Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         20 ஜூன 2019  
                        பாஸ்கா காலம் 11ம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
ஊதியம் எதிர்பார்க்காமல் நான் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தேன்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-11

சகோதரர் சகோதரிகளே, என் அறிவீனத்தை நீங்கள் சற்றுப் பொறுத்துக்கொள்ள வேண்டும்; ஆம் சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள். உங்கள்மீது கடவுள் கொண்டுள்ள அதே அன்பார்வத்தை நானும் கொண்டுள்ளேன். கிறிஸ்து என்னும் ஒரே மணமகனுக்கும் உங்களுக்கும் இடையே மண ஒப்பந்தம் செய்துள்ளேன். அவர்முன் உங்களைக் கற்புள்ள கன்னியாக நிறுத்த வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் ஏவா பாம்பின் சூழ்ச்சியினால் ஏமாற்றப்பட்டதைப் போல நீங்களும் உங்கள் எண்ணங்களைச் சீரழியவிட்டுக் கிறிஸ்துவிடம் விளங்கிய நேர்மையையும் தூய்மையையும் இழந்து விடுவீர்களோ என அஞ்சுகிறேன்.

உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப்பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப் பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டுவந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக்கொள்கிறீர்கள். இப்படிப்பட்ட `மாபெரும்' திருத்தூதரை விட நான் எதிலும் குறைந்தவன் அல்லேன் என்றே கருதுகிறேன். நான் நாவன்மையற்று இருக்கலாம்; ஆனால் அறிவு அற்றவன் அல்ல; இதை எப்போதும் எல்லா வகையிலும் உங்களுக்குத் தெளிவு படுத்தியே இருக்கிறோம். ஊதியம் எதுவும் எதிர்பார்க்காமல் நான் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தேன். நீங்கள் உயர்வு பெற நான் தாழ்வுற்றேன். இதுதான் நான் செய்த பாவமா? நான் உங்களிடையே பணிபுரிந்தபோது என் செலவுக்கு வேண்டியதை மற்றத் திருச்சபைகளிடமிருந்து பெற்றுக் கொண்டேன். உங்களுக்காக அவர்களைக் கொள்ளையிட்டேன் என்றே சொல்லலாம். நான் உங்களோடு இருந்த போது எனக்குப் பற்றாக்குறை இல்லாமல் இல்லை. எனினும் நான் உங்களில் எவருக்கும் சுமையாய் இருந்ததில்லை. மாசிதோனியாவிலிருந்து வந்த அன்பர்கள் என் பற்றாக்குறையைப் போக்கினார்கள். நான் எதிலும் உங்களுக்குச் சுமையாய் இருந்ததில்லை; இனி இருக்கவும் மாட்டேன். கிறிஸ்துவின் உண்மையே என்னுள்ளும் இருப்பதால் நான் பெருமைப் படுவதை அக்காயா பகுதியிலுள்ள யாரும் தடுக்க முடியாது. ஏன் இப்படிச் சொல்கிறேன்? உங்களிடம் எனக்கு அன்பே இல்லை என்பதாலா? நான் உங்கள்மீது அன்பு கொண்டவன் என்பது கடவுளுக்குத் தெரியும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா
=================================================================================
திபா 111: 1-2. 3-4. 7-8 (பல்லவி: 7ய)

பல்லவி: ஆண்டவரின் செயல்கள் நம்பிக்கைக்குரியவை; நீதியானவை.

1 நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன். 2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். பல்லவி

3 அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது. 4 அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். பல்லவி

7 அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை; நீதியானவை; அவர்தம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை. 8 என்றென்றும் எக்காலமும் அவை நிலை மாறாதவை; உண்மையாலும் நீதியாலும் அவை உருவானவை. பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
உரோ 8: 15

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், ``அப்பா, தந்தையே'' என அழைக்கிறோம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.

ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள். "விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்.

மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தன

செபம் அற்புதமான உரையாடல். எவ்வாறு உரையாடிட வேண்டும் என்றும், எதற்காய் செபித்திட வேண்டும் என்றும் தன் மக்களுக்கு கற்றுக் கொடுக்கின்றார்.

அன்றாட உணவை கேட்கும் போதும், தீயவனிடமிருந்து காக்கச் சொல்லும் போதும், சோதனைகளில் வெற்றிப் பெறச் செய்ய மன்றாடும் போதும், நேரிடையாக செபிக்க சொன்னவர், மற்றவர்களை நாம் மன்னிக்க முற்படும் போதே நம்முடைய பாவங்களை மன்னிப்பார் என்பதனை தெளிவுபடுத்துகின்றார்.

பிறரோடு கொள்ள வேண்டிய உறவினை உறுதிப்படுத்திக் கொள்ள முன்வருகின்றார். அதுவே நம்மை இறைவுறவுக்கு அழைத்துச் செல்லும் என்பதனையும் உறுதி செய்கின்றார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 
2 கொரிந்தியர் 11: 1-11

"உங்கள்மீது கடவுள் கொண்டுள்ள அதே அன்பார்வத்தை நானும் கொண்டுள்ளேன்"

நிகழ்வு

          அது ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் அருளப்பன் என்றொரு குடிகாரன் இருந்தான். மற்ற நேரங்களில் எல்லாரிடத்திலும் நன்றாகப் பேசக்கூடிய அவன் குடித்துவிட்டால், தன்னுடைய வீட்டில் இருப்பவர்களையும் சரி, பங்குத்தந்தை மற்றும் அருட்சகோதரிகளையும் சரி வாய்க்கு வந்தபடி பேசுவான். பலரும் அவனுக்குப் புத்திமதி சொல்லியும், அவன் சிறிதும் மாறாமல் அப்படியே இருந்தான்.

ஒரு சமயம் அந்தப் பங்கில் மறைபரப்பு ஞாயிறு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது. அன்றைய நாளில் ஆயர் அப்பங்கிற்கு வருகை புரிந்திருந்தார். அவரோடு சேர்ந்து பெரிய பெரிய மனிதர்களெல்லாம் அந்தக்  கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்கள். விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் இன்னபிற சிறப்பு அம்சங்கள் என்று அந்தப் பங்கே விழாக்கோலம் பூண்டிருந்தது.

இப்படிப்பட்ட சமயத்தில் நன்றாகக் குடித்துவிட்டு ஆலய வளாகத்திற்குள் நுழைந்த அருளப்பன் என்ற அந்தக் குடிக்காரன் பங்குத்தந்தையும் அங்கிருந்த ஒருசில முக்கியமான ஆட்களையும் வாய்க்கு வந்தபடி பேசத்தொடங்கினான். ஆலய வளாகத்திற்குள் இருந்தவர்கள் அவனிடம் எவ்வளவோ சொல்லியும்கூட அவர் தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தான். இதனால் ஆலய வளாகமே அமைதியை இழந்து நின்றது. அந்நேரத்தில் அங்குவந்த அந்தப் பங்கில் பணியாற்றிக் கொண்டுவந்த வயதான அருட்சகோதரி ஒருவர், அருளப்பனிடம் வந்து, அவனுடைய இரண்டு கைகளையும் பிடித்து, தனியே அழைத்துக்கொண்டு போனார்.

அங்கு அவர் அவனிடம், "என் மகனே அருளப்பா! நன்றாக இருந்த நீ எதற்கு இப்படியெல்லாம் நடந்துகொள்கின்றாய்...? நீ இவ்வாறு நடந்துகொள்வதை இந்த ஊரே பார்த்துக்கொண்டிருக்கின்றது... நம்முடைய ஊர்க்கு வந்திருக்கும் ஆயர் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்!. உன்னுடைய மனைவியும் மக்களும் எப்படியெல்லாம் உன்னை நினைத்துக் கஷ்டப்படுவார்கள் என்பதை என்றைக்காவது உணர்ந்திருக்கின்றாயா?" என்று அவனிடம் அன்பொழுகப் பேசினார். அந்த அருட்சகோதரி அவனிடம் பேசிய வார்த்தைகள் அவனுடைய உள்ளத்தைத் தொட்டது. அதன்பின்பு அவன், 'இனிமேல் நான் குடிக்கமாட்டேன் என்று சபதம் ஏற்றுக்கொண்டு, திருந்தி நடக்கத் தொடங்கினான்.

மிகப்பெரிய குடிக்காரனாக இருந்த அருளப்பன், அருட்சகோதரி ஒருவர் அவனிடம் காட்டிய அன்பினால் மனம்மாறியத்தை போன்று, இன்றைய முதல் வாசகத்தில், பவுல் கொரிந்து நகர மக்களிடம் காட்டிய அன்பினால் போலி இறைவாக்கினர்கள் அல்லது போலிப் போதகர்கள் அறிவித்த நற்செய்தியை கேட்டு வழிமாறிப்போனவர்கள், நல்வழிக்குத் திரும்புகின்றார்கள். கொரிந்து நகர மக்கள் செய்த குற்றம் என்ன? பவுல் அவர்களிடம் காட்டிய அன்பு அவர்களை எப்படி நல்வழிக்குக் கொண்டுவந்தது? என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

வழிதவறிப்போன கொரிந்து நகர மக்கள்

இன்றைய முதல் வாசகத்தில் பவுல் நகர மக்களிடம், நீங்கள், நாங்கள் அறிவித்த நற்செய்தியையும் இயேசுவையும் தூய ஆவியாரையும் விட, வேறொருவர் அறிவித்த நற்செய்தியை, இயேசுவை, தூய ஆவியாரை உடனே ஏற்றுக்கொள்கின்றீர்கள் என்று கடிந்துகொள்கின்றார்.

பவுல், கொரிந்து மக்களிடம், ஆண்டவரும் மெசியாவுமான இயேசுவைக் குறித்து அறிவித்து, அவர்களை கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார். இப்படிப்பட்ட சமயத்தில், அங்கு வந்த ஒருசில போதகர்கள், பவுல் அதுவரைக்கும் அறிவித்துவந்த நற்செய்திக்கும் இயேசுவுக்கும் தூய ஆவியார்க்கும் எதிரான நற்செய்தியை, இயேசுவை, தூய ஆவியாரை அறிவித்து வந்தார்கள். மக்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். இந்நிலையில்தான் பவுல் அவர்கள் செய்த தவற்றினைச் சுட்டிக்காட்டுகின்றார்.

பவுல் கொரிந்து நகர மக்களிடம் கொண்டிருந்த அன்பு

          மக்கள் வழிதவறிப் போவதை அறிந்த பவுல் அவர்களிடம் "உங்கள் மீது கடவுள் கொண்டுள்ள அதே அன்பார்வத்தை நானும் கொண்டுள்ளேன்" என்கின்றார். கடவுள் மக்கள்மீது கொண்ட அன்பார்வம் அளப்பெரியது. அது யாரும் அழிந்துபோய்விடாமல், எல்லா மக்களும் வாழவேண்டும் (1 திமொ 2:4) என்று நினைத்தது. பவுலும்கூட அப்படித்தான் யாரும் அழிந்துபோய்விடாமல் அல்லது தவறான வழிக்குச் சென்றுவிடாமல், வாழ்வுபெற வேண்டும் என்று நினைத்தார். அதனால்தான் அவர்களிடம் அவர் இந்த அறிவுரையை எடுத்துச் சொல்லி, அவர்கள் திருந்தி நடக்க வழிவகை செய்கின்றார்.

சிந்தனை

'அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் மகிழ்வுறும். அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்; அனைத்தையும் நம்பும் (1 கொரி 13: 6-7) என்பார் பவுல். உண்மையில் நாம் அடுத்தவரிடம் அன்புகொண்டிருந்தால், அவர் வாழவேண்டும் என்று விரும்புவோமே ஒழிய, அழிந்துபோகவேண்டும் என்று விரும்பமாட்டோம். ஆகவே, நாம் பவுலைப் போன்று நம்மோடு வாழ்வோரிடம் உண்மையான அன்புகொண்டு வாழ்வோம்; அவர்கள் நல்வழியில் நடக்க நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 6: 7-15

நீங்கள் இறைவனிடம் இவ்வாறு வேண்டுங்கள்...

நிகழ்வு

ஒரு நகரில் பக்தியான கிறிஸ்தவக் குடும்பம் ஒன்று இருந்தது. அந்தக் குடும்பத்தில் இருந்த பல நல்ல பழக்கவழக்கங்களுள் இரவுநேர வேண்டுதலும் (Night Prayer) ஒன்று. வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு இறைவேண்டல் செய்யத் தொடங்கும் அந்தக் குடும்பம், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தொடங்கி, சிறியவர்கள் வரை எல்லாருக்காகவும் இறைவனிடம் வேண்டும்.

இதை அந்தக் குடும்பத்தில் இருந்த நிலா என்ற ஐந்து வயதுச் சிறுமி கூர்ந்து கவனித்து வந்தாள். நாட்கள் ஆக ஆக அவளாகவே தன்னுடைய அறைக்குள் சென்று, முழந்தாள் படியிட்டுக்கொண்டு இறைவனிடம் வேண்டத் தொடங்கினாள்: "இயேசுவே! என்னுடைய குடும்பத்தில் உள்ள என் பெற்றோரை நல்ல முறை கவனித்துக்கொள்ளும். ஊரில் இருக்கின்ற என்னுடைய பாட்டி தாத்தாவை நல்லமுறையில் கவனித்துக்கொள்ளும். என் நண்பர்களையும் என்னையும் நல்லமுறையில் கவனித்துக் கொள்ளும்." இப்படித் தங்களுடைய மகள் அவளாகவே இறைவேண்டல் செய்யத் தொடங்கியதைப் பார்த்த நிலாவின் பெற்றோர்க்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

ஒருநாள் இரவுவேளையில் தன்னுடைய அறைக்குள் நுழைந்த நிலா முழந்தாள் படியிட்டு இறைவனிடம் வேண்டத் தொடங்கினாள். இதைக் கூடத்திலிருந்து (Hall) பார்த்துக்கொண்டிருந்த நிலாவின் பெற்றோர் அவள் இறைவனிடம் என்ன வேண்டுகின்றாள் என்று காதுகொடுத்துக் கேட்டார்கள். அப்பொழுது நிலா இவ்வாறு இறைவனிடம் வேண்டினாள்: "இயேசுவே! என்னுடைய பெற்றோரையும் என்னுடைய பாட்டி தாத்தாவையும் என்னையும் என் தோழிகளையும் கவனித்துக்கொள்ளும். கூடவே உம்மையும் கவனித்துக் கொள்ளும். ஏனெனில், உமக்கு ஒன்று என்றால், எங்களைக் கவனித்துக் கொள்ள வேறு ஆளில்லை. அதனால் உம்மை நன்றாகக் கவனித்துக் கொள்ளும்."

இதைக் கேட்டுவிட்டு நிலாவின் பெற்றோர் தங்களுடைய மகள் இப்படியெல்லாம் இறைவனிடம் வேண்டுவாளா என்று அவளைக் குறித்து மிகவும் பெருமிதம் அடைந்தார்கள்.

'இறைவேண்டல் என்பது வேறொன்றுமில்லை. அது கடவுட்கும் மனிதர்க்கும் இடையே நடக்கும் உரையாடல் என்பார் பில்லி கிரகாம் என்ற மரபோதகர். அவருடைய வார்த்தைக்கு அர்த்தம் தருவதாக இருக்கின்றது இந்த நிகழ்வு. இன்றைய நற்செய்தி வாசகமும் ஓர் இறைவேண்டல் எப்படி இருக்கவேண்டும் என்ற செய்தியை நமக்கு எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

மிகுதியான வார்த்தைகளை அடுக்கிக்கொண்டு போவது இறைவேண்டல் அல்ல

நற்செய்தி இயேசு, இறைவனிடம் எப்படியெல்லாம் வேண்டவேண்டும் என்று சொல்வதற்கு முன்னம், எப்படியெல்லாம் வேண்டக்கூடாது என்பதை, "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போல் பிதற்றவேண்டாம்" என்ற வார்த்தைகளில் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றார். புறவினத்தார் இறைவனிடம் வேண்டும்பொழுது சாதாரணமாக வேண்டவில்லை. மாறாக, உரக்கக் கத்தினார்கள் (1 அர 18:26) அதனால்தான் இயேசு தன் சீடர்களிடம், நீங்கள் அவர்களைப் போன்று வேண்ட வேண்டாம் என்று சொல்கின்றார். இப்படிச் சொல்லிவிட்டு இயேசு, "நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்" என்று சொல்கின்றார்.

இவ்வார்த்தைகளை நாம் நுட்பமாகக் கவனிக்கவேண்டும். ஏனென்றால், இயேசு இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள் என்று சொல்லியிருக்கின்றாரே ஒழியே, இதே வார்த்தைகளில் நீங்கள் இறைவனிடம் வேண்டுங்கள் என்று சொல்லவில்லை. இதை நாம் நம்முடைய கவனத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.

இறைவனை முன்னிலைப்படுத்தி வேண்டுவதே 'இறைவேண்டல் ஆகும்

இயேசு தன் சீடர்கள் எப்படி இறைவனிடம் வேண்டக்கூடாது என்று சொல்லிவிட்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள் சொல்கின்றார். இயேசு தன்னுடைய சீடர்கட்குக் கற்றுத்தரும் இறைவேண்டலில், 'உமது பெயர், 'உமது ஆட்சி, 'உமது திருவுளம் என்று இறைவனே முன்னுரிமை பெறுகின்றார். அப்படியானால் நாம் இறைவனிடம் வேண்டுகின்றபோது இறைவனுக்கு முதன்மையான இடத்தினைத் தரவேண்டும். அப்பொழுதுதான் அந்த இறைவேண்டல் முழுமைபெறும்.

அடுத்ததாக நாம் இறைவனிடம் வேண்டுகின்றபோது பொதுநலனுக்காக வேண்டவேண்டுமே ஒழியே தனிப்பட்ட நலனுக்காக வேண்டக்கூடாது. இயேசு கற்றுத்தரும் இறைவேண்டலில் வருகின்ற வார்த்தைகளைக் கவனித்துப் பார்த்தால், எல்லாமே 'நாங்கள் எங்கள் என்றுதான் வருகின்றன. ஆகையால், நம்முடைய இறைவேண்டல் பிறர்நலம் சார்ந்ததாக இருக்கவேண்டும். இங்கு ஒரு கேள்வி எழலாம். எது என்னவென்றால், நாம் நம்முடைய இறைவேண்டலில் இறைவனுக்கு முதன்மையான இடம் கொடுத்துக் கொண்டிருந்தால், பிறர்க்காக வேண்டிக்கொண்டிருந்தால், நம்முடைய தேவைக்காக எப்போதுதான் மன்றாட்டு? இதற்கான பதிலை இன்றைய நற்செய்தியிலேயே இயேசு கூறுகின்றார். "நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கின்றார் என்பதுதான் அந்தக் கேள்விக்கான பதில்.

ஆகையால், நாம் இறைவனிடம் வேண்டுகின்றபோது இறைவனை முன்னிலைப்படுத்தியும் பிறர்நலனுக்காகவும் வேண்டுவோம். அப்பொழுது இறைவன் நம்முடைய தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தருவார்.

சிந்தனை

'கடவுட்கு பிடித்த இறைவேண்டல் எதுவெனக் கேட்பின், அவரது திருவுளம் நிறைவேற வேண்டுவதேயாகும் என்பார் பில்லி கிரகாம். ஆகவே, நாம் இறைவனின் திருவுளம் நிறைவேற வேண்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!