Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         28 ஜூன 2019  
                                        இயேசுவின் திருஇருதயப் பெருவிழா           
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 11-16

தலைவராகிய ஆண்டவர் கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக்காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன். மக்களினங்களினின்று அவற்றை வெளிக்கொணர்ந்து, நாடுகளினின்று கூட்டிச்சேர்த்து, அவற்றின் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன்.

அவற்றை இஸ்ரயேலின் மலைகளிலும் ஓடையோரங்களிலும் நாட்டின் எல்லாக் குடியிருப்புகளிலும் மேய்ப்பேன். நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன். இஸ்ரயேலின் மலையுச்சிகளில் அவற்றின் மேய்ச்சல் நிலம் இருக்கும். அங்கே வளமான மேய்ச்சல் நிலத்தில் அவை இளைப்பாறும். இஸ்ரயேலின் மலைகளின்மேல் செழிப்பான மேய்ச்சல் நிலத்தில் அவை மேயும்.

நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டு வருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப் போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 1)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3ய அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; 4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5b-11

சகோதரர் சகோதரிகளே, நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்த காலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது.

ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார்.

ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய்த் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப் பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ!

அதுமட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவு கொண்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 10: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என்னோடு மகிழுங்கள்; காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 3-7

அக்காலத்தில் இயேசு பரிசேயர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: ``உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக்கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்' என்பார்.

அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

திரு இருதய பெருவிழா நல்வாழ்த்துக்கள்.

காணாமல் போன ஆட்டை கண்டடைய உண்மை மேய்ப்பன் காடுமலை என அலைந்து திரிந்து கண்டு மகிழ்வு கொள்வது போல திரு இருதயம் நமக்காக ஏங்கித் தவிக்கின்றது என்பது இந்த உவமையின் உட்பொருளாய் உள்ளது.

இத்தகைய இருதயத்தைப் போல நம்முடைய இருதயமும் மாறிட மன்றாடுவதோடு நாமும் அக்கறையோடு தேடுவோம். யாருக்கு நம்முடைய உதவி தேவைப்படுகின்றதோ அவர்களுக்கு உதவுவதே நம்முடைய பணியாகட்டும். அவரின் இருதய அன்பு பெற்ற எல்லாருக்கும் இந்த கடமையும் பொறுப்பும் உண்டு.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
1981 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் கொலம்பியாவிற்கு செய்திகளைச் சேகரிக்கச் சென்ற செட் பிட்டெர்மன் (Chet Bitterman) என்ற பத்திரிக்கையாளரை அங்கே இருந்த ஒருசில அடிப்படைவாதிகள் (Fundamentalists) தெருவில் இழுத்துப் போட்டு, அடித்தே கொலைசெய்தார்கள். இதை கேள்விப்பட்ட செட் பிட்டெர்மெனின் பெற்றோர்கள் கதறி அழுதார்கள். தன்னுடைய மகனைக் கொலை செய்த அந்த கயவர்களை இறைவன் தண்டிக்கவேண்டுமென்று மன்றாடினார்கள்.

மாதங்கள் உருண்டோடின. 1982 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் கொலம்பியாவில் கொடியநோய் ஒன்று பரவி, நூற்றுக்கணக்கான மக்கள் அதில் இறந்துபோனார்கள். இச்செய்தியைக் கேள்வியைக் கேள்விப்பட்ட செட் பிட்டெர்மனின் பெற்றோர்கள் சந்தோசப்படவில்லை. மாறாக அவர்களுக்காக மனம் இரங்கினார்கள்.

உடனே தேவையான அளவு மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, கூடவே ஒரு மருத்துவக் குழுவையையும் கூட்டிக்கொண்டுபோய் அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளித்தார்கள்; நோயினால் பாதிக்கப்பட்ட நிறைய குழந்தைகளையும், பெண்களையும் காப்பாற்றினார்கள். அத்தோடு மட்டுமல்லாமல் அம்மக்களின் தேவைக்காக ஆம்புலன்ஸ்கள் சிலவற்றையும் வாங்கி இலவசமாகக் கொடுத்தார்கள்.

அப்போது அங்குவந்த ஒரு மனிதர் செட் பிட்டெர்மனின் பெற்றோர்களிடம் "இம்மக்கள்களில் ஒருசிலர்தான் உங்களுடைய ஒரே மகனையும் அடித்துக்கொன்று போட்டார்கள். அப்படியிருக்கும்போது இவர்களுக்கு இவ்வளவு உதவிகளைச் செய்கிறீர்களே?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "தொடக்கத்தில் நாங்கள் இவர்கள்மீது வெறுப்புணர்வோடுதான் இருந்தோம். ஆனால், கடவுள் எங்களுடைய உள்ளத்திலிருந்து பகைமையையும், வெறுப்பையும் அகற்றிவிட்டு, மன்னிப்பையும், அன்பையும் பொழிந்திருக்கிறார். இப்போது எங்களுடைய உள்ளம் அன்பால் நிறைந்திருக்கிறது" என்றார்கள்.

தங்களுடைய ஒரே மகனையும் கொன்ற கயவர்களை மன்னித்து, அவர்களுக்காக உள்ளத்தில் அன்பைத் தேக்கி வைத்திருக்கும் செட் பிட்டெர்மெனின் பெற்றோர்கள் உண்மையிலே நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.

இன்று திருச்சபையானது இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இதயம் என்று சொன்னாலே அது அன்பின் பிறப்பிடமாக இருக்கின்றது. இந்த மண்ணை, மக்களை வாழ்விக்கக்கூடிய அன்பு அதிலிருந்துதான் பிறப்பெடுக்கின்றது. ஆண்டவர் இயேசு அன்பே உருவானவர். எனவே, அவருடைய இருதயத்தில் எத்தகைய அன்பு குடிகொண்டு இருந்தது என்பதை சிந்தித்துப் பார்த்து, நம்முடைய இருதயத்தை அவருடைய இருதயமாக்க முயல்வோம்.

முதலாவதாக இயேசுவின் இ(ரு)தயம் இரக்கமுள்ள இ(ரு)தயமாக இருக்கின்றது. மத்தேயு நற்செய்தி 11 ஆம் அதிகாரம் 29 ஆவது வசனத்தில் நாம் வாசிக்கக் கேட்கின்றோம், "நான் (இயேசு) கனிவும், மனத்தாழ்மையும் உடையவன்" என்று. ஆம், இயேசுவின் இந்த கனிவும், இரக்கமும் அவருடைய பணிவாழ்வில் பலநேரங்களில் வெளிப்பட்டது. குறிப்பாக மக்கள் ஆயனில்லாத ஆடுகள் போன்று இருந்தபோது அவர்கள்மீது இரக்கம்கொண்டபோதும், (Mt 9: 36, 15: 32) நோயுற்றுக் கிடந்தவர்களைக் குணப்படுத்தியபோதும் அது அதிகமாக வெளிப்பட்டது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் காணமல் போன ஓர் ஆட்டை தேடிச்செல்லும் இரக்கமுள்ள ஒரு ஆயனாகவும், இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் படிப்பது போன்று நலிந்தவற்றை தேற்றுகிற, காயப்பட்டதைக் குணப்படுத்துகின்ற ஓர் ஆயனாகவும் விளங்குகின்றார். இவ்வாறு இயேசுவின் இ(ரு)தயம் இரக்கத்தால் நிரம்பி வழிந்தது என்று சொன்னால், அது மிகையாகாது.

இரண்டாவதாக இயேசுவின் இ(ரு)தயம் மன்னிக்கின்ற இ(ரு)தயமாக விளங்கியது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் பல்வேறு தவறு புரிந்தபோதும், கடவுள் அவர்களை மன்னித்ததுபோன்று, ஆண்டவர் இயேசு தனக்கு எதிராகத் தவறு செய்தவர்களையும் மன்னிப்பவராக இருந்தார். லூக்கா நற்செய்தி 23:34 ல் வாசிக்கின்றோம். அங்கே ஆண்டவர் இயேசு தந்தைக் கடவுளைப் பார்த்து, "தந்தையே! இவர்களை மன்னியும், இவர்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்" என்று மன்றாடுகின்றார். அந்தளவுக்கு அவருடைய இ(ரு)தயம் மன்னிக்கூடியதாக இருதயமாக இருந்தது.

ஒருமுறை ஸ்டான்லி ஜோன்ஸ் என்ற மறைபோதகர், தான் நடத்திவந்த நற்செய்தி கூட்டத்தில், இந்து சமயத்தைச் சார்ந்த ஒருவர் தொடர்ச்சியாக கலந்துகொள்வதை கண்டார். இது அவருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அவர் அந்த இந்து சமயத்தைச் சார்ந்தவரிடம், "நான் நடத்தும் நற்செய்திக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியாக எது உன்னைத் தூண்டியது?" என்று கேட்டார்.

அதற்கு அவர், "சில ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் இருக்கும் பகுதியில் ஒரு கிறிஸ்தவ மிஷினரி கிறிஸ்தவ மதத்தைப் பற்றி போதித்துக்கொண்டு வந்தார். அது எங்களுக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் நாங்கள் அனைவரும் சேர்ந்து, அவர் போதித்துக் கொண்டிருக்கும்போது தக்காளிப் பழங்களை அவர்மீது வீசியடித்தோம். அவர் எதுவும் சொல்லாமல், தன்மீது வீசப்பட்ட தக்காளிப் பழங்களைச் சேகரித்து, அதிலிருந்து ஜூஸ் தயாரித்து, எங்களுக்குப் பருகக் கொடுத்தார். அதைப்பார்த்து நாங்கள் அப்படியே அதிர்ச்சியடைந்து நின்றோம்.

அப்போதுதான் நான் ஓர் உண்மையை உணர்ந்தேன், ஒரு சாதாரண மிஷினரியே தனக்கு எதிராகத் தீமை செய்பவர்களை மன்னிக்கின்றபோது, கிறிஸ்து எந்தளவுக்கு மன்னிக்கின்றவராக இருப்பார் என்பதை அறிந்து, அதிலிருந்து நான் நீங்கள் நடத்தும் நற்செய்திக் கூட்டத்தில் கலந்துகொண்டு, கிறிஸ்துவை இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள முற்படுகின்றேன்" என்றார்.

ஆம், கிறிஸ்து பகைவர்களை மன்னிக்கக்கூடிய இ(ரு)தயத்தைக் கொண்டிருந்தார். இது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.

இறுதியாக இயேசு தன்னையே பிறருக்காகத் தரும் அன்பின் இ(ரு)தயத்தைக் கொண்டிருந்தார். உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் படிக்கின்றோம், "நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தாலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாக இருந்தபோது கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார்" என்று. ஆம், இயேசு பாவிகளாகிய நமக்காக தன்னுடைய உயிரைத் தந்தார். இதில்தான் அவருடைய அன்பு முழுமை பெறுவதாக இருக்கின்றது.

இன்றைக்கு யாரும் தன்னுடைய உயிரை பிறருக்காக, மக்களுக்காக தரமுன்வருதில்லை. பிறரை விடுங்கள், தன்னுடைய பெற்றோருக்காக, பிள்ளைகளுக்காகக்கூடத் உயிரைத் தர யாரும் முன்வருவதில்லை. அப்படி இருக்கும்போது ஆண்டவர் இயேசு பாவிகளாகிய நமக்குத் தன்னுடைய உயிரைத் தர முன்வந்தார். இது அன்பின் உச்சக்கட்டம். தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார், "இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பில் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுகெட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக" என்று (எபேசியர் 3:18). ஆம், இயேசுவின் அன்பு எல்லையற்றது, அதனை வார்த்தையால் விவரிக்க முடியாது.

ஆகவே இயேசுவின் திருஇருதயப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் இயேசுவின் இ(ரு)தயத்தில் விளங்கிய எல்லையில்லா அன்பை, மன்னிப்பை, இரக்கத்தை நாமும் கொண்டுவாழ்வோம், ஒருவர் மற்றவரை அன்பு செய்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

"இறுதி நாளில் கடவுள் உன்னை உன்னிடம் இருக்கும் அறிவை வைத்துத் தீர்ப்பிடுவதில்லை. மாறாக, உன்னுடைய உள்ளத்தில் எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை வைத்தே தீர்ப்பிடுவார்".
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 நிகழ்வு

1673 ஆம் ஆண்டில் ஒரு நாள் மார்கரெட் மரியா, தான் இருந்த துறவு மடத்தில் இருந்த சிற்றாலத்தில் இறைவனிடம் ஜெபித்துக் கொண்டிருந்தபோது திரு இருதய ஆண்டவர் அவருக்குக் காட்சி கொடுத்தார். இக்காட்சியைக் கண்டதும் மார்கரெட் மரியா ஒரு விதமான பரவச நிலையை உணர்ந்தார். அப்போது திரு இருதய ஆண்டவர் அவரைத் தன்னருகே அழைத்து, தன் மார்பில் சாய்ந்துகொள்ளச் சொன்னார். மார்கரெட் மரியாவும் இயேசுவின் மார்போடு சாய்ந்துகொண்டார். அப்போது இயேசு மார்கரெட் மரியாவின் இதயத்தை தன்னுடைய இதயத்தில் பொறுத்தி, மீண்டுமாக அதை எடுத்த இடத்தில் வைத்தார். இந்தக் காட்சிக்குப் பிறகு அவர் இயேசுவின் திரு இருதய அன்பை எங்கும் எடுத்துரைக்கத் தொடங்கினார்.

1674, 1675 ஆம் ஆண்டுகளில் ஆண்டவர் இயேசு மார்கரெட் மரியாவிற்கு பல முறை காட்சி கொடுத்தார். அந்தக் காட்சிகளில் எல்லாம் அவர் அவரிடம், தன்னுடைய இதயம் அன்பிற்காக ஏங்குகிறது என்றும், குடும்பங்களை தன்னுடைய இதயத்திற்கு ஒப்புக் கொடுத்து ஜெபிக்கவேண்டும் என்றும், பாவப் பரிகாரங்கள் செய்யவேண்டும் என்றும் பக்திமுறைகளை மேற்கொண்டால், அதற்கான பலன் கிடைக்கும் என்றும் கேட்டுக்கொண்டார்.

திரு இருதய ஆண்டவர் நான்காம் முறையாக மார்கரெட் மரியாவிற்கு காட்சி கொடுத்தபோது அவருக்கு பனிரெண்டு வாக்குறுதிகளைக் கொடுத்தார்.

அந்த வாக்குறுதிகள் இதோ:

1.மக்களின் வாழ்க்கை நிலைக்குத் தேவையான அருளை வழங்குவோம். 2. அவர்கள் குடும்பங்களில் அமைதி நிலவச் செய்வோம். 3. எல்லாத் துன்பங்களிலும் அவர்களுக்கு ஆறதலாக இருப்போம். 4. வாழ்விலும், சிறப்பாக இறுதி வேளையிலும் அவர்களுக்குத் தவறாத அடைக்கலமாயிருப்போம். 5. அவர்கள் முயற்சிகள் வெற்றிபெறத் திரளான அருளைப் பொழிவோம். 6. நமது இதயம் பாவிகளுக்கு இரக்கத்தின் ஊற்றும் கரைகாணா அன்புக் கடலுமாக இருக்கும். 7. புண்ணிய வழியில் ஊக்கமற்றவர் பக்தி வேகத்தைப் பெறுவர். 8. பக்தியுள்ளோர் புனித நிறைவை நோக்கி விரைந்து செல்வர். 9. எந்த வீட்டில் நம் திரு இதயப் படத்தை நிறுவித் தொழுவார்களோ, அந்த வீட்டை ஆசீர்வதிப்போம். 10. கல் நெஞ்சரான பாவிகளை மனம் திருப்பும் வரத்தைக் குருக்களுக்கு அளிப்போம். 11. திரு இதய பக்தியைப் பரப்புவோரின் பெயர் நம் இதயத்தில் அழியாதபடி பொறிக்கப்படும். 12. தொடர்ந்து ஒன்பது தலை வெள்ளிக் கிழமைகளில் நற்கருணையை உட்கொள்பவர்கள், தங்கள் பாவங்களுக்காக மனத்துயர்கொண்டு நன்மரணம் அடைவர், அவர்கள் நம் பகைவராகவோ, திருவருட்சாதனங்களைப் பெறாமலோ இறக்க மாட்டார்கள்.

வரலாற்றுப் பின்னணி

இயேசுவின் திரு இருதய பக்தி முயற்சிகள் பதினேழாம் நூற்றாண்டில்தான் தொடங்கப்பட்டாலும், இதற்கான தொடக்கம் படைவீரன் ஒருவன் இயேசுவின் விலாவைக் குத்த, அதிலிருந்து வழிந்த இரத்தம் மற்றும் தண்ணீரில் இருக்கின்றது (யோவா 19: 34). தண்ணீர் வாழ்வின் ஊற்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தூய்மைப்படுத்தக்கூடிதாகவும் இருக்கின்றது. அதே போன்று இரத்தமும் வாழ்வின், தியாகத்தின் அடையாளமாக இருக்கின்றது. இயேசுவின் விலாவிலிருந்து வழிந்த தண்ணீரும் இரத்தமும் அவர் இந்த மனுக்குலத்தின் மீது கொண்ட பேரன்பை நமக்கு எடுத்துக் கூறுகின்றது.

திரு இருதய பக்தி முயற்சிகளைத் தொடங்கி வைத்தவர் பதினேழாம் நூற்றாண்டைச் சார்ந்த ஜான் யூட்ஸ் என்பவர் ஆவார். இவர்தான் இயேசுவின் திரு இருதயத்திற்கு பூசை பலிகளை ஒப்புக்கொடுத்து, இப்பக்தியை வளர்த்தெடுத்தார். திரு இருதய ஆண்டவர் மார்கரெட் மரியாவிற்கு காட்சிகொடுத்த பிறகு இந்த பக்தி முயற்சிகள் இன்னும் சிறப்பாக வளர்ந்தன. இப்படி படிப்படியாக வளர்ந்த இயேசுவின் திரு இருதய பக்தி முயற்சி 1899 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் நாள், அப்போது திருத்தந்தையாக இருந்த திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயரால் அங்கீகாரம் செய்யப்பட்டது. அவர்தான் இவ்விழா இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவிற்கு அடுத்து வருகின்ற முதல் வெள்ளிக் கிழமையில் உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்று வரை இயேசுவின் திரு இருதய பக்தி முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருகின்றன.

2009 ஆம் ஆண்டு குருக்கள் ஆண்டைத் தொடங்கி வைத்துப் பேசிய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், "இயேசுவின் இதயம் அன்பினால் பற்றி எரிந்துகொண்டிருப்பதாகவும், அந்த அன்பிற்கு ஈடாக நாம் நம்முடைய அன்பை அவருக்கு வெளிப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டார். சீமோன் பேதுருவைப் பார்த்து, "என்னை அன்பு செய்கிறாயா?" என்று கேட்ட இயேசு நம்மையும் பார்த்துக் கேட்கிறார். நாம் இயேசுவின் அன்பிற்கு பதிலன்பு காட்டுகிறோமா? என சிந்தித்துப் பார்ப்போம்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

1. இயேசுவிடமிருந்த அளவிட முடியாத அன்பு

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே, என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்" என்பார் (மத் 11: 29). இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பண்பே அவரிடத்தில் இருந்த கனிவும் அன்பும்தான். அவர் கனிவும் அன்பும் கொண்டவராக இருந்ததால்தான் ஆயனில்லாத ஆடுகள் போன்று இருந்த மக்கள்மீது இரக்கம்கொள்ள முடிந்தது, அவர்களுக்கு தேவையானதைச் செய்ய முடிந்தது (மத் 9:36).

இயேசுவின் அன்பு மனிதருடைய அன்பைப் போன்று சாதாரணமான அன்பு கிடையாது. அது எல்லையில்லா அன்பு, மானிடருடைய மீட்புக்காகத் தன்னைத் தந்த தியாக அன்பு, அதனால்தான் பவுலடியார் இயேசுவிடம் இருந்த அன்பைக் குறித்து இவ்வாறு கூறுவார், "இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன்மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக" (எபே 3: 18) ஆம், நாம் அனைவரும் கிறிஸ்துவிடம் விளங்கிய அந்த அளவுகடந்த அன்பை உணர்ந்துகொண்டு அதற்கேற்ப வாழ்வதுதான் மிகவும் பொருத்தமானதாகும். இந்த நேரத்தில் இயேசுவிடம் விளங்கிய அதே அன்பு நம்மிடத்தில் இருக்கிறதா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒருசமயம் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா என்ற நகரில் வாழ்ந்த காத்ரின் திரேசாள் (Catherine Drexel) என்ற பணக்காரப் பெண்மணி சாதாரண மக்கள் குடியிருக்கும் பகுதி வழியாக வாகனத்தில் பயணம் செய்தார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. ஏனென்றால் அங்கிருந்த குழந்தைகள் போதிய உடையில்லாமல், உணவில்லாமல் வறிய நிலையில் இருந்தார்கள். இதைக் கண்ட அவர், அந்நேரத்திலேயே ஒரு முடிவு எடுத்தார். அம்முடிவு வேறொன்றும் இல்லை. அவர்களுக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணிப்பது. அதன்பிறகு அவர் அங்கே இருந்த குழந்தைகளின் வாழ்வு முன்னேற்றத்திற்காக ஒரு துறவற சபையை நிறுவி, அவர்களுடைய வாழ்வில் ஒளிஏற்றி வைத்தார்.

உண்மையான அன்பு என்பது துன்புற்று இருப்போரைக் கண்டு பரிதாபப் படுவது கிடையாது. மாறாக, அவர்களுடைய துன்பத்தைப் போக்க தன்னைத் தருவது. இயேசுவும் காத்ரின் திரேசாளும் அத்தகைய அன்பினை, கரிசனையைக் கொண்டிருந்தனர். நாமும் இயேசுவிடம் விளங்கிய அன்பைக் கனிவை, நமதாக்குவோம்.

2. இயேசுவிடம் இருந்த மனத்தாழ்மை

இயேசு அன்பிற்கும் கனிவிற்கும் எப்படி மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினாரோ அதைப் போன்று அவர் மனதாழ்மைக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார். மனத்தாழ்மை இருக்கும் இடத்தில் பொறுமை இருக்கும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும், துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் தன்மை இருக்கும். இயேசுவிடம் மனத்தாழ்மை இருந்ததனால்தான் அவரால் சிலுவைச் சாவை ஏற்றுக்கொள்ள முடிந்தது, துன்பங்களைத் தாங்கிக் கொள்ள முடிந்தது. இன்றைக்கு நம்மிடத்தில் இயேசுவிடம் இருந்த மனத்தாழ்மை இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நீதிமொழிகள் புத்தகம் 29:23 ல் வாசிக்கின்றோம், "இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்; தாழ்மை ஒருவரை உயர்த்தும்". நாம் இயேசுவிடம் விளங்கிய மனத்தாழ்மையை நமது வாழ்வில் கடைபிடித்து வாழும்போது அவரால் உயர்த்தப்படுவோம் என்பது உறுதி.

ஆகவே, இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவருடைய அளவுகடந்த அன்பை உணர்ந்து பார்ப்போம். அவரிடத்தில் இருந்த கனிவை, அன்பை, தாழ்மையை நமது வாழ்வில் கடைபிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

When God measures a man. He puts a tape around his heart not his head.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 நாளை இயேசுவின் திருஇருதய பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். திருஇருதயப் பெருவிழா அருள்பணியாளர்களின் அர்ப்பண நாள் என்றும் கொண்டாடப்படுகிறது.

'ஆனால் படைவீரர் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தன.' என நாளைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம்.

விவிலியத்தில் இரண்டு பேருடைய விலா திறக்கப்படுகிறது.

படைப்பின் தலைமகனாகிய முதல் ஆதாம்.

படைப்பின் பிதாமகனாகிய இரண்டாம் ஆதாம் இயேசு.

முதல் ஆதாம் ஆழ்ந்து தூங்குகின்றார்.

இரண்டாம் ஆதாம் இறந்து தொங்குகின்றார்.

முதல் ஆதாமின் விலாவைத் திறப்பவர் ஆண்டவராகிய கடவுள்.

இரண்டாம் ஆதாமின் விலாவைத் திறப்பவர் படைவீரர்.

முதல் ஆதாமின் விலாவிலிருந்து எலும்பு எடுக்கப்பட்டது.

இரண்டாம் ஆதாமின் விலாவிலிருந்து இரத்தமும், தண்ணீரும் எடுக்கப்படுகின்றன.

எலும்பு என்பது நம் உடலின் திடப்பொருள்.

தண்ணீர் என்பது நம் உடலின் திரவப்பொருள்.

இரத்தம் என்பது திடப்பொருளின் மேல் பரவிக்கிடக்கும் நாளங்களில் ஓடும் திரவப்பொருள்.

திடமும், திரவமும் கலந்தால்தான் மனிதம் பிறக்க முடியும்.

இதையேதான் பட்டினத்தாரும்,

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து

என எழுதுகின்றார்.

அதாவது, இங்கே ஆணிடம் ஊறும் விந்து மற்றும் பெண்ணிடம் ஊறும் சுரோணிதம் கலந்து குழந்தை உருவாகிறது என்கிறார். இவரின் கூற்றுப்படி விந்து மனித உடலின் திடப்பகுதிக்கும், சுரோணிதம் மனித உடலின் திரவிப்பகுதிக்கும் காரணமாக இருக்கிறது.

படைப்பில் இதுவரை மேலோங்கி இருந்த எலும்பின்மேல் இயேசுவின் இரத்தமும் தண்ணீரும் தெளிக்கப்படுகிறது. இதன் பொருள் என்ன? படைப்பு உயிர் பெறுகிறது.

எசேக்கியேல் 37:1-14ல் நாம் பள்ளத்தாக்கில் நிறைந்து கிடந்த உலர்ந்த எலும்புகள் உயிர்பெறும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

படைப்பு முழுவதும் உலர்ந்து எலும்புகள். படைப்பின்மேல் விழும் இயேசுவின் இரத்தமும் தண்ணீரும் உலர்ந்தவற்றிற்கு ஈரம் தருகிறது.

திருஇருதயப் பெருநாளில் காய்ந்துபோன, உலர்ந்துபோன நம் உடலை, உள்ளத்தை, மனதை இறைவன் தன் இரத்தத்தால், தண்ணீரால் ஈரமாக்க அவரிடம் அவற்றை கொண்டுவருவோம்.

இது முதல் பொருள்.

இரண்டாவதாக, ஒவ்வொரு திருப்பலியிலும் அருள்பணியாளர் திராட்சை இரசத்தை ஒப்புக்கொடுக்கும்முன், திருக்கிண்ணத்தின் இரசத்தோடு ஓரிரு தண்ணீர்த் துளிகளைச் சேர்க்கின்றார். அப்படி அவர் சேர்க்கும்போது சொல்லப்படும் செபம் இதுதான்:

'இந்த தண்ணீர் மற்றும் இரசத்தின் மறைபொருளால் நாங்கள் கிறிஸ்துவின் இறைத்தன்மையில் பங்குபெறுவோமாக. அவரே தாழ்வுற்று எங்களின் மனிதத்தன்மையில் பங்கேற்றார்.'

ஒவ்வொரு திருப்பலியிலும் நாம் 'இரத்தம்,' 'தண்ணீர்' என்ற இரண்டையும் கலந்து இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். 'இரத்தம்' அல்லது 'இரசம்' இயேசுவின் இறைத்தன்மையையும், 'தண்ணீர்' நம் ஒவ்வொருவரின் மனிதத்தன்மையையும் குறிக்கிறது. கிண்ணத்தில் ஊற்றப்பட்டவுடன் இரண்டும் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றோடொன்று கலந்துவிடுகின்றன.

நம்மிடம் பிரிக்க முடியாதபடி இறை மற்றும் மனித இயல்புகள் இருக்கின்றன. இயேசு தன்னிடமும் இவை இருந்தன என்பதை தன் விலாவைத் திறந்து காட்டிவிட்டார்.

ஆக, நம்மிடம் இருக்கும் இந்த இரண்டு இயல்புகளும் ஒருங்குநிலையில் இயங்க இன்றைய நாளில் செபிக்கலாம்.

மூன்றாவதாக,

இன்று நம் எல்லா இதயங்களையும் அவரிடம் ஒப்புக்கொடுப்போம். இதயம் சார்ந்த நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதயத்தின் இருப்பை நாம் அதன் நோயின்போதுதான் நாம் உணர்கிறோம். ஆனால், நம் இயக்கத்திற்குக் காரணமான இந்த இதயத்தைப் பாதுகாக்க நம் உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, நல்ல உணர்வுகள் அவசியம் என்பதை இன்று நாம் நன்றாக உணர்கிறோம். நம் இதயங்களைப் பேணிக்காக்க இன்று உறுதி எடுக்கலாம்.

இயேசுவின் திருஇருதயமே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்!

- Fr. Yesu Karunanidhi, Teaching Faculty, Saint Paul's Seminary, Tiruchirappalli 620 001. +91 948 948 21 21

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================

இன்று நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருஇருதயப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். ஏறக்குறைய 11ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் இந்த திருவிழா கொண்டாடப்பட்டதாக கிறிஸ்தவ வழிபாட்டு வரலாறு சொன்னாலும், இயேசுவின் அன்பைப் பற்றிய புரிதல்கள் ஒரிஜன், அம்புரோஸ், ஜெரோம், அகுஸ்தீன், மற்றும் ஐரேனியு அவர்களின் காலங்களிலேயே இருந்திருக்கின்றன.

இயேசுவின் திருஇருதயத்தைப் பற்றி நற்செய்தி நூல்களில் இரண்டு மறைமுகக் குறிப்புக்கள் உள்ளன:

'நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே, என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.' (மத் 11:29)

'படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வழிந்தோடின.' (யோவா 19:34)

மேற்காணும் இரண்டு குறிப்புக்களில் இரண்டாம் குறிப்பு இயேசுவின் இருதயத்தை நேரடிப்பொருளிலும், முதல் குறிப்பு உருவகப் பொருளிலும் சொல்கின்றது. இரண்டாம் குறிப்பிலிருந்து தொடங்குவோம்.

'விலாவைக் குத்தினார்' என்பதிலிருந்து 'இதயத்தைக் குத்தினார்' என்று எப்படிச் சொல்ல முடியும் எனச் சிலர் கேட்கலாம். பதில் எளிது. படைவீரர்கள் வழக்கமாக வலது கை பழக்கமுள்ளவர்கள். வலது கை பழக்கமுள்ளவர் மேல் நோக்கி ஒரு பொருளைக் குத்த அல்லது தாக்க வேண்டுமென்றால் அந்தப் பொருளின் இடப்பக்கம் தான் நிற்க வேண்டும். இதை நம் வீட்டில் ஒட்டடை அடிக்கும்போதே நாம் செய்யலாம். வலக்கை பழக்கம் உள்ளவர்கள் வலதிருந்து இடது என்று குச்சியைப் பிடிப்பர். இடக்கை பழக்கம் உள்ளவர்கள் இடதிலிருந்து வலுது என்று பிடிப்பர்.இந்தப் படைவீரர் இயேசுவின் இதயத்தைக் குத்த அதிலிருந்து தண்ணீரும் இரத்தமும் வெளிப்படுகிறது. இயேசு கல்தூணில் கற்றி அடிக்கப்பட்டபோது அவருடைய உடலிலிருந்து நிறைய இரத்தம் வெளியேறியது. இரத்தம் வெளியேறிய உடன் வேகமாக துடிக்கின்ற இதயம் தனக்கு அருகில் இருக்கின்ற நுரையீரலின் தண்ணீரையும் தனக்குள் இழுத்துக்கொள்ளும். இது இதயத்தைச் சுற்றி ஒரு பசை போல உருவாகும். இதை அறிவியலில் 'பெரிகார்டியல் எஃப்யூஷன்' அல்லது 'ப்ளேயுரல் எஃப்யூஷன்' என்பார்கள். ஆக, தண்ணீரும் இரத்தமும் இயேசுவின் இதயத்திலிருந்து வெளியேறுகின்றன.

'தண்ணீரும் இரத்தமும்' என்னும் வார்த்தைகள் 1 யோவா 5:6-8லும் காணக்கிடக்கின்றன. இங்கே, 'நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரெனத் தூய ஆவியார் சான்று பகர்கிறார்' என்கிறார் யோவான். 'நீர்' என்பது 'மண்ணகப் பிறப்பு' அல்லது 'மனிதப் பிறப்புக்குக்' காரணமாக இருக்கும் ஆணின் உயிரணுவையும், 'இரத்தம்' என்பது 'விண்ணகப் பிறப்பு' அல்லது 'இறைப் பிறப்புக்குக்' காரணமாக இருக்கும் ஆண்டவரையும் குறிக்கிறது எனக் கொள்ளலாம்.

இயேசுவில் விண்ணும், மண்ணும் சங்கமிக்கின்றன. இறையியல்பும், மனித இயல்பும் ஒருங்கே பொருந்துகின்றன.

ஆக, இயேசுவின் திருஇருதயம் நமக்குக் கற்றுக்கொடுக்கும் முதல் பாடம், நம் ஒவ்வொருவரிலும் இருக்கும் இரு இயல்புகளையும் கண்டுகொள்வதோடு அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்தல் அவசியம். மனித இயல்பு ஒருபோதும் வெறுக்கத்தக்கது அல்ல.

இதன் பின்புலத்தில்தான், அருள்பணியாளர் திருப்பலியில் இரசத்தை அர்ப்பணம் செய்யும்போது, மனித இயல்பின் அடையாளமாக சில துளிகள் தண்ணீரை பூசைப் பாத்திரத்தில் சேர்க்கிறார். நாம் ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில் அன்றாடம் இறை-மனித இயல்பின் இணைப்பைக் கொண்டாடிவிட்டு, இவ்விரு இயல்புகளையும் நாம் எதிரிகளாகப் பார்ப்பது தவறு இல்லையா?

முதற்குறிப்பில், 'கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்' என்று இயேசு தன்னைக் குறிப்பிடுகின்றார்.

'கனிவு' என்பது 'எனக்கும் பிறருக்கும் உள்ள உறவில்' அவசியமானது. 'மனத்தாழ்மை' என்பது 'எனக்கும் எனக்கும் உள்ள உறவில்' அவசியமானது. 'மனத்தாழ்மை' என்பது 'தாழ்வு மனப்பான்மை' அல்ல. 'தாழ்வு மனப்பான்மையில்' இருப்பவர் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார். அடுத்தவரோடு தன்னை ஒப்பீடு செய்து பொறாமை கொள்வார். அடிக்கடி எரிச்சல் படுவார். எல்லார் மேலும் கோபப்படுவார். எல்லாரையும் கண்டு ஒதுங்குவார். ஆனால், 'மனத்தாழ்மையில் இருப்பவர்' 'உடன்பிறப்பு போன்று ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவார். பிறர் தன்னைவிட மதிப்புக்கு உரியவர் என எண்ணுவார்' (காண். உரோ 12:10). மனத்தாழ்மை உள்ளவர் தன்னுடைய கையறுநிலை, நொறுங்குநிலை, உடைநிலை அனைத்தையும் ஏற்றுக்கொள்வார். கடவுள் முன்னும் மற்றவர் முன்னும் தன்னையே வெறுமையாக்குவார். ஏனெனில், தன்னிடம் உள்ளவை தன்னுடைய இயல்பை ஒருபோதும் கூட்டுவதில்லை என்பது அவருக்குத் தெரியும்.

இவ்வாறாக,

இன்றைய திருநாள் நமக்கு மூன்று பாடங்களைக் கற்றுத்தருகிறது:

அ. நம்மில் இருக்கும் இறை-மனித இயல்பை அடையாளம் கண்டு அதைக் கொண்டாடுதல். இதை அடுத்தவரிடமும் காணுதல். ஆக, நமக்கு அடுத்திருப்பவர் நமக்கு எதிராகத் தவறு செய்தாலும், 'அவர் மனித இயல்பில் செய்துவிட்டார்' என விட்டுவிட நம்மைத் தூண்டும் இப்புரிதல்.

ஆ. கனிவோடு இருத்தல் - எனக்கும் பிறருக்கும் உள்ள உறவில். கனிமொழி கூறல்.

இ. மனத்தாழ்மை கொண்டிருத்தல் - எனக்கும் எனக்குமான உறவில் என்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளுதல்.


Rev. Fr. Yesu Karunanidhi
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!