|
|
15 ஜூன் 2019 |
|
|
பாஸ்கா காலம்
10ம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால்
காட்டுகிறோம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து
வாசகம் 6: 1-10
சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அருளை
வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள்
கேட்டுக் கொள்கிறோம். "தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்;
விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்" எனக் கடவுள்
கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்! எவரும்
குறைகூறா வண்ணம் எங்கள் திருப்பணியை ஆற்ற விரும்புகிறோம். எனவே
நாங்கள் எவருக்கும் இடையூறாக இருப்பதில்லை.
மாறாக அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள் கடவுளின் பணியாளர்கள்
என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்; வேதனை, இடர், நெருக்கடி
ஆகியவற்றை மிகுந்த மன உறுதியோடு தாங்கி வருகிறோம்.
நாங்கள் அடிக்கப்பட்டோம்; சிறையில் அடைக்கப்பட்டோம்; குழப்பங்களில்
சிக்கினோம்; பாடுபட்டு உழைத்தோம்; கண்விழித்திருந்தோம்; பட்டினி
கிடந்தோம்; தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள்,
வெளிவேடமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக் கிறோம்; உண்மையையே
பேசி வருகிறோம்; கடவுளின் வல்லமையைப் பெற்றிருக்கிறோம்.
நேர்மையே எங்கள் படைக்கலம். அதை வலக்கையிலும் இடக்கையிலும்
நாங்கள் தாங்கியுள்ளோம்.
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு
பொருட்டல்ல; புகழுவார் புகழலும் இகழுவார் இகழலும் எங்களைப்
பாதிப்பதில்லை. ஏமாற்றுவோர் என அவர்களுக்குத் தோன்றினாலும்
நாங்கள் உண்மையான பணியாளர்கள். அறிமுகமில்லாதோர் எனத்
தோன்றினாலும் எல்லாரும் எங்களை அறிவர். செத்துக் கொண்டிருப்பவர்கள்
எனத் தோன்றினாலும் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.
கொடுமையாகத் தண்டிக்கப்பட்டோர் எனத் தோன்றினாலும் நாங்கள் கொல்லப்படவில்லை.
துயருற்றோர் எனத் தோன்றினாலும் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக
இருக்கிறோம். ஏழையர் எனத் தோன்றினாலும் நாங்கள் பலரைச் செல்வராக்குகிறோம்.
எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும் நாங்கள் எல்லாவற்றையும்
பெற்றிருக்கிறோம்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
98: 1. 2-3a. 3b-4. (பல்லவி: 2a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்.
1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு
செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும்
அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி
2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம்
நீதியை வெளிப்படுத்தினார்.
3a இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட
தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி
3b உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப்
பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.
பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
திபா 119: 105
அல்லேலூயா, அல்லேலூயா! என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என்
பாதைக்கு ஒளியும் அதுவே! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க
வேண்டாம்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-42
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது:
"கண்ணுக்குக்
கண்', 'பல்லுக்குப் பல்' என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க
வேண்டாம்.
மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும்
திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத்
தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள்
மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை
ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை
செல்லுங்கள்.
உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு
முகம் கோணாதீர்கள்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
மலைப் பொழிவின் பகுதி இது.
பல்வேறு அறிவுரைகைளை இங்குப் பார்க்கின்றோம்.
கடன் இன்று பெரிய பிரச்சனையாக மாறி வருகின்றது. கடன் வாங்க
முற்படுவதும் விரலுக்கு ஏத்த வீக்கமாக இல்லாது, நுகர்வு
வெறியாலேயே கடன் வாங்க வேண்டிய நிலை உருவாவதைப்
பார்க்கின்றோம்.
நுகர்வு வெறி மனிதனைப் பாதிக்கின்ற பெரிய பிரச்சனையாக உருவெடுத்து
வருகின்றது.
தங்களது சம்பாதியத்திற்குள் வாழ பழகாத நிலையும், எளிய வாழ்வினை
தங்களாக்காத நிலையும், இன்று கடனிலே பலரை கண்ணீர் விட வைத்து
இருக்கின்றது என்பதுவே உண்மை.
இயேசுவின் வாழ்வு எளியதாய் இருந்தது என்றும், எளியவர்களே இறைவனை
காண்பார்கள் என்றும் அவர்களே பேறுபெற்றவர்களே என்ற இறைவார்த்தையை
மனதிலே கொள்வோம்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
2 கொரிந்தியர் 6: 1-6
வேதனை, இடர், நெருக்கடி, ஆகியவற்றை
மன உறுதியோடு தாங்கி வருகின்றோம்
நிகழ்வு
பதினெட்டாம் நூற்றாண்டில், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பிறந்தவர்
வில்லியம் கவ்பர் (William Cowper 1731 -1800) என்ற கவிஞர்.
இவர் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட தொடர் பிரச்சினைகளின் காரணமாக
தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவுசெய்தார்.
ஒருகுறிப்பிட்ட நாளில் வாடகைக்கு ஒரு குதிரைவண்டியை ஏற்பாடு
செய்துகொண்டார். அந்தக் குதிரையில் வண்டியில் சென்று தேம்ஸ் நதியில்
விழுந்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்பதுதான் அவருடைய எண்ணம்.
அதன்படி அவர் குதிரை வண்டிக்காரரிடம் வண்டியை தேம்ஸ் நதியை
நோக்கி ஓட்டச் சொன்னார். இதற்கிடையில் பனிப்பொழிவு மிக அதிகமாக
இருந்தது. அதனால் குதிரை வண்டிக்காரரால் வண்டியை வேகமாக ஓட்ட
முடியவில்லை, மெல்லத்தான் ஓட்ட முடிந்தது.
பயணம் தொடங்கி ஒருமணிநேரத்திற்கு மேல் ஆகியிருக்கும்.
'இந்த ஒருமணி
நேரத்தில் வண்டி எப்படியும் தேம்ஸ் நதிக்கரையை அடைந்திருக்கும்' என்று நினைத்துக்கொண்டு, வில்லியம் கவ்பர் வண்டியிலிருந்து
கீழே குதித்தார். அவர் அவ்வாறு குதித்தபின்தான் தெரிந்தது, அவர்
தேம்ஸ் நதியில் குதிக்கவில்லை. அவருடைய வீட்டிற்கு முன்பாகத்தான்
குதித்திருக்கிறார்' என்று. உண்மையில் குதிரைவண்டிக்காரர்
தேம்ஸ் நதிக்கு வண்டியை ஒட்டிக்கொண்டு போகிறேன் என்று
நினைத்துக்கொண்டு, வில்லியம் கவ்பரின் வீட்டிற்கு முன்பாகவே வண்டியை
ஒட்டிக்கொண்டிருந்தார். அதனால்தான் வில்லியம் கவ்பர் வண்டியிலிருந்து
கீழே குதித்தபோது, அவருடைய வீட்டிற்கு முன்பாகக் குதிக்கும்
நிலை ஏற்பட்டது.
வில்லியம் கவ்பர், தான் தன்னுடைய வீட்டிற்கு முன்பாகத்தான்
குதித்திருகிறேன் என்று தெரிந்ததும், வீட்டிற்குள் வேகமாகச்
சென்று, ஒரு தாளைத் தன்னுடைய கையில் எடுத்து, அதில் ஒரு கவிதையை
எழுதினார். அவர் எழுதிய கவிதை இதுதான்: "கடவுள் மிகவும் அற்புதமானவர்;
அவருடைய செயல்கள் அதிசயமானவை; கடலில் அவர் தன் காலடிகளைப் பதிக்கின்றார்;
புயலில் அவர் பயணிக்கின்றார். இதோ தற்கொலை செய்துகொள்ள நினைத்த
என்னுடைய திட்டத்தை மாற்றிவிட்டு, என்னை உயிர்வாழச்
செய்திருக்கின்றார்."
இக்கவிதையை அவர் எழுதிய பின், தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற
தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு, வாழத் தொடங்கினார். அவ்வாறு
அவர் புதியதொரு வாழ்க்கை வாழத் தொடங்கியபின் எழுதிய கவிதை நூல்கள்தான்
The Task, The Castaway என்ற மங்காப் புகழ்பெற்ற கவிதை நூல்கள்
ஆகும்.
வாழ்க்கையில் பல நேரங்களில் நாமும்கூட தோல்விகளையும் இடர்களையும்
இன்னல்களையும் சந்திக்கின்றபோது, இந்த வில்லியம் கவ்பரைப்
போன்று தற்கொலை செய்துகொள்ள நினைக்கின்றோம். ஆனால், இதற்கு
முற்றிலும் மாறாக, தன்னுடைய வாழ்க்கையில் வேதனைகளையும் இடர்களையும்
நெருக்கடிகளையும் சந்தித்தபோதும் அவற்றை மிகுந்த மனவுறுதியோடு
தாங்கிக்கொண்ட ஒருவரைக் குறித்து இன்றைய முதல் வாசகம் எடுத்துச்
சொல்கின்றது. நாம் அவரைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப்
பார்த்து நிறைவுசெய்யும்
வேதனைகளையும் இடர்களையும் மனவுறுதியோடு தாங்கிக்கொண்ட பவுல்
பவுல், இன்றைய முதல் வாசகத்தில் கொரிந்து நகர மக்களைப்
பார்த்து, வேதனை, இடர், நெருக்கடி, ஆகியவற்றை மிகுந்த மனவுறுதியோடு
தாங்கிவருகின்றோம்" என்று கூறுகின்றார். அவர் இவ்வாறு கூறுவதற்குக்
காரணமில்லாமல் இல்லை. ஏனென்றால், அவர் இதற்கு முன்பாக அடிக்கப்பட்டார்;
சிறையில் அடைக்கப்பட்டுச் சித்ரவதை செய்யப்பட்டார்; பட்டினி கிடந்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அவர் சோர்ந்துபோய் விடவில்லை. மாறாகப்
பொறுமையோடும் அதே நேரத்தில் மிகுந்த மனவுறுதியோடும் இருந்தார்.
இத்தகைய மனவுறுதியை, பொறுமையை எப்படிப் பெற்றார் என்பதைத் தொடர்ந்து
சிந்தித்துப் பார்ப்போம்.
கடவுளின் வல்லமையைப் பெற்றிருந்ததால், மனவுறுதியோடு இருந்த பவுல்
பவுல் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பல்வேறு இடர்களையும் சவால்களையும்
நெருக்கடிகளையும் மிகுந்த மனவுறுதியோடு தாங்கினார் என்றால்,
அதற்குக் காரணமாக இருந்தது, அவர் கடவுளின் வல்லமையை உணர்ந்ததால்தான்.
அதனாலேயே அவரால் எத்தகைய சவால்களையும் துணிவோடு எதிர்கொள்ள
முடிந்தது. இயேசுவின் வழியில் நடக்கின்ற நமக்கு பவுலின்
வாழ்க்கையில் வந்ததைப் போன்று பல்வேறு சவால்களும் இடர்பாடுகளும்
வரலாம். அத்தகைய தருணங்களில் நாம் கடவுளின் வல்லமையை உணர்ந்து,
அதன்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தொமெனில், நம்மால் எவ்வளவு
பெரிய பிரச்சினைகளையும் எதிர்கொள்ள முடியும் என்பது உறுதி.
சிந்தனை
'எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல்
உண்டு' (பிலி 4:13) என்பார் பவுல். ஆகவே, நாம் கடவுளின் வல்லமையில்
நம்பிக்கை வைத்து, அவருடைய வழியில் தொடர்ந்து நடப்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 5: 38-42
தீமைக்குப் பதில் நன்மை
செய்வோம்!
நிகழ்வு
ஒரூரில் நிலவன் என்றொரு விவசாயி இருந்தார். மிகுந்த இரக்ககுணம்
படைத்த அவர் ஊரில் யார் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தாலும் அவரைத்
தன்னுடைய குதிரையில் ஏற்றிக்கொண்டு போய் மருத்துவமனையில்
சேர்த்து, சிகிச்சை அளித்துவிட்டு அவரைப் பத்திரமாகக்
கூட்டிக்கொண்டு வருவார். தவிர, உதவி என்று யார் வந்தாலும் அவர்கட்கு
மனங்கோணாமல் உதவி செய்வார். இப்படிப்பட்ட நல்ல மனம் கொண்ட நிலவனின்
விளைநிலம் ஒவ்வோர் ஆண்டும் நன்றாக விளைந்து வந்தது.
இது நிலவனின் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருந்த கதிரவனுக்குப்
பிடிக்கவே இல்லை. அடிப்படையில் பயங்கர சோம்பேறியான கதிரவன்
நோகாமல் முன்னுக்கு வர வேண்டுமென்று நினைத்தான். ஆனால் அது
சாத்தியப்படாமல் போனதால், விளைநிலமெல்லாம் நன்றாக விளைந்து, மிகவும்
மகிழ்ச்சியாக வாழந்துவந்த நிலவன்மிது பொறாமை கொள்ளத் தொடங்கினான்.
அந்தப் பொறாமையே கதிவனை நிலவனுக்கு எதிராகச் செயல்பட வைத்தது.
ஒரு நாள் இரவு. ஊரிலிருந்த எல்லாரும் தூங்கிக்கொண்டிருந்த சமயம்,
கதிரவன் நிலவனுடைய வயிலில் தீ வைத்துவிட்டு எதுவும் நடக்காதது
போல் தன்னுடைய வீட்டுக்குள் வந்து படுத்துக்கொண்டான். நிலவனின்
வயல் எரிவதைப் பார்த்த ஒருசிலர் அவருடைய வீட்டுக் கதவைத் தட்டியொழுப்பி
அவர்க்கு உண்மையைச் சொன்னார்கள். அவர் வயலுக்குப் போவதற்குள்
வயல் பாதிக்கு மேல் எரிந்திருந்தது. அதன்பிறகு அண்டை வீடுகளில்
இருந்த ஆட்களை உதவிக்கு அழைத்து ஒருவழியாகத் தீயை அணைத்தார் நிலவன்.
அதற்குள் தீயானது முக்கால் வாசி வயலை எரித்திருந்து.
'யார் இந்தப் பாதகச் செயலைச் செய்திருப்பார்கள்' என்று நிலவன்
யோசித்துப் பார்த்தார். அவர்க்கு கதிரவன் மேல் சிறிது சந்தேகம்
வந்தது. நெருப்பு கதிரவன் வீட்டுக்குப் பின் பக்கத்திலிருந்து
தொடங்கி இருந்ததால் அவன்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று
உறுதி செய்துகொண்டார். இருந்தாலும் அவர் அதனைக் கதிரவனிடம்
கேட்காமல் அமைதியாய் இருந்தார்.
இது நடந்து ஓரிரு மாதங்கள் கழித்து ஒருநாள் நள்ளிரவு வேலையில்,
நிலவன் தன்னுடைய வீட்டில் நன்றாகத் தூக்கிக் கொண்டிருந்தபோது
மக்கள் அழுது ஒப்பாரி வைப்பது அவர்க்குக் கேட்டது. உடனே அவர்
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து என்னவாயிற்று என்று பார்க்க
வந்தார். அப்போதுதான் கதிரவனின் மகன் மருந்தைக் குடித்து, உயிர்க்குப்
போராடிக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. உடனே அவர் கதிரவனின்
மகனைத் தன்னுடைய குதிரை வண்டியில் போட்டுக் கொண்டு, மருத்துவமனைக்குக்
கொண்டு சென்று காப்பாற்றினார்.
இதற்குப் பின்பு ஒருநாள் கழித்து கதிரவன் நிலவனைப் பார்க்க வந்தான்.
அவன் நிலவனிடம், "நிலவா! என்னை மன்னித்துக் கொள். உன்னுடைய வயலைக்
கொழுத்தியது நான்தான்" என்றான். அவன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு
நிலவன், "எல்லாம் எனக்குத் தெரியும்" என்றார். "என்ன! எல்லாம்
உனக்குத் தெரியுமா? அப்படி இருந்தும் எப்படி உன்னால் என்னுடைய
மகனைக் காப்பாற்ற முடிந்தது" என்றான் கதிரவன். அதற்கு நிலவன்,
"உன்னைப் போன்று நானும் தீமைக்குப் பதில் தீமை செய்வது அவ்வளவு
நன்றாக இருக்காது என்பதை உணர்ந்தேன். அதனால்தான் உயிர்க்குப்
போராடிக் கொண்டிருந்த உன் மகனைக் காப்பாற்றினேன்" எனறார். இதைத்
தொடர்ந்து கதிரவன் தன் தவறை உணர்ந்து நிலவனிடம் மன்னிப்புக்
கேட்க, இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.
தீமைக்குப் பதில் தீமை செய்யாமல் நன்மை செய்த நிலவன் நமது
பாராட்டிற்குரியவர். இன்றைய நற்செய்தி வாசகமும் இதே
செய்தியைத்தான் எடுத்துச் சொல்கிறது. நாம் அதைக் குறித்து இப்போது
சிந்தித்துப் பார்ப்போம்.
தீமைக்குத் தீமை தீர்வாகாது
நற்செய்தியில் இயேசு, 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' (விப
21: 23-25) என்ற பழைய ஏற்பாட்டுக் கட்டளைக்கு மற்றாக 'தீமை
செய்வோர்க்கு நன்மை செய்யுங்கள்' என்ற புதிய கட்டளையைக்
கொடுக்கின்றார். இயேசு இக்கட்டளையைக் கொடுக்க மிக முக்கியமான
காரணம், தீமைக்குத் தீமை ஒருபோதும் தீர்வாகாது என்பதால்தான்.
மேலும் தீமைக்கு நன்மை செய்யும்போது, அத்தீமை செய்தவன், இப்படிப்பட்டவர்க்கா
நான் தீமை செய்தேன்!' என்று திருந்த வாய்ப்பிருக்கிறது. அதனால்தான்இயேசு
அப்படிச் சொல்கிறார்.
பவுல் இதே கருத்தைத்தான், தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்,
எல்லார்க்கும் நன்மை எனக் கருதுபவற்றையே எண்ணுங்கள் என்றும்
தீமையால் தீமையை வெல்லவிடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள்
என்றும் (உரோ 12: 17, 21) இன்னும் அழுத்தம் திருத்தமாகக்
கூறுகிறார். ஆகையால், இயேசுவின் இக்கட்டளையை உள்ளத்தில் தாங்கியவர்களாய்
நன்மை செய்ய முயற்சி செய்வோம்.
சிந்தனை
'தன்னை வெட்டுவோர்க்கும் நிழல் தருமாம் மரம்'. எனவே, இயேசுவின்
வழியில் நடக்கும் நாம் அவரைப் போன்று தீமை செய்வோர்க்கும் நன்மை
செய்வோம். அதன் வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
|
|