|
|
22 ஜூன் 2019 |
|
|
பாஸ்கா காலம்
11ம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை
பாராட்டுவேன்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து
வாசகம் 12: 1-10
சகோதரர் சகோதரிகளே, பெருமை பாராட்டுதல் பயனற்றதே. ஆயினும்
பெருமை பாராட்ட வேண்டி இருப்பதால் ஆண்டவர் அருளிய காட்சிகளையும்
வெளிப்பாடுகளையும் குறித்துப் பேசப்போகிறேன். கிறிஸ்துவின் அடியான்
ஒருவனை எனக்குத் தெரியும். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு
ஒரு முறை மூன்றாம் வானம் வரை எடுத்துச் செல்லப்பட்டான். அவன்
உடலோடு அங்குச் சென்றானா, உடலின்றி அங்குச் சென்றானா, யான் அறியேன்.
கடவுளே அதை அறிவார்.
ஆனால் அம்மனிதன் பேரின்ப வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டான்
என்பது எனக்குத் தெரியும். நான் மீண்டும் சொல்கிறேன்; அவன் உடலோடு
அங்குச் சென்றானா அல்லது உடலின்றி அங்குச் சென்றானா, யான் அறியேன்.
கடவுளே அதை அறிவார். அவன் அங்கே மனிதரால் உச்சரிக்கவும் சொல்லவும்
முடியாத வார்த்தைகளைச் சொல்லக் கேட்டான். இந்த ஆளைப் பற்றியே
நான் பெருமை பாராட்டுவேன். என் வலுவின்மையே எனக்குப் பெருமை.
அப்படி நான் பெருமை பாராட்ட விரும்பினாலும் அது அறிவீனமாய் இராது.
நான் பேசுவது உண்மையாகவே இருக்கும்.
ஆயினும் என்னிடம் காண்பதையும் கேட்பதையும்விட உயர்வாக யாரும்
என்னைக் கருதாதபடி நான் பெருமை பாராட்டாது விடுகிறேன். எனக்கு
அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு
பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள்போல் என்னை வருத்திக்
கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்தச்
சாத்தான் அனுப்பிய தூதனைப்போல் இருக்கிறது. நான் இறுமாப்பு அடையாது
இருக்கவே இவ்வாறு நடக்கிறது. அதை என்னிடமிருந்து
நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன்.
ஆனால் அவர் என்னிடம், "என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான்
வல்லமை நிறைவாய் வெளிப்படும்" என்றார்.
ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை
பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும்.
ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும்
நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில்
நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
34: 7-8. 9-10. 11-12 (பல்லவி: 8a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று
காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப்
பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி
9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு
எக்குறையும் இராது. 10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி
இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும்
குறையாது. பல்லவி
11 வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப்
பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன். 12 வாழ்க்கையில் இன்பம் காண
விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா?
பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
2 கொரி 8: 9
அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராய்
இருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வர் ஆகுமாறு உங்களுக்காக
ஏழையானார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-34
அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: "எவரும் இரு தலைவர்களுக்குப்
பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம்
அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப்
புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை
செய்ய முடியாது.
ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உயிர் வாழ எதை உண்பது, எதைக்
குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை
கொள்ளாதீர்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?
வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதும் இல்லை; அறுப்பதும்
இல்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் இல்லை. உங்கள் விண்ணகத்
தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்
அல்லவா!
கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட
முடியும்? உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டு
மலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதும்
இல்லை, நூற்பதும் இல்லை. ஆனால் சாலமோன்கூடத் தம் மேன்மையில் எல்லாம்
அவற்றில் ஒன்றைப்போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச்
சொல்கிறேன். நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து
நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப் புல்லுக்குக் கடவுள்
இவ்வாறு அணி செய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாய்ச்
செய்ய மாட்டாரா? ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்?
எனக் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் பிற இனத்தவரே இவற்றை எல்லாம்
நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத்
தெரியும்.
ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும்
நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக்
கொடுக்கப்படும்.
ஆகையால் நாளைக்காகக் கவலைப் படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப்
போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள
தொல்லையே போதும்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
கவலை நம்மை தற்போதைய நிலையில் வாழ விடாது செய்கின்றது என்பதுவே
உண்மை.
ஆனாலும் யாருமே கவலைப்படாது வாழ்வதில்லை என்பதுவே உண்மை.
இந்த நிலையில் கவலைப்படாதீர்கள் என்கிற இந்த வார்த்தை நமக்கு
சொல்லும் செய்தி என்ன?
நிம்மதியாய் வாழ்வதற்கு அன்றன்றைய தொல்லைகளே போதுமானது. அந்த
கவலைகளே நம்மை நிம்மதி இழக்கச் செய்கின்றது என்பது உண்மை. அடுத்த
நாளைக்குரிய கவலைகள் நம்மை இன்று வாழவிடாது செய்கின்றது என்பதால்,
இன்றைக்கு வாழ்வது எப்படி என அறிந்து, அது தரும் கவலைகளை
தீர்க்க வழி தேடி வாழ்வது நம்மை அன்றாடம் வாழச் செய்யும்.
இத்தகைய அன்றாட வாழ்வுக்கு நாம் இறைவனை நம்பி வாழ்ந்திடல்
வேண்டும் என்கிற அழைப்பையும் தருகின்றார். அவர் தந்த வாழ்வில்
சந்திக்கும் சவால்களை வெற்றி கொள்ள அவருடைய துணையாலேயே கூடும்
என்பதனை அறிந்தவர்கள் வாழ்விலே வெற்றி பெற்றவர்களாவார்கள்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
2
கொரிந்தியர் 12: 1-10
வலுவின்மையின்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்
நிகழ்வு
இளைஞர் ஒருவர் ஒரு கிராமத்தின்
வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அந்தக் கிராமத்தின்
நுழைவாயில் அருகே ஒரு பெரிய கல் கிடந்தது. அதுவரை அவர் அந்த
மாதிரியான கல்லைப் பார்த்ததே கிடையாது. அந்தக் கல்லைப் பார்ப்பதற்கு
மிகவும் உருண்டையாகவும் பளபளப்பாகவும் அழகாகவும் இருந்தது.
உடனே அந்த இளைஞர்க்கு கல்லைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்
என்ற ஆர்வம் ஏற்பட்டது. அப்பொழுது அந்த வழியாகப் பெரியவர் ஒருவர்
சென்றுகொண்டிருந்தார். அவரை அழைத்த இளைஞர், "ஐயா! இந்த கல்லைப்
பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்... தயவுசெய்து இதைப் பற்றிச்
சொல்லமுடியுமா?" என்று கேட்டார். அதற்கு அந்தப் பெரியவர்,
"இதற்குப் பெயர் இளவட்டக் கல். அருட்சாதனம்
செய்துகொள்ளும் ஒவ்வோர்
ஆண்மகனும் இந்தத் கல்லைத் தன் தோள்மேல் தூக்கி, பின்பக்கமாகப்
போடவேண்டும். அப்பொழுதுதான் அவர்க்கு அருட்சாதனம்
செய்துவைக்கப்படும்"
என்றார்.
"என்ன! இந்தக் கல்லைத் தூக்கித் தோள்மேல் வைத்து, பின்னால்
போடுவேண்டுமா? அப்படியானால் இந்தக் கிராமத்தில் யார்க்கும்
அருட்சாதனம்
நடக்காது போலிக்கின்றது! என்றார் இளைஞர். "நான்
சொன்னது முன்பிருந்த வழக்கம். இப்போது வேறொரு வழக்கத்தைக்
கடைப்பிடிக்கின்றார்கள்" என்றார் பெரியவர். "அப்படியென்ன புதிய
வழக்கத்தைப் பின்பற்றுகின்றார்கள். அதைப் பற்றிச் சொல்லுங்கள்"
என்று இளைஞர் பெரியவரை அவசரப்படுத்த, அவர் அந்த இளைஞரிடம்,
"இப்போது யாராலும் இந்தக் கல்லைத் தன் தோள்மேல் வைத்துக்
பின்பக்கமாகப் போடமுடியாது என்பதால், அருட்சாதனம்
முடிக்கப்போகும்
ஒவ்வோர் ஆண்மகனும் இந்தக் கல்லை மூன்றுமுறை சுற்று சுற்றி
வந்தாலே போதும் என்ற வழக்கத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள்"
என்றார்.
இதைக் கேட்ட அந்த இளைஞர், 'நம்முடைய இயலாமையைக் கண்டு இறைவன்
இறங்குவதுபோல், இந்த ஊரில் இருக்கும் பெரியவர்கள் இங்குள்ள
இளைஞர்கள் அருட்சாதனம்
செய்துகொள்வதற்கான வழியை
இலகுவாக்கியிருக்கின்றார்களோ' என்று நினைத்துக்கொண்டு, அந்தப்
பெரியவர்க்கு நன்றி சொல்லிவிட்டுத் தன் வழியில் நடந்து
சென்றார்.
உண்மைதான் கடவுள் நம் ஒவ்வொருவருடைய இயலாமையை/ வலுவின்மையைக்
கண்டு இரக்கம் கொள்கின்றார். அதைத்தான் இன்றைய முதல் வாசகம்
எடுத்துச் சொல்கின்றது. அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப்
பார்த்து நிறைவுசெய்வோம்.
பவுலின் உடலில் தைத்துக்கொண்டிருந்த முள்
இன்றைய முதல் வாசகத்தில்
பவுல், கொரிந்து நகர மக்களிடம், தன்னுடைய உடலில் முள் ஒன்று
தைத்துக்கொண்டு இருப்பதாகவும அதைத் தன்னிடமிருந்து
அகற்றிவிடுமாறு ஆண்டவரிடம் மூன்றுமுறை மன்றாடியதாகவும்
கூறுகின்றார். இங்கு பவுல் குறிப்பிடுகின்ற 'உடலில் தைத்த
முள்' எது என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும்
இன்றியமையாததாகும்.
ஒருசில விவிலிய அறிஞர்கள், பவுல் தன்னுடைய உடலில் தைத்த முள்
என்று குறிப்பிடுவதை அவருடைய நாவமையற்றதன்மையாக (2 கொரி 11: 6)
இருக்கலாம் என்று குறிப்பிடுவர். இன்னும் ஒருசிலர் அவருடைய
உடலில் ஏற்பட்ட ஏதோவொரு குறைபாடாக இருக்கலாம் என்று
குறிப்பிடுவர். அப்படிப்பட்ட குறைபாட்டினை பவுல், 'சாத்தான்
அனுப்பிய தூதன்' என்றுகூட குறிப்பிடுகின்றார். உண்மையில்
பவுலின் உடலில் தைத்த முள் எதை உணர்த்துகின்றது என்பதைக்
குறித்து சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
பவுலின் வலுவின்மையில் வெளிப்பட்ட கடவுளின் வல்லமை
பவுல் தன்னுடைய உடலில்
தைத்த முள்ளை, சாத்தான் அனுப்பிய தூதனாகவே, தொடக்கத்தில்
நினைத்துக்கொண்டிருந்தார். அதன்பின்னர் அவர் அது சாத்தான்
அனுப்பிய தூதன் அல்ல, கடவுளின் அருள் வெளிப்படுத்துவதற்காகக்
கொடுக்கப்பட்ட கொடை என்பதை உணர்ந்துகொள்கின்றார். இதை வேறு
வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், பவுல் தன்னுடைய உடலில்
தைத்த முள்ளைக் கடவுள் நீக்கவேண்டும் என்று மன்றாடியபோது,
கடவுள் அவரிடம், "என் அருள் உனக்குப் போதும்;
வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்" என்கின்றார்.
ஆண்டவர் பவுலிடம் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகள் ஓர் உண்மையை மிக
அழகாக எடுத்துக் கூறுகின்றது. அது என்னவெனில், நாம் நம்மிடம்
இருக்கும் குறைப்பாடுகளை நினைத்து, வருந்திக் கொண்டிருக்காமல்,
அவற்றைக் கடவுளின் அருள் வெளிப்படும் சாதனங்களாக உணர்ந்து,
கடவுள் நம்மிடம் ஒப்படைத்திருக்கும் பணியைச் சிறப்பாகச்
செய்வது நல்லது.
சிந்தனை
'நம் தலைமைக் குரு நம்முடைய
வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல, மாறாக,
எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்' (எபி 4:15)
என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகவே, நம்முடைய
வலுவின்மையில் நமக்குத் துணையாக வரும், நம்முடைய வலுவின்மையை
வல்லமையாக மாற்றும் இறைவன்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய
வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 6: 24-34
கடவுளைப் பற்றிக்கொண்டு கவலையை விட்டொழி
நிகழ்வு
குரு ஒருவர் இருந்தார். அவர்க்கு ஏராளமான சீடர்கள்
இருந்தார்கள். ஒருநாள் குரு தன் சீடர்கட்குப் போதித்துக்
கொண்டிருக்கும்பொழுது சீடர் ஒருவர் எழுந்து, "குருவே! எனக்கு
அடிக்கடி மனக்கவலைகள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து
என்னால் மீளவும் முடியவில்லை. அந்தக் கவலைகளிலிருந்து
மீள்வதற்கு எனக்கொரு வழி சொல்லுங்கள்" என்றார். உடனே குரு
அவரிடம், உனக்கு ஏற்படுகின்ற மனக்கவலையிலிருந்து மீள்வதற்கான
வழியை ஒரு கதை வழியாகச் சொல்கிறேன், கேள்" என்று
சொல்லிவிட்டுக் கதையைத் தொடர்ந்தார்.
ஒரு காட்டில் குரங்குக் கூட்டம் ஒன்று இருந்தது. அக்குரங்குக்
கூட்டத்தில் ஒரு சுட்டிக் குரங்கும் இருந்தது. ஒருநாள் அது
காட்டில் தனியாக அலைந்துகொண்டிருந்தபோது, பாம்பு ஒன்றைக்
கண்டது. உடனே அது அந்தப் பாம்பை தன் கையில் பிடித்துக்கொண்டு
விளையாடத் தொடங்கியது. சிறிதுநேரத்திற்குப் பிறகுதான்
தெரிந்தது, அது சாதாரண பாம்பு இல்லை, விஷப்பாம்பு என்று. எனவே,
அது அந்தப் பாம்பை கீழே விட்டுவிட்டு ஓடிவிடலாம் என்று
முடிவுசெய்தது. அதேநேரத்தில் அதற்கு, 'இந்தப் பாம்பைக் கீழே
விட்டால், அது நம்மைக் கொத்திவிடும்' என்ற பயம் அதைத்
தொற்றிக்கொண்டது. இதனால் அது அந்தப் பாம்பைத் தன் கையில்
கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அப்படியே இருந்தது.
அந்நேரத்தில் அந்த சுட்டிக் குரங்கினுடைய கூட்டத்தைச் சார்ந்த
ஏனைய பெரிய குரங்குகளெல்லாம் அந்த வழியாக வந்தன. அவற்றிடம் அது
உதவி கேட்க, அவைகளோ, "எங்களால் உன்னைக் காப்பாற்ற முடியாது,
அப்படியே நாங்கள் உன்னைக் காப்பற்றினோமெனில், அது எங்களுடைய
உயிர்க்குத் தான் ஆபத்து" என்று சொல்லிவிட்டுக் கடந்துபோயின.
அவை அங்கிருந்து போகிறபோதே, "இவனுக்கு இதுவும் இன்னமும்
வேண்டும்" என்று சொல்லிவிட்டுக் கடந்துபோயின.
'தன்னுடைய இனத்தைச் சார்ந்த குரங்குகளே தன்னைக்
காப்பாற்றவில்லையே' என்று அந்த சுட்டிக் குரங்கிற்குப் பெரிய
வருத்தமாக இருந்தது. இருந்தாலும் பிடியைத் தளர்த்திவிட்டால்
பாம்பு தன்னைக் கொத்திவிடும் என்ற பயத்தில் இன்னும் இறுகப்
பிடித்துக்கொண்டது. நேரம் ஆக ஆக, அது மிகவும் களைப்படையத்
தொடங்கியது. நா வேறு வறண்டுபோனது. இந்த நேரத்தில் அந்த வழியாக
ஒரு ஞானி வந்தார். அவரிடம் உதவிகேட்கலாம் என்று அந்த
சுட்டிக்குரங்கு ஞானியைப் பார்த்துக் கையசைத்தது. ஞானியும்
குரங்கு தன்னை நோக்கிக் கையசைப்பதைப் பார்த்துவிட்டு அதனருகே
வந்தார்.
"ஐயா! என்னுடைய கையிலுள்ள இந்தப் பாம்பைத் தெரியாமல்
பிடித்துவிட்டேன். இப்பொழுது இதிலிருந்து தப்பிப்பதற்கு எனக்கு
வழிதெரியவில்லை. உங்கட்கு ஏதாவது வழி தெரிந்தால், அதைச்
சொல்லுங்கள்" என்று அந்த சுட்டிக்குரங்கு மிகவும் பாவமாகக்
கேட்டது. உடனே ஞானி அந்தக் குரங்கிடம், "இந்தப்
பாம்பிடமிருந்து தப்பிக்கவேண்டும் என்றால், அதைக் கீழே
விட்டுவிடு" என்றார். "பாம்பைக் கையிலிருந்து கீழே
விட்டுவிட்டால், அது என்னைக் கொத்திவிடுமே!. அப்பொழுது நான்
என்ன செய்வது? என்று கேட்டது குரங்கு. "ஐயோ! அந்தப் பாம்பு
செத்துப் பலமணிநேரம் ஆகிவிட்டது. அதனால் பயப்படாமல்
கீழேவிட்டுவிடு" என்றார். ஞானி. அவர் இவ்வாறு சொன்னபின்புதான்
குரங்கு தன் கையில் இருந்த பாம்பை உற்றுக் கவனித்தது.
அப்பொழுதுதான் பாம்பு செத்து பலமணிநேரம் ஆகிவிட்டது என்ற உண்மை
அதற்கு விளங்கியது.
இந்த நிகழ்வைச் சொல்லிவிட்டு குரு தன்னுடைய சீடரிடம் சொன்னார்,
"எப்படி அந்தக் குரங்கு தன் கையில் பிடித்துவைத்திருந்த பாம்பை
விட்டுவிட்டு உயிர் பயத்திலிருந்து மீண்டதோ, அதுபோன்று
உன்னுடைய மனக்கவலையிலிருந்து மீளவேண்டும் என்றால், அதை
அப்படியே வைத்திருக்காமல், உதறித் தள்ளிவிடுவதே சிறந்தது."
கவலையிலிருந்து மீள்வதற்கு மிகச் சிறந்த வழி, அதை மனத்திற்குள்
வைத்துக்கொண்டு வருந்திக்கொண்டிருக்காமல், உதறித்தள்ளுவதே
சிறந்தது என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது
சிந்தனைக்குரியது.
கவலைகள் மறைய இயேசு சொல்லும் மூன்று முத்தான வழி
நற்செய்தியில் இயேசு மனிதர்க்கு வரும் கவலைகளிலிருந்து விடுபட
மூன்று முத்தான வழிகளைச் சொல்கின்றார். அதில் முதலாவது வழி,
கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை வைப்பது. வானத்துப் பறவைகள்,
காட்டு மலர்செடிகள் கடவுள்மீது நம்பிக்கையோடு இருப்பதால் அவை
கவலையில்லாமல், மகிழ்ச்சியாக இருக்கின்றன. மனிதர்களாகிய நாமும்
கடவுளின் பாராமரிப்பில் நம்பிக்கை வைத்தால் எதைக் குறித்தும்
கவலைப்படத் தேவையில்லை. கவலையிலிருந்து மீள்வதற்கு இயேசு
சொல்லும் இரண்டாவது வழி, கடவுட்கு ஏற்புடைய காரியங்களை முதலில்
நாடுவது. எவர் கடவுட்கு உகந்த காரியங்களை முதலில்
நாடுகின்றார்களோ, அவர்களைக் கடவுள் பார்த்துக் கொள்வார்.
அதனால் அவர்கள் எதற்கும் கவலைப்படவேண்டிய தேவையில்லை.
கவலையிலிருந்து மீள இயேசு சொல்லும் மூன்றாவது வழி,
நிகழ்காலத்தில் வாழ்வது ஆகும். பலர் கடந்த காலத்தையும்
எதிர்காலத்தையும் குறித்துக் கவலைப்
பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய சூழலில் நிகழ்காலத்தில்
வாழ்வதன் மூலம் கவலையிலிருந்து மீண்டுவிடலாம் என்று இயேசு
மிகவும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார். நாம்
நிகழ்காலத்தில் வாழவேண்டும் என்பதற்கு இன்னொரு காரணமும்
இருக்கின்றது. அது என்னவெனில், நம்முடைய கடவுள் வாழ்வோரின்
கடவுள் (விப 3:14). ஆகவே, நாம் நிகழ்காலத்தில் வாழக்
கற்றுக்கொண்டோம் என்றால், கவலையிலிருந்து எளிதாக மீண்டுவிடலாம்
என்பது உறுதி.
சிந்தனை
'உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனெனில்,
அவர் உங்கள்மேல் கவலையாக இருக்கிறார்' (1பேது 5:7) என்பார்
பேதுரு. ஆகையால், ஆண்டவர் நமக்குத் துணையிருக்கின்றார்,
நம்மைப் பராமரிக்கின்றார் என்ற நம்பிக்கையில் அவரிடம் நம்முடைய
கவலைகளை இறக்கிவைத்துவிட்டு, அவர்க்கு உகந்ததை நாடுவோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
|
|