Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         18 ஜூன 2019  
                        பாஸ்கா காலம் 11ம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
கிறிஸ்து உங்களுக்காக ஏழையானார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 8: 1-9

சகோதரர் சகோதரிகளே, மாசிதோனியத் திருச்சபைகளுக்குக் கடவுள் கொடுத்த அருளைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம். அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களால் கடுமையாகச் சோதிக்கப் பட்டபோதும் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவர்களாய் இருந்தார்கள்.

அவர்கள் வறுமையில் மூழ்கி இருந்தாலும் வள்ளன்மையோடு வாரி வழங்கினார்கள். அவர்கள் தங்களால் இயன்ற அளவுக்குத் தாங்களாகவே கொடுத்தார்கள். ஏன், அளவுக்கு மீறியே கொடுத்தார்கள். இதற்கு நானே சாட்சி. இறைமக்களுக்குச் செய்யும் அறப்பணியில் பங்கு பெறும் பேறு தங்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டார்கள்.

நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக அவர்கள் தங்களை முதன்மையாக ஆண்டவருக்கு அர்ப்பணித்தார்கள்; நாங்கள் கடவுளின் திருவுளப்படி செயல்படுவதால், எங்களுக்கும் தங்களை அர்ப்பணித்தார்கள். எனவே இந்த அறப்பணியைத் தொடங்கிய தீத்துவே அப்பணியை முடிக்க வேண்டும் என நாங்கள் அவரை வேண்டிக்கொண்டோம்.

நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள்மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபடவேண்டும்.

நான் இதை உங்களுக்கு ஒரு கட்டளையாகச் சொல்லவில்லை. மாறாக, பிறருடைய ஆர்வத்தை எடுத்துக்காட்டி உங்கள் அன்பு உண்மையானதா எனச் சோதிக்கவே இவ்வாறு செய்கிறேன்.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா: 146: 1-2. 5-6. 7. 8-9a (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.

1 என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு; 2 நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன். பல்லவி

5 யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர். 6 அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே! பல்லவி

7 ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலைஅளிக்கின்றார். பல்லவி

8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். 9ய ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: "உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக, பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக' எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர் களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தன

புதிய உடன்படிக்கை நூலின் சிறப்பு எல்லா பழைய சட்டங்களையும் மாற்றியமைத்து புதிய கோணத்தில் சிந்திக்க தூண்டுகின்றார்.

செய்வோருக்கே செய்வது என்பது அல்ல, புதிய கோணத்தில் சிந்திக்க தூண்டுகின்றார். செய்யாதவர்களுக்கும், செய்ய மறுப்பவர்களுக்கும், நாம் செய்ய வேண்டும் என்ற சிந்தனை யதார்த்த உலக சிந்தனைக்கு மாறுபட்டதாக இருந்தாலும், அதுவே நம்மை உயர்த்தும், அதுவே உன்னதமானது என்பதையே இங்கு உணர்த்துகின்றார் இயேசு


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மத்தேயு 5: 43 58

அன்பு மானுடசமூகத்தை ஒன்றுசேர்க்கும்


நிகழ்வு

இந்த பூமியில் பல நல்ல தலைவர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களுள் முக்கியமான ஒருவர் நெல்சன் மண்டேலா. தென்னாப்பிரிக்காவின் விடுதலைக்காகப் (அமைதியான முறையில்) போராடியதற்காக இருபத்தேழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் இவர், சிறையிலிருந்து விடுதலை அடைந்த பின் அந்நாட்டின் அதிபராக உயர்ந்தார்.

இவர் தென்னாப்பிரிக்காவின் அதிபராக உயர்ந்தபிறகு ஒருநாள் ஒருசில முக்கியப் பிரமுகர்களோடு ஓர் உணகத்திற்கு உணவருந்தச் சென்றார். உணவகத்திற்குச் சென்றபின், என்னென்ன உணவுவேண்டும் என்று அங்கிருந்த பணியாளரிடம் சொல்லிவிட்டு கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, அவர்க்கு முன்பாக ஒரு மனிதர் என்னென்ன உணவுவேண்டும் என்று பணியாளரிடம் சொல்லிவிட்டுத் தனியாக அமர்ந்திருந்தார். அவர் தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்த நெல்சன் மண்டேலா தன்னோடு வந்திருந்த ஒரு காவலரை அழைத்து, "அங்கு தனியாக உட்கார்ந்திருக்கின்றாரே அவரை எங்களோடு வந்து சாப்பிடச் சொல்"என்றார். காவலரும் அவ்வாறே சொல்ல, அந்த மனிதர் நெல்சன் மண்டேலாவோடு அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார்

அந்த மனிதர் சாப்பிடும்போது நெல்சன் மண்டேலாவோடு இருந்தவர்கள் அவரை வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். ஏனெனில், அவர் சாப்பிடும்போது அவருடைய கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தன. இருந்தாலும் அவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாகச் சாப்பிட்டார்கள். எல்லாரும் சாப்பிட்டு முடித்தபின்பு அந்த மனிதர் மட்டும் தான் சாப்பிட்ட சாப்பாட்டிற்குரிய கட்டணத்தைச் செலுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.

அப்பொழுது நெல்சன் மண்டேலாவோடு இருந்தவர்கள் அவரிடம், "அந்த மனிதரை உங்கட்கு ஏற்கனவே தெரியுமா? அவர்க்கு ஏதாவது பிரச்சினை இருக்குமோ, சாப்பிடும் கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தன"என்றார்கள். அதற்கு நெல்சன் மண்டேலா அவர்களிடம், "அந்த மனிதரை எனக்கு ஏற்கனவே தெரியும். நான் சிறையில் இருந்தபோது அவர்தான் சிறையதிகாரியாக இருந்தார். சில சமயங்களில் நான் எனக்குத் தாகம் எடுக்கின்றபோது 'தண்ணீர், தண்ணீர்' என்று கத்துவேன். அப்பொழுது அவர் என்மேல் சிறுநீர் கழித்துவிட்டு, 'இந்தா தண்ணீர் குடித்துக் கொள்' என்பார். இப்பொழுது நான் இந்நாட்டில் அதிபராகிவிட்டேன் அல்லவா... அதனால்தான் நான் ஏதாவது செய்துவிடுவேன் என்ற பயத்தில் அவருடைய கைகள் நடுங்குகின்றன" என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அவர்கள், "உங்களை எப்படியெல்லாமோ அவர் சித்ரவதை செய்திருக்கின்றார். அப்படியிருந்தும் நீங்கள் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுருக்கிறீர்களே! உண்மையிலே பெரியவர்" என்றார்கள்.

தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு அவர் தன்னை துன்புறுத்தியவரையும் எந்தளவுக்கு மன்னித்து, அன்புசெய்திருக்கின்றார் என்ற உண்மையை மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. நெல்சன் மண்டேலாவைக் குறித்துச் சொல்லப்படுகின்ற இன்னொரு செய்தி, அவர் தன்னுடைய நாட்குறிப்பில், 'பகைமை மானுடத்தைச் சிதைக்கும். அன்பு மட்டுமே மானுடத்தை ஒன்றுசேர்க்கும்' என்ற வரியை எழுதி வைத்து, அதைத் தான் போகுகிற இடங்களிலெல்லாம் எடுத்துரைத்து வந்தார் என்பாகும்.

உண்மைதான், 'பகைமை மானுட சமூகத்தைப் பிரிக்கும். அன்பு மட்டும்தான் மானுட சமூகத்தை இணைக்கும். இத்தகைய செய்தியைத்தான் இன்றைய நற்செய்தி வாசகமும் தாங்கி வருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

பகைவர்க்கு வெறுப்பு அல்ல, அன்பு

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு, 'பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயா' என்ற பழைய கட்டளையை மாற்றி, 'பகைவரிடம் அன்புகூருங்கள்' என்ற புதிய கட்டளையைத் தருகின்றார். முதலில் பகைவர்கள் யாரெனச் தெரிந்துகொள்வது நல்லது. யார் யாரெல்லாம் நம்மைச் சபிக்கின்றார்களோ, நம்மை வெறுக்கின்றார்களோ, நம்மைத் துன்புறுத்துகிறார்களோ அவர்களெல்லாம் பகைவர்களாவர். இப்படிப்பட்டவர்களை நாம் அன்புசெய்யவேண்டும். அந்த அன்பின் வெளிப்பாடாக அவர்கட்காக இறைவனிடம் வேண்டவேண்டும் என்று இயேசு குறிப்பிடுகின்றார். நம்மைத் துன்புறுத்தும் பகைவர்கட்காக நாம் வேண்டுகின்றபோது, நம்முடைய உள்ளத்தில் இருக்கும் வெறுப்பு மறையும். அதன்மூலம் நாம் அவரை அன்பு செய்ய முடியும். அதைத்தான் இயேசு, 'உங்களைத் துன்புறுத்துவோர்காக மன்றாடுங்கள்' என்கின்றார்.

பகைவரை அன்புசெய்வதால் நாம் என்னவாகின்றோம்

பகைவரை அன்புசெய்யவேண்டும் என்று சொன்ன இயேசு, பகைவரை அன்பு செய்வதால் ஒருவர் என்னவாகின்றார் என்பதை மிக அழகாக எடுத்துச் சொல்கின்றார். நாம் பகைவரை அன்பு செய்வதால் முதலில், கடவுடைய மக்களாகின்றோம். இரண்டாவதாக, நாம் மற்றவர்களை விட சிறந்தவர்களாகின்றோம். மூன்றாவதாக, நாம் விண்ணகத்தந்தையைப் போன்று நிறைவுள்ளவர்களாகின்றோம். ஆகவே, இத்தகைய சிறப்புகளை நாம் பகைவர்களை அன்பு செய்கின்றபோது கிடைப்பதால், இயேசு சொல்வதுபோல் பகைவர்களை அன்பு செய்து வாழ்வது மிகவும் நல்லது.

சிந்தனை

'மக்கள் சுயநலவாதிகளாகவோ, புரிந்துகொள்ள முடியாதவர்களாகவோ, தீயவர்களாவோ கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும் நாம் அவர்களை அன்பு செய்வோம்' என்பார் அன்னைத் தெரசா. ஆகவே, மக்கள் எப்படியிருந்தாலும் அது நம்முடைய பகைவர்களாகக்கூட இருந்தாலும் நாம் அவர்களை அன்பு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
2 கொரிந்தியர் 8: 1-9

அவர்கள் வறுமையில் மூழ்கி இருந்தாலும்  வள்ளன்மையோடு வாரி வழங்கினார்கள்

நிகழ்வு

          குயிலுக்குப்பம் என்ற கடற்கரைக் கிராமத்தில் நந்தன், அகிலன் என்ற மீனவர்கள் இருவர் இருந்தனர். அவர்கள் இருவரும் ஒன்றாகத்தான் மீன்பிடிக்கச் செல்வார்கள்; கிடைத்த மீன்களை பாதி பாதியாகப் பிரித்து, சந்தையில் விற்று, அதிலிருந்து கிடைக்கும்  வருமானத்தைக் கொண்டு, தங்களுடைய குடும்பத்தை நடத்தி வந்தார்கள்.

ஒருநாள் அவர்கள் இருவரும் வழக்கம்போல் மீன்பிடிக்கச் சென்றபோது, மிகவும் சொற்பமாகவே மீன்கள் கிடைத்தன. இதைப் பார்த்துவிட்டு அகிலன் நந்தனிடம், "தோழா! இன்றைக்கு மிகவும் சொற்பமாகவே மீன்கள்  கிடைத்திருக்கின்றன. இவற்றை நாம் பாதி பாதியாகப் பிரித்தால் எதுவும் மிஞ்சாது. அதனால் இன்றைக்கு இந்த மீன்களையெல்லாம் நீயே எடுத்துக்கொண்டு போய், சந்தையில் விற்று, வீட்டில் உள்ளவர்கட்கு உணவு சமத்துக்கொடு" என்றான். அதற்கு நந்தன் அகிலனிடம், "எனக்கெதுவும் வேண்டாம் தோழா. என்னுடைய குடும்பத்தில் நானும் என்னுடைய மனைவி மட்டும்தான் இருக்கின்றோம். ஆனால், உன்னுடைய குடும்பத்தில் அப்படியில்லை... உன்னுடைய குடும்பத்தில் நீ, உன் மனைவி, இரண்டு பிள்ளைகள் என நான்கு பேர் இருக்கிறீர்கள். அதனால் இந்த மீன்களையெல்லாம் நீயே எடுத்துக்கொண்டு போ"என்றான்.

இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது, கடற்கரையில் மின்னல் போன்றதோர் ஒளி தோன்றியது. அந்த ஒளியிலிருந்து தேவதை ஒன்று வந்தது. அது அவர்கள் இருவரிடமும் வந்து, "நீங்கள் இருவரும் எதைப்பற்றி நீண்டநேரம் வாதித்துக்கொண்டிருக்கின்றீர்கள்"என்று கேட்டபோது, நந்தன் தேவதையிடம் நடந்ததையெல்லாம் சொன்னான். உடனே தேவதை அவர்களிடம், "நீங்கள் இருவரும் உங்களுடைய வறிய நிலையிலும் உங்களிடம் இருப்பதை மற்றவர்க்குக் கொடுக்க முன்வந்தீர்கள். அதனால் நான் உங்கள் இருவர்க்கும் ஒரு பரிசு தரப்போகிறேன். அதோ தெரிகின்றதே இரண்டு சாக்கு மூட்டைகள்... அந்த இரண்டு சாக்கு மூட்டைகளையும் ஆளுக்கொன்றாய் எடுத்துக்கொள்ளுகள்" என்று சொல்லிவிட்டு மறைந்தது.

தேவதை அங்கிருந்து மறைந்ததும், சிறிதுதூரம் தள்ளிக்கிடந்த இரண்டு சாக்கு மூட்டைகளை அகிலனும் நந்தனும் ஆளுக்கொன்றாய் எடுத்துக்கொண்டார்கள். பின்னர் அவர்கள் இருவரும் அந்தச் சாக்கு மூட்டைகளைத் திறந்து பார்த்தபோது, அது முழுவதும் பணம் இருக்கக்கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு போன அவர்கள் இருவரும், தங்கட்கு மட்டும் அதைப் பயன்படுத்தாமல், தங்களைப் போன்று தேவையில் இருந்த மக்கட்கெல்லாம் கொடுத்து, மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.

அகிலனும் நந்தனும் தங்களுடைய வறிய நிலையிலும் ஒருவர் மற்றவர்க்கு உதவ முன்வந்தார்கள். அதனால்தான் கடவுள் ஒரு தேவதை வழியாக ஏராளமான பணத்தைக் கொடுத்து அவர்கட்கு ஆசி வழங்கினார். இன்றைய முதல் வாசகத்தில் தங்களுடைய வறியநிலையிலும் திருஅவையில் இருந்தவர்கட்கு உதவிய மாசிதோனியத் திருஅவையினரைக் குறித்து வாசிக்கின்றோம். அவர்கள் மற்ற திருஅவைக்கு ஆற்றிய சேவை எத்தகையது என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

வாரி வழங்கிய மாசிதோனிய மக்கள்

          இன்றைய முதல் வாசகத்தில் பவுல், கொரிந்து நகர மக்களிடம் மாசிதோனியத் திருஅவையைக் குறித்து பேசுகின்றார். அவ்வாறு அவர் அவர்களிடம் பேசுகின்றது, "அவர்கள் வறுமையில் மூழ்கி இருந்தாலும் வள்ளன்மையோடு வாரி வழங்குகிறார்கள்" என்று குறிப்பிடுகின்றார்.

பவுல், மாசிதோனிய மக்களைக் குறித்துக் கூறும்போது, அவர்கள் வறுமையில் மூழ்கி இருப்பதாகக் கூறுகின்றார். அவர்கட்கு ஏற்பட்ட இந்த வறுமை அவர்கள் இயேசு கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையினால் ஏற்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. மாசிதோனிய மக்கள் இயேசுக் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டதால், அவர்களை ஆண்டவர்கள் அதவாது இயேசுவை வெறுத்தவர்கள், மாசிதோனிய மக்கட்கு வேலை கிடைக்காதவாறு செய்தார்கள். இதனால் அவர்கள் வறுமையில் மூழ்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படி இருந்தபோதும் அவர்கள் வள்ளன்மையோடு வாரி வழங்கினார்கள். அதைத்தான் பவுல் கொரிந்து நகர மக்களிடம் எடுத்துச் சொல்கின்றார்.

நமக்காக ஏழையான இயேசுவின் உளப்பாங்கை நாமும் கொண்டிருந்தால், நம்முடைய வறியநிலையிலும் பிறர்க்கு உதவ முடியும்
       
          இன்றைய முதல் வாசகத்தின் இறுதிப் பகுதியில் பவுல், இயேசு செல்வராயிருந்தும் நமக்காக ஏழையானார் என்று குறிப்பிடுகின்றார். அதை அவர் குறிப்பிடுவதன் நோக்கம், இயேசுவின் உளப்பாங்கை ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும். இயேசு இறைமகனாக இருந்த போதும், நமக்காக ஏழையாகி, எல்லார்க்கும் உதவினார். அவருடைய இந்த உளப்பாங்கை  நாமும் கொண்டிருந்தால், நம்முடைய வறியநிலையிலும் தேவையில் உள்ளவர்கட்கு உதவ முடியும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.

சிந்தனை

'இந்த ஏழைக் கைம்பெண் தமக்குப் பற்றாக்குறை இருந்தும், தன்னிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்' (மாற் 12: 44) என்று கைம்பெண்ணை இயேசு பாராட்டுவார். நாமும் நம்முடைய வறிய நிலையிலும் தேவையில் உள்ளவர்க்குக் கொடுக்க முன்வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!