|
|
28 ஜூன் 2019 |
|
|
பாஸ்கா காலம்
12ம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம்
செய்துகொள்ள வேண்டும். சாரா ஆபிரகாமுக்கு ஒரு மகனைப் பெறுவாள்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 1, 9-10, 15-22
ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத்
தோன்றி, "நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து,
மாசற்றவனாய் இரு" என்றார்.
மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், "நீயும் தலைமுறைதோறும் உனக்குப்
பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க
வேண்டும். நீங்கள் கடைப்பிடிக்குமாறு உன்னோடும் உனக்குப்பின்
வரும் உன் வழிமரபினரோடும் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே:
உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்"
என்றார்.
பின்பு கடவுள் ஆபிரகாமிடம், "உன் மனைவியைச் `சாராய்' என அழைக்காதே.
இனிச் `சாரா' என்பதே அவள் பெயர். அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள்
வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு நான் ஆசி வழங்க,
அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும்
அவளிடமிருந்து உதிப்பர்" என்றார்.
ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, "நூறு வயதிலா எனக்குக்
குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப்
போகிறாள்?" என்று தமக்குள் சொல்லிக் கொண்டார். ஆபிரகாம் கடவுளிடம்,
"உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்" என்றார். கடவுள்
அவரிடம், "அப்படியன்று. உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப்
பெறுவாள். அவனுக்கு நீ `ஈசாக்கு' எனப் பெயரிடுவாய். அவனுடனும்
அவனுக்குப் பின்வரும் அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை
நான் நிலைநாட்டுவேன். இஸ்மயேலைப் பற்றிய உன் வேண்டுதலை நான்
கேட்டேன். அவனுக்கு ஆசி வழங்கி, அவனை மிகப்பெருமளவில் பலுகச்
செய்வேன். பன்னிரு இளவரசர் களுக்கு அவன் தந்தையாவான்; அவனிடம்
இருந்து ஒரு பெரிய நாடு தோன்றும்.
ஆனால், சாரா உனக்கு அடுத்த ஆண்டு இதே காலத்தில் பெறப்போகும் ஈசாக்கிடம்
என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்" என்றார். அவருடன் பேசி
முடித்தபின், கடவுள் ஆபிரகாமை விட்டுச் சென்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
128: 1-2. 3. 4-5 (பல்லவி: 4)
=================================================================================
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் ஆசி பெற்றவராய் இருப்பார்.
1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2
உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும்
பெறுவீர்! பல்லவி
3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல்
இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப்
போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி
4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்
நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!
பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 8: 17
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் நம் பிணிகளைத் தாங்கிக்
கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீர் விரும்பினால், என் நோயை நீக்க உம்மால் முடியும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-4
அக்காலத்தில் இயேசு மலையிலிருந்து இறங்கியபின் பெருந்திரளான மக்கள்
அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, "ஐயா,
நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால்
முடியும்" என்றார்.
இயேசு தமது கையை நீட்டிஅவரைத் தொட்டு,
"நான் விரும்புகிறேன், உமது
நோய் நீங்குக!" என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய்
நீங்கியது.
இயேசு அவரிடம்,
"இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும்.
ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள
காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது
சான்றாகும்" என்றார்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
தொடக்க நூல் 17: 1, 9-10,
15-22
"இனி சாரா என்பதே அவள் பெயர்"
நிகழ்வு
அமெரிக்காவைச் சார்ந்த பெரிய கண்டுபிடிப்பாளரான வில்லியம்
கிர்டி (William Kirdy) தன்னுடைய நீண்டநாள் பயணத்தை
முடித்துவிட்டு, சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார்.
வழியில் ஒரு செவ்விந்தியப் பெண்மணி உடலெல்லாம் காயங்களோடு மயக்கம்
போட்டு விழுந்து கிடந்தாள். அவளுக்குப் பக்கத்தில் அவளுடைய பச்சிளம்
குழந்தையானது அழுதுகொண்டிருந்தது. இக்காட்சியைக் கண்ட வில்லியம்
கிர்டி அந்தப் பெண்மணியின் அருகில் சென்று, அவளுடைய உடலில் உயிர்
இருக்கின்றதா என்று சோதித்துப் பார்த்தார். அவளுடைய உடலில் உயிர்
இருக்கின்றது என்று தெரிந்ததும், அவளுக்கு முதலுதவி செய்து,
அவளைச் சுய நினைவுக்குக் கொண்டுவந்தார்.
பின்னர் அவர் அவளிடம், "அம்மா! நீ யார்? எங்கிருந்து வருகின்றாய்?
உனக்கு என்னாயிற்று?" என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி,
"நான் செவ்விந்திய இனத்தைச் சார்ந்தவள். நான்கு நாட்கட்கு முன்னம்
என்னுடைய இனத்திற்கும் இன்னோர் இனத்திற்குமிடைய கடுமையான சண்டை
நடைபெற்றது. சண்டையில் இருதரப்பிலும் ஏராளமான பேர் கொல்லப்பட்டார்கள்.
என்னுடைய கணவரும் அதில் கொல்லப்பட்டார். நான் என்னுடைய மகனைக்
காப்பாற்றும் பொருட்டு அவனைத் தூக்கிக்கொண்டு இங்கு தப்பி ஓடிவந்தேன்"
என்றாள்.
அவள் இவ்வாறு பேசி முடிக்கும்முன்பே, வில்லியம் கிர்டி அவளை இடைமறித்து,
"நீயும் உன்னுடைய மகனும் சண்டையிலிருந்து தப்பித்து வரும்போதுதான்
உன்னுடைய உடம்பில் இப்படியெல்லாம் காயங்கள் ஏற்பட்டனவா?" என்றார்.
"அப்படியெல்லாம் இல்லை. நானும் என்னுடைய மகனும் சண்டையிலிருந்து
தப்பித்த பின்பு எங்கெல்லாமோ சுற்றித் திரிந்தோம். சாப்பிடுவதற்கு
எதுவுமே கிடைக்கவில்லை. மூன்று நாட்கள் சாப்பிடுவதற்கு எதுவுமே
கிடைக்காததால், என்னுடைய மார்பில் பால்கூடச் சுரக்கவில்லை. இதனால்
நான், கையோடு கொண்டுவந்திருந்த மீன் தூண்டிலை எடுத்து, அதில்
புழுவிற்குப் பதிலாக என்னுடைய உடம்பிலிருந்து சதையைக்
கிழித்து, அதில் கோர்த்து, மீன்பிடித்து உண்டு, என்னுடைய
மார்பில் பால்சுரக்கச் செய்து, அதை என்னுடைய மகனுக்குக்
கொடுத்து, அவனுடைய பசியைப் போக்க நினைத்தேன். அவ்வாறு நான்
செய்துகொண்டிருக்கும்போதுதான் நான் மயக்கம்போட்டு விழுந்தேன்"
என்றார்.
அந்தப் பெண்மணி இவ்வாறு சொன்னதைக் கேட்டு வில்லியம் கிர்டி ஒருநிமிடம்
அதிர்ந்து போய் நின்றார். பின்னர் அவர் அந்தப் பெண்மணிக்கு
கையில் பணமும் உணவுப் பொருட்களும் வாங்கிக் கொடுத்து அனுப்பினார்.
ஒரு தாய் தன்னுடைய மகன்/மகள் மீது கொண்டிருக்கும் அன்பு எல்லையற்றது;
அதை விளக்க வார்த்தைகளே இல்லை என்பதை இந்த நிகழ்வின் வழியாக
நாம் அறிந்துகொள்ளலாம். இன்றைய முதல் வாசகத்திலும் ஒரு தாயைக்
குறித்து அல்லது தாயாகப் போகும் ஒருவரைக் குறித்து
வாசிக்கின்றோம். அவர் யார்? தன்னுடைய மகனுக்காக அவர் என்ன
செய்தார்? என்பதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப்
பார்ப்போம்.
எல்லார்க்கும் தாயான சாரா
தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய
கடவுள் ஆபிராமிடம், "உன் மனைவியை 'சாராய்' என அழைக்காதே. இனி
'சாரா' என்பதே அவள் பெயர்... அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள்
வழியாக நாடுகள் தோன்றும், மக்களினங்களும் அரசர்களும் அவளிடமிருந்து
உதிப்பர்" என்கின்றார்.
முதலில் சாரா என்பதற்கு என்ன பொருள் என்பதைத்
தெரிந்துகொள்வோம். சாரா என்றால் அரசி என்பது பொருள். சாரா தன்னுடைய
பெயர்க்கு ஏற்றாற்போல் (எல்லா) நாடுகட்கும் மக்களினங்கட்கும்
அரசியாகவும் தாயாகவும் ,மாறினார் (எசா 51:2) சாரா இத்தகையதொரு
பேற்றினை தன் கணவர் ஆபிரகாமைப் போன்று ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையினால்தான்
பெற்றார் (எபி 11:11) என்று சொல்லால் அது மிகையாகாது.
சாரா ஒவ்வொரு மனைவிக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு
சாரா, ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையினால் ஒரு தாய்க்கு எடுத்துக்காட்டாக
விளங்கியது மட்டுமல்ல, தன்னுடைய கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கையால்
ஒரு மனைவிக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்.
இச்செய்தியை பேதுரு தன்னுடைய முதல் திருமுகத்தில் மிக அழகாக எடுத்துரைப்பார்.
"சாரா ஆபிரகாமைத் 'தலைவர்' என்றழைத்து அவர்க்குக் கீழ்ப்படிந்திருந்தார்.
நீங்களும் நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதிருப்பீர்களென்றால்
சாராவின் புதல்வியராய் இருப்பீர்கள்." (1 பேது 3:6). ஆகையால்,
ஒவ்வொரு மனைவியும் தன் கணவர்க்குக் கீழ்ப்படிந்து வாழ்கின்றபோது,
அவர் சாராவியின் புதல்வியாய் இருப்பார் என்பது உறுதி.
சிந்தனை
'நம்பிக்கையினால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்' (எபி
11:2) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். சாரா ஆண்டவர்மீது
கொண்ட நம்பிக்கையினால் குழந்தைப் பேறு பெற்றார். நாமும் ஆண்டவர்மீது
நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 8: 1-4
"நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்"
நிகழ்வு
Guideposts என்ற நூலில் பிரபல எழுத்தாளர் ஜோஸ்பின் குன்ஸ் (Josephin
Kunts) சொல்லக்கூடிய ஒரு நிகழ்வு.
கணவன், மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள் என்றிருந்த ஓர் ஏழைக்
குடும்பத்தில், திடீரென்று ஒருநாள் இளைய மகளுக்கு நிமோனியாக்
காய்ச்சல் வந்துவிட்டது. வயிற்றுக்கும் வாய்க்கும்
திண்டாடிக்கொண்டிருந்த அந்தக் குடும்பத்திற்கு இது பேரிடியாய்
அமைந்தது. எப்படியோ தங்கட்குத் தெரிந்தவர்கள் செய்த சிறுசிறு
உதவிகளைக் கொண்டு காய்ச்சலில் கிடந்த அந்தக் குழந்தையை அக்குடும்பம்
காப்பாற்றியது.
குழந்தைக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர், குழந்தையை அதனுடைய
பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு முன்னம், அதனுடைய
பெற்றோரை அழைத்து, "குழந்தையிடமிருந்து காய்ச்சல் முற்றிலுமாக
நீங்கிவிட்டது. இருந்தாலும் நான் எழுதிக் கொடுக்கக்கூடிய மருந்து
மாத்திரைகளைத் தவறாமல் கொடுங்கள். கூடவே ஒரு வாரத்திற்கு
காலைநேரத்தில் அவித்த முட்டையைத் தவறாமல் கொடுங்கள்" என்றார்.
குழந்தையின் பெற்றோரும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு
வீட்டுக்கு வந்தனர்.
வீட்டுக்கு வந்தபிறகு அந்தக் குழந்தையின் தாய், அதனுடைய தந்தையிடம்,
"நாம் சாப்பாடிற்கே மிகவும் திண்டாடிக்கொண்டிருக்கின்றோம். இதில்
ஒருவாரத்திற்கு குழந்தைக்கு அவித்த முட்டை கொடுக்கவேண்டும் என்றால்,
எப்படிக் கொடுப்பது?" என்று புலம்பினார். இதைக் கேட்டுவிட்டு
குழந்தையின் தந்தை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அப்பொழுது
அந்தக் குடும்பத்தில் இருந்த மூத்த குழந்தை, "அம்மா!
பாப்பாவிற்கு ஒரு வாரத்திற்கு அவித்த முட்டைதானே வேண்டும். இறைவனிடம்
நம்பிக்கையோடு வேண்டுவோம். அவர் நம்முடைய பாப்பாவிற்கு நிச்சயம்
அவித்த முட்டை தருவார்" என்றார். மூத்த மகள் சொன்ன இவ்வார்த்தைகளை
கேட்டு, பெற்றோர்க்கு நம்பிக்கை பிறந்தது.
அன்றைய இரவு இறைவேண்டலில் குடும்பத்தில் இருந்த எல்லாரும்
சேர்ந்து இளைய மகளில் நற்சுகத்திற்காகவும் ஒருவாரத்திற்குத்
தவறாமல் முட்டை கிடைக்கவேண்டும் என்றும் நம்பிக்கையோடு மன்றாடினார்கள்.
மறுநாள் காலையில், தாயானவள் வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தபோது,
எங்கிருந்தோ வந்த ஒரு கோழி, வீட்டிற்கு முன்னால் இருந்த செடிகட்கிடையே
சென்று, முட்டையிட்டுவிட்டு மாயமாய் மறைந்தது. இதைப் பார்த்த
தாய்க்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. அவள் வீட்டில் இருந்த எல்லாரையும்
அழைத்து, கோழி வந்து முட்டையிட்டுச் சென்றதைக் காட்டியபோது மிகவும்
ஆச்சரியப்பட்டார்கள். பிறகு தாயானவள் அந்த முட்டையை அவித்து,
இளைய மகளுக்குக் கொடுத்தார்.
அன்றைய நாளின் இரவு இறைவேண்டலில் குடும்பத்தில் இருந்த எல்லாரும்
இறைவன் செய்த நன்மைக்கு நன்றிசெலுத்தினார்கள். மேலும் அந்த நன்மை
தொடர்ந்து கிடைக்கவேண்டும் என்றும் வேண்டினார்கள். அவர்கள்
வேண்டியதுபோன்று மறுநாளும் முந்தைய நாளில் வந்த கோழி
வீட்டுக்கு முன்பாக முட்டையிட்டுவிட்டு மறைந்தது. இப்படியே ஒருவாரம்
நடந்தது. அந்த ஒருவாரத்தில் இளைய மகள் முற்றிலுமாக நலமடைந்தாள்.
அவள் நலமடைந்த பின்பு கோழியும் வருவதை நிறுத்திக்கொண்டது.
நடந்த எல்லாவற்றையும் கவனித்த அந்தக் குடும்பத்தில் இருந்த தந்தையும்
தாயும் இறைவன்தான் நம்முடைய வேண்டுதலைக் கேட்டு உதவியிருக்கின்றார்
என்று அவர்க்கு நன்றி செலுத்தினார்கள்.
இறைவன் தங்களுடைய குடும்பத்திற்கு நிச்சயம் உதவுவார் என்று அந்தக்
குடும்பம் நம்பிக்கையோடு வேண்டியது. அதனால் இறைவன் அவர்கட்கு
அற்புதமாக உதவினார். நாமும் இறைவனிடம் நம்பிக்கையோடு மன்றாடினால்,
அவர் நமக்கு நிச்சயம் உதவுவார். அத்தகைய செய்தியைத்தான் இன்றைய
நற்செய்தி வாசகம் தாங்கி வருகின்றது. நாம் அதைக் குறித்து
சிந்தித்துப் பார்ப்போம்.
நம்பிக்கையோடு இயேசுவிடம் வந்த தொழுநோயாளர்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு மலையிலிருந்து கீழே இறங்கி
வந்தபோது, தொழுநோயாளர் ஒருவர் அவரிடம் சென்று, "நீர்
விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று சொல்ல,
இயேசுவும், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக"
என்கின்றார். இயேசு, மக்களால் 'தீண்டத்தகாதவர்' என்று முத்திரை
குத்தப்பட்ட தொழுநோயாளரக் குணப்படுத்துவதற்குக் காரணமாக
இருந்தது எது என நாம் சிந்தித்துப் பார்ப்பது மிகவும்
இன்றியமையாதது.
யூதர்கள், புறவினத்தாரையும் பெண்களையும் தொழுநோயாளர்களையும்
ஒரு பொருட்டாகவே மதிப்பது கிடையாது. இதில் தொழுநோயாளர்களின்
நிலை முந்தைய இருவரின் நிலையை விடவும் பரிதாபமானது. சமூகத்தால்
பாவிகள்/ தீட்டானவர் என்று முத்திரை குத்தப்பட்ட இவர்கள் (லேவி
13:8), ஊர்க்கு வெளியே இருந்துகொண்டு, யாரும் தங்களை நெருங்காத
வண்ணம் 'தீட்டு, தீட்டு' என்று கத்தவேண்டும் (லேவி 13: 45-46).
இப்படிப்பட்ட நிலையில் இருந்த தொழுநோயாளர் இயேசுவைக் கண்டதும்,
அவர் தன்னைக் குணப்படுத்துவார் என்று நம்பிக்கையோடு
செல்கின்றார்.
நம்பிக்கையோடு வந்தவர்க்கு நலமளித்த இயேசு
தொழுநோயாளர் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கை, தொடர்ந்து அவர்
மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் மிகவும் அசாதாரணமானவை
என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், முன்னமே சொன்னதுபோன்று
மனிதர்கள் யாரும் நெருங்கிவிடாத வண்ணம் இருக்கவேண்டிய
தொழுநோயாளர்(கள்) அதையெல்லாம் ஒருபொருட்டாகக் கருதாமல், இயேசு
தன்னைக் குணப்படுத்துவார் என்ற நம்பியோடு அவரைப் பணிந்து,
மரியாதையோடு "ஐயா" என்று அவரை அழைத்து, "நீர் விரும்பினால்
உம்மால் குணப்படுத்த முடியும்" என்கின்றார். இயேசுவால்
தன்னுடைய தொழுநோயைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை
அவர்க்கு இருந்தது. அதனால்தான் அவர் அப்படிச் சொல்கின்றார்.
இயேசுவும் அவருடைய நம்பிக்கையைக் கண்டு அவர்க்கு
நலமளிக்கின்றார்.
'கடுகளவு நம்பிக்கை, மலையையும் இடம்பெறச் செய்யும்' (மத்
17:20) என்ற இயேசுவின் வார்த்தைக்கு ஏற்ப, தொழுநோயார்
இயேசுவின்மீதுகொண்ட நம்பிக்கை அவர் நலம் பெறுவதற்குக் காரணமாக
அமைகின்றது. நாமும் இயேசுவிடம் அத்தகைய அசைக்க முடியாத
நம்பிக்கை கொண்டிருந்தால், நம்மாலும் இறைவனிடமிருந்து ஆசியைப்
பெற முடியும் என்பது உறுதி.
சிந்தனை
'கடவுள்மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கும்போது, நம்முடைய
கவலைகள் மறையத் தொடங்குகின்றன' என்பர். எனவே, நாம்
நற்செய்தியில் வரும் தொழுநோயாளரைப் போன்று இயேசுவின்மீது
நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
|
|