Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         19 ஜூன 2019  
                        பாஸ்கா காலம் 11ம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 6-11

சகோதரர் சகோதரிகளே, குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.

கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானதெல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார். "ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! விதைப்பவருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் வழங்குபவர், விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி அவை முளைத்து வளரச் செய்து அறச் செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார்.

நீங்கள் எல்லா வகையிலும் செல்வர்களாகி வள்ளன்மை மிகுந்தவர்களாய் விளங்குவீர்கள். இவ்வாறு எங்கள் பணி வழியாய்ப் பலர் கடவுளுக்கு நன்றி செலுத்துவர்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 112: 1-2. 3-4. 9 (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.

1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். 2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். பல்லவி

3 சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும். 4 இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். பல்லவி

9 அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6,16-18

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.

நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக் கை செய்வது இடக் கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள், அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

தர்மம், செபம், நோன்பு என்ற இந்த மூன்றைக் கூறித்த செய்தியைப் பார்க்கின்றோம்.

இதனை பிறர் பார்க்க செய்வது என்பது பலன் தராத ஒன்று என்பதுவே இறைச் சிந்தனை. பிறர் பார்க்க செய்வது என்பது தன்னை மகிமைப்படுத்தும் செயலாகவே அமையும் என்பதால், அதனால் எந்த பலனும் இல்லை என்பதால், இறையருள் பெற மறைவாக செய்வதுவே சரியானது என்பதை தெளிவுபடுத்துகின்றார்.

உலக சித்தார்ந்தம் இன்று எல்லாவற்றையும் விளம்பரப்படுத்தியே பழக்கப்படுத்தி வருகின்றது. இதனாலேயே இறையருள் நம்மை நிரப்பாமல் போகின்றதா என எண்ணத் தோன்றுகின்றது.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 2 கொரி 9: 6-11

முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்

நிகழ்வு

அது ஒரு கிறிஸ்தவக் குடும்பம். ஒரு ஞாயிற்றுக்கிழமையின்போது, அந்தக் கிறிஸ்தவக் குடும்பத்தில் இருந்த தாய் தன் மகளிடம், ஒரு பத்து உரூபாவையும் தொடர்ந்து ஓர் ரூபாய் நாணயத்தையும் கொடுத்து, "இந்த இரண்டில் ஒன்றை கோவிலில் காணிக்கையாகவும் இன்னொன்றை உனக்கும் வைத்துக் கொள்" என்றாள். மகளும் அதற்குச் சரியென்று சொல்ல, இருவரும் கோவிலுக்குக் கிளம்பிப் போனார்கள்.

திருப்பலி முடிந்ததும் தாயும் மகளும் வீட்டிற்குத் திரும்பி வந்தார்கள். வழியில் தாய் தன் மகளிடம், "என் அன்பு மகளே! கோவிலுக்குப் போவதற்கு முன்னம், நான் உன்னிடம் ஒரு பத்து ரூபாய்த்தாளையும் ஓர்  ரூபாய் நாணயத்தையும் கொடுத்தேன் அல்லவா!. அவற்றுள் நீ எதை ஆலயத்தில் காணிக்கையாகச் செலுத்தினாய்" என்றாள். "அம்மா! நான் கோவிலில் பங்குத்தந்தை சொன்னதைக் - மறையுரையைக் - கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அவர் 'கொடுக்கும்போது முகமலர்ச்சியோடு கொடுக்க வேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதனால் நான் என்னிடம் இருந்த பத்து ரூபாய்த்தாளை காணிக்கையாகச் செலுத்துவிட்டால், அது எனக்கு மிகவும் கவலையாக இருக்கும் என்பதால் அதைக் காணிக்கையாகச் செலுத்தாமல், எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும் ஓர் ரூபாயை நாணயத்தைக் காணிக்கையாகச் செலுத்தினேன்" என்றாள்.

மகள் இவ்வாறு சொன்னதைக் கேட்டு தாய் அதிர்ந்து போனாள்.

மேலே சொல்லப்பட்ட இந்த நிகழ்வில் வரும் சிறுமியைப் போன்றுதான் பலர் கடவுட்கும் பிறர்க்கும் கொடுப்பதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒருசிலர் அதில் கணக்குப் பாத்துக்கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் இன்றைய முதல் வாசகம் முகம் மலர்ந்து கொடுப்பதன் முக்கியத்துவத்தைக் குறித்து எடுத்துச் சொல்கிறது. நாம் அதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

முகமலர்ச்சியோடு கொடுத்த மாசிதோனியத் திருஅவையார்

இன்றைய முதல் வாசகத்தில் பவுல், கொரிந்து நகர மக்களிடம், "முகமலர்ச்சியோடு கொடுப்பவர் கடவுளின் அன்புக்கு உரியவர்" என்கிறார். பவுல் இவ்வாறு சொல்வதற்குப் பின்னால் இருப்பதன் அர்த்தம் என்றுத் தெரிந்து கொள்வது நல்லது.

ஒருகாலத்தில் கொரிந்து நகர மக்கள் தாராளமாய்க் கொடுத்து வந்தார்கள். அவர்களை எடுத்துக்காட்டாக வைத்துப் பவுல் மாசிதோனியத் திருஅவையோரிடம் போதித்து வந்தார். ஆனால், அதன் பின் என்னவாயிற்றோ தெரியவில்லை மாசிதோனியத் திருஅவையார் தங்களுடைய வறிய நிலையிலும் முகமலர்ச்சியோடு கொடுத்ததால், கொரிந்து நகர மக்கள் கொடுக்கத் தவறினார்கள். இந்நிலையில்தான், பவுல் கொரிந்து நகர மக்களிடம் முக மலர்ச்சியோடு கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். கடவுட்குத் தாராளமாய்க் கொடுத்துவந்தவர்கள், திடீரென்று கொடுக்காமல் இருந்தால், அது மிகவும் அதிர்ச்சியாக இருக்குமல்லவா. அதே உணர்வுதான் பவுலுக்கும் ஏற்பட்டது. அதனால்தான் பவுல் கொரிந்து நகர மக்களிடம் முகமலர்ச்சியோடு கொடுக்கவேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறித்து எடுத்துச் சொல்கின்றார்.

முகமலர்ச்சியோடு கொடுப்பதால் கிடைக்கும் ஆசி

'ஒவ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற எதிர் வினையோடு உண்டு' என்ற அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் மூன்றாவது விதிப்படி, நாம் கொடுப்பதற்கு ஏற்ப ஆசி அல்லது கைம்மாறு என்று சொன்னால் அது மிகையாகாது.

'குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்கிறார்; மிகுதியாக விதைப்பவர் மிகுதியாக அறுவடை செய்கிறார்' என்ற வாழ்வியல் உண்மையை எடுத்துக் கொண்டு பேசும் பவுல், நாம் கொடுப்பதற்கு ஏற்ப ஆசியைப் பெறுகிறோம் என்று கூறுகிறார். மேலும் கட்டாயத்தின் பேரிலோ மனவருத்தத்தோடோ அல்லாமல், முகமலர்ச்சியோடு கொடுப்பவர் எல்லா நலன்களையும் ஏன், தங்களுடைய தேவைகள் அனைத்தையும் நிறைவாகப் பெறுவார் என்று கூறுகிறார். ஆகையால், நாம் முகமலர்ச்சியோடு கொடுப்பதற்குத் தயாராவோம்.\

இன்றைக்குப் பலரும் தங்களுடைய வாழ்வும் சக மனிதர்கட்கும் சரி, கடவுட்கும் சரி கொடுப்பதற்கு யோசித்துக் கொண்டிருக்கும் அவல நிலையைப் பார்க்க முடிகின்றது. இத்தகைய சூழ்நிலையில் நாம் கடவுட்கும் சக மனிதர்கட்கும் முகமலர்ச்சியோடு கொடுப்பது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது.

சிந்தனை

'கொடுத்து வாழ்வதால் ஒருவர் மனநலம் பெறுகிறார். அதனால் அவர் நீண்டநாள் வாழ்கிறார்' என்பார் மெஞ்ஞிங்கர் என்ற உளவியலாளர். ஆகவே, நாம் கொடுப்போம் அதுவும் முகமலர்ச்சியோடு கொடுப்போம். அதன் வழியாக இறையருள் நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 6: 1-6, 16-18

தர்மம் செய்! அதை வெளிவேடம் இல்லாமல் செய்


நிகழ்வு

ஓரூரில் அகிலன், முகிலன் என்ற இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். இதில் அகிலன் வஞ்சக மனம் கொண்டவன். முகிலனோ மிகவும் நல்லவன். இவ்விருவரும் வெளியூர் சென்று, வாணிபம்செய்து, பொருளீட்டத் தீர்மானித்தனர். முதலீடு தன்னுடையது என்றாலும், கிடைத்த வருவாயில் பாதியை அகிலனுக்குக் கொடுத்தான் முகிலன். ஆனால், முகிலனின் செல்வத்தை முழுமையாக கவரத் திட்டமிட்ட அகிலன்.

ஒருநாள் அகிலன் முகிலனிடம் "நண்பா! தர்மத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டான். அதற்கு முகிலன் "தர்மவழியில் செல்வதே சிறந்தது; எந்நிலையிலும், தர்மம் தவறக் கூடாது" என்றான். "தர்மமாவது, புண்ணியமாவது... எப்படியாவது சம்பாதித்து, பணக்காரனாக வாழ்வதுதான் புத்திசாலித்தனம். வேண்டுமானால், உன் கருத்தை பொதுமக்கள் சிலரிடம் கேட்கலாம். அவர்கள், நீ சொல்வதுதான் சரி என்று கூறினால், நீ எனக்குத் தந்த பணத்தை தந்துவிடுகிறேன். மாறாக, நான் சொல்வதுதான் சரி என்றால், உன் செல்வம் முழுவதையும் எனக்குத் தந்துவிட வேண்டும்" என்று பந்தயம் கட்டினான் அகிலன். அகிலனின் வஞ்சக உள்ளத்தை அறியாத முகிலன், அதற்கு ஒப்புக்கொண்டான். வழியில் செல்லும் சிலரிடம், இதுகுறித்து இருவரும் கேட்டனர். தர்மத்தைப் பற்றி அறியாத அவர்களோ, "அகிலன் சொல்வதே சரி" என்றனர். எனவே, பந்தயப்படி முகிலன் செல்வம் முழுவதையும் எடுத்துக் கொண்டான் அகிலன்.

சில மாதங்களில், மீண்டும் வியாபாரம் செய்து, பெரும் பொருள் ஈட்டினான் முகிலன். பொறாமைகொண்ட அகிலன் மறுபடியும் அதே பந்தயத்தைக் கட்டினான்; இம்முறையும் முகிலன் தோல்வியுற, அவன் கைகளை வெட்டினான் அகிலன்.
'நல்லவர்க்கு ஏற்படும் சோதனைகூட, வெற்றியில்தான் முடியும்' என்பதற்குச் சான்றாக, முகிலன் தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்க, அவனுக்கு பெருஞ் செல்வம் சேர்ந்தது.

'இதற்கு மேல் இவனை விட்டுவைக்கக் கூடாது' என்று தீர்மானித்த அகிலன், 'தோற்பவர், கண்களை இழக்க வேண்டும்' என்ற நிபந்தனையுடன், மறுபடியும் பந்தயம் போட்டான். இப்போதும் தோற்று கண்களை இழந்த முகிலன் பல இடங்களில் சுற்றித்திரிந்து கடைசியில், ஓர் ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தான். அங்கு துறவி ஒருவர் இருந்தார். அவர் முகிலனின் நிலையைக் கண்டு இரங்கி, சக்திவாய்ந்த ஒரு மரத்தின் கிளையை ஒடித்து அதை அவன்மீது தடவினார். உடனே, முகிலன் இழந்த கைகளையும் கண்களையும் பெற்றான்,

இந்நிலையில், அப்பகுதியை ஆண்டு வந்த சிற்றரசரின் மகளுக்கு பார்வை பறி போனதால், அவளுக்கு யார் பார்வையை திரும்ப வரச் செய்கிறாரோ, அவரை தன் மகளுக்கு மணமுடித்து தருவதுடன், தன் நாட்டுக்கு அரசனாக முடிசூட்டுவதாக அறிவித்தார் அரசர். இதைக் கேள்விப்பட்ட முகிலன் தனக்கு உதவிசெய்த துறவியின் வழிகாட்டுதலின்படி மன்னனின் மகளுக்குப் பார்வை கிடைக்குமாறு செய்து, இளவரசியை மணந்து, அந்நாட்டுக்கு அரசனானான்.

இது நடந்து சில நாட்கள் கழித்து, காவலர்கள் ஒருவனை இழுத்து வந்தார்கள். "அரசே! இவன் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டுவந்தான். அதனால்தான் நாங்கள் இவனை உங்களிடம் பிடித்துக்கொண்டு வந்திருக்கின்றோம்" என்றார்கள். அவர்கள் இழுத்துக்ண்டு வந்தது வேறு யாருமல்ல பணத்தாசை பிடித்தலைந்த அகிலனைத்தான். முகிலன் அகிலனைத் தண்டிக்கவில்லை. மாறாக, அவனைத் தனியாக அழைத்துக்கொண்டுபோய், "நீ எனக்குச் செய்த தீமையிலும் ஒரு நன்மை இருந்திருக்கிறது. நான் இங்கு அரசனாக இருப்பதற்கு முதன்மையான காரணம்தான் நீதான். ஆனால் நீ ஒன்றை மட்டும் புரிந்துகொள், 'நாம் செய்யும் தர்மம் என்றைக்காவது ஒருநாள் நம்மைக் காப்பாற்றும்" என்றான். இப்படிச் சொல்லிவிட்டு, அவனுக்கு நிறையப் பொருளுதவி செய்து அனுப்பிவைத்தான்.

நாம் செய்யும் தர்மம் நிச்சயம் ஒருநாள் நம்மைக் காப்பாற்றும் என்ற செய்தியை மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் தர்மம் செய்வதன் முக்கியத்துவத்தை அதிலும் குறிப்பாக அதை எப்படிச் செய்யவேண்டும் என்பதை மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

வெளிவேடமில்லாமல் தர்மம் செய்யப்படும்

நற்செய்தியில் இயேசு யூத சமயத்தின் மூன்று முதன்மையான தூண்களான தர்மம் செய்தல், நோன்பிருத்தல், இறைவேண்டல் செய்தல் ஆகிய மூன்றில் முதலாவது மற்றும் மூன்றாவதைக் குறித்துப் பேசுகின்றார். இதில் முதலாவது இடம்பெறும் தர்மம் செய்வதைக் குறித்து மட்டும் இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

'உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்' (லூக் 12:33) என்று சொல்லும் இயேசு, இன்றைய நற்செய்தியில் மக்கள் பார்க்கவேண்டுவேண்டும் என்றும் நீங்கள் தர்மம் செய்யும்போது தம்பட்டம் அடிக்காதீர்கள் என்றும் கூறுகின்றார். இயேசு இவ்வாறு சொல்வதற்குக் காரணமில்லாமல் இல்லை. இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த பலர், மக்கள் தங்களைப் புகழவேண்டும், பாராட்டவேண்டும் என்றே தர்மம் செய்தார்கள். அதனால்தான் இயேசு, இதுபோன்று மக்கள் பார்க்கவேண்டும் புகழவேண்டும் என்று தர்மம் செய்கிறவர்கள் தங்களுடைய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என்று சொல்கின்றார்.

அப்படியானால் ஒருவர் தான் செய்கின்ற தர்மத்தினை ஏற்படிச் செய்யவேண்டும் என்கின்ற கேள்வி எழுகின்றது. இதற்கான பதிலை இன்றைய நற்செய்தியிலே இயேசு கூறுகின்றார்; "நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்" என்கிறார் இயேசு. இயேசு கூறுகின்ற இவ்வார்த்தைகளை வைத்துப் பார்க்கும்போது, நாம் செய்கின்ற தர்மம் எந்தவொரு விளம்பரமும் இல்லாமல், கடவுட்கு மட்டுமே தெரியக்கூடிய அளவில் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட தர்மத்திற்கு மட்டுமே இயேசு விரும்பும் தர்மமாகவும். மேலும் அத்தகைய தர்மத்திற்குக் கடவுள் தக்க கைம்மாறு தருவார்.

சிந்தனை

'பிறர்க்கு கொடுப்பதினாலோ அல்லது தர்மம் செய்வதினாலோ யாருமே ஏழையாகிவிடுவதில்லை' என்பார் ஆனி பிராங் என்ற எழுத்தாளர். ஆகவே, நாம் தர்மம் செய்வோம், அதுவும் எந்தவொரு வெளிவேடமும் இல்லாமல் தர்மம் செய்வம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!