆண்டவர் இயேசு தன்னுடைய
பணிக்காக தேர்ந்தெடுக்கின்றார். இவ்வாறு வலுவற்றவர்களில் இயேசு
தன்னுடைய வல்லமையை சிறந்தோங்கச் செய்கிறார்.
2 கொரிந்தியர் 12:7,9 ஆகிய வசனங்களில், "எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற
வெளிப்பாடுகளில் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று
என் உடலில் தைத்த முள்போல் என்னை வருத்திக்கொண்டே இருக்கிறது.
அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப்
போல் இருக்கிறது. நான் இறுமாப்படையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது.
அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மும்முறை ஆண்டவரிடம் வருந்தி
வேண்டினேன். ஆனால், அவர் என்னிடம், "என் அருள் உனக்குப்
போதும். வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் என்கிறார்
தூய பவுலடியார். ஆம் தூய பவுலடியார் வலுவற்றவர். ஆனாலும் அவருடைய
அந்த வலுவற்ற நிலையில் இறைவன் தன்னுடைய வல்லமையைப் பொழிந்து,
தான் எல்லாம் வல்லவரென நிரூபித்துக் காட்டுகிறார்.
அடுத்ததாக தூய பேதுருவும், பவுலும் தங்களுடைய கொள்கையில் அதாவது
ஆண்டவர் இயேசுவை எல்லா மக்களுக்கும் அறிவிக்கவேண்டும் என்ற
கொள்கையில் உறுதியாக இருந்தார்கள்.
பேதுருவையும், அவரோடு இருந்தவர்களையும் தலைமைச் சங்கத்தார்
நைய்யப்புடைத்து, ஆண்டவர் இயேசுவை இனிமேல் அறிவிக்கக்கூடாது என்று
சொன்னபோதும் அவர் கிறிஸ்தவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும்
அறிவிக்கத் தவறவில்லை. அதேபோன்று பவுலும் மக்களிடமிருந்து, ஆட்சியாளர்களிடமிருந்து
பல்வேறு எதிர்ப்புக்களைச் சம்பாதித்தபோதும் கிறிஸ்துவுக்காக தன்னுடைய
உயிரையும் தர முன்வருகின்றார். இவ்வாறு அவர்கள் தங்களுடைய
கொள்கையில் உறுதியாக இருந்தார்கள்.
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வாழும் நாம் நமது கொள்கையில் மிக
உறுதியாக இருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக பிலடெல்பியா என்ற நகரத்தில் ஜெரார்டு
என்ற கோடிஸ்வரர் வாழ்ந்துவந்தார். அவருக்குக் கீழ் ஏராளமான பணியாளர்கள்
வேலை பார்த்து வந்தார்கள். ஒரு சனிக்கிழமை அன்று அவர் தன்னுடைய
பணியாளர்களிடம், "நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை, நம்முடைய நிறுவனத்திற்கு
வெளியூரிலிருந்து சரக்கு வருகின்றது. ஆதலால் பணியாளர்கள்
யாரும் விடுப்பு எடுக்காமல் தவறாது வரவேண்டும்" என்று உத்தரவிட்டார்.
அப்போது பணியாளர்களில் இருந்து ஒருவர் எழுந்து, "நாளை
ஞாயிற்றுக்கிழமை, கடன் திருநாள். கோவிலுக்குச் செல்லவேண்டும்.
அதனால் என்னால் வேலைக்கு வரமுடியாது" என்றார். இதைக்
கேட்டுக்கொண்டிருந்த ஜெரார்டுக்கு கோபம் தாங்கமுடியவில்லை. உடனே
அவர் அந்தப் பணியாளரிடம், "உன்னை நான் இப்போதே வேலையிலிருந்து
தூக்குகின்றேன். அதனால் காசாளரிடம் சென்று, உனக்கான தொகையை
வாங்கிக்கொண்டு அப்படியே
போய்விடு" என்று சத்தம் போட்டார். அந்தப்
பணியாளர் எதைக்குறித்தும் கவலைப்படாமல் தனக்குரிய பணத்தை
வாங்கிக்கொண்டு வெளியே கிளம்பினார்.
இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு ஒரு வங்கி மேலாளர்
ஜெரார்டை அணுகி, "என்னுடைய வங்கியில் பணிபுரிய ஒரு நேர்மையான
மனிதர் வேண்டும். உமக்குத் தெரிந்து அப்படி யாராவது நேர்மையான
மனிதர் இருக்கிறாரா?" என்று கேட்டார். அதற்கு ஜெரார்டு, தன்னுடைய
நிறுவனத்திலிருந்து நீக்கியவரைப் பரிந்துரைத்தார். ஏனென்றால்
அவர் நிர்வாகம் சொன்னதைக் கேட்காவிட்டாலும், ஞாயிற்றுக்கிழமையில்
வேலைக்குப் போகக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்தால்,
அவருக்கு அந்த வேலையைப் பரிந்துரைத்தார்.
நாம் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தால் தொடக்கத்தில் பிரச்சனைகள்
வரலாம். ஆனாலும் இறுதியில் நாம் நல்ல ஒரு வாழ்வைப் பெறுவோம் என்பதை
இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. பேதுருவும், பவுலும் தங்களது
பணியில் கொள்கைப்பிடிப்போடு இருந்தார்கள். அதனால் இறுதியில்
கடவுளின் ஆசியைப் பெற்றார்கள்.
நிறைவாக பேதுரும், பவுலும் நற்செய்தி அறிவிப்புப் பணியில் சிறந்த
முன்மாதிரியாய் விளங்கினார்கள் என்று சொன்னால் அது மிகையாது.
பேதுரு உரோமையில் நற்செய்தியை அறிவித்தார். பவுலோ கொரிந்து, கலாத்தியா,
பிலிப்பி போன்ற பல்வேறு பகுதிகளில் நற்செய்தி அறிவித்து,
வாழும் நற்செய்தியாகவே விளங்கினார். அதனால்தான் அவரால் வாழ்வது
நானல்ல, என்னில்
கிறிஸ்துவே வாழ்கிறார்" என்று சொல்ல முடிந்தது.
(கலா 2:20).
திருமுழுக்குப் பெற்று, நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டிரும்
நாம் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கின்றோமா?
என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஜப்பானில் ஒரு பள்ளியில் கல்வி புகட்டுவதற்காக அமெரிக்காவிலிருந்து
ஆசிரியர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். அவர் பாடவேளையில்
கிறிஸ்துவைப் பற்றி எதுவும் போதிக்கக்கூடாது என்ற நிபந்தனையின்
பேரில் அழைக்கப்பட்டிருந்தார். அவரும் பாடவேளையில் பாடத்தைத்
தவிர வேறு எதையும் கற்றுத்தரவில்லை. ஆனால், நாட்கள் செல்லச்
செல்ல அவருடைய வாழ்க்கைப் பார்த்துவிட்டு, நிறைய மாணவர்கள் உத்வேகமும்,
ஞானமும் பெற்றார்கள்.
ஒருநாள் இரவில் அவருடைய வாழ்வால் தொடப்பட்ட அவரிடம் படித்த
நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று, நாங்கள் கிறிஸ்தவர்களாக
மாறப்போகிறோம்" என்று சொல்லி, திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவர்களாக
மாறினார்கள். அந்த ஆசிரியர் அவர்களில் 20 மாணவர்களை கோயோடோ
கிறிஸ்தவ பயிற்சிப் பள்ளிக்கு அனுப்பி வைத்து, அவர்கள் குருவாக
மாற துணைபுரிந்தார்.
இந்த நிகழ்வில் ஆசிரியரின் வாழ்வே மிகப்பெரிய நற்செய்தி அறிவிப்பாக
இருந்தது. நாம் நற்செய்தி அறிவிக்க கடல்கடந்து செல்லத்
தேவையில்லை. நாம் இருக்கும் இடத்தில் நம்முடைய வாழ்வால் நற்செய்தி
அறிவிக்கலாம். நற்செய்தியின் தூதுவர்களாக மாறலாம்.
ஆகவே, தூய பேதுரு, பவுலின் விழாவைக் கொண்டாடும் நாம் இயேசுவைப்
பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம், கொண்ட
கொள்கையில் உறுதியாய் இருப்போம். அதன்வழியாக இறைவன் அளிக்கும்
வெற்றி வாகையை பரிசாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
திருதூதர் பேதுருவின் தலைமைப்பீடம்
உன் பெயர் பேதுரு. விண்ணகத்தின் திறவு கோல்களை நான் உன்னிடம்
தருவேன். என்று இயேசு அனைத்து அதிகாரங்களையும் பேதுருவுக்கு
வழங்குகிறார். அவருடைய நம்பிக்கை அறிக்கையே அதற்கான அடிப்படையாக
இருக்கிறது. மற்ற மக்களும் சீடர்களும் முழுமையாக இயேசுவை அறியாத
வேளையில் இயேசுவை அறிந்து வெளிப்படுத்துகிறார் பேதுரு.
ஆண்டவர் இயேசுவே மெசியா.
வாழும் கடவுளின் மகன்.
விண்ணிலும் மண்ணிலும் அனைத்து அதிகாரங்களையும், பாவங்களை மன்னிக்கும்
அதிகாரத்தையும் இயேசு ஒருவரே பெற்றிருந்தார். அவருடைய இடத்தில்
அவருக்குப் பதிலாக அனைத்து அதிகாரங்களையும் பெற்று வழிநடத்தும்
தலைவராக தூய பேதுரு கடவுளால் நியமிக்கப்படுகிறார். இன்றும் அவர்
வரிசையில் திருத்தந்தையர்களை கடவுள் நியமிக்கிறார். அவர்களும்
தங்கள் அர்ப்பணத்தினால் கடவுளின் பணிகளுக்குத் தலைமையேற்று கத்தோலிக்கத்
திருச்சபையை உலகில் வழிநடத்தி வருகிறார்கள். கடவுளே அவர்கள்
வழியாகப் பேசுகிறார். வழிநடத்துகிறார். நாம் அத்தகைய தலைமைக்குப்
பணிந்து நடப்பது கடவுளுக்குப் பணிந்து நடப்பதாகும்.
மறையுரைச் சிந்தனை (ஜூன் 29)
தூய பேதுரு, பவுல் பெருவிழா
இன்று நாம் திருச்சபையின் இருபெரும் தூண்களான தூய பேதுரு மற்றும்
பவுலின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இன்று திருச்சபை உலக
முழுவதும் ஆலமரம் போன்று விரிந்திருக்கிறது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர்கள்
இந்த இரண்டு திருத்தூதர்களுமே என்று சொன்னால் அது மிகையாது.
இவர்களது பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவர்களது
வாழ்வு நமக்கு என்ன பாடத்தைக் கற்றுத்தருகிறது என்று
சிந்தித்துப் பார்ப்போம்.
தூய பேதுருவும், பவுலும் அடிப்படையில் இருவேறுபட்ட ஆளுமைகள்.
பேதுருவோ படிக்காத பாமரர், (தொடக்கத்தில்) யூதர்களுக்கு மட்டுமே
மீட்பு உண்டு என்று நம்பியவர். ஆனால் பவுலோ, இவருக்கு
முற்றிலும் மாறாக மெத்தப் படித்தவர், யூத மரபுகளையும், திருச்சட்டத்தையும்
கரைத்துக் குடித்தவர். எல்லா மக்களுக்கும் (யூதர் அல்லாத புறவினத்தாருக்கும்)
கடவுள் தரும் மீட்பு உண்டு என்ற கொள்கையில் நம்பிக்கையுள்ளவர்.
ஆளுமையில் மட்டுமல்லாமல், ஆற்றிய பணியிலும் இருவரும் வேறுபட்டு
இருந்தார்கள். தூய பேதுரு திருச்சபையின் தலைவராக இருந்து, யூதர்கள்
நடுவில் நற்செய்திப் பணியாற்றினார். தூய பவுலோ யூதர்களைக் கடந்து,
புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தார். தூய பவுல் ஆற்றிய பணிகள்,
மேற்கொண்ட பயணங்கள், எழுதிய எழுத்துகள் எல்லாம் இன்றைக்கும்
நமக்கு ஆச்சரியத்தையும், வியப்பையும் தருகிறது. எப்படி இந்த மனிதனால்
மட்டும் இவ்வளவு பணியை ஆற்ற முடிந்தது என்று.
இவர்கள் இருவரும் ஆளுமையில், ஆற்றிய பணியிலும் வேறுபட்டு இருந்தாலும்
கிறிஸ்து இயேசுவில் ஒன்றுபட்டு இருந்தார்கள். இன்னொரு சிறப்பு
என்னவென்றால் இருவருமே கி.பி. 67 ஆண்டில்தான் நீரோ மன்னனால்
கொல்லப்பட்டார்கள். ஆகவே இவர்கள் இருவரது சாட்சிய வாழ்வும் நமக்குக்
கற்றுத்தரும் உண்மைகள் என்ன என்று சிந்தித்துப் பார்த்து
நிறைவு செய்வோம்.
முதலாவதாக. தூய பேதுருவும், பவுலும் பலவீனமானவர்களாக/ வலுவற்றவர்களாக
இருந்தாலும், இறைவன் அவர்களை வலுவுள்ளவர்களாக, பலமுள்ளவர்களாக
மாற்றுகின்றார். ஆம், பேதுரு படிப்பறிவில்லாதவர், ஆண்டவர் இயேசுவையே
தெரியாது என்று மறுதலித்தவர். அப்படியிருந்தாலும் இயேசு அவரைத்
திருச்சபையின் தலைவராக ஏற்படுத்துகின்றார். தூய பவுலோ தொடக்கத்தில்
திருச்சபையைத் துன்புறுத்தியவர். அவரையும் ஆண்டவர் இயேசு தன்னுடைய
பணிக்காக தேர்ந்தெடுக்கின்றார். இவ்வாறு வலுவற்றவர்களில் இயேசு
தன்னுடைய வல்லமையை சிறந்தோங்கச் செய்கிறார்.
2 கொரிந்தியர் 12:7,9 ஆகிய வசனங்களில், "எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற
வெளிப்பாடுகளில் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று
என் உடலில் தைத்த முள்போல் என்னை வருத்திக்கொண்டே இருக்கிறது.
அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப்
போல் இருக்கிறது. நான் இறுமாப்படையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது.
அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மும்முறை ஆண்டவரிடம் வருந்தி
வேண்டினேன். ஆனால், அவர் என்னிடம், "என் அருள் உனக்குப்
போதும். வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் என்கிறார்
தூய பவுலடியார். ஆம் தூய பவுலடியார் வலுவற்றவர். ஆனாலும் அவருடைய
அந்த வலுவற்ற நிலையில் இறைவன் தன்னுடைய வல்லமையைப் பொழிந்து,
தான் எல்லாம் வல்லவரென நிரூபித்துக் காட்டுகிறார்.
அடுத்ததாக தூய பேதுருவும், பவுலும் தங்களுடைய கொள்கையில் அதாவது
ஆண்டவர் இயேசுவை எல்லா மக்களுக்கும் அறிவிக்கவேண்டும் என்ற
கொள்கையில் உறுதியாக இருந்தார்கள்.
பேதுருவையும், அவரோடு இருந்தவர்களையும் தலைமைச் சங்கத்தார்
நைய்யப்புடைத்து, ஆண்டவர் இயேசுவை இனிமேல் அறிவிக்கக்கூடாது என்று
சொன்னபோதும் அவர் கிறிஸ்தவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும்
அறிவிக்கத் தவறவில்லை. அதேபோன்று பவுலும் மக்களிடமிருந்து, ஆட்சியாளர்களிடமிருந்து
பல்வேறு எதிர்ப்புக்களைச் சம்பாதித்தபோதும் கிறிஸ்துவுக்காக தன்னுடைய
உயிரையும் தர முன்வருகின்றார். இவ்வாறு அவர்கள் தங்களுடைய
கொள்கையில் உறுதியாக இருந்தார்கள்.
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வாழும் நாம் நமது கொள்கையில் மிக
உறுதியாக இருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக பிலடெல்பியா என்ற நகரத்தில் ஜெரார்டு
என்ற கோடிஸ்வரர் வாழ்ந்துவந்தார். அவருக்குக் கீழ் ஏராளமான பணியாளர்கள்
வேலை பார்த்து வந்தார்கள். ஒரு சனிக்கிழமை அன்று அவர் தன்னுடைய
பணியாளர்களிடம், "நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை, நம்முடைய நிறுவனத்திற்கு
வெளியூரிலிருந்து சரக்கு வருகின்றது. ஆதலால் பணியாளர்கள்
யாரும் விடுப்பு எடுக்காமல் தவறாது வரவேண்டும்" என்று உத்தரவிட்டார்.
அப்போது பணியாளர்களில் இருந்து ஒருவர் எழுந்து, "நாளை
ஞாயிற்றுக்கிழமை, கடன் திருநாள். கோவிலுக்குச் செல்லவேண்டும்.
அதனால் என்னால் வேலைக்கு வரமுடியாது" என்றார். இதைக்
கேட்டுக்கொண்டிருந்த ஜெரார்டுக்கு கோபம் தாங்கமுடியவில்லை. உடனே
அவர் அந்தப் பணியாளரிடம், "உன்னை நான் இப்போதே வேலையிலிருந்து
தூக்குகின்றேன். அதனால் காசாளரிடம் சென்று, உனக்கான தொகையை
வாங்கிக்கொண்டு அப்படியே போய்விடு" என்று சத்தம் போட்டார். அந்தப்
பணியாளர் எதைக்குறித்தும் கவலைப்படாமல் தனக்குரிய பணத்தை
வாங்கிக்கொண்டு வெளியே கிளம்பினார்.
இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு ஒரு வங்கி மேலாளர்
ஜெரார்டை அணுகி, "என்னுடைய வங்கியில் பணிபுரிய ஒரு நேர்மையான
மனிதர் வேண்டும். உமக்குத் தெரிந்து அப்படி யாராவது நேர்மையான
மனிதர் இருக்கிறாரா?" என்று கேட்டார். அதற்கு ஜெரார்டு, தன்னுடைய
நிறுவனத்திலிருந்து நீக்கியவரைப் பரிந்துரைத்தார். ஏனென்றால்
அவர் நிர்வாகம் சொன்னதைக் கேட்காவிட்டாலும், ஞாயிற்றுக்கிழமையில்
வேலைக்குப் போகக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்தால்,
அவருக்கு அந்த வேலையைப் பரிந்துரைத்தார்.
நாம் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தால் தொடக்கத்தில்
பிரச்சனைகள் வரலாம். ஆனாலும் இறுதியில் நாம் நல்ல ஒரு வாழ்வைப்
பெறுவோம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
பேதுருவும், பவுலும் தங்களது பணியில் கொள்கைப்பிடிப்போடு
இருந்தார்கள். அதனால் இறுதியில் கடவுளின் ஆசியைப் பெற்றார்கள்.
நிறைவாக பேதுரும், பவுலும் நற்செய்தி அறிவிப்புப் பணியில்
சிறந்த முன்மாதிரியாய் விளங்கினார்கள் என்று சொன்னால் அது
மிகையாது. பேதுரு உரோமையில் நற்செய்தியை அறிவித்தார். பவுலோ
கொரிந்து, கலாத்தியா, பிலிப்பி போன்ற பல்வேறு பகுதிகளில்
நற்செய்தி அறிவித்து, வாழும் நற்செய்தியாகவே விளங்கினார்.
அதனால்தான் அவரால் வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே
வாழ்கிறார்" என்று சொல்ல முடிந்தது. (கலா 2:20).
திருமுழுக்குப் பெற்று, நற்செய்தியை அறிவிக்க
அழைக்கப்பட்டிரும் நாம் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா
மக்களுக்கும் அறிவிக்கின்றோமா? என்று சிந்தித்துப்
பார்க்கவேண்டும்.
ஜப்பானில் ஒரு பள்ளியில் கல்வி புகட்டுவதற்காக
அமெரிக்காவிலிருந்து ஆசிரியர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார்.
அவர் பாடவேளையில் கிறிஸ்துவைப் பற்றி எதுவும் போதிக்கக்கூடாது
என்ற நிபந்தனையின் பேரில் அழைக்கப்பட்டிருந்தார். அவரும்
பாடவேளையில் பாடத்தைத் தவிர வேறு எதையும் கற்றுத்தரவில்லை.
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவருடைய வாழ்க்கைப்
பார்த்துவிட்டு, நிறைய மாணவர்கள் உத்வேகமும், ஞானமும்
பெற்றார்கள்.
ஒருநாள் இரவில் அவருடைய வாழ்வால் தொடப்பட்ட அவரிடம் படித்த
நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று, நாங்கள்
கிறிஸ்தவர்களாக மாறப்போகிறோம்" என்று சொல்லி, திருமுழுக்குப்
பெற்று கிறிஸ்தவர்களாக மாறினார்கள். அந்த ஆசிரியர் அவர்களில்
20 மாணவர்களை கோயோடோ கிறிஸ்தவ பயிற்சிப் பள்ளிக்கு அனுப்பி
வைத்து, அவர்கள் குருவாக மாற துணைபுரிந்தார்.
இந்த நிகழ்வில் ஆசிரியரின் வாழ்வே மிகப்பெரிய நற்செய்தி
அறிவிப்பாக இருந்தது. நாம் நற்செய்தி அறிவிக்க கடல்கடந்து
செல்லத் தேவையில்லை. நாம் இருக்கும் இடத்தில் நம்முடைய
வாழ்வால் நற்செய்தி அறிவிக்கலாம். நற்செய்தியின் தூதுவர்களாக
மாறலாம்.
ஆகவே, தூய பேதுரு, பவுலின் விழாவைக் கொண்டாடும் நாம் இயேசுவைப்
பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம், கொண்ட
கொள்கையில் உறுதியாய் இருப்போம். அதன்வழியாக இறைவன் அளிக்கும்
வெற்றி வாகையை பரிசாகப் பெறுவோம்.
-
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
திருநாள் - புனிதர்கள் பேதுரு பவுல்
இன்று உரோமைத் திருஅவையின் இருபெரும் தூண்களாக இருக்கின்ற புனிதர்கள்
பேதுரு மற்றும் பவுலின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறோம்.
இவர்கள் எழுதிய எழுத்துக்களிலிருந்து இந்த இரு பெரும் ஆளுமைகளிடம்
நான் கண்டு வியக்கும் குணங்களைச் சிந்திக்க விழைகிறேன்.
அ. பேதுரு குற்றவுணர்வைக் கையாண்ட விதம்
'இன்றிரவு சேவல் கூவுமுன் என்னை மூன்று முறை மறுதலிப்பாய்'
என்கிறார் இயேசு.
'இல்லை. சாவிலும் உன்னைப் பிரியேன்' என்கிறார் பேதுரு.
ஆனால், அடுத்தடுத்த மறுதலிக்கிறார்.
முதல் தடவை மறுதலித்தபோதாவது, 'ஐயயையோ! இன்னும் கொஞ்சம்
அலர்ட்டா இருந்துகொள்ளலாமே' என்றுகூட அவர் நினைக்கவில்லை.
நிகழ்வுகள் மிக வேகமாக நடந்தேறுகின்றன. மூன்று முறை
மறுதலிக்கின்றார். இது எப்படின்னா, முதல் முறை தடுமாறி
விழுந்தவர், 'இனி விழக்கூடாது' என்று நினைத்து
முடிவெடுப்பதற்குள் இன்னும் இரண்டு முறை விழுவதுபோல
இருக்கிறது.
மறுதலித்தாயிற்று மூன்றுமுறை. சேவலும் கூவியாயிற்று.
தூரத்தில் அவர் இயேசுவைப் பார்ப்பதாக நாம் காணொளிகளில்
பார்க்கிறோம். ஆனால், இயேசுவை அவர் பார்க்கவில்லை என்றாலும்
அவருடைய உள்ளத்தில் குற்றவுணர்வு பிறந்திருக்கும்.
குற்றவுணர்வு என்பது என் மனதுக்கு தெரிந்த ஒன்றுக்கு எதிராக
என் மூளை மற்றொன்றைச் செய்ய, என் மனது, 'இல்லை! இது தவறு'
என்று என் மூளைக்குச் சொல்ல, மூளை பரிதவிக்கும் உணர்வு. ஆக,
மனதுக்கும் மூளைக்கும் நடக்கும் போராட்டம்தான் குற்றவுணர்வு.
இந்தக் குற்றவுணர்வு வந்தவுடன் மூளை, 'எல்லாம் முடிந்து
போயிற்று. இனி நீ எப்படி அவரை எதிர்கொள்வாய். உன் வாழ்க்கை
அவ்வளவுதான். நீ ஒரு தோல்வி' என நிறைய வார்த்தைகளை அள்ளிக்
கொட்டும். ஆனால் மனம், 'பரவாயில்லை' என்ற ஒற்றை வார்த்தைதான்
சொல்லும். மனதிற்குச் செவிகொடாமல் மூளைக்குச் செவிகொடுப்பவர்
தன்னையே அழித்துக்கொள்ளத் துணிகிறார் - யூதாசு போல.
ஆனால், பேதுரு தன் மனத்திற்குச் செவிகொடுத்தார். 'நான் அவரை
மறுதலித்தேன்தான். ஆனால் அவர் என்னை ஏற்றுக்கொள்வார்' என்று
தன் குற்றவுணர்வின் நேரத்தில் தனக்கு வெளியே பார்த்தார்.
இயேசுவே சொல்வது போல, 'குறைவாக மன்னிப்பு பெறுபவர் குறைவாக
அன்பு செய்வார். நிறைவாக மன்னிப்பு பெறுபவர் நிறைவாக அன்பு
செய்வார்.' பேதுரு நிறைவாக மன்னிப்பு பெற்றார் இறுதி வரை அன்பு
செய்தார் இயேசுவை.
ஆக, இன்று நான் என் குற்றவுணர்வை எப்படிக் கையாளுகிறேன்? என்
மூளையின் சொற்படி நடக்கிறேனா? என் மனத்தின் சொற்படி
நடக்கிறேனா?
ஆ. பவுல் தன் மனப்போராட்டத்தை கையாண்ட விதம்
புதிய நம்பிக்கை கொண்டவர்களைக் கைது செய்யப் புறப்படுகிறார்
பவுல். ஆனால், அந்த நம்பிக்கையின் பிதாமகனையே அறிவிக்கும்
திருத்தூதராக மாறுகின்றார்.
இயேசுவால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றார். திருத்தூதர்களால்
நிராகரிக்கப்படுகின்றார்.
அவரின் போதனையைக் கேட்டு மக்கள் வியக்கிறார்கள். ஆனால் அவரைக்
கல்லால் எறிகிறார்கள்.
நற்செய்தி அறிவித்து மனம் மாற்றுகிறார். மனம் மாறியவர்கள் வேறு
நற்செய்தியை நம்ப ஆரம்பிக்கிறார்கள்.
'கண்ணே மணியே' என திருச்சபையைக் கொஞ்சுகிறார். 'நான்
குச்சியுடன் வர வேண்டுமா?' என எச்சரிக்கிறார்.
'என்மேல் தைத்த முள் ஒன்று உண்டு' என அழுகிறார். 'எனக்கு
வலுவூட்டுகிற இறைவனின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு
ஆற்றல் உண்டு' எனத் துள்ளிக் குதிக்கிறார்.
'திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் நான் பரிசேயன்' என
பெருமிதம் கொள்கிறார். 'எல்லாவற்றையும் குப்பையெனக்
கருதுகிறேன்' என சபதம் எடுக்கிறார்.
இவ்வாறாக, பவுலின் மனப்போராட்டம் இவருடைய முரண் வார்த்தைகளில்
வெளிப்படுகின்றது. இந்த மனப்போராட்டம் பற்றி இவர் அடிக்கடி
எழுதுகின்றார். மனப்போராட்டம் என்பது நல்லதுக்கும் தீயதுக்கும்
என்றால் எளிதாக வென்றுவிடலாம். ஆனால், இரண்டு நல்லதுக்கு இடையே
போராடும்போது, நல்லவை இரண்டிற்கு இடையே ஒன்றைத்
தெரிந்துகொள்ளும்போதுதான் அது போராட்டமாகிவிடும். புதிய
ஏற்பாட்டு யோசேப்பும் எப்போதும் இரண்டு நல்லவைகளில் ஒன்றைத்
தெரிவு செய்வதையே போராட்டமாகக் கொள்கிறார்.
பவுல் எப்படி மனப்போராட்டத்தில் வெல்கிறார்?
ரொம்ப எளிது. தான் நம்பிய இயேசுதான் அவருக்கு அளவுகோல்.
இயேசுவோடு இயேசுவுக்காக என்றால், 'ஆம்', அப்படி இல்லை என்றால்
'இல்லை'
இவ்விரு புனிதர்களும் நம்முடைய குற்றவுணர்வையும், நம்
மனப்போராட்டத்தையும் வெல்ல நமக்கு மாதிரிகளாக நிற்கின்றனர்.
Fr. Yesu arunanidhi
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
முன்னுரை
பிரியமானவர்களே!
திருஅவையின் தலை சிறந்த தூண்களான புனிதர்கள் பேதுரு, பவுல் இவர்களின்
திருவிழாவை கொண்டாட திருஅவை இன்று நமக்கு அழைப்பு தருகின்றது.
பேதுரு தன் இனமக்களுக்கும், பவுல் பிறஇன மக்களுக்கும் நற்செய்தி
அறிவித்தார்கள். இரு வேறு குணநலன்களை கொண்டிருந்தாலும், தங்களது
ஆர்வத்தில் குறைவில்லாது இவர்கள் பணியாற்றி வந்தார்கள் என்பதனை
இறைவாக்குகள் நமக்கு உறுதி செய்கின்றன.
இருவருமே தங்களது நிலையுணர்ந்து கொண்டதால், நீரே மெசியா என்றும்,
அவரே என்னிலே வாழ்கின்றார் என்றும், அவரது வலிமையை பெற்றே நாங்கள்
வலிமை பெறுகின்றோம் என்று உறுதியாக சொல்ல முற்பட்டார்கள்.
தங்களது விசுவாச உறுதிப்பாட்டை மடல்களின் வாயிலாகவும் நம்மோடு
பேசி வருகின்றார்கள்.
இந்த பெருவிழாவிலே நாமும், கிறிஸ்து இயேசுவின் வலிமை உணர்ந்தவர்களாக,
அவருக்கு நன்றியறிந்த நல்ல வாழ்வு வாழ அருள் கேட்டு மன்றாடுவோம்.
மன்றாட்டு:
திருஅவை அன்பர்கள் இந்த புனிதர்களில் இருந்த துணிவு பெற்றவர்களாக
தங்களது பணியினை ஆற்ற அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நாட்டை ஆள்வோர் அதிகாரத்தை மட்டுமே நம்பி பயணிக்காமல், அன்பையும்,
பரிவையும், கரிசனையையும் கொண்டு பணியாற்ற அருள்தர இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
பேதுருவின் கூற்றுப்படி, கடவுள் ஆள்பார்த்து செயல்படாதவர் என்பதனை
நாங்களும் உணர்ந்து, வாழ்விலே வாழ்ந்து காட்டிட, அருள்தர இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
பவுல் அடிகளாரின் கூற்றுப்படி, என்னிலே வாழ்வது அவரு என்று உணர்ந்து
உயிருள்ள ஆலயங்களாக வாழ்ந்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
வாழும் கடவுளின் மகன் நீரே என்பதனை உணர்ந்து, இறுதிவரை நம்பிக்கையிலே
நிலைத்து நின்று வாழ்ந்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|
|