|
|
21 ஜூன் 2019 |
|
|
பாஸ்கா காலம்
11ம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
எல்லாத் திருச்சபைகளைப் பற்றிய கவலை எனக்கு அன்றாடச்
சுமையாயிருந்தது.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து
வாசகம் 11: 18,21b-30
சகோதரர் சகோதரிகளே, பலர் உலகு சார்ந்த முறையில் பெருமையடித்துக்
கொள்வதால் நானும் அவ்வாறே செய்கிறேன். அவர்கள் எதில் பெருமை
பாராட்டத் துணிகிறார்களோ அதில் நானும் பெருமை பாராட்டத்
துணிந்து நிற்கிறேன். இப்போதும் ஓர் அறிவிலியைப் போன்றே
பேசுகிறேன். அவர்கள் எபிரேயரா? நானும்தான்; அவர்கள் இஸ்ரயேலரா?
நானும்தான்; அவர்கள் ஆபிரகாமின் வழிமரபினரா? நானும்தான். அவர்கள்
கிறிஸ்துவின் பணியாளர்களா? நான் அவர்களை விடச் சிறந்த பணியாளனே.
இங்கும் நான் ஒரு மதியீனனாகவே பேசுகிறேன். நான் அவர்களை விட அதிகமாய்ப்
பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய்
அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்து முறை யூதர்கள்
என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள்.
மூன்று முறை தடியால் அடிபட்டேன்; ஒரு முறை கல்லெறி பட்டேன்;
மூன்று முறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில்
அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்; அவற்றில் ஆறுகளாலும்
இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள்,
பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும்
இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர் களாலும்
இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். பாடுபட்டு
உழைத்தேன்; பன்முறை கண் விழித்தேன்; பசி தாகமுற்றேன்; பட்டினி
கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன். இவை தவிர
எல்லாத் திருச்சபைகளையும் பற்றிய கவலை எனக்கு அன்றாடச்
சுமையாயிருந்தது. யாராவது வலுவற்றிருந்தால் நானும் அவரைப் போல்
ஆவதில்லையா? யாராவது பாவத்தில் விழ நேர்ந்தால் என்உள்ளம்
கொதிப்பதில்லையா? நான் பெருமை பாராட்ட வேண்டும் என்றால் என்
வலுவின்மையைப் பற்றியேதான் நான் பெருமை பாராட்ட வேண்டும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
34: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 17b)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் இடுக்கண்ணினின்று நீதிமான்களை
விடுவிக்கின்றார்.
1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ்
எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப்பற்றிப்
பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.
பல்லவி
3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை
ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை
மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான
அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி
5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;
அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை
கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா
நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 5: 3
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்;
ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும்
இருக்கும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 19-23
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "மண்ணுலகில்
உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே
பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக்
கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள்
செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ
அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. உங்கள்
செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல்
முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால், உங்கள்
உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக, உங்களுக்கு ஒளி
தரவேண்டியது இருளாய் இருந்தால் இருள் எப்படியிருக்கும்!''
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
இன்று இரண்டு சிந்தனை வழங்கப்படுகின்றது.
செல்வம் குறித்து கூறுகின்றார். கண்
குறித்தும்
கூறுகின்றார்.
விண்ணுலக செல்வம், மண்ணுலக செல்வம். மண்ணுலக செல்வத்தை காணும்
மக்கள் அதனின் பலனை அனுபவித்து சுகம் தேடுவதால், அதனை அடைய
தீவிர முயற்சி செய்கின்றனர். விண்ணுலக செல்வத்தை காண இயலாது,
அதனை வாழும் காலத்தில் அனுபவிக்க இயலாததால், அதனை தேடுவதும்
குறைவுபடுகின்றது.
இதற்கு மனிதர்கள் மண்ணுலக வாழ்வு நிரந்தரமானது அல்ல, விண்ணுலக
வாழ்வே நிரந்தரமானது என்பதனை புரிந்து கொண்டால் மாத்திரமே,
வாழும் போது புண்ணியங்களை செய்து விண்ணுலகில் செல்வம் சேர்க்க
விரும்புவார்கள்.
கண் உடலுக்கு விளக்கு என்ற சிந்தனையும் அற்புதமானது. கண்ணொளி
பெற்றாலேயே, சிந்தனையும், செயலும் சீர்படும்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
2 கொரிந்தியர் 11: 18,
21-30
எல்லாத் திருஅவைகளையும் பற்றிய கவலைஎனக்கு அன்றாடச் சுமையாயிருக்கின்றது
நிகழ்வு
அது ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் இருந்த எல்லாரும்
மாலைவேளையானதும் தங்களுடைய வீட்டுக்கு முன்பாக இருந்த
முற்றத்தில் அமர்ந்து பேசிக்கொண்டும் சிரித்து
மகிழ்ந்துகொண்டும் இருந்தார்கள்.
அந்த நேரத்தில் பெரியவர் ஒருவர் தன்னுடைய முதுகில் ஒரு பெரிய
மூட்டையை வைத்துக்கொண்டு, ஒரு தெரு வழியாகச் சுமக்க முடியாமல்
சுமந்துகொண்டு வந்தார். இதைக் கவனித்த அந்தத் தெருவில் இருந்த
இரண்டு இளைஞர்கள் அவரருகில் சென்று, "ஐயா! இந்தச் சுமையை
எங்களிடம் கொடுங்கள். நாங்கள் அதைச் சுமந்துகொண்டு
வருகின்றோம்" என்றார்கள். அதற்கு அந்தப் பெரியவர்,
"பரவாயில்லை. உங்கட்கு எதற்கு சிரமம்! நானே அதைச்
சுமந்துகொள்கிறேன்" என்று சொல்லிக்கொண்டு தொடர்ந்து நடந்து
சென்றார்.
அந்த இரண்டு இளைஞர்களும் விடாமல் அவரிடம், "ஐயா! உங்களைப்
பார்ப்பதற்குப் பாவமாக இருக்கின்றது. அதனால் தயவுசெய்து
எங்களிடம் கொடுங்கள். நாங்கள் அதைச் சுமந்து வருகின்றோம்"
என்று வற்புறுத்திக் கேட்கவே, வேறு வழியில்லாமல், அவர்
அவர்களிடம் அந்தச் சுமையைக் கொடுத்தார். அந்த சுமையைப்
பெற்றுக்கொண்ட அவர்கள் இருவரும் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்.
ஏனெனில், அவர்கள் நினைத்த அளவுக்கு அந்தச் சுமை அவ்வளவு பாரமாக
இல்லை.
'ஐயா! பெரியவரே! இந்த மூட்டையில் அப்படி என்ன
வைத்திருக்கிறீர்கள்...? எடை மிகவும் குறைவாக இருக்கின்றதே"
என்றார்கள். "அதுவா தம்பிகளா! கோழி இறகுகள்" என்றார் பெரியவர்.
"நாங்கள் ஏதோ நீங்கள் கனமான பாத்திரங்களை வைத்து,
சுமந்துகொண்டு வருவதாக அல்லவா நினைத்தோம். வெறும் கோழி
இறங்குதானா... இதையா நீங்கள் இவ்வளவு கஷ்டப்படுத்துத்
தூக்கிக்கொண்டு வந்தீர்கள்" என்றார் அந்த இளைஞர்களில் ஒருவர்.
பெரியவரால் எதுவும் பேசமுடியவில்லை.,
இந்த நிகழ்வில் வரும் பெரியவரைப் போன்றுதான் பலரும் ஒரு சாதாரன
விடயத்திற்குக்கூட பெரிதாகக் கவலைப்பட்டுக் கொண்டிருகிறார்கள்.
இதற்கு முற்றிலும் மாறாக எது முக்கியமானதோ அதற்குக்
கவலைப்படுகின்ற ஒருவரைக் குறித்து இன்றைய முதல் வாசகம்
எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
எல்லாத் திருஅவைகளையும் பற்றிக் கவலைப்பட்ட பவுல்
இன்றைய முதல் வாசகம், பவுல் எல்லாத் திருஅவைகளையும் குறித்து
கவலை கொள்வதைக் குறித்துப் பதிவுசெய்கின்றது. இன்றைக்கு
இருக்கின்ற மனிதர்கள் எவை எவையெல்லாம் பற்றியோ கவலைப்பட்டுக்
கொண்டிருக்கின்றார்கள். நற்செய்தியில் இயேசு குறிப்பிடுவது போல
(மத் 6: 25-34) உணவிற்காகவும் உடைக்காகவும் இன்ன
பிறவற்றிற்காகவும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இத்தகையோர்க்கு மத்தியில் பவுல் திருஅவைக்காகக்
கவலைப்படுகின்றார். பவுல் எல்லாத் திருஅவைகளையும் குறித்துக்
கவலைகொள்கிறார் எனில், அவர் கவலைகொள்ளும் அளவுக்கு அப்படியென்ன
பிரச்சினை நடந்தது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பவுல் எல்லாத் திருஅவைகளையும் குறித்துக் கவலைகொள்வதற்கு மிக
முக்கியமான காரணம், போலி இறைவாக்கினர்கள் அல்லது போலிப்
போதகர்கள் திருஅவைக்குள் நுழைந்து, தவறான போதனைகளால் மக்களைத்
திசைதிருப்பப் பார்த்தார்கள் என்பதாகும். திருஅவையில் இருந்த
ஒருசில உறுப்பினர்களும் அவர்களுடைய போதனைகட்கு/ பசப்பு
வார்த்தைகட்கு மயங்கி, அவர்கள் விரித்த வலையில் விழுந்தார்கள்.
இதனால்தான் பவுல் எல்லாத் திருஅவைகளின் மீதும்
கவலைகொள்கின்றார். அதுமட்டுமல்லமால், அவ்வாறு இருப்பதைக்
குறித்துப் பெருமை பாராட்டுகின்றார்.
நம்மீது கவலைகொள்ளும் ஆண்டவர்
பவுல் எல்லாத் திருஅவைகளின்மீதும் கவலைகொண்டார் என்பதைக்
குறித்துச் சிந்தித்துப் பார்க்கும் இவ்வேளையில், அவர் கொண்ட
கவலை எத்துனை ஆர்த்மார்த்தமானது என்பதைப் புரிந்துகொள்வதற்கு,
பேதுரு எழுதிய முதல் திருமுகம் ஒன்றாம் ஐந்தாம் அதிகாரத்தில்
இடம்பெறும், "உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள்.
ஏனென்றால், அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார்" (1 பேது 5:7)
என்ற வார்த்தைகளை இணைந்துச் சிந்தித்துப் பார்ப்பது மகிவும்
நல்லது.
இங்கு ஆண்டவராகிய கடவுள் நம் ஒவ்வருவர்மீதும்
கவலைகொண்டிருக்கின்றார் என்றால், நாம் நம்முடைய
வாழ்விலிருந்தும் தீமைகளை அகற்றி, நல்லவழியைத்
தேர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் கவலைகொள்கின்றார்.
இத்தகைய கவலையைத்தான் பவுல் எல்லாத் திருஅவைகளின்மீதும்
கொண்டிருந்தார். ஆகவே, பவுலைப் போன்று, ஆண்டவரைப் போன்று
நம்மோடு வாழ்வோர்மீது உண்மையான அக்கறை கொண்டு அல்லது
கவலைகொண்டு, அவர்கள் ஆண்டவரிடம் திரும்பிவர நம்மாலான
முயற்சிகளை மேற்கொள்வோம்.
சிந்தனை
'இயேசு அங்கு சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு
அவர்கள்மீது பரிவுகொண்டார்' (மத் 14: 14) என்கின்றது
இறைவார்த்தை. இயேசு மக்கள்மீது பரிவுகொண்டார் என்பதை, அவர்
அவர்கள்மீது கவலை கொண்டார் என்று சொல்லலாம். பவுலும்
அப்படித்தான் எல்லாத் திருஅவைகளின்மீதும் கவலைகொண்டார். நாமும்
நம்மோடு வாழ்பவர்கள்மீது கவலைகொண்டு, அவர்கட்கு வேண்டியதைச்
செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 6: 19-23
எது நிலையான செல்வம்
நிகழ்வு
ஒரு நகரில் வைர வியாபாரி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர்
தன்னிடமிருந்த வைரங்களையெல்லாம் விற்றுப் பணமாக்க
விரும்பினார். எனவே, அவர் பக்கத்து நகரில் இருந்த, தனக்கு
நன்கு அறிமுகமான ஒரு பணக்காரரிடம் சென்று, தன்னிடமிருந்த
வைரங்களையெல்லாம் கொடுத்துவிட்டு, அதற்கு இணையான பணத்தை
வாங்கி, ஒரு மரப்பெட்டியில் வைத்துக்கொண்டு, யார்க்கும்
தெரியாமல் இருக்க, ஒரு காட்டுப்பாதை வழியாக வீட்டிற்குத்
திரும்பி வந்துகொண்டிருந்தார்.
அவர் திரும்பி வரும் வழியில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது.
அப்பொழுது தண்ணீர் குறைவாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. எனவே
அவர், 'ஆற்றில் தண்ணீர் குறைவாகத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றது.
பணம் இருக்கின்ற இந்த மரப்பெட்டியை அப்படியே தலையில்
வைத்துக்கொண்டு மெல்ல நடந்து சென்றால், பத்திரமாக ஆற்றைக்
கடந்து, வீட்டை அடைந்துவிடலாம்' என்று யோசிக்கத் தொடங்கினார்.
அதன்படி அவர் பணம் இருந்த மரப்பெட்டியைத் தன் தலையில் தூக்கி
வைத்துக்கொண்டு, ஆற்றில் மெல்ல நடந்துசென்றார்
அவர் ஆற்றில் பாதிதூரம் சென்றிருப்பார். அப்பொழுது ஆற்றில்
நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கவே, அவர் நிலைதடுமாறி, தன்னுடைய
தலையில் வைத்திருந்த பணபெட்டியை நழுவவிட்டார். இதனால் அவருடைய
பணப்பெட்டி ஆற்று வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போனது. அவரோ
"ஐயோ! என்னுடைய பணப்பெட்டி போகிறதே, பணப்பெட்டி போகிறதே" என்று
சத்தமாகக் கத்தத் தொடங்கினார். இதை அந்த வழியாக வந்த ஓர்
இளைஞன், 'யாரோ ஒருவர் தன்னுடைய பணப்பெட்டியை ஆற்றுக்குள்
தவறவிட்டுவிட்டார் போலும்' என நினைத்துக்கொண்டு, ஆற்று
வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட பணப்பெட்டியை வேகமாக
நீந்திச்சென்று எடுத்துக்கொண்டு கரை ஏறினான்.
பின்னர் அவன் அந்த பணப்பெட்டிக்குச் சொந்தக்காரர்
எங்கிருக்கின்றார் என்று சுற்றும் முற்றும் தேடினான். நீண்ட
நேரமாகத் தேடியும் அவனுக்கு அந்தப் பணப்பெட்டிக்குச்
சொந்தக்காரர் கண்ணில் தட்டுப்படாமல்போகவே, அவன் மனதிற்குள்
நினைத்துக்கொண்டான், 'இந்தப் பணப்பெட்டியின் உரிமையாளர் 'ஆறு
என்னை இழுத்துச் செல்கின்றது, என்னைக் காப்பாற்றுங்கள் என்று
கத்தியிருந்தால் கூட, அவரைக் காப்பாற்றியிருக்கலாம். பாவம்,
'என்னுடைய பணப்பெட்டி போகிறதே' என்று கத்தியதால்தான், அவருடைய
பணப்பெட்டியைக் காப்பாற்ற முடிந்தது என்று அவருடைய நிலையை
நினைத்து நொந்துகொண்டான்.
பணம் பணம் என்று அலைவோருடைய வாழ்வு கடைசியில் எப்படி
முடிகின்றது என்பதை இந்த நிகழ்வானது மிக அருமையாக எடுத்துச்
சொல்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவும்
பணத்தில்தான் விளையும் தீமையைக் குறித்து, விண்ணுலகில் செல்வம்
சேர்த்து வைப்பதன் முக்கியத்துவத்தையும் குறித்துப்
பேசுகின்றார். நாம் அவற்றைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப்
பார்த்து நிறைவுசெய்வோம்.
கண்ணியில் சிக்கிக்கொள்ளும் செல்வம் சேர்ப்போர்
நற்செய்தியில் இயேசு, மண்ணுலகில் செல்வத்தை சேர்த்து
வைக்கவேண்டாம் என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் ஆழமாக
சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன.
மண்ணுலகில் செல்வம் சேர்த்து வைக்கவேண்டாம் என்று இயேசு
சொல்வதை, செல்வமே சேமிக்கவேண்டாம் என்று புரிந்துகொள்வதை
விடவும், செல்வம் சேர்ப்பதிலேயே வாழ்வைச் சிதைத்துக்
கொள்ளவேண்டாம் என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம். இயேசுவின்
இவ்வார்த்தைகளை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு, பவுல்
திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் மடலில் கூறுகின்ற வார்த்தைகளை
இங்கு இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் இன்னும் நன்றாக
இருக்கும்.
"செல்வத்தைச் சேர்க்க விரும்புகிறவர்கள் சோதனையான கண்ணியில்
சிக்கிக் கொள்கிறார்கள். அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய
பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை
மனிதரைக் கேட்டிலும் ஆபத்திலும் ஆழ்த்துபவை (1 திமொ 6:9).
பவுலின் இவ்வார்த்தைகள் செல்வம் சேர்ப்பதில் உள்ள தீமையை
அப்படியே எடுத்துச் சொல்கின்றன. இவ்வாறு செல்வம் சேர்ப்பதிலேயே
குறியாய் இருப்பவர்கள் இத்தகைய அழிவுக்கு ஆளாவார்கள்
என்பதால்தான் இயேசு, மண்ணுலகில் அல்ல, விண்ணுலகில் உங்கள்
செல்வத்தைச் சேர்த்து வையுங்கள் என்று குறிப்பிடுகின்றார்.
விண்ணுலகில் எப்படிச் செல்வத்தைச் சேர்த்து வைப்பது?
நற்செய்தியில் இயேசு, (மண்ணுலகில் அல்ல) விண்ணுலகில்
செல்வத்தைச் சேர்த்து வையுங்கள் என்று சொல்வதை எப்படிப்
புரிந்துகொள்வது என்று இப்பொழுது பார்ப்போம். பவுல்
கொரிந்தியர்க்கு எழுதிய முதல் திருமடலில், நீங்கள் உண்டாலும்
குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய
மாட்சிக்காகச் செய்யுங்கள்' என்று குறிப்பிடுவார் (1கொரி 10:
31) இந்த இறைவார்த்தையையும் திருவெளிப்பாடு நூலில் யோவான்
கூறுகின்ற, "அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவர்க்கு நான்
அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது" (திவெ 22: 11)
என்ற இறைவார்த்தையையும் இணைத்துச் சிந்தித்துப்
பார்ப்போமேயானால், விண்ணுலகில் செல்வம் சேர்த்து வைப்பது
என்பது வேறொன்றும் இல்லை. அது கடவுட்கு பணிசெய்வது, அவருடைய
திருப்பெயர் விளங்கச் செய்வது என்பதே ஆகும். அத்தகைய
வாழ்க்கையை வாழ்கின்ற ஒருவர் விண்ணகத்தில் செல்வம்
சேர்க்கிறவர் ஆவார் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும்
இல்லை.
ஆகவே, அழிந்துபோகின்ற செல்வத்தைச் சேர்ப்பத்தில் நாட்டம்
கொள்ளாமல், அழியா செல்வமாகிய கடவுட்கு ஊழியம் புரிவதை
தொடர்ந்து செய்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் கொடைகளை
அபரிவிதமாகப் பெறுவோம்.
சிந்தனை
'நீங்கள் செய்கிற அனைத்து வேலைகளையும் ஆண்டவர்க்காகச்
செய்யுங்கள். ஆண்டவர் உங்கட்குக் கைம்மாறு அளிப்பார்' (கொலோ 3:
23-24) என்பார் பவுல். ஆகவே, நாம் செய்கின்ற அனைத்தும்
பணிகளையும் ஆண்டவர்க்காகச் செய்து, விண்ணுலகில் செல்வம்
சேர்ப்பவர்களாக மாறி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
|
|